Tuesday, July 31, 2007

"விருந்தினர் மாளிகை"


"விருந்தினர் மாளிகை"


மலையடிவாரத்தின் ஓரத்தில்
அருவிகள் சலசலக்க காவினம் கவினுற
ரம்மியமான அவ்வூரில் அமைந்திருக்கும்
அழகிய அந்த விருந்தினர் மாளிகை

ஒவ்வொரு நாளும் திருநாளே
வருபவர் யாவரும் விருந்தினரே
எவரும் அதிலே உயர்வில்லை
எவரும் எவர்க்கும் தாழ்வுமில்லை

அழகே உருவாய் அவள் வந்தாள்
வசந்தப்பூக்களை அள்ளித் தெளித்தாள்
தங்கிய நாட்கள் கழிந்தன இனிதே
தங்கமகள் ஓர்நாள் திரும்பிப் போனாள்

அடுத்தவர் ஒருவர் அவசரமாய் வந்தார்
கடுத்த முகத்துடன் கதவைச் சாத்தினார்
கட்டிலையும் கதிரை ஒன்றையும் உடைத்துவிட்டார்
வாடகை தராமலேயே தப்பியும் விட்டார்

அன்றொருநாள் அது மாலைக்காலம்
மின்னலும் இடியும் கூடிவந்த மழைக்காலம்
குழந்தைகுட்டியுடன் குடும்பமொன்று ஒதுங்கியது
உள்ளே அழைத்து உபசரித்ததில் உள்ளம் நெகிழ்ந்தது

வருபவர் எவரெனப் பார்ப்பதில்லை
வந்தவர் எவரையும் தள்ளவுமில்லை
நன்றே செய்தவர் இருப்பினில் மகிழ்வு
தீயவரால் புதுக் கதவுகள்கதிரைகள் வரவு!

எவர் இங்கு வரினும் மறுப்பேதுமில்லை
இன்முகம் காட்டத் தவறுவதில்லை
எவர் உருவில் "அவன்" வருவான் என
விவரம் சொல்லி "அவன்" வருவதுமில்லை.

இப்படியாகப் போகுது அதன் காலம்
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடம்
ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம்
ஒவ்வொரு நபரும் விருந்தினரே!


"நான்" ஒரு விருந்தினர் மாளிகை!

[ரூமியின் ஒரு கவிதையின் பாதிப்பால் எழுந்த என் பிதற்றல்!]


[கதிரை= நாற்காலி]

4 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Tuesday, July 31, 2007 11:35:00 PM  

//[ரூமியின் ஒரு கவிதையின் பாதிப்பால் எழுந்த என் பிதற்றல்!]//

ஓக்கே ஓக்கே....:))

கோவி.கண்ணன் Tuesday, July 31, 2007 11:36:00 PM  

//எவர் இங்கு வரினும் மறுப்பேதுமில்லை
இன்முகம் காட்டத் தவறுவதில்லை
எவர் உருவில் "அவன்" வருவான் என
விவரம் சொல்லி "அவன்" வருவதுமில்லை.
//

ஐயா,

அஃறினை பொருள்களும், விலங்குகளும் கூட உயர்வுதாழ்வு காட்டுவதில்லை. 'உயர்'தினைகளுக்குத்தான் எல்லா வேறுபாடும்.

மனிதர்களைவிட மாக்கள் சிறந்தவை !

உங்கள் கவிதை அருமை.

VSK Tuesday, July 31, 2007 11:49:00 PM  

வெண்பா வேந்தர் இப்படிச் சொன்னது அடியேன் பாக்கியம்!
:)

VSK Tuesday, July 31, 2007 11:52:00 PM  

மனிதரிலும் உயர்ந்தவர் இருக்கின்றார் கோவியாரே!

உணர்ந்தவர் அவர்!

:)

தெரியாதவர் காட்டாமலிருப்பதில் சிறப்பில்லை.

தெரிந்தவர் அவ்வாறு செய்யாமலிருப்பதே சிறப்பு!

நன்றி, பாராட்டுக்கு!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP