"கேப்டனுக்கு ஒரு கடிதம்"
"கேப்டனுக்கு ஒரு கடிதம்"
அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு,
வணக்கம்.
தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது!
பலவித அடக்குமுறைகளைச் சந்த்தித்த தமிழ் ஈழ மக்கள் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்க நேர்ந்ததும், அதற்கு நீங்கள் ஒரு தலைமை தாங்க நேரிட்டதும் சரித்திர உண்மைகள்!
20 ஆண்டுகளுக்கும் மேலாய், ஒரு இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக நடத்திவரும் உங்கள் தலைமையின் மீது தமிழீழ மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவன் நான்!
என்ன சொன்னாலும், அது தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு செயல் என்றாலும், தலைவன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அதை அப்படியே சிர மேற்கொண்டு நடத்தி வருவது, நிகழ்ந்த, நிகழ்கின்ற பல செயல்பாடுகளின் மூலம், நிறைவாகவே உணர்ந்திருக்கிறேன்.
அதனால்தான் உங்களுக்கு இந்த மடலை எழுதத் துணிந்தேன்.
இரு தலைமுறைகள் அழிந்து போயின அல்லது புலம் பெயர்ந்து போயின!
இயக்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தாலும், அவர்களின் வாழ்க்கை ஈழத்தோடு ஒன்றமுடியாமல் போனதுதான் பெரிய அவலம்.
புலம் பெயர்ந்த மக்களின் குழந்தைகள் வேறொரு வாழ்க்கை முறையில் ஒன்றிப் போய், நீங்கள் நடத்தும் போராட்டத்தின் கருப்பொருளை முழுதுமாக உணர முடியாமல், தார்மீகமாக ஆதரிக்கும் நிலையையே இப்போது காண்கிறேன்.
அவர்களின் அடுத்த தலைமுறை இதை உணரக் கூட முடியுமா என்பதே என் அச்சம்.
விடுதலைப் புலிகளின் சில செயல்பாடுகளை அவர்களில் சிலர் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு விலகிப் போகும் அபாயம் இருப்பதை நான் காண்கிறேன்.
இதை ஒப்புக்கொள்ள நீங்களோ, அல்லது உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ மறுக்கலாம்.
ஆனால், ஒரு மூன்றாவது மனிதனாக, இதன் மேல் நம்பிக்கை வைத்து, இது விரைவிலேயே வெற்றி பெற வேண்டும் என வேண்டும் என் போன்ற பலரின் விருப்பமும், நீங்கள் உங்களது வழிமுறைகளை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
உங்கள் நோக்கம் நியாயமானது.
அது நிறைவேற வேண்டும்.
அதற்கான வழிமுறைகளைக் கொஞ்சம் மாற்ற முயலலாமே!
வன்முறை என்றுமே வென்றதில்லை!
இதை சிங்களவர்க்குப் புரிய வையுங்கள்!
சொல்லிச் செல்வது சுலபம்; அனுபவிப்பவர்க்குத்தான் அது தெரியும்.
இருப்பினும், ஒரு இனம் அழிய நீங்களும் காரணமானீர்கள் என வரலாறு உங்களைப் பேச வேண்டாம் என்பது என் விருப்பமும், ஆசையும்!
என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல எனக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை!
ஆனால், தமிழர் வாழவேண்டும் எனச் சொல்ல உரிமை இருக்கிறது!
தமிழர்களைக் காக்கும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் ஈடுபடும் அதே நேரத்தில், ஈழத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு சிறிய நடவடிக்கைக்கும் உங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்னும் ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் உங்களுக்கு விடுக்கிறேன்.
சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்!
செய்வது உங்கள் கையில்!
தமிழீழம் கிட்ட என் முருகனை வேண்டுகிறேன்!
வணக்கம். நன்றி.
*******************************
[நாளை.... இந்தியப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் ஒரு கடிதம்]
5 பின்னூட்டங்கள்:
சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன?
http://tamilnathy.blogspot.com/2008/10/blog-post_13.html
//சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன?
http://tamilnathy.blogspot.com/2008/10/blog-post_13.html//
படித்தேன் ஐயா!
அங்கு சொல்லியிருப்பதெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே!
அதனால்தான் சம்பந்தப்பட்ட அனைவரையுமே வேண்டுகிறேன்.
ஒரு தீர்மானமான அடிப்படை ஒப்பந்தம் இல்லாமல் இது நிகழாது என்பதை நானும் புரிந்திருக்கிறேன்.
ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரம் இது.
ஒரு தீர்வு வேண்டுமென அனைவருமே முன்வர வேண்டும்.
ஒருவரை...நம் தமிழரை மட்டும் பகடைக்காய் ஆக்க எனக்கு உடன்பாடில்லை.
மேலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கும், தமிழர் தற்போது படும் இன்னலிலிருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டும் என்னும் என் கருத்துக்கும் சற்று வேறுபாடு இருக்கிறது
நன்றி.
நல்லதே நடக்கட்டும்
நன்மையே கிடைக்கட்டும்.
கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போர்இடுவதால் மட்டும் நன்மை கிடைக்காது?
//கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போர்இடுவதால் மட்டும் நன்மை கிடைக்காது?//
உரிமைக்காக எடுக்கப்பட்ட ஆயுதம் என்பதையும் நினைஇவில் கொள்ளுங்கள் நண்பரே!
எல்லாரும் காந்தி ஆவதில்லையே!
நல்லது நிகழவும், நல்ல புத்தி வரவும் வேண்டுவோம்!
Post a Comment