Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"


அன்புள்ள கலைஞர் அவர்களே!
வணக்கம்.

இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, 'ஆஹா! ஈழத்தமிழர் விடிவு இப்படித்தான் வர வேண்டியிருக்கிறதே!'
என மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்!

நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு விதித்த கெடுவும், அதைக் கண்டு தமிழகமே தங்கள் பின் அணிவகுத்து மனிதச் சங்கிலியாய்த் திரண்டதும் நீங்கள் ஒரு செயல்வீரர் தான் என என்னை எண்ண வைத்தது.

நீங்கள் விதித்த கெடு முடியும்வரை இதை ஒரு பார்வையாளனாக மட்டுமே கவனிக்கலாம் என இருந்தேன்.

ஆனால், இன்று........!!??!!

நடந்ததெல்லாமே ஒரு நாடகம்தான் என எண்ண வைக்கிறது!

ராஜிநாமாக் கடிதங்கள் போன இடம் தெரியவில்லை!

போர் நிறுத்தம் நடந்ததாகத் தெரியவில்லை!

ராணுவத் தாக்குதல்கள் தொடருகின்றன.

நேற்று கூட ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டு அப்பாவி மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும், பலர் காயமுற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமரசப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப் பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

நீங்கள் ஒன்றும் நடக்காதது போல நிவாரண நிதித் திரட்ட தீவிரமாக முனைந்து விட்டீர்கள்!

இதுவா ஈழ மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது?

நீங்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டும் என்பதா அவர்களின் எதிர்பார்ப்பு,... நம்பிக்கை?

இதற்காகவா இத்தனை நாள் நீங்கள் காத்திருந்தீர்கள்?

அங்கு ஆட்சி போனால், அடுத்த நொடியே இங்கும் ஆட்சி போகும் என்பது எனக்குத் தெரியும்.

முதல் அறிக்கை விடும்போது உங்களுக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், ...அல்லல் படும் மக்களின் அவலத்தை நிறுத்த உங்கள் செல்வாக்கு உதவும் என மிகுந்த ஆவலுடன் நம்பினேன்.

ஏமாற்றி விட்டீர்கள்!

என்னை மட்டுமல்ல!

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே!

இதெல்லாம் நாடகம் எனக் கூவிக் கொண்டிருந்தவர்களின் கூற்றை உண்மையாக்கி விட்டீர்கள் என வருத்தத்துடன் சொல்லிக்
கொள்கிறேன்!

இப்போது கூட இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த முறை போட்டி இடுவேனோ எனத் தெரியாது! எனச் சொல்லி முதல்வர் ஆனவர் நீங்கள்!

உங்கள் கூற்றை மதித்து, உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை அங்கு அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நம் தமிழர்கள்!

அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த கவனமும் [ஒரு சிலரைத் தவிர்த்து!!] ஈழத்தமிழர்களின் விடியலை நோக்கியே இருக்கிறது என்பதே உண்மை!

'மறப்போம்! மன்னிப்போம்!' எனச் சொல்லும் அண்ணா வழியில் அயராது பாடுபட்டு வரும் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கால கட்டம் இன்று!

இலங்கை அதிபர் கூட உங்களை அழைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஈழத் தமிழரும் கூட, நீங்கள் நல்ல முடிவு கொடுப்பீர்கள் என நம்புகின்றனர்!

உணமை நிலவரத்தை அறிய நீங்கள் ஈழம் செல்ல வேண்டும்.

இரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை உங்களால் பெற்றுத் தர முடியும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்!

இந்த நேரத்தில், ஒரு வரலாற்று உண்மையையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிங்கப்பூர் என்ற நாடு முதலில் மலேசிய நாட்டுடன் இணைந்து, அதன் தனித்தன்மை தங்கள் நலனுக்கு ஊறு விளைக்கும் என பெருவாரியான மலேசிய மக்கள் நினைத்ததால், பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்து, சிங்கப்பூரை தனி நாடாக சுதந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

இன்று அந்த இரு நாடுகளும் ஒருவர்க்கொருவர் இணக்கமாகவே இருந்து வருகின்றன!

இந்த அமைப்புதான் இன்றிருக்கும் நிலையில் சிங்களவர்க்கும், ஈழத் தமிழர்க்கும் நன்மை பயக்கும் செயல் முடிவாக இருக்கக்
கூடும் என நான் எண்ணுகிறேன்.

இதையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகினால் நலமாயிருக்கும்.

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு வயதோ, அனுபவமோ கிடையாது என்றாலும், மனதில் தோன்றுவதை
துணிவுடன் சொல்லிவிட எண்ணியே, இதைச் சொல்கிறேன்.

ஆனால், உங்களால் முடியும்!

'உன்னால் முடியும் தம்பி!' என அண்ணா அன்று தங்களைப் பார்த்துச் சொன்ன சொல் இதற்காகத்தான் என நம்பி இதில் முழுமனதுடன், முழு மூச்சுடன் ஈடுபட்டு நல்முடிவு தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்!

'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!'
என அழைப்பு விடுத்தவர் நீங்கள்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

'தமிழர் தலைவா வருக! தமிழீழம் பெற்றுத் தருக!'

நடப்பது நடக்கும்!
நல்லதே நடக்கும்!

எனது அடுத்த கடிதம் தங்களைப் பாராட்டும் கடிதமாக இருக்க எல்லாம் வல்ல என் முருகனை வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!

10 பின்னூட்டங்கள்:

தமிழன் Friday, October 31, 2008 11:45:00 PM  

இந்த பதிவை இந்த தளத்தில் கோரிக்கையாக வைக்க வேண்டுகிறேன். உங்கள் எண்ணம் மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழன் Friday, October 31, 2008 11:47:00 PM  

http://www.mkstalin.net/
மன்னிக்கவும் தளத்தின் முகவரி இங்கே கொடுத்து உள்ளேன்.

நாமக்கல் சிபி Friday, October 31, 2008 11:53:00 PM  

இந்த வேண்டு கோளை நானும் வழிமொழிகிறேன்!

Anonymous,  Saturday, November 01, 2008 4:28:00 AM  

விரைவில் விடிந்திட
அருளிடு
வெற்றி வேல் முருகா.

வெற்றி வேல் முருகனுக்கு
அரோஹரா!

VSK Saturday, November 01, 2008 8:53:00 AM  

நன்றி திரு. திலீபன்.
நீங்கல் கொடுத்த சுட்டிக்கு அனுப்பி வைக்கிறேன்.
நல்லதே நடக்கும்.

VSK Saturday, November 01, 2008 8:54:00 AM  

நல்ல செயல்களுக்கு உங்கள் துணை எப்போதும் இருக்கும் என எனக்குத் தெரியும் சிபியாரே! நன்றி!

VSK Saturday, November 01, 2008 8:56:00 AM  

வேண்டுதலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அனானியாரே!

நல்லதே நடக்கும்!

Unknown Saturday, November 01, 2008 9:13:00 AM  

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபகேடு கருணாநிதிதான். இன்றுள்ள பல பிரச்சனைகள் தீர்வாகாமல் இருப்பதற்கு கலைஞர் கருணாநிதி தான் காரணம்.

VSK Saturday, November 01, 2008 10:12:00 AM  

பதிலளிக்க வேண்டுமென்னும் ஒரே காரணத்திற்காகவே இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்தேன் திரு. வணங்காமுடி.

கலைஞர் பற்றிய உங்கள் கருத்து.. அது உங்களுடையது.

40 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் தெரிந்தெடுத்து வரும் ஒரு தலைவரைப் பற்றி இப்படிச் சொல்ல எவருக்கும் அருகதை கிடையாது எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணக்கூடிய தலைவனாகத்தான் எனக்கு அவர் இன்னமும் தெரிகிறார்.
அவரால் செய்ய முடியும். செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் முருகனை அனுப்பி அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி!

Anonymous,  Thursday, November 06, 2008 10:40:00 AM  

my god! you believe him?
did not know you were so gullible.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP