Tuesday, May 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

முந்தைய பதிவு இங்கே!

'சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?

அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?
[அடுத்த பதிவில்]'...................


மணக்குள விநாயகனை நெருங்குகிறான்.
தான் கேட்கப்போகும் வரத்தின் சுமை அவனுக்குப் புரிகிறது.
ஆகவே, சற்றுத் தயங்குகிறான்!

என்ன! பாரதிக்குத் தயக்கமா? எதற்கும் அஞ்சாதவனுக்கும் தயக்கமா! வியக்கிறார் கணபதி!

என்ன விஷயம் என்பதுபோலப் பார்க்கிறார்! மெதுவாக ஆரம்பிக்கிறான்.....,

'யாரும் இதுவரைக்கும் உன்னிடம் சொல்லாத ஒன்றைச் சொல்லப் போகிறேன், விநாயகரே! இதுவரை யாரும் உன்னிடம் கேட்டுகூட இருந்திருக்க மாட்டார்கள்!' எனத் துவங்குகிறான்.

விநாயகர் புருவங்களை உயர்த்தியபடியே வியப்பு கலந்த சிரிப்புடன் பாரதியை மேலும் சொல்லத் தூண்டுகிறார்!

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்" என்கிறான் பாரதி.

அப்படி என்னதான் கேட்கப் போகிறான் பாரதி? பொன்னா?.. பொருளா? இல்லை வேறு ஏதாவதா?..... அதையெல்லாம் என்னிடம் கேட்கமாட்டானே! வழக்கமாக என் அம்மாவிடம்தானே கேட்பான்! இப்போது என்னிடம் வந்து 'ஏதேதோ சொல்லத் துணிகிறேன்' என வேறு சொல்கிறானே என கணபதிக்கு இப்போது மெய்யாகவே வியப்பு மேலோங்குகிறது.

'மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவும் "என் வினையால்" இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா!' என ஒரு போடு போடுகிறான்!

அதாவது, இவன் செய்யப்போகும் செயல்களின் மூலமாகவே இந்த அனைத்துச் செயல்களும் நிகழ வேண்டுமாம். அதையும் தான் எப்படிச் செய்வேன் என, விநாயகரிடம் நிபந்தனை போடுகிறான்!

'ஞான ஆகாசத்து நடுவே நின்று நான், "பூமண்டலத்தில் அன்பும், பொறையும் விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க" என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, "அங்ஙனே ஆகுக" என்பாய் ஐயனே!'

எப்போது இது நிகழ வேண்டுமாம் இவனுக்கு?

இப்போது முழுத் தைரியமும் திரும்ப வந்துவிட்டது! தயக்கம் விடை பெற்றுச் சென்றுவிட்டது! கேட்கிறான்!

'இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தை அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே' என கணபதி தாளில் வீழ்கிறான்!

என்ன ஒரு உள்ளம் பாருங்கள்! இவ்வுலகம் செழித்திருக்கவே இவ்வளவு நேரமாக கணபதியிடம் மன்றாடியிருக்கிறான். அது தன்னால் நிகழ வேண்டும்... நிகழ்த்த முடியும்... என்னும் திடநம்பிக்கையுடன்!

'உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்; மனக் கேதம் யாவினையும் மாற்றி, எனக்கே நீ நீண்ட புகழ் வாழ்நாள், நிறைசெல்வம், பேரழகு வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து' என உடனே அடுத்ததாகக் கேட்கிறான்!

இது கொஞ்சம் வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவு நேரம் நம் அனைவருக்குமாக வேண்டியவன், என்னடா! இப்போது இவையெல்லாவற்றையும் கேட்கிறானே! என்று முகம் சுளிக்க வைக்கிறானோ?!!!

சற்றுப் பொறுங்கள்! பாரதியின் உள்ளம் விரைவில் புரியும்!

'விரைந்து உன் திருவுளம் என்மீது இரங்கிட வேண்டுமைய்யா! குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா! வரங்கள் பொழியும் முகிலே! என் உள்ளத்து வாழ்பவனே!' என்று, காக்கும் கடவுள் திருமாலையும் சேர்த்தழைத்து, கூடவே இலக்குமியையும் வைத்துப் பாடுகிறான்.

நம் வியப்பு இன்னமும் அதிகமாகிறது!

இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பது போல விநாயகர் பார்க்கிறார்!
அதற்கும் உடனே ஒரு பதில் தயாராக வைத்திருக்கிறான் பாரதி!

'வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத பணிமலரே!' என் உள்ளத்தில் சலனமில்லாது முதலில் நீ வந்து உட்கார்! இந்தப் பரந்த வெளி முழுவதும் அன்பினால் சூழட்டும்! எல்லாத் துயர்களையும் தொலைத்துவிடு! தொலையாத இன்பத்தை விளைத்துவிடு! இந்தக் கலிகாலத்தின் கொடுமையெல்லாம் வீழ்ந்து போகச் செய்! கிருத யுகத்தை எங்களுக்குக் கொடு!' எனக் கட்டளையிடுகிறான்!

'ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெல்லாம்! கிருத யுகந்தான் மேவுகவே!'

எனப் பாடியவனின் கவனம் உடனே தன் நெஞ்சத்தின் மீது படிகிறது!

நடப்பது எதுவும் புரியாமல், உணராமல் அது இன்னமும் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கிறது! பாரதிக்குக் கோபம் வரத் தொடங்குகிறது!

'நான் தான் இங்கே உனக்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றேனே... பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்! இன்னமும் உனக்கு ஏன் அச்சம்?' என்பதுபோலக் கடிகிறான்!

யார் இந்தப் பாரதியின் 'உள்ளம்"?
கவனமாகக் கேளுங்கள்! பாரதியின் உள்ளம் புரியும்!

'மேவி, மேவித் துயரில் வீழ்வாய்; எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்! பாவி நெஞ்சே!'
பார்மிசை நின்னை இன்புறச் செய்வேன்; எதற்கும் இனி அஞ்சேன்; ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் அபயம் இங்கு அளித்தேன்.....நெஞ்சே!'
என்று அதற்கு தைரியம் கொடுக்கிறான்!

நாடு என்பதற்கு இரு பொருள் கொடுத்திருந்தான் சற்று நேரம் முன்னர்! இந்தப் பரந்த நாடு, நமது விரிந்து பரந்த உள்ளம் இரண்டையும் பார்த்தே இந்த சாடலைச் செய்கிறான் பாரதி.

'நான் சொன்ன சொல் தவறாதவன். இப்போது உனக்கு நான் சொன்னதை நிலை நிறுத்துவதற்காக, தீயில் குதிப்பேன்; கடலினில் விழுவேன்; விடம் கூட உண்பேன்; இந்த உலகத்தையே அழிக்கவும் தயார்; எது வேண்டுமானாலும் செய்து உன்னைக் காப்பேன்' எனச் சொல்லிவரும் பாரதி, ஒரு அற்புதமான சொல்லைச் சொல்லி, தான் யார்? தன் உள்ளம் எத்தகையது என நிரூபிக்கிறான்........ இல்லை, இல்லை!....... அவன் யாருக்கு நிரூபிக்க வேண்டும்?...... தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான்!

"மூட நெஞ்சே! முப்பது கோடி முறை உனக்கு உரைத்தேன்; இன்னும் மொழிவேன்" என்கிறான்.

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது!

ஆம்! அந்த முப்பது கோடி மக்களையும் தன உள்ளமாகப் பாவித்துத்தான், இதுவரை இவன் விநாயகரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்!

மன விடுதலை, நாட்டு விடுதலை இரண்டையும் தன்னால் நிகழ்த்த முடியும்.... கணபதி அருளோடு எனத் திடமாக நம்பினான்!

உன் தலையில் இடி விழுந்தால்கூட கவலைப் படாதே...... விடுதலையை நாடு!
எது நிகழ்ந்தாலும் நமக்கேன் என்றிரு!...... விடுதலையை மட்டுமே நாடு!
பராசக்தி பார்த்துக் கொள்வாள்! ...... விடுதலை!!

"நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நான் எனும் எண்ணமே வெறும் பொய்" என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன் பதம்!'

மிக மிகக் கவனமாக சொற்களை வைக்கிறான் பாரதி!

முதலில் காக்கும் கடவுளைக் கூப்பிட்டான்....... தன் தேவைகளுக்கு!

இப்போது விடுதலை பற்றிப் பேசுகையில், நிர்வாணா எனும் தத்துவத்தைப் போதித்த புத்தனை வணங்குகிறான்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தன் சுய விடுதலை பற்றிய தோத்திரம் போல இது தெரிந்தாலும், அவன் வேண்டுவதெல்லாம் இந்த நாட்டு விடுதலை ஒன்றை மட்டுமே!

ஒரே கவியில் இரு பொருள் வைத்துப் பாடுகிறான்.

புதுவையில் தஞ்சம் அடைந்திருந்த நேரத்தில் பாடிய பாடல் இது! அதிகம் சொல்ல அவனால் இயலாது!

எனவே, சொல்கிறான்!

'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'

என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?

[அடுத்த பதிவில்]

Read more...

Sunday, May 18, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 6

"பாரதி" -- சில காட்சிகள் -- 6


முந்தையப் பதிவு இங்கே!





'அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!
அடுத்த பதிவில்!'
எனச் சொல்லியிருந்தேன்.
அது என்னவெனப் பார்ப்போம்!


"நாட்டிற்குழைத்தல்" என்னவெனச் சொல்லப் புகும் முன், அதற்கு முதலில் பொறுமை மிகவும் அவசியம் எனச் சொல்ல வருகிறான். சட்டென, தன்னிடம் இல்லாத அதை எப்படி வரவழைப்பது என ஒரு ஐயம் பாரதிக்குத் தோன்றுகிறது. அதே வேகத்தில் பதிலும் கிடைக்கிறது.

ஆம்! கணபதியைப் பணிந்தால்தான் எதுவுமே கிடைத்துவிடுமே! அவரையே கேட்போம் எனத் துவங்குகிறான்.

'எனை நீ காப்பாய், யாவுமாம் தெய்வமே!
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்?
யாவும் நீ ஆயின், அனைத்தையும் பொறுத்தல் செவ்விய நெறி. அதில் சிவநிலை பெறலாம். பொங்குதல் போக்கிப் பொறை எனக்கு ஈவாய்!
மங்கள குணபதி; மணக்குள கணபதி;
நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!'


முன்னம் என் ஆன்மாவே நீதான் எனச் சொல்லிய கணபதியிடம் இப்படி வேண்டிய அவன், தொடர்கிறான்.
நாடு என்பதற்கு அவன் அளிக்கும் விளக்கம் இது!

'நாட்டினைத் துயரின்றி நன்கு அமைத்திடுவதுவும்' 'உளம் எனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதுவும்' பேரொளி ஞாயிறே அனைய சுடர்தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்' 'நோக்கமாக் கொண்டு நின் பதம் நோக்கினேன்!'

நாம் வாழ்வது நாடு என்றால், நம் உயிர் வாழ்கின்ற இந்த உடல் தாங்கிய உள்ளமும் ஒரு நாடே எனப் புதுப் பார்வை வைக்கிறான்!

சுற்றியிருக்கும் இந்த நாட்டைத் திருத்துவது எவ்வளவு தலையாய பணியோ, அதே போலத்தான், நம் உள்ளத்தைச் செம்மையாக வைத்திருத்தலும் எனப் பாடம் புகட்டுகிறான்!

'காத்தருள் புரிக கற்பக விநாயகா! காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம் கோத்து அருள் புரிந்த குறிப்பரும் பொருளே! அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்! எங்குல தேவா போற்றி! சங்கரன் மகனே! தாள் இணை போற்றி!' எனப் போற்றி முடிக்கிறான்.

தன் தொழில் இன்னதென்று தெரிந்துவிட்டதால், இப்போது ஒரு பெரிய செய்தி சொல்ல விழைகிறான் பாரதி! அதற்கு வாணி சரஸ்வதியின் அருள் தனக்குக் கிட்ட வேண்டும் ; அப்போதுதான் கவிதைத் தொழிலைச் செவ்வனே செய்ய முடியும் என நினைத்து, வேண்டுகிறான்..... கணபதியைத்தான்!

'போற்றி! கலியாணி புதல்வனே!' என அடுத்த பாடலைத் துவங்கி,
'பாட்டினிலே ஆற்றல் அருளி அடியேனைத் தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்!' என்கிறான்!

என்ன வேண்டுமாம்?

'வாணியருள் வீணையொலி என் நாவில் விண்டு' வைத்துவிட அருள் செய்யப்பா! என மனமுருகி வேண்டுகிறான்!

அப்படி 'விண்டு' வைத்தால், ஏ! 'புதுவை விநாயகனே!' இதோ உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்!

'தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்' எனச் சொல்லி விநாயகனைக் குளிர்விக்கிறான்.

