"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2
இறைவன் என்றும் கைவிட மாட்டான்!
நாகை சிவா
*************************************************************************************
நாகை சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றி!
முருகனருள் முன்னிற்கும்!!
திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவையார் ஒரு வசனம் பேசுவார்;
"முருகா! இதன் மூலம் நீ ஒரு விளையாட்டை நடத்த விரும்பினால், அதற்கு யார் என்ன சொல்ல முடியும்!" என.
அதே போல, அறுபது நிமிடங்களுக்குள்ளேயே, இதனைச் சரி செய்த முருகனுக்கும், உறுதுணையாய்ச் செயல்பட்ட நண்பர் நாகை சிவாவிற்கும், ஆறுதல் சொல்லிய, நம்பிக்கை ஊட்டிய அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்லி, இப்பதிவினை, மறுபதிப்பு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கம்பர் செய்தது போல, நாகை சிவாவின் பெயரை கூடவே இட்டு நன்றி கூறுகிறேன்!
*************************************************************************************
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2
'பக்கரை விசித்ர மணி'
ராகம் :: நாட்டை/மோஹனம்
தாளம் :: ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ---- தனதான
.......பாடல்.......
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழ மிடிப்பல்வகை தனிமூலம்
மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச மர்த்தனெனு மருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"பொருட்கவிதை"
"பக்கரை விசித்ரமணி, பொன் க[ல்]லணை இட்டநடை
பட்சியெனும் உக்ரதுரகமும்"
"அங்கவடியென்னும் அழகான ஆபரணம் தன்னில்
பங்கமில்லா இரத்தினங்களைப் பாங்காகப் பதித்திட்ட
பொன்னாலான சேணத்தை பொலிவோடு அணிந்துகொண்டு
விண்ணையும் சாடுகின்ற வேகநடை கொண்டங்கு
புரவி போல் பறந்திடும் மயிலென்னும் வாகனத்தையும்,
"நீபப் பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்"
கடம்ப மரத்தினிலே பக்குவமாய்ப் பூத்திட்ட
மலர்களால் கோத்திட்ட மணமிகு மாலையையும்,
கிரவுஞ்சமெனும் மாயமலை அழிந்து ஒழியவென
விரைந்தங்கு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய
திருக்கையில் ஏற்றிருக்கும் கூரான வேலையும்,
"திக்கு அது மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
சிற்று அடியும், முற்றிய ப[ன்]னிருதோளும்"
அட்டதிக்கும் நடுநடுங்க சிறகசைத்துக் காட்டி
மற்றவரும் மதித்துவர கொடியினிலே வீற்றிருக்கும்
குக்குடம் என்கின்ற வீரமிகு சேவலையும்,
அனைத்துலகும் காத்துவரும் அழகான சிற்றடிகளையும்,
தினந்து நிற்கும் பன்னிரு தோள்களையும்,
"செய்ப்பதியும், வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கு அருள்கை மறவேனே"
இப்பதிக்கு வாவென்று அப்போது அருணையினில்
செப்பமுடன் உரைத்திட்ட செய்ப்பதியாம் வயலூரையும்,
இப்போது நீயிந்த பெருமைமிகு திருப்புகழில்
விருப்பமுடன் பாடிடுக எனச்சொல்லி அருளிட்ட
நின் கருணைத் திறத்தினையே எந்நாளும் மறவேனே !
