Sunday, December 23, 2007

குருவாய்! வருவாய்! அருள்வாய்!


குருவாய்! வருவாய்! அருள்வாய்!


ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!

ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!

ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!

மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!

சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!

பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!

தீவினை அங்கே பல்லை இளிக்கும்!

நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!

ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!

எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்

இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!

நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,

செயல்வினை யாவும் அவனது எனவே,

பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,

உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,

உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,

குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,

உருவினைப் பெருத்து சாகரம் மேவிய

அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,

ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த

திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,

அருவினை யாவும் அறுந்தோடிடுமே!

ஸ்வாமி சரணம்!

*************************************************


[தாயகம் செல்கிறேன்! ஒரு மாதம் கழித்து வருகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

Read more...

Thursday, December 20, 2007

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"
['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]


காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்
பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்
வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்
நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்
அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்தது
உயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்தது
சிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே முகிழ்த்தது
முகிழ்த்ததில் வாசங்கள் இதனுளே பரந்தது
பரந்ததை இதழ்களும் தனக்குளே மறைத்தது
மறைத்தது மௌனமாய் தனக்குளே வளர்ந்தது
வளர்ந்தது ஓர்நாள் இதழ்களை விரித்தது
விரித்ததில் வாசமும் எங்கணும் படர்ந்தது
படர்ந்தை உணர்ந்துமே வண்டினம் மொய்த்தது
மொய்த்ததில் தேனையும் பருகியே அகன்றது
அகன்றதும் ஆங்கனே மகரந்தம் நின்றது
நின்றதால் மலரும் தன் மௌனத்தில் அழுதது
அழுததை உரைத்திட ஆருமே அங்கிலை
பூக்களின் மௌனங்கள் பூவுடன் கழிந்தது
மௌனத்தின் விழித்துளி சாறெனச் சேர்ந்தது
பூக்களின் சூல்களும் கனியதாய் கனிந்தது
மகிழ்ச்சியும் துயரமும் புளிப்பதாய் சுரந்தது!

மனிதன் ஒருவன் கனியதைச் சுவைத்தான்!
சுவைத்த மனிதன் சொன்னான், 'சீ சீ! இது புளிக்குது'!!

மனிதம் அறியுமோ மலர்களின் மௌனம்!

Read more...

Tuesday, December 18, 2007

செவ்வாய் !!!


செவ்வாய் !!!


முதலில் தொடங்கி முடிவில் முடியும்
செவ்வாய்க் கதையிங்கு யானும் சொல்வேன்!

அன்னையின் வயிற்றினில் அமைதியாய் உறங்கி
உண்மையை உணர்ந்திடும் ஆசையின் வழியே
இன்பமும் துன்பமும் யாமுணர்ந் திடவே
மன்னும் உலகினில் வந்து வீழ்ந்ததும்
சுவாசம் இழுத்திட வழியெதுவெனவே
திகைப்பினில் பவள வாயினைத் திறந்தே
முதலாம் முதலாய் ஆங்கோர் காற்றை
முதலில் இழுப்பதும் செவ்வாய் வழியே!

மூச்சுக் காற்று உட்புகுந் திடவே
உடலும் உயிருடன் கலந்திட அங்கே
பிரிந்ததை எண்ணி ஒரு புறம் துக்கமும்
வந்ததை எண்ணி மறுபுறம் வருத்தமும்
ஒருங்கே சேர்ந்து உளம் உருகிடவே
ஓங்கிடும் ஒலியினைத் தானே கிளப்பி
உலகோர் உவப்ப ஈன்றவள் மகிழ
முதலில் அழுவதும் செவ்வாய் வழியே!


அழுகையின் இயக்கத்தில் உட்தீ எரிய
தனக்குத் தானே இயக்கம் என்பதை
உளமது உணர்த்த உடலும் வருத்த
முதலில் தோன்றிடும் பசி போக்கிடவே
எங்கே உணவென ஆவலாய்த் தேடி
தாயின் முலையினைப் பற்றியே சிசுவும்
தன் பசி தணித்திட பீறிடும் அமுதை
முதலில் சுவைப்பதும் செவ்வாய் வழியே!

