Sunday, March 11, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54 [49]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 54
49.


தன்னந் தனிநின் றதுதான் அறிய


இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ


மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே.

தன்னந் தனி நின்றது தான் அறிய


இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்


கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே.

‘நேத்து இன்னாமோ சொன்னியே நீ? ‘எங்கியோ திருவள்ளுவர் சிலையாண்டை நின்னுக்கினுக்கீறேன். ஒன்னை எங்க காணலியேன்னு பொலம்பினியே.. நெனைப்பு க்கீதா?

அந்த செகண்டுல ஒன்னிய சுத்தி ஒரு நூறு பேரு இப்பிடியும் அப்பிடியுமா போய்க்கினு இருந்திருப்பாங்க! ஆனாக்காண்டியும்,, அப்ப ஒம் மனசு, கண்ணு ரெண்டுமே என்னிய மட்டுந்தான் தேடிக்கினு இருந்துது!

அதுனாலத்தான் அப்பிடி ஒரு வார்த்தை ஒங்கிட்டேர்ந்து வந்திச்சு!

அந்த நேரத்துல, ஒன்னியப் பாத்து ஒர்த்தர் இன்னா சார், ஆரைத் தேடுறேன்னு கேட்டிருந்தாக்கூட, அதுக்கு நீ இன்னா ஒரு பதில் சொல்லியிருந்தாக்கூட, அது ஒனக்கும் புரிஞ்சிருக்காது… கேக்கறவனுக்கும் வெளங்கியிருக்காது!

ஏன்னா, நீ தேடறது இன்னான்னு அவனுக்குத் தெரியாது. நீ சொல்றது இன்னான்னு அவனுக்கும் புரிஞ்சிருக்காது.

இதான் இன்னைக்கு நாம அல்லாரும் பாக்கறது, கேக்கறது, புரியறது!

இன்னா, நான் சொல்றது வெளங்கிச்சா?’ என்றான் மயிலை மன்னார்!

அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமலையே, ‘நீ சொல்வது என்னவென எனக்குப் புரியலியே மன்னார்!’ என்றேன் பரிதாபமாக.

‘ம்க்கும்.. ஒனக்கு என்னிக்குத்தான் புரிஞ்சுது, இன்னிக்குப் புரியறதுக்கு’ என நொடித்தார் சாம்பு சாஸ்திரிகள்.

‘இப்ப நீங்க வேறயா?’ என்பதுபோல அவரை முறைத்தேன்.

இதான், இதான்…. இந்த மொறைப்புதான் ஆவாதுன்றது. அவுரு சொன்னது கரீட்டு! நான் இப்ப இன்னா சொல்லப்போறேன்னு மட்டும் கேளு! அத்தான் நல்லது. ‘எனச் சொல்லிவிட்டு என்னை அன்புடன் தட்டிக் கொடுத்தான் மன்னார்.

‘கிட்டத்தட்ட அல்லாத்தியும்,…… அநுபூதின்னா இன்னா?..... அது கெடைக்கணும்னா இன்னா பண்ணணும்?..... எதையெல்லாம் வுடணும்?...... எதைத் தேடிப் போவணும்?.....னு இதுவரைக்குமா ஒரு நாப்பத்தெட்டுப் பாட்டாச் சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப ‘டகால்’னு ரூட்டை மாத்திப் பாடறாரு!

நான் ஒனக்கு இதை இன்னான்னு சொல்லிப் புரியவைப்பேன்’னு சொல்றாரு! அதான் இதுல க்கீற சூட்சுமம்!

இதுவரிக்கும் சொன்ன அத்தினியயும் நீ பண்ணினியான்னா, ஒனக்கு ஒரு உண்மை தெரியவரலாம். அது இன்னான்னு ஒனக்கு மட்டுமே புரியும்! அந்த நெலையுல ஒனக்கு இன்னாமாரி ஒரு அனுபவம்…. அதான் அநுபூதி…….கெடைச்சுதுன்றத ஒன்னியத் தவர வேற ஆராலியும் புரிஞ்சுக்க முடியாது! ஒன்னாலியும் வேற ஆருக்குமே சொல்லவும் முடியாது! அதும்மாரி ஒரு நெலையுலதான் இப்ப நான் க்கீறேன்! என்னால எப்பிடிரா அத்த ஒனக்கு சொல்லிப் புரிய வைக்கறது?’ன்னு அங்கலாய்க்கறாரு!

அதான் இந்த மொத ரெண்டு வரியும்.

“தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?”

கந்தன் இவருக்கு சொன்ன அத்தினியையும் இவர் பண்ணிட்டு, நிமிந்து பாக்கறாரு!

என்னோடதுன்றத வுட்டாரு!

நாந்தான் அல்லாமும்ன்றதியும் வுட்டாரு!

சுத்துப் பத்து அல்லாமே செத்துப்போச்சுன்னும் புரிஞ்சுக்கினாரு!

நாந்தான் நீன்ற நெனப்பும் மறந்து போச்சு இப்ப!

நீதான் என்னோட முருகன்ற நெனைப்புகூட அத்துப் போச்சு!

இப்ப அவுரு மெதக்கற நெலையே அவுருக்குத் தெரியலை!

இப்பிடியாப்பட்ட ஒரு நெலையுல, …. அது சொகமா, உணர்வா….நெனைப்பா..ன்னு எதுவுமே தெரியாத ஒரு எடத்துல அத்த இன்னான்னு சொல்லி வேற ஒர்த்தருக்கு என்னால புரியவைக்க முடியும்?னு சொல்றாரு! ஏன்னா, அந்தமாரி ஒரு செகண்டுலதான், "முப்பத்தாறயும்" வுட்டுப் பிரிஞ்சு தன்னந்தனியா நிக்கற அந்த ஒரு நொடியுலத்தான்,….. குருநாதனான கந்தன் வந்து ஆன்மாவுக்குள்ள ஒக்காந்திருவான்! அப்பிடி அவன் வந்ததுக்கப்பால அத்தப் பத்தி ஆருதான் இன்னான்னு சொல்ல முடியும்?

இப்ப இதுக்கு அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னு பாப்பம்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

ஒரு பெரிய சஸ்பென்ஸில் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே எனத் திடுக்கிட்டு ஒரு அதிர்ச்சியுடன் அவனை நோக்கினேன் நான்!

நாயரோ இதைப் பற்றியெல்லாம் கவலையே படாதவன்போல, கண்களை மூடிக் கிடந்தான்!

அவன் வாய் ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை விடாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது!

சாம்பு சாஸ்திரிகளோ ஒரு அர்த்தபுஷ்டியுடன் மன்னார் முகத்தைப் பார்த்தார்!

மன்னார் தொடர்ந்தான்!

“மின்னும் கதிர்வேல் விகிர்தா”ன்னு கூப்பிடுறாரு.

கதிர் வேல்னா இன்னான்னு தெரியுமில்ல? சூரியனோட வெளிச்சம் போல மின்ற வேலு!

சூரியனை நேராப் பாக்க முடியுமா? அதோட வெளிச்சம் கண்ணைக் கூசும்! அதும்மாரி கண்ணைப் பறிக்கற வேலு. அதுலியும் இத்த மின்னும் கதிர் வேலுன்னு சொல்றாரு. முருகன் கையுல இருக்கறப்ப, அந்தக் கையி அசையக்கொள்ள, அந்த வேலு இப்பிடியும் அப்பிடியுமாத் திரும்பறச்ச, அத்தோட வெளிச்சம் இன்னும் பிரகாசமா க்கீதாம்!

எதுனால அப்பிடித் திரும்புதுன்னா, அவங்கவங்களுக்கு வேணும்ன்றமாரி முருகனோட வடிவம் மாறி, மாறித் தெரியுது. தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, அவங்களுக்கு சந்தோசம் குடுக்கறதுக்காவ, கந்தன் வெவ்வேற வடிவம் எடுக்கறாரு. விகிர்தன்னா அதான் அர்த்தம்.

இந்த ‘மின்னும் கதிர்வேல் விகிர்தன்’ எதுக்காவ இப்பிடி பலவிதமா வேசம் கட்றார்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியான கஸ்டம், தும்பம்! அததுக்குத் தக்கமாரி, ஒவ்வொரு விதமா வராரு முருகன். கின்னம்னா, தும்[ன்]பம்னு அர்த்தம்.

மனுஷாளுக்கு வர்ற கஸ்டத்தயெல்லாம் அததுக்குத் தகுந்தமாரி தீர்த்து வைச்சு, கிருபை பண்றதத்தான், ‘கின்னம் களையும் கிருபை சூள்[ழ்] சுடரே’ன்னு பாடுறாரு அருணையாரு.

இதுல இன்னா விசேசம்னா, ஒர்த்தொர்த்தருக்கு ஒருமாரியா வந்து கிருபை பண்றாரா, அதுனால இதான் முருகன், இப்பிடித்தான் வருவான்னு ஆராலியுமே சொல்லிக் காட்ட முடியாமப் போயிறுது!

எப்பிடி அநுபூதி நெலைன்னா இன்னான்னு அருணகிரிநாதரால சொல்ல முடியாமப்போயி தவிக்கறாரோ, அப்பிடித்தான் இந்த விகிர்தனோட கிருபையும்! எப்பிடி சொல்றதுன்னே புரியாம வந்து அருள் பண்ணறான்!’ என முடித்தான் மயிலை மன்னார்.

இன்னவெனச் சொல்லமுடியாத மௌனம் அங்கே நிலவியது!
******************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP