அ.அ. திருப்புகழ் -- 18 "அல்லில்"
[ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18 "அல்லில்"
அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை
கல்லினேர அ வழிதோறுங்
கையு நானுமு லையலாமோ
சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வல்லி மாரிரு புறமாக
வள்ளி யூருறை பெருமாளே.
வழக்கம் போல், பின் பார்த்து, முன் பார்க்கலாம்!
"சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய"
எம்போல யாருண்டு எமை வெல்ல எவருண்டு
தேவரும் எம்முன்னே திகைத்து நிற்பர் எனத்
தம் வீரம் தம் திறனைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்து நின்ற சூரர்படை அயர்வுறவும்,
"ஊர்கெட விடும் வேலா"
அப்படிச் சொல்லிய அந்த அவுணர்கள்
வாழ்ந்து வந்த ஊரே அழியும்படி
தன்னுடைய வீரவேலை அவர்பால்
செலுத்தி அவர்களை அழித்தவரே!
"வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே."
கஜவல்லி எனும் தெய்வானையும்
வனவல்லியெனும் வள்ளியம்மையும்
தன்னிருபக்கமும் தகைவாய்த் திகழ
வள்ளியூரென்னும் தலத்தில் திகழ்பவரே!
"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"
இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்
அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!
"கல்லினேர அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ?"
கல்லும் முள்ளும் நிறைந்த பாதை
அதுவே நமை இழுக்கும் மாயையின் பாதை
அவ்வழி செல்லுதல் எனக்குக் கூடாது
என் ஒழுக்கநிலையும் தவறலாமோ?
[என்னைக் காத்தருள்வது
நின்னருட் கடனே!]
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
11 பின்னூட்டங்கள்:
அருமையான விளக்கம் SK ஐயா.
//வல்லிமார் இருபுறமாக//
கஜவல்லி, வனவல்லி
என்று சொன்னது அருமை.
பலர் அவ்வளவாக அறிந்திராத பெயர்கள்!
//வள்ளி யூருறை பெருமாளே//
வள்ளியூர் எங்குள்ளது SK?
வள்ளிமலையா?
ஒரு விண்ணப்பம்
இனி வரும் திருப்புகழ் பாடல்களில் சற்றே ஊர்க் குறிப்பும் தந்தால், சென்று அவனைச் சேவிக்கப் பயனுள்ளதாய் இருக்கும்.
//சற்றே ஊர்க் குறிப்பும் தந்தால்//
அப்படியே செய்கிறேன், ரவீ.
வள்ளியூர்,திருநெல்வேலி- நாகர்கோயில் பாதையில், நெல்லைக்குத் தெற்கே சுமார் 30 மைல் தூரத்தில் உள்ளது.
//"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"
இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்
அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!//
எஸ்கே ஐயா,
இப்பொழுதெல்லாம் பொலிவு சேர்க்க படமும் சேர்க்கிறீர்கள். நன்றாக இருக்கிறது பொருள் விளக்கம் !
பாராட்டுக்கள் !
கேட்டேன் கேட்டதைக் கொடுத்து விட்டான். முருகன் திருப்புகழோடு வந்து விட்டான். மிக்க நன்றி வி.எஸ்.கே.
இந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தமானது. படிக்கவும், கேட்கவும், நினைக்கவும், நினைத்துப் பாடவும், பாடி மகிழவும், மகிழ்ந்து முகிழவும் சிறப்பான திருப்புகழ்.
திருநெல்வேலியில் இருந்து அருகாமையிலுள்ள அருமையான பேரூர் வள்ளியூர். அங்குறையும் வள்ளிமணாளன் திருக்கோயில் பற்றி எழுந்த திருப்புகழ் இது.
அல்லில் நேரும் மின், சூரர் தொய்ய ஊர் கெட, வல்லிமார் இருபுறமாக என்று அருமையான சொற்றொடர் நிரம்பிய பாடல்.
அது சரி.....கேட்பது இத்தோடு நிற்குமா என்ன? "பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய பவனி வரும்படி அதனாலே
பகர வளங்களும் நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே" என்று தொடங்கும் திருப்புகழையும் உங்கள் விளக்கத்தோடு கேட்க மகிழ்ச்சி.
பாராட்டியதற்கும்,
படத்தினைக் கண்டு மகிழ்ந்து பாராட்டியதற்கும் நன்றி, கோவியாரே!
நீ கேட்டால் நான் மாட்டேன் என்று சொல்வானா மால்மருகன்!
வந்தாரை வாழவைக்கவும்,
வைதாரையும் வாழவைப்பவன் அல்லவோ என் முருகன்!
ஆம்! படத்தில் இருப்பது நான் தினமும் பூஜிக்கும் என் வீட்டு முருகன்!
கந்தர் சஷ்டியன்று எடுத்த ஓவம்!
அடுத்தொரு பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்!
இட முயற்சிக்கிறேன், ஜி.ரா.
எஸ்.கே. ஜேசுதாஸ் பாடிய திருப்புகழ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல முறை கேட்டது. உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு மீண்டும் கேட்கும் போது இன்னும் ஆனந்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அல்லி நேரும் நினது தானம் (தாமரை போன்றது உனது ஸ்தானம் - திருவடிகள்) என்றே இதுவரை நினைத்திருந்தேன். இன்று தான் புரிந்தது அது 'அல்லில் நேரும் மின் அது தானும்' என்று.
// குமரன் (Kumaran) zei...
எஸ்.கே. ஜேசுதாஸ் பாடிய திருப்புகழ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல முறை கேட்டது.
அல்லி நேரும் நினது தானம் (தாமரை போன்றது உனது ஸ்தானம் - திருவடிகள்) என்றே இதுவரை நினைத்திருந்தேன். இன்று தான் புரிந்தது அது 'அல்லில் நேரும் மின் அது தானும்' என்று. //
நானும் யேசுதாஸ் பாடிக் கேட்டிருக்கிறேன் குமரன். அவருடைய தமிழுச்சரிப்பில் சிறிது பிழையிருக்கும். அதிலும் இது போன்ற பழந்தமிழ்ப் பாக்கள் எனும் பொழுது "எந்த ரோம கானு பாவுலு"வாக சில பொழுதுகளில் ஆகி விடுகிறது. திருப்புகழைப் படியுங்கள். திரும்பத் திரும்ப. மனதில் கொஞ்சமேனும் பதிந்தது என்றால் பிறகு கேளுங்கள். வேறுபாடு உங்களுக்குப் புரியும்.
வருகைக்கும், சீரிய கருத்துக்கும் மிக நன்றி, குமரன், ஜி.ரா.!
பல படல்கள் இப்படித்தான் பாடக் கேட்கையில் சிதைந்து போகிறது.
ஜி.ரா.சொன்ன வழி நல்வழியே!
இதைப் படித்ததும், எனக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது.
சுப்புடு ஒருமுறை சொன்னார்.
வர வர நம்ம பாடகர்கள் எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்!
கண்ணனின் குலம் என்ன என்பதை இவர்கள் சொல்லி விடுகிறார்கள்.
"தாயே யசோதா உந்தன் "நாயர்" குலத்துதித்த" எனப் பாடி!
:))
இராகவன். நீங்கள் சொன்னது போன்ற உச்சரிப்புப் பிழை ஜேசுதாஸிடம் உண்டு. ஆனால் பிறரைப் பார்க்கும் போது இவர் பரவாயில்லை எனலாம்.
இந்தப் பாடலின் முதல் வரியைத் தவறாய்ப் புரிந்து கொண்டது நானாக இருக்கலாம். இன்று போய் கேட்டுப் பார்க்கிறேன். அவர் சரியாகப் பாடி நானே அல்லி என்ற சொல்லைக் கேட்டு இப்படிப் புரிந்து கொண்டிருக்கலாம்.
Post a Comment