பசியும் பறந்திட பத்தும் பிறந்திட
உடலின் இயக்கம் உணர்வில் கலந்திட
அருகே ஆரென அறியும் ஆவலில்
உடலினை நெளித்து சோம்பல் முறித்து
கண்களை விரித்து கைகளை ஆட்டி
மலர்முகம் காட்டி தாய்முகம் நோக்கி
அவளது அகமும் புறமும் மலரவே
முதலில் சிரிப்பதும் செவ்வாய் வழியே!


வளரும் வயதில் எத்தனை செயினும்
கைகளால் தொட்டு காலினால் உதைத்து
கண்களால் சிரித்து செவிவழி கேட்டு
உண்ண மறுத்து, வாந்தி எடுத்து
இன்னமும் எத்தனை குறும்புகள் செயினும்
அன்னையும் பிறரும் கேட்கத் துடிப்பது
'ம்மா' எனவே ஆசையில் அங்கே
வருமொலி அதுவும் செவ்வாய் வழியே!

அறியும் கல்வியும், புரியும் தமிழும்
சொல்லும் மொழியும், செப்பும் கவியும்
அறிவியல் அறிவும், ஆசைமொழிகளும்,
கூறிடும் காதல் கன்னல் சுவையும்,
விருப்பினைக் காட்ட வெளிவரும் சொல்லும்,
மறுப்பினைக் காட்ட மொழிந்திடும் மொழியும்,
சிரிப்பினைக் காட்ட சிந்திடும் தேனும்,
முதலாய் வருவது செவ்வாய் வழியே!


பிடித்தவர் முகமதை உள்ளில் வாங்கி
அவரை நினைந்தே உள்ளும் உருகி
கண்வழி, மடல்வழி, செவிவழி அதிலே
கனவுத்தூதுகள் கடிதினில் அனுப்பி
கொண்டவர் நெஞ்சில் தானும் புகுந்து
ஆசையில் அவருடன் தனியிடம் சென்று
அன்புடன் அவரிரு கரங்கள் பற்றி
காதலை மொழிவதும் செவ்வாய் வழியே!

இறையின் வடிவினில் மனது லயித்து
முறையாய் தோத்திரம் பாடவே முனைந்து
கரை சேர்த்திட இறை என்றே தெளிந்து
கரையும் சொல்லால் பாடல்கள் படித்து
விரைவாய்த் தினமும் ஆலயம் சென்று
இறையைத் தொழுது அவனை வணங்கி
நிறைவாய்த் தமிழில் பாசுரம் வடித்து
இறையைத் தொழுவதும் செவ்வாய் வழியே!

உழலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
பழகிடும் போதில் இன்புற்றிருப்பதும்
வழியும் உணர்வின் ஒவ்வொரு சொல்லும்
திகழும் பெருமையும் வருவது யாவும்
இகழும் நிலையினை தானே அடைவதும்
புகழும் ஏச்சும் ஒருங்கே வருவதும்
தமிழும் தரணியில் மேலும் உயர்வதும்
அழகுடன் மொழிந்திடும் செவ்வாய் வழியே!

வாடி அலைந்து, அல்லற் பட்டு,
ஓடிக் களைத்து, இனிவியலாதென்று
வாடி வதங்கி வயோதிகம் வந்து
தேடியதெல்லாம் தனதிலவெனவே
நாடிய ஞானம் நண்ணிடப் பெற்று
கூட்டை விட்டு பிரிந்திடும் வேளை
வாய்வழி பிறந்த மூச்சும் குன்றி
வாய்வழி அதுவே சென்றிடும் நேரம்
உறவும் சுற்றமும் ஓவெனவலறி
நால்வர் சுமக்க இடுகளம் வந்து
சிதையில் கிடத்தி செந்தீ மூட்டும்
சமயம் ஆங்கே வந்திடும் போது
அனைவரும் விடைகொட இறுதிக்கடனாய்
அரிசியை இடுவதும் செவ்வாய் வழியே!


செவ்வாய் தொடங்கி செவ்வாய் வழியே
ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்
எவ்வாறெனவே இதுவரை சொன்னேன்!
செவ்வாய் அதனின் சீர்மை உணர்ந்து
செவ்வாய் வழியே நல்மொழி சொல்லி
செவ்வனே செயல்கள் யாவையும் ஆற்றி
செவ்வேள் முருகனைப் பணிவாய் நெஞ்சே!

***************************************************


'செவ்வாய்க்கிழமையான இன்று அதே செவ்வாயை வேறு விதமாக எண்ணியதில் விளைந்த வரிகள்!'

Read more...

Thursday, December 13, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"கிட்டத்தட்ட 4 மாசம் ஆயிடுச்சு மன்னார், உன்னைப் பார்த்து! என்னை தப்பா நினைச்சுக்காதே!" என்று தயங்கியபடியே சொன்னேன்.

"அட! இன்னாபா நீ! இதுக்கெல்லாம் போயி தப்பா நினைச்சுக்குவானா இந்த மன்னாரு! அப்புறமேல நம்ம பிரெண்ட்சிப்புக்கு இன்னா மருவாதி இருக்கு! நீ இன்னா வேணுமின்னேவா என்னியப் பாக்காம இருந்தே! ஒரு நாவலு, 2 சிறுகதை அப்பிடீன்னு வேலையாதானே இருந்தே! நாங்கூட படிச்சேன் அந்த நாவலை! என்னை மறந்தாலும், ஐயனை மறக்காம ஒவ்வொரு பதிவுலியும் ஒரு குறளு போட்டே பாரு! அங்கேதான் நீ நம்மளை 'டச்'பண்ணிட்டேப்பா! இதுமாரி, கேட்டதை மறக்காம இருக்கே பாரு! அதப் பத்தி கூட வள்ளுவரு ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு! கேக்கிறியா?" என்று என் நண்பன் மயிலை மன்னார் சொன்னவுடன் உற்சாகமாக பேப்பர் பேனாவை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டேன்!

இனி வருவது குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் - 42 "கேள்வி"

"செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை" [411]


"இந்த ஒலகத்துல எத்தினியோ விதமான வழியில துட்டு சம்பாரிச்சு பணக்காரனா ஆயிறலாம். ஆனாக்க, இந்த 'கேக்கறது'ன்ற செல்வம் இருக்கு பாரு.... அதாம்ப்பா... எந்த ஒரு விஷயத்தையும் காதால கேட்டு மனசுல உள்வாங்கிக்கற பாரு....அதைத்தான் செல்வம்னு ஐயன் சொல்றார்ரு இங்க... ! அது எப்பிடீன்றியா? இப்ப, ஒரு விஷயத்தை நீ கண்ணால பாக்கற...அட, ஒரு பேச்சுக்கு நம்ம தலைவர் நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு பாம்பு ஸீன்னு வைச்சுக்குவோமே... அவரு முகபாவம்லாம் காட்டி பிரமாதமா நடிச்சிருப்பாரு. அதையே சவுண்டு இல்லாம ஓட்டறாங்கன்னு வைச்சுக்க... அந்த ஸீனு உனக்கு ரசிக்குமா? அதையே அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டே கேக்கறேன்னு வையி.... தலைவரு மூஞ்சி அப்பிடியே ஒன்னோட மனக்கண்ணு முன்னாடி ஓடும்! எப்பிடி அது? காதால கேட்டு மனசுல உள்வாங்கிகினதால.... இது போல இன்னும் எத்தினியோ சொல்லலாம்! இந்த கேள்விஞானம்ன்ற செல்வந்தான் அல்லா செல்வத்தைக் காட்டியும் ரொம்பப் பெருமையானது! இது எப்பிடின்னு பின்னாடி சொல்லுவாரு பாரு!"

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." [412]

"ஒனக்குப் பிடிச்சது ஒண்ணை நீ கேக்கறேன்னு வையி.... மவனே... பசி தூக்கம் அல்லாத்தியும் மறந்து 'ஆ'ன்னு கேட்டுகிட்டே இருப்பே! இப்பக்கூட பாரேன்! வயக்கமா இங்க வந்தா இன்னா பண்ணுவே நீ! மொதல்ல நாயர் கடையாண்டை நேர போயி 4 மசால்வடையை உள்ளே தள்ளிட்டு, ஒரு கப்பு டீ அடிச்ச பின்னாடிதான் எங்கிட்டவே பேச ஆரம்பிப்பே! நான் சொன்னவுடனே பேப்பர் பேனாவை எடுத்துகிட்டு கிறுக்க ஆரம்பிச்சிட்டேல்ல! அட! ஒரு தமாசுக்கு சொன்னேம்ப்பா! உடனே முறுக்கிக்காத! இப்பிடித்தான் அநேகமா அல்லாருமே இருப்பாங்க! கேக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னாத்தான் சோத்து நெனப்பே வரும்! "

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து." [413]

"இப்ப, இந்த தேவர்கள்னு ஆகாசத்துல இருக்கறவங்களைப் பத்தி சொல்லுவாங்களே, அவங்க இன்னா பண்றாங்க? எங்கியோ தொலைதூரத்துல இருந்தாலுங்கூட, இங்கேருந்து ஓதற மந்திர சத்தத்த சொல்லி நாம அனுப்பற சக்தியை எடுத்துக்கறாங்கன்னு நம்பறோமில்ல.... அது எப்பிடி நடக்குது?.... இந்தக் கேள்வி அறிவு அவங்களுக்கு இருக்கறதாலத்தான்! அப்பிடியாப்பட்ட இந்தக் கேள்வி அறிவுன்ற ஒண்ணு இருக்கற மனுஷங்க கூட, இந்த பூமியில இருந்தாலும், அந்த தேவர்களுக்கு சமமின்னு ஐயன் சொல்றாரு! கேக்கறதால வர்ற அறிவை வைச்சே சூட்சுமமா அல்லாத்தியும் 'டக்கு' 'டக்கு'ன்னு புரிஞ்சுப்பாங்க!"

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாத் துணை" [414]


"வயசாயிப்போன காலத்துல ஒன்னால சரியா பாக்க முடியாம கண்ணு மங்கலாயிடும், பசி அடைச்சுப் போயிரும். நடக்கமுடியாம தளந்து போயிருவே! 'ஒற்கம்'னா 'தளர்ச்சி'ன்னு அர்த்தம்! அப்போ உன்னால ஒண்ணுமே பண்ன முடியாது! ஆனா, நீ செயலா இருக்கறப்பவே, நாலு நல்ல நூலுங்களைப் படிக்கலைன்னாலும், அடுத்தவங்க சொல்லக் கேட்டாவது இருந்தேன்னு வையி... அது ஒனக்கு கைத்தடி மாரி பயன்படுமாம்! சும்மா கண்ணை மூடிக்கிட்டே, எங்கியும் போவாமலியே, உன்னோட அறிவாலியே, நீ நெனைச்சுப் பாத்துகினே சாந்தோசமா இருக்கலாம்! பொளுதும் போவும் ஒனக்கு! அதுனால இப்பலேர்ந்தே நாலு நல்ல விசயங்களைக் கேக்கறதுன்னு ஒரு வளக்கப் படுத்திக்க! இன்னா... வெளங்குதா?"

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." [415]

"அதுக்காவ, எவன் என்ன சொன்னாலும் கேக்கறதுன்னு அர்த்தம் இல்லை. நல்ல குணம் இருக்கறவன், நல்ல நடத்தையா இருக்கறவன் சொல்லாப் பாத்துக் கேக்கணும்! அதைக் கேட்டு நல்லா உள்வாங்கிக்கிட்டியானா, வளுக்கற பூமியில நடக்கறப்ப ஒருகைக்கோலு எப்பிடி நீ வளுக்கி விளாம இருக்க ஒதவுமோ, அப்பிடி அது ஒன்னிய கெட்ட விசயத்துல இருந்து காப்பாத்தும்!"

