Sunday, August 24, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"


12 பி பேருந்தில் இருந்து மயிலாப்பூர் குளத்தருகில் இறங்கி நாயர் கடையை நோக்கி நடை போடும்போது, அடிநெஞ்சில் ஒரு பயமும், குற்றவுணர்ச்சியும் கூடவே வந்தது!

மன்னாரைப் பார்த்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. என்ன சொல்லுவானோ என்ற எண்ணம் அடிவயிற்றைக் கலக்கியது.

'வாங்க சேட்டா! கண்டு கொறச்சு நாளாயிட்டே! சுகந்தன்னே' என நாயர் வரவேற்றதுகூட மனதில் பதியவில்லை. 'நல்லாத்தான் இருக்கேன் நாயர்! மன்னாரைப் பார்த்தீங்களா?' என ஒரு பதட்டத்துடன் கேட்டேன்.

'ஆ! வரும்! இப்ப வரும்' என்றார் நாயர்.

சொன்னதுபோலவே, சில நிமிடங்களில் மயிலை மன்னார் தன் சகாக்களுடன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்.

'என்ன நாயரே! விருந்தாளிங்கள்லாம் புதுசா வந்திருக்காங்க போல' எனக் கிண்டலுடன் கேட்டுக்கொண்டே சட்டென என்னருகில் வந்து என்னைக் கட்டிக் கொண்டான்.

திட்டப்போகிறான் என நினைத்திருந்த என்னை 'நல்லாருக்கியா கண்ணு! பார்த்து ரொம்ப நாளாச்சில்ல. ரொம்பவே வேலையா' என்ற கனிவான குரல் கொஞ்சம் கண்கலங்க வைத்தது.

'நல்லாவே இருக்கேன் மன்னார்! நீ எப்படி இருக்கே? கொஞ்சம் வேலை மும்முரம். அதான் வந்து பார்க்க முடியலை. மன்னிச்சுக்கோ!' என்று தழுதழுத்தேன்.

'அட இன்னாபா நீ! ஒன்னியத் தெரியாதா எனக்கு!' இதுக்கெல்லாமா கோவிச்சுப்பாங்க. சரி சொல்லு. இன்னிக்கு இன்னா வேணும்?" எனக் கண் சிமிட்டினான்.

'இப்ப நீ பண்ணினியே! அதையே வைச்சு சொல்லேன்!' எனப் பதிலுக்கு அவனை மடக்கினேன்.

ஒரு நிமிடம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தவன் உடனே கடகடவெனச் சிரித்தவன், 'படா கில்லாடிப்பா நீ! சரி அதியே சொல்லிறலாம். எளுதிக்கோ' என்றான்.

'நான் சொன்னது என்னன்னு புரிஞ்சிடுச்சா?' என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'58-ல ஒரு பத்துப் பாட்டு சொல்லிருக்காரு ஐயன். தலைவனா இருக்கறவனோ, இல்ல, ஒர்த்தரை புரிஞ்சுகிட்டவனோ, அடுத்தவங்ககிட்ட எப்படி இருக்கணும்னு சொன்ன இந்த பத்து பாட்டுங்கள புரிஞ்சுகிட்டா, முக்காவாசி வெவகாரங்கள தீர்த்துரலாம். சொல்லி முடிச்சதும் நீயே புரிஞ்சுப்பே' எனச் சொல்லத் தொடங்கினான்.

இனி வருவது குறளும் அதற்கான மயிலை மன்னாரின் விளக்கங்களும்!

"அதிகாரம் 58" -- "கண்ணோட்டம்"

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. [571]

இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி, இந்தக் கண்ணோட்டம்னா இன்னான்னு சொல்றேன் கேட்டுக்கோ! ஒரு ரெண்டு மூணு விசயத்தைச் சொல்லணும்னு ஐயன் முடிவு பண்ணினாரு. அதாவது, இந்தக் கண்ணு பண்ற சில வேலைங்களையெல்லாம் புரிய வைக்கணும்னு நெனைச்சு, அதெல்லாத்தியும் இந்தப் பத்து குறள்ல சொல்லிட்டாரு. இன்னா முளிக்கறே? புரியலியா? இந்தக் கண்ணு இன்னால்லாம் பண்ணுது? இங்கியும் அங்கியுமா ஓடும்; ஆரு வந்திருக்கான்னு ஓரக்கண்ணால நோட்டம் வுடும்; கோவமாப் பாக்கும்; .அன்பாவும் பாக்கும்; கண்ணாலியே பேசக்கூட செய்யும்; ஆரு இன்னாமாரி ஆளுன்னு ஒரு முடிவு கூட பண்ணும். இப்பிடி கண்ணு ஓடறது கண்ணு ஓட்டம்! இன்னொண்ணு கண்ணு நோட்டம்! இதெல்லாம் சேத்துத்தான் இந்த அதிகாரத்துல சொல்றாரு! ஒரு தலைவனுக்கு இதெல்லாம் ரொம்பவே அவசியம்! இத்தையெல்லாம் மனசுல வைச்சுகிட்டு, இந்தக் குறளுங்களையெல்லாம் இப்ப பாக்கலாம் சரியா!
சரி, இப்ப, மொதக் குறளப் பாப்பம்.

