எட்டோண் எட்டு;எட்டும் வரை எட்டு!
எட்டோண் எட்டு; எட்டும் வரை எட்டு!
எட்டு எழுதணுமாம்; கொத்தனார் வந்து சொல்லியிருக்கிறார்.
அப்படி என்னதான் இந்த எட்டு எனப் பார்த்தால், ஆளாளுக்கு எழுதினதைப் பார்த்தா அவங்களை நினைச்சு சந்தோஷமா இருக்கு.
அதே சமயம், இவங்க எல்லாம் இப்படி அடுக்கியிருக்கறதுக்கு முன்னாடி, நாம என்னன்னு சொல்லமுடியும்னு, ஒரு பயம் அடிவயத்தைக் கவ்வுது.
அப்போதான், நம்ம இளா ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதைப் பார்த்ததும் கொஞ்ச தெம்பு வந்தது.
அதனால, அவருக்கு என்னோட முதல் நன்றி.
என் எட்டு இதோ!
சாதனைகள் ஏதுமில்லை.
ஆனால், மறக்கவொண்ணா நிகழ்வுகள்
நெஞ்சை விட்டகலா நினைவுகள்.
1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா" என எங்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் சிறப்பு மாணவனாக இருந்தது. இன்னிக்கு எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச தமிழறிவு அவர் போட்ட பிச்சை.
2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
[கொத்ஸ் கவனிக்க!]
3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.
4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து, அத்தனை மக்களும் ஒன்றாக இணைந்து, ராவா, பகலா வேலை செய்து, பணம் திரட்டி, மிகச் சிறந்த அளவில் கும்பாபிஷேகம் செய்து முடித்தது. ... அந்தக் கோவில் இன்றும் சிட்லபாக்கத்தில் மங்கள விநாயகர் ஆலயம் என ஆன்மீகப் பணி ஆற்ரிக் கொண்டிருப்பது.
5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. விளையாட்டுத் திடலில் தொடர்ந்து 10 நாட்கள் வெற்றிகரமாக LINTEF [Lions' International Trade and Entertainment Fair] என்ற பெயரில் நடத்திக் காட்டியது.
6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. பாரத் பந்த் என ஒன்று அன்று. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அவசரத்துக்குக் கிடைத்த ஒரே டாக்டர் அகர்வால். அறுவை சிகிச்சை மூலமே விட்டுப்போன ரெடினாவை மீண்டும் இணைக்கமுடியும்; அதிகச் செலவாகும் இதற்கு என் சொல்லிவிட்டார்.
வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன்.
மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்! பத்ரிநாத்திடம் செல்லுமாறு அந்தக் கோவிலை நிர்வகித்து வந்த கீதம்மாவின் அன்பான அறிவுரை.
அப்படியே செய்ய, பத்ரிநாத்தும் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்த, சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப் படுகிறேன். மறுநாள் அறுவை சிகிச்சை என முடிவாகிறது.அன்றிரவு வந்த டாக்டர் பத்ரிநாத் என்னைச் சோதிக்கிறார். அவராலேயே நம்ப முடியவில்லை. "டாக்டர். சங்கர்,நீ அதிர்ஷ்டசாலிப்ப்பா! உன்னோட ரெடினா தானே திரும்பவும் சேர்ந்திடுச்சு. இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!
7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது.
8. இணையத்தில் தற்செயலாக அறிமுகமாகி, பல்வேறு நண்பர்களைப் பெற்று, எழுதணும்னு நினைத்த பல விஷயங்களில், ஒருசிலவற்றையாவது எழுத முடிந்தது .
மேலே சொன்ன விஷயங்கள், அநேகமாக என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது, எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பேன் இதையெல்லாம்!
இப்ப உங்ககிட்டேயும்!
சொல்ல அழைத்த கொத்தனாருக்கு மீண்டும் ஒரு நன்றி.
இப்ப நான் ஒரு 8 பேரை அழைக்கணுமாம்.
1. குமரன்
2. செல்வன்
3. கோவி.கண்ணன்
4. ரவி கண்ணபிரான்
5. ஷைலஜா
6. அன்புத்தோழி
7. நாகை சிவா
8. வடுவூர் குமார்
எத்தனையோ பேர் இருந்தாலும், உடனே நினைவுக்கு வருபவர்கள் இவர்களே!
உங்களுக்கு இஷ்டமிருந்தால், வந்து எழுதுங்க.
