"சூரிய கிரஹணம்" - இரு எண்ணங்கள்!
சூரிய கிரஹணத்தன்று இரவு் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மனத்தில் எழுந்த சில எண்ணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்! நன்றி.
"சூரிய கிரஹணம்"
http://vizhiyan.wordpress.com/2009/07/22/solar-eclipse-photographs/
[நன்றி: விழியன்]
ஒளிர்மிகுந்தெழுந்தான் ஆதவன்
உலகின் ஒளியே நானென மகிழ்ந்தான்
மறையும்போதில் நிலவைப் பார்த்தான்
என்னைத் தாங்கிடு நீயே என்றான்
ஒளியைத் தாங்கிட முடியா நிலவன்
தேய்ந்தும் வளர்ந்தும் சற்றே நெளிந்தான்
அடங்கிய ஒளியில் அலர்ந்த நிலவினில்
அடங்காக் காதலை அனைவரும் உணர்ந்தார்
தன்னொளியில்லா நிலவின் ஒளியில்
மயங்கிய அனைவரும் மயங்கியே போனார்
நிலவனும் உணர்ந்தான் தன்நிலை தன்னை
உலவிடும் தானும் நிழலென் றறிந்தான்
எனக்கென ஓர்நாள் இருக்குமா என்றான்
என்னையே மறைப்பாய் நீயும் ஓர்நாள்
ஒளியும் நிழலும் ஒன்றே என்பதை
உலகிற் குணர்த்தும் அந்நாள் தன்னில்
எனவே யுரைத்த ஆதவன் மொழியில்
அகமே மகிழ்ந்தான் நிழலவன் நிலவன்
இடையில் வருகையில் இகமே உணரும்
என்செயல் எதுவென யானும் காட்டுவேன்
பகலவன் சிரித்தான் பரமன் சிரித்தான்
அகிலம் சிரித்தது ஐம்புலன் சிரித்தன
மறைவதும் தெரிவதும் மாயவன் வேலை
அதனில் யாமெலாம் அவனது கருவிகள்
கிரஹணம் வந்தது ஆதவன் மறைந்தான்
நிலவன் உணர்ந்தான் நிஜமது அறிந்தான்
ஒருசில நொடியே நிழலும் மறைக்கும்
உண்மை யொன்றே என்றும் நிலைக்கும்
மறுக்கும் குணமும் மனதில் துளிர்க்கும்
குருவின் அருளால் அனைத்தும் புரியும்
மறைவதை உணர்த்தி மங்களம் தருவான்
குறைவிலா வாழ்வினை எமக்கே தருவான்!
குருவே சரணம்! குருவடி சரணம்!
***************************
"கிரஹணம் விலகிட....."
நிலவும் ஆதவன் மறைத்திடும் நேரம்
நீயும் கொண்டாய் நெஞ்சினில் சோகம்
உதயம் எழுந்திடும் பகலவன் முகத்தை
மூடிட எண்ணிடும் அறியா நிலவும்
மெதுவாய்ப் படர்ந்து நிழலால் தவழ்ந்து
சூரியன் மறைத்திட நிலவும் மகிழும்
அதனால் படரும் இருளின் துன்பம்
நிலத்தில் பட்டிட பூமியும் கலங்கும்
கலக்கம் அனைத்தும் ஒருசில நொடியே
விலக்கம் உடனே விரைவில் துவங்கும்
மூடிய நிழலும் சுழற்சியில் நகரும்
மீண்டும் ஆதவன் ஒளியும் தெரியும்
பரவிடும் ஒளியினில் இருளும் விலகும்
பல்லுயிர் மகிழ்ந்து நீரினில் ஆடும்
பாதைகள் முட்டும் புள்ளியில் சிலநொடி
ஒன்றால் ஒன்று மறைதலும் நிகழும்
பாதைகள் விலகிட பேரொளி தெரியும்
சோதனை தீர்ந்து வேதனை மறையும்
விளக்கம் இல்லா விலக்கம் இங்கே
விலகும் அனைத்தும் விளக்கிடும் அன்றோ
அறிவால் இதனை அடைதலும் கூடுமோ
புரிந்திடும் அருளினில் புரிந்திடும் அன்றோ!
குருவே சரணம்! குருவடி சரணம்!
*****************************
4 பின்னூட்டங்கள்:
////பாதைகள் முட்டும் புள்ளியில் சிலநொடி
ஒன்றால் ஒன்று மறைதலும் நிகழும்
பாதைகள் விலகிட பேரொளி தெரியும்
சோதனை தீர்ந்து வேதனை மறையும்
விளக்கம் இல்லா விலக்கம் இங்கே
விலகும் அனைத்தும் விளக்கிடும் அன்றோ
அறிவால் இதனை அடைதலும் கூடுமோ
புரிந்திடும் அருளினில் புரிந்திடும் அன்றோ!//////
புரிந்து கொள்பவர்களுக்கு புரிந்துதான் இருக்கிறது வி.எஸ்.கே சார்!
வறட்டு வாதம் செய்பவர்களுக்கு என்ன எழுதினாலும் கடைசி வரை புரியப்போவதில்லை!
ஒன்றே சொல்லினும் அதை நன்றே சொல்லி மகிழ்விக்க ஒரு ஆசான் இருக்கையில், அனைத்தும் விலகிடுமே ஆசானே!
மிக்க நன்றி!
Arumai.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment