அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"
காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
*************************************************************
இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.
இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.
"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"
மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு
என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்
"சூரனைக் கடிந்த கதிர்வேலா"
நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!
"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"
பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்
மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.
தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!
"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!
"காமியத்து அழுந்தி இளையாதே"
அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே
கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?
பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென
நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்
மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?
மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?
பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?
இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.
பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்
ஆழ்ந்திங்கு இளைக்காமல்,
"காலர் கைப்படிந்து மடியாதே"
தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை
என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,
"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"
ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்
"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்
உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்
ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்
பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து
மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று
முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க
மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************
அருஞ்சொற்பொருள்:
காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்
*******************************************************
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!
15 பின்னூட்டங்கள்:
இன்று மாத சஷ்டி!
முருகனருள் அனைவர்க்கும் முன்னிற்கட்டும்!
//"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!//
எஸ்கே ஐயா,
'வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன ....' என்று தொடங்கி 'ஏரகத்து செட்டியாரே' என்று முடியும் காளமேகப் புலவரின் சிலேடைப்பாடலிலும் 'ஏரகம்' வருகிறது. ஏரகம் என்றால் சாமிமலை என்று தங்கள் விளக்கத்தின் வழி புரிந்து கொண்டேன்.
மேலும் பதிவின் பொருளும், விளக்கச் சுவையும் நன்று. பாராட்டுக்கள் !!!
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஓம் என்ற எழுத்திலேயே லயித்து அதில் ஐயன் முருகனை தியானித்து காமியமான ஆசாபாசங்களை ஒழித்து வீடு பெறலாம் என்று இந்த பாடலின் கருத்து அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த ஏரகத்தில் முருகன் நடத்தியது "சுகலீலை"தானே? என்ன மாதிரி நாடகம் நடத்தினான் அந்த ஞானகுரு! வியப்பாய் இருக்கிறது. இந்த கோயிலோ மலையில் கிடையாது. ஆதலால், ஏம வெற்பு என்பது இங்கு மலை போன்று கம்பீரமான தங்க மயிலோ! என்றும் தோன்றுகிறது.
இப்பாடலை தியானிக்க செய்த உங்கள் பதிவுக்கு நன்றி.
இதனைத் தொடர்ந்து படித்து இன்புறும் தங்களுக்கு என் முருகனருள் முன்னிற்கட்டும், கோவியாரே!
நன்றி.
மிகவும் சரியாகப் பொருள் கொண்டிருக்கிறீர்கள் அனானியாரே!
முருகன் நடத்தும் எல்லாமே சுகலீலைகள் தானே!
ஏமவெற்பு என முருகனின் தங்க மயிலைத்தான் மேருமலைக்குப் பொருந்தி அருணையார் அழகு பார்த்திருக்கிறார்.
மிக்க நன்றி, வருகைக்கும், கருத்துக்கும்.
மிகச் சிறப்பாக இருக்கிறது எஸ்.கே. இந்தப் பாடலைப் பாடி அனுபவிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
காமியத்து அழுந்தி இளையாதே என்று தொடங்கி ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழுமாறு அமைந்திருக்கிறது இந்தப் பாடல். அருமை. மிக அருமை.
தூமம் மெய்க்கணிந்த என்பது இது வரை படிக்காத ஆனால் சுகமான வருணனை.
நல்லதொரு திருப்புகழை நல்லதொரு விளக்கத்தொடு நல்லதொரு நாளில் தந்திட்ட வி.எஸ்.கேக்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கட்டும்.
இந்தப் பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அந்த கேசட் என்னிடம் இல்லை. அவர் குரலில் பாடக் கேட்பது பேரின்பம்.
ஒரு சிறிய திருத்தம். தென்னவன் என்று எமனைக் குறிப்பிடாதீர்கள். தென்டிசை அதிபதி என்று குறிப்பிடல் உண்டுதான். ஆயிலும் மன்னவன் தென்னவன், தென்னவன் தீதிலன் என்று இலக்கியங்களில் படித்த எனக்கு தென்னவன் என்ற சொல் பாண்டியரைச் சொல்வது. ஆகையால் மாற்றிவிடுங்கள். அல்லது இனிமேல் பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏமவெற்புயர்ந்த மயில்வீரா என்ற இடம்தான் எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஏமம் என்றால் வடமொழியில் பொன்னா? ஹேமநாதன் என்றால் பொற்றலைவனா? அப்படியானால் ஏமவெற்புயர்ந்த என்பதற்குப் பொன்மலைபோல் உயர்ந்து ஒளிவீசும் மயில்வீரா என்று பொருள் கொள்ளலாமா?
தென்னவன் எனச் சொல்லும் பா ண்டியர்க்கும் முன்னமே இப்பெயர் வழங்கல் இருந்தது என்றாலும், நீங்கள் சொல்லுவதை உணர்ந்து இனி தவிர்க்க முயலுகிறேன், ஜி.ரா.
நன்றி.
ஹேமம் என்றால் பொன் என வடமொழியில் வழங்கும்.
நான் கண்ட உரைகளிலும் இப்பாட்டில் இதர்கு இப்படித்தன் பொருளுரைத்திருந்தபடியால், அப்படியே எழுதினேன்.
ஆனால், 'ஏமம்' என்பதர்கு தமிழிலிலேயெ பொருள் உண்டு.
738, 766 குறட்பாக்களில் வள்லுவரும் இதனைப் யன்படுத்தி இருக்கிறார், "சிறந்த" "காவல்" என்னும் பொருள்களில்.
மயிலுக்கு முன்பாக இந்த "ஏமவெற்பு" வருதலினாலும், முருகன் எப்போதுமே வீரன்தான் என்பதாலும், மயிலை முன்னிறுத்திப் பொருள் சொன்னேன்.
நீங்கள் சொன்ன பொருளும் கொளத்தக்கதே.
ஏம வெற்பு= பொன்மலை
ஏம வெற்பு= சிறந்த மலை
ஏம வெற்பு= காவலாய் நிற்கும் மலை
ஏம வெற்பு= மேருமலை
ஏம வெற்பு உயர்ந்த மயில்= பொன்மலைபோல் சிறந்து, காவலாக வலம் வரும் மயில்
ஏமவெற்பு மயில்வீரா=பொன்மலைபோல் உயர்ந்து ஒளிவீசும் மயில்வீரா [ஜி.ரா. சொன்னது!]
எல்லாமே பொருந்தும்!
//ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"
பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்..//
அழகிய வரிகள்..ஹேமலதா எனில் பொற்கொடி என்பார்கள்.அப்படியே ஹேம தமிழில் ஏம ஆனது போலிருக்கிறது.விளக்கம் இல்லாவிடில் எனக்கு முழுதும் புரிந்திருக்காது நன்றி விஎஸ்கே.
SK ஐயா...
சற்றே தாமதமான வருகை என்றாலும்
தாமசமான வருகை அல்ல! மன்னிக்கவும்!
//ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே //
மிகவும் அழகிய இவ்வரிகளுக்கு,
அழகுடன் இயைந்து பொருள் சொல்லி இருக்கீங்க...இனிதாக இருந்தது!
ஒருவன் திரு உள்ளத்தில் அழகின் ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் "ஓவியமே", என்று தான் பிள்ளைத் தமிழிலும் வரும்!
"கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி" என்று தான் ஆண்டாளும் பாடுகிறாள்!
இப்படி மன ஓவியத்தில் எழுதித் தான்
அனுபூதியை அனுபவிப்பார்கள் நல்லடியவர்கள்! அதை நினைவுக்குக் கொண்டு வந்தன இந்த வரிகள்!
ஏமம்=பொன்/காப்பு இரண்டுமே சரி தான்!
ஏமப் புணையைச் சுடும் என்பதல்லவா குறள்?
ஏரகம்=ஏர்+அகம்
கொஞ்சம் பொருள் விளக்கம் தாருங்கள் SK.
வந்து அழகிய ஒரு விளக்கம் அளித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி, ஷைலஜா!!
பெரியவர்கள் சொன்னதைத் திரட்டி என் பாணியில் தருகிறேன், அவ்வளவே!
தாமதம், தாமசம் எனச் சொல் விளையாட்டு ஆடி இன்புறச் செய்திருக்கிறீர்கள், ரவி!
தாமசம் இல்லாமல், சுறுசுறுப்பாகவே ஒரு கருத்தையும் தெளித்திருக்கிறீர்கள்!
இப்போது ஏரகத்திற்கு வருவோம்.
எனக்குத் தெரிந்த அளவில் சொல்கிறேன்.
ஏர் என்பதற்கு 4 பொருள் வருகிறது.
கலப்பை, அழகு, உழவு மாடு, வளர்ச்சி என 4.
முருகு என்றால் அழகு.
அழகன் தங்குமிடம் ஏரகம்.
அந்த அழகன் நம் மனத்தை உழுது பண்படுத்துகிறான்... கலப்பைகொண்டு
அவ்விடம் ஏரகம்.
அகம், புறம் என இரு நிலைப்பாடு கொண்ட நம் மனத்தை ஓம் எனும் ஏரு பூட்டி உழவுசெய்யும் அழகன் உறையுமிடம்.... ஏரகம்.
இதனால் விளைவது நம் அகத்துள்ளே வளர்ச்சி.... அவனை அடைய.
அப்படிப்பட்ட அழகன், கலப்பை கொண்டு, நம்மை உழவுமாடாக்கி வளரச் செய்யும் இடம்.... திருவேரகம்.... திரு ஏர் அகம்.
//அழகன் தங்குமிடம் ஏரகம்.
அந்த அழகன் நம் மனத்தை உழுது பண்படுத்துகிறான்... கலப்பைகொண்டு
அவ்விடம் ஏரகம்//
ஏரகத்துக்கு ஏற்ற விளக்கம். ஏற்றமான விளக்கம்! நன்றி SK!
விளக்கத்தை அப்போதே படித்து விட்டாலும் உடனே பின்னூட்டவில்லை, மன்னிக்கவும்.
இந்தத் திருப்புகழை மீண்டும் மீண்டும் இங்கு வந்து படிக்கின்றேன்!
"ஓமெழுத்தி லன்பு மிகவூறி" என்ற வரிகளுக்காகவே!
அடுத்து நேயர் விருப்பமாய்,
"பாதி மதி நதி" என்னும் இன்னொரு ஏரகத் புகழைத் தர முடியுமா?
நீங்க எப்ப வந்தாலும் மகிழ்ச்சிதானே, ரவி!
அடுத்தவரை அகமகிழச் செய்யும் கலை இயல்பாகவே வந்திருக்கிறது உங்களிடம்!
"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன், கண்ணபிரான்!"
:))
விரைவில் இடுகிறேன்.
எனக்கும் பிடித்த புகழ் இது!
Post a Comment