"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21
முந்தைய பதிவு இங்கே!
19.
"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். "[119]
புதியதொரு உலகத்தில் பிரவேசித்தது போலத் தோன்றியது கந்தனுக்கு.
அவனது கிராமத்தில் கூட இப்படி அவன் உணர்ந்ததில்லை.
பச்சைப்பசேல் என்ற மரங்களும், அடர்ந்த காடும் அவனுக்கு மனதில் சந்தோஷத்தையும், கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணியது.
கண்ணில் பட்ட வழிப்பாதையைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென ராபர்ட் முன்னே நடக்க, பின்னாலே, கந்தன் அவனைப் பின் தொடர்ந்தான்.
அடர்ந்த காட்டுக்குள் இப்போது அவர்கள் இருவர் மட்டுமே!
அப்படித்தான் பட்டது அவர்கள் இருவருக்கும்.
ஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.
இருட்ட ஆரம்பித்தது.
பாதுகாப்பான ஒரு இடமாகப் பார்த்து, பையில் இருந்த போர்வையை எடுத்து விரித்து, இருவரும் படுத்தார்கள்.
மேலே ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின.
'என்ன, பயமா இருக்கா?' என ராபர்ட் கேட்டான்.
கந்தன் ஒன்றும் பேசவில்லை.
காட்டின் அமைதி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கண்ணுக்குத் தெரியாத மரங்கள் ஆடுவதை அவனால் உணர முடிந்தது.
எங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த
காட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல், ஊர் பேர் தெரியாத எவனுடனோ, அவன் தேடிக்கொண்டிருக்கும் தங்கத்தின் மேல் தானும் ஆசைப்பட்டு, இங்கே இந்த இரவில் அவனோடு ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால், ஒரு பக்கம் சிரிப்பாகவும்,ஒரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.
இந்நேரம், இட்லிக் கடை முடிஞ்சு, சாப்பாட்டு நேரம் ஆரம்பிச்சிருக்கும் ஓட்டல்ல.
அண்ணாச்சி என்ன செய்து கொண்டிருப்பார் என ஒரு கணம் நினைத்தான்.
அடுத்த கணமே, அந்த நினைப்பைத் துடைத்தெறிந்தான்.
'இதெல்லாம் போதும்; இனிமே வேணாம்னுதானே கிளம்பிட்டோம். இப்ப அந்த நினைப்பு எதுக்கு?' எனத் தன்னைக் கடிந்து கொண்டான்.
பஸ் டிரைவர் சொன்னதை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.
'இதோ இந்தக் கணம்தான் நிஜம்.இங்கே நான் இருக்கறதுதான் எனக்கு நடந்துகிட்டு இருக்கற உண்மை. இதை நான் சந்தோஷமா அனுபவிக்கணும்.
நேத்து நடந்ததோ, நாளைக்கு நடக்கப் போறதோ எதைப்பத்தியும் கவலைப் படக் கூடாது.இந்த நிமிஷம், இப்ப, காத்து சுகமா வீசுது. குளிரலை.
பசிக்கு எதையோ சாப்பிட்டாச்சு. நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்' என எண்ணிக் கொண்டிருந்தவன்.....
அப்படியே உறங்கிப் போனான்.
*******************
"எத்தனை பேரு இந்தப் பக்கமா வந்து போறாங்க!
எல்லோருக்கும் ஒரு ஆசை.
அதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.
யார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.
ஆனா, இன்னிக்கு வர்றவங்கள்ல ஒருத்தனுக்கு என் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கணும்னு உத்தரவாயிருக்கு.
ஆளு யாருன்னு தெரியாது.
ஆனா கண்டு பிடிச்சிருவேன்.
இதையெல்லாம் வாய் மொழியாத்தான் சொல்லிக் கொடுக்கணும். புஸ்தகத்தை வெச்சோ, படம் போட்டுக் காட்டியோ இதைச் சொல்லித் தர முடியாது.
கூடாது!
அது அப்படித்தான்.
இந்த உலகம் எவ்வளவு புனிதமா படைக்கப்பட்டதோ, அதே மாதிரித்தான் இந்த வித்தையும்.
இதை எழுத்தாலேயோ, படத்தாலேயோ சொல்லிப் புரிய வைக்க முடியாது.
படத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.
அவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்!"
மலை உச்சியில், ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த, அந்தச் சித்தர் வாய் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்தார்......
நிலவு பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.
*******************************
பொழுது விடிந்தது.
சூரியன் வந்தது தெரியவில்லை, காட்டின் அடர்த்தியில்.
ஆனால், வனம் வெளுப்பாக இருந்தது. [எ.பி. இல்லை!:)]
காலைக் கடன்களை முடித்துவிட்டு, இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
மலையில் ஏறத் துவங்கினர்.
தூரத்தில் இருந்து பார்க்கையில், பசுமையாகத் தெரிந்த மலை, கிட்டச் சென்றதும் கரடு முரடாய் இருந்தது.
அடிவாரத்தில் முட்புதர்களும், பெரிய பாறாங்கற்களும் கிடந்து, சரியான வழி இல்லாமல் மறைத்தது.
ரொம்பப் பழக்கமானவன் போல ராபர்ட் அவற்றுக்கிடையே புகுந்து புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த கந்தன், தானும் அவனுக்குச் சளைத்தவன் இல்லை என்பது போல லாவகமாகக் கூடவே சென்றான்.
'வெயில் ஏற்றதுக்குள்ள உச்சிக்குப் போயிறணும். வா. சீக்கிரமா' எனப் பேசிக்கொண்டே, வழியில் இருந்த சுனையில் நீர் குடித்துவிட்டு,
சொன்னபடியே மலையுச்சியை அடைந்தார்கள்.
வழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.
'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.
அடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.
ஆங்காங்கே சில குடிசைகள்.
'நல்லவேளை; சாப்பாடு கிடைக்கும்னு தோணுது' எனச் சொல்லியபடியே கண்ணில் பட்ட முதல் குடிசையை அடைந்தார்கள்.
[தொடரும்]
*************************************
அடுத்த அத்தியாயம்
24 பின்னூட்டங்கள்:
அந்த பஸ் ட்ரைவர் சொன்னதுபோல 'இந்த நிமிஷத்தை ரசிக்க முடிஞ்சா.....'
ஹைய்யோ............
மனுஷனாலெ முடியாத காரியம் இது ஒண்ணுதான்போல(--:
\\நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்\\ எவ்வளவு நிம்மதியை தரும் தத்துவம்.பற்றிருக்கும்வரை பின்பற்றுவது கடினம்.
\\வழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.
'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.
அடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.
ஆங்காங்கே சில குடிசைகள்.
\\
ஆச்சரியம்... ஆகா..
இது அப்படியே நிகழ்ந்தது எங்களுக்கு ;-) ;-)
இதோ இந்தக் கணம்தான் நிஜம்...
இன்று இங்கு இப்போது- ஜென் மாதிரி இருக்கு.
//
மனுஷனாலெ முடியாத காரியம் இது ஒண்ணுதான்போல(--://
இல்லீங்க!
முடியுங்க1
நேற்று நீங்க அனுப்பிய படங்களைப் பார்த்த அந்த நொடியில்... அப்படியே அந்த இடத்தில் நானும்...
பரவசத்துக்கு நன்றி, டீச்சர்!
:))
//பற்றிருக்கும்வரை பின்பற்றுவது கடினம்.//
பற்று வேணாம்னு சொல்லலை.
பற்று பாதிக்காத மாதிரி பார்த்துக்கலாமே!
//ஆச்சரியம்... ஆகா..
இது அப்படியே நிகழ்ந்தது எங்களுக்கு ;-) //
அப்படியா சத்தியா!
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!
ஒரே ஒத்தை வர் பின்னூட்டம போடறீங்க இப்பல்லாம், திரு. குமார்!
:)
மேலே காட்டி இருக்கும் படத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போகும் அந்த பையனை தடுத்து நிறுத்துங்கள்
//மேலே காட்டி இருக்கும் படத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போகும் .....//
இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் ஒரு செய்தி உங்களுக்காகத்தான் போலிருக்கு திரு.ஞானக்கூத்தன்!
உங்களுக்காக மீண்டும் இங்கே அதைப் பதிகிறேன்!
:))
//படத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.
அவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்!"//
///
சித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா? என் வோட்டு வெள்ளைக்காரச் சாமிக்கே!!
//சித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா?//
சர்வேசனுக்கே சமர்ப்பணம்!
:))
//சர்வேசனுக்கே சமர்ப்பணம்!//
சர்வேசனை மாதிரி நானும் பிளாகர்தான்! ஏன் எனக்கு சொல்லித் தரக் கூடாதா?
அட! அதுக்கில்லீங்க சிபியாரே!
அவர்தான் இது மாதிரி[//சித்தர் சொன்ன ஆளு நம்ம ஹீரோ கந்தனா இல்லை வெள்ளைக்காரச் சாமியா?//]
சர்வேல்லாம் பண்ணுவாரு!
அதுக்காகச் சொன்னேன்!
:)
கொஞ்சம் பப்ளிசிடி தேடினா விட மாட்டீங்களே!
:))
//அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும் //
சத்தியமான வார்த்தைகள்.
கவியரசின் அனுபவக்கவிதை :
அனுபவித்தே அறிவது தான் வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ எதற்காக ??
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான் தான் என்றான்.
முழுக் கவிதைக்கு :
http://padiththathilpidiththathu.blogspot.com
எல்லோருக்கும் ஒரு ஆசை.
அதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.
யார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு. //
நம்மளோட பிறப்பு இறப்பு கூட இப்படித்தானே.
Predetermined and destined according to our wishes and karmas.
each and everyline gives some msg.
நன்றி எஸ்கேசார்.
//each and everyline gives some msg.
நன்றி எஸ்கேசார்.//
உணர்ந்து படிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லணும், வல்லியம்மா!
கவியரசரின் பொருத்தமான சத்திய வரிகளைப் போட்டு புல்லரிக்க வைத்து விட்டீர்கள், சீனா!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
மிக்க நன்றி என மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்!
//எங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த
காட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல்//
ஏதை பிடிக்க ஒடுகிறோம் என்பதை தெரியாமலே தானே நாம் எல்லாரும் ஒடிக் கொண்டு இருக்கிறோம்....
ஒடும் போது சிலருக்கு தெளிவு பிறந்து அவர்கள் வழி தேர்வு செய்கிறார்கள். சிலர் ஒடுவதே வேஸ்ட் என்பதை அறிந்து நின்று விடுகிறார்கள். மற்றவர்கள் வாழ்க்கை உள் இழுக்கும் அந்த வழியில் தொடர்ந்து ஒடிக் கொண்டே இருக்கிறார்கள்.
//ஏதை பிடிக்க ஒடுகிறோம் என்பதை தெரியாமலே தானே நாம் எல்லாரும் ஒடிக் கொண்டு இருக்கிறோம்.... //
மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள், நண்பரே!
ஏதவது ஒரு சமயத்திலாவது விழித்துக் கொண்டால் நல்லது!
:)
இந்த நொடியை எப்படி அனுபவிக்கிறது? நாம எப்பவும் அடுத்த வேளைக்குதான செய்வோம்...
மதியம் சாப்பிடச் சோறு செய்றோம்
நாளைக்கு நாடகம் பாக்க டிவி வாங்குறோம்
நாளைக்குச் சந்தோஷமா இருக்க பயணம் போறோம்
நாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம்
அதாவது மாசம் மொதநாள் வர்ர சம்பளத்துக்குத்தான ஒழைக்கிறோம்
ஆனாலும் முடியும்னுதான் தோணுது...பாக்கலாம்.
இல்லை, ஜி.ரா.
//நாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம்//
இல்லை ஜி.ரா. ரொம்பப் பேரு இந்தப் பதிவு எதுவோ சொல்லுதுன்னுதான் இதைப் படிக்கறாங்க!
//
ஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.
//
ஆஹா த்ரில்லர் ஆயிடிச்சே
நடத்துங்க நடத்துங்க!!!
//ஆஹா த்ரில்லர் ஆயிடிச்சே
நடத்துங்க நடத்துங்க!!!//
அதெல்லாம் இல்லீங்க!
நம்மை சுத்தி எப்பவும் பல கண்கள் பார்த்துகிட்டுத்தான் இருக்குன்னு சொல்ல வந்தேன்!
நன்றி!
மூன்று பகுதியா வர வேண்டியது ஒரே பகுதியா வந்திருச்சோ? :-)
ஒரே நாளில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்ல விழைந்தேன், குமரன்.!!
:))
Post a Comment