"இக்கு,அவரை, நற்கனிகள்,சர்க்கரை, பருப்புடன், நெய்
எள்,பொரி, அவல்,துவரை, இளநீர்"
தித்திக்கும் கரும்புடனே,அவரையும் ,நற்பழ வகைகளும்
சருக்கரையும், பருப்பும், நெய்யும் சேர்த்துவைத்து
எள், பொரி, அவல், துவரை, இவற்றையும் கலந்தெடுத்து
தானுண்ட நீரைத் தலையாலே தருகின்ற தென்னையின்
ருசியான இளநீரும் விருப்புடனே சுவைத்திடவும்,
"வண்டெச்சில், பயறு,அப்பவகை, பச்சரிசி, பிட்டு,வெள
ரிப்பழம், இடிப்-பல்வகை"
கன்னித்தன்மையுடன் மலர்ந்து, ரீங்காரம் செய்கின்ற
வண்டின் எச்சில் பட்டதாலே, மகரந்தம் என்கின்ற
தீஞ்சுவைத்தேனும் ,பயறு, கொழுக்கட்டை என்னும் அப்பவகைகளும்,
பச்சரிசி, பிட்டு, பாங்காகப் பிளந்திடும் வெள்ளரிப்பழமும்,
உடைத்திடித்து செய்திட்ட பலவகைச் சிற்றுண்டிகளும்,
"தனிமூலம், மிக்க அடிசில்,கடலை, பட்சணமெனக்கொள் ஒரு
விக்கின சமர்த்தனெனும் அருள் ஆழி"
சத்தான சுவையான, ஒப்பற்ற கிழங்கு வகைகளும்,
மொத்தமாக வடித்திட்ட பச்சரிசி அன்னமும்,
கடலை முதலான சத்துவ ஆகாரங்களை
விருப்பமுட்ன் உண்கின்ற, வினைகளை நீக்குகின்ற
விக்கினசமர்த்தன் எனும் அருட்பெருங்கடலே!
"வெற்ப,குடிலச் சடில, விற்பரமர், அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே."
கயிலையெனும் மலை வாழும், வளைகின்ற சடைகளையும்,
பினாகம் என்கின்ற மேருகிரியாம் வில்லினைக் கொண்டவரும்,
காண்பரிய பெரும்பொருளாம், உலகினிற்கு அப்பனுமாய்
விளங்குகின்ற சிவனார் ஈந்த வளர்ஞானச்சுடரே!
கொம்பொடித்து பாரதம் எழுதிய பெருமையுள்ள ஒற்றைக்கொம்பனாரே!
*************************************************************************
[பக்கரை=அங்கவடி; பொற்கலணை-- தங்கத்தால் ஆன சேணம்; துரகம்--குதிரை; மலர்த்தொடை-- மலர்மாலை; குவடு--மலை; குக்குடம்= சேவல்கோழி; செய்+பதி= வயல்+ஊர், வயலூர்; இக்கு=கரும்பு; வண்டெச்சில்= தேன்; தனி மூலம்= ஒப்பற்ற கிழங்குகள்; ஆழி=கடல்; வெற்ப= மலையில் வசிப்பவர்; குடிலம்=வளைந்த; சடிலம்= சடைமுடி; மருப்பு=தந்தம்.]
********************************************************************************
பாடலின் பெருமை:
அருணகிரியாருக்கு, அருணையில் முருகன் உபதேசம் செய்கிறான்.
ஓர் அடியும் எடுத்துத் தந்து மறைகிறான்.
அருணகிரியாரும், அந்த அடியில் ஒரு பாட்டெடுத்து, திருப்புகழ் பாடி யோகத்தில் ஆழ்கிறார்.
முருகன் அசரீரியாக 'நம் வயலூருக்கு வா' என்று அருள் புரிய, அருணகிரியார் வயலூர்ப் போய் இறைவனைத் தொழுது, திருப்புகழ் பாடும் முறைமையைக் கேட்கிறார்.
இன்னின்னவைகளை வைத்துப் பாடு எனக் குமரனும் பணிக்க,
வயலூரில் எழுந்தருளியிருக்கும் பொய்யாக் கணபதி சந்நிதியில் நின்று, "கைத்தல நிறைகனி" பாடிய பின் அண்ணனிடம், அவரது தம்பியான குமரக்கடவுள் தமக்கு அருளிய திறத்தை வியந்து பாடிய பாடல் இது!
அருணையில் முருகன் அடியெடுத்துத் தந்த பாடல்..... அடுத்த வாரம்!
____________________________________________________________________________________
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
20 பின்னூட்டங்கள்:
Retreived comments sent by courtesy NAAGAI SIVAA
குமரன் (Kumaran) said...
ஆகா. அருமை. அருமை. எஸ்.கே. இருமுறைப் படித்தேன். இன்னும் பல முறை படிப்பேன். இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்டிருந்தாலும் முழுதும் பொருள் உணர்ந்து கேட்டதில்லை. ஆங்காங்கே பொருள் புரிந்தாலும் இன்று தான் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்து அமுதம் உண்டது போல் உணர்ந்தேன். மிக்க நன்றி.
சொற்களையும் பதம் பிரித்துத் தந்து பொருள் சொன்னதற்கு மிக்க நன்றி.
6:40 PM
SK said...
உண்மையாகச் சொல்லப்போனால், குமரன், எனக்கும் இந்தப் பாடல் தெரியுமெனினும், இதற்குப் பொருள் எழுத முனைந்த போதுதான், பல்வேறு நிகழ்வுகள் தெளிவாகப் புரிந்தது!
நன்றியெல்லாம், எழுதப் பணித்த உங்களையே சாரும்!
7:02 PM
குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடியதன் சுட்டி.
http://www.musicindiaonline.com/p/x/zqOguPJEPt.As1NMvHdW/
7:11 PM
SK said...
உடனே இணைத்து விட்டேன். மிக்க நன்றி, குமரன்!
8:06 PM
G.Ragavan said...
மிக அருமை. ஒவ்வொரு வரியும் ஊன்றிப் படிக்க வைத்த பதிவு.
இந்தப் பாடல் முழுதும் தெரியும். பலமுறையும் சொல்லவும் பாடவும் முயன்ற பாடல்தான். பொருள் தெரிந்த பாடல்தான் ஆனாலும் இப்படிப் படிக்கையில் இன்னும் சிறக்கிறது.
இந்தச் செய்யுளில் ஆங்காங்கு சொற்சிக்குகள் உண்டு. அவை சுவை மிகுந்தவை. அவைகளை நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள் என்று பார்த்தேன். மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். குறிப்பாக உக்ர துரகம், மலர்த்தொடை, வண்டெச்சில், வெற்பகுடி லச்சடில.
மிகச்சிறப்பு. டீ.எம்.எஸ் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர் படத்திற்காக. பித்துக்குளி முருகதாசும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டுமே மிக அருமை. ஒவ்வொருவிதம்.
10:04 PM
இலவசக்கொத்தனார் said...
நல்ல விளக்கம். ஆனால் இன்னும் பல முறை படிக்க வேண்டுமென நினைக்கிறேன். வரும் சந்தேகங்களை இங்கு கேட்டுக் கொள்கிறேன்.
அங்கவடி என்றால் என்ன?
6:21 AM
நாகை சிவா said...
எஸ்.கே.,
மிக அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்க்கள். ஆனால் எனக்கு தான் புரிவதற்கு சில நேரம் ஆகும் என எண்ணுகின்றேன்.பலமுறை படிக்க வேண்டும்.
தனியாக வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்து இருப்பது நன்றாக உள்ளது. பாடலின் பெருமையை விளக்கும் விதமும் அருமை.
6:57 AM
வெற்றி said...
SK அய்யா,
அருமை. ஒரு தடவை வாசித்தேன். சில சொற்களுக்கான பொருள் இன்னும் விளங்கவில்லை. ஆற அமர இருந்து ஆறுதலாக வாசித்தபின் என் சந்தேகங்களைக் கேட்கிறேன்.
மிக்க நன்றி
7:48 AM
இலவசக்கொத்தனார் said...
ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே. இப்பொ இந்த அமைப்பு ரொம்ப நல்லா வந்திருக்கு.
பாடலைப் பிரித்துத் தரும் விதம், அழகான விளக்கங்கள், கடைசியில் அருஞ்செற்பொருள் என மிக அமைப்பாக வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் எஸ்.கே.
9:11 AM
SK said...
உண்மையான வார்த்தைகள், ஜி.ரா.
எழுதும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போது நீங்களெல்லாம் பாராட்டுவதைப் பார்க்கும் போது, ஒன்றும் அறியா என்னை இப்படி எழுதத் தூண்டிய அந்த/இந்த குமரனுக்கும், உங்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அத்தனை சுவைகளையும் உள்ளடக்கிய பாடல்.
இதே நிகழ்வை அருணகிரியார் வேறொரு பாடலில் [திருப்புகழ் அல்ல!] சொல்லியிருக்கிறார்,
என்ன பாடல் என்று சொல்லுங்கள்!
10:08 AM
SK said...
நன்றி, இ.கொ.
அங்கவடி என்பது கவசம், போன்ற ஒரு ஆபரணம்.
இப்போது ஒரு யானையை [நம்ம பொன்ஸை அல்ல!] அல்லது குதிரையை[உஷாவும் அல்ல!] கற்பனை செய்து பாருங்கள்!
அதற்கான முகப்பட்டம் இருக்கும்.
யானைக்கு பட்டத்துடன், அங்குசம் போதும்.
குதிரைக்கு ஒரு கடிவாளம் கூட இருக்கும்.
இங்கு மயிலைக் குதிரை எனச் சொல்லுகிறார் அருணகிரியார்.
கூடவே, சேணமும் இருக்கிறது என்கிறார்.
இப்போது முருகன் மயில் மீது அமர்ந்திருக்கிறான்.
மயிலின் கழுத்துப் பகுதியிலிருந்து உடம்பை[அங்கத்தை]த் தழுவியபடி ஒரு வடி [ஆபரணம்] அபூர்வமான மணிகளாலும் பொன்னாலுமான சேணத்துடன் [விசித்ரமணி பொற்கலணை] இணைந்து, சேணம் இப்போது முருகன் கைகளில் தவழ்கிறது.
புரவி போல் பறக்கும் வேகத்தைக் கொண்ட மயிலைக் கட்டுப்படுத்த, ஒரு சேணமும், அது இணைய ஒரு அங்கவடி[பக்கரை]யும் தேவைப்படுகிறது எனச் சொல்ல வருகிறார்.
[உ-ம்] தலையில் இடும் ஆபரணத்தை இராக்கு வடி என்பார்கள்.
முடிந்த, தெரிந்த அளவிற்கு விளக்கியுள்ளேன்.
படிவு அமைப்பினைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.!!
10:26 AM
SK said...
//பலமுறை படிக்க வேண்டும்.//
//சில சொற்களுக்கான பொருள் இன்னும் விளங்கவில்லை.//
இ.கொ.தான் அப்படிச் சொன்னாரென்றால், நீங்களும் சொல்லியிருக்கிறீர்களே, நாகை சிவா, வெற்றி!
ஏன், நடை கடினமாக இருக்கிறதா?
ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?
சொல்லுங்கள்!
நன்றி.
10:30 AM
"எல்லாம் அவன் செயல்"
அவன் ஆட்டிவைக்க, நாம் எல்லாம் ஆடிக் கொண்டு இருக்கின்றோம். அவ்வளவே!
இதில் என் பங்கு ஏதும் இல்லை. ஆதலால் நன்றி என்ற பெரிய வார்த்தை எல்லாம் கூறி அன்னிய படுத்த வேண்டாம்.
//Retreived comments sent by courtesy NAAGAI SIVAA//
இந்த விளம்பரம் நல்லா இருக்கே :)))
பாட்டு ஒரு தமிழ்ன்னா, விளக்கம் இன்னும் ஒரு தமிழா ?!!
நல்ல முயற்சி.
கஷ்டப்பட்டு புரிந்து கொண்டேன்.
தடுமாற்றத்துடன்
பச்சோந்தி
எஸ்.கே அவர்களே,
மிக நல்ல பிறர்க்குப் பயன் தரும் வகையிலான பதிவு. குவைத்தில் அடிக்கும் 48டிகிரி வெயிலின் இடையில்
குளிர்ச்சியான சோலைக்குள் தென்றலை அனுபவித்த சுகம். சீரிய பணி.
என்னங்க! நீங்களே இப்படி சொல்லிட்டீங்க, பச்சோந்தி!
விளக்க நடை கடினமாக இருக்கிறதா?
தடுமாற்றம், கஷ்டம்னு பெரிய வார்த்தையெல்லாம் போட்டிருக்கீங்க!
எப்படியோ, புரிந்து கொண்டேன்னு சொன்னீங்களே, அதுவரைக்கும் நன்றி!
முதன்முறை வந்து, படித்து, குளிர்ந்ததைப் பதித்ததற்கு மிக்க நன்றி, திரு. ஹரிஹரன் !
வாரம் ஒன்று போடலாம் என இருக்கிறேன்.
முதல் பாடலையும் படித்தீர்கள் என நினைக்கிறேன்.
சில சொற்கள் எனக்கும் விளங்கவில்லை. மற்றபடி, கலக்கறீங்க போங்க..
என்ன சொற்கள் விளங்கவில்லை எனச் சொன்னால், நலமாயிருக்கும்.
மற்றபடி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.
இன்னும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்.
SK,
மீன்டும் பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுகள்.
நாகை சிவாவிற்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.
நன்றி, சிவபாலன்.
முதலில் கொஞ்சம் பதறித்தான் போனேன்!
முருகன் கை விடவில்லை!
நண்பர் நாகை சிவா மூலம் வந்து சரிசெய்து விட்டான்.
சூடானில் நிச்சயம் மழை பெய்யும்!:))
ஆகா! SKன் மீண்டும் மீண்டும் இனிப்பு. பழைய பதிவு தொலைந்தாலும் பதிவு மீண்டு வந்ததும் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.
//பதிவு மீண்டு வந்ததும் மீண்டும் வந்ததும் //
தமிழ் விளையாடுகிறதய்யா உங்களிடம்!
ஆம்! எனக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தந்த ஒரு நொடி, நாகை.சிவாவின் மயிலைப் பிரித்த நேரம்!
மிக்க நன்றி!
பதிவு கிடைச்சிடுச்சா?!! நல்லது.. நாகை சிவா வாழ்க :)
எல்லாம் உங்க காதுல போட்ட , நேரம்,பொன்ஸ்!
செயின் மாதிரி, வரிசையா நடந்து, 1 மணி நேரத்துல மீள்பதிவு போட்டாச்சு!
நன்றி!
மீண்டும் நாகை சிவாவுக்கும்!
மீண்டும் பாராட்டுகள் நன்றிகள். பிரபலமாயிருக்கும் TMS பாடல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு ராகங்களிலும் இல்லையென நினைக்கிறேன். தெளிவு படுத்தவும்.
நாம் அனைவரும் ரசிக்கும் TMS அவர்களின் பாட்டு ஒரு திரைப்பாடல்.
திருப்புகழுக்கு பல்லாண்டு காலமாய் முறைப்படி ராகங்கள்ல் அமைத்து, திருப்புகழ் அன்பர் கூட்டம் என்ற ஒரு அமைப்பு பாடி வருகின்றது.
டில்லியில் இருக்கும் திரு ராகவன் என்னும் அன்பர் இதனைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அவர் பாடிய, கொடுத்த ராகத்தைத்தான் போட்டிருக்கிறேன்.
வருகைக்கும், கேள்விக்கும் நன்றி, ஓகை அவர்களே!
எஸ்.கே,
கவிதையாகப் பொருள் சொல்வது புதுமையாக இருக்கிறது.
அருமையென்பதைத் தவிர வேறென்ன சொல்வது.
இருமுறை படித்துவிட்டேன். இன்னும் சிலமுறையாவது படிக்கவேண்டும்.
எஸ்கே ஐயா!
தமிழை ,அருணகிரியார் கையாண்ட வண்ணம்;உங்கள் உரையில் கண்டேன்.TMS குரலிலும் திருப்புகழ் மணந்தது. நன்றி
யோகன் பாரிஸ்
பாராட்டுக்கு நன்றி, திரு. யோஹன் -பாரிஸ்!
மற்றதையும் படித்துச் சொல்லுங்கள்!
Post a Comment