நமக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால், அதை நிறைவேற்றக்கூடிய ஆளுக்கு நெருக்கமானவரைக் கவனிப்போம் என்பதுபோல, 'உன் அம்மாவை.... ஏனென்றால், இவர்தான் அகல்விழி உமையாளின் ஆசை மகனாயிற்றே!.... நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்!' என இவரைக் குஷிப்படுத்துகிறான்!

அது மட்டுமா! 'பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவைத் தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!' எனவும் ஒரு கூடுதல் விண்ணப்பம் வைக்கிறான்.

ஒரு வரம் கேட்க எண்ணுகிறான் கணபதியிடம்! நிச்சயம் தந்துவிடுவான் என நம்புகிறான்!

இவனது முப்பெரும் தொழில்களான, 'கவிதை செய்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டிற்குழைத்தல்' இவை மூன்றுக்கும் உதவ முப்பெரும் சக்தியரைத் துணைக்கழைக்கிறான்....கூடவே, அதில் கணபதியையும் வைத்துப் பாடுகிறான்!

பொருள்நலம் அளிக்கும் இலக்குமி, இவளைச் 'செந்தாமரையில் சேர்ந்திருக்கும் செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி' எனப் போற்றி, 'தான் செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் இவனே எனது "கையாள்" போலச் செய்கிறானே என அவள் மனமகிழ்ந்து, 'அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்' எனச் சொல்லுகிறான்.

இந்தச் 'செய்தொழில்' என்னும் வினைத்தொகைச் சொல் மிகவும் ஆழ்ந்த பொருளுடையது. தான் 'இதுவரையில் செய்த, இப்போது செய்கின்ற, இனிச் செய்யப் போகின்ற', என எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து பெரிதாக அடிபோடுகிறான் பாரதி!

'புகழ்சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீங் கவிதை பெய்வாள்' எனவும்,
'சக்தி துணை புரிவாள்' எனவும் சொல்லிவிட்டு,

இதெல்லாம் எப்போது நிகழும் தெரியுமா, ஓ, மணக்குள கணபதியே!,'பிள்ளாய் நின்னைப் பேசிடிலே' என ஒரு போடு போடுகிறான்..... ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் அடிப்பது போல!

சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?
அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?

[அடுத்த பதிவில்]

Read more...

Friday, May 16, 2008

"தாய்க் கனவுகள்"

"தாய்க் கனவுகள்"

அன்னையர் தினத்தை ஒட்டி பலரும் சிறப்பாக எழுதிவிட்டார்கள்! இனி என்ன எழுத இருக்கிறது என நினைத்தபோது, ஒரு எண்ணம் வந்தது. ஏதேதோ காரணங்களுக்காகத் தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து, அவர்கள் மீண்டு[ம்] வரும் நாளை எதிர்நோக்கி வாழ்நாளைக் கழித்துவரும் அனைத்து அன்னையர் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக என் எண்ணத்தில் உதித்த இந்தச் சந்தக் கவிதையை இவர்கள் எல்லாருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.


"இந்த உலகில் தவறான[அன்பில்லாத] பிள்ளைகள் இருக்கலாம்; ஆனால் தவறான [அன்பில்லாத] தாய் என எவரும் உண்டோ அம்மா!" என ஆதி சங்கரர் கதறிய சொற்களை முன் வைத்து இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன்!


எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புடன் வாழ்க!
வாழ்க அன்னையர்!

கடலி னின்று மேகங்கள் எழும்பும்; காற்றுடன் கலந்து கார்முகில் ஆகும்!
காற்றலை அதனை வானத்தில் நடத்தும்; குளிரலை சேர்ந்து மழையும் பொழியும்!
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி சரமாய் மழையும் தரையினை நாடும்!
மழைநீர் வெள்ளம் ஆறாய் மாறிச் செல்லும் வழியெலாம் சோலையை விரிக்கும்!
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்தே வாழ்ந்திட மழைநீர் தன்னின் பங்கினைச் செய்யும்!
தன்பணிமுடித்து கசடினை வழித்து கடலினைத் தேடி நதியும் விரையும்!
பிறப்பிடம் தேடிச் சென்றிடும் ஆறினைத் தாய்க்கடல் தாவித் தன்னில் கொள்ளும்!
மீண்டும் இயக்கம் இதுபோல் தொடங்க தாயின் கண்ணீர் மழையாய் மாறும்!

அன்பே! நீயும் அதுபோல் கண்ணே! என்னில் பிறந்து, என்னுள் வளர்ந்து,
என்னில் கிளம்பி, எங்கோ சென்று, பண்ணும் செயல்கள் பண்புடன் ஆற்றி,
மண்ணின் மானம் தன்னில் வளர்த்து, மாண்புகள் பலவும் நின்னில் கொண்டு,
சொல்லிய சொல்லின் துயரினைத் துடைத்து, கள்ளில் ஊறிய மலர்போல் சிரித்து
என்னைத் தேடி ஒருநாள் வருவாய்! இறையவன் ஈந்த நல்வரம் நீயே!
கண்ணைவிட்டுப் பிரிந்திருந்தாலும், கண்ணே நின்னை நினைத்தே இருந்தேன்!
என்னில் நின்னைக் கூட்டும் நாளை உள்ளில் வாழும் இறையிடம் கேட்டேன்!
''தருவேன்! தருவேன்! எல்லாம் தருவேன்! கவலை உனக்கேன்!'' எனவே சொல்ல...

யானும் சிரித்தேன்!

Read more...

Wednesday, May 14, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"என்னப்பா வருத்தமா இருக்கற மாரி கீறே! இன்னா சமாச்சாரம்? ஆராச்சும் இன்னாவாவுது சொன்னாங்களா? சொல்லு!" என மயிலை மன்னார் மூன்றாம் முறையாக என்னைக் கேட்டான்!

நான் பதில் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்!

"இப்ப, நீ சொல்லப் போறியா இல்லியா? இல்லேன்னா கிளம்பு. எடத்தைக் காலி பண்ணு!" எனச் சற்று கோபத்துடன் அதட்டவே, அவனைப் பார்த்து,

'சரி, சொல்றேன். ஆனா, நீ என்னைக் கோவிச்சுக்கக்கூடாது! நான் செஞ்ச ஒரு காரியம் எனக்குப் பிடிக்கலை. அதான்!' எனத் தயக்கத்துடன் இழுத்தேன்!

'எனக்குத் தெரியும் நீ இன்னா சொல்லப்போறேன்னு! நானே ஒன்னியக் கேக்கணும்னுதான் இருந்தேன்! நீ அப்பிடியாப்பட்ட ஆளில்லியே! இவன் ஏன் இதுலெல்லாம் போயி வாயைக் கொடுக்கறான்னு நெனைச்சேன்! சரி, பட்டுன்னு விசயத்தைச் சொல்லு' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! எம்மனசுக்கு சரின்னு பட்ட கருத்தை .. கவனிச்சுக்கோ.. கருத்தை மட்டும் தான் சொன்னேன். அதைத் தனிப்பட்ட முறையிலே எடுத்துகிட்டு, நான் அவங்களை தாக்கினதா கொஞ்சப்பேரு நினைக்கறாங்க! அதான் இன்னா பண்றதுன்னு உங்கிட்ட கேட்டா நீ எதுனாச்சும் சொல்லுவியேன்னு வந்தேன்' என்றேன்.

'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! இத்தப் பத்தி ஐயன் செம சூடா சொல்லியிருக்காரு! இப்ப ஒனக்காக அதச் சொல்றேன். கேட்டுக்கோ!' என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றிவிட்டான்! மயிலை. மன்னார்!

இனி வருவது குறளும் அதற்கு மயிலை. மன்னார் அளித்த விளக்கமும்!

"அதிகாரம் - 32" "இன்னா செய்யாமை

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இப்ப ஒரு காரியம் செஞ்சேன்னா, ஒனக்கு நெறைய துட்டு கிடைக்கும்னு வைச்சுக்கோ! அதும் மூலமா, நீ பெரிய பணக்காரனாக் கூட ஆயிறலாம்னும் வைச்சுக்கோ! ஆனாக்காண்டி, அந்தக் காரியத்தப் பண்ணினா, மத்தவங்களுக்கு கஸ்டம் வரும்னா, அத்தச் செய்யாமலியே இருக்கறதுதான் ரொம்ப நல்லது. அதான் மனசு சுத்தமா இருக்கறவங்களோட கொள்கைன்னு ஐயன் சொல்றாரு.


'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


அத்தோட வுடலை வள்ளுவரு. இந்த மாரி மனசு சுத்தமா இருக்கறவங்களுக்கு இன்னோரு கொள்கையும் இருக்குதாம்! அத்து இன்னான்னா, அடுத்தவங்க வந்து ஒரு கஸ்டத்தைக் கொடுத்தாகூட, அதை சகிச்சுகிட்டு, பொறுமையாப் போயிருவாங்க. திருப்பி அவங்களுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காம..!! புரியுதா?


'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.' [313]


இப்ப, நீ ஒண்ணுமே பண்ணலைன்னு வைச்சுக்குவோம். ஆனா, அடுத்த ஆளு ஒருத்தர் வந்து உனக்குத் தொல்லை கொடுத்து வருத்தத்தைக் கொடுக்கறாரு. இப்ப ஒனக்கு இன்னா தோணும்? பதிலுக்கு இன்னா சொல்லலாம்... இல்லாக்கட்டி.. இன்னா செய்யலாம்னுதானே! அத்தான் கூடாது! அப்பிடி நீயும் திருப்பிச் செஞ்சியானா, அது ஒன்னியப் போட்டு வருத்திக்கிட்டே இருக்கும்னு எச்சரிக்கை பண்றாரு ஐயன்!


'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.' [314]


இது ஒனக்கு மட்டுமில்ல... நம்ம ஆளுங்க அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளுதான்! ஒவ்வொருத்தனும் ஒரு ஆயிரம் வாட்டியாவது கேட்டிருப்பாங்க! கேட்டு இன்னா புண்ணியம்? அப்பிடி செய்யறவங்க ரொம்பக் கம்மி!

ஒருத்தர் ஒரு கஸ்டத்தை ஒனக்குக் கொடுத்தார்னா, திருப்பி அவனுக்கு நீ ஒரு கஸ்டத்தைக் கொடுக்காதேன்னு முந்தின குறள்ல சொன்னாருல்ல? இப்ப அதுக்கும் மேல ஒரு படி போயி, அது மட்டுமில்லைடா மவனே! திருப்பி செய்யறதா இருந்தா, நீ அவஙளுக்கு ஒரு நல்ல காரியத்தைப் பண்ணிருன்னு புத்தி சொல்றாரு. நல்லாக் கேட்டுக்கோ!



'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


இப்ப வீதியில நடந்து போய்க்கினே கீறே நீ! ஒரு ஆளு அடிபட்டு விளுந்து கிடக்கான். ரெத்தமாக் கொட்டுது. அத்தப் பாத்துகினே, நம்ம சோலியப் பாக்கப் போவோம்னு போயிராதே! ஒடனே, அது ஒங்குடுமத்துலியே ஒருத்தருக்கு நடந்த மாரி நெனைச்சுகினு, அந்த ஆளுக்கு வேண்டிய ஒதவியை நீ செய்யணும்! அப்பத்தான் ஒனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவு இருக்குதுன்னு அர்த்தமாம். அறிவில்லாதவந்தான், நமக்கென்ன போச்சுன்னு போயிருவான்னு சொல்லாம சொல்லி வெளங்க வைக்கறாரு. புத்தர், ஏசுநாதர், அல்லான்னு எல்லா பெரிய மனுசங்களும் சொல்லிகினே இருக்கற ஒரு சமாச்சாரம் இது!


'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.' [316]


கஸ்டம்னா இன்னான்னு ஒனக்குப் புரியுந்தானே? வருத்தம்னா இன்னான்னு தெரியுந்தானே? அப்போ அது மாரி விசயம்லாம் மறந்துங்கூட அடுத்தவனுக்குப் பண்ண நெனைக்காதேன்னு கறாராச் சொல்றாரு இதுல!

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.' [317]


மேலே சொன்னதையேத்தான் இங்கியும் அழுத்தந் திருத்தமாச் சொல்றாரு, மறுபடியும்!
தனக்குத் துன்பம்னு மனசுல பட்ட எதையும் பிறத்தியாருக்குச் செய்யாம இருக்கறதுதான் ஒலகத்துலியே தலை சிறந்த அறம்.. தருமம்னு திரும்பவும் சொல்றாரு.



'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.' [318]


ஒருத்தன் கொடுக்கற வருத்தம் எப்பிடியாப்பட்டதுன்னு ஒனக்குத் தெரியுமில்ல! இப்ப நான் ஓங்கி 'பளார்'னு ஒரு அறை விட்டேன்னா எப்பிடி இருக்கும் ஒனக்கு! எம்மாம் வலிக்கும்! அந்த வலி ஒனக்குத் தெரியுமின்னா, நீ அதே போல, அடுத்தவனுக்குச் செய்யாதேன்னு இன்னும் ஒரு தபா சொல்றாரு. இன்னாடா, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாரேன்னு நெனைக்காம, நம்ம மரமண்டையில ஏத்தறதுக்காவத்தான் இப்பிடி சொல்றாருன்னு புரிஞ்சுகிட்டா ஒனக்கு நல்லது! சரியா!