காரிகைன்னா அழகுன்னு அர்த்தம். பொதுவா காரிகைன்ன ஒடனியே ஒரு அளகான பொண்னு நெனப்புத்தான் வரும். அவ அளகா இருக்கறதாலத்தேன் காரிகைன்னே பேரு வந்திச்சின்னு புரிஞ்சுக்கோ!

இந்தக் கண்ணோட்டம்ன்ற ஒரு அளகான ஒண்ணு ஒரு உண்மையான தலைவன்ட்ட இருக்கறதாலத்தான், இந்த ஒலகமே இன்னமும் அளிஞ்சுபோகாம இருக்குன்னு ஐயன் சொல்றாரு. எதெதை எப்பப்ப செய்யணும்னு சரியான கண்ணோட்டம் வைச்சுகிட்டு தீர்மானம் பண்ணி இவன் செய்யறதால, அல்லாமே ஒரு ஒயுங்கா நடக்குது. இதுல உண்மையான்னு சொல்லி ஒரு கொக்கி போட்டிருக்காரு ஐயன். தலைவனா இருந்தா மட்டும் பத்தாது! அவன் உண்மையான தலைவனா இருக்கணும். நாலு பேரு ஒர்த்தனுக்குப் பின்னாடி நிக்கறவன்லாம் தலைவன் இல்ல! தனக்குப் பின்னாடி நிக்கறவங்களப் பத்தி மட்டும் இல்லாம, அல்லாரையும் பத்தி அக்கறையாக் கவலைப் படறவந்தான் தலைவன். சரி, வுடு! இதுக்கு மேல நா சொன்னேன்னா அது வெவகாரமாயிப் போயிரும். அடுத்ததுக்குப் போவோம்!

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை. [572]


இந்த ஒலகத்துல நடக்கறதுக்கெல்லாமே இந்தக் கண்ணோட்டந்தான் காரணம். அதை ஒயுங்காச் செய்யறதாலதான் அல்லாமே சரியா வருது. அது மட்டும் இல்லாங்காட்டி அந்த ஆளு உசுரோட இருக்கறதுலியே அர்த்தம் இல்ல. அது மாரி ஆளுங்கள்லாம் இந்த ஒலகத்துக்கே பெரிய பாரமாம்! அட! நா சொல்லலைப்பா ... ஐயன் சொல்றாரு.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். [573]


இப்ப ஒரு பாட்டு நீ பாடு! நெசமாப்பா.. பாடு! ..[பாடத் துவங்குகிறேன்!] ஐயய்யோ.... போறும் போறும்... நிறுத்து! ராகம் இல்லாம இப்படிப் பாடினா அதுக்குப் பேரு பாட்டா? இதைக் கேக்க முடியுதா? இப்பிடி பாட்டோட பொருந்தலைன்னா இசையால இன்னா பிரயோஜனம்?
அதே போல, ஒரு சரியான பார்வை.... அதாம்ப்பா... கண்ணோட்டம் இல்லைன்னா இந்தக் கண்ணு இருந்துகூட ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சொல்றாரு.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். [574]

சரியான அளவுக்கு இன்னின்னாருன்னு கண்ணோட்டம் செய்யமுடியாத கண்ணு ஒருத்தனோட மொகத்துல இருந்தாலும், அதால அந்த மொகத்துக்கு இன்னாப் பயனைச் செய்யும்? ஒண்ணுமில்ல!

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். [575]

இப்ப ஐயன் கொஞ்சம் ரூட்டை மாத்தி, கண் ஓட்டம்ன்றதுலேர்ந்து, கண் நோட்டம்னா இன்னான்னு சொல்ல ஆரம்பிக்கறாரு!
ஒரு ஆளுக்கு கண்ணுங்க இருக்குதுன்னா, அதுல கொஞ்சமாவது தாட்சண்யம்னு சொல்லுவாங்களே.. அதான்... இந்தக் கருணை ... இதைக் காட்டாத கண்ணுங்க ஒரு புண்ணுன்னு தான் சொல்லணும். அப்படித்தான் என்னியப் போல அறிவாளிங்கள்லாம் சொல்லுவோம்! .... இது வள்ளுவர் சொல்றது!!

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். [576]


இந்தக் கண்ணுல எல்லாவிதமான காட்சியையும் காட்ட முடியும்னு சொன்னேன்ல? அதாம்ப்பா நவரசம்னு சொல்லுவாங்களே அதெல்லாந்தான்! அதுல முக்கியமானது அடுத்தவனைப் பாத்து, இரக்கத்தை காட்றது! இது அல்லாராலியும் செய்ய முடியற ஒண்ணுதான். அத்தக் காட்டாம இருந்தியானா, ஒனக்குக் கண்ணு ரெண்டு இருந்தாக்காட்டியும், தோ... அங்க அந்த மண்ணுலேருந்து மொளைச்சு நிக்குதே.... அந்த மரத்துக்கும் ஒனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு காட்டமாவே சொல்றாரு.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். [577]


திரும்பவும் அதேதான்! கண்ணுல இரக்கத்தைக் காட்டாதவங்க கண்ணு இருக்கறவங்கன்னே கருதப்பட மாட்டாங்க. அதே மாரி, உனக்கு உண்மையிலேயே கண்ணு இருக்குன்னா இரக்கம்ன்றது இல்லாம இருக்கவும் முடியாதுன்னு அடிச்சுச் சொல்றாரு.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு,. [578]


செய்ய வேண்டிய காரியம்லாம் கெடாம, கண்ணாலியே அத்தினியும் நடத்திகிட்டுப் போற தெறமையான ஆளுங்களுக்கு இந்த உலகமே சொந்தமாயிருமாம்! "இந்தா..... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் காரியத்த சீக்கிரமே முடிச்சுடறேன்; நீ அப்பறமா வந்து என்னியப் பாரு; யோவ், யாருப்பா இவன்? கொஞ்சம் நகத்து அவனை; சீக்கிரம் பேசி முடிப்பா" இப்பிடி பலவிதமா கண்ணாலியே பேசி தன் வேலையைப் பாத்துக்கறவந்தான் தலைவனா ஆகி, ஊரையே ஆளக்கூடிய தகுதி வரும்னு கோடி காட்டறாரு.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. [579]


"இப்ப இன்னும் கொஞ்சம் மேல போயி, இந்த கண்ணோட்டத்தோட பெருமையைச் சொல்லப்பாக்கறாரு ஐயன். இது கொஞ்சம் கஸ்டமான விசயம்ன்றத மொதல்லியே சொல்லிடறேன். இருந்தாலும் எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே ஒருத்தன் வாள்க்கை பெருமையாப் பேசப்படுது! அதுனால, இதைக் கேட்டுக்கோ! செஞ்சியானா ரொம்ப நல்லது! முடியலேன்னாலும், அதைச் செய்யறவனை ஏமாளின்னு மட்டும் கிண்டல் பண்ணாம இரு! அதுவே பெருசு!" என ஒரு நீண்ட முன்னுரை முழக்கிவிட்டு மேலும் தொடர்ந்தான் மன்னார்!

இப்ப ஒருத்தனைப் பாக்கறே! அவன் செய்யற காரியம் தப்புன்னு தெரியுது. தண்டிச்சு அடக்கணும்னு நினைக்கறே! அப்பிடியாப்பட்ட ஆளுகிட்டயும், இரக்கம் காட்டி அவனோட குத்தத்தையும் பொறுத்துக்கறதே ஒரு தலைவனுக்கு ரொம்பவும் முக்கியமான கொணம். "புரிதலுக்கு நன்றி"ன்னு சாந்தமா சில பேரு சொல்லிட்டுப் போறாங்கள்ல.. அதுமாரின்னு வைச்சுக்கோயேன்!!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். [580]


இதான் அல்ட்டிமேட்டு! அதாவது ரொம்ப ரொம்ப ஒசந்தது!
எல்லாருக்கும் இஸ்டமான கண்ணோட்டத்தை வேணும்னு நினைக்கறவன், தன்னோட பளகினவன் விஷத்தைக் கலந்து கொடுக்கறான்னு தெரிஞ்சாலும், அமைதியா அதை வாங்கிக் குடிச்சிட்டு, அவனோட சேந்து உக்காந்துகிட்டு சிரிச்சுகிட்டு இருப்பானாம்.

இந்த மேட்டரை அப்பிடியே எடுத்துகிட்டேன்னா அதுக்கும் ஒதாரணம் இருக்கு.... பொராணத்துல சிவன் மாரி... ஜீஸஸ் மாரி, கதைங்கள்ல சீஸர் மாரி!

இத்ஹியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, .....சிலபேரு பக்கத்துல இருந்துகிட்டே நஞ்சு மாரி பேசுவாங்க ...இதுக்கு ஒதாரணமே தேவையில்ல! அவனவனுக்குப் புரியும்!... அவங்களையும் கூட அன்பாவே நடத்தினா, அவனும் ஒருநாளைக்கு மாறி, நல்லபுத்தி வந்து, ஒன்னிய விரும்ப ஆரம்பிச்சிடுவான்னும் எடுத்துக்கலாம்!


"சொன்னதெல்லாம் வெளங்கிச்சா சங்கரு! இப்ப திரும்பவும் இந்தப் பத்துக் குறளையும் படிச்சுப்பாரு. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமா இருந்து ஒவ்வொருத்தனையும் படிப்படியா ஒசத்திக்கினே போறது புரியும்."
என முடித்தான் மயிலை மன்னார்.

"நான் இந்த அதிகாரத்தைத்தான் சொன்னேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது??" என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'அட! இது பெரிய கம்பசித்திரமாக்கும்! என்னைப் பாக்கலியேன்னு நான் கோவிச்சுப்பேன்னு நீ நெனைச்சுகிட்டு பயந்துகினே ஒரு ஓரத்துல பம்மிக்கினு இருந்தே! வந்து ஏறங்கினதுமே நோட்டம் வுட்ட்டுட்டேன்! அதான், நான் அதைப் பத்தியே கேக்காம நேரா ஒங்கிட்டவந்து, அன்பாப் பேசினதும், ஒனக்கு ஆச்சரியம் தாங்கலை! அதான் 'இப்ப பண்ணினதைப் பத்தி சொல்லு'ன்னு நீ கொக்கி போட்டதும் புரிஞ்சுகிட்டேன்!
இப்பப்பாரு! நாயர் நமக்கெல்லாம் விஷம் கொடுக்கப்போறாரு! நாம அதியும் சிரிச்சுக்கிட்டே சாப்பிடத்தானே போறோம்! என்ன நா சொல்றது சரிதானே நாயர்? டீ, வடை ரெடியா? ' என நாயரைப் பார்த்துச் சிரித்தான் மன்னார்!

'போப்பா மன்னார்! நினிக்கு எப்பவும் வெளையாட்டுத்தான்' எனச் சொல்லியவாறே, மசால் வடையை எடுத்துக் கொடுத்துவிட்டு, டீ ஆற்றத் தொடங்கினார் நாயர்!

நான் அவர்களிருவரையும் கண்ணோட்டினேன், வடையைச் சுவைத்தபடியே!

**********************

கண்ணோட்டம் (கண்+ஓட்டம் or நோட்டம்), glance; 2. regard, kindness, favour; 3. guess by the eye.

11 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Monday, August 25, 2008 1:11:00 AM  

//////இதியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, .....சிலபேரு பக்கத்துல இருந்துகிட்டே நஞ்சு மாரி பேசுவாங்க ...இதுக்கு ஒதாரணமே தேவையில்ல! அவனவனுக்குப் புரியும்!... அவங்களையும் கூட அன்பாவே நடத்தினா, அவனும் ஒருநாளைக்கு மாறி, நல்லபுத்தி வந்து, ஒன்னிய விரும்ப ஆரம்பிச்சிடுவான்னும் எடுத்துக்கலாம்!////

மன்னாரு அண்ணே! உங்களுக்குமா இந்த அனுபவம் இருக்கு?
நீங்க எம்புட்டு நல்லவரு, உங்களுக்கும் இதுமாதிரி நடந்திருக்கு அல்லது நடக்குதுன்னா
பாழப்போன இந்த உலகத்தைப் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியலை சாமி!!!!!!!!

முகவை மைந்தன் Monday, August 25, 2008 1:56:00 AM  

எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.

VSK Monday, August 25, 2008 9:15:00 AM  

எல்லாருக்கும் வரக்கூடிய அனுபவங்கள்தான் ஆசானே! என்ன... நாம் நாமாக இருக்க இது மேலும் உதவுகிறது. நன்றி.

VSK Monday, August 25, 2008 9:16:00 AM  

//எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.//

மிக்க நன்றி திரு. முகவை மைந்தன்!

Unknown Monday, August 25, 2008 10:11:00 AM  

//இந்தா.... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் காரியத்த சீக்கிரமே முடிச்சுடறேன். நீ அப்பறமா வந்து என்னியப் பாரு. யோவ்இ யாருப்பா இவன்? கொஞ்சம் நகத்து அவனை. சீக்கிரம் பேசி முடிப்பா! இப்பிடி பலவிதமா கண்ணாலியே பேசி தன் வேலையைப் பாத்துக்கறவந்தான் தலைவனா ஆகி, ஊரையே ஆளக்கூடிய தகுதி வரும்னு கோடி காட்டறாரு//

நமக்கிருக்கிற கவலையே பெரியதாக இருக்கிறது. இவரைப் பார். இவ்வளவு வயதான பின்னும் மற்றவர்கள் எல்லாம் தத்தமது கவலைகளை அவர்களிடம் சொல்கிறார்கள். அவர்களுக்கு அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை சொல்லித் தருகிறார். அவரிடம் இருப்பதைக் கொண்டு உதவிகள் செய்கிறார். அவரிடம் இல்லையென்றாலும் - அவர் சொன்னால் மற்றவர்கள் தருகிறார்கள் - அவர்களிடம் பெற்றுத் தருகிறார். ஆனாலும் தலைவர் இல்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ அவர் தன்னை ஊழியன் என்றுதான் சொல்கிறார்.
ஐயனுடைய எண்ணப்படி அவர் தலைமைத்தகுதி பெற்றிருக்கிறார் என்கிறீர்கள். சரிதானே.

நீண்ட நாள் கழித்து மன்னாரைப் பார்ப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று சொல்லி வைக்கவும்.

கோவி.கண்ணன் Monday, August 25, 2008 11:37:00 AM  

//VSK said...
//எளிமையான விளக்கங்கள். அதற்கான காட்சி அமைப்பு, உரையாடல்..கலக்கல்.//

மிக்க நன்றி திரு. முகவை மைந்தன்!

6:16 AM
//


வீஎஸ்கே ஐயா,

முகவை மைந்தன் நம்ம சிங்கை நண்பர் பதிவர்தான், அவரும் திருகுறளுக்கு உரை எழுதுபவர்

VSK Monday, August 25, 2008 1:38:00 PM  

//ஐயனுடைய எண்ணப்படி அவர் தலைமைத்தகுதி பெற்றிருக்கிறார் என்கிறீர்கள். சரிதானே.

நீண்ட நாள் கழித்து மன்னாரைப் பார்ப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று சொல்லி வைக்கவும்.//

சரிதான் நண்பர் சுல்தான் அவர்களே! ஆனால், இங்கு அதெல்லாம் ஒரு கண்ணசைவின் மூலமே நிகழ்த்திவிடுகிறார் என்பதில் தான் தலைமைத் தகுதி சிறக்கிறது என ஐயன் சொல்கிறார்.

உங்களை மீண்டும் பார்த்ததிலும் மகிழ்ச்சி என மன்னார் சொல்லச் சொன்னான்!:))

VSK Monday, August 25, 2008 1:40:00 PM  

//உள்ளேன் ஐயா !//

நன்றி கோவியாரே!

//முகவை மைந்தன் நம்ம சிங்கை நண்பர் பதிவர்தான், அவரும் திருகுறளுக்கு உரை எழுதுபவர்//

ஓ! அப்படியா! மிக்க மகிழ்ச்சி!

திவாண்ணா Sunday, August 31, 2008 9:58:00 AM  

//எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே/.../
மன்னாரு கஷ்டம்ன்னு சொல்றாரா இல்லை custom ன்னு சொல்றாரா?
:-))))
நீண்ட நாட்கள் ஆயின பார்த்து!

VSK Monday, September 01, 2008 11:21:00 AM  

கஷ்டம் என்னும் "பொதுவான" தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில 'கஸ்டப்பட்டு" கஸ்டம்னு[custom] சொல்ற உங்களைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு திவா!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP