ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"
[ஜி.ரா. கேட்டது!]
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான
......பாடல்.......
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.
.....பொருள்......
[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]
"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"
அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!
"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"
மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!
"கருதரு திண்புய சரவண"
எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!
"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"
அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!
"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."
பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!
"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே
பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"
கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!
கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!
காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!
மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!
மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்
இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி
"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"
சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்
இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!
அருஞ்சொற்பொருள்:
பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
10 பின்னூட்டங்கள்:
ஜிரா கேட்டார் என்றீர்கள் ...பதிவும் ஜிரா (இனிப் பாகு) இருக்கு.
:)
இருவருக்கும் வாழ்த்துக்கள் !
நீங்கள் முதலாக வந்து சொன்னது அதை விட இனிப்பு!
:))
//சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்
//
எஸ்கே ஐயா,
முழுப்பதிவும் அருமையான பொருள் விளக்கம். பாராட்டுகள்
மேற்கண்டவை என்னைக் கவர்ந்த வரிகள்.
நீங்கள் ஒருவராவது மீண்டும் வந்து பாராட்டுவதற்கு மிக்க நன்றி, கோவியாரே!
:)
முருகனருள் முன்னிற்கும்!
நன்றி விஎஸ்கே. கேட்டதை மறந்து விட்டேன். ஆனால் நீங்கள் மறக்காமல் கொடுத்திருக்கின்றீர்கள். மீண்டுமொரு நன்றி.
இந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் ஒன்று. அதிலும் வரையினிலெங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதமது பாடி என்ற வரிகள் மிகப் பிடித்தம். அருமையான விளக்கம். கவிதை நடையில்.
// அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே! //
இதை மிகவும் ரசித்தேன். மிகமிக.
முருகனருள் முன்னிற்கட்டும்.
நான் சிறு வயதிலிருந்தே பாடி வரும் திருப்புகழ் பாடல் இது எஸ்.கே. பாடலின் முழுப் பொருளையும் இன்று அறிந்தேன்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அம்மன் திருச்சுற்றில் அமர்ந்திருக்கும் கூடல் குமரனுக்கானப் பாடல் இது என்று சொல்வார்கள். கிருத்திகை தோறும் கூடல் குமரனுக்கு நடக்கும் அபிஷேக அலங்கார திருப்புகழ் வழிபாட்டிற்கு அம்மா சிறுவயதில் அழைத்துச் செல்வார்கள். அப்போது கற்றுக் கொண்ட பாடல் இது.
பாடல் கேட்டவர் இன்னும் வரவில்லையே என எண்ணினேன்.
உடனே வந்து என் கலி தீர்த்தீர்கள், ஜி.ரா.
இதில் இன்னொரு நயமும் இருக்கிறது.
முதலில் கதிரவன், நிலவு, மலை என மூன்று சொல்லி, கந்தனின் திருவடிகளை அதில் கண்ட அருணையார், கடைசியில் தமிழுக்கும், நயம், சொல் சுவை என மூன்று சொல்லி தமிழையும் உயர்த்தி இருக்கிறார்!
இதனை தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட மதுரையை வைத்துப் பாடியிருப்பது இன்னும் சிறப்பு!
ஜி. ரா. வுக்குச் சொல்லியிருப்பதையும் கவனியுங்கள் குமரன்!
இப்பாடலைப் பாடி, ஓதினால், தமிழ்த்திறம் தந்தருள்வான் கந்தன் எனச் சொல்லுவார்கள்.
சிறுவயதிலிருந்தே இதனைப் பாடி வரும் தங்களிடம் தமிழ் விளையாடுவதன் பொருள் எனக்கும் இன்று புரிந்தது, குமரன்!
எல்லாம் முருகனருள்!
//'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' =
அபர்ணா//
ஆகா
அபர்ணா என்பதற்கு இப்படி ஒரு பொருளா? மிக அருமை SK!
உங்க பதிவுகளில் இருந்தே குழந்தைக்குப் பெயர்கள் எடுத்து விடலாம் போல் உள்ளதே!
திருப்புகழ்ப் பெயரும் ஆயிற்று! தித்திக்கும் பெயரும் ஆயிற்று!!
திருப்புகழே தித்திக்கும் ஒன்றுதானே, ரவி!
எத்தனையோ அரும்பல கருத்துக் கருவூலங்களின் சுரங்கம் இந்த திருப்புகழ்!
அதனை உய்த்துண்ணும் தேனீ நீங்கள்!
Post a Comment