"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"
"குடமுழுக்கு கண்டவளுக்கு ஒரு ஈழவனின் கோரிக்கை!"
எரிதணலில் சாகின்றார்
இதுவுனக்கு முறையாமோ - இன்னும்
ஏனிந்த மௌனனமம்மா?
சுதந்திரமே கேட்டிருந்தார் - பல
கொடுமைகளைத் தாங்கிநின்றார்
இன்றங்கே மடிகின்றார் - இன்னும்
பாராமுகம் ஏனம்மா?
கோபுரங்கள் நீ காண - அவரோ
இடமின்றித் துடிக்கின்றார்
கொடுமையிதைக் கண்டபின்னும் - உனக்கு
கோபமிங்கு ஏனம்மா?
நீயங்கு சிரித்திருக்க - அடியே
யாமிங்கு வேகின்றோம்
அடுதுயரை நீக்காமல் - அடியுனக்கு
எம்மேல் ஏனித்தனை வெறுப்போ?
புதுவண்ணப் பூச்சுடனே நின்
கோவிலிங்கே மிளிர்ந்திருக்க
எதுவென்று தெரியாமல் - அங்கே
தவிப்பவரைப் பாரம்மா!
அழகான மணவாளன் -உடன்
அறிவான பிள்ளைரெண்டு
ஆனந்தமாய் நீயிருக்க - நாங்கள்
அழுவதுவும் கேட்கிலையோ?
நின்வண்ணம் கண்டிடத்தான் - இங்குனக்கு
எத்தனைபேர் பாதுகாப்பு
நாதியின்றிச் சாவோரை - நீயின்னும்
பாராததும் ஏனம்மா?
அலங்கரம் கொண்டிங்கு - நீயின்று
அழகாக ஜொலிக்கின்றாய்
அகம்பாவம் கொண்டவரால் - உன்மக்கள்
அழிகின்றார் பாரம்மா!
கதியில்லை வழியில்லை - இனியிங்கு
கடைத்தேறக் களமில்லை
எனவிங்கு ஓயமாட்டோம் - நீ
வாராமல் விடமாட்டோம்!
கொண்டாட்டம் போதுமடி - இப்போதே
எழுந்திங்கு வந்திடடி
இப்படிக்கு நீயிருந்தால் - அடியே!
இனியுன்னை விடமாட்டோம்!
குளித்தது போதுமடி - தாயே!
அழித்துவிடு பகைவர்களை
களித்தது போதுமடி - எழுந்துநீ
எம்வாழ்வில் மலர்ச்சி கொடு!
அடிமைகளாய் வாழ்ந்திடவோ - அடியே
நீயெம்மைப் பிறப்பித்தாய்
இதுவுந்தன் திருவுளமோ - மீனாளே!
சொல்லடி நீ சிவசக்தி!
எமதுரிமை எமக்குவேண்டும் - அது
இன்றே நீ தரவேண்டும்
இனிமேலும் மௌனித்தால் - என் தாயே
உனை யாம் அங்கு வந்து பார்க்கின்றோம்!:(((
2 பின்னூட்டங்கள்:
உம்ம்ம்ம்ம்ம்
உலக அமைதி யாகம்-ன்னு எல்லாம் அப்பப்ப நடத்துவாங்க!
அன்னையின் ஆலயத்தில் இந்தக் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகத்தில், ஈழத்துக்கென்று தனியான வழிபாடு செஞ்சா நல்லா இருக்கும்! ஆதீனங்கள் ஒன்றிணைய வேணும்!
நன்றி, ரவி!
நீங்க சொன்னதுபோலச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் ரவி.
செய்வார்களா?
ஈழ மக்களை நினைத்தால் மனது மிகவும் கலங்குகிறது.
ஏனிந்தத் தீராச் சோகம் இவர்களுக்கு?
அம்மா! கொஞ்சம் கருணை செய்யம்மா!
Post a Comment