"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"
"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!"
தை அமாவாசை தினம்!
திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது!
ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்!
என்னவெனப் பார்க்கிறேன்!
நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
தொட்டில் எனச் சொல்லலாமா இதை?
மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்!
ஏன்? எதற்காக அப்படிச் சொல்கிறாய்? என நீங்கள் பதறுவது கேட்கிறது!
சற்றே கவனமாகப் பாருங்கள்!
அந்தத் தொட்டிலுக்குள் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்!
அவர் முகம் மகிழ்ச்சியாக சிரித்தபடி இருக்கிறது!!
என்னவாய் இருக்கும்?
அதென்ன கீழே?
'திகு திகு'வென எரிதழல் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறதே!
இதென்ன? பக்கத்தில் இரு காவலாளிகள் ஒவ்வொரு கயிறாக அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்?
தொட்டிலில் அமர்ந்திருப்பவரும் கண்களை மூடியபடியே ஏதோ பாடலாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.....இந்த நிலையில் எப்படி இவரால் அமைதியாகப் பாடல் பாட முடிகிறது?
கொஞ்சம் இருங்கள்!
இவர் என்ன பாடுகிறார் எனக் கேட்போம்?
இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அபிராமியைப் போற்றிப் பாடும் பாடல் எனப் புரிகிறது!
அது மட்டுமல்ல! ஒவ்வொரு பாடலின் முடிவில் வரும் சொல்லை வைத்தே அடுத்த பாடல் தொடங்குகிறது!
ஏன் சுற்றி இருப்பவர் முகத்திலெல்லாம் இப்படி ஓர் பரபரப்பும், எதிர்பார்ப்பும்?
ஒவ்வொரு பாடல் முடிந்த பின்னரும் அனைவரும் தலையை உயர்த்தி வானத்தை வேறு பார்க்கிறார்கள்!
என்னய்யா நடக்குது இங்கே!?
சரி! பக்கத்தில் இருப்பவர் யாரையாவது கேட்போம்!
'ஐயா! ஐயா!'
'அட சும்மா இருமைய்யா! அங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! இந்த நேரத்தில் உமக்கென்ன 'ஐயா' வேண்டிக் கிடக்கிறது?' பக்கத்தில் இருப்பவர் சிடுசிடுக்கிறார்.
'கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! நான் ஊருக்குப் புதுசு! இங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை. அதுதான் என்னவெனத் தெரிந்து கொள்ளலாமென....!' நான் மெதுவாக இழுக்கிறேன்.
'அதுதான் சொன்னேனே! இங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என! பொதுவாக இழுத்துக் கொண்டிருக்கும் உயிரைத்தான் அப்படிச் சொல்வார்கள்! இன்றைக்குத்தானைய்யா மெய்யாகவே 'ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்' ஒரு உயிரைப் பார்க்கிறேன்'!!
'சற்று விளக்கமாகச் சொன்னால் நலமாயிருக்கும்' என்று நான் கேட்க, என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்த நண்பர் வேகப்படுகிறார்.
'என்னைய்யா இது அக்கிரமம்! அந்த பட்டர்தான் ஒரு விவரம் கெட்டவர், பைத்தியம் என்றால் இந்த மன்னருக்கு புத்தி எங்கே போயிற்று?'
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்க்கிறேன்.
'ஓ! உமக்குத்தான் ஒரு விஷயமும் தெரியாதே! சொல்கிறேன் கேளும்! அதோ தொங்கிக் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் சுப்பிரமணிய பட்டர். அம்பாளுக்கு பூஜை எல்லாம் செய்து வருபவர். சதா சர்வ காலமும் அவளே கதி என அவளைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்! இப்ப அதான் அவரே தொங்குகிறார்!' எனச் சொல்லிச் சிரித்தார்.
'புரியவில்லையே! அவளைச் சரணடைந்ததற்கு இவர் ஏன் இப்படித் தொங்க வேண்டும்?' என்றேன் நான்.
'அதில்தான் இவருக்குப் பிடித்தது சனி! இவர் பாட்டுக்கு அவள் உண்டு தான் உண்டு என இருந்திருக்கலாம். எவருக்கும் பிரச்சினை வந்திருக்காது. இவர்தான் எங்களுக்கெல்லாம் நேரம், காலம் திதி எல்லாம் பார்த்துத் தருகின்ற பண்டிதரும் கூட! அம்பாளைப் பற்றியே நினைத்திருந்து, வருபவர், போகிறவர்க்கெல்லாம் என்ன வாயில் வருகிறதோ, அதைச் சொல்லி வந்திருக்கிறார். சிலருக்கு அதில் பொல்லாதது நடக்கப் போய் மன்னரிடம் வத்தி வைத்து விட்டார்கள். அவராவது இதைப் பெருசு பண்ணாமல் இருந்திருக்கலாம். 'ஆஹா! நம்ம ராஜாங்கத்தில் இப்படி ஒரு நிகழ்வா?' எனக் கிளம்பி வந்து விட்டார்!'
'யார் நம்ம சரபோஜி மன்னரா? அவரா இப்படிச் செய்தார்?' என அப்பாவியாகக் கேட்டேன்.
அதற்குள் இன்னொரு கயிறு அறுக்கப்பட்டு தொட்டில் ஏடாகூடமாக ஆட, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் 'ஆ' என அலறுகிறார்கள்! நம் நண்பரும் கூட அலறிவிட்டுத் தொடர்கிறார்!
'ம்ம்.. என்ன கேட்டீர்? ஆமாம்! சாட்சாத் அவரே தானைய்யா! என்னமோ வேறு வேலையே ராஜாங்கத்தில் இல்லாதது போல மந்திரி பிரதானிகளுடன் இங்கு வந்துவிட்டார் இன்றைக்கு. அட! இந்த பட்டருக்குத்தான் எங்கு போச்சு புத்தி? ராஜா வரப்போகிறார் எனத் தெரியும்தானே! இன்றைக்கு ஒருநாளாவது வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லவா? இன்றைக்கு எனப் பார்த்து தை அமாவாசை! அம்பாளைப் பார்த்து அவளை வணங்கியே ஆகவேண்டுமென வந்து, கோவிலில் இருந்திருக்கிறார். அவரைப் பற்றித்தான் தெரியுமே! ஓ! உமக்குத்தான் ஒன்றுமே தெரியாதே! அபிராமி முன்னால் அமர்ந்துகொண்டு தோத்திரங்களாய்ப் பொழிந்து கொண்டு இருந்திருக்கிறார். மன்னர் வருகிறார். எல்லா ஜனங்களும் அவருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். இவர் என்னடாவென்றால், எதுவுமே அறியாத பரப்பிரும்மமாய் அபிராமியைப் பார்த்து என்னவோ பாடிக் கொண்டிருக்கிறார்."
'அடடா! அப்புறம்? என்ன ஆச்சு?' ஆவலை அடக்க முடியாமல் நான் கேட்க,
' என்ன ஆச்சு? போறாத காலம்தான்! மன்னர் வந்து இவர் பக்கத்தில் நிற்கிறார். இவரோ அவரைக் கவனிக்காமல் அம்பாளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
'நீர்தான் சுப்பிரமணிய பட்டரோ?' மன்னர் கேட்கிறார்.
ஏதோ காதில் விழுந்தும் விழாதது போல் இவர் வைத்த கண்ணை அபிராமியை விட்டு எடுக்காமல், 'ம்ம்' என்பது போலத் தலையை ஆட்டுகிறார்.
'இந்த நேரம் திதி எல்லாம் பார்த்துச் சொல்பவர் நீர்தானாமே?' மன்னர்!
'ஆமாம். இப்ப என்ன அதுக்கு?' என்றார் இவர்!
'ஒன்றுமில்லை! இன்றைக்கு என்ன திதி எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமோ?' மன்னர் விடாமல் கொக்கி போடுகிறார்.
'அதோ அங்கே பார்த்தீரில்லையா? அந்த ஒளிவீசும் கண்களைப் பாரும்! முகத்தில் ஜொலிக்கிற ஒளியைப் பாரும்! இன்னிக்கு முழுப் பௌர்ணமி!'
சுற்றியிருப்பவர் முகத்திலெல்லாம் ஒரே அதிர்ச்சி! சிலர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி! 'அதான் நாங்க சொன்னோமில்லையா' என்பது போல ஒரு எக்காளம்!
மன்னர் முகத்திலோ கோபம் கொப்பளிக்கிறது!
'சரியாகத்தான் சொல்கிறீரா? இன்று பௌர்ணமி என்றால் நிலவு எங்கே? என்ன உளறுகிறீர்?' கோபத்துடன் பட்டரை வினவுகிறார்.
ஆமாம்! இன்று பௌர்ணமிதான்! நான் சரியாகத்தான் சொல்கிறேன்' பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார்.
கூடியிருப்பவர்களில் சிலர் அச்சத்துடன் சுப்பிரமணியரை உலுக்கி அவரை நினைவுலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு விழிக்கிறார் பட்டர்! சுற்று முற்றும் பார்த்தார். எதிரே நாடாளும் மன்னர். கேள்வி கேட்டவரும் அவர்தான் எனத் தெரிந்தது. நிலைமையின் தீவிரமும் புரிந்தது!
'எப்படி இன்று பௌர்ணமி எனச் சொன்னீர்கள்? இன்று அமாவாசை அல்லவா? இப்படித்தான் எல்லாருக்கும் சொல்லி வருகிறீரா?' சரபோஜி உறுமினார்.
'அப்படியெல்லாம் இல்லை அரசே! அவளைப் பற்றியே நினத்துக் கொண்டிருந்ததில் சற்று பிழையாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!'
'ஓ! அவளை நினைத்துக் கொண்டிருந்தால் எது வேண்டுமானாலும் செய்வீரோ? யாரங்கே? இவரைப் பிடித்துக் கட்டுங்கள்! நெருப்பை மூட்டி ஒரு தொட்டிலில் இவரை வைத்து அதன் கீழே தொங்க விடுங்கள்! ஒவ்வொன்றாக கயிறுகளை அறுத்து, மரணபயம் இவரை முழுதுமாகப் பிடித்தபின்னர் இவர் அந்த நெருப்பில் வீழ்ந்து மாளட்டும்! தன் கடமையை மறந்து, எல்லாவற்றுக்கும் அபிராமி மேல் பழியைப் போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்! இது அரச கட்டளை! உடனே நிறைவேற்றுங்கள்!' சரபோஜி மன்னர் கட்டளையிட்டார்' எனச் சொல்லி நிறுத்தினார் நண்பர்.
'பிறகு? ....பிறகென்ன நடந்தது?' என பதட்டத்துடன் கேட்டேன்.
என்னை ஏளனமாகப் பார்த்தவாறே அவர் கூறினார்! 'அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறீரே! இதுதான் நடக்கிறது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டுமைய்யா! மன்னர் அப்படிச் சொன்னவுடன், பட்டர் முகத்தில் அப்படி ஒரு ஒளி வீசியது! அதை நீர் பார்த்திருக்க வேண்டும்! அம்பாளைப் பார்த்துக் கத்தினார்!
'அடியே! உன்னால்தானே இதெல்லாம்! உன் மேல் கொண்ட பக்தியால் தானே நான் மனம் போனபடி அப்படி சொல்லிவிட்டேன்! அதற்கு எனக்குத் தண்டனையா? அழகுதான் போ! யார் என்ன சொன்னாலும் சரி! இன்று பௌர்ணமிதான்! உன் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் நான் சொன்ன வார்த்தையை உண்மையாக்க வேண்டியது இனி உன் பொறுப்புதான்! இதோ! இவர்கள் ஒவ்வொரு கயிறாய் அறுக்க அறுக்க, நான் உன் மேல் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வருவேன்! என்னைக் காப்பதோ, சாகடிப்பதோ அதை இனி உன்னிடம் விட்டுவிட்டேன் என்னை இப்படி செய்யத் தூண்டிய நீயே இதற்கெல்லாம் பொறுப்பு!' அப்படீன்னு சொல்லிட்டு மனுஷன் பாட்டா பாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கயிறாய் அறுந்து கொண்டிருக்கிறது! ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை! அம்பாளாவது, வந்து இவரைக் காப்பாத்தறதாவது! பாரும்! நீரும் இந்த வேடிக்கையைப் பாரும்' எனச் சொல்லியவாறே சற்று நகர்ந்தார் அந்த நண்பர்.
'போறதுக்கு முன் ஒரு கேள்வி. இதுவரைக்கும் எவ்வளவு பாட்டு பாடியிருக்கார்?'
'அறுந்து தொங்கற கயிறை எண்ணிப் பாரும். தெரியும். இதுவரைக்கும் ஒரு 70 தாண்டி இருக்கும்னு நினைக்கிறேன்' என்றார்.
கூடியிருந்த கூட்டத்தோடு நானும் நிகழ்வை ஒரு பரபரப்புடன் கவனிக்கத் துவங்கினேன்.
73, 74, 75, 76........!!!!!!! பாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன!
கயிறுகளும் அறுந்து கொண்டிருக்கின்றன!
77, 78....!
மேலும் இரு கயிறுகள்!
79.. "விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன"... பட்டர் பாடத் துவங்குகிறார்!
ஆ! இதென்ன ஆச்சரியம்! அபிராமியின் ஒளிவெள்ளம் அங்கே நிறைகிறது!
தன் வலது காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வானில் வீசுகிறாள் அன்னை!
'விர்'ரெனப் பறக்கின்ற அந்த குண்டலம் வானில் ஒரு முழு நிலவாய்ச் சுடர்விட்டு தண்ணொளியை எங்கும் பரப்புகிறதே!
கண்டவர் அனைவர் முகத்திலும் பரவசம்!
அனைவரும் கிடைத்தற்கரிய இக்காட்சியினைக் கண்டு 'ஆஹா! இதென்ன அற்புதம்! அமாவாசையன்று முழுநிலவா!' என ஆனந்தக் கூச்சலிடுகின்றனர்!
நானும் என்னை மறந்து கத்துகிறேன்!
அரசன் முகத்தில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு பதட்டம்!
'பட்டரே! என்னை மன்னியுங்கள்! தங்களையும், அன்னையின் பெருமையையும் அறியாமல் தங்களுக்கு பெருத்த அநீதி இழைத்துவிட்டேன்! அன்னை மீது தாங்கள் கொண்ட பக்தியை உணராமல் நான் செய்த இந்தச் செயலை மன்னியுங்கள்!' மன்னர் கதறுகிறார்!
'அரசே! தாங்கள் எந்தத் தவறும் புரியவில்லை! தங்களது அருளால் அன்றோ அன்னை இந்த எளியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறாள்! நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!' என பட்டர் உருகுகிறார்.
'இப்படி இந்த எளியேனுக்கும் அருள் புரிந்த அன்னையைப் போற்றி இன்னும் சில பாடல்கள் பாடுகிறேன். அனைவரும் அமர்ந்து கேளுங்கள்!' என பட்டர் வேண்ட, அனைவரின் முன்னிலையிலும் 100 பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்கிறார்.
'அன்னையின் அருளை முழுதுமாகப் பெற்ற நீங்கள் இன்று முதல் 'அபிராமி பட்டர்' என அழைக்கப்படுவீர்கள்' என அரசன் ஆணையிட நிலவு பொங்கிப் பெருகிய அந்நாள் இனிதே நிறைவுற்றது!
இப்படியோர் காட்சியினை எனக்கும் காணக் கொடுத்த அன்னையைப் போற்றி வணங்கியபடி நானும் அவள் சந்நிதிக்குச் சென்று வழிபடுகிறேன்.
இந்த தை அமாவாசை நன்நாளில் உங்கள் அனைவருடனும் இதனைப் பகிர்கிறேன்.
இதோ அன்னையையே வரச் செய்த அந்த 79-வது பாடல்!
"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?"
அன்னை அபிராமவல்லி பொற்பாதங்களில் சரணம்!
*********************************************************
இதை விளக்கும் ஒரு பாடலையும் "யூ ட்யூப்"பில் பார்த்து, கேட்டு மகிழுங்கள்!
http://www.youtube.com/watch?v=W3fQ1wlw3-E
26 பின்னூட்டங்கள்:
அன்னை அபிராமவல்லி பொற்பாதங்களில் சரணம்!
சரணம், சரணம்!
வரணும்! வரணும்! :))
தொடக்கமும் முடிவும் ஒன்றேயான அபிராமி அந்தாதி கதை கேட்டு
தொடக்கமும் முடிவுமில்லா பரம்பொருளாம் அன்னையின் அருள் வேண்டுவோம்.
அழகான கதையாக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள், மிக்க நன்றி!
அருமையான பதிவு. அன்னையின் அருள் எப்போதும் கிட்ட பிரார்த்திக்கின்றேன்.
அந்தாதிக்கு அருமையான பொருள் சொல்லி அன்னையைப் போற்றி இருக்கிறீர்கள், திரு. ஜீவா!
எப்போதும் பொருளிருக்கும் வண்ணம் தொடர்ந்து அருமையான கருத்துகளை இட்டுவரும் உங்களுக்கு என் நன்றி!
இலவச இணைப்பாக அன்னையின் அருட்பாடலையும் தந்தமைக்கு மிக்க நன்றி, திரு. ஜீவா!
கனிவான தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி திரு. கைலாஷி!
படிக்க படிக்க அந்த சினிமா பாடல் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது,கடைசியில் அதையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.
ஆஹா! அருமையிலும் அருமை!! தாய் அபிராமவல்லியை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி.
சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்... எங்கே, நீங்களே 250 ஆண்டுகள் முன்பு சென்றுவிட்டீர்கள் போலும் :-) நீங்கள் போட்டிருக்கும் பாடல் திரைப்படத்தில் வந்ததா? எந்தப் படம் என்று சொல்லுங்களேன்.
அப்புறம், ஒரு விசயம்...
சரபோஜி மன்னரிடம் பொதுமக்கள் பட்டரைப் பற்றிப் புகார் கொடுத்துவந்தனராம். அவர் எப்போது பார்த்தாலும் அம்பாளையே நினைத்துக்கொண்டிருக்கிறார், வருகிற போகிற பெண்களையெல்லாம் அபிராமியாகவே கண்டு அவர்கள் மேல் பூத்தூவுவது, என்றெல்லாம் அவர் தொல்லை தாங்கமுடியவில்லை, இதை வந்து என்ன சேதியென்று கேளுங்கள் என்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான் மன்னர் பட்டரை சோதிக்க வந்திருக்கிறார். (இதுதான் நான் படித்த கதை... சரியா?)
//வடுவூர் குமார் said...
படிக்க படிக்க அந்த சினிமா பாடல் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது,கடைசியில் அதையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.
பாட்டுக்கு முன்னேயே அந்த வரிகள் என் நினைவுக்கும் வந்தது! அதனால்தான் அதைப் பதிந்தேன்
நன்றி, குமார்
//Expatguru said...
ஆஹா! அருமையிலும் அருமை!! தாய் அபிராமவல்லியை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி.
அதை நினைத்தே எழுதினேன் நண்பரே! நன்றி.
//(இதுதான் நான் படித்த கதை... சரியா?)//
இது போன்ற கதைகளைச் சொல்ல வரவீல்லை இந்தப் பதிவில் சேதுக்கரசி!
ஒரு பக்தன் தன் அன்னையிடம் கொண்ட அன்பினை எப்படி வெளிப்படுத்த, அன்னை அதற்கு பதில் அளித்தாள் என்பதே இப்பதிவு!
நன்றி!
எஸ்.கே. வெகு நாட்களாக அடியேன் மனத்தில் ஒரு நெருடல். அபிராமி பட்டரின் கதையைச் சொல்லாமல் அபிராமி அந்தாதி பாடல்களுக்குப் பொருள் சொல்லத் தொடங்கிவிட்டோமே என்று. இன்று உங்களால் அந்தக் குறை தீர்ந்தது. இந்த இடுகையின் சுட்டியை அபிராமி அந்தாதிப் பதிவில் இட்டுவிட்டேன். மிக்க நன்றி.
ஊப்ஸ்... சாரி, இப்ப புரிஞ்சுதுங்க.. ஹிஹி :-)
//இந்த இடுகையின் சுட்டியை அபிராமி அந்தாதிப் பதிவில் இட்டுவிட்டேன். மிக்க நன்றி.//
நானல்லவா இதற்கு நன்றி சொல்ல வேண்டும், குமரன்!
தங்கள் பதிவைத் தவறாமல் படித்து வருகிறேன் நான்! மிக்க நன்றி பொருளுரைப்பதற்கு!
இத்ஹுக்கெல்லாம் எதுக்குங்க 'சாரி' சொல்லிகிட்டு!
இருப்பினும் உங்கள் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றி, திருமதி சேதுக்கரசி!
அருமையான பதிவு SK!
விழிக்கே அருள் உண்டு!
வழிக்கே நெஞ்சு உண்டு!
அபிராமி அன்னையின் கதையே அபிராமி பட்டரின் கதை!
அன்பனின் கதையே அன்னையின் கதையும் ஆகியது!
பாலகுமாரன் நாவல் - கண்மணித் தாமரை - முழுக்க முழுக்க இந்தக் கதையே!
உணர்ச்சி பூர்வமான பதிவு - எஸ் வி சுப்பையா அபிராமி பட்டராகி விட்டார். அவரது நடிப்பு இப்பாடலுக்கு அக்காலத்தில் அநேக முறை பார்க்கத் தூண்டியது. அறிமுகப் படுத்தி இருக்கும் விதம் அருமை. அம்பாளின் திரு விளையாடல்களில் இதுவும் ஒன்று,.....
//பாலகுமாரன் நாவல் - கண்மணித் தாமரை - முழுக்க முழுக்க இந்தக் கதையே!//
அடுத்த முறை வரும்போது அதைச் சுட்டு படிக்கிறேன் ரவி!:))
கருத்துக்கு நன்றி!!
//அம்பாளின் திரு விளையாடல்களில் இதுவும் ஒன்று,.....//
ஆம் ஐயா!
மிக்க நன்றி!
எனக்குத் தாங்கள் ஒரு தனிமடல் இட முடியுமா ommuruga41@gmail.com என்னும் ஐ.டி.க்கு? நன்றி.
arbuthamaga solli irukkireerkal.
kalyanje.blogspot.com
அன்புள்ள ஐயா, உங்கள் பதிவுகளை நம்பிக்கையில் படித்திருக்கிறேன். இன்றைக்குத்தான் அபிராமி அந்தாதி வழியே இங்கு வந்தேன். உங்கள் சொல் ஆளுமை சொல்லில் அடங்காதது. நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தையும் (மிக்கியமாய் தை வெள்ளிப் பாடல்கள்) மிகவும் ரசித்திருக்கிறேன். நன்றி!
Hi,
I would suggest you people to read Balakumarans " Kanmanithamarai" Novel. I dnt know whether its credible source or not. But it tells a brief story abt Abirami pattar!
அழகிய தமிழில் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கும் உங்களை அன்னை அபிராமி ஆசீர்வதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Post a Comment