அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"
'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************
------------- பாடல் ------------------
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
*************************************************
................பொருள்...................
[பின் பார்த்து முன்]
"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"
கொடுஞ்சூரன் கெடுமதியால்
மதிகெட்டு மனமயங்கி
அடுசெயலால் ஆதியாம்
பிரமன்முதல் அமரர்யாவரையும்
கொடுஞ்சிறை அடைத்து
சுடுமொழி பேசி இழித்து
கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து
மிகவும் வாட்டி உடல் வருத்தி
நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி
வருந்திடும் துயர் மாற்ற
திருவுளம் கொண்டு வேற்படையேந்தி
தேவர்தம் சிறை மீட்க
"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"
பொன்மலையாம் மேருவிற்கு
நிகரான ஆடுகின்ற
பொன்மயிலின் மீதமர்ந்து
சூரனுடன் போர் புரிந்து
விண்ணவரைச் சிறைமீட்டு
அமரர் புடை சூழ
மண்ணதிர விண்ணதிர
என்னவரும் மனமகிழ
தும்பிக்கையான் தம்பியும்
மயில்மீதில் அமர்ந்துவர
"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"
மாமரங்கள் அடர்ந்திருக்கும்
சோலைவனம் சூழ்ந்திருக்கும்
சுவாமிமலை தனில் வாழும்
என் குருநாதனே!
"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."
மாயப்போர் புரிந்து
நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட
சூரனை வெளிக்கொணர
வேலெடுத்து வீசிக்காட்டி
கடல் வற்றச் செய்து
சூரன் உடல் இருகூறுபட
அசுரனைப் பிளந்து
அருளுடன் ஆட்கொண்ட
பெருமைமிகு வேலவனே!
"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"
தான் பெற்ற மகளிரை
மணம் கொண்ட சந்திரன்
ரோஹிணியை மட்டும்
தன்னோடு சேர்த்து
மற்றவரைத் தள்ளியதால்
மனம் கொதித்த தந்தையாம்
தக்கன் அளித்த சாபத்தால்
ஒளிகுன்றி, மதி குன்றி
நிலவனும் தான் தேய
வேறெங்கும் அலைந்தும்
வழிகாணா மனத்தினனாய்
கருணைக்கடலாம் சிவனைநாட
குற்றம் தள்ளி குணம் நாடும்
காருண்ய மூர்த்தியும்
குறைமதியைப் பிறைநுதலாய்
தன்தலையில் சூடிக் காத்த,
தேவலோகம் விட்டுச்செல்லும்
தாபத்தால் கோபம்கொண்டு
உலகினை அழிக்க உக்கிரமாய்ச்
சீறிப் புறப்பட்ட கங்கையவள்
செருக்கடக்க, உலகுய்ய
கருணைத்திருவுளம் கொண்டு
தன்சடையில் தான் தாங்கி
தணிவோடு தண்ணீர்தந்த,
அன்புருவாம் சிவனாரின்
திருநுதற்கண்ணினின்று
உலகோரின் துயர்துடைக்க
தேவர்களைக் காத்திடவே
ஈசனே தன்னைத் தானளித்த
சங்கரன்குமாரனே! குமரேசனே!
"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"
குறமகள் வள்ளியைக்
கடிமணம் புரியத்
திருவுளம் கொண்டு
அவருடன் விளையாட,
வேங்கை மரமாய்
வேடனாய், விருத்தனாய்
வம்புகள் பலசெய்து
வள்ளியின் கோபம் தூண்டி
அவர்தம் கனிமொழிகேட்க
கைகால்களைப் பிடித்து
கெஞ்சிக் கொஞ்சிய
அழகிய மணவாளனே!
"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"
கானகம் சென்றிட்ட இராமன்
ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்
மடிமீது தலைவைத்து துயிலுகையில்
சீதையைக் கண்டு மோகித்து
இந்திரன் மகனாம் சயந்தனென்பான்
காகம் வடிவெடுத்து காரிகையின்
தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க
இராமனின் முகத்தில் அது பட்டு,
கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க
காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட
கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து
"காதும்" கொல்லுக இதனையென
காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட
காகமதும் கடிவேகம் கொண்டு
மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்
சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,
'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!
குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க
சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,
'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல
பிறன்மனை நோக்கிய குற்றத்தால்
ஒரு கண்ணை பாணம் துளைக்கும்
உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'
எனவருளிய மாயனின் மருகோனே!
"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"
தக்கன் சாபம் துரத்திய
சந்திரனைப் போலவும்
பிரம்மாஸ்திரம் துரத்திய
காகம் போலவும்
காலன் எனைத் துரத்தும்
கோலம் கண்டிங்கு
கருணை என்மீது கொண்டு
கங்கையைத் தலைமேல்
கொண்டது போலவே
பிறைதனை நுதல்மேல்
அணிந்தது போலவே
காகத்துக்கும் கருணை
காட்டியது போலவே
என்னையும் உன்னிருகாலில்
சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************
....அருஞ்சொற்பொருள்.......
காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய
***********************************************
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!
23 பின்னூட்டங்கள்:
விஎஸ்கே ஐயா,
மிக எளிமையான பாடலாக இருக்கிறது.
பின்னூட்ட அவசரம் முழுவதும் படிக்கவில்லை. அமர படிக்கனும்.
மறுபடியும் வருவேன்.
பின்னூட்டக் கணக்கைத் தொடங்கி வைக்க வந்த என்னரும் நண்பரே!
நன்றி!
பொறுமையாகப் படித்து, மீண்டும் வருக!
ஆஹா, எனக்கு முகவும் பிடித்த பாடல்.
முன்பொருமுறை பாடலை பதிவித்திருந்தேன்:
http://jeevagv.blogspot.com/2006/11/blog-post.html
பதிவில் பாடலை யேசுதாஸ் பாடக் கேட்கலாம்!
பாதிமதிநதி போது மணிசடை நாதர் அருளிய குமரன் புகழைப் படிப்பதும் கேட்பதும் உரையுணர்ந்தோர் சொல்லிப் புரிவதும் பேரின்பம்.
இந்தத் திருவேரகத்துத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தது. இதை எளிய மெட்டில் பாடுவதும் மிகப் பிடித்தம். யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலை மெல்லிசை மன்னர் இசையமைத்து வாணிஜெயராம் பாடியிருக்கிறார்கள். கேட்க அருமையாக இருக்கும். ஆனால் பாடல் என்னிடம் இல்லை. அந்த வீசிடி தமிழகத்தில் கிடைக்கிறது. அதிலிருந்து யாரேனும் பிரித்துக் கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.
நல்ல விளக்கம். திருப்புகழ் மீண்டும் வலம் வரத்துவங்கியிருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி.
நேயர் விருப்பம் வானொலியில் மட்டுமா வானொலி காட்டும் முருகன் அடியவடிடமும் உண்டுதானே. வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய...இதை என் விருப்பமாகக் கேட்கிறேன். :)
சந்தம், ஓசை நயம் என்றால் என்ன என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாகவே இப்பாடலை தந்துவிடலாம் போல இருக்கிறதே. படிக்கும் பொழுதே கால்கள் தாளமிடத் தொடங்குகிறது அல்லவா? நன்றி ஐயா!
இந்தப் பாடலைச் சிறு வயதில் இருந்து படித்து/பாடி வருகிறேன் எஸ்.கே. எளிமையான சந்தம் மிகுந்த பாடல். பாடலின் முழு பொருளும் அப்போது புரிந்ததில்லை. வளர்ந்த பின் தான் புரிந்தது. புரிந்த பின் இன்னும் நன்கு ஈடுபாடு தோன்றியது.
மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா என்பதற்கு இரண்டு விதமாகவும் பொருள் சொல்ல முடியும் படி அமைந்திருக்கிறது - அருணகிரியார் ஒவ்வொரு இடத்திலும் இப்படியே அமைத்திருக்கிறார். :-) வள்ளியின் பாதத்தை வருடிய மணவாளா என்றும் பொருள் சொல்லலாம்; குறமகள் வள்ளி (உன்) பாதத்தை வருடிவிட அமர்ந்திருக்கும் மணவாளா என்றும் பொருள் சொல்லலாம்.
திருவையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார். மாயன் ஹரியின் மருகோன் என்று மட்டும் சொல்லாமல் வைணவ மரபு அறிந்து அதன் படி திருவையும் சேர்த்து அவளுக்கும் மருமகன் என்கிறார். :-)
காலன் எனை அணுகாமல் ... பத்திக்கு பொருள் சொல்லிவிட்டு அந்தப் பத்திக்குப் பதிலாக காதும் ஒரு விழி ... பத்தியையே இட்டிருக்கிறீர்கள். மாற்றிவிடுங்கள்.
ஜி. ரா. வந்ததே மகிழ்ச்சி.
அதிலும், அடுத்த பாடலுக்கு அடி எடுத்துக் கொடுத்த அருணாசலக் குமரன் போலவும்!!
நன்றி!
நீங்க சொன்னதும், மறுபடியும் ஒருமுறை படித்தேன், கொத்ஸ்!
சந்தம் தாளமிடத்தான் வைக்கிறது.
பாடல் இணைப்பைக் கொடுத்து இதற்கு மெருகூட்டியமைக்கு மிக்க நன்றி, திரு.ஜீவா.
குமரன் வந்து சொல்லும்கருத்துகள் எப்போதுமே இனிமை.
இப்போது இந்தியாவிலிருந்து வந்த வேகம் கூட!
சிறப்பாக இருக்கிறது.
தவறைச் சுட்டியதற்கு நன்றி.
சரி செய்துவிட்டேன்.
குமரனிரு பாதமும் சதங்கையும் எதிர் வந்து தோன்றியது போல என்று
சொல்ல ஆசை.
நன்றி எஸ்கே சார்.
ஆஹா!
ராமன் கதையைக் காட்டியதும், சித்திர ராமாயணச் சிற்பியும் வந்து வாழ்த்தி விட்டாரே!
நன்றி, வல்லியம்மா.
ஆசைப்பட்டதைப் பிடித்து விடுங்கள்!
அவனிரு தாளை!
sorry to interrupt.
can you read this and let us know your thoughts on bone-marrow transplant.
what are the pros/cons for a donor, etc..
Nanri!
Bone marroW Transplant பற்றிய ஒரு பதிவை நாளைக்குள் கசடறவில் இட்டு, உங்கள் பதிவிலும் வந்து சொல்லுகிறேன், சர்வேசன்.
நன்றி.
அருமையான திருப்புகழுக்கு எளிமையான விளக்கம். மிக்க நன்றி.
பல பழந்தமிழ்ச் சொற்களை அறிந்து கொண்டேன்.
சூதம் = மாமரம் என்பதால்
மாம்பழத்தைச் சூதம் பழம் என்று சொல்லலாமா?
SK ஐயா...
அது என்ன இந்த முன்னுரை? இவ்வளவு அடைமொழி கொடுத்தீங்கனா அடியேன் எப்படித் தாங்குவேன்?:-)
வேண்டுகோளை ஏற்று
வேலன் பாட்டை ஏற்றிய உங்கள் அன்புக்கு நன்றி.
வெளியூர் (Michigan) சென்றிருந்ததால், இன்று தான் பதிவிற்கு வர முடிந்தது!
//ஈசனே தன்னைத் தானளித்த
சங்கரன்குமாரனே//
:-)
சங்கர் குமாரனே என்றே போட்டிருக்கலாமே! உங்களுக்கு முருகனிடம் இல்லாத உரிமையா?
இந்தத் திருப்புகழை மூன்று விதமாகப் பாடக் கேட்டுள்ளேன் SK.
ஓதுவா மூர்த்திகள் பாடுவது அப்படியே தமிழைப் பாடி வாசிப்பது போல் இருக்கும். நிறைய வல்லின எதுகை மோனை இந்தப் பாடலில் உண்டு. அது அப்படியே காட்டாறு புரண்டு வருவது போல் ஒரு சந்தம்!
தமிழிசையாகவும் பாடக் கேட்டுள்ளேன்.
வாணி ஜெயராம் பாடிய திரைப்படப் பாடலும் அருமை!
திருவேரகம் என்று பெரும்பாலும் வந்தாலும், சுவாமிமலை என்று தற்கால வழக்காக ஊரின் பெயரைக் குறிப்பட்டு வரும் வெகு சில திருப்புகழ் பாடல்களில் இதுவும் ஒன்று!
தாயார், பெருமாளிடம் உயிர்களுக்காகப் பரிந்து பேசும் பாங்கை அருணகிரியார் அழகாகக் காட்டுகிறார்!
காக்கை எங்கெங்கோ ஓடி அலைந்து மீண்டும் ராகவன் பாதத்தில் வந்து விழ, அதன் தலை எங்கோ திரும்பி இருந்ததாம்! ஐயோ பாவம், இதற்குச் சரணாகதி செய்யக் கூடத் தெரியவில்லையே என்று சீதை அதன் தலையைத் திருப்பி, திருப்பாதங்களில் படுமாறு வைக்கிறாள்!
இப்படி அருள்வதால் தான்
"அருள்" மாயனரி "திரு" மருகோனே
என்று தாயாரை முன்னிறுத்துகிறார் போலும் அருணகிரி!
அருமையான புகழ் அளித்த SKவின் புகழ் எங்கும் மணக்கட்டும்!!!
"திரு" என்னும் சொல்லுக்கு திருத்தமான விளக்கம் சொன்னவருக்கு திரும்பவும் சொல்லுவேன், அத்தனை அடைமொழிகளையும், ரவி!!
எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு இந்தப்பயல் சரியாகச் சொல்கிறானா என மாமன் போலவந்து மெச்சிய கண்ணபிரானுக்கு நன்றி!
கண்ணனுக்குச் சொல்லித் திரும்பினால், அடுத்தது ராகவனே!
மாமன்மார் மெச்சும்படி நடக்க அருளணும், அந்த பச்சைப்புயல் மெச்சிய மருகன்!
இலக்கிய நாயம் இனிமை, அதை எடுத்தியம்பிய விதம் அருமை.
பாராட்டுகள்.
மற்றப்படி சொல்லப்பட்டுள்ள துணை (உப)கதைகளுக்கு நோ கமெண்ட்ஸ்.
:))
நன்றி,கோவியாரே!
சொன்னது போலவே, மீண்டும் வந்து பாராட்டியமைக்கு.
நோ கமெண்ட்ஸ் என்பதும் ஒரு கமெண்ட்தான்!
:))
I got this web page from my pal who told me on the topic of this web page and now this time I am browsing this website and reading very informative content at this time.
Thanks
Post a Comment