"திருமுருகாற்றுப்படை"
"திருமுருகாற்றுப்படை" - நக்கீரர் அருளியது!
ஜி.ரா. எழுதிய பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.
நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.
கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.
இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!
வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":
குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.
வரி 175-176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":
இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.
வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":
மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....
இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது.
வரி 100-102. "ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"
ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,
அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,
[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"
எனச் சொல்லி,
ஒரு கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய எனவும் உடன் வருகிறது.
இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.
வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல,
இகம் வள்ளி,
பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க, கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.
அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"
தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!
என்னும் பொருள்படவும் பாடுகிறார்.
திருமுருகாற்றுப்படை என்ன சொல்கிறது?
பாணன் ஒருவன் பரிசில் பெற்று வருகிறான்.
அவனை எதிர்கொள்லும் இன்னொரு பாணன் விவரம் கேட்கிறான், ... 'எவரிடமிருந்து இப்பரிசில் பெற்றாய்?'.... என.
அவனுக்கு மறுமொழியிடும் வண்னமாக முதல் பாணன் உரைக்கிறான்.
"இத்தன்மையெனச் சொல்லப்படவொண்ணா ஒளியையும்[3],
தாளையும்[4],
கையையும் [5], உடையனாகித்
தெய்வயானைக்குக் கணவனாகி[6],
மாலை அசையும் மார்பனாகிக்[11],
காந்தள் மாலையைச் சூடிய திருமுடியை உடையனாகிய[44],
சேயினது திருவடியிலே செல்ல வேணும் என்கிற மனத்தோடு[62],
அவன் தங்குமிடத்துக்கு[[63],
வழியை விரும்பினையாகில்[64],
உன்னுடைய ஆசைப்படியே[65],
இப்போது பெறுவாய் நீ நினைகருமம்[66],
இதற்கு அவன் உறையும் இடம் திருப்பரங்குன்றிலே அமர்ந்திருத்தலும் உரியன்[77],
அதுவன்றி அலைவாயெனும் திருச்செந்தூரிலெ எழுந்தருளுதலும் நிலையுடைய குணம்[125],
அதுவன்றி, ஆவினன்குடியிலே தங்குதலும் உரியன்[176],
அதுவன்றி ஏரகத்துறைதலும் உரியன்[189],
அதுவன்றி, மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் நிலைபெற்ற குணம்[217],
அதுவன்றி, விழாவின் கண்ணும்[220],
அன்பர் ஏத்தப் பொருந்தும் இடங்களிலும்[221],
வெறியாடும் இடங்களிலும்[222],
காடும், சோலையும் முதலாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களீலும் உறைதற்குரியன்[249],
இம்முறையாக யான் அறிந்த வழி: அவ்விடங்களிலே ஆயினுமாக, பிற இடங்களிலே ஆயினுமாக[250],
முற்படக் கண்ட போதே முகமலர்ந்து துதித்துப் பரவி வாழ்த்தி வணங்கி[252],
ஆறு வடிவைப் பொருந்திய செல்வனே![255],
கல்லாலின் கீழ் இருந்த கடவுள் புதல்வனே![256],
என்று துடங்கிக் குரிசில் அளவாக[276],
நினக்குக் கூறிய அளவால் ஏத்தி ஒழியாதே துதித்து[277],
நின் திருவடியைப் பெறவேணும் என்று கருதி வந்தேன் என்று நீ கருதிய அதனைச் சொல்வதன் முன்னே[281],
பிள்ளையாரைச் சேவித்து நிற்பவர் தோன்றி[283],
அறிவு முதிர்ந்த வாயையுடைய புலவன் வந்தான் நின் புகழைக் கேட்ட்டு என்று கூற[285],
தெய்வத்தன்மையால் நின்ற நிலைமை உள்ளடக்கித் தனது இணைய அழகைக் காட்டி[290],
"அஞ்சவேண்டாம் புலவரே[291],
நின் வரவு யாம் அறிந்தோம்" என்று அன்புடனே நல்வார்த்தை அருளிச் செய்து[292],
உலகத்தில் நீ ஒப்பிடமுடியாத அளவுக்கு வீட்டின்பத்தைத் தருவான்[295],
அருவியையும் சோலைகளையும் உடைய மலைக்குரியோன்[317],
என்று எதிர் வந்த பாணனுக்கு உரைத்தான் இவன்.
முருகனிடத்திலே செல்ல வழிப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை!
[நன்றி: திரு. நா.சந்திரசேகரன்]
"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!
முருகனருள் முன்னிற்கும்!
24 பின்னூட்டங்கள்:
//இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. [வரி 100-102]
"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"
//
ஆமாம். வள்ளியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில்தான் வரும். ஆனால் தெய்வானையைப் பற்றி பாடல் முழுதும் வரும். ஏன்னா தெய்வானை ஒரு பார்ப்பன இனப்பெண்.
//இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.
//
வரிசையை தெய்வானை, வள்ளி என மாற்றி போட்டுவிட்டால் போதுமா? முதலில் கட்டியது யாரை? இரண்டாவதாக வந்து ஒட்டிக்கொண்டது யார்? தெய்வானை ஒரு பார்ப்பனப் பெண் என்பதால் முன்னுரிமை கொடுத்து தாங்கள் முன்னுக்கு போட்டீர்களோ?
அதுசரி "வள்ளிமேல் குற்றமில்லை மயிரைவிடு தெய்வானை" என்ற பாடலை கேட்டு இருக்கிறீர்களா எஸ்கே அய்யா? ஜாதிப்பாசம் உங்கள் ஆன்மீகக் கண்களையுமா மறைக்க வேண்டும்?
எனக்கு திருமுருகாற்றுப்படை பற்றி தெரிந்துகொள்ள தங்களது பதிவும், ஜி.ரா பதிவும் உதவுகிறது. நன்றி எஸ் கே.
எஸ்கே சார்,
கௌமாரம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் என அன்புடன் கோரிக்கை வைத்து வேண்டுகிறேன்.
அன்பு நண்பர் திரு.வி.க, ,
இந்த பார்ப்பன இனப்பெண் விவகாரத்திற்கெல்லாம் என்னை இழுக்காதீர்கள்.
நான் ஒரு சாதாரண முருகனடிமை.
எவரையும் அவரவர் நிலையிலேயே ஏற்றுக்கொள்ள, ஒப்புக்கொள்ள உறுதி பூண்டவன்.
வரிசை முக்கியமில்லை எனக்கு.
வள்ளி தெய்வானை எனச் சொன்னாலும் இல்லை மாற்றிச் சொன்னலும், என் முருகனில்லாமல் பெருமை இல்லை இவர்களுக்கும்.
ஜாதிப்பாசம் எனக்கில்லை.
அப்படி இருப்பதாக நீங்களோ, அல்லது வேறு எவரோ கற்பனை செய்து கொண்டாலும், இதுவரை அதனை வெளியில் பறை சாற்றியதில்லை.
இங்கு நான் சொல்ல வந்தது பண்டைய தமிழிலக்கியம் பற்றிய "என்" கருத்து.
அவ்வளவே!
அது தவறென நீங்கள் கருதும் பட்சத்தில், அது குறித்து நான் சொல்ல ஏதுமில்லை.
வருகைக்கு மிக்க நன்றி.
எவ்வகையிலேனும் இது தங்களுக்கு உதவியாய் இருப்பின் அது பற்றி மகிழ்கிறேன், மதுரையம்பதியாரே!
நன்றி.
கௌமாரம் பற்றியெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு அதிகம் தெரியாது, திரு.ஹரிஹரன்.
ஏற்கெனவே இதற்கென ஒரு தனி வலைத்தளமே இருக்கிறது.
அங்கு சென்று பார்க்கலாம்.
முருகனை மட்டுமே எனக்குத் தெரியும்.
மற்றபடி, மத உட்பிரிவுகள் பற்றி எழுதும் எண்ணமில்லை.
"வாழும் நெறி" எனும் சனாதன தர்மத்தில் இதெல்லாம் ஒரு வசதிக்காக ஏற்பட்டவை என்பது என் கருத்து.
நன்றி.
எஸ்.கே. நீங்கள் திரு.நா. சந்திரசேகரன் அவர்களின் விளக்கத்தை எடுத்து இட்டுருக்கிறீர்கள். ஆனால் இவற்றுள் எல்லா இடங்களிலுமே தெய்வயானை குறிக்கப்பட்டிருக்கிறாள் என்ற விளக்கத்தைச் சொல்ல இயலாது என்று எண்ணுகிறேன்.
வரி6. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":
இங்கே கற்பின் வாணுதல் என்றதால் கற்பு மணத்தால் மணக்கப்பட்ட தெய்வயானையைச் சொன்னதாக உய்த்துணரலாம். இந்திரன் மகள் என்ற குறிப்போ தெய்வயானை என்ற குறிப்போ இல்லை.
வரி 175 - 176. "தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":
இந்த வரியில் இருப்பதை வள்ளிக்கும் சொல்லமுடியும். மடந்தை என்றால் பெண் என்று தானே பொருள் - தெய்வயானை என்பது தருவித்துக் கொண்ட பொருள் தானே.
வரி 216. "மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":
இங்கும் தெய்வயானையைக் குறிப்பதாகத் தெரியவில்லை. மென் தோள் பல்பிணை என்றதால் மெல்லிய தோளினையுடைய பல பெண்கள் என்று வேண்டுமானால் பொருள் கொண்டு இரு மனைவியரையும் குறித்தார் எனலாம். தெய்வமகளிரோடு என்பதும் தருவித்துக் கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது. அந்த வரியில் தெய்வமகளிர் என்பதற்கான குறிப்பு இல்லை.
[வரி 116-117]"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட"
வள்ளியைச் சொன்னதோடு பின்னர் இந்த வரியில் தெளிவாக 'வான் மகளிர்' என்று சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது.
அடுத்து, வரி 264-ல்,"மங்கையர் கணவ"
இதுவும் பல பெண்களின் கணவன் என்று சொல்கிறது. அதனை இரு பெண்களின் கணவன் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் நீங்கள் எடுத்துக் காட்டியுள்ளவற்றில் சில எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும்; சில பல பெண்களின் கணவன் முருகன் என்று சொல்கிறது - இரு பெண்களின் கணவன் என்று பொருள் கொள்ளவும் தடையில்லை.; வள்ளியைக் குறித்த அதே இடத்தில் வான்மகள் என்று தெய்வயானையையும் குறித்திருக்கிறது. எனவே தெய்வயானையைப் பற்றிய குறிப்பு 'தெய்வயானை' என்று நேரடியாகச் சுட்டாமல் மறைமுகமாக சுட்டி திருமுருகாற்றுப்படையில் இருக்கிறது. இதுவே இந்த இடுகையைப் படித்த பின் எனக்குத் தோன்றுவது.
வள்ளியை முதலில் மணந்தாரா, தெய்வயானையை முதலில் மணந்தாரா என்பதிலும் தெய்வயானை பார்ப்பனப் பெண்ணா தேவமகளா என்பதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. திருமுருகாற்றுப்படையிலும் மற்ற சங்க இலக்கியங்களிலும் தெய்வயானை குறிக்கப்படவில்லை என்ற இராகவனின் கருத்திற்கு நீங்கள் சொன்ன இந்த எடுத்துக்காட்டுகளைப் பற்றிய என் கருத்தினை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
முடிவில் வள்ளி தெய்வயானை மணாளனை நாம் மூவரும் நம் நண்பர்கள் பலரும் எந்த வேறுபாடும் இன்றி வணங்குவது தான் முதன்மையானது. மற்றவை நண்பர்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே.
எஸ்.கே, எனக்கும் முருகனைத் தெரியும். அவ்வளவுதான். அதற்கு மேல் நூலோ, கௌமாரமோ....எனக்குத் தெரிந்தது மிகக் குறைவுதான். ஆகையால் எனக்குத் தெரிந்த வகைக்குப் பதிவு போட்டேன். திருமுருகாற்றுப்படையை முழுக்கப் படிக்கச் சொல்கிறது உங்கள் பதிவு. விரைவில் தொடங்க வேண்டும். அடுத்த இனியது கேட்கின்....திருமுருகாற்றுப்படைதான் என்று ஆற்றுப்படையப்பன் சொல்லி விட்டான். அவன் அருளால் அனைத்தும் கைகூடும்.
நேரடியாகப் பெயர் இவ்விலக்கியத்தில் இல்லை என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை, குமரன்.
மற்றபடி எனக்கு சரியெனப்பட்ட விளக்கங்களையே நான் அளித்திருக்கிறேன்.
அதற்காக உங்கள் விளக்கத்தில் நான் குறுக்கிடவில்லை.
நானும் வேறு எந்தவொரு சர்ச்சைக்குள்ளும் நுழையாமல், தெய்வயானை பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப்படையில் விரவிக் கிடக்கின்றன என மட்டுமே சொல்ல விழைந்தேன்.
ஒன்றிரண்டு உங்களுக்கு சம்மதம் இல்லையெனில் வாதாட விருப்பமில்லை.
ஒன்றே ஒன்றைத் தவிர!
மடந்தை என்றால் பெண்தான்!
ஆனால் "தா இல் கொள்கை மடந்தை" என்றால் என்ன எனப் பாருங்கள்! யாரைச் சொல்கிறார் என விளங்கும்.
பாடிய நக்கீரருக்குத் தெரியும்!:))
மற்றபடி, குறிப்பு இருக்கிறது என உங்களுக்குப் புரிந்தவகையில் மகிழ்ச்சி.
நானும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே செய்திருக்கிறேன்.
எதையும் தூக்கி நிலை நிறுத்த முயலவில்லை.
மற்றவர்க்கு எது முதன்மையானது என எனக்குத் தெரியாது.
எனக்கு முருகன் என்பது தெரியும்.
வருகைக்கு மிக்க நன்றி.
முருகனருள் முன்னிற்கும்.
இப்படி ஏதாகிலும் செய்து உங்களுக்கு உள்ளக்குறிப்பால் உணர்த்திய முருகனுக்கு வணக்கம்!
எங்களுக்கு அடுத்த விருந்து என்னவெனச் சொல்லிவிட்டீர்கள்!
காலம் தாழ்த்தாது, அவனருளலே அவன் தாள் வணங்கித் தொடங்குங்கள்!
:))
எஸ்.கே!
தாங்களுமா இந்தச் சர்ச்சையில்?
!!!!!!?
:)
முருகனருள் முன்னிற்கும்!
//முடிவில் வள்ளி தெய்வயானை மணாளனை நாம் மூவரும் நம் நண்பர்கள் பலரும் எந்த வேறுபாடும் இன்றி வணங்குவது தான் முதன்மையானது. மற்றவை நண்பர்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே.
//
இதுதான் நமக்கு வேண்டும்!
இதற்கு அவனின் பரிபூரண அருள் என்றென்றும் உண்டு என்று நம்புகிறேன்!
மீண்டும் ஒருமுறை என் நிலையை விளக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி சிபியாரே!
நான் எந்த சர்ச்சையிலும் நுழையவில்லை.
ஜி.ரா. பதிவைப் படித்ததும், ஆர்வமிகுதியால் திருமுருகாற்றுப்படையைப் புரட்டியபோது, மனதில் பட்டவைகளை எழுத்தில் வடித்திருக்கிறேன்..... என் கருத்தாக மட்டும்.
எவருக்கும் பதில் சொல்லும் விதமாக அல்ல.
அடுத்தவரை மறுத்தும் அல்ல.
அவரவர் கருத்து அவரவர்கட்கு.
குமரன் சொன்னது போல இது ஒரு கருத்து பரிமாற்றம் கூட இல்லை.
தன் கருத்தைச் சொல்லுதல்.. அவ்வளவே.
யாருடனும் எனக்கு சர்ச்சை இல்லை!
மீண்டும் நன்றி.
அவன் அருளுக்கு என்ன குறை!
வைதாரையும் வாழவைப்பவன் அல்லவா அவன்!
அவன் அருளுக்குப் பாத்திரராகும்படி நாம் நடக்க... அதுவும் அவனே அருள வேண்டும்!
வேலும் மயிலும் துணை!
//யாருடனும் எனக்கு சர்ச்சை இல்லை!
//
அப்ப சரி! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
:))
:)))
திருமுருகாற்றுப்படையைக் கூடிய சீக்கிரம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாய் விட்டது. ரொம்பவே நன்றி, உங்கள் விளக்கத்துக்கு.
// SK said...
இப்படி ஏதாகிலும் செய்து உங்களுக்கு உள்ளக்குறிப்பால் உணர்த்திய முருகனுக்கு வணக்கம்!
எங்களுக்கு அடுத்த விருந்து என்னவெனச் சொல்லிவிட்டீர்கள்!
காலம் தாழ்த்தாது, அவனருளலே அவன் தாள் வணங்கித் தொடங்குங்கள்!
:)) //
உண்மைதான் எஸ்.கே. விரைவில் தொடங்க வேண்டும். ஆனால் அதற்கு முன் ஆழமாகப் படிக்க வேண்டும்.
// ஜி.ரா. பதிவைப் படித்ததும், ஆர்வமிகுதியால் திருமுருகாற்றுப்படையைப் புரட்டியபோது, மனதில் பட்டவைகளை எழுத்தில் வடித்திருக்கிறேன்..... என் கருத்தாக மட்டும்.
எவருக்கும் பதில் சொல்லும் விதமாக அல்ல.
அடுத்தவரை மறுத்தும் அல்ல.
அவரவர் கருத்து அவரவர்கட்கு.
குமரன் சொன்னது போல இது ஒரு கருத்து பரிமாற்றம் கூட இல்லை.
தன் கருத்தைச் சொல்லுதல்.. அவ்வளவே.
யாருடனும் எனக்கு சர்ச்சை இல்லை!//
சரியாகச் சொன்னீர்கள் எஸ்.கே. சர்ச்சை அல்ல விரும்புவது. தத்தம் கருத்து. படித்ததில் புரிந்ததைச் சொல்வது. ஆண்டவனை விட அறிந்தவரா நாம்? ஏதோ அவன் அருளாலே அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மற்றபடி வல்லிமார் இருபுறமாக வள்ளியூருறை பெருமானை வழிபட எனக்கு இடைஞ்சல் இல்லை.
நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால், பதிவின் நோக்கம் சிதறிவிடாமல் இருக்கச் செய்வதில் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக பதிவருக்கு, முக்கியப் பங்கு இருக்கிறது.
இதையும் ஆண்டவன் செயல் எனக் கொள்வது "அவன் தந்ததை" நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்வே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன், ஜி.ரா.
இதுவும் என் கருத்து மட்டுமே!
//அவன் தந்ததை" நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்வே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்//
உண்மையான வார்த்தைகள் VSK.
இந்தியப் பயணத்தில் இருந்ததால், அடியேனுக்கு முருகன் அருளிய நற்பேறு, இந்தச் சர்ச்சையின் பக்கவிளைவுகளை எல்லாம் படிக்கக் கொடுத்து வைக்கவில்லை!
ஒரு கருத்தின் பக்கவிளைவால் என்ன பாதிப்பு வரும் என்பதை எப்படி உணரலாம்? ஒரு நல்லடியார் நிலையில் நம்மை வைத்து யோசித்தால் நிச்சயம் உணரலாம்! வாரியார் சுவாமிகள், பதிவை விட, பதிவை ஒட்டிய கருத்துக்களைப் படித்திருந்தால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாரோ! முருகா!!
திருமுருகாற்றுப்படை மற்றும் சிலப்பதிகாரம் தவிரவும் சங்க நூலான பரிபாடலில், குறும்பூதனார் பாடலில், தெய்வாயானை அம்மை பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
மேலும் அம்மையர் இருவருக்கும் நடந்த ஊடல் உவகை குறித்தும், பின்னர் ஊடல் மாறி தெய்வயானை அம்மை வள்ளியம்மையை அன்புடன் வரவேற்றது பற்றியும் வரிகள் வருகின்றன. ("தார் தார் பிணக்குவார்")
இப்படிப் பண்டைத் தமிழான பரிபாடல், எட்டுத் தொகை நூலிலும் இருவருடன் சேர்ந்தே அருளுகிறான் இக பர ஞான உருவான முருகப் பெருமான்.
இதை வரலாற்றுச் சர்ச்சையாய் அன்றி சாத்வீகமும் செந்தமிழும் கலந்த பதிவாய் பின்பொரு நாள் அடியேன் இடுகிறேன். செந்தமிழும் செவ்வேளும் துணை நிற்க!
"முருகா" என்று வாய்விட்டு அழைக்கும் அன்பு மனம் இதெயெல்லாம் பொருட்படுத்தப் போவதில்லை ஆயினும், சங்கத் தமிழை ஊன்றிப் படிக்க நமக்கு வழிவகை செய்கிறான் போலும்.
தன்னையும் தாழ்த்தி அதனால் நம்மையும் உயர்த்துவதே கந்தன் கருணை!!!
புரிதலுக்கு நன்றி, திரு.ரவி!
நாம் ஒரு எட்டு எடுத்து வைத்தால் "அவன்" 9 அடிகள் எடுத்து நம்மிடம் வருவான்!
நம் எட்டு "அவனை" நோக்கி இருக்க வேண்டும்.
மீதி ஒன்பதும் வருவதற்கு!
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். குற்றம் குறை கூற வேண்டும் என்பதற்காகவே சிலர் பின்னூட்டியதாகத் தெரிகிறது.
(எஸ்கேசார், ஏன் பெயரை விஎஸ்கே என மாற்றிக் கொண்டீர்கள்? பொட்டீக்கடை உங்களுக்கு உத்தரவிட யார்? அவர்களைவிட உங்கள் எழுத்துதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமலை என்பவர் கூட உங்களை அசிங்கமாக ஏசி இருந்தார். வருத்தமாக இருந்தது எனக்கு)
தங்களது அன்பான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, திரு.ஆதிசேஷன்.
உத்தரவெல்லாம் இடவில்லை அவர்.
தான் மாற்றிக்கொள்ள தன் சுயகௌரவம் இடம் கொடுக்கவில்லை; எனவே என்னை மாற்றிக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.
சரி, இதிலென்ன என மாற்றி விட்டேன்.
உங்களுக்கெல்லாம் நான் எப்பவும் எஸ்கேதான்!
பதிவிடவும், நான் பின்னூட்டமிடவும் மட்டுமே வீயெஸ்கே!
:))
Post a Comment