"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்." [416]


"இங்க ஒரு முக்கியமான மேட்டர் ஐயன் சொல்றாரு! கவனமாக் கேளு! அப்பிடி நீ கேக்கற விசயம் எம்மாம் பெருசுன்றது முக்கியமில்லை! நல்ல கருத்துக்களை மட்டுமே கேக்கணும்! அது தம்மாத்தூண்டு மேட்டரா இருந்தாலும் சரி! அது மாரி கருத்துங்கல்லாம் ஒனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை தேடித்தரும்! புரியுதா?"

"பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்." [417]

"ஒரு ஆளு ரொம்பக் கூர்மையா எந்த ஒரு விசயம்னாலும் ஆராய்ஞ்சு கவனமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கறவனா இருந்தா, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு கருத்தை அவன் தப்பாவே தெரிஞ்சுகிட்டாக்கூட, புத்தியில்லாத, முட்டாத்தனமான சொல்லை சொல்லவே மாட்டான். இதுல ஏதோ தப்பு இருக்கு! அதுனால, இப்பா இதைச் சொல்லி நாம அரைகுறைன்னு காட்டிக்க வேணாம். இன்னும் நல்லா ஆராய்ஞ்சு பாத்திட்டு உண்மை இன்னான்னு தெரிஞ்சதுக்கு பொறவால சொல்லலாம்னு 'கம்'முனு இருந்திருவான்!"

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி." [418]

"நாம இத்தினி சொல்லியும் ஆரும் சரியாக் கேக்க மாட்டேங்கறாங்களேன்னு ஐயனுக்கு கோவம் கோவமா வருது! அடுத்த மூணு குறள்ல போட்டு விளாசுறாரு இவங்களை! இதுவரைக்கும் நான் சொன்னது மாரி நல்ல கருத்துக்களை... அதையெல்லாம் கேட்டதால ஒன் காதே வலிச்சாலும் சரி... இன்னாடா இவன் தொணதொணக்கறானேன்னு ஒன் காது துளைச்சுப் போனாலும் சரி!..... கேக்கலைன்னா, ஒனக்கு காதுன்னு ஒண்ணு இருந்து, அது நல்லாவே கேட்டாலும் கூட, நீ காது கேக்காத செவிடுக்கு சமம்னு ஐயன் கண்டிசனா சொல்லிடறாரு!"

"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது." [419]


எந்த ஒரு விசயத்தையும் நல்லா கேட்டு, அதை சரியா புரிஞ்சு உள்வாங்கி வைச்சுக்கற இந்த கேள்வியறிவுன்ற ஒண்ணு மட்டும் ஒருத்தனுக்கு கிடைக்கலேன்னா, அவனால அடக்கமா, மருவாதியா வணங்கிப் பேச முடியாது!ஏன்னா அவன் அரைகுறை மாரி உளறிக் கொட்டிக்கினே இருப்பான்!"

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்." [420]


"இந்தக் கேள்வியறிவுன்ற ஒண்ணை உணராம,, அதால கிடைக்கற பலனைத் தெரிஞ்சுக்காம, நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பப் பாத்தாலும் நினைச்சுகிட்டு வயித்தை ரொப்பறவங்க இந்த ஒலகத்துல உசிரோட வாழ்ந்தாக்கூட அதனால இன்னா லாபம்னு ஐயன் ரொம்பவே சூடாறாரு!"

"இன்னா ஐயன் சொன்னது விளங்கிச்சா? அதுனால நல்லா படிச்சு, கேட்டு அறிவை விருத்தி பண்ணிக்கோ! கேக்கறது நல்லதா இருக்கட்டும்! அதை மனசுக்குள்ள நல்லா உள்வாங்கிக்கோ! இப்ப முதல் குறளைப் படி! ஏன் இதான் பெரிய செல்வம்னு சொல்றாருன்னு புரியும்!"

"சரி! சரி! நீ சூடாவாதே! இதுவரைக்கு கேட்டது போதும்! 412- ல சொன்னமாரி, இப்போ வயித்துக்கு கொஞ்சம் அனுப்பலாம்! நாயரு சூடா வடை சுட்டிருக்காரு ஒனக்காக ஸ்பெசலா! வா!" என தோள் மீது கை போட்டு அணைத்தபடியே நடந்தான் மயிலை மன்னார்!
********************************************************

Read more...

Wednesday, December 12, 2007

நிஜமான நிழல்கள்!

நிஜமான நிழல்கள் !

'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.

'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.

'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.

'ஆமா! பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா! இதோ பாரு! யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே! ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும்! எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ!' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.

அவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.
************
கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ?

ஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ! குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.
********************
'என்ன மாப்ளே! இன்னிக்கு எங்கே பார்ட்டி?' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.

'ரம்பாவுக்கு வந்திரு மச்சி! அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது! நாம இதுவரைக்கும் போகாத இடம்! அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு! சரியா? ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.

'அதுக்கென்ன! அப்படியே செஞ்சிடறேன். ரம்பாவா? எங்கேப்பா இருக்கு அது?' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.

மாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது! இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும்! குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.

அடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு! நல்ல கூட்டம்! குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.

குடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.


'என்னடா குணா! இங்க கூட்டிகிட்டு வந்திட்டே!' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே!!

'அட! சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா? இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம்! ஏன்! உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க!' எனக் கண்ணடித்தான் குணா!

'ரொம்ப நல்லாருக்கு போ! எனக்கு வேணாம்ப்பா அதுல்லாம்! நமக்கு வீட்டுல ஆளு இருக்கு! நீங்க நடத்துங்க!' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.

செழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும்!. முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்!

'என்ன பாக்கற! இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க!' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா!

கிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.
சட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்!

'டஃப் லக்!' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.

ஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

நடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில்! ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.

அதை எடுத்து வைக்கக் குனிந்தான்.

உள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா?' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்!



கிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன!
**********************


[சர்வேசனின் 'ந.ஒ.க. போட்டிக்கு]

Read more...

Sunday, December 09, 2007

நிழலும், நிஜமும்! [ந.ஒ.க.]

நிழலும், நிஜமும்!
[ந.ஒ.க.]



"யார் குழந்தை இது? இப்படி ஓடறதே?" அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்களில் அநேகம் பேர் முணுமுணுத்தார்கள்!

"சித்ரா, கொஞ்சம் உன் பையனைப் பிடிச்சு வையேன்!" ரமேஷ் கோபமாகச் சித்ராவைப் பார்த்து சொன்னான்.

"அவன் அப்படித்தாங்க! கொஞ்சம் அதிகமா விளையாடறான். இது புரியாம மத்தவங்கதான் சலிச்சுக்கறாங்கன்னா நீங்களும் கத்தறீங்களே!" சித்ராவும் பதிலுக்கு முறைத்தாள்.

"அதுக்கில்லேம்மா! இவ்வளவு ஹைப்பரா இருக்கானே! மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கட்டுமேன்னுதான் சொன்னேன்" என ரமேஷ் வழிய,
"சரி, சரி, வாடா இங்கே!" என ஓடிக்கொண்டிருந்த செந்திலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினாள் சித்ரா.

செந்தில் அடங்காமல் திமிறிக் கொண்டே அவள் மடியில் இருந்து இறங்க அடம் பிடித்து அலறினான்.

இனி இங்கிருந்தால் சரிப்படாது என முடிவு செய்து, பையனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

கூடவே வெளியில் வந்த ரமேஷ், 'இப்பல்லாம் ரொம்பவே அதிகமா ஆட்டம் போடறான் இல்லே! அடுத்த தடவை டாக்டர்கிட்ட போறப்போ, இதையும் சொல்லி என்னன்னு கேளு' என ஆலோசனை சொன்னான்.
************************
அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் ரமேஷ். அமைதியான சுபாவமும், பெற்றவர்களிடம் மிகுந்த பாசமும் கொண்ட நல்ல பிள்ளை. வாரம் இரண்டு முறையாவது அப்பா அம்மாவிடம் பேசலைன்னா தூக்கம் வராது அவனுக்கு! சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை மாதம் தவறாமல் அனுப்பி வைக்கிறான். அவர்களும் பெங்களூரில் ஒரு நல்ல ஃப்ளாட் வாங்கி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். சித்ரா இதற்கெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை. அவர் சம்பாதிக்கிறார். அப்பா அம்மாவுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு என அனுசரணையாகப் போய்விடுவாள்.

செந்தில் அவர்களது ஒரே பிள்ளை. வயது 4 முடிந்து சென்ற மாதம் தான் தடபுடலாக நண்பர்களை அழைத்து விழா கூட கொண்டாடினார்கள்.
பிறந்தது முதலே ரொம்பவும் சூட்டிகையான பிள்ளை. சதா துறுதுறுவென்றிருப்பான். அதிகம் பேச்சுதான் இன்னமும் வரவில்லை. சதா அம்மாவின் புடவைத்தலைப்பை[அல்லது துப்பட்டாவை!!] பிடித்துக் கொண்டே அலைவான். எதை எடுத்தாலும் டமாரெனப் போட்டு உடைத்து விடுவான்.

அப்படித்தான் அன்றொருநாள் யாரும் பார்க்காத போது, பாத்ரூமுக்குள் சென்று உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு, பைப்பைத் திறந்துவிட்டு, மூடத் தெரியாமல், உள்ளேயே நின்றுகொண்டு இருந்துவிட்டான்.
பையனைக் காணுமே எனத் தேடிய சித்ரா, தண்ணீர் வழிந்து வெளியில் கார்ப்பெட்டெல்லாம் நனைந்ததைப் பார்த்து, அவனைக் கதவைத் திறக்கச் சொன்னால், உள்ளிருந்து பதிலே வராமல், கலவரமாகி,.. ரமேஷுக்கு ஃபோன் போட்டு வரவழைத்து,..... ஒரே களேபரமாகிப் போயிற்று.
******************************
சொன்னபடியே டாக்டரிம் சென்று வந்த பின்னர் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

'அப்படில்லாம் இருக்காதுங்க! டாக்டர்தான் இன்னும் டெஸ்ட்டெல்லாம் எடுத்த பிறகு சொல்றேன்னு சொல்லியிருக்காரே! இப்பவே நாம ஒண்ணும் கற்பனை பண்ணிக்க வேணாம்!' சித்ரா உறுதியுடன் சொன்னாள்.

'அது சரிதான்! இருந்தாலும்....' என இழுத்தான் ரமேஷ்.

'என்ன இருந்தாலும்..? எல்லாம் சரியாயிரும். அப்படியே இருந்தாலும் இந்த ஊருல இல்லாத வசதியா? அமெரிக்காவுலதான் இதுக்கு ரொம்பவும் அருமையான ட்ரீட்மெண்ட்டுல்லாம் கிடைக்குதாம்' எனத் தைரியமாகச் சொன்னாள் சித்ரா.

'எனக்கென்னவோ எதுக்கும்.... ' என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.
**********************
ஒருமாதம் கழிந்தது. இப்போதெல்லாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை இருவரும்.

சித்ரா சதா கணினியில் எதையோ தேடிக் கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருந்தாள்.

அலுவலில் வேலை அதிகம் என ரமேஷ் லேட்டாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மாலை உற்சாகமாக வீடு திரும்பினான் ரமேஷ்.
"சித்ரா! அடுத்த வாரம் நாம் இந்தியா போறோம். 2 மாசம் ட்ரிப்! என்னென்ன பேக் பண்ணனுமோ எல்லாம் ரெடி பண்ணிக்கோ!" என்றான்.

"என்ன திடீர்னு? சொல்லவே இல்லையே! எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்" எனச் சட்டென சித்ராவும் உற்சாகமானாள்.

மீதி நாட்களில் தேவையான துணிமணிகளை இரண்டு சூட்கேஸுகளில் அடைத்தாள்.

கிளம்பும் நாள் வந்தது!

ரமேஷின் நண்பன் சுந்தர் காரெடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சித்ரா செந்திலுடன் பெட்ரூமில் ஏதோ மும்முரமாய் இருந்தாள்.

'சித்ரா, சுந்தர் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பி வா' என ரமேஷ் குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து பதில் ஒன்றும் வராததைக் கண்டு பெட்ரூமுக்குள் செல்ல முனைந்தான். கதவு உட்பக்கமாய் தாளிட்டிருந்தது.

'சித்ரா, ஏய்! என்ன பண்றே! கதவைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு?" எனப் பொறுமையிழந்து கத்தினான் ரமேஷ்.

"நானும் செந்திலும் வரலை! உங்க பெட்டி வெளியில வைச்சிருக்கேன். நீங்க போகலாம் உங்க அப்பா அம்மாகிட்ட!" சித்ரா உள்ளிருந்து பேசினாள்.

"ஏய்! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா! எதுக்கு இப்படி பண்றே?" கோபத்துடன் இரைந்தான் ரமேஷ்.

"எனக்கு ஒண்னும் ஆகலை. ரெண்டு நாளைக்கு முந்தி நீங்க உங்க நண்பர் சுந்தரோட என் காதுல விழாதுன்னு நினைச்சு பேசினதையெல்லாம் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். நம்ம குழந்தைக்கு ஆட்டிஸம்[autism]ன்றதால நீங்க உங்க வேலையை அங்கே மாத்திகிட்டு உங்க அப்பா அம்மா சொல்படி இந்தியாவுலியே தங்கப்போறீங்கன்னு சொன்னதெல்லாம் என் காதுலியும் விழுந்தது. ரெண்டு மாச ட்ரிப்புன்னு சொன்னதெல்லாம் வெறும் பொய்தானே! ஒரு பொண்டாட்டியா என்னை மதிச்சு என்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணக் கூட இல்லை நீங்க. அவகிட்ட சொல்லிட்டியான்னு கேட்ட சுந்தருக்கு என்ன சொன்னீங்க..... அவளுக்கு இது இப்ப தெரிய வேணாம். அவ இந்த ஊரை விட்டு வர மாட்டா. இங்கேதான் இதுக்கு நல்ல ட்ரீட்மெண்ட்
இருக்குன்னு மறுத்திடுவான்னு சொன்னீங்கள்ல.
ஸோஷியல் செக்யூரிட்டி ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என் பையனுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கறதுன்றதை எல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க போகலாம். உங்க ஃப்ளைட்டுக்கு லேட் ஆயிடுச்சு. நான் வரலை. இதுதான் என் தீர்மானமான முடிவு" சித்ரா உள்ளிருந்ந்து ஒரு ஆவேசத்துடன், ஆனால் அமைதியாகப் பேசினாள்.

'இதுக்காக நீ ரொம்பவே வருத்தப் படப் போறே! உன் திமிருக்கு தகுந்த பலன் உனக்குக் கிடைக்கும்! எங்க அப்பா பேச்சை நான் மீற மாட்டேன். பை!' தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ரமேஷ்.

'நான் இருக்கேண்டா உனக்கு! நீதான் எனக்கு முக்கியம்!' வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சிரித்தபடி செந்திலை அணைத்தாள் சித்ரா!

இதெதுவும் புரியாத பரப்பிரம்மாய் ஏதோ ஒரு பொம்மையை உடைத்துக் கொண்டிருந்தான் செந்தில்!
******************************


"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

Read more...

Monday, December 03, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP