"உன்னுடன் நானும்!"
"உன்னுடன் நானும்!"
நண்பர் நாமக்கல் [புது]கவிஞர் சிபியார் ஒரு கவிதை இட்டிருந்தார்! அதன் பாதிப்பில் விளைந்த என் சிந்தனை இதோ!
"உன்னுடன் நானும்!"
நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!
நான் பட்ட பாட்டினை
நீயும் படவேண்டாமெனவே
கருவிலேயே உன்னைக்
கலைத்தேனடி!
உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!
நெட்டி முறித்துப் போடவே
நித்தமும் ஆசை இருக்குதடி
தோள்கள் தந்திடவே என்னுள்
பாசம் இருக்குதடி!
காதலை மதிக்காமல்
காமத்தை நினைந்துவிட்டு
மானத்தைத் தொலைத்தேனடி
காமுகன் ஒருவனால்!
என்னைக் கெடுத்த பின்னர்
அடுத்தவளைத் தேடி
அவன் போய்விட்டான்
இங்கே நான் சுமக்கிறேன்!
எப்படி உன்னை வெளிக்கொணர்வேன்
அப்படியென ஓய்ந்து போனேன்
எப்படியோ இது தெரிவதற்குள்
அப்படியே அழிப்பதே வழி!
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம்வரை
தாயிவளால் தாங்காதென
தங்கம் உனைத் "துடைத்து"விட்டேன்!
நீ யாரென்றே தெரிந்தது
உன்னை பதிவிட்ட[scan] பின்னரே!
பெற்றவர்க்குத் தெரிந்ததால்
குற்றமெனத் தொலைத்துவிட்டார்!
உடல்கள் அழியுமாம்!
உயிர்கள் ஓய்வதில்லையாம்
கற்றவர் சொல்லுகின்றார்- எனவே
பெற்றவள் உனைத் துறந்தேன்!
என்றேனும் ஓர்நாள் உனை
எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்
பட்டென்று ஒற் அறை
என் முகத்தில் அறைந்துவிடு!
அதுவரையில் என் மகளே
கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!
நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!
28 பின்னூட்டங்கள்:
பிகத!
தூள்!
//கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!//
இதுல இருக்கர கண்ண எடுத்துடலாமோ?
கருவறையில் நீ வேண்டாம்
கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!
எஸ்.கே சார்.
சிபியும் நீங்களும்னு ஒரு கவிதை எழுத வச்சுடுவீங்க போலிருக்கு.
மஹா சோகம்.
மனதைப் பிசையும் சோகம்.
எஸ்.கே சார்,
காமத்தைத் தொலைக்க வேண்டும் சரி.
ஏன் கருவைக் கொள்ளுகிறார்கள் என்று
புரியவில்லை.
அப்படி ஒரு அறியாமையா.
கொல்லுவதற்காகக் காமம்
கொள்ளுகிறார்கள். இதுவும் ஒரு கொலை வெறிதான்.
தாயின் கருவறையில் கலைக்கப்படுவதால்,கரு என்ற 'கண்ணும்',
தன் நிலை நினைந்து தன் வீட்டுக் 'கருவறையில்'[வழிபடும் இடம்] தாயின் 'கண்களும்'
கலங்கி நிற்பதாக உருவகப்படுத்தினேன், சர்வேஸன்!
நன்றி.
இதை ஒரு தாயின் பார்வையிலிருந்து எழுத முயன்றிருக்கிறேன், வல்லியம்மா!
காமம் கண்ணை மறைக்க, கன்னித்தன்மையைப் பறிகொடுத்து, கருவுற்று, ......இதன் பின்னர் அவள் முடிவுகள் அவள் வசம் இல்லை.
ஒருவனுடன் படுக்கையைப் பகிர்ந்தவள், இப்போது பலரால் பகடைக்காய் ஆக்கப்படுவதே இதிலுள்ள சோகம்!
அருமை.....மிகவும் அருமை....மிகவும் ரசித்தேன். ஆனால் வலியோடு.
பிள்ளை கேட்ட கேள்விக்கு அம்மாவின் ஆதங்க மறுப்பு!
பாவம் அவள்தான் என்ன செய்வாள்?
சமூகத்தின் பழிச்சொல்லுக்குப் பயப்படுகிறாள். பெற்ற பின்னர் தன் பிள்ளையைத் தந்தையறியாப் பிள்ளை என்று சமுதாயம் ஏசுமே என்றும் அஞ்சுகிறாள்!
கருவில் அழிஞ்ச பெண்ணே!
காரணத்தை அறிவாயோ?
கல்மனசு எனக்கு என்று
தப்பிதமாய் நினைச்சாயோ?
நொடியில் மதிமயங்கி
எனை மறந்தேன் கேளுபுள்ள!
பாவிப்பய படுத்துபுட்டு
பாதியில போனானே!
எந்த முகத்தை வெச்சி என்னைப்
பெத்தவளை நான் பார்ப்பேன்?
கெட்டது நானெனினும்
பெத்தவளுக்கும் பேரு கெடுமே!
தகப்பன் பேரறியா
தறுதலைன்னு ஊர்சேர்ந்து - தங்கமே
உன்னைக் கைகாட்ட
தாங்கிடுமா என் மனசு!
பெத்துப் போட்டுவிட்டு
பலபொழுதும் அழுவதற்கு
அழிச்சிப் போட்டுவிட்டு
அரைபொழுது அழுதேனே!
பிள்ளை கேட்ட கேள்விக்கு அம்மாவின் ஆதங்க மறுப்பு!
பாவம் அவள்தான் என்ன செய்வாள்?
சமூகத்தின் பழிச்சொல்லுக்குப் பயப்படுகிறாள். பெற்ற பின்னர் தன் பிள்ளையைத் தந்தையறியாப் பிள்ளை என்று சமுதாயம் ஏசுமே என்றும் அஞ்சுகிறாள்!
கருவில் அழிஞ்ச பெண்ணே!
காரணத்தை அறிவாயோ?
கல்மனசு எனக்கு என்று
தப்பிதமாய் நினைச்சாயோ?
எந்த முகத்தை வெச்சி என்னைப்
பெத்தவளை நான் பார்ப்பேன்?
கெட்டது நானெனினும்
பெத்தவளுக்கும் பேரு கெடுமே!
தகப்பன் பேரறியா
தறுதலைன்னு ஊர்சேர்ந்து - தங்கமே
உன்னைக் கைகாட்ட
தாங்கிடுமா என் மனசு!
பெத்துப் போட்டுவிட்டு
பலபொழுதும் அழுவதற்கு
அழிச்சிப் போட்டுவிட்டு
அரைபொழுது அழுதேனே!
சிபி,
எஸ்.கே.சார்
பெண்ணைப் பெற்றாலே தப்பு என்னும் உலகம்,
பெண்ணே தப்பும் செய்தால் பொறுக்கும.
கூனிக் குறுகியே வாழாமல் சுதந்திரமாகப் போய்விட்டது அந்தக் குழந்தை.
முன்னால் பதிந்த பதிவும் குழந்தைக்காகத் தான். இந்தப் பதிவும் அதற்காகத் தான்.
யாரோ சொன்னார்கள் புண்ணிய ஆத்மாக்கள் பூமியில் தங்காது என்று.
அது ஒரு ஆறுதல். இந்தக் குழந்தைகளும் புண்ணியம் செய்துதான் பிறக்காமலே போகின்றான.
பாவம் அம்மா.
தப்பாகவே பெற்றால்
இன்னும் என்னென்ன சொல்லும்.
சிபியாரே!
உங்கள் கவிதை 99% அருமை!
அந்தக் கடைசி வரிகளை இப்படி மாற்றிப் போடலாமா?
//அழிச்சிப் போட்டுவிட்டு
அரைபொழுது அழுதேனே!//
அழிச்சிப் போட்டுவிட்டு
ஆயுசு முழுக்க அழறேனே!
அப்போதைக்கு அழிச்சாலும்
எப்போதும் மறக்காது!
வல்லியம்மா, இது உங்களுக்கும்தான்!
//பெண்ணைப் பெற்றாலே தப்பு என்னும் உலகம்,
பெண்ணே தப்பும் செய்தால் பொறுக்கும.//
"பொறுக்குமா" என்று இருக்கணுமோ வல்லியம்மா!
கூனிக் குறுகித்தான் வாழவேண்டுமா இந்தப் பிள்ளைகள்?
மானத்தோடு பிறந்து வாழ நாம் வகை செய்ய வேண்டாமா?
ஹீம்... இந்த உணர்வுகளை புரிந்துகொள்ளும் வயதோ, அனுபவமோ எனக்கில்லையாதனால் - மற்ற பின்னூடங்களைப்போல் உணர்ச்சி வசப்பட இயலவில்லை! ;-)
//தன் நிலை நினைந்து தன் வீட்டுக் 'கருவறையில்'[வழிபடும் இடம்] தாயின் 'கண்களும்'
கலங்கி நிற்பதாக உருவகப்படுத்தினேன், சர்வேஸன்!//
தமிழறிவு கொஞ்சம் கம்மிதான் எனக்கு.
தாய் 'கண்'கலங்கி நிற்பது சரி. ஆனால் 'துடைத்து' விட்ட பின் குழந்தை கண் கலங்காதில்லயா?
குழந்தையை கலைத்தாயிற்று.
so, அந்த வரிகளில் 'கண்'ணை எடுத்துவிட்டால், குழந்தை கருவில் 'கலங்கியதை' போல், தாயும் (மனம்)கலங்கி நிற்கின்றாள் என்பது போல் இருக்கும், என்பதே என் கூற்று.
(யப்பா மூச்சு வாங்குது. விசிறி எங்க?)
:)
இதெல்லாம் இப்ப புரியலைன்னாலும், தெரிஞ்சு வெச்சுக்கறது பயனுள்ளதா இருக்குமல்லவா?
நன்றி, திரு. ஜீவா!
அந்தக்
கண்' இரு இடங்களுக்கும் பொதுவான சொல் ஐயா!
கரு என்னும் 'கண்' கலங்கியது!
தாயின் 'கண்' கலங்கியது அது குறித்து!
விசிறி விட்டாச்சு!
:))
//அழிச்சிப் போட்டுவிட்டு
ஆயுசு முழுக்க அழறேனே!
//
கடைசியில இன்னொரு வரியும் சேர்த்துடலாம்!
அழிச்சிப் போட்டுவிட்டு
ஆயுசு முழுசுக்கும்
அழறேனே யாரறிவார்?
//உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!//
எஸ்கே ஐயா,
பொச்சு என்றால் தெலுங்கில் வாய் என்று சொல்வார்கள்... தமிழில் எந்த செய்யுளில் வருகிறதென்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த இடத்தில் வாயால் தூற்றுபவர் என்ற பொருளில் தானே வருகிறது ?
இயல்பு வாழ்க்கையில் இருவருக்குமே இடற்பாடு என அந்த தாய் தன் செயலை ஞாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அந்த கவிதை.
இரசயண உணர்வுகளில் செயல்பாட்டால் ஏற்பட்ட இய(ற்)ல் பியல் மாற்றம் உணர்வுச் சுழலில் சிக்குபவர்கள் பின்விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் !
அழிச்சுப் போட்டுட்டு ஆயுசுக்கும் அழறேன். //
அதுதான் உண்மை.
வயிறு திறக்காதோ என்னும் தாய்களும் அதிகம்.
அவர்களும்
சேர்ந்து அழுவதும் கேட்கிறது.
எஸ்.கே. சார், எழுத்துப் பிழை.
''பொறுக்குமா '' என்றுதான் இருக்க வேண்டும்.
சமூக அவலம் மற்றவரை பழி சொல்லக் காத்து இருக்கிறது.
அவலாகப் போவது பெண்கள்தான்.
//எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி//
பேசும் பொச்சர் என "வாயால்" தூற்றுபவரைக் குறித்து சொல்லி இருக்கிறேன்.
கொஞ்சம் ய்திருக்குற்ற்ளில் தேடுங்கள் கிடைக்கும்.
அப்படியும் சமாதானமாகவில்லையெனில், இலக்கியம் பற்றிய சந்தேகம் வரும் போதெல்லாம், "பொச்சாமல்" நீங்கள் வழக்கமாகக் கேட்குமிடத்திலிருந்து, "பொச்சரிப்பு" இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்!
ஏனெனில், இது மாதிரி விஷயங்களில் நான் என்ன சொன்னாலும் நின்ங்அள் முழுதுமாக நம்பப் போவதில்லை, கேட்க வேண்டியவரைக் கேட்காமல்!
அனுபவத்தில் சொல்கிறேன்!
தாய் "நியாயப்படுத்துவதாக' நான் கருத்து சொல்லவில்லை!
அந்தத் தாயின் மனநிலையில் இருந்தும் கொஞ்சம் பார்க்கலாமோ எனவே வேண்டுகிறேன்.
ஏனெனில், இன்னும் இருப்பவர் அவர்தாமே!
நன்றி!
//அவலாகப் போவது பெண்கள்தான்.//
இதைத்தான் சொல்ல வந்தேன், வல்லியம்மா!
//அழிச்சிப் போட்டுவிட்டு
ஆயுசு முழுசுக்கும்
அழறேனே யாரறிவார்? //
இதுவும் சிறப்பாக இருக்கிறது, கவிஞரே!
இன்னொன்று கோவியாரே!
//உணர்வுச் சுழலில் சிக்குபவர்கள் பின்விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//
ரசாயன மாற்றங்களை நினைக்கும் அளவிற்கு இருப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவதில்லை, பொதுவாக!
பின்விளைவுகளை சிந்திக்கும் அளவிற்கு திறன் படைத்தவர்கள், பொதுவாகத் தங்களைக் காத்துக் கொள்வார்கள், எப்படியாவது!
//சமாதானமாகவில்லையெனில், இலக்கியம் பற்றிய சந்தேகம் வரும் போதெல்லாம், "பொச்சாமல்" நீங்கள் வழக்கமாகக் கேட்குமிடத்திலிருந்து, "பொச்சரிப்பு" இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்!
ஏனெனில், இது மாதிரி விஷயங்களில் நான் என்ன சொன்னாலும் நின்ங்அள் முழுதுமாக நம்பப் போவதில்லை, கேட்க வேண்டியவரைக் கேட்காமல்!//
எஸ்கே ஐயா,
தெளிவாகவே சொல்லி இருக்கிறேனே உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த இடத்தில் வாயால் தூற்றுபவர் என்ற பொருளில் தானே வருகிறது ?
உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று தானே சொல்லி இருக்கிறேன். நான் எவற்றிற்கெல்லாம் வழக்கமானவர்களிடம் கேட்பேன் என்பது எனக்குத் தான் தெரியும் :)
எதேதோ சொன்னதற்கு அந்த சொல் இடம் பெற்ற செய்யுளை காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
:))
மறுமொழியாக இப்படி ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி !
பொச்சாவாமை என ஒரு தனி அதிகாரமே போட்டு இருக்கிறார் வள்ளுவர், கோவியாரே!
ஆனால், 'பொச்சர்' என ஒருசொல்லை அவர் கையாளவில்லை.
எனவேதான், அதற்கான குறியை மட்டும் காட்டி, இன்னும் அதிகம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனப் பணிவுடன் சொல்லி இருக்கிறேன்.
'பொச்சாவாமை', 'பொச்சரிப்பு' எனச் சொற்கள் தமிழில் உண்டு.
அதைப் பேசுபவரைப் 'பொச்சர்' எனக் கொள்ளலாம் எனக் கருதி நான் வடிவமைத்த தமிழ்ச்சொல் இது!
தனித்தமிழில் புதுச்சொற்கள் கண்டுபிடித்து பயன்படுத்துவதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமே!
மேலும், இந்தக் கேள்விக்கும், பதிவின் மூலக் கருத்துக்கும் ஏதும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை.
எனினும், இதில் உங்கள் மனம் எங்கேயாவது புண்பட்டிருந்தால், 'சரி விடுங்க' என மன்னித்து, தாண்டிச் சென்று விடவும்!
:))
//கருவில் அழிஞ்ச பெண்ணே!
காரணத்தை அறிவாயோ?
கல்மனசு எனக்கு என்று
தப்பிதமாய் நினைச்சாயோ?//
எஸ்கே...கவிதை நயம்தான் ஆனாலும் சோகமாய் வருகிறது அதே தாய் ஒரு குழந்தைக்குத் தவிப்பதாய் என் பங்கிற்கு இந்தக்கவிதை.
கனவில் மட்டும் வருகின்றாய்,
கைகொட்டித்தான் சிரிக்கின்றாய்!
நனவில் நானும் நானும்தான்,
நாளைவரும் எனும் நம்பிக்கைதான்,
கனவில் வந்த கண்மணியே,
நனவில் வரவும் தயங்குவதேன்?
நீ ...
தொலைந்து போயிருந்தால்
தேடி இருப்பேன்,
இறந்து போயிருந்தால்
வாடிப்போயிருப்பேன்,
இன்னமும் பிறக்காத
என் மகளே!
உன்னை உறங்கவைக்க
தாலாட்டு பயின்றுவிட்டேன்
உன் முகம் பார்த்துப் பசியாற
பட்டினியாய் கிடக்கின்றேன்
கவலை புரியாமல்
கண்ணாமூச்சிதான் ஏனடி?
கள்ளிப் பாலுக்கஞ்சித் தான்
காத தூரம் போனாயோ?
காலம் மாறிவிட்டதடி.
கண் கலங்க வேண்டாமடி,
கருவில் உருவாய் வருவாயடி
காத்திருக்கிறது
இந்தத் தாய் மடி!!
ஷைலஜா
தான் வேண்டாமெனக் கலைத்த கருவைக் குறித்த சோகத்தை ஒரு தாய் பார்வையில் நான் பாடினால்,
தானே கலைந்த கரு பற்றி நீங்கள் சொல்லுகிறீர்கள், சைலஜா!
இதுவும் சோகம்தான், ஒருவகையில்.
தான் கலைந்த காரணத்தை போகுமுன் சொல்லிப் போக முடிந்தால், அடுத்த குழந்தைக்காவது உதவுமே!
அருமையான கவிதை!
மிக்க நன்றி!
//நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம்வரை//
எங்கேயோக் கேட்டக் குரல் :-)
நல்ல இடுகை! பின்னூட்டங்களும்!!
"எங்கேயோ கேட்ட குரல்" என்பதால்தாங்க அந்த வரிகளை மட்டும் பிரிச்சு, பிரிச்சு போட்டு மரியாதை பண்ணியிருக்கேன்,....... கவியரசருக்கு!
யாராவது வந்து சொல்லுவார்கள் எனக் காத்திருந்தேன்.... மேகமென வந்து குளிர்வித்தீர்கள்!
மிக்க நன்றி, முகில்!
Post a Comment