Saturday, October 06, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 11

முந்தைய பதிவு இங்கே!

9. "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். [463]



அவசர அவசரமாக கந்தனைத் தள்ளிக் கொண்டே, அந்த இளைஞன், 'அவரு உன் பணத்தைப் புடுங்கப் பாக்கறாரு. நீ வா சீக்கிரமா!'
என்றபடி வீதிக்கு வந்தான்.

'அப்படியா? ரொம்ப நன்றிங்க! அவரைப் பாத்தா அப்படித் தெரியலியே! நல்லவர் மாதிரில்லே இருந்திச்சு' என்றான் கந்தன்,
தன் பணம் பிழைத்ததே என்ற நிம்மதியுடன்!

"இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி! இப்ப நா மட்டும் இருந்ததால நீ தப்பிச்சே. சரி, சரி வா!
போயி டிக்கட்டு எடுத்துருவோம் சென்னைக்கு. ரிசர்வு பண்ணினாத்தான் வண்டில ஏற முடியும்." என்றபடி ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கந்தனும் கூடவே நடந்தான்.

ரிசர்வேஷன் கவுண்டரை அடைந்ததும், 'நீ இங்கியே லைன்ல நில்லு. இதோ வாறேன்' என்று கந்தனை விட்டு அகன்றவன், சற்று நேரத்தில்,
அவசர அவசரமாக ஓடி வந்தான்.

'ஒன் நல்ல நேரம்; எனக்குத் தெரிஞ்சவர்தான் உள்ளே இருக்காரு. டிக்கெட்டுல்லாம் இன்னிக்கு ஃபுல்லாம். ஸ்பெசல் கோட்டாவுல
ஒரு ரெண்டு டிக்கட்டு இருக்காம்.
காசை எடு. நா போயி வாங்கியாறன்' என்றான்.

'எவ்ளோ வேணும்?' எனப் பையைத் திறக்க ஆரம்பித்தான் கந்தன்.

'எவ்ளோன்னு தெரியல. நீ லைன்ல நிக்க வேணாம். அதோ அந்த பெஞ்சுல போயி ஒக்காரு. நா டிக்கட்டை வாங்கிகிட்டு இதோ வந்திடறேன். ம்ம்.. சீக்கிரமா எடு!'
என அவன் பணப்பையை வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் ஒரு கதவைத் திறந்து கொண்டு ஓடினான்.

'எவ்வளவு நல்லவனா இருக்கான் இவன்!' என எண்ணியபடியே, கந்தன் பெஞ்சில் சென்று உட்கார்ந்தான்.

சற்று நேரம் ஆயிற்று.

'ஏன் இவ்ளோ நேரமாவுது டிக்கட் வாங்கியாற?' என நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.

இளைஞனை எங்கும் காணவில்லை.

எழுந்து அந்த இளைஞன் சென்ற கதவு வழியே சென்று பார்த்தான்.

ம்ஹூம்! அங்கும் அவன் இல்லை!

மனதில் ஒரு தவிப்பு வரத் துவங்கியது.

'அப்படியெல்லம் ஒன்றும் இருக்காது! பணத்தை எடுத்துகிட்டு ஒண்ணும் ஓடியிருக்க மாட்டான். போன எடத்துல என்ன சோலியோ?
இன்னும் கொஞ்ச நேரம் பாப்பம்' என எண்ணிக் கொண்டே மீண்டும் பெஞ்சில் சென்று அமர்ந்தான்.

ஆனால், மனதில் தோன்றிய அவநம்பிக்கை அவனை விட்டு அகலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வலுவாகியது.

நண்பகல் ஆனது.

கந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனத் தெளிவாகப் புரிந்தது!

அழுகை அழுகையாய் வந்தது.

'நேத்து வரைக்கும் நானுண்டு என் ஆடுங்க உண்டுன்னு இருந்தேன். ஊருலியும் தாயில்லாப் புள்ளையாச்சேன்னு என்கிட்ட அன்பா இருந்தாங்க.
செல்லி கூட அடிக்கடி வந்து பேசும். நானும் சந்தோசமா இருந்தேன். இப்பம், இந்த ஆண்டவன் என்னிய ஏமாத்திட்டாரு!
என் ஆடுங்களையும் என்கிட்டேருந்து புடுங்கிட்டு,இப்பம் பணத்தையும் பறி கொடுத்திட்டு, வெவரம் புரியாத ஊருல அநாதையா நிக்க வெச்சிட்டாரு!
இனிமே என்னால ஆரையும் நம்ப முடியாது! புதையலும் கிடைக்கப் போறதில்ல! இப்ப என்ன பண்றது?' என வருந்தினான்.

சாமி மேலயும், அந்தப் பெரியவர் மேலயும் கோவம் கோவமா வந்தது.

கையில வேற எதுனாச்சும் இருக்கான்னு, தன் துணிப்பையைத் திறந்து பார்த்தான்.ஒரு நாலு முழ வேட்டி, ஒரு துண்டு, மகாபாரதப் புத்தகம்,
கூடவே அந்தக் கிழவர் கொடுத்த அந்த இரண்டு கற்கள்!

இனம் புரியாத நிம்மதி பிறந்தது கந்தனுக்குள்.

3 ஆடுகள் கொடுத்து வாங்கிய அந்த கற்களை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்தான்.

தங்க வில்வமாலை அணிந்த அந்தப் பெரியவரைத் தொடுவது போல ஒரு உணர்வு!

இதை விற்று ஊருக்குத் திரும்பி விடலாம் என நினைத்தான்.

தன்னை ஏமாற்றிய இளைஞன் சொன்ன ஒரு உண்மை மட்டும் நினைவுக்கு வந்தது.

....."இந்தக் காலத்துல எவனையும் நம்பக் கூடாது தம்பி!".....

கூடவே சிரிப்பும் வந்தது.

கற்களை பத்திரமாக ஒரு துண்டில் சுற்றி வைத்தான்.

ஓட்டல்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

இப்போதுதான் அவர் சொன்னதின் பொருளும் உறைத்தது.

தன்னை எச்சரிக்கவே அவர் அப்படிச் சொன்னார்; நான்தான் அவரை நம்பாமல் அந்த இளைஞன் பின்னால போயிட்டேன்.

நானும் எல்லாரையும் போலத்தான்.

இந்த உலகத்தை நான் நினைக்கற மாதிரியே பாக்கறேன். அது எப்படி இருக்குன்றதை கவனிக்காமலியே!

அவன் கைவிரல்கள் அந்தக் கற்களை வருடின.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,...
தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

......."கருப்பு, 'சரி' ....வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ,
அப்போ,இந்தக் கல்லுங்க உதவும். கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு.".......


பெரியவரின் சொற்கள் மீண்டும் ஒலித்தன.

இந்தக் கற்கள் அவர் சொன்னது போலவே செய்யுமா?

சோதனை செய்து பார்த்து விடலாம் என முடிவெடுத்தான்.

[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10

முந்தைய பதிவு இங்கே!

8. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். [517]



மதுரை ஜங்ஷன்!

கந்தன் வந்த பாஸஞ்ஜர் வண்டி அவனை அங்குதான் இறக்கி விட்டது.

அமைதியான கிராமத்தில் தன்னிச்சையாகத் திரிந்த கந்தனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.

இவ்வளவு பரபராப்பான ஒரு இடத்தை இதுவரை தன் வாழ்நாளில் கண்டதே இல்லை.

சாமான்களைத் தூக்கிச் செல்லும் போர்ட்டர்களும், எதையெதையோ விற்றுக் கொண்டிருக்கும் ஆட்களும், அடுத்தவரைப் பற்றி சற்றும் லட்சியம் இல்லாமல், இடித்துத் தள்ளிக் கொண்டு, முண்டியடித்து முன்னே செல்லும் மனிதக்கூட்டமும்,நெரிசலும் அவனுக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணியது.

கைப்பையில் இருந்த பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

வயிறு பசித்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தான்.

கூட்டம் அதிகமில்லாத ஒரு சின்னக் கடையாகப் பார்த்து நுழைந்தான்.

"வாங்க தம்பி! உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க?" அன்பான குரலில் கடைக்காரர் வரவேற்றார்.

குளித்து, தலைவாரி, நெற்றி நிறைய விபூதி பூசி, பெரிய குங்குமப்பொட்டு வைத்த முகம்.
அடர்த்தியான முறுக்கு மீசை.
வெள்ளை வேட்டி, அரைக்கை கதர்ச் சட்டை.

கல்லாவுக்கு மேலே பிள்ளையாரும் முருகனும் அழகாக இரு பக்கமும் சிரித்திருக்க, நடுவில் மீனாக்ஷி கையில் கிளியோடு அருள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மேஜை மேல் ஒரு சிறிய அழகான நடராஜர் சிலை.

ரெண்டு இட்லி, ஒரு காப்பி எனச் சொன்னான்.

வட்டமான தட்டில், வாழை இலை அதே அளவுக்கு வெட்டப்பட்டு, அதன் மேல் சூடாக இரண்டு இட்டலியும், சட்னி, சாம்பார் பக்கத்தில் ஊற்றி, அவன் முன்னே வைத்தார்.


'சாப்பிடுங்க தம்பி! காப்பி வருது!' என்றார் சிரித்த முகத்துடன்.

கந்தனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உணவைப் பார்த்ததும்.

இன்னும் கொஞ்ச நாள்ல புதையல் இருக்கற இடத்துக்குப் போயிறலாம். மார்ல தங்க மாலை போட்டிருந்த கிழவர் பொய் சொல்லியிருக்க மாட்டார்என்ற ஒரு நம்பிக்கை மனதில்.

சாப்பிட்டுக் கொண்டே, அவர் சொன்ன நல்ல சகுனம் எதுனாச்சும் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"தம்பி ஊருக்குப் புதுசா?" என ஒரு குரல் பின்னாலிருந்து வர, 'ஆகா. சகுனம் போல!' என நினைத்தபடியே குரல் வந்த திசையில்திரும்பினான்.

கட்டம் போட்ட லுங்கியும்,பனியன் தெரிகிற மாதிரி ஒரு மல் ஜிப்பாவும், கழுத்தில் சுற்றிக் கட்டிய ஒரு கர்ச்சீப்புமாய் ஒரு இளைஞன்!

'ஆமாங்க! நாகர்கோயில் பக்கம் ஒரு கிராமம்' என வெள்ளந்தியாகச் சொன்னான், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.

'என்ன சோலியா வந்திருக்கீஹ?' எனப் பேச்சைத் தொடர்ந்தான் அந்த இளைஞன்.

'சென்னைக்குப் போகணும். அதுக்கு முன்னால கொஞ்சம் சாப்பிட்டுட்டு போலாமேன்னு வெளிய வந்தேன். மத்தியானத்துக்கு மேலதான் வண்டியாம்' என அவனிடம் சொல்ல ஆரம்பித்தவன், உடனே சற்று உஷாராகி, புதையலைப் பற்றி இவனிடம் சொல்ல வேண்டாம்னுமுடிவு செய்தான்.

'சொன்னா, இவனும் அதுல பங்கு கேப்பான். இல்லாத ஒண்ணுல பங்கு தராதேன்னு அந்தப் பெரியவர் வேற சொல்லியிருக்காரு.' என எண்ணி, தன் புத்திசாலித்தனத்தை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டான்.

'எப்படி அங்கே போவணும்னு உனக்குத் தெரியுமா?' என அந்த இளைஞன் வினவினான்.

'ரெயில்ல ஏறினா, கொண்டு போயி விடப் போறான். இதுல தெரிய என்ன இருக்கு?' என அவனை மடக்கினான் கந்தன்!

'அதெல்லாம் சரித்தான்! அங்கன எறங்கி, பொறவால எங்க போவணும்னு தெரியுமா?' என பதிலுக்கு அவனை மடக்கினான் இளைஞன்.

கந்தனுக்கு குழப்பம் வர ஆரம்பித்தது.

'இவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு. மெட்ராஸ் பக்கத்துல இருக்குன்னு தெரியுமே தவிர, மஹாபலிபுரத்துக்கு எப்படிப் போவணும்னு தெரியாதே!'என எண்ணியவன், அந்த இளைஞனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

இவர்கள் பேசிக்கொள்வதை ஓட்டல்காரர் கவனிக்க ஆரம்பித்தார்!

'சென்னை இங்கேருந்து முன்னூறு மைல் தொலவுல இருக்கு. அது இந்த ஊரைப் போல பத்து பங்கு பெருசு! அதுல நீ போக வேண்டிய எடம் எங்கே இருக்கோ? அங்கே ஆளுங்கள்லாம் ரொம்ப மோசமானவனுக! ஒன்னைப் போல அறியாப்புள்ளைங்களை சுளுவா ஏமாத்திருனுவாங்க!காசு வேற நெறைய செலவளியும். பணம் எம்புட்டு வெச்சிருக்கே?' என்றான் இளைஞன்.

சட்டென இப்படி ஒருகேள்வி வந்ததும், கந்தன் கொஞ்சம் தயங்கினான்.

.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......

கிழவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது கந்தனுக்கு.

பையில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞனிடம்.

ஓட்டல்காரரும் எட்டிப் பார்த்தார் அதை!

'எலே! இங்கே வா நீ!' என அந்த இளைஞனை அழைத்தார்.

அவனிடம் தணிந்த குரலில், ஆனால், சூடாக எதுவோ பேசினார்.

இளைஞன் திரும்பி வந்தான்.

'இந்தாளு சுத்த மோசம். நம்மள சந்தேகப்படறாரு. நாம போவலாம் வா' என்றான்.
கந்தனுக்கு நிம்மதியாயிருந்தது.

எழுந்தான்.

பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில்,'அவனை நம்பாதே! நல்லவனில்ல அவன்' என்றார் ஓட்டல்காரர்.

[தொடரும்]


*************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9

முந்தைய பதிவு இங்கே!




7. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின். [666]



"ஓ! இவர் நிஜமாவே ராஜாதான்! திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார்! " என்று எண்ணினான் கந்தன்.

சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.

"இந்தா! இதை வெச்சுக்கோ!" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.

ஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்!

"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,
இந்தக் கல்லுங்க உதவும்.


கேக்கறதைச் சரியாக் கேளு.

ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.
இருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.

இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!

ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!

இப்போ கிளம்பு!

அதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.

ஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.


ஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு
பையனை அனுப்பி வெச்சான்.


பையனும் ஊரு ஊரா சுத்தினான்.

எவனுக்கும் தெரியலை!

கடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

இங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.

அந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.

ரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.

என்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.

சந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.

அந்தாளு சிரிக்கறான்.

'அது கிடக்கட்டும்! அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா! அதுக்கு முன்னாடி, இந்தா!
இந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ" என அனுப்பி வைத்தான்.

அப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்!

"என்ன? எல்லாம் பார்த்தியா? சலவைக்கல்லு ராமரைப் பார்த்தியா? மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா? தங்க மீனெல்லாம் பார்த்தியா?"
என அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி!

பையனுக்கோ ஒரே வெட்கம்!


'இல்லீங்க! எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை!' என அசடு வழிந்தான்.

இந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது! நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா!'
என மீண்டும் அனுப்பி வைத்தான்!

இப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்!

'எல்லாம் பாத்துட்டேங்க!' என்றான்.

'நான் கொடுத்த எண்ணை எங்கே?' என்றான் முதலாளி!

அப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை!

'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'

கந்தனுக்குப் புரிந்தது!


புதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.

அதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது!

கிழவர் எழுந்தார்!கந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.

அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்!

ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்!
*************************



'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.

ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.

அதோ! அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.

'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு! என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்!' கிழவரின் வாய் முணுமுணுத்தது!

ரயில் கிளம்பியது.

தன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.

'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்!
*******************


[தொடரும்]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"

இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!

முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்

இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!

:))))

முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, October 02, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 8






முந்தைய பதிவு இங்கே!




6. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்." [505]

சரி, படிக்கலாம் என புத்தகத்தை மீண்டும் பிரித்தான் கந்தன்.

ஆனால், மனம் அதில் செல்லவில்லை.

அந்தக் கிழவர் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.

அவர் சொன்னதின் உண்மை அவனை பலமாகத் தாக்கியது.

எவ்வளவு சரியாக அவர் சொல்லியிருக்கிறார் என உணர்ந்தான்.

எழுந்தான்.

அவன் கால்கள் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தன.

டிக்கட் கவுண்டரில் இருந்தவர், "எங்கே போகணும் தம்பி?" என்றார்.

"மெட்ராஸுக்குப் போவ எப்ப ரெயிலு?"

"இங்கேருந்து நேராப் போக முடியாது. ஒரு ரயில் பிடிச்சு ராமேஸ்வரம் போகணும். அங்கே போற அடுத்த ரயில் வர்ற நேரந்தான். பத்து ரூபா பணத்தை எடு." என்றார்.

'இன்னிக்கு இல்லை. நாளைக்கு வரேன்" என நகர்ந்தான்.

"போறான் பாரு! வேலையத்தவன்! பணமில்லை போல!" எனச் சிரித்தார் அவர்!

கந்தனுக்கு துக்கமாய் வந்தது.

'அம்மா சொன்னதைக் கேட்டு, இதுவரை ஆடுகளைப் பார்த்துக் கொண்டு, மானமாய் வாழ்ந்தாச்சு. இப்போ போய் ஏதோ ஒரு கனாவுக்கு
அர்த்தம் கேக்கப்போய் ஆளாளுக்கு என்னென்னமோ சொல்லி, நம்ம மனசைக் கலைச்சு, ஒருத்தி இல்லாத பணத்தை இப்பவே புடுங்கப் பாக்கறா! இன்னொருத்தர்
இருக்கற ஆடுங்களைப் புடுங்கப் பாக்கறாரு.இதெல்லாம் தேவையா எனக்கு? இல்லாத புதையலுக்காக இருக்கற ஆடுங்களையும் தொலைக்கணுமா?
இதோ! இந்த ஆடுங்க, எனக்கு சொந்தம்; அதுங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும்; அதுங்க என்னோட பேசும்; இதை விட்டுட்டு,
கனாவுல கண்ட புதையலை நம்பி இதையெல்லாம் தொலைக்கணுமா? ஒண்ணும் புரியலியே எனக்கு!

ஆனா, அதே சமயம், அந்தப் பெரியவரு,
"உன் உள்மனசு என்ன சொல்லுதோ, அதை நம்பு. அப்போத்தான் உலக ஆத்மா உனக்குத் துணையா வரும். எப்போ வரும்; எப்பிடி வரும்னு
தெரியாது;ஆனா, நிச்சயமா வரும்"
அப்படீன்றாரு!


அப்பா, ஆத்தா இல்லை எனக்கு. என்னை நம்பி ஆரும் இல்லை இங்கே.
ஆடுங்க ஒண்ணும் சதமில்ல எனக்கு! அதுங்களுக்கும் நான் சதமில்லை. எப்ப வேணும்னாலும் நாங்க ஒர்த்தரை ஒர்த்தர் விட்டு விலகலாம்...
விலகமுடியும்! ஆனா, இந்தப் புதையல்...? என்னால மறக்க முடியும்னு தோணலை. அப்போ... இதுதான் என்னோட நிஜம்!
கனவு இல்லை! நாளைக்கு அவரைப் பார்க்கணும்! அவர் கேட்ட ஆடுங்களைக் கொடுப்பேன்.அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்!

காற்று இப்போது சுகமாக வீசியது!

கந்தனின் முகத்தை வருடியது!

ஒரு புத்துணர்ச்சி பிறந்தது அவனுள்!

ஆம்! எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

இந்தக் காற்றைப் போல!

இந்த ஆடுகள்... செல்லி... இந்த ஊர்.... எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது!

என் கனவு... எனது நிஜம்!

அதை நான் காணுவேன்!

வீடு நோக்கி உற்சாகமாகத் திரும்பினான் கந்தன்!
*************


மூன்று ஆடுகளோடு மறுநாள் கந்தன் அங்கு வந்தான்.

" எனக்கே ஆச்சரியமாயிருக்கு! எப்பிடி சொல்றதுன்னே தெரியலை. நேத்து நான் வீட்டுக்குப் போனபோது, என்னோட அத்தை மகன் காத்திருந்தான் !
என்னமோ தொழில் பண்ணப் போறேன்னு சொல்லி, ஒண்ணரை டஜன் ஆடுங்களை என்கிட்ட வாங்கிட்டுப் போனான்!
இப்போ இதோ, நீங்க கேட்ட இந்த மூணு ஆடுங்கதான் மிச்சம் இருக்கு என்கிட்ட!அதை நான் ஓட்டிகிட்டு வந்திருக்கேன் உங்களுக்குக் கொடுக்க!
சரிதானே!" என அப்பாவித்தனமாய்க் கேட்டான்.

"அது அப்படித்தான் நடக்கும்! அதான் உலக ஆத்மா செய்யும்!" என்றார் கிழவர்,
"அதைத்தான் ஆரம்ப அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."
எனச் சொல்லிக் கொண்டே ஆடுகளை ஒரு பார்வையிட்டார்.

ஒரு கால் ஊனமாய் இருந்த அந்த ஆட்டைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.

"புதையல் எங்கே இருக்கு?" கந்தன் ஆவலுடன் கேட்டான்.

"சென்னைக்குப் பக்கத்துல, மஹாபலிபுரம்ன்ற ஊருல! அங்கே கல்லுலியே செஞ்ச கோவில்லாம் கூட இருக்கு! கல்யானை கூட இருக்கும். அங்கேதான் உன் புதையல் இருக்கு!"

கந்தனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!

இதையேதானே அந்தக் கிழவி ஒரு பைசாகூட வாங்கிக்காம சொன்னா. இந்த ஆளு 3 ஆட்டைப் புடுங்கிட்டாரே! ஏமாந்திட்டோமோ? என
எண்ணினான்.

கிழவர் பேசினார். "இந்தப் புதையல் ஒனக்குக் கிடைக்கணும்னா, உன் கண்ணுக்கு எதுர்ல தெரியற சில நல்ல சகுனங்களைப் பாக்கத் தெரிஞ்சுக்கணும்.
ஆண்டவன் எல்லாருக்கும் தனித்தனியா ஒரு வழி வெச்சிருக்கான். எப்படிப் போவணும்னும் சில அடையாளங்களை விட்டிருக்கான்."

ஒரு அழகிய பட்டாம்பூச்சி எங்கிருந்தோ வந்து கந்தன் முன் பறந்தது.

கந்தனுக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது.

ஆத்தா அடிக்கடி சொல்லும்..
'பட்டாம்பூச்சிங்கல்லாம் நல்ல சகுனம்டா ராசா! சாமிகிட்டேருந்து நல்ல சேதி கொண்டு வருது'.

"ஒங்க ஆத்தா சரியாத்தான் சொல்லியிருக்காங்க" என்ற கிழவரின் குரல் அவனைத் தூக்கிவாரிப் போட்டது! 'நாம நினைச்சது எப்படி இவருக்குத்
தெரிஞ்சுது?' என!

கிழவர் தன் மேல்துணியை லேசாக விலக்கி, உள்ளிருக்கும் சட்டைப்பைக்குள் கையை விட்டார்.

தங்க ஒளி மீண்டும் மின்னியது!

[தொடரும்]
****************************

அடுத்த அத்தியாயம் திங்கள் காலை[IST] வரும்!

Read more...

Sunday, September 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

முந்தைய பகுதி இங்கே!



5. "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்" [971]






சட்டென நிமிர்ந்தான் கந்தன்!

இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?

ஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,
"ஏதோ, தேவையானது இருக்கு."
எனச் சொன்னான்.

"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது"
என்றவரைப் பார்த்து,

'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.

"தோ! நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே! எனக்கு ஒண்ணும் புரியலை.
என் புஸ்தகத்தைக் கொடுங்க! நான் போவணும்" என்றான்.

'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்"
என்றான் கிழவன் அமைதியாக!

உறைந்து போனான் கந்தன்!

'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட! இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்
பாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,

கிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.

கிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.

மார்பில் ஒரு தங்க ஒளி!

இலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.

சரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்!

கந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.

அங்கே.....

கந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன!

"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா? நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு!" எனச் சிரித்தான் கிழவன்!

'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்?' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.

'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு! நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு
வெச்சுப்போமே! சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே
தெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு ! தான் இன்னாவா ஆவணும்,
அதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,
ஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு
அவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'

கந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.

'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,
இந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.
ஆகா!இத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக!



கொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட
ஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு
கிளம்புவானுங்க! இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு!"

இன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,



"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.
இதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா?" என அவநம்பிக்கையோடு கேட்டான்.

'ஆமா! அது மட்டுமில்ல! கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே
இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.



கூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!
நீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.

"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு? சரி!....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு?" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்!

திகைத்துப் போனான் கந்தன்!

......."கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே"...........


வாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.

'அதெப்படி ஒங்களுக்குத் தெரிஞ்சுது?' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது!

"அதை விடு! அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு! அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்
வேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்!
வயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான்! நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.
ஆனா, அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே
கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை." என நிறுத்தினான்.


"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்டான் கந்தன்.


"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே! அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே! அதான்!" என்றான் கிழவன்.


'ஓ! அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ?' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.


அவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், "இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்!என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்! ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்!


இப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.அவனுக்கா ஒரே கோவம்!வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றார் கிழவர்.


'அதெல்லாம் சரி! என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"


"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்!"
கிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.


"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்" என்றார்.


'இல்லே! அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்...." என இழுத்தான் கந்தன்.


'அது அந்தக் கிளவியோட! எனக்கு என்ன வந்திச்சு அதுல? பரவாயில்லை! அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்!


"நாளைக்கு இதே நேரம், இதே எடம்! உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா! நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்!


[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6


முந்தைய பகுதி இங்கே!

4. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." [377]



கிழவி சொன்னதை அசைபோட்டுக் கொண்டே வழியில் இருந்த மற்ற கடைகளைப் பார்த்துக் கொண்டும், சில பொருட்களை வாங்கிக் கொண்டும் கந்தன் சந்தையில் சற்று நேரம் சுற்றினான்.

அப்படிச் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இங்கு வருவோர், போவோர் எல்லாரும் அவனுக்கு அதிகம் தெரியாதவர்கள்!

சிலரை அவ்வப்போது பார்த்தாலும், மிக நெருக்கமாக எவருடனும் பழக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கில்லை!

அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.

நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.

அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!

அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.

அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!

சட்டெனச் சிரிப்பு வந்தது கந்தனுக்கு!
கூடவே கோபமும் வந்தது!
செல்லியையும் காணவில்லை.
வயிறு பசிக்க ஆரம்பித்தது.

அருகில் இருந்த பலகாரக் கடைப் பக்கம் சென்று, சோறு வாங்கிக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து, சாப்பிட்டுக் கொண்டே,
விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினான்!

'எப்ப படிச்சாலும் இந்த வாயுல நுழையாத பேருங்களை எல்லாம் நினைவுல வெச்சுக்கவே முடியறதில்ல!' என வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே
படிக்கும் போது,


'தம்பி ஏதோ படிக்கறாப்புல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஒரு வயதானவன்.

செல்லியைப் பார்க்க முடியாமல் போன கடுப்பில் இருந்த கந்தனுக்கு, இந்த ஆளின் வருகை எரிச்சலூட்டியது.

'அதான் தெரியுதில்ல' எனச் சொல்லிக் கொண்டே அவனை ஒதுக்கி மேலும் படிப்பது போல பாவனை செய்தான்.

கிழவன் விடுவதாயில்லை.

'சாப்ட்டு ரெண்டு நாளாச்சு! கொஞ்சம் அரிசி சோறு கொடேன்' எனக் கெஞ்சவே, அரை மனதோடு, தன் சாப்பாட்டு இலையைப்
பாதியாகக் கிழித்து, ஒரு பகுதி சோற்றை அதில் தள்ளி, 'இந்தா. சாப்பிடு!' என அவனுக்கு அளித்தான்.

'என்னா புஸ்தகம் அது?' ஒரு வாய் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, கிழவன் தொடர்ந்தான்.

'அதான் சோறு குடுத்தாசில்ல? இன்னும் எதுக்கு என்னிய தொந்தரவு பண்றே?' எனக் கேட்க வாயெடுத்தவனுக்கு,
அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..."பெரியவங்க ஆராயிருந்தாலும், மரியாதையா நடந்துக்கோ"!

'ஆமா! இதான் படிக்கறேன்' என்றபடி புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.... படிக்க முடியாமல் அவர் இடத்தைக் காலி பண்ணிடுவார்
என நினைத்து!

"ம்ம்ம்! இதுவா?" என்றபடி சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, "நல்ல புஸ்தகம் தான். ஆனா படிக்கக் கொள்ள எரிச்சலா இருக்கும்"
என்றவுடன் கந்தனுக்கு ஒரே அதிர்ச்சி!

இந்தாளுக்கு படிக்க மட்டுமில்ல, இந்தப் புத்தகத்தையும் படிச்சிருக்காரு என்ற உண்மை புரிய, அவர் மேல் ஒரு மதிப்பு வரத் துவங்கியது.

"வேற எதுலியும் சொல்லாத பெரிய விசயம் எதுவும் இதுல சொல்லிறலை. ஒலகத்துல எவனுக்கும் தன்னோட லட்சியம் எதுன்னு தெரியறதில்ல
அப்படீன்றதைத்தான் இதுவும் சொல்லுது. அது மட்டுமில்ல.இந்த ஒலகத்துல இதுவரைக்கும் சொன்ன மஹா பெரிய பொய்யைத்தான்,
ஒவ்வொர்த்தனும் நம்பறான்னு இது முடியுது" என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்!

அதென்ன உலக மகா பொய்யி? என்றான்.

"அதுவா? ஒவ்வொருத்தனும், அவனவன் வாழ்க்கையில ஒரு கட்டத்துல, போராடிப் போராடிப் போயி, அதையும் மீறிகிட்டு தனக்கு நடக்கறதை பொறுத்துக்க முடியாம,
எல்லாம் விதிப்படி நடக்குது, விதி எனக்கெதிரா சதி செய்யுதுன்னு முடிவு பண்ணிடறான். அதான் மிகப் பெரிய பொய்யி!"


"கொளப்பறீங்களே சாமி!"

"என்னா சொல்ல வரேன்னா, தோல்வியைக் கண்டு தொவண்டு போயிடறான். மேலே தொடராம விட்டுர்றான். அதுக்கு விதி மேல பழியைப் போட்டுடறான். அதான் பொய்யின்னு சொல்றேன்."

'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன்

ரொம்ப நல்லது! அப்பத்தான் நீ நெனச்ச மாரி பல ஊருக்கும் போவ முடியும். இல்லியா?"

"நான் நினைக்கறதை இவர் கரெக்டா சொல்றாரே" என்று எண்ணிய கந்தன், கொஞ்சம் மரியாதையோடு,
"அய்யாவுக்கு எந்த ஊரு?" என வினவினான்.

"நமக்கு எல்லா ஊருந்தான்" என்றான் கிழவன்!

"அதெப்படி? எல்லா ஊருக்கும் வேணுமின்னா போவலாம் . ஆனா, எதுனாச்சும் ஒரு ஊருலேர்ந்துதானே வரணும் யாரும்?" என அவரை
மடக்கினான் கந்தன்.

"அப்டீன்றியா? அப்போ சரி. எனக்கு ஊரு சிதம்பரம்னு வெச்சுக்க"

சிதம்பரம் என்ற பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிராத கந்தன், அதை வெளிக்காட்ட விரும்பாமல்,


'ஓ! சிதம்பரமா? அங்கே ஆளுங்கள்லாம் எப்படி?' என அமர்த்தாலாக கேட்டான்.

'ஆளுங்களா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க, அவங்க அவங்க சண்டையை விடாமப் போட்டுகிட்டு!' எனப் பிடி கொடுக்காமல் கிழவன் சொல்ல,பேச்சை மாற்ற எண்ணி,

'அங்கே நீங்க என்ன பண்றீங்க?' என்றான்.

'நான் என்ன பண்றேனா? நல்லாக் கேட்டே போ! நாந்தான் சிதம்பரத்துக்கு ராசா!' என்று ஒரு போடு போட்டான் கிழவன், சிரித்துக் கொண்டே!

'சரியான பைத்தியம் போல! இவருக்கு என்னோட ஆடுங்க எவ்ளவோ மேலு. அதுங்க இது மாரி உளறாது' என மனதுக்குள் எண்ணியபடியே
மீதி சாப்பாட்டை முடிக்க ஆரம்பித்தான்.

பெரியவர் விடுவதாயில்லை.

"என் பேரு கூத்தன்! உம்பேரு கந்தன் தானே! அது சரி.....எவ்ளோ ஆடு வெச்சிருக்கே நீ ?" என்றார்!


[தொடரும்]
********************

அடுத்த பதிவு இங்கே!






Read more...

Saturday, September 29, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

முந்தைய பகுதி இங்கே!






3. "அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்." [96]


"உள்ளே வாங்க தம்பி! இப்படி குந்துங்க! கையி பாக்கணுமா? ரூவால்லாம் அப்பறம் பேசிக்கலாம்! சாஸ்தி இல்ல! வாங்க வாங்க!"
என அவனை வரவேற்றபடியே, விரித்திருந்த பாயைக் காட்டி அதில் உட்காரச் சொன்னாள் அந்தக் கிழவி.

"இல்லே! அதுக்கெல்லாம் நான் வரலை! புதுசா இருக்கேன்னு பாத்தேன். அவ்ளோதான்" என்றவாறு இழுத்த அவனை அன்புடன்
பார்த்தாள், கிழவி.

