மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்
மன்னாரைத் தேடிக்கொண்டு வழக்கமான நாயர் கடைக்குப் போனேன்.
அமரச் சொல்லிவிட்டு, மசால் வடையும், டீயும் வழங்கினார் நாயர்.
'வர்ற நேரந்தன். இப்ப வரும்' எனச் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.
கடையிலிருந்து வந்த பாட்டு என் காதுகளில் ரீங்கரமிட்டது!
'அழகிய அசுரா! அழகிய அசுரா! அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சுகிச்சு மூட்டவில்லையா'
என அனிதா சந்திரசேகர் பாடிக் கொண்டிருந்தார்.
அடையாறிலிருந்து வந்த பேருந்து ஒன்றிலிருந்து அநாயசமாகக் குதித்து இறங்கினான் மயிலை மன்னார். முகத்தில் கோபம் வீசிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல், நேராக நாயரிடம் சென்று, ஒரு டீயை வாங்கிக் கொண்டுவந்து என்னருகில் அமர்ந்தான்.
அவனாகப் பேசட்டும் எனக் காத்திருந்தேன். இதுபோன்ற நேரங்களில் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது நாமாகத்தான் இருக்கும் எனத் தெரியும் எனக்கு!
ஒரு பீடியைப் பற்றவைத்தவன், நாயரைப் பார்த்து, 'அந்தப் பாட்டை நிப்பாட்டு நாயர்! இல்லைன்னா ஸ்டேஷனை மாத்தித் தொலை' எனக் கோபமாகக் கத்தினான்.
விஷயம் கொஞ்சம் தீவிரமானது எனப் புரிந்த நான் மன்னாரின் தோள் மீது கையைப் போட்டேன்.
என்னைப் பார்த்து கொஞ்சம் சிரித்தான்.
'இன்னாடா இன்னிக்கு மன்னாரு படா ஜூடா இருக்கானேன்னு பாக்குறியா? அது ஒண்ணுமில்லேப்பா. இந்த காலத்துப் பசங்க தானா ஒருத்தனை/ஒருத்தியை மனசுல நினைச்சுகிட்டு, கனவு காண ஆரம்பிச்சிடறாங்க. அவன்/அவ மனசுல நாம இருக்கோமான்னு கூட கவலைப் படாம! இது எம்மாந் தூரத்துக்கு வெவகாரத்துல கொண்டுபோயி விட்டுடுதுன்னு அப்போ தெரியறதில்ல. குடும்பத்துல பிரச்சினை, தனக்குள்ள பிரச்சினைன்னு இது பல பிரச்சினைங்களுக்கு கொண்டு போயிடுது.
நம்ம கபாலி மவ கற்பகம்... ஒரு பதினைஞ்சு, பதினாறு வயசுதான் இருக்கும்.... அது இதுமாரி ஒரு கனவுல மாட்டிகிட்டு கன்னாபின்னான்னு எதையோ கிறுக்கி வைச்சிருக்கு. அது கபாலி கையில் கிடைச்சு, போட்டு பின்னி எடுத்துட்டான். கபாலி சம்சாரம் என்னைக் கூப்பிட்டு ஒடனே வரச் சொல்ல, அங்கே போயிப் பார்த்தா, ஒரே ரணகளம். அதை இன்னா ஏதுன்னு விசாரிச்சு நாட்டாமை பண்ணிட்டு வந்தேன். இதுல இன்னா வேதனைன்னா, அந்தப் பையன் இதுகிட்ட நீ எனக்கு சரிப்படாதுன்னு கண்டிசனா சொல்லியிருக்கானாம். இதுதான் அதைக் கண்டுக்காம தடுமாறிகிட்டு இருக்கு! அத்தோட இங்க வந்தா 'கனவுல வந்து கிச்சுகிச்சு மூட்டறா ஒருத்தி' !! அதான் கொஞ்சம் டென்சனாயிட்டேன்' எனச் சொன்னவன் திடீரெனக் 'கடகட'வெனச் சிரிக்கத் தொடங்கினான்.
'என்ன? என்னாச்சு?' என நான் துருவினேன்.
'அட! அது ஒண்ணுமில்லீப்பா! இந்த ஒருதலையாக் கனவு காண்றது இன்னிக்கு நேத்திக்கு இல்ல. வள்ளுவன் காலத்திலியே இருந்திருக்கு! இத்த வைச்சு, ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. படா தமாசா இருக்கும் அது. எளுதும்போது சிரிச்சுகிட்டே எளுதியிருப்பாருன்னு நினைக்கறேன். இப்ப அதைச் சொல்றேன். எளுதிக்கோ! எனக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்' எனச் சொல்லித் தொடங்கினான். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்கு!
இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்.!
'அதிகாரம்- 122.' " கனவுநிலை உரைத்தல் "
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. [1211]
இந்தக் கனவு காண்றதெல்லாம், அதிகமாப் பொண்ணுங்களே செய்யறாங்கன்றது ஐயனோட அபிப்பிராயம்னு நினைக்கறேன். அதுனால, இந்தப் பத்துக் குறள்லியும் ஒரு பொண்ணு காண்ற கனவைப் பத்தியே சொல்லியிருக்காரு! ஆனா, இது ஆம்பளைப் பசங்களுக்கும் பொருந்தும்ன்றதை நெனைப்புல வைச்சுகிட்டு புரிஞ்சுக்கோ! சரியா!
மொதல்ல இந்தக் காதல்ன்றத சரியாப் புரிஞ்சுக்கோ! ஒருதலையா அன்பு வைக்கறதுக்குப் பேரு காதல் இல்லை! காதல்ன்னா அது ரெண்டு பேருக்குள்ள வர்றது. மத்ததெல்லாம் காதல் இல்லை. ஒருத்தியை நெனைச்சுகிட்டு தாடியை வளர்த்துக்கறதோ, இல்ல, அவனை நெனைச்சுகிட்டே சாப்பிடாம ஒரு பொண்ணு மெலிஞ்சு போறதோ மட்டும் காதல்னு ரொம்பப் பேரு நெனைக்கறாங்க! இது வெறும் அன்பு வெறி மட்டுந்தான்! காதல் இல்லை! சரி விடு! இப்ப குறளைப் பார்ப்போம்.
இந்த மொதக் குறள்ல, ஒரு பொண்ணு கனவு காண்றா! அதுல இவ காதல் பண்ற ஆளுகிட்டேர்ந்து ஒரு தூது எடுத்துகிட்டு வருதாம் அது! கனவுன்றதே இவ நெனைக்கறதோட வெளிப்பாடுதானே! அதான் அவன் வந்து எனக்கு ஒன்னிய ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதா இவ கனவு காண்றா! ஒடனியே, ஆஹா! இப்பேர்ப்பட்ட நல்ல சேதியைச் சொன்ன இந்தக் கனவுக்கு நான் இன்னா விருந்து வைக்கறதுன்னு அடுத்த கனவுக்குப் போயிடறா!!
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். [1212]
நேருல பாக்கறப்பல்லாம் ஒண்ணுமே நடக்கலை! அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை. ஆனா, இவளுக்கோ அவன் மேல ஆசை அதிகமாயிட்டே இருக்கு! அதுனால தூக்கங்கூட சரியா வர்றதில்ல!
கொஞ்சமாவது தூங்கினாத்தானே கனவுன்னு ஒண்ணு வந்து அதுலியாவது அவனோட பேசலாம்; ஆடலாம்! அதுனால, இவ இன்னா பண்றான்னா, கண்ணுகிட்ட வேண்டிக்கறா!
'ஏ! கண்ணே! கண்ணே! கொஞ்சம் ஒன்னோட இமைங்களை மூடச் சொல்லேன்! அப்பத்தானே என் கனவுல அவரு வருவாரு! அவரு வந்தாத்தானே 'நீ இன்னாதான் என்னைக் கண்டுக்கலைன்னாலும், நான் ஒனக்காகவே காத்துகிட்டிருக்கேன்'ற சமாச்சாரத்தை நான் அவர்கிட்ட சொல்லமுடியும்'னு பொலம்பறா.
நேருலதான் ஒண்ணும் ஆவலை! கனவுலியாவது கெஞ்சலாமேன்னு நெனைக்கறா இவ!
உயல் உண்மைன்னா, இருக்கற உண்மைன்னு பொருள்!
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். [1213]
முளிச்சுகிட்டு இருக்கறப்ப, அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை! அப்பிடியே கண்டுகிட்டாலும், எனக்கு ஒம்மேல காதல்னு ஒண்ணும் இல்லைன்னும் சொல்லிட்டானாம்! இருந்தாலும் இதுக்கு மட்டும் ஆசை விடலை! அவனையே நெனைச்சுகிட்டு கனவு காண்றா! அதுனாலத்தான் இவ உசுரே இவ கிட்ட இன்னும் இருக்குதாம்!
இவளா ஒண்ணை நெனைச்சுக்க வேண்டியது! அப்பால, அதுனாலத்தான் என் உசுரே எங்கிட்ட இருக்குன்னு முடிவு பண்ணிட வேண்டியது. இதே பொளப்பாப் போச்சு!
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. [1214]
இந்த 'நனவினான் நல்காரை'ன்னு திருப்பித் திருப்பி ஐயன் சொல்றதைக் கெவனி!
நேர்ல ஒண்ணும் கொடுக்காதவன்னு அவனோட நிலையைக் கண்டிசனா சொல்லிடறாரு. இதான் கெடந்து அல்லாடுது.
இப்பிடி அவனைக் கனவுல அடிக்கடி பாக்கறதுல இதுக்கு வர்ற சந்தோசம் இருக்கே அதுவே அவன் நேர்ல ஒண்ணுமே தராததைக் கூட மறக்கடிச்சு அவ்ளோ குஜாலைக் கொடுக்குதாம்!
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. [1215]
எதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே!
அதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இருக்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்! துக்கந்தான்!
இதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்!
நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். [1216]
இந்தக் குறள்தான் ரொம்பவே தமாசா இருக்கும் பாரேன்!
கண்ணு முளிச்சு இருக்கற நேரம்லாம், உண்மைநிலை இன்னான்னு புரியறதுனால, அவன் எனக்கு இல்லைன்றது தெளிவா வெளங்கி கஸ்டப்படுத்துது.
கனவு காண்றப்ப, இதெல்லாம் மறைஞ்சுபோயி, அவனோட ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குது
...... நம்ம மனசுதானே காணுது! அதுக்கு நாமதானே எசமான்! இஸ்டம்போல எது வேணும்னாலும் கண்டுக்கலாமே!.....
அதனால, இப்ப இந்தப் பொண்ணு இன்னா நெனைக்குதுன்னா, இந்த நனவுன்ற நெசமே இல்லாம இருந்தா, ஜாலியா எப்பவுமே கனவு கண்டுகிட்டே இருக்கலாமே. அவனோடேயே இருக்கலாமேன்னு இதுக்கு ஐடியா தோணுது!
இப்பிடித்தான் நெசத்தைத் தொலைச்சுபிட்டு கனா காண்றதுலியே நிக்குதுங்க பலபேரு! மறந்திராதே!
இது பொம்பளைக்கு இங்கே சொன்னாலும், ஆம்பளைங்களுக்கும் பொருந்தும்!
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது [1217]
இப்ப, இன்னும் கொஞ்ச மேல போறாரு ஐயன்!
கனவுன்றது நாமளே நெனைச்சுக்கறதுன்னு சொன்னேன்லியா! அதுல அப்பப்ப, இவன் நேருல சொன்ன சில விசயங்களும் வரும்! அதான் 'நான் ஒன்னியக் காதலிக்கலை'ன்னு சொன்னதும்!
இன்னாடா இது ரோதனையாப் போச்சு! நனவுலதான் ஒண்னும் நல்லபடியாக் கொடுக்கலை! நிம்மதியா நம்ம இஸ்டத்துக்குக் கனாக் காணலாம்னா அதுலியும் வந்து இப்பிடி சொல்லிட்டுப் போறானேன்னு இதுக்குக் கோவம் கோவமா வருது. 'நேருல வந்துதான் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டே! இப்ப கனாவுலியும் வந்து ஏன் கஸ்டம் கொடுக்கறே?'ன்னு அவனைத் திட்டுது!
துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து. [1218]
படுத்துத் தூங்குது!
இஸ்டத்துக்குக் கனா வருது.
கனவுல வந்து இன்னான்னமோ பண்றான் அவன்!
அவ தோள்மேல நின்னுகிட்டு ஆடறானாம்!
'டக்'குன்னு முளிப்பு வருது! முளிச்சுப் பார்த்தா அவனைக் காணும்! அல்லாம் கனவுன்னு தெரியவருது.
அந்த கனா கொடுத்த சந்தோசத்துலியே அதுவே நெசம்னு ஏமாந்துபோயி, அவனைத் தூக்கி நெஞ்சுக்குள்ள வைச்சு மூடிக்கறாளாம் இவ!
ஆசைதான் இன்னும் ஜாஸ்தியாவுது! அப்பால இன்னா? தொடர்ந்து கஸ்டந்தான்!
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். [1219]
எத்தினிவாட்டி 'நனவினால் நல்காதவர்'னு இந்த அதிகாரத்துல சொல்லியிருக்காரு பாரு!
சில சமயம் இன்னோரு தமாஸ் நடக்கும். எப்பவுமே இவனைப் பத்தின கனாவே வரும்னு சொல்ல முடியாது. நாளைக்கு ஒரு பரிட்சை இருக்குன்னு வைச்சுக்கோ! அதை நல்லா எளுதணுமேன்ற நெனைப்புல அதைப் பத்தின கனா கூட வரலாம். இது மாரி, வேற சில கனாக்களும் வரலாம். அன்னிக்கெல்லாம் இவன் ஜூட் விட்டுட்டான்னு மறுநாளைக்கு முளிச்சுகிட்டதும், நீ ஏன் நேத்திக்கு என்னோட கனவுல வரலைன்னு அவங்கிட்ட சண்டை போடறா!
கனான்றதே நாமளா கொண்டுவர்றதுதான்னுகூட புரிஞ்சுக்காம! இதான் அவஸ்தை!
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்க்கொல் இவ்வூ ரவர். [1220]
இது அல்லாத்துலியும் இதான் டாப்!
அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லைன்றது அரசப் பொரசலா அக்கம்பக்கத்துக்கு தெரிய வருது!
'ஏம்மா! அவன் ஒன்னை விட்டுட்டானா?'ன்னு அவங்க கேக்கறப்ப, இது இன்னா பதில் சொல்லுது தெரியுமா?
'இல்லியே! அடிக்கடி என்னோட கனாவுல வந்து போறாரே! அது உங்களுக்குத் தெரியாதா?'ன்னு திருப்பிக் கேக்குதாம்.
அந்த அளவுக்கு முத்திப் போயிருது இந்த ஒருதலையான நேசம்!
அந்தக் காலத்துலியே இப்படில்லாம் இருந்திருக்கு. இது இன்னிக்கும் தொடருதுன்றதுப்பா!
தனக்குன்னு ஒருத்தன் வருவான்றதை நம்பாம, இப்பிடிப் போயி விளுந்திட்டு பின்னாடி அல்லல் படறதை விட்டுட்டு, அந்தந்த வயசுல இன்னா செய்யணுமோ அதைச் செஞ்சுகிட்டிருந்தா தானே அல்லாம் நடக்கும்னுதான் கற்பகத்தாண்டை சொல்லிட்டு வந்திருக்கேன். பார்ப்போம்! இன்னா நடக்குதுன்னு' எனச் சொல்லிவிட்டு, 'சரி வா! ஏதாச்சும் சாப்பிடலாம்!' எழுந்தான் மயிலை மன்னார்.
இந்த அதிகாரத்தை இப்படியும் பார்க்க முடியுமா என வியந்துகொண்டே நானும் கூடச் சென்றேன்... 'ஹோட்டல் சங்கீதா'வை நோக்கி!
**********************************
Read more...