'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.' [319]

ஏன் இத்தினி தபா ஐயன் சொன்னாருன்றதுக்கான காரணத்த இங்க சொல்றாரு. நீ ஒருத்தனுக்கு ஒரு துன்பத்தைக் கொடுத்தியானா, ஒனக்கு ஒரு பெரிய கஸ்டம் கொஞ்ச நேரத்துலியே பின்னாடியே வந்து நிக்குமாம்! அத்த எப்பிடி சொல்றாருன்னா, நீ காலையில கொடுத்த கஸ்டம் சாயங்காலமே ஒன் வூட்டாண்டை வந்து கதவைத் தட்டுமாம்! நான் சொல்றதை நீ ஒனக்கு மட்டும் எடுத்துக்கோ! அவனுக்கு வரலியே, இவனுக்கு ஒண்ணும் ஆவலியேன்னு மயங்காத! அவனவன் கஸ்டம் அவனவனுக்குத் தெரியும். நீ நெதானமா நடந்துக்கோ! இன்னா நா சொல்றது!


'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.' [320]


முன்ன சொன்ன அதேதான்! நீ கொடுத்த கஸ்டம் ஒன்னியவே வந்து சேரும்! அதுனால, ஒனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறியா, அப்படீன்னா, வேற யாருக்கும் நீ அத்தச் செய்யாம இரு.
ஒனக்கு இந்த வியாதி வேணாம்னா, இந்த வியாதியைத் தேடிப் போகாதே!


"இன்னா! நா சொல்றது எல்லாம் புரிஞ்சுதா! ஒனக்குப் பிடிக்கலியா, பேசாம போய்க்கினே இரு. இந்த ஒலகத்துல ஆரும் தன்னோட தப்பை அடுத்தவன் சொல்லிக் காட்டறத விரும்பறதில்ல. அவன் அப்பிடி செய்யறதுல ஒரு தப்பும் இல்லேன்னுதான் நானும் சொல்லுவேன்! ஏதோ அவனுக்குப் பிடிச்சிருக்கு; செய்யறான். ஒனக்கு அதுனால, ஒரு பேஜாரும் இல்லேன்னா, 'கம்'முனு கண்டுக்காம போயிரு. ஒன்னியக் கேட்டா மட்டும் சொல்லு. அப்பவும் தன்மையா சொல்லு. இப்பிடி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னு சொல்லிப் பாரு. அப்பிடி நீ சொன்னது அவனுக்குப் பிடிக்கலியா... வுடு ஜூட்!
இப்ப நா சொன்னது ஒனக்குப் பிடிச்சுதா, பிடிக்கலியா?'
எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.

'நீ என்னோட நண்பண்டா! நீ சொன்னா, எனக்குப் பிடிக்காமப் போகுமா!' எனச் சொல்லியபடியே இன்னும் 2 மசால் வடையும் 'டீ'யும் தரச் சொல்லி நாயரைக் கேட்டேன்!

Read more...

Tuesday, May 13, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 5

முந்தையப் பதிவு இங்கே!


"கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும் என இயம்புகிறான் பாரதி!
இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?"

சொல்லுகிறான் பாரதி!

'விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தால் ஏதும் பயனில்லை,
........ கோடிமுறை இன்னும் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு; அச்சமில்லையே.'


ஆம்! பான்மை..... உன்னுடைய இயல்பு தாண்டி நடுங்காதே! கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! அவன் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு அச்சமென்பதே இருக்கக் கூடாது எனக் கோடி முறை சொ ல்லிவிட்டேன்! இன்னும் பல கோடி முறை சொல்லுகின்றேன்! நீ மேன்மையுறுவாய் என்கின்றான்!

இந்த அச்சமில்லாமல் இருப்பதால் என்னென்ன பயன் என விவரிக்கத் தொடங்குகிறான்!

வரகவி அல்லவா இவன்! தமிழ் வெள்ளமெனப் பொங்கி வழிகிறது! நம்மையும் நனைக்கிறது.... இல்லை மூழ்கடிக்கிறது!


'அச்சமில்லை, அமுங்குதல் இல்லை, நடுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை, பாவம் இல்லை, பதுங்குதல் இல்லை.

எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்; கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்; யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்.

வானமுண்டு; மாரியுண்டு; ஞாயிறும், காற்றும், நல்ல நீரும், தீயும், மண்ணும், திங்களும், மீன்களும், உடலும், அறிவும் உயிரும் உளவே.

தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், காண நல் உலகமும், களித்து உரை செய்யக் கணபதி பெயரும் என்றும் இங்கு உளவாம்!

சலித்திடாய்; ஏழை நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சக் கவலைக்கு இடம் கொடேல் மன்னோ! தஞ்சம் உண்டு சொன்னேன்; செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே!'


இதைப் படித்தாலே போதும்! விளக்கம் தானே உள்ளில் புரியும்! அப்படி எளிமையாக எழுதியிருக்கிறான்!

'நமக்கே' என முடித்தவுடன் தன்னை அலைக்கழிக்கின்ற மனத்தைப் பற்றிய எண்ணம் வருகிறது பாரதிக்கு! திரும்பவும் மனதுக்குச் சொல்கிறான்!

ஒரு மூன்று செயல்களை இடைவிடாது செய்துகொண்டு வா!

'உமைக்கு இனிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்' என அதற்குத் தெம்பூட்டுகிறான்!

அவை என்ன மூன்று செயல்கள்!


'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்'!

இவைதான்! திரும்பத் திரும்ப, 'அஞ்சாதே! சோர்ந்து போய் விடாதே! பொதுநலம் பேணி, உனக்கு இயல்பாக வருகின்ற ஒன்றைச் செய்துவா! கணபதி காப்பான்!' என அறிவுறுத்துகின்றான்!

மேலும், ஒவ்வொன்றையும் விரித்துக் கூறுகின்றான்!

'நமக்குத் தொழில் கவிதை' என்றான்! இதைத் தருவது யாராம்!?


'செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்! வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி!'

அவளது அருள் உன்னிடம் பூரணமாக நிறைந்திருக்க, உன்னுடைய திறமைகளை எல்லாம், 'வீண் ஐயத்திலும், துரிதத்திலும் சிந்தி அழிவதென்னே!' என மனத்தைச் சாடுகிறான்!

பொறுமையாக...
'பையத் தொழில் புரி நெஞ்சே!'.... அப்படியே, 'கணாதிபன் பக்தி கொண்டே' அதைச் செய்வாயாகில், ஒரு குறையும் இல்லாது செழிக்கும் என தெம்பூட்டுகிறான்!

அடுத்து, 'இமைப்பொழுதும் சோரதிருத்தல்' என்றால் என்ன என்று விளக்குகிறான்!

ஒரு கணம் கூட சோம்பித் திரியாமல், கொண்ட செயலே கொள்கையென அனவரதமும் அதைப் பற்றியே உழைத்திருத்தல் தான் இதன் பொருள் எனச் சொல்லுகிறான்!

இதன் முதல் படியாக என்ன இருக்கவேண்டும் எனவும் செப்புகிறான்! செய்யும் தொழில் மீதும், கணபதி மீதும் பக்தி மிகவும் அவசியம் என வலியுறுத்துகிறான்.


'பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறான்!

ஒரு விதை நடப்படுகிறது. மறுநாளே அது முளைத்து வந்துவிடுவதில்லை. ஒரு சில நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவரைக்கும் அந்த விதை சும்மா இருப்பதில்லை. நீரை உண்டு, நிலத்தில் இருக்கின்ற வளத்தை உண்டு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேவையான அளவு சக்தியும் உரமும் கிடைத்ததும், நிலத்தைக் கிழித்துக் கொண்டு முளை விடுகிறது!


'வித்து முளைக்கும் தன்மைபோல், "மெல்லச்" செய்து பயன் அடைவார்'

இதெல்லாம் நிகழ ஏது காரணம்?

'சக்தி தொழிலே அனைத்துமெனில், சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?' என பலம் கொடுக்கிறான்!

'வித்தைக்கு இறைவா! கணநாதா! மேன்மைத் தொழிலில் பணி எனையே!' என, முடிக்கிறான்!

அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!


அடுத்த பதிவில்!

Read more...

Wednesday, April 30, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4
"'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!
அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!
எதுதான் முறையாம்?!!"


ஏ! முழு மூட நெஞ்சே! நீதான் முறையாக நடக்கணும்~!
அப்படி நீ நடந்தால் கொஞ்சம் கூட வாட வேண்டாம்!
கறையுண்ட கண்டன் மகன், வேத காரணன், சக்திமகன்
இவரைப் பணிந்தால் அவருக்கெல்லாம் துணையாக அவன் வருவான்!

என்ன மாதிரியான துணை?

உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!
எனதுயிர் மன்னவன்!
என் வாழ்வினுக்கு ஒரு அணி!
என் உள்ளத்தின் ஆரமுது!
எனது அற்புதம்!
கடைவானில் எழுகின்ற இந்தச் சுடருக்கு இணையே கிடையாது
என்கிறான் பாரதி!

சரி! சுடரை எவ்வாறு போற்றுவது?

கணத் தேவர் துரையே போற்றி!
எனக்கு ஒரு இடரும் இன்றிக் காத்திடுவாய்!
உன்னிடம் எத்தனையோ தடவை சொல்லியாச்சு!
உனது ஒரு சுடராலேதான்,
இந்த அண்டவெளியிலே பலகோடி, கோடி, கோடி, பலகோடி அண்டங்கள் நீ படைத்தாய்!
நீ வாழ்க இறையவனே!
என!

வாழ்த்திய இறைவனை எப்படிப் போற்றுவது? என்னதான் வேண்டுவது?


தாயாய், தந்தையாய், சக்தியும், சிவனுமாய், இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகி,
உள்ளொளியாகி, உலகெலாம் திகழும் பரம் பொருளா இவன்?
ஒருவேளை அன்று எனைக் காக்க வா என முதலை அலறியபோது உடனே எழுந்துவந்த ஆதிமூலமா இவன்?
தேவதேவா! சிவனே! கண்ணா! வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! சந்திரா!
சக்தியே! வாணீ! காளீ! மாமகளே!
ஆணாய், பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!
வேதச்சுடரே! மெய்யாகிய கடவுளே!

எனப் போற்றி, வேண்டுகிறான் !

இவ்வளவு பேரையும் கூப்பிட்டு என்னதான் வேண்டுமாம் இவனுக்கு?

'அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்!
நோவு வேண்டேன்! அச்சம் வேண்டேன்! உடைமை வேண்டேன்!'


சரிப்பா! என்ன வேண்டும் உனக்கு?

நூறாண்டு வேண்டும்!
அமைதி வேண்டும்!
உன் துணை வேண்டும்!

இது போதுமா?

போதாதாம்!


வேண்டாது அனைத்தையும் நீக்கி, வேண்டியது அனைத்தையும் அருள்வதும் உன் கடனே! என்கிறான்!

ஏன் தெரியுமா?

செய்கின்ற கடமைதான் எது கரிமுகனே?
எங்களுக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறாய்?
இந்த வையத்திடம் அருள் செய்து இந்த உலகைப் படைத்து, எங்களையும் படைத்து விட்டாய்!
அது மட்டுமா?
எங்களுக்கென உடமைகளும், இன்பங்களும் நீயே தந்தாய்!
உனக்கு என்ன கைம்மாறு புரிவோம் என்று இயம்பு'
எனக் கதறுகிறான்!

அப்படி இயம்பினால் என்ன ஆகும்?
அதையும் அவனே சொல்கிறான்!

உன்னைப் புகழ்ந்து 'இயம்பினால்' அது புகழ் மறை ஆகும்.
எடுத்த வினை பயன்படும்.
தேவர்கள் எலாரும் இருபொழுதும்... ஆம்!.. பகலுக்கென சிலர்; இரவுக்கென சிலர்!..
இவர்கள் அனைவரும் வந்து அருள் செய்வர்.
கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும்
என இயம்புகிறான் பாரதி!

இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?

அடுத்த பதிவில்!

Read more...

Wednesday, April 23, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3


2-ம் பதிவு இங்கே


"இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!"


ஏன் எழுதினேன் இதை என யோசித்தேன்!

நான் யார்? எனச் சிந்தித்தேன்!

'சொல்லத் தெரியவில்லை~!
சூழ்ச்சியே செய்பவனாயிருக்கிறேன்!'

எனக்கு யார் ஆதாரம்?

பாரதியைப் புரட்டினேன்!


'சொல்லுக்கரியனாய் சூழ்ச்சிக்கரியனாய்
பல்லுறுவாகிப் படர்ந்த வான்பொருளை,
உள்ளுயிராகி உலகம் காக்கும் சக்தியே தானாம்
தனிச் சுடர்ப் பொருளை
சக்திகுமாரனை, சந்திரமௌளியைப் பணிந்து
அவன் உருவிலே பாவனை நாட்டி,
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியவனாய்,
யார்க்கும் வலியவனாய்,
யார்க்கும் அன்பனாய்,
யார்க்கும் இனியனாய்,
வாழ்த்திட விரும்பினேன்!
மனமே!
நீ இதை ஆழ்ந்து கருதி, ஆய்ந்து ஆய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து,
பின், சூழ்ந்தார்க்கேல்லாம் தேறித் தேறி,
நான் சித்தி பெற்றிடவே,
நின்னால் இயன்ற துணை புரிவாயேல்,
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்!
மனமே!
எனை நீ வாழ்த்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா!
சக்தி குமாரன் சரண் புகழ்வாயே!'

என்னை இப்படிப் பலவாறாக மாற்றி அலைக்கழிப்பது என் மனமே என்றுணர்ந்தேன்!

இந்த மனத்தை எப்படி வசப்படுத்துவது!??

மற்றவர் சொல்லுகின்ற பொய்யையெல்லாம் உண்மை என நம்பி, அலைகின்ற இந்தப் பொல்லா மனத்தை எப்படி அடக்குவது?

'வல்லப கணபதி பொற்கழலை தினந்தோறும் புகழ்ந்து' பாடினால் அவன் ஒரு வரம் தருவானாம்!

என்ன வரம்?

'கவலையும், வஞ்சனையும், கரவும், புலைமை விருப்பமும், ஐயமும் காய்ந்து எறிந்து,
என் தலை மீது என்னுடைய கணபதி தாள்மலரை சேர்த்து வானவர்க்கு ஈடான தரத்தினை எமக்கு அவன் தருவான்!'


என்பதே அந்த வரம்!

இந்த வரத்தை ஏற்று, அவன் பாதத்தை சார்ந்து நிற்க வேண்டும்!

அப்படி இருந்தால்.......?

'நிழலினும், வெயிலினும், நேர்ந்த நற்றுணையாய்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்னிலும் காற்றிலும் வானிலும்
எனக்குப் பகைமை ஒன்றின்றிப் பயம் தவிர்த்து ஆள்வான்!'

பிறகு??...

'உணர்விலே நிற்பான்!'

சரி..!!?

'ஓம் எனும் நிலையில் ஒளியாய்த் திகழ்வான்!'

அப்புறம்...?

'முக்திநிலைக்கு மூல வித்தாவான்!'

அடேடே! அவ்ளோதானா?!!

'சத்தெனத் தத்தெனச் சதுர்மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்;
ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை;
வாழும் பிள்ளை; மணக்குளப் பிள்ளை;
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே!'

என்று முடிக்கிறான் பாரதி!

அத்தோடு விட்டானா?!!!!!!!!!

'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!

அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!

எதுதான் முறையாம்?!!

[இப்படித்தான் இதுவரை வந்த 17 பாடல்களிலும், கடைசி சொல்லை வைத்தே அடுத்த பாடலைத் தொடங்கினான், இனியும் அடுத்து வரும் 23 பாடல்களிலும் செய்கிறான் என்பதை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமானது!]

[தொடரும்]

Read more...

Sunday, April 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2


முந்தைய பதிவு


..... "எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!
அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்!"....


இப்படிச் சொன்னதற்கே படிப்பவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதை உணர்கிறேன்!

இந்தப் பதிவு நான் மிகவும் மதிக்கும் ஒருவர் சொன்னதற்காக எழுதத் தொடங்கிய ஒன்று!

இதுவரை பாரதியைப் படித்தவர்க்கு இதில் புதிதாக நான் ஒன்றும் சொல்லைவிடப் போவதில்லை என நினைக்கிறேன்!

பாரதியைப் படிக்க எப்படித் துவங்கலாம், இவ்வளவு பெரிய கவிஞன் எனச் சொல்கிறார்களே, இவனை அணுக முடியுமா? என ஒரு பயத்துடன் இவனை இன்னமும் படிக்காமல் இருக்கும் ஒருவரையாவது இந்தப் பதிவுகள் ஈர்த்தால் அதையே ஒரு பெரிய வெற்றியாகக் கருதுவேன்!

இத்தொடரை வரவேற்றுப் பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

சரி!

இப்போது, "அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?" என்கிற கேள்விக்கு வருவோம்!

தனது அடுத்த பாடலிலேயே இதற்கான விடையைச் சொல்கிறான் பாரதி!

ஒரு நான்கு நிலைப்பாடுகளைச் சொல்கிறான்!

'கடமை என்றால் என்ன?'

'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இதையெல்லாம் தர வேண்டி, 'உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' என ஒரு நான்கு நிலைகளைச் சொல்கிறான்!

இதில் என்ன புதுமை? எல்லாரும் சொல்வதுதானே என்கிறீர்களா?

இங்குதான் பாரதி தன்னை மற்றவரிடமிருந்து முன்னிலைப் படுத்திக் காட்டுகிறான்!

பொதுவாக இந்த முதல் மூன்றையும் சொல்ல வருபவர்கள், தங்களது மதக் கருத்தை முற்படுத்தி வைத்தே சொல்வார்கள்!

ஆனால், பாரதி......?

'விநாயகதேவனாய், வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிறநாட்டிருப்பொர் பெயர் கூறி, அல்லா! யெஹோவா! எனத் தொழுது அன்புறும் தேவரும் தானாய், திருமகள், பாரதி, உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்"
எனச் சொல்லிகின்ற பொதுநோக்கின் மூலம் தான் யார் என்பதைக் காட்டுகிறான் பாரதி!

இத்தோடு விட்டானா?

ஏன் இதைக் கேட்கிறேன் எனவும் சொல்கிறான்!
'மணக்குள விநாயகா! வான் மறைத் தலைவா!
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்!
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே!'


தன்னைக் கட்டுதல் என்கிற சுய ஒழுக்கம் ஒன்றே இங்கு நாமெல்லாம் செய்ய வேண்டிய முதல் செயல் என்னும் பாரதியின் வேண்டலை ஒரு சில நொடிகள் தனியே அமர்ந்து சிந்தியுங்கள்!

'பழியற்று வாழ்ந்து, ஒளி பெற்று, கல்வி பல தேர்ந்து, கடமை எல்லாம் நன்காற்றி, தொல்வினைக் கட்டுகள் எல்லாம் துறக்க வேண்டுமெனில்'
...... தன்னைக் கட்ட வேண்டும்!

அப்படிக் கட்டுபவரால் என்ன செய்ய இயலும்!?? அப்படிக் கட்டுபவர்கள்தாம் சிறந்தவரா?

மேலே சொன்னது போல எல்லாம் துறந்தவர்கள் திறமை பெரிது என ஒப்புக் கொள்கிறான் பாரதி!

ஆனால்,

'இங்கு குறைந்தாரைக் காத்து,
எளியார்க்கு உணவு ஈந்து,
குலமகளும், அறம் தாங்கு மக்களும் வாழ்க என
ஒருவன் வாழ்கின்ற தவ வாழ்க்கை,
அதனினும் பெரிது!'
என்கிறான்!

சரி! இப்படி என்னால் செய்ய முடியவில்லையே என வருந்துபவர்க்கும் ஒரு வழியை உடனே சொல்கிறான்!

'தத்துவம் ஆகியதோர் பிரணவமே! நீ அஞ்சேல் எனச் சொல்லுதியே!'
என வேண்டினால் போதுமாம்!

ஆம்! 'பயப்படாதே!' என "ஓம்" என்கின்ற பிரணவத்தின் மூலப் பொருளான விநாயகன் சொன்னால் போதுமாம்!

இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!

Read more...

Wednesday, April 16, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1

"பாரதி" -- சில காட்சிகள்!



பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!

அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!

மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!

வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!

பராசக்தி அருளட்டும்!

இதோ! முதல் கருத்து!

"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்"


நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ எனப் பதறுகிறான் பாரதி!

ஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்தவன்/ள் தான்!

தன்னால் என்ன முடியும் எனத் தெரிந்த ஒரே மனிதன் அவன்/ள் தான்!

எங்கே தவறு நிகழ்கிறது/

ஏன் அவனா/ளால் தனக்கு விதித்ததை, தன்னல் முடிந்ததைச் செய்ய இயலாமல் போகிறது?

தன்னிலை குலைந்து, தன்னை மறந்து இவன் தடுமாறிப் போவது ஏன்?

பாரதி யோசிக்கிறான்.

முழுமுதற் கடவுளை யாசிக்கிறான்!

கவிதை பிறக்கிறது!

"நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்!
வாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே."

எனச் சூளுரைக்கிறான்!

'நான் செய்த பிழையெல்லாம் போதும்! இனி நீயே சரணம்! இனி நான் செய்யப்போவதெல்லாம் நின்னைப் போற்றி உன் மலர் அடிகளைப் போற்றி தமிழில் கவி செய்து பாடுதல் ஒன்றே இனி நான் மௌனத்தால் செய்யப் போவது!' என்கிறான்!

இதற்கெல்லாம் காப்பாக இனி எநீயே இருந்து காக்க வேண்டும் எனவும் அவனையே இறைஞ்சுகிறான்!

யாரை?

"கற்பக விநாயகனை!"



அனைத்துச் செயல்களுக்கும் முதல்வனாய் இருக்கின்ற கணபதியைத் தான் போற்றுகின்றார் பாரதி!

இவனைப் பணிந்தால் என்னவெல்லாம் நிகழுமாம்!?

சொல்கிறான்!

"உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம்;
விடத்தையும், நோவையும், வெம்பகை அதனையும்
துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃது உணர்வீரே!"


வேறென்ன வேண்டுமைய்யா உமக்கு?

இத்தனையும் இந்த கற்பக விநாயகனைப் போற்றிப் பாடினால் கிட்டும் என்கிறான் பாரதி!

சரி! இதெல்லாம் எதற்கு இவனுக்கு வேண்டுமாம்?..... அதையும் சொல்கிறான் உடனே!

'உன் காலை நான் ஏன் பிடிக்கிறேன் தெரியுமா..ஓய் கணபதி! அந்தத் திரு மலர்ப் பாதங்களில் என் கண்ணை ஒற்றி, பலவித நூல்களை நித்தமும் நான் படைத்து, ஒரு நொடி கூட என் செயலைத் தவறாது செய்து வந்து, என் மனத்தினை ஒருமைப் படுத்த நீ அருள வேண்டும் என்பதினாலேதான்'

கணபதி சிரிக்கிறான்!
'உனக்கு வேண்டிய வரங்களைக் கேளடா பாரதி!'

"மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்!
கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"


இதைத்தான் பாரதி உடனே வேண்டுகிறான்!

இப்படி ஏன் வேண்டுகிறான் என சிந்திக்க வேண்டும்!

அதிலும் அந்தக் கடைசி இரு வரிகள்!

"கனக்கும் செல்வம்; நூறு வயது
இவையும் நீ தரக் கடவாயே!"


இது கொஞ்சம் உதைக்கிறது!

பணத்தாசையா! உயிர் வாழும் ஆசையா!

இல்லை! இல்லவே இல்லை!

எந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்!

நான் செய்யும் நற்செயலகள் மற்றவரைச் சென்றடைய வேண்டுமெனின், என்னிடம் செல்வம் இருக்க வேண்டும்!
இதென்னவோ தற்செயலாக நான் செய்ததில்லை! இதுவே என் நிரந்தரமான செயல்பாடு என மற்றவர் புரிந்து கொள்ள நான் இதனைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்!

அதற்கு என்னிடம் பணம் இருக்க வேண்டும்! இதை செய்யும் காலம்.... ஆயுள் இருக்க வேண்டும்!

எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!

அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

Read more...

Monday, April 14, 2008

"இன்று ராம நவமி!"

"இன்று ராம நவமி! "


ஏதோ ஒரு உந்தலில் ஜெயகாந்தனின் 'சுந்தர காண்டம்' நாவலைப் படித்தேன்!
முதல் அத்தியாயம் படித்தவுடன் மேலே படிக்க முடியவில்லை!
என் மனதில் தோன்றி எண்ணங்களை இங்கு வடித்திருக்கிறேன்!

எல்லாம் வல்லவனே! என் மனம் ஆள்பவனே!
ரகுகுல நாயகனே! ராஜீவ நயனனே!

ராவணனை அழிக்கவே நீயிங்கு அவதரித்தாய்!
அப்படியே இதிகாசம் இங்கெமக்கு உரைக்கிறது!

ஆனாலும் நானிதனை அடியோடும் நம்பவில்லை!
நீ பிறந்த காரணத்தை நானுரைப்பேன்! நீ கேள்!

எம்முள் எத்தனை ராவணன் இங்கிருக்கின்றார்!
தம்மில் புரியாது தவறுகளைச் செய்கின்றார்!!

எத்தனை சீதைகள் இங்குழல்கின்றார்!
அவர்தம் கதறல்கள் காதில் விழவில்லையோ!

பாரதப் பெண்களிடை எந்த முகம் பார்க்கின்றாய்?
பரிதவிக்கும் பெண்களிடை நீ பார்க்கும் சீதை எங்கிருக்கிறாள்?

துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும்
கண்களிலே தேக்கியிங்கு வானத்தை நோக்கியபடி

அவலப் பெருமூச்செறியும் கோடானுகோடி
பாரதப் பெண்களிடையில் நீ தேடும் சீதை

எங்கிருக்கின்றாள் என உனக்கு
இப்போதேனும் தெரிகிறதோ ஓ ராமா!

தாயின்றித் தந்தையின்றி
உடன்பிறப்பாய் ஒருவருமே இங்கின்றி

உற்றார் உறவினருமே எவருமே இங்கின்றி
ஜாதியின்றி மதமின்றி குலமின்றிக் கோத்திரமுமின்றி

நாடின்றி மொழியின்றி துன்பமொன்றே தனதென்று
தனதாக்கிக் கொண்டிட்ட பலகோடி மக்களிடை

எவரையிங்கு சீதையென்று நீயிங்கு தேடிடவே
பூவுலகில் அவதரிக்க உளம் கொண்டாய் சொல் ராமா!

உணர்வின்றி ஒளியின்றி ஒருத்தருமே துணையின்றி
புணர்வொன்றே குறியாகி புரள்கின்ற மாந்தரிடை

தனக்கென்று பலமின்றி நீ வருவாய் எமைக் காப்பாய்
என நம்பி உனக்காக நிதமிங்கு வாழ்கின்ற

கணக்கில்லா சீதைகளைக் கரையேற்ற மன்ம் கொண்டு
நீ வரும் நாள் எப்போது எனக்கதனைச் சொல் ராமா!

என் மகளே நீயின்று! என் சொல்லைக் கேட்டிடுவாய்
நானுனக்கு காட்டுகின்ற மணமகனை மணமுடிப்பாய்

என்றிங்கு ஒரு ராவணன் எனையனுப்பி மனம் மகிழ்ந்தான்!
தனக்கென்றே வந்ததென இன்னொருவன் எனை முடித்தான்!

தன்னடிமை என்றெனவே எனையிங்கு சிறை பிடித்து
தனக்கெனவே கொண்டிட்டு எனையடிமை செய்திட்டான்!

என்னுடலை மாசு பண்ணி என் மானம் கெடுத்திடவே
அவனுக்கு அடிமனத்தில் அச்சமொன்றும் இருக்கவில்லை!

அவனுரிமை என்றெண்ணி என் உள்ளம் அறியாமல்
எனையள்ளிக் கொண்டிட்டான் என் கற்பைச் சிதைத்திட்டான்!

அபலையாய், அனாதையாய், ஆரும் கேளா கொத்தடிமையாய்
வாழ்நாள் முழுவதிலும் ஆயுள் கைதியாய் என்னையவன் சிறை செய்தான்!

கையிலொரு குழந்தையுமாய், கந்தலாடை பற்றியபடி இன்னும் சில குழந்தைகளுமாய்
எனை மீட்க என்று நீ வருவாயோ எனவெண்ணி எதிர்பார்க்கும் சீதைகட்கு

இதோவிங்கு நானிருக்கேன் எனச் சொல்லி வில்லெடுத்து
விடிவளிக்க என்று நீ வருவாயோ எனக்கு சொல்லு என் ராமா!

நாள்தோறும் ஏதோ ஒரு ராவணனின் கைப்பாவை
நான் ஆகிப் போனதினை நீ உணர மாட்டாமல்

ஆண்டுதோறும் பிறக்கின்றாய் அனைவரும் கொண்டாடுகின்றார்!
எனக்கதனில் மறுப்பில்லை என்றாலும் எனக்கின்னும் விடிவில்லை!

இத்தனைக்கும் நடுவினிலே நானிங்கு சுடர்கின்றேன்
எனைக்காத்து உனையெண்ணி என் நாளை வளர்க்கின்றேன்!

தாய் சுமந்து பெறும் வேளை எனையழிக்க சில பேர்கள்!
பிறந்திட்ட பொழுதினிலும் எத்தனையோ சோதனைகள்!

பை சுமந்து பள்ளிக்குச் சென்றிங்கு கற்றாலும்
பெண்ணென்ற பெயர் சொல்லி எனக்கிருக்கும் பல தடைகள்!

அத்தனையும் தாண்டிவந்து ஆளாகி நின்றாலும்
எனையடைந்து எனையழிக்க எத்தனையோ காமுகர்கள்!

இவர்களுக்கு விடை சொல்லி எனைக் காத்து தற்பேணி
நானிங்கு நின்றாலோ எனை வெல்ல பல பேர்கள்!

எல்லாரும் ராவணர்கள்! ராமனே நீயெங்கே!
எனை விடுத்து எமைக் காக்க வருகின்ற வேளை எப்போ!

நீ பிறக்கும் நாளின்றில் உனைக் கேட்கும் ஒரு வரமும்
நானிங்கு உரைப்பேன் கேள்! எனக்காக வந்துவிடு!

படுகின்ற துயர் தீர்த்து பரிசுத்தம் ஆக்கிவிடு!
பட்டதினிப்போதுமைய்யா! படமுடியாதினித் துயரம்!

இனிமேலும் பிறப்பதென்றால் எமக்காகப் பிறந்துவிடு!
அது முடியாதெனிலோ பிறப்பதை நீ நிறுத்திவிடு!


அனைவர்க்கும் ராமநவமி வாழ்த்துகள்!

Read more...

Saturday, April 12, 2008

"மீண்டும் மீண்டும் பிறப்பு!"

"மீண்டும் மீண்டும் பிறப்பு"!

'என்னங்க! எங்கே போயிட்டு வரீங்க? புது வருஷமும் அதுவுமா!' என்று என் மனைவி கேட்டார்!
ஒன்றும் பேசாமல் என் பையிலிருந்து ஒரு இலையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்!
'என்ன இது?' என்றார்!
நான் சொல்லலானேன்!
ஆற்றோரம் அமர்ந்து கால்களை ஓடும் நீரில் நனைத்தபடி அமர்ந்திருந்தேன்!

சலசலவென ஓடிய குளர்ந்த நீர் என் பாதங்களை வருடி, சிரித்தபடியே சென்றது!

தெளிந்த நீரின் உள்ளே மெல்ல நகர்ந்து கொண்டு தங்களைச் சமன்படுத்திக் கொண்டிருந்த கூழாங்கற்களை காலால் சற்று கலைத்தேன்!

உலர்ந்த சருகொன்று மிதந்தபடியே வந்து என் கால்களில் தேங்கி நின்றது!

'எங்கிருந்து வருகிறாய் பெண்ணே!' எனக் கேட்டேன்!

"நான் ஒரு பெண்ணென்பதை எப்படி உணர்ந்தாய்?" என ஆச்சரியத்துடன் வினவியது சருகு!

"தவறாக நினைக்காதே! என் பாதங்களை வருடியபடி நீ வந்து நின்றதினால் உடனே அப்படி ஒரு எண்ணம் என் மனதில் பட்டது! அவ்வளவுதான்!" சிரித்தபடியே சொன்னேன்!

"ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தன்னம்பிக்கை!" சருகும் சிரித்தது!

'அப்பாடா! தவறாக நினைக்கவில்லை இவள்! இவளுக்கும் என்னைப் போலவே இயல்பான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது!' என சற்று சமாதானமானேன்!

சருகைக் கையில் எடுத்தேன்!

ஒட்டியிருந்த ஈரத்தை என் சட்டையில் துடைத்து நீவி விட்டேன்!

சருகு நிமிர்ந்தது!

தன் அழகை மீண்டும் பெற்றது போல் ......நிமிர்ந்தது!

"என் கேள்விக்கு இன்னமும் நீ பதில் சொல்லவில்லையே! எங்கிருந்து வருகிறாய்!" என மீண்டும் கேட்டேன்!

"என் கதை சொல்கிறேன் கேள்!

சென்ற வசந்தத்தில் ஓர் நாள்!
நான் உயிர் துளிர்த்தேன் ஒரு மரத்தில்!
மெல்லிய தளிராக என்னை உயிர்த்தாள் என் அன்னை!
சிவப்பும் பழுப்பும் கலந்த அந்த நிறத்தில் நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும்!
எனக்கே என் அழகைக் கண்டு மிகவும் பொறாமையாக இருந்தது!
என்னுடன் கூடவே இன்னொரு சகோதரி!
இரட்டை இலையாகப் பிறந்தோம்!
வேண்டிய உணவைத் தந்து வேராக என் தந்தையும், அள்ளி அரவணைத்து எப்படி இருக்க வேண்டுமென என தாயும் எம்மை வளர்த்தனர்!
வசந்தம் முடியும் நேரம் என் நிறம் பச்சையாக மாறியது!
என்னில் சில மாற்றங்களை நான் உணரத் தொடங்கினேன்!
பூக்கள் சில என்னுள் பிறந்து என்னிலிருந்து மலர்ந்தன!
இப்போது இன்னமும் அழகானேன்!
என் பருவம் அனைவரையும் கவர்வதை உணர்ந்தேன்!
வண்டுகள் என்னைச் சுற்றி மொய்த்து பூவை நோட்டமிடுவதைக் கண்டு ஒரு பெருமை எனக்குள் பிறந்தது!
மகரந்தத் தேனைக் குடிக்க வந்த வண்டுகளை விரட்ட முடியாமல், பூக்களை மெல்ல அணைத்து மறைத்தேன்!
அப்படியும் ஒரு வண்டின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை!
என்னருகில் வந்து ஆசை வார்த்தைகள் பேசியது!
'நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது! நான் உன் பூவின் மீது அமரலாமா?'
நான் அதன் ஆசை வார்த்தைகளில் மயங்கினேன்!
என்னைத் திறந்தேன்!
பூவின் மீது அமர்ந்த வண்டு தேனை அள்ளிக் குடித்தது!
கூடவே ஏதோ ஒன்றையும் என்னுள் விட்டுச் சென்றது!
நான் சூலானேன்!
பூ மலர்ந்ந்து காயாகி, காய் கனியாயிற்று!
எவனோ ஒருவன் வந்து கனியைத் தட்டிச் சென்றான்!
என் மனம் துடித்தது!
என் கனியை என்னிடம் கொடு! எனக் கதறினேன்!
என்னை லட்சியமே செய்யாமல் அவன் சென்று விட்டான்!
நான் வாடினேன்!
என் அழகு குலைந்தது!
'என்னம்மா இது?' என என் தாயை வினவினேன்!

'இதுதானடி காலம் செய்யும் கோலம்!
துளிர்ப்பதும், பருவம் அடைவதும், மல்ர்வதும், சூலுறுவதும், காயாகிக் கனிந்து பின் குலைவதும் வழிவழி
நிகழும் செயல்கள்! இப்படி எத்தனையோ என் மக்கள் என்னை விட்டுச் சென்று விட்டனர்!
இதோ! இன்னும் சில காலத்தில் நீயும் செல்வாய்! உன் பணி முடிந்தது! என் பணி இன்னமும் தொடரும்!
பழையன கழிவதும், புதியன புகுவதும் வழிவழி நிகழும் செயல்கள்!' என்றாள் என் தாய்!

காற்று ஒன்று வேகமாக வீசியது!
என்னுடன் வா! இனி உனக்கு இங்கு வேலையில்லை! என்றது!

இல்லை! நான் வரமாட்டேன்! என்னிடம் இன்னும் இளமை இருக்கிறது! என் மரத்தை விட்டு வர மாட்டேன்!'
இறுக என் தாயைப் பிடித்துக் கொண்டேன்!
காற்று சிரித்தபடியே, என்னுடன் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு சென்றது!

அன்பு மிகுந்து என் தாயை அணைத்தேன்!
இனம் புரியாத ஒரு பரிவுடன் மரம் என்னை மெல்ல அசைத்தது!

குளிர்காலம் வந்தது!
பனியின் இறுக்கத்தில் என் வலு தளர்வதை உணர்ந்தேன்!
எனினும் அன்னையை விடவில்லை!
பனி உதிர்ந்து, மரம் மீண்டும் சிலிர்த்தது!
ஏதோ ஒன்று என்னிலிருந்து விலகுவதை உணர்ந்தேன்!

'எனக்கு வழி விடு அக்கா! நான் வர வேண்டும் வெளியே!' உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கெஞ்சியது!
'உனது வேலை முடிந்து போனது! இனி வருவது என் காலம்! என்னைத் தடுக்க உன்னால் முடியாது! நீயாக நகர்ந்தால் நலம்!' என்றது அந்தக் குரல்!

'என்னம்மா இதெல்லாம்! என்றேன் நான்!

'அதுதான் முன்னமேயே சொன்னேனே! பழையன கழிதலும், புதியன புகுதலும் வழிவழி நிகழும் செயல்கள்! நீ செல்லும் காலம் வந்து விட்டது! உன்னைப் பிரிதல் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! இருந்தாலும், இனி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது! நீ சென்றால் நான் மீண்டும் துளிர்ப்பேன்! இதுதான் பருவங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்! வசந்தம் ஒவ்வொரு முறையும் வரும்! உயிர்கள் மீண்டும் மலரும்! நீ முழுமையானாய்! மகிழ்வுடன் செல்! வசந்தத்தைப் போற்று!'

நான் தெளிவானேன்!
சுற்றி இருந்த அனைவரையும் அன்புடன் பார்த்துக் கையசைத்தேன்!
என்னை விடுத்தேன்!

மீண்டும் காற்று என்னை ஆதரவாகத் தாங்கியது!
'உனக்காகத்தான் காத்திருந்தேன்! நீ ஒருநாள் வருவாய் எனத் தெரியும்!' எனச் சொல்லி என்னை வருடியது!
அன்புடன் என்னை இந்த ஆற்றில் விட்டது!"

சருகு தன் கதையைச் சொல்லி முடித்தது!
எனக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது!
அன்புடன் அந்தச் சருகை எடுத்து என் சட்டைப்பைக்குள் பத்திரப் படுத்தினேன்!

மெல்ல எழுந்து நடக்கலானேன்!
வசந்தம் தன் விதைகளைத் தூவி தன் செயலை எங்கும் காட்டிக் கொண்டிருந்தது!
எதிரில் தெரிந்த மரத்தில் இரு துளிர் இலைகள் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில், என்னைப் பார்த்துக் கண்ணடித்தன!
அவைகளைப் பார்த்து உரக்கக் கத்தினேன்!

"வசந்தமே வாழ்க!"

புனரபி ஜனனம் புனரபி மரணம்
பிறப்பதும் இறப்பதும் வழிவழிவழி நிகழும்!

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரையே வருக~!
சித்திரமாய் வருக~!
சிறப்பெல்லாம் தருக~!
சிறுமையெல்லாம் ஒழிக~!
சிந்தனைகள் மலர்க~!
சினமெலாம் தவிர்க~!
சிலரிங்கு செல்வதும்
சிலரிங்கு வருவதும்
சிவமெனும் ஒருவின்
சித்தம் என்பதை
சிந்தையில் கொண்டு
சிவனைப் பணிக~!

Read more...

Thursday, April 10, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!

நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!

வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின், இறங்கி வந்து பேசியதும் பதிவாகி இருக்கிறது.

இதைக் காட்டி, அரசு தரப்பில் வாதம்.

வெளியே, க்ளாராவுக்கு பெண்ணிய இயக்கங்களின் ஆதரவு வலுக்கிறது!

"க்ளாரா குற்றவாளி அல்ல!" என்ற பலகைகளைத் தாங்கியபடி ஊர்வலம்!

நீதிமன்றத்தில், லோரா கூண்டிலேறி, கொலையுறுவதற்கு முன், சில வாரங்களாகவே டேவிட் தன்னைச் சந்திக்க வில்லை என்றும், ஹில்டன் ஹோட்டலில் இனி இந்த உறவு நமக்குள் தொடர முடியாது எனச் சொல்லி விடை பெற்றதையும் கூறுகிறாள்!

இது போன்ற வலுவான ஆதாரங்களை வைத்து அரசு தரப்பில் ஒரு பெண் வக்கீல்.

"சந்தேகத்தின் உச்சத்தில், திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு இரக்கமற்ற கொலை என வாதிடுகிறார்.

3 வாரம் விசாரணை நடக்கிறது.

ஜூரர்கள் 4 மணி நேர விவாதத்திற்குப் பின், தங்கள் முடிவைத் தெரிவிக்கிறார்கள்.

"குற்றம் சாட்டப்பட்ட க்ளாரா, அப்படியே ஒரு குற்றவாளிதான்"[Guity as charged] என்று!

தலை கவிழ்த்து, நிலை குலைந்து அழுகிறாள் க்ளாரா!

அவளது வக்கீல் அவளைத் தேற்றுகிறார்!

"இன்னமும் ஒன்றும் ஆகவில்லை. நீ டேவிட்டின் மேல் காரை ஏற்றிக் கொன்றது உண்மையே! அதைத்தான் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மேல், இன்னொன்று இருக்கிறது! அதுதான் உனக்கு விதிக்கப்போகும் தண்டனை!
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!"

ஆம்!

க்ளாரா கணவன் மேல் கொண்ட ஒரு ஆசை கலந்த ஆத்திரத்தில் மட்டுமே [Passion] இதைச் செய்தாள் என்றால், ஒரு எச்சரிக்கையுடன் அவள் விடுவிக்கப் படலாம்!

அல்லது,
அவள் மனநிலை குன்றியவர் என நிரூபிக்கப் பட்டாலும் கூட!
ஆனால், இதற்கு இவள் முன்னமேயே ஒரு மனநல நோயாளியாக இருந்தாள் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்!

க்ளாராவுக்கு அப்படி எந்தவொரு கடந்தகால சாட்சியங்கள் இல்லை!
படிப்பில் சுட்டி!
அழகிலும், புத்திசாலித்தனத்திலும் கெட்டி!
எனவே இது சாத்தியமில்லை!

இதெல்லாம் முடியாவிட்டால், குறைந்தது 20 ஆண்டு கடுங்காவல் நிச்சயம்!

இந்த நிலையில்,....,
க்ளாரா தரப்பில், டேவிட்டின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயாவது மிஞ்சட்டும் என மீண்டும் முறையிடுகிறார்கள்.

அரசு தரப்பு இதற்கும் ஒரு பதிலடி வைத்திருக்கிறது!
லிண்டா கூண்டிலேறி, தனது தாய், டேவிட் மேல் காரை ஏற்றும் முன் சொன்ன கடைசிச் சொற்களைச் சொல்கிறாள்!
கோர்ட் அதிர்கிறது!

"இப்போ நான் அவனை இந்தக் காரை ஏத்திக் கொல்லப் போறேன்!"

க்ளாரா தலை குனிந்து அழுகிறாள்.

இறுதியாக,

க்ளாராவின் வக்கீல் தனது வாதங்களை வைக்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமன விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
கை கோர்த்து இருவரும் வந்த ஒரு காட்சியைப் பார்த்த அவளால் அதைத் தாங்க முடியவில்லை.
ஆத்திரத்தில், தன் கணவன் மீது கொண்ட ஆசையில் செய்யப்பட்ட கொலை இது எனக் கருதி கருணையுடன் அணுக வேண்டுகிறேன்!'

அரசு தரப்பு பெண்வக்கீல் தனது வாதத்தைத் தொடர்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன!
கணவனை திருந்துகிறேன் எனச் சொன்னதை நம்பி இருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் திருமணத்தை ஒரு ஆலோசகர் [Counsellor]மூலம் சரி செய்ய முனைந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
விவாகரத்து கோரியிருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் குழந்தைகளை வளர்க்கத் தானே சரியானவர் என நிரூபித்திருக்கலாம்!.... செய்யவில்லை!
லோராவுடன் பேசி இதைச் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்!...... செய்யவில்லை!
இறுதியாக,
குறைந்த பட்சம், தன் குழந்தைகளுக்கு ஒரு தந்தையைத் தந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
அவள் செய்தது ஒன்றே ஒன்றுதான்!!
கொலை!
'காரை ஏத்திக் கொல்லப் போகிறேன்' எனத் தன் வளர்ப்பு மகளிடமே சொல்லிவிட்டு, அதைச் செய்தும் காட்டியவள்!
ஆம்!
க்ளாரா, தன்னை மட்டுமே எண்ணிய ஒரு சுயநலவாதி.
தான் பெற்ற குழந்தைகளைக் கூட நினைக்காத ஒரு கொடிய மனம் படைத்த பெண்தான்
இதோ இங்கே உங்கள் எதிரே நிற்கும் க்ளாரா!
அதிகபட்ச தண்டனையைத் தவிர, வேறெதற்கும் தகுதியில்லாத ஒரு பெண்!
தகுந்த தண்டனையை வழங்குங்கள்!'

அரசு தரப்பு பெண் வக்கீல் அமர்ந்தார்!

ஜூரர்களுக்கு இப்போது 2 மணி நேரமே தேவைப்பட்டது!

"அதிக பட்ச தண்டனையான 20 ஆண்டு கடுங்காவல்!"

12 ஆண்டுகளுக்குப் பின் பரோல் விசாரணைக்கு உட்பட முடியும்!

நீதி வழங்கப் பட்டது எனப் பலரும், இல்லை எனச் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதலில், க்ளாரா செய்ததைப் பற்றிய உங்கள் கருத்தையும்,
அடுத்து, நீங்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பீர்கள் எனவும் சொல்லுங்களேன்!

[முற்றும்]


தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் நன்றி!

Read more...

Wednesday, April 09, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [3]



மறுநாள் மாலை!

டேவிட் வீட்டில் இல்லை.

பதறுகிறாள் க்ளாரா!

தனது வளர்ப்பு மகள் லிண்டாவையும் கூட்டிக் கொண்டு தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்.

அந்தப் பகுதியில் இருக்கும் சில பெரிய உணவு விடுதிகளைத் தேடிச் செல்கிறாள்.

எங்கும் டேவிட்டின் காரைக் காணவில்லை!

பதட்டம் அதிகமாகிறது க்ளாராவுக்கு!

அப்போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டல் கண்ணில் பட்டது!

ஹில்டன் இன்டெர்நேஷனல்!

அவளுக்குத் திருமணம் டேவிட்டுக்கு நிகழ்ந்ததும் இதற்கு அடுத்த ஒரு இடத்தில்தான்!

ஏதோ ஒரு உணர்வு உந்த, அங்கு செல்கிறாள்.

வண்டிகளை நிறுத்தும் இடத்தில்,[Parking Lot] டேவிட்டின் கார் இருப்பதைப் பார்க்கிறாள்!

சற்றுத் தள்ளி தன் காரை நிறுத்திவிட்டு, தன் பெண் லிண்டாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே விரைகிறாள்!

வரவேற்பில் விசாரிக்கிறாள்.

டேவிட்-லோரா பெயரில் எவரும் பதிவில்லை என்ற தகவல் வருகிறது.

க்ளாராவுக்குத் திருப்தி இல்லை.

லிண்டாவைக் கூப்பிட்டு தன் தந்தைக்கு ஒரு தொலைபேசச் சொல்கிறாள்.

லிண்டாவும் அப்படியே செய்து, தனது தம்பிகளில் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு பொய்யைச் சொல்கிறாள்.

அடுத்த 3 நிமிடங்களில் ..........பதட்டத்துடன் 'தானியங்கி ஏற்றுமிடத்தில்[elevator] இருந்து டேவிட் வெளியே வருகிறான்... அந்த ஓட்டலில் இருந்து!

கூடவே கைகளைப் பிடித்தபடி லோரா!~

அவள் கண்களில் கண்ணீர்!

தன் சந்தேகம் உறுதியாகிவிட்டது எனும் நினைப்பில், க்ளாரா ஆத்திரத்துடன் இருவர் மீதும் பாய்கிறாள்.

லோரா தாக்குதலில் அடிபட்டு கீழே விழுகிறாள்.

டேவிட்டுக்கும் சரியான அடி!

இதுவெதையும் சற்றும் எதிபார்க்காத லிண்டா, "நான் உன்னை வெறுக்கிறேன்" அம்மாவை நோக்கிக் கத்தியபடியே, இருவரையும் தாக்குதலில் இருந்து தடுக்க முனைகிறாள்.

சமாளித்துக் கொண்டு எழுந்த டேவிட்,"பொதுவிடத்தில் சொன்னால் அவள் எப்படி இதை எதிர்கொள்வாளோ எனவெண்ணி ஒரு தனியறையில் இதைச் சொல்லிவிட்டு, இப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி அவசரப் பட்டுவிட்டாயே!" என வெறுப்புடன் சொல்லிவிட்டு, அடிபட்டு விழுந்ந்திருந்த லோராவை எழுப்பி, அவளை அவளது காருக்கு கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறான்.

அவசர அவசரமாக, லிண்டாவை அழைத்துக் கொண்டு, க்ளாராவும் தன் காருக்கு விரைகிறாள்.

லோராவை அவள் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, டேவிட் தன் காரை நோக்கி நடக்கிறான்.

க்ளாராவின் பென்ஸ் கார் விரைந்து வந்து அவனைத் தாக்குகிறது!

அவன் மேல் முழுதுமாக ஏறி அவனைத் தாண்டிச் சென்று, நின்று, அவனை 3-4 முறை சுற்றிச் சுற்றி வருகிறது.

அவனது துடிப்பு முழுதுமாக அடங்கிய பின்னர், க்ளாரா இறங்கி வருகிறாள்.

'நீ எனக்கு இல்லையெனில் எவருக்குமே இல்லை' எனச் சொல்லி மீண்டும் காருக்குத் திரும்புகிறாள்.

இதற்குள், நடந்த செய்தி காவல்துறைக்குச் சென்று, அவர்கள் வந்து க்ளாராவைக் கைது செய்கிறார்கள்.

வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.

டேவிட்டின் பெற்றோர்கள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயும் இல்லாமல் போகக் கூடாதே என அஞ்சி, அவள் மேல் வழக்கு தொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இப்போது, இது ஒரு அரசு வழக்கு.

யாரும் துணையில்லை அவர்களுக்கு.

ஆனால், கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது!

4,500 பவுண்டு எடையுள்ள ஒரு சாதனத்தைக் கொண்டு டேவிட்டைக் கொலை செய்ததாக க்ளாரா மீது வழக்கு பதிவு செய்யப் படுகிறது!

[தொடரும்]

Read more...

Tuesday, April 08, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]



முதல் பதிவு இங்கே!
2.
தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.

குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!

இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.

அவளது திறந்த பார்வையும், பழகும் விதமும், சிரிக்கும் அழகும் டேவிட்டுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது!

இருவரும் பழகத் தொடங்கினர்.

வெளியே உணவருந்தச் செல்வது, சினிமா, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது எனத் தொடங்கி, உடலுறவு வரைக்கும் வந்துவிட்டது.

இவர்கள் பழக்கம் க்ளாராவுக்குத் தெரிய வாய்ப்பில்லாதபடி அவளது தொழிலில் அவள் மூழ்கி இருந்தாள்.

ஆனால், க்ளாரா மூலம் வேலையில் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

டேவிட்டிடம் சென்று, 'நீ சொல்லுகிறாயா? இல்லை நானே சொல்லிவிடட்டுமா?' என எச்சரிக்கை விடுத்தாள்.

டேவிட்டுக்கு அப்போதுதான் தான் செய்து வந்த தவறின் தீவிரம் தெரிய வந்தது.

சாதாரண வேடிக்கையாகவும், ஒரு மாறுதலாகவும் தொடங்கிய ஒரு விஷயம் இவ்வளவு தீவிரமானதை உணர்ந்து வருந்தினான்.

மறுநாள், க்ளாரா குளியலறையில் இருந்தபோது, அவளிடம் நிகழ்ந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.

ஆனால்,...........

க்ளாராவுக்கு இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி!

தனது கனவுக்கோட்டை தகர்ந்ததாக உணர்கிறாள்.

டேவிட்டுடன் மிகப் பெரிய சண்டை போடுகிறாள்.

எனக்கும் அந்த லோராவுக்கும் என்ன வித்தியாங்கள் கண்டாய்? என ஒரு பட்டியல் போட்டுத் தர வற்புறுத்துகிறாள்!

டேவிட்டுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி!

இருந்தாலும், எழுதித் தருகிறான்.

கனிவு, அன்பு, பரிவு, பாசம், பழகும் தன்மை, கவரும் சிரிப்பு, பொறுமையாகக் கேட்கும் தன்மை..... லோராவிடம்!

அன்பு, ...... ஆளுமை, தனது துணைக்கென நேரம் ஒதுக்க முடியாமல் தொழிலில் ஈடுபடுதல், குழந்தைகளைக் கூட கவனிக்கமுடியாமல் போதல்..... க்ளாராவிடம்!

க்ளாராவுக்கும் தனது குறைகள் புரிய.... ஒப்புக் கொள்ள முடியாமல் ஒரு அதிர்ச்சி!

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள், லோராவினுடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குள், தான் டேவிட்டுக்கு ஏற்றமாதிரி ஆகி விடுவதாகவும் சொல்லிவிட்டு,

அவன் பதிலுக்குக் கூட காத்திராமல், உடனடியாக ஒரு அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம் எனச் சேர்ந்து தன்னை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

இடையில், ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடி, டேவிட்டைக் கண்காணிக்குமாறும் ஏற்பாடு செய்கிறாள்.

அவர்கள், இவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை என்னும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.

குடும்ப வாழ்க்கை, தொழில், இவையெல்லாம் இன்னும் அதிகமாகக் குலைவதைக் கவனித்த டேவிட், குழந்தைகளை இப்போது அதிகமாகக் கவனிக்கத் தொடங்குகிறான்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, வீட்டிலேயே இருக்கிறான்!

இன்னுமா நீ லோராவுடனான உறவை முறிக்கவில்லை? என்ற க்ளாராவின் கேள்வி அவனை உலுக்க, தான் இதுவரை லோராவைச் சந்திக்கவே இல்லை என்றும்,

நாளை மாலை அவளைச் சந்தித்துச் சொல்ல அவளுக்கும் சொல்லியிருப்பதாகவும் சொல்லுகிறான் டேவிட்!

க்ளாரா நம்பவில்லை.

தன்னை ஏமாற்றுகிறான் டேவிட் என உறுதியாக நம்பினாள்.

மறுநாள் மாலை!

[தொடரும்]

Read more...

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]

அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்!
1.

க்ளாரா ஒரு துணிச்சலான பெண்!

வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!

நினைத்தபடியே பல் மருத்துவம் படித்து ஒரு முன்னணி பல் மருத்துவராகவும் ஆனாள்.

தொழில் தொடங்குவதற்கு குடும்ப வாழ்க்கை அவசியம் ஆனால், அது பிக்கல் இல்லாத ஒன்றாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினாள்.

அப்போதுதான் அவள் கண்ணில் பட்டான் டேவிட்.

அவனும் ஒரு பல் மருத்துவர் தான்.
திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தபின் மனைவியை இழந்தவன்.

க்ளாராவின் பார்வை டேவிட் மேல் பட்டது.

பார்வைக்கு அழகாகவும் இருந்தான் டேவிட்.

துணைக்குத் துணையும் ஆயிற்று; உடனே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை; தொழிலுக்கும் உதவியாய் இருப்பான்!

தன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளும் இருந்ததைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து, டேவிட்டுடன் நெருக்கமானாள்.

டேவிட் குடும்பத்தினருக்கும் க்ளாராவைப் பிடித்துப் போயிற்று.

திருமணமும் நடந்தது.

டேவிட்டின் பெண் லிண்டா க்ளாராவை அம்மாவாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைந்தது.

ஒரே ஊரில், இரு வேறு இடங்களில் தனித்தனி சிகிச்சை நிலையங்களும் தொடங்கப் பெற்றன.

க்ளாராவின் கைராசியால் அவளது தொழில் விரைவில் பிரபலம் அடைந்தது.

ஆனால், டேவிட்டின் நிலைமை அப்படி ஆகவில்லை.

தொழில் மந்தம்!

க்ளாரா இப்போது, குடும்பத்தை மட்டுமல்லாமல், டேவிட்டின் தொழிலுக்கு சேர்த்தே உதவி செய்ய வேண்டிய நிலைமை.

க்ளாரா இதை எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், மனம் தளரவில்லை.

தனது தொழிலில் வந்த நபர்களுக்குத் தேவையான பல் மருத்துவ சிகிச்சையில் டேவிட்டுக்கும் பங்கு வருமாறு செய்து, தனது சில வாடிக்கையாளர்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

வாரத்திற்கு 3 முறை டேவிட்டையே தனது 'க்ளினிக்'கிற்கே வரவழைத்து சில சிகிச்சைகளை அவனையே செய்ய வைத்தாள்.

இப்போது டேவிட்டின் தொழிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

விரைவிலேயே, வரும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல், இன்னும் சில இடங்களில் நிலையங்களைத் தொடங்கி, மெலும் சில மருத்துவர்களை நியமித்து, கவனிக்க வேண்டிய அளவிற்கு, வளர்ந்து விட்டது!

5,000 சதுர அடி பரப்பில் பெரிய வீடு, 'பென்ஸ்' கார், வசதியான வாழ்க்கை, அள்வான குடும்பம்!

க்ளாராவுக்கு இப்போது குடும்ப ஆசை!

தனக்கும் குழந்தைகள் வேண்டுமென விரும்பினாள்.

டேவிட்டுக்கும் இதில் சம்மதமே!

சீக்கிரமே கர்ப்பமானாள்!

அதுவும் இரட்டைக் குழந்தைகள்!

க்ளாரா, டேவிட்டின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

லிண்டாவும் இப்போது 14 வயதுப் பெண்!

தனது இரு தம்பிகளின் மேல் அளவிலாப் பாசம் கொண்டவள்!

டேவிட்டின் பெற்றோர்களும் தங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

தொழிலும் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.

இப்போதுதான், விதி சிரித்தது!


[தொடரும்]

Read more...

Friday, March 21, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

சமீபத்தில் சிவராத்திரி குறித்து ஒரு பதிவு, 'சிவமாய் நிறைவாய்' என எழுதினேன். அந்த சமயம் எனது இனிய நண்பர் திரு. குமரன் மூலம் ஒரு ஒளிப்படம் கிடைத்தது. இலங்கையில் இருக்கும் திருக்கோணமலையின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலயக் காட்சிகள் அடங்கிய தொகுப்பு அது. அதில் வந்த ஒரு காட்சி என் கருத்தில் பதிந்தது. அருணையார் எழுதிய திருப்புகழ் ஒன்று போர்டில் எழுதப்பட்டுப் பதிக்கப் பட்டிருந்தது. அந்த புகழ் என்ன எனப் பார்க்கும் ஆவலையும் தூண்டியது. மிக அற்புதமான பொருள் அடங்கிய பாடல் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்ற, எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கேட்கும் பாடலை, பங்குனி உத்திர நன்நாளில் இங்கு இடுவதில் மகிழ்கிறேன். அனைவரும் ஓதி எண்ணியது எண்ணியாங்கு எய்த என் முருகனை இறைஞ்சுகிறேன்.

************** பாடல் **************

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
******************************************************************************************


சற்று பெரிய பாடல்! சந்தத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்கள் இப்பாடலில் வருவது ஒரு புதுமை!வழக்கம் போல பின் பார்த்து முன்![நீட்டி முழக்காமல்]!!

**************** பொருள் *****************

"மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே"



மலைக்கு நாயக! சிவகாமி நாயகர்
திருக்கு மாரனே! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாது ஒரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே!

மலையிருக்குமிடமெல்லாம் தானிருக்கும்
இடமெனக் கொண்டு தலைவனாய்த் திகழ்பவரே!
சிவன் உமை எனும் பேரிறையின் செல்வக்குமரனே!
கண்ணினின்று பொறிவிட்டு ஆறு பாலனாய்
ஆற்றினில் தவழ்ந்து பொய்கையடைந்து
ஆறு மாதர் முலைப்பாலுண்டாலும்
மாறுபாகம் கொண்ட உமையவளின் அணைப்பினால்
ஆறுமுகமாய் ஆனவனே!
அழகினுக்கே அழகுசெய்யும் வள்ளிக்குறமாதின்
ஒப்பற்ற மனவழகும் பொருந்திய தன்மையில்
உள்ளம் பறிகொடுத்து உவப்பாய் விரும்பும் தலைவனே!


"வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே"



வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வரு முருகோனே

தவத்திரு யோகிகள் வசிட்டர், காசிபமுனிவர்,
பெருமைமிகு அகத்தியர்,, இடைக்காடர், நக்கீரர்
இவர் அனைவரும் இயற்றிய பாடல்களிலெல்லாம்
தனிப்பெரும் பொருளாக இருக்கும் முருகனே!

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே"

நிலைக்கும் நான்மறை மகத்து ஆன பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆர் கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே!


என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும்
பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலை என்கின்ற
திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!

" நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே."

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடி தூளது ஆ எறி
நினைத்த காரியம் அநுகூலமே புரி பெருமாளே.


பிறவிகள் ஏழென்று சொல்லிடுவார்
ஒவ்வொன்றும் ஓர் கடலென்றும் சொல்லிடுவார்
வேல் விடுத்து கடல் மாய்த்து
சூர் என்னும் அசுரனையும்
சூறையாடிக் கொன்ற வேலன்
பிறவிப் பெருங்கடலையினையும்
தூளாகிப் போகுமாறு செய்யவல்ல
பெருமைபெற்ற முருகோனே!
நீயென்றன் மனத்தினில் எண்ணிய
கருமங்கள் யாவினையும் நிறைவேற்றித்
தரவல்லவன் எனப் பணிகின்றேன்!


"விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி"

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் அணிப்பூணும் ஆகவே
மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே மயல் ஊறி


தன் உடலையே விலைக்கு விற்கின்ற விலைமாதர்கள்
அதனை மிகவும் அழகூட்டவென மாலைகளும்
மேகலைஎன்கின்ற இடுப்பிலணியும் ஆபரணமும்
அழகிய ஆடைகளும், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும்
அழகுற அணிந்து மினுக்குகின்ற அவரிடத்தே ஆசைவைத்து
காமமெனும் கடலினில் மூழ்கி அந்த மயக்கத்தில் மிகவுமே திளைத்து


"மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்"

மிகுத்த காமியன் என, பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பது ஆகியே, உழைத்தே விடாய்படு கொடியேனை


காமத்தில் மிகவுமே விருப்பமுள்ளவன் இவன் என
உலகத்தில் உள்ளோர் என்னைப் பார்த்து சிரிக்குமாறு
ஒரு உடலை எடுத்து, அதனால் துன்பமடைந்து
அந்த உடல் மீதே வெறுப்புற்று, மீண்டும் மீண்டும்
இந்த உலக வாழ்விலேயே உழன்று [காதல்]
தாகம் அடைகின்ற கொடியவனாகிய என்னை


"கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைஇத்தேற வேசெயு மொருவாழ்வே"

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொ[ல்]லி கடைத்தேறவே செ[ய்]யும் ஒரு வாழ்வே!

என்னறிவு கலக்கமுற்றுப் போகும்படி செய்து
ஒன்பது வகையான கூடுகள் வழியே
விளைகின்ற மலங்களை வெளிக்கிடும்
இந்த உடலாகிய கூட்டுடன் சேர்ந்து
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
இவைகளினால் நான் தவிக்காமல்
உன்னுடைய புகழினைப் போற்றுகின்ற
தமிழ்க்கவிதைகளைச் சொல்லி
எனது ஆன்மா இவ்வுடற் கூட்டினின்று
கடைத்தேறும்படி செய்யவல்ல
நிகரற்ற வாழ்வாக அமைந்த பொருளே!

"கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்"

கதிக்கு நாதன் நீ உனைத் தேடியே புகழ்
உரைக்கும் நாயேனை அருட்பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்!

என் ஜென்மம் கடைத்தேற இருக்கின்ற ஒரே தலைவன் நீயே!
நினைப் போற்றி புகழ் பாடுகின்ற நாய் போன்றவன் யான்!
நினது அருட்பார்வையை என்மீது செலுத்தி
நினது திருவடிகளில் என்னையும் ஏற்றுக்கொண்டு
இவ்வுலகிலேயே மிகவும் சிறந்ததான
தாயின் கருணையினை ஒத்த அருளை
எனக்கு நீ தந்தருளவேண்டும் முருகப்பெருமானே!
******************************************************


திருக்கோணமலை இலங்கையில் உள்ள ஒரு சிவத்தலம். தக்ஷிண கைலாயம் என வழங்கப்படும் மூன்று தலங்களில் ஒன்று. மற்ற இரு தலங்கள், திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி.
கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோபுரநிலையில் உள்ள ஓரிடத்தின் பெயர்.
**************************************************************


வேலும் மயிலும் வாழ்க !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க !!!
*******************************

Read more...

Wednesday, March 05, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!

"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்!
[ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை மயிலைக்குப் போகும்போது தானும் வருவதாகச் சொல்லியிருந்தார்!! ]

"ஸார் பறைஞ்சது செரிதன்னே! ஞான் கூட ஆயாள் எப்போ வரும், எங்கனே வரும்னு தெரியாம, பலசமயம் குழம்பிப் போயுண்டு!" எனச் சொல்லி நாயரும் சிரித்தார்!

'சரி! அவர் வரும் வரை நாயர் ஸ்பெஷல் மசால் வடை, டீ சாப்பிடுவோம்!" என நான் சொன்னதும் நாயர் சுறுசுறுப்பானார்.

ஒரு ஆட்டோ பலத்த உறுமலுடன் வந்து நின்றது!

"வந்து ரொம்ப நேரமாச்சா நண்பா! ஒரு பிரச்சினைக்கு மத்தியஸ்தம் பண்ணக் கூப்பிட்டிருந்தாங்க! அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு! இன்னா நாயர்! நம்ம ஆளுங்களை நல்லா கவனிச்சுக்கினியா?' எனக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பக்கத்தில் இருந்த மஞ்சூராரைக் கவனித்தவன், "ஓ! இவர்தான் நீ சொன்ன உங்க தலைவரா? முத்தமிளுக்கே சொந்தம்னு சொன்னியே! அவர்தான் இவரா? இன்னா தலீவா! செங்கோல்லாம் எடுத்துக்கினுதானே வந்திருக்கீங்க?" எனக் கண்ணடித்தான்!

மஞ்சூரார் சற்றுக் குழப்பத்துடன், மன்னார் ஏதோ கிண்டல் செய்கிறான் என மட்டும் புரிந்து கொண்டு, என்னை நோக்க,
நான் அவரைப் பார்த்து சிரித்தபடியே, " பதறாதீங்க சுந்தர்! மன்னார் எப்பவுமே இப்படித்தான்! எல்லாருடனும் உடனே நட்பு பாராட்டி, சொந்தமாகப் பாவிக்கத் தொடங்கிடுவான்! அவன் கேட்ட செங்கோல் உங்க பேனாவைத் தான்! இன்னிக்கு உங்களுக்குத்தான் வேலை! நீங்கதான் எழுதிக்கணும் அவன் சொல்வதை! உங்களுக்குத்தான் ஏதோ மேட்டர் சொல்லப் போறான்னு நினைக்கிறேன்!" என்றதும் சமாதானமாகி, பேப்பர் பேனாவை சிரித்துக் கொண்டே எடுத்தார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்!

"செங்கோன்மை" -- அதிகாரம் 55

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை." [541]

இப்ப ஒரு குழுமத்துக்கு தலையா நீங்க இருக்கீங்கன்னு சங்கர் சொன்னான். ரொம்ப நல்ல விசயம். நல்லாவாவும் நடத்துறீங்கன்னும் சொன்னான். கேக்கவே சந்தோசமா இருக்கு. ஒரு தல இன்னா பண்ணனும்னு இதுல ஐயன் சொல்றாரு.
ஏதோ ஒரு தலைப்புல சில பேரு வந்து ஏடாகூடமா எளுதறாங்கன்னு வைச்சுப்போம். அதை எளுதறது யாருன்னு தக்கபடி விசாரிச்சு, தெரிஞ்ச ஆளு, புது ஆளுன்னு பாக்காம, நடுநிலைமையா ஆராய்ஞ்சு பாத்து, அததுக்கு தகுந்த தீர்ப்போ, தண்டனையோ கொடுக்கறதுதான் சரியான வளின்னு சொல்றாரு!

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி." [542]

இந்த ஒலகத்துல இருக்கற உயிருங்கல்லாம் மானத்துலேருந்து பெய்யற மளையை நம்பித்தான் வாளுது! அதேபோல, ஒரு தலீவன் இன்னாமாரி தன்னோட மக்களை நடத்தறான்னு அவனோட செங்கோலைப் பாத்துகிட்டே இருக்காங்களாம். பாராட்டறதுக்குப் பாராட்டி, தட்றதுக்குத் தட்ட, உன்னோட செங்கோலு, அதாம்ப்பா.. பேனா.. தயங்காம இருந்தாத்தான் அல்லாமும் நல்லா நடக்குமாம்!

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." [543]

நல்லாப் படிச்சவங்க கூட, இந்த இடத்துல நியாயமா நடத்துவாங்க நம்மளைன்னு ஒரு நம்பிக்கையோட வந்து எளுதறதுக்குக் கூட ஒன்னப் போல தல நடத்துற விதத்துலதான் இருக்கு. இப்ப, எங்க சீதாம்மா, ஜப்பார் அய்யா போல ஆளுங்கள்லாம் முத்தமிள்ல ரொம்ப சிறப்பா எளுதறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாத்துக்கும் காரணம் நீங்க நடத்தற விதந்தான்னு இதைப் புரிஞ்சுக்கணும்! சரியா!

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு." [544]

ஒரு குளுமத்துல இருக்கற ஆர்கிட்டயும் விரோதம் பாராட்டாம, அன்பா அவங்களை நடத்திகிட்டுப் போனா, அவுக அல்லாரும் 'ஆஹா! நம்ம மஞ்சூரார் போல உண்டா!'ன்னு உங்க கூடவே நிப்பாங்க! இது ரொம்ப முக்கியமா கவனத்துல நீங்க வைச்சுக்கணும்!

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு." [545]

ஒரு ராசா சரியான வளியில ஆட்சி பண்ணினான்னா, பெய்யற மளை கூட மொறை தவறாமப் பெய்யுமாம். விளையற பொருளு கூட நல்லா விளையுமாம்! இது எப்பிடி எனக்குப் பொருந்தும்னு தானே கேக்க வரீங்க! பெய்யற மளைன்றது சீதாம்மா போல ஆளுங்க ரெகுலரா எளுதறது! விளையற பொருளு... நல்ல சமாச்சாரமெல்லாம் நிறைய வந்துகிட்டே இருக்கறது! ரெண்டும் முக்கியம்! புரியுதுங்களா!;))

"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்." [546]


சண்டை போட்டு நாலஞ்சு பேரை விரட்டறது வீரமில்ல! செய்யற காரியத்த பாரபட்சமில்லாம பொதுவா ஒரு ராசா... நீங்க கூட மஞ்சூர் ராசான்னுதான் பேரு வைச்சிருக்கீங்களாமே!:))))... பொதுப்படையா ஒரு ராசா செஞ்சா அதான் பெரிய வீரமாம்!

"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்." [547]


ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!

"எண்பகத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்." [548]

நல்ல விஷயத்தை ஒருத்தர்.. இப்ப நம்ப சீதாம்மா மாதிரின்னு வைச்சுப்போமே... அவங்க வந்து சொல்ல வராங்க! அவங்களை எப்படி நாம வரவேற்கணும்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க! இதை வில்லங்கம் இல்லாம நான் பார்த்துக்கறேன்னு அவங்களுக்கு தெம்பு கொடுக்கணும். அப்ப, எவனாவது வந்து, ஏடாகூடமா கேள்வி கேட்டு, திசை திருப்பினா, அதைக் கண்டுக்காம விட்டா, அப்ப, அந்தப் பதிவு மட்டுமில்ல, தலையா நிக்கற உங்களோட பேனாவும்... செங்கோலும்... வளைஞ்சு போயிருமாம்! இதைக் கவனத்துல வைச்சுக்கங்க சாமி!

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்." [549]

ஒங்க குளுமத்துல வேந்தன்னு ஒருத்தர் இருக்காருன்னு சங்கர் சொன்னான். ரெண்டு வார்த்தைல தன்னோட கருத்தை அடுத்தவனுக்கு அது புரியுதோ இல்லியோ.. சொல்லிட்டுப் போயிடுவாராம். அதாவது, அடுத்தவனையும் வருத்தாம, அதே சமயம் அவ மனசிலியும் பதியுற மாரி! இதுனால, வேந்தனுக்கும் சங்கடமில்லை! சொன்னவனும் புரிஞ்சுப்பான்! இப்பிடி நடந்துகிட்டா, தலைக்கு நல்லது! நான் சொல்லை! ஐயன் சொல்றாரு!

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்." [550]


இவ்ளோ சொல்லியும் ஒருத்தன் கேக்கலைன்னு வைச்சுக்குவோம்! அப்போ இன்னா பண்ணணும்! தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது, இடையிலே மொளைச்சிருக்கற சில களைங்களை எல்லாம் வெட்டிப் புடுங்கி எறியற மாதிரீன்னு ஐயன் சொல்றாரு!

"இன்னா! நான் சொன்னதைக் கேட்டு தெகைச்சுப் போயிட்டீங்களா? இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் நடத்திகிட்டு வர்றதா சொல்லியிருக்கான் நம்ம தோஸ்த்து! அதுனால, இதுவரைக்கும் பண்ற மாரியே பண்ணிகிட்டு வாங்க! சீதாம்மா போல ஆளுங்க ஒங்க பதிவுல எளுத வந்ததே ஒரு பெரிய விசயம்! அவுங்களைப் போல ஆளுங்க தொடர்ந்து எளுத நீங்கள்லாம் ஒதவி பண்ணனும்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்! இன்னாப்பா சங்கர்! நான் சொன்னதுல எதுனாச்சும் தப்பு இருக்கா?" என்று சிரித்தான் மயிலை மன்னார்!

"நீ என்னிக்காவது தப்பா சொல்லி இருக்கியா? நீ சொல்றதை முழு மனசோட ஆமோதிக்கிறேன்! நாயர்! இன்னும் ரெண்டு வடை!" எனச் சொன்னேன்!

"ஒங்காளு மெய்யாலுமே பெரிய ஆளுதான்யா!"......டீயை உறிஞ்சியபடியே என் தோளில் கை போட்டர் மஞ்சூரார்!

"எல்லாப் பெருமையும் ஐயனுக்கே" என்றபடி ஆட்டோவில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!

Read more...

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது!

நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 250-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP