"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]
"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]
"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"
உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!
இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!
ஒன்று இப்படி..!
குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"
இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?
இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.
இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!
மாறாக இப்படி....!
"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!
இதன் மூலம், ..
'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,
நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்!
வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.
இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!
மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!
மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!
மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!
நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !
இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?
"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!"
"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"
"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"
"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"
"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"
"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"
"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"
போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!
"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!
குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!
"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!
இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!
"தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!
'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!
இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!
"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!
அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!
"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்","வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!
எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!
"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு?
இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!"
எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!
பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!
எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!
மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!
இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!
எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!
அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!
7 பின்னூட்டங்கள்:
படித்தேன் எஸ்.கே. விரிவான பின்னூட்டங்களுக்குப் பின்னர் வருகிறேன்.
//உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்//
இப்படிச் செய்வதன் மூலமே பெற்றோர்களும் உங்கள் நண்பர்களே. எவ்வித சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்.
இத்தகைய நம்பிக்கை குழந்தையின் மனதில் தோன்றி விட்டால் பெரியவனான பிறகு சேர்க்கை சரியின்றி பாதை தவறிப் போய்விடுவார்களோ என்று அச்சப்படத் தேவை இல்லை.
சிறப்பான, பயனுள்ள தொடர்.
(நேரம் கிடைக்கும்போது, இந்தப் பதிவுகளை தனியே தொகுத்து, இன்னொரு வலைப்பதிவில் மொத்தமாக சேர்த்து வைக்கவும். பலரையும் எளிதாக சென்றடைய உதவலாம். நன்றி.)
சரி இன்னொரு விஷயம், சிறு பெண் குழந்தைகளைக் கூட அக்குழந்தையின் தாய்மார்கள் அப்பெண்ணின் அண்ணனிடமோ, ஏன் தந்தையிடமோ கூட அதிகம் பழக விடாமல் பார்த்துக் கொள்வது ஏன்?
இது அப்பெண்ணின் (குழந்தை) மனதில் ஏதேனும் வித்தியாசத்தை தோற்றுவிக்கும் அல்லவா?
நானும் முதல் ரவுண்டு படிச்சாச்சு. பிறகு வருகிறேன்.
(ஆமா, இப்படிச் சொன்னா, இது பின்னூட்டக் கயமைத்தனமா?)
எஸ்கே ஐயா !
பதிவு படித்ததும் சில விசயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தியாவில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் குளிப்பாட்டிவிடுவார்கள். பெற்றோர்களுடன் சேர்ந்து குளிப்பது 90% கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை சிங்கையில் சீனர்கள் குழந்தைகளுடன் சேர்ந்துதான் குளிப்பார்கள். இதை நீச்சல் குளங்களில் உடைமாற்றும் அரைகளில் பார்த்திருக்கிறேன். நம் இந்திய பெற்றோர்கள் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு அந்த அளவுக்கு மனம் தயாராக இருக்காது. அப்படி குளித்தாலும் தாயும் மகளும் குளிப்பார்கள், அப்பாவும் மகனும் குளிப்பார்கள். இது மகளும் தந்தையும் சேர்ந்து குளிப்பது என்பது கிடையாது. நான் 6 வயதுக்குள் உள்ள குழந்தைகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அதன் பிறகு பெற்றோர்கள் குளிப்பாட்டிவிடும் அவசியம் அதிகம் இல்லை.
இப்படி குழந்தகளுடன் சேர்ந்து குளிப்பதனால், குழந்தைகளுக்கு பிறப்பு உறுப்பைப் பற்றி அருவருப்பாக நினைக்கும் கற்பனை வளராமல் இருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் உறுப்புக்களை மற்றவர்கள் தொட அனுமதிக்க கூடாது / தொடவும் கூடாது என்பதை அவர்கள் மனதில் படியும்படி அழுத்தமாக சொல்லித்தர வேண்டும். இதைப்பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்
SK அய்யா,
மிகவும் உபயோகமாக இருக்கிறது..
சரி, எங்க குழந்தை இப்படி கேட்கிறது.. தனது சக நன்பர்களை பார்த்துவிட்டு .. என்னிடம்
Boys ஏன் நின்றுகொண்டு Bathroom போறாங்க.. நான் ஏன் உட்கார்ந்து போக வேண்டும்?
இதற்கு சரியான பதில் எனக்கு சொல்ல தெரிவில்லை..
நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்..
இந்த சந்தர்பத்தை நான் எவ்வாறு பயன் படுத்தியிருக்கலாம்...
Post a Comment