கட்டாயமில்லை.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
_____________________________________
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
OPTIONAL:
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
38 பின்னூட்டங்கள்:
கண்பார்வை திரும்பவும் தானே கிடைச்சதுதான் ஆச்சரியமா இருக்கு.
இனி எல்லாம் சுகமே.
நல்லா இருங்க.
//1. தமிழ் பயிற்றுவித்த, சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியாராக இருந்த "குண்டைய்யா"//
பட்டை பெயரா உண்மையான பெயரா ?
//2. என் தந்தையின் கனவு நனவாக, பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.//
எஸ்கேவை மருத்துவர் ஆக்கிய திருப்பம்
//3. 18 ஆண்டுகாலம், மனதுக்கினிய மருத்துவராகப் பணியாற்றியது. இப்போது சென்றாலும், ஒரு கூட்டம் குரோம்பேட்டையில் அன்புடன் சூழ்வதைப் பார்த்து, என் குழந்தைகள் மகிழ்வது.//
மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்து இருக்கிறீர்கள் !
பாராட்டுக்கள் !
//4. சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளையார் கோயிலை விரிவாகக் கட்டலாம் என முடிவு செய்து//
பொதுவாழ்கை - பாராட்டுக்கள்
//5. புறநகர்ப் பகுதிகளில் வராது, வரமுடியாது எனக் கருதப்பட்ட தனி அரங்குகள் கொண்ட பொருட்காட்சியை முதன் முறையாக, '80 களில்//
சாதனை - பாராட்டுக்கள்
//6. ஒரு மே மாதம் 31ம் தேதி, திடீரென என் வலது கண் பார்வை இல்லாமல் போனது. - பாபா தரிசனம்! - இப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். "எனச் சொல்லி மறுநாள் ஒரு சிறு சிகிச்சையுடன் வீடு திரும்பியது!!
//
பனம் பழம் ஞாபகத்துக்கு வருது. :))
//7. இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய, இசைஞானி இளையராஜாவின் "திருவாசகம்" சி.டி. வெளிவர , துவக்கம் முதல் , வெளியீடு வரை ஒரு பெரும்பங்கு வகித்த TIS Foundation USA என்ற அமைப்புக்கு தலைமை தாங்கி, பல்வேறு இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சந்தித்து, இன்றும் ஒரு நிறைவு அனுபவமாக பலராலும் பாராட்டப்படுவது//
வெளிநாட்டு சாதனை - மேலும் பாராட்டுக்கள் !
//8. //
அரைத்தமாவுதான் - தோசை புளிக்கவில்லை.
:))
வாழ்த்துக்கள் விஎஸ்கே ஐயா !
எஸ்.கே. கவனிச்சுட்டேன். நல்ல காலம் பி.காம் பிழைத்தது. :)))
சொன்னபடி பதிவு போட்டதுக்கு நன்றி. சாதனைகள் மட்டும்தான் சொல்லணும் அப்படின்னு இல்லை. 8 ரேண்டம் தகவல்கள்தான் தரச் சொல்லி விளையாட்டு.
ஆனா அப்படியும் பல சாதனைகளை அடுக்கிட்டீங்களே! அந்த திருவாசகம் ஒண்ணு போறாதா!! :)
இது ஒரு நீண்ட நிகழ்வுங்க டீச்சர்.
ரொம்பவும் சுருக்கமாச் சொல்லியிருக்கேன்.
எனக்கும் கூட இன்றும் அதிசயிக்க வைக்கும் ஒரு நிகழ்வு அது!
1.பட்டப்பெயர்தாங்க. உண்மையான பெயர் மறந்து போய்விட்டது.
2. விருப்பம் தரும் திருப்பம்!
3.4.5& 8. நன்றி.
6. மருத்துவம் பற்றி, அல்லது இது பற்றி சரியாக அறியாத உங்களுக்கு இது பனம்பழமாகத் த்கெரிவது ஆச்சரியமாயில்லை!
டாக்டர் பத்ரி கைப்பட எழுதிய கடிதத்தைக் காட்டுகிறேன் உங்களுக்கு ஒரு நாள்!
நன்றி கோவியாரே.
மெய்யாகவே நிறைவு தரும் ஒரு நிகழ்வுதான் அது, கொத்ஸ்!
எஸ்.கே ( வி, சேர மறுக்கிறது) தன்னடக்கம் அதிகமாய் தென்படுகிறது :-)
உங்கள் கண்பார்வை விஷயம் மனதை நெகிழ வைத்தது. மங்களவினாயகருக்கு கோயில் கட்டியவரை அவர் கைவிட்டு விடுவாரா என்ன?
விரைவில் எட்டு பதிவு இடுகிறேன். அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி
மக்களுக்கு சேவை செய்து (குரோம்பேட்டை) மகேசனுக்கும் சேவை (சிட்லபாக்கம்) செய்தவருக்கு தரிசனமும் பார்வையும் கிடைத்தது இயற்கையே. திருவாசக வெளியீட்டில் பங்கெடுத்து நன்றியும் தெரிவித்து விட்டீர்கள். உங்களுடன் இந்த ஊடகத்தினால் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையே !
//6. மருத்துவம் பற்றி, அல்லது இது பற்றி சரியாக அறியாத உங்களுக்கு இது பனம்பழமாகத் த்கெரிவது ஆச்சரியமாயில்லை!
டாக்டர் பத்ரி கைப்பட எழுதிய கடிதத்தைக் காட்டுகிறேன் உங்களுக்கு ஒரு நாள்!//
எஸ்கே ஐயா,
லாட்டிரியில் பரிசு விழுந்ததற்கு காரணம் கடவுள் கிருபை என்று ஒருவர் சொன்னார்... அவருக்கும் மருத்துவம் தெரியாது, நிகழ்தகவுகள் பற்றிய கணிதமும் தெரியாது.
:))
மூடநம்பிக்கைகளை நம்புவதற்கு மருத்துவம் தெரிய வேண்டும் என்று சொல்வது புதிய செய்தி. நன்றி !
மேலும் இது பற்றி தொடரவிரும்பவில்லை.
பின்னூட்டம் வெளி இடுவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் சாதாரணமாக சுருங்க சொல்லியிருக்கும் விஷயங்கள் பலவும் மிகப் பெரிய சாதனைகள்தான். தனி பதிவாகவோ அல்லது தொகுப்பாகவோ நீங்கள் எழுதலாம்.
கோயில் விரிவாக்கம், 18 வருட மருத்துவர் பணி, கண்காட்சி நடத்தியது, திருவாசகம் வெளியீடு எல்லாவற்றையும் விட இழந்த பார்வையை திரும்ப பெற்றது.... வியக்க வைக்கின்றன.
இந்த ரெட்டீனா பாதிப்பு எப்படி ஏற்படுகிறது? வயதின் காரணமா இல்லை வேறு ஏதாவது கோளாறா? இதை தடுக்க முடியுமா?
ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா இதே மாதிரி ரெடீனா பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் என்று எழுதியிருந்தார்.
//வீட்டிற்குச் செல்லும் வழியில், மதியம் 1 மணி இருக்கும், கிண்டி பாபா கோவில் வாசலில் வண்டியை நிறுத்துகிறேன். மூடியிருந்த கோவில் கேட்டைத் திறந்துவிட்டு, பாபா தரிசனம்!//
ஆண்டவன் அருள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்களைப் போன்ற பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமலா இருப்பான்.. உங்களது தளத்தில் ஒவ்வொரு முறையும் நான் உள்ளே வந்து செல்லும்போது என் மனம் ஆண்டவனிடம்தான் செல்கிறது.. நன்றி.. நன்றி.. நன்றி..
எஸ்.கே. நம்ம பெயரை அழைத்தற்கு மிக்க நன்றி.. உடனடி நினைவுக்கு வரும் அளவில் இருப்பதை நினைத்தால் ரொம்ப பெருமை தான்...
உங்க பெருமைகளை பற்றி நாங்க சொல்ல என்ன இருக்கு. அனைத்தும் முத்துக்கள்....
மங்கள விநாயகர் ஆலையம் முன்னேற்றியது ஒரு அருமையான விஷயம்.
நானும் அறிவேன் உங்கள் ஈடுபாட்டைப் பற்றி.
திருவாசக மேட்டர் சூப்பரோ சூப்பர். ஆனா, எல்லாம் முடிந்ததும், TIS உதவியைப் பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சினிமா காரங்க வேலைய காட்டிட்டாங்களோ?
btw, NSN கைமாறிடுச்சாமே? கேள்விப் பட்டீங்களா? rumour?
super 8!
