"திருச்செந்தூர் குடமுழுக்கு"
"திருச்செந்தூர் குடமுழுக்கு"
வடமலைராயன் மனம் மிக நொந்தான்
மனம்நிறை முருகனின் உருதேடி அலைந்தான்
கள்வரன்று கொண்டுபோன சேதிகேட்டுத் துடித்தான்
மறுசிலையும் வடித்திடவே ஆணையொன்று செய்தான்
கனவிலங்கு முருகன் வந்தான்
கடலிடையே தேடென்றான்
எலுமிச்சை மிதக்குமென்றான்
எடுத்துவர அருள் கொடுத்தான்
கட்டுமரம் ஏறியங்கு வடமலையான் புறப்பட்டான்
நடுக்கடலில் நாயகனைத் தேடியங்கு அலைந்தான்
கருடனொன்று வட்டமிட அதன்பின்னே சென்றான்
கள்வரிட்ட இடத்தினிலே எலுமிச்சை மிதக்கக் கண்டான்
சிலையின் கனம் அதிகரிக்க
கட்டுமரம் தத்தளிக்க
பரிதவித்த கள்வரவர்
பொற்சிலையைக் கடலிலிட்டார்
ஆழ்கடலுள் குதித்தங்கே ஆண்டவனைக் கண்டெடுத்தான்
வாழ்கின்ற வாழ்க்கையிலே பேரருளும் சிறக்கக் கண்டான்
சூழ்ந்திருந்த கவலையெலாம் நொடிப்பொழுதில் அகன்றுவிட
மகிழ்வுடனே வடமலையான் முருகனுரு மீட்டுவந்தான்
இறையருளிருக்க ஏனிங்குகவலை
கரைசேர்க்கும் கந்தனிவன்
அலைகடலில் குளித்தபின்னர்
அலைவாயில் கோயில் கொண்டான்
திருச்செந்தூர் சந்நிதியில் தினமெல்லாம் திருவிழா
அருட்செந்தில் பதியினிலே ஆனியிலே பெருவிழா
குடமுழுக்கு காணுகிறான் கோலமயில் முருகனிவன்
ஓடிவந்து தரிசிப்போர் உள்ளமெலாம் நிறைத்திருப்பான்
வேலில்லா முருகனிவன்
கமலமலர் கையினிலே
அப்பனுக்கு அனுதினமும்
அருட்பூசை செய்கின்றான்
அலைமோதும் கடலிங்கு அரகரோகரா தினம்பாட
அலையலையாய் அடியவர்கள் அருள்முருகன் முகம்காண
சிலையாக நிற்கின்ற திருவுருவம் அருள்சொரிய
மலைபோலும் துன்பமெலாம் பொடிப்பொடியாய்த் தகர்ந்திடுமே
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
செந்திலாண்டவனுக்கு அரகரோகரா!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*********************************
12 பின்னூட்டங்கள்:
திருச்செந்தூர் சந்நிதியில் தினமெல்லாம் திருவிழா!
அருட்செல்வர் பதிவினிலும் அனுதினமும் ஒருவிழா!
ஆசானின் வருகையினால் ஆண்டுமுழுதும் பெருவிழா!
நன்றி ஐயா!
இன்னும் சில நாட்களில் உங்கள் ஆசையைத் தொடங்குகிறேன்!
உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன்!
////உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன்!////
பழனி அப்பன் ஆசியுடன் என்று சொல்லுங்கள் சார்!
அதுதான் பொருத்தமானது!
ஆயிரம் கட்டுரைகளுக்கு அடியெடுத்துக் கொடுப்பான் அவன்!
ஆகா வடமலையப்பர் ஆறுமுக நயினாரைக் கடலில் இருந்து மீட்டெடுத்த கதையா? சூப்பரு! நல்லா இருக்கு SK!
நடராசனையும் உடன் மீட்டு எடுத்தார் அல்லவா?
அதே! அதே ரவி!
நள்ளார் நடராசனும் கூட வந்தார்தான்!
குடமுழுக்கு தொடர்பா பதிவு போட எண்ணி இதை மட்டும் சொன்னேன்!
நன்றி!
தலைப்பில் வந்த தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்!:)))
மு மு!!
//குடமுழுக்கு தொடர்பா பதிவு போட எண்ணி இதை மட்டும் சொன்னேன்!//
ஹிஹி! குடமுழுக்கு தொடர்பா பதிவு போட எண்ணி நானும் இதை மட்டும் சொன்னேன்!
http://madhavipanthal.blogspot.com/2009/07/blog-post.html
அருட்செல்வரே..
தங்களைச் சந்திக்க முயற்சி செய்தேன். முடியவில்லை..
சென்னையில் இருந்தால் எனது கைப்பேசியில் அழைக்கவும்..
குறும்புக்கென்றும் குறைச்சலில்லை ரவிக்கு! ரசித்தேன்! சிரித்தேன்!
நன்றி திரு. உண்மைத்தமிழன் அவர்களே! அவசரமாக இருவார விடுப்பில் மட்டுமே வந்து உடன் திரும்பியதால் பலரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை நிச்சயமாக உங்களைச் சந்திக்கிறேன். நன்றி.
//கருடனொன்று வட்டமிட அதன்பின்னே சென்றான்//
செந்திலாண்டவனின் குடமுழுக்கின் போதும் கருடன் வட்டமிட்டதை செய்தித்தாளில் படித்தேன்.
குமரன் குடமுழுக்கை காணக் கொடுத்த தாங்கள் அவன் அன்னையின் குடமுழுக்கை தரிசிக்க வரவும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகம் .மொத்தம் ஐந்து பதிவுகள் உள்ளன அனைத்தையும் கண்டு அம்மன் அருள் பெறுங்கள்.
//குமரன் குடமுழுக்கை காணக் கொடுத்த தாங்கள் அவன் அன்னையின் குடமுழுக்கை தரிசிக்க வரவும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கும்பாபிஷேகம் .மொத்தம் ஐந்து பதிவுகள் உள்ளன அனைத்தையும் கண்டு அம்மன் அருள் பெறுங்கள்.//
அவசியம் பார்த்துவிட்டு, அங்கேயே வந்து சொல்கிறேன் ஐயா. மிக்க நன்றி.
Post a Comment