Did you see my eight?
அருமையான எட்டுக்கள். அதிலும் கண்பார்வை கிடைத்தது பற்றி இன்னும் விரிவாய் எழுதி இருக்கலாமோ? அல்லது ஒரு தனிப்பதிவாய் இடலாமோ?
அடக்கம் அமரருள் உய்க்கும்:) பாராட்டுக்கள்.
//பி.காமில் இருந்து விலகி, மருத்துவம் படிக்கச் சென்று, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.//
அப்பாவை மட்டுமா மகிழ்ச்சியில் ஆழ்த்தினீர்கள்? அதற்கு அப்புறம் பல பேரை அல்லவா?
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்பது போல்...
கோவிலைக் கட்டிப் பார் என்றும் சொல்லலாம்.
SK...ஒரு வேண்டுகோள்...
மங்கள விநாயகர் ஆலயம் பற்றியும், அதன் உருவாக்கம், தற்போது எப்படி நல்ல முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்பதைத் தனிப்பதிவாக போடுங்களேன்!
அழைப்புக்கு நன்றி!
விரைவில் அடியேனும் எட்டுகிறேன்!
//எஸ்.கே ( வி, சேர மறுக்கிறது) தன்னடக்கம் அதிகமாய் தென்படுகிறது :-) //
நீங்கள்லாம் வந்திருக்கறதைப் பார்த்தா,கூச்சம் இன்னும் ஜாஸ்தியாகுது, உஷா!
:))
Just kidding!!
//மங்களவினாயகருக்கு கோயில் கட்டியவரை அவர் கைவிட்டு விடுவாரா என்ன?//
"இன்றெடுத்த இப்பணியும், இனி தொடரும் எப்பணியும்
நன்மணியே ஷண்முகனார், அன்னபூரணி உடனிருந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக் காக்க
பொன்வயிற்று மங்கள
விநாயகனே போற்றுகின்றேன்."
76-ல் எழுதியது!
இன்னும் அங்கு இதுதான் எல்லா நோட்டீஸ்களிலும்!
மிக்க நன்றி, திரு. மணியன்.
உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
வெளியிட்டாச்சு, கோவியாரே!
அதுக்கு மேல அதுல சொல்ல ஒண்ணுமில்லை!
:))
விரிவாக எழுதவேண்டும் ன்று நான் எண்ணியிருக்கும் நிகழ்ச்சிக் களன்களின் சுருக்கம்தான் இவை திரு.ஸ்ரீதர்வெங்கட்.
காலமும் நேரமும் கூடி வருமென நம்புகிறேன்!
ரெடினா பாதிப்பு எவருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால், வயதாகுகையில் அதிகம் நிகழும் இது.
அதிக ரத்த அழுத்தம்,அனீமியா போன்றவை சில முக்கியக் காரணங்கள்.
நன்றி.
எவருக்குமே அருள்பவன்தான் இறைவன் என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள், திரு. உண்மைத்தமிழன்!
நன்றி!
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க சிவா!
ஒவ்வொரு முறை கசடறவைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள்தான் நினைவுக்கு வருகிறீர்கள்!
இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு!
:))))))))))0
ஆஹா! நம்ம ஊருதானா சர்வேசரே!
சினிமாக்காரங்கன்னு இல்லை.
பொதுஇவாவே, காரியம் முடிஞ்சதும் கழற்றி விடுவது எல்லாருக்கும் வாடிக்கை தானே
இதில் கொஞ்சம் அதிகமாகவே நடந்தது!
சி.டி. வந்ததே, அதுவே பெரிய விஷயம்!
::)
கிரௌண்டு விலை மேம்பாலம் வந்ததுக்குப் பின்னாடி எகிறிடுச்சாம் எக்கச் சக்கமா!
[LM]மேடத்துக்கும் வயசாயிடுச்சு !
அடுத்து,, எடுத்து செய்யவும் ஆளில்லை.
மெட்ரிகுலேஷனை மாத்தச் சொல்லி வேற ப்ரெஷராம்!
அதான் கழண்டுகிட்டாங்க!
தனிப்பதிவாய் விரைவில் எழுதுகிறேன். தலைவி!
உங்க பதிவைப் படிச்சதுக்கப்புறம் எனக்குத் தோணினது இதாங்க! பத்மா!
//ஆஹா! நம்ம ஊருதானா சர்வேசரே//
எமக்கு யாதும் ஊரே!
கைலையும் ஒன்றே, குரோம்பேட்டையும் ஒன்றே!
மிகக் கேவலமான மனநிலை பிறழ்ந்த மதிகெட்ட அனானிகள் சிலர், நான் அதிகமாக ஒரு குறிப்பிட்ட இனத்தினரை இந்த விளையாட்டுக்கு அழைத்திருப்பதாகப் பிதற்றியிருக்கிறார்கள்.
இதில் உண்மை இல்லை என்பது படிக்கும் அனைவருக்கும் தெரியும்.
அவைகள் இங்கு பிரசுரிக்கப்படாது.
சீக்கிரமே இவர்கள் குணமாக வேண்டுகிறேன்.
கண்பார்வை திரும்பக் கிடச்சதுல எனக்கு ஆச்சரியமே இல்லை..கடவுள்
யாரார்க்கு எதைஎதை எப்போது தரணுமோ அப்போது தந்துவிடுகிறான்.
எட்டில் அடங்காது உங்கள் மகிமைபோல இருக்கே! மகிழ்ச்சி.
என்னையும் எட்டுக்கு விட்டுவைக்காம அழைச்சதுக்கு நன்றி டாக்டர்!
இந்த எட்டு வெறும் முன்னோட்டம் என்றே தோன்றுகிறது.
பெரிய சாதனைகளை மிகுந்த அடக்கத்துடன்
குறிப்பிட்டு விட்டீர்கள்.
எழுத்துலக வேள்வியை விட்டு விட்டீர்கள்.
கண்பார்வை கிடைத்த நிகழ்ச்சி கடவுளை உணர வைக்கிறது.
அதிசயங்கள் எட்டும் என்றே சொல்ல நினைக்கிறேன்.
//சி.டி. வந்ததே, அதுவே பெரிய விஷயம்!
::)//
ofcourse. hats off to you and everyone else for that. ராஜாவுடனான அனுபவங்கள் எல்லாம் பதிவா போட்டிருக்கீங்களா? இருந்தா லிங்க் கொடுங்களேன். நன்றி. இல்லன்னா, எழுதுங்களேன் :)
///கிரௌண்டு விலை மேம்பாலம் வந்ததுக்குப் பின்னாடி எகிறிடுச்சாம் எக்கச் சக்கமா!////
ஆமாமா. நானும் கேள்விப்பட்டேன். கன்னாப் பின்னானு போகுதாம். but, most likely, artificially hyped.
///[LM]மேடத்துக்கும் வயசாயிடுச்சு !
அடுத்து,, எடுத்து செய்யவும் ஆளில்லை. மெட்ரிகுலேஷனை மாத்தச் சொல்லி வேற ப்ரெஷராம்!
அதான் கழண்டுகிட்டாங்க!////
ஹ்ம். கஷ்டம் தான். LM செய்த கடின உழைப்பை மறக்க முடியாது. அவங்கள பத்தி ஒரு தனிப் பதிவே போடணும்.
அமைதியான சாதனைகள். வாழ்த்தப்பட வேண்டியவர் நீங்கள்.
இந்த 8 நிகழ்வுகளுமே விரிவாக எழுதும் அளவுக்கு செய்திகள் கொண்டவைதான், ரவி!
மு.மு.
!!
எட்டடுக்கு மாளிகையில் உங்களை ஏற்றாமல் இருப்பேனா, ஷைலஜா!
எத்தனை பதிவுகளுக்கு தலைப்பிட உதவியிருக்கிறீர்கள்!
சீக்கிரம் எழுதுங்கள்!
:)0
எப்பவும்போல் அன்புடன் வந்து, அருமையான சொற்களால் வாழ்த்தியிருக்கிறீர்கள், வல்லியம்மா!
அன்புக்கு மிக்க நன்றி!
கண்டிப்பாக தனிப்பதிவு இடவேண்டிய சாதனையாளர்தான் LM மேடம்!
எழுதுங்க, சர்வேசன்!
அந்தக்காலத்தில், ஒதுக்குப்புறம் எனக் கருதப்பட்ட நேரு நகரில், துணிந்து ஒரூ பள்ளி ஆரம்பித்து, பலருக்கு கல்விக்கண்ணைத் திறந்தவர் இவர்!
மிக்க நன்றி, அன்பு நண்பர் சுல்தான் அவர்களே!
Post a Comment