"சும்மா வா ராசா! நீதான் இன்னிக்கு மொதப் போணி! முட்டத்துலேர்ந்து இதான் எனக்கு மொதத் தடவை இந்த சந்தைக்கு வர்றது!
நீ ஒண்ணும் தர வேணாம். சும்மா கையக் காட்டு. சரியாச் சொன்னேன்னா அப்பால நா கேக்கறதைக் குடு!"
என்றவாறே அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.

அப்படியே ஒரு கோலை எடுத்து, அவன் வலது கையைப் பார்த்தாள்.

"அடேங்கப்பா!" என ஒரு குரல் கிளம்பியது, அவளிடமிருந்து.

கந்தனுக்குள் ஒரு இனமறியா பயம் தோன்றியது.

"கையெல்லாம் ஒண்ணும் பாக்க வேணாம்" என எழத் துவங்கினான்.

"ஆமாமாம்! கை பாக்க வரலை நீ. உனக்கு வர்ற கனாவைப் பத்தி என்னா ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தே!"

கிழவியின் சொற்களைக் கேட்டதும், மந்திரம் போல உட்கார்ந்தான், கந்தன்!

"ஒனக்கு எப்பிடித் தெரியும் ஆத்தா?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.

"கனாவெல்லாம், சாமி நம்மளோட பேசறது. நம்ம பாசைல பேசினா, அது என்னன்னு சொல்லிட முடியும்.
ஆனா, சில சமயம் நம்மளோட பேசாம, நம்ம ஆத்மாவோட பேசும் சாமி! அது ஒனக்கு மட்டுந்தான் புரியும்.

அதுக்கு அர்த்தம் சொல்ல என்னால முடியாது. சரி, அது என்ன ஏதுன்னு பாக்கலாம். அதுக்கு முந்தி நான் சொல்றதுக்கு நீ என்ன தரணும்னு
இப்போவே பேசி முடிச்சிருவோம்." என்று கிழவி சொன்னவுடன்,


"ஆஹா! கிழவி நம்மகிட்ட பணம் கறக்க முடிவு பண்ணிட்டா! சாக்கிரதையா இருக்கணும்"
என மனதுக்குள் முடிவு செய்து கொண்டு,

"ஒரே ஒரு கனவு இதுவரைக்கு ஒரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு! அது என்னான்னு சொல்றேன். கேட்டுக்கோ.

நான் என் ஆடுங்களை மேச்சுகிட்டு இருக்கேன். அப்போ ஒரு சின்னக் கொளந்தை வந்து, என்னோட ஆடுங்களோட சிரிச்சுகிட்டே விளையாடுது.
சரி, கொளந்தை தானேன்னு நான் அத ஒண்ணும் சொல்லலை. விளையாடிட்டு இருக்கற கொளந்தை, திடீர்னு என்னோட ரெண்டு கையையும்
பிடிக்குது.
அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் ஒரு புது எடத்துல இருக்கோம். அங்கே நெறய கோவில்லாம் இருக்கு!

கல்லுல செஞ்ச யானை கூட இருக்கு. பக்கத்துலியே கடலும். அந்தக் கொளந்த, .......வயசுல்லாம் தெரியலைன்னு சொல்றேன்ல!....
அது சொல்லுது,நீ இங்கே வந்தியானா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும். இதோ... இங்கதான்..." எனச் சொல்லிகிட்டே இருக்கையில,
சட்டுன்னு முளிப்பு வந்திருச்சு.... ஒவ்வொரு தடவையும்!....... இதுக்கு என்ன அர்த்தம்?
சொல்லு. சரியாச் சொன்னியானா,
துட்டு எவ்ளோ தரலாமின்னு பேசுவோம்" என அமர்த்தலாகச் சொன்னான் கந்தன்.

கிழவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வாயிலிருந்த வெற்றிலை பாக்கைத் துப்பிவிட்டு, கொஞ்சம் தண்ணி குடித்தாள்.

மறுபடியும், ஊறின பாக்கைக் கடித்துக் குதப்பி ஒரு வெற்றிலையைக் கிள்ளி, நிதானமாகச் சுண்ணாம்பைத் தடவினாள்.

நாலாகக் கிள்ளி அதை வாயின் இடது பக்கம் அடக்கி,பொறுமையாக மென்றாள்.

கூடவே, கொஞ்சம் கட்டைப்புகையிலையும் வெட்டிச் சேர்த்தாள்.

கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.

'செல்லியை வேற பார்க்கவில்லை இன்னும்' என்ற எண்ணமும் கூடச் சேரவே, கிழவியைப் பார்த்து,

" இந்தக் கனாவுக்கு என்ன அர்த்தம்?
தெரியுமா, தெரியாதா. சொல்லு ஆத்தா! எனக்கு சோலி இருக்கு"
எனக் கேட்டான்.

"அட! பொறுப்பா! ரொம்பவே அவசரப் படறியே! என்னா மாரி கையி இது! சரி! நீ எனக்கு ஒண்ணும் தரவேணாம் இப்ப! ஆனா, ஒரு கண்டிசன். புதையல் கிடைச்சதும் அதுல பத்துல ஒரு பங்கு எனக்குத் தரணும் நீ!
சம்மதமா?"

கடகடவெனச் சிரித்தான் கந்தன்.

"அப்பாடா! அப்போ இப்ப ஒண்ணும் தர வேணாண்ற! சரி, கனாவுக்கு அர்த்தம் சொல்லு" என ஒரு நிம்மதியுடன் சொன்னான்.

"மொதல்ல, எனக்கு சத்தியம் பண்ணிக் குடு, பத்துல ஒரு பங்கு தருவேன்னு சொல்லு. கனாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்"
என மீண்டும் கிழவி வற்புறுத்தவே,

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆவலில், "ம்ம்! சரி, சரி! நீ சொல்லு!"
என்றவுடன் கிழவி ஆரம்பித்தாள்....




"இது நான் முன்ன சொன்னமாரி, ஆத்மாவோட பேசற கனா இல்லை. நமக்கெல்லாம் புரியற ஒரு கனாதான். ஆனா, சொல்லப்போற விசயம்தான்ரொம்ப சிக்கலானது! அதுக்குத்தான் அந்த பத்துல ஒரு பங்கு கேக்கேன். சரியா!.... கவனமாக் கேட்டுக்க!நீ உடனே கிளம்பி அந்த எடத்துக்குப் போவணும்.சென்னப்பட்டணம் பக்கத்துல இருக்கு அந்த எடம். அப்பிடி ஒண்ணு இருக்கான்னு எனக்கு தீர்மானமா தெரியாது. ஆனாக்க, ஒரு கொளந்தை வந்து சொல்லிச்சுன்னா, அது கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கணும்.அங்கே ஒனக்கு நிச்சயமா புதையல் கிடைக்கும். நீயும் பெரிய பணக்காரனா ஆகப் போறே!"


கந்தனுக்கு எரிச்சல் வந்தது!

'இதைக் கேட்க இங்கு வரணுமா? அதுதான் கனவில் வந்து விட்டதே. கிழவி ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லையே'என எண்ணியபடியே,

"என் நேரத்தை இதுல செலவளிக்கறதா உத்தேசம் இல்லை" என்றவாறே எழ ஆரம்பித்தான்.


அவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழவி தொடர்ந்து பேசலானாள்.

"அதான் சொன்னேன்ல! இது கொஞ்சம் சிக்கலான கனான்னு! சுளுவா இருந்தா சொல்லியிருப்பேன்ல? கை பாக்கறது முகராசி பாக்கறதுல்லாம்கூட கத்து வெச்சிருக்கேன்! இரு" என்றதும்,



கிழவி சமாளிக்கிறாள் போல என நினைத்து, "அப்போ அந்தக் கோயிலுக்கு நான் போகலைன்னா, ஒனக்கு ஒண்ணும் தரவேண்டியதில்லைதானே"என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.


"ஆமாமாம். சரி, நீ புறப்படு! ஒரு வரும்படியும் இல்லாம இன்னிக்கு முதப்போணி ஆயிருக்கு! பொளப்பைப் பாக்கணும். நா சொன்னதை மட்டும் மறந்திராதே! " என, கிழவி அவனை அனுப்பிவைத்தாள்.

[தொடரும்]

***************************

அடுத்த அத்தியாயம்!

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4

முந்தைய பகுதி இங்கே!




2. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு." [335]


செல்லி அவனுக்குத் தெரிந்த பெண்தான்!

ஒரு 12-14 வயசிருக்கும்.

பள்ளியில் அவனோடு கூடப் படித்தவள்.

'அஞ்சாம் கிளாஸோட பொட்டைச் சிறுக்கிக்கு படிப்பெல்லாம் போறும்'னு வீட்டில் சொல்ல, அவளும் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

எப்பவாவது சந்தைக்கு வரும் போது அவனைப் பார்த்து அன்புடன் சிரிப்பாள்.

"நல்லா இருக்கியா செல்லி?" "ம்.. நீ...?" இவ்வளவுதான் அவர்கள் பேசிக் கொள்வது.

போனவாரம் பார்த்தபோது, கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "அப்ப இன்னும் நீ படிக்கிறியா என்ன?"
என வெகுளித்தனமாகக் கேட்டாள்.

"வாத்தியார் குடுத்தாரு. பாரதக் கதை! பொளுது போகச்சொல்லி படிக்கறேன்."

"ஆடு மேக்கறவனுக்கு படிப்பு இன்னாத்துக்காம்?" எனத் தொடர்ந்தாள்!

செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.

ஆனால், கேட்டது செல்லியாயிற்றே!

அவளைப் பார்த்து சிரித்தபடியே சொன்னான், "சார்தான் சொன்னாரு. நெறயப் படிக்கணுமாம். அல்லாரையும் பாக்கணுமாம்.
அது மட்டுமில்ல செல்லி, நா இப்படியே இங்கியே இருப்பேன்னு நெனைக்காதே! நான் நம்ம ஊரையெல்லாம் தாண்டி, பட்டணம்லாம் போவேன்!
நெறய ஊரைப் பாக்கணும் எனக்கு!" என கண்களில் ஒரு ஒளி தெரிய அவன் சொன்னதைக் கேட்டதும்,

"தோ பார்றா! தொரை சீமைக்குப் போவப் போறாராம்! அப்டீன்னா எங்களைல்லாம் மறந்திருவேன்னு சொல்லு" எனச் செல்லியும்
உற்சாகமாகச் சீண்டினாள்.

"சேச்சே! உங்களையெல்லாம் மறக்கமுடியுமா? அதெல்லாம் எங்க போனாலும் உன் நெனப்பு இருக்கும். நீதான் என்கிட்ட
எப்பவும் பிரியமா பேசறியே! ஒன்னிய எப்படி மறக்கறது?" என இவனும் பதிலுக்குச் சொன்னதும், வெட்கத்துடன் ஒரு
புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் போனது இவன் மனதில் ஓட....

"இரு புள்ள! இன்னும் கொஞ்ச நேரம் களிச்சுப் போவியாம்!" என்று வாய்விட்டுச் சொன்னவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் பார்க்கலியே என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அவளை நினைத்துக் கொண்டே, தனக்குள் பேசியதை எண்ணி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்!

'ம்.. ஒருவேளை செல்லி வந்தாலும் வரும்! அதுகிட்ட இந்தக் கனவைப் பத்தி சொல்லணும். அது கொஞ்சம் விவரமான புள்ளை.'
என முடிவு செய்து கொண்டான்.

**********
சந்தை!

எத்தனை விதமான மனிதர்கள்?
என்னவெல்லாம் தேவைகள்?

கூறு கட்டி வைத்திருக்கும் காய்கறிக்கடைகள், ரிப்பன், ஸ்லைடு, சாந்துப்பொட்டு, பவுடர் என ஒப்பனைப் பொருள்களை அடுக்கியிருக்கும் சிறிய கடைகள், அரிசி, மிளகாய், உப்பு இதெல்லாம் மலைபோல குவித்து வைத்து வருவோர் போவோரையெல்லாம் கூவி அழைக்கும் வியாபாரிகள், பக்கத்திலேயே, ஆடு, மாடு விற்க, வாங்குவோரைக் குறி வைத்து அலையும் தரகுக் கும்பல், சிறுவர், சிறுமியருக்கான பொம்மை, ஜவ்வுமிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அவரவர் கேட்கும் வடிவத்தில் நொடியில் தயாரித்துக் கட்டிவிடும் கடைக்காரர்கள், குடை ராட்டினம் என சந்தை களை கட்டியிருந்தது.

இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன் கண்களில்,
அந்தக் கொட்டகை பட்டது!

"உள்ளத உள்ளபடியே சொல்லும் ஜக்கம்மா அருள்வாக்கு" என்ற போர்டு அவனை ஈர்த்தது.

கையில் ஒரு சிறிய பிரம்புடனும், ஓலைக் காதோடும், அடக்கி வைத்த புகையிலையுடனும், மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றி நிறையக் குங்குமத்துடன் அமர்ந்திருந்த
அந்த பருத்த கிழவி, அவனைப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள்!

[தொடரும்]
************************************************

Read more...

Thursday, September 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3


முந்தைய பகுதி இங்கே!
1.

கருக்கலில் கண் விழித்தது முதலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான், கந்தன்.

பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து, வாய் கொப்பளித்து, முகம் அலம்பி,

"அம்மா! நான் போயிட்டு வரேன்" என்று, சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
குடிசையை விட்டு வெளியே வந்தான்.

பட்டி அருகே சென்றதுமே, "மே.....ஏ" என அன்புடன் வரவேற்றன ஆடுகள்.

படலைத் திறந்து, "தா, தா" என அவைகளை வெளியே விரட்டி, படலை மீண்டும் மூடிவிட்டு, உற்சாகமாக
சீட்டி அடித்தபடியே அவைகள் பின் சென்றான்.

மனம் இன்னமும் அதிகாலையில் அவன் கண்ட கனவைப் பற்றியே சந்தோஷத்துடன் அசை போட்டது.

இந்த வாரத்தில் அவன் இரண்டாம் முறையாகக் கண்ட கனவு இது!

அப்போது....மந்தையிலிருந்து பிரிந்து தனித்துச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஆட்டைப் பார்த்தவுடன், கையிலிருந்த குச்சியைத்
தரையில் தட்டியபடியே திரும்ப மந்தைக்குள் அதைத் தள்ளிவிட்டு, வழக்கமாக மேய்ச்சலுக்கு விடும் இடத்தை அடைந்தான்.

ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாழடைந்த கோவில்.

சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ களவாடிச் சென்றபின்னர்,பூஜைகள் நின்று போய், வருவோரின்றி, சிதிலமாகிக்
கிடந்த கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.

அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் அவனுக்கு அத்துப்படி!அந்த கோவில். சாமியில்லாத கர்ப்பக்கிரகம். இன்னமும் நிக்கற தெற்குச் சுவர். அதன் பின்னாலிருக்கும்,
ஓங்கி வளர்ந்த அந்தப் புளியமரம்! அதன் அடியில்தான் ஆடுகள் படுத்துறங்கும்.

கொண்டுவந்த கஞ்சிக்கலயத்தை, உள்மேடையில் ஓரமாக வைத்தபின்னர், 'கண்ணுங்களா! நல்லா மேயுங்க!'
என அன்பாகச் சொல்லியபடியே கையோடு எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.

அவனோட அம்மா விட்டுச் சென்ற ஒரே சொத்து அந்த ஓலைக்குடிசையும், 15 ஆடுகளும், இந்தப் புத்தகமும் தான்.

அம்மா இருந்தவரைக்கும், கஞ்சியோ, கூழோ கொடுத்து அவனை இஸ்கோலுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆத்தாவுக்கு உடம்புக்கு வந்து சீக்காப் படுத்தப்பதான், இவனுக்கு படிக்க முடியாமப் போனது.

வாத்தியாருக்கு இவன் மேல ரொம்பப் பிரியம்.

இந்த நிலைமையிலியும் படிக்க வரானேன்னு.

இப்ப முடியாமப் போச்சுன்னு ஆனதும், ரொம்பவே வருத்தப்பட்டார்.

"கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே" எனச் சொல்லி,
இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீக்கிரமே அம்மாவும் செத்துப் போக, இப்போ கந்தனுக்கு இதான் வாழ்க்கை.

காலையில் மேய்ச்சலுக்கு இங்கே வருவது,

சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
மீதிப் பொழுதை அங்கேயே கழிப்பது,

மனசிருந்தா, கோவிலைச் சுற்றி இருக்கற புதரை வெட்டி சீர் படுத்த முயல்வது,


சூரியன் உச்சிக்கு வந்ததும், கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டு, கொஞ்சநேரம் கொண்டுவந்த புத்தகத்தைப் படிப்பது,

ஆடுகள் எல்லாம், நிழலுக்காக வந்து அந்தப் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து அசை போடுவதைப் பார்த்த்படியே கொஞ்சம் கண்ணசருவது,

சூரியன் மேக்கால மறைஞ்சதும், 'வரேன் சாமி' என இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,


'எலே! வாங்கடே போலாம்!" எனச் சொல்லி வீடு திரும்புவது.

கைகால் கழுவிய பின்னர் அடுப்பை மூட்டி, கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சிட்டு, மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு
சற்று நேரத்தில் உறங்கப் போவது.

வாரம் ஒருமுறை சந்தைக்குப் போய், ஆட்டுரோமம் போன்ற பொருட்களை விற்று, நல்ல விலைக்கு வந்தால் ஆடுகளை வாங்குவதோ, விற்பதோ செய்து,
வீட்டுக்குத் தேவையான சாமான்களையும் கொஞ்சம் வாங்கி, தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்து வந்தான் கந்தன்.

சின்னப்பையன், அதுலியும் அப்பன், ஆத்த இல்லாத புள்ளைன்னு எல்லாருக்கும் இவன் மேல அனுதாபம்!


காலையில் எழுந்து சந்தைக்குப் போனான்.

அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்!

[தொடரும்]
************************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, September 26, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"


"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" [2]


முந்தைய பதிவு இங்கே!


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


[இதுதான் நான் முதலில் எழுதிய முன்னுரை இக்கதைக்கு!

45 நாட்களாக வராததற்கு ஒரு விளக்கமாக முந்தைய பதிவு எழுதினேன்.

எனவே இதையும் படியுங்கள்!]

"ஆன்மிகம் கலங்கலின்றி தெளிவாய் ஆகிக் கொண்டே இருக்கிறது உம்முள்"!

சற்றும் எதிர்பாராமல், இப்படி ஒரு ஆசி ஒரு பெரியவரிடமிருந்து எனக்கு வந்தது சில நாட்களுக்கு முன்னர்.

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கு நான் அருகதையானவனா, இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இப்படி ஒரு ஆசி கிடைப்பதே பெரிய விஷயம்தானே!

எல்லாவிதமான ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு, ஈடுபட்டு, உள்ளுக்கும் வெளியிலுமாக அலைபடும் ஒரு சாதாரண மனிதன்.

ஆனால், ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவானவன்.

அன்பு செலுத்துவதில், அதை வெளிப்படுத்துவதில்.

செலுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

வெளிக்காட்டுவதில்தான் !

அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...

இப்படி வெளிப்படும் நேரங்கள்தான் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும் நேரங்களாகப் போய்விடுகிறது.

வெகுவாகக் குறைத்து வருகிறேன், இத்தருணங்களை.

இதுதான் கலங்கலின்றித் தெளிவாதலோ!

பார்க்கலாம்!

இப்படி எண்ணங்கள் என்னுள் வந்து கொண்டிருந்த போது, சில மாதங்களாக நான் எழுத நினைத்து,
ஒத்திப் போட்டுக் கொண்டே வரும் ஒரு கதையை இங்கு ஒரு தொடராக வெளியிட எண்ணுகிறேன்.

இது என் கற்பனைக் கதை அல்ல.

நான் படித்த சில புத்தகங்களினால் எனக்குள் எழுந்த ஒரு பாதிப்பு எனச் சொல்வதே சரியாகும்.

கருத்து அங்கிருந்து.

களம் நான் அமைப்பது.

இது எந்தவொரு சித்தரைப் பற்றிய கதையும் அல்ல.

ஒரு மிக மிகச் சாதாரணமான மனிதன், தனது கனவை விடாது பற்றிச் செல்லுகையில் எப்படி அது என்னவாகுகிறது என்பதைப் பற்றிய கதை!

அப்போது ஒரு சித்தர் இதில் வருகிறார்!

ஆன்மீகத் தேடலில் இருப்போர்க்கு விடையாக அமையுமா?

தெரியாது.

அவரவர் தேடலை, அதில் அவர்கள் அடைந்திருக்கும் சாதனை அளவை, வளர்ச்சியைப் பொறுத்தது.

திடீர் திருப்பங்கள் இருக்காது.

ஆனால், ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு நாள் விட்டு ஒருநாளாகப் பதிய எண்ணம். [திங்கள், புதன், வெள்ளி என]

என் முதல் முயற்சி இது.

நல்லபடியாக அமைய குருவருள் வேண்டி, இறையருள் நாடி, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கோருகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இதோ வந்துவிட்டேன்!

"இதோ வந்துவிட்டேன்!"




'எங்கே உங்களைக் காணோம்? என்ன ஆயிற்று?' எனப் பல மடல்கள், தொலைபேசிகள்!

ஆம்! நான் காணாமல்தான் போயிருந்தேன்!

கடந்த 45 நாட்களாக ஒரு தவம்!

ஒரு நாவல் எழுத ஒரு உந்தல்!

அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனல்ல நான்.

என் மனதில் தோன்றியவற்றை கவிதைகள் மூலம்[கொத்ஸ் அதைக் கவுஜ என்பார்!] அவ்வப்போதும், திருக்குறள், திருப்புகழ் பாடல்களில் சிலவற்றையும் எனக்குத் தெரிந்தவரையில் எழுதியது தவிர, பெரிதாக ஒன்றும் எழுதியதில்லை.

ஆனால், ஒரு சில ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து வருகையில், இவற்றையொட்டி ஒரு கதையைச் சொல்லவேண்டும் என ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒரு சகுனம் எனக்குத் தெரிந்தது.

பொதுவாகவே இந்த சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன் நான்.

நடந்த நிகழ்வுகள் இதை உறுதிப் படுத்தின.

எழுதத் தொடங்கினேன்!

என்னால் முடியுமா என்ற ஒரு அவநம்பிக்கையோடே!

ஆனால், இது உருவான விதம் எனக்குள்ளேயே ஒரு பிரமிப்பை உண்டுபண்ணியது என்றால், அது மிகையில்லை.

இதை எழுத எனக்கு ஊக்கம் அளித்த ஒரே நபர் என் மனைவி!

[உற்சாகமூட்டியவர் எனது இனிய நண்பர் திரு.கோவி.கண்ணன், இதன் களம் என்னவென்று தெரியாமலேயே!]

ஒவ்வொரு அத்தியாயமும் எழுதிய பின்னர் அதைப் படித்து, அப்படியே இதை ஒரு திருத்தமுமின்றி என் மனைவி அங்கீகரித்தபோதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது.

இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!

ஏதோவொரு சக்தி மேலிருந்து தூண்டுவதால் நிகழ்வதென்!

இந்தக் கதை சொல்லப்பட வேண்டிய ஒரு கதை!

நான் அதற்கொரு கருவி!

அவ்வளவே!

இதைப் படிப்பவர்க்கும் அவ்வாறே!

செல்ல வேண்டியவர்க்கே இது செல்லும்!

இதை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாமே என ஒரு எண்ணம் வந்தது, முதலில்!

நம்மை அங்கீகரிப்பவர்களே..... அவர்கள் எவ்வளவு பேராயினும் சரி.... அவர்கள் பார்வைக்கே இது போய்ச் சேரட்டும் என ஒரு ஆணை மனதில் உதித்தது!

எனவே இது இங்கு... உங்கள் பார்வைக்கு!

படித்தவர்கள் தயவு செய்து எங்காவது ஒருமுறை தங்கள் முகத்தைக் காட்டினால் மகிழ்வேன். அது உங்கள் விருப்பம்! கட்டாயமில்லை.

இத்தனை பீடிகைக்குப் பின்னர், இனி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.

நிச்சயம் இது உங்களுக்குப் பிடிக்கும்.

இனி வருவது.....

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்!"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த அத்தியாயம்

Read more...

Sunday, August 26, 2007

"ஈக்களின் வழக்கு"

[காற்றின் வேகம் தாளாமல் பறந்திடும் பறவை]


"ஈக்களின் வழக்கு"


மன்னவன் முன்னால் முறையிட்டு நின்றன
முறையீட்டு மணியைப் பலமாக அடித்தன
ஈக்கள் வந்து மணியடிப்பதைப் பார்த்து
அதிசயத்தில் ஆழ்ந்தான் மன்னவனும்!

'அருந்தகை அரசே அடியவர்க்கெளியவா
எவர்க்கென்ன குறையெனினும் தீர்ப்பவா
சிறியவர்க்கும் துணை வருபவா
எமைவிடவும் எளியார் இங்குண்டோ
இன்றோ நாளையோ எனவிருப்போர் யாம்
எமையொருவர் வருத்துகின்றார்
எங்களைக் காத்தருள்வாய்' என்ற ஈக்களை
இரக்கத்துடன் பார்த்தான் மன்னவனும்!

"யாரும்மைத் துன்புறுத்தியது?
எவருமக்குத் தீங்கிழைத்தது?
தண்டிக்காமல் விடமாட்டேன்"
சினத்துடன் கேட்டான் மன்னவனும்!

"காற்றின் மீதே எம் வழக்கு
எமை அலைக்கழிப்பதே அவர் செய்கை
நிலைகொள்ள விடாமல் துரத்துகிறார்"
என்றவரைப் பார்த்து சொன்னான் மன்னவனும்!

"நும் சொல்லில் பொருளுளது
உம் வேதனை புரிகின்றது என்றாலும்
அடுத்தவர் தரப்பின் நியாயத்தைக்
கேளாமல் தீர்ர்ப்பளிக்க ஒப்பாது என் மனமும்
காற்றின் கருத்தினையும் கேட்டிடுவோம்"
எனவுரைத்தான் மன்னவனும்!

"அப்படியே ஆகட்டும்" என்றிட்டார் ஈக்களும்
'கூப்பிடுங்கள் பருவக்காற்றை
இப்போதே வரச் சொல்லுங்கள்'
ஆணையிட்டான் மன்னவனும்!

ஆணையின்னும் செல்லவில்லை
அதற்குள் சுழன்றது ஊழிக்காற்று
பேரிரைச்சலோடு விரைந்து வந்தது
தாங்காமல் திகைத்திட்டான் மன்னவனும்!

சட்டெனத் திரும்பிப் பார்த்தான்
'சொல்லுங்கள் உங்கள் வழக்கை'
ஈக்களை அங்கே காணவில்லை
சிரித்திட்டான் மன்னவனும்!


இதுபோல்தான் இறைமறுப்பாளரும்
இறைமாட்சி எதிர்வருகையில்
காணாமல் போய்விடுவார்
அதுவரையில் குறைசொல்வார்
மாமன்னன் வரும் போதோ
மறைந்தே போய்விடுவார்!

[ரூமியின் ஒரு கவிதையைத் தழுவி!]

Read more...

Sunday, August 19, 2007

"இயலாமை எனக்கில்லை"


"இயலாமை எனக்கில்லை"

உலகமெனும் மேடை இதில்
ஒவ்வொருநாளும் நடிப்பதே
வாழ்வெனப்போனபின்னர்
நான் நானென்பதை மறந்து
என் பாத்திரம் எதுவெனவுணராமல்
என்னை மட்டுமே நினைத்து
நடிக்கத் தொடங்கினால்
வழுக்கி மட்டும் போக மாட்டேன்
கல்லெறியும் கூடவே கிடைக்கும்

நேற்றைய நாடகத்தில் நானே ராஜா
கைப்பற்றிய ராணி தவிரவும்
எனைப்பற்றிய பெண்டிரும் அங்கிருந்தார்
இன்றோ எனக்குப் பிச்சைக்காரன் வேடம்
நேற்றைய நினைப்பில் நான் நடித்தால்
இன்றும் கல்லெறி நிச்சயமே.

பிரபஞ்சமெனும் ஒரு கோட்டில்
பலகோளுக்கு நடுவே நானும்
ஒரு புள்ளியாய் பால்வெளியில்
மிதக்கின்ற வேளையினில்
பரமன் ஆட்டிவிட்ட பம்பரம்போல்
புள்ளிகளில் புள்ளியாய்
சுவாசத்தில் சுவாசமாய்
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
வயதான ஓநாயாய் என் நினைவுகள்
இன்னமும் சென்றதையே எண்ணி இன்றும்
புண்ணாகிப் போன புண்ணாக்கு நிகழ்வுகளை
எண்ணியே இன்று இன்றைய சுகங்களைத்
தொலைத்தலைந்து புலம்புகிறேன்

எனைத் தாங்க எவர் வருவார் என நானும்
உனைக் கேட்டே வாழ்கின்றேன்
எனை நானே நம்பாத போது
எனைக்காக்க நீ வருவாயென
உனை நினைத்து நான் வாழுவதும்
கனியிருப்பக் காய் கவருவது போலவேயென
இன்னும் எனக்குப் புரியாததேனோ!

எனது முட்கள் நானே ஏற்றவை
நானே சூடிக் கொண்டவை
பிடித்தோ பிடிக்காமலோ
விரும்பியோ விரும்பாமலோ
சம்மதமின்றியோ சம்மதித்தோ
அந்தரங்கங்களே அந்தரத்தில் இன்று
தொந்தரவாய் ஆடுது என் முன்னே
இதிலே சுயமென்ன அசலென்ன

பிறக்குமுன்னமேயே சொல்லிவிட்டான்
ஆழ்கடலில் நீந்தித்தான் வெளிவருவாயென
தாயின் கருவில் ஒருகடலில் இருந்தேன்
வாயின் வழியே வந்தவுடன் ஓர் புதுக்கடல்
எவராலும் ஆளப்பட்ட இளமைக்காலம் ஒரு கடல்
இடையிலே சிலகாலம் காதலெனும் தீவினிலே
மீண்டும் என் வாழ்வை முடிவெடுக்க படிப்புக் கடலில்
சம்சார சாகரத்தில் மூழ்கி பல கடமைகள் ஆற்றி
இக்கடலினின்று மீண்டு பேரின்பக் கடல் நோக்கி
இப்போது செய்கின்றேன் என் பயணம்

இதற்கிடையில், என் இதயம்
நிற்கும் போது நிற்கட்டும்
என்றும் தொடரும் என் பயணம்
மூச்சிருப்பதும் நிற்பதுவும்
என்கையில் இருக்குதடா
உன்னைக் கேட்டா முடிவெடுப்பேன்
எனக்கில்லை இயலாமை!

Read more...

Thursday, August 16, 2007

"ஆடி வெள்ளி தேடி உன்னை"


"ஆடி வெள்ளி தேடி உன்னை"



இன்று ஆடி கடைசி வெள்ளி!

அம்மனுக்கு மிகவும் உகந்த நாள்!

இந்த நன்நாளில், கிடைத்தற்கரிதான, படித்தாலே எல்லா நலன்களும் நல்கும் "பாலா திரிபுரசுந்தரி கவசம்" என்னும் பாசுரத்தை இங்கு பதிகிறேன்.

அனைவரும் படித்து அன்னையின் அருளடைய வேண்டுகிறேன்.

[ஒரு சின்ன தகவல். இதை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கந்தகுரு கவசம்' ராகத்தில் பாடிப் பாருங்கள்! மிகச் சரியாக வரும்!]

நேரமிருப்பின், "மாரியம்மன் தாலாட்டையும்" ஒருமுறை படிக்கலாமே!!


பாலா கவசம்



கணபதி துணை




ஓம்கார கணபதி ரீங்கார கணபதி

உன் பாதம் நாடுகின்றேன்

உன்னருள் துணையாலே என்னவள் கவசத்தை

உளமுருகிப் பாடுகின்றேன்

தீங்கேதும் வாராது நீங்காத துணையாக

தும்பிக்கை வேண்டுகின்றேன்

தேனான சுவையோடு தெய்வீக ஒளியோடு

தெய்வமே ஆண்டருள்வாய்.



பாங்கான தெய்வம் பாலா திரிபுர

சுந்தரி திருக்கவசமே

பாலோடு தேனாக பாகோடு தானாக

செய்வதும் நினது வசமே

ஏங்காத நிலையருள் ஏத்திடும் வரமருள்

எந்நாளும் காத்திருப்பாய்

ஏழையேன் என்னுடை அன்பினை வைக்கிறேன்

ஹ்ருதயத்தில் பூத்திருப்பாய்.



கவசம்



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அருள்தனை நீ பாடுவாய்

அன்னையைத் தேடுவாய் அன்னையைத் தேடுவாய்

அன்போடு நீ தேடுவாய்

அன்னையை நாடுவாய் அன்னையை நாடுவாய்

அவள் பாதம் நீ நாடுவாய்

அன்னையின் அருகினில் ஆடுவாய் ஆடுவாய்

ஆனந்தமாய் ஆடுவாய்



பாலா எனச் சொல்லு பாலா எனச் சொல்லு

பவவினை யாவும் தள்ளு

பாலா எனக் கூறு பாலா எனக் கூறு

பாதாரவிந்தமே சேரு

பாலா எனப் பாடு பாலா எனப் பாடு

பாலாவின் கருணையைத் தேடு

பாலா என்றே ஓது பாலா என்றே ஓது

பாலாவினால் மறையும் தீது



திரிபுரசுந்தரி திருவடித் தாமரை

தினம் வந்து நமைக் காக்குமே

திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில்

தெய்வீக நிலை பூக்குமே

திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால்

தீமைகள் தான் விலகுமே

திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்

தேன் வாழ்வுதான் மலருமே



பாலாவை நீ பாடு பங்காரு காமாக்ஷி

பாங்கான உரு தெரியுமே

பாலாவை நீ நோக்கு மதுரையாள் மீனாக்ஷி

புன்னகைதான் புரியுமே

பாலாவை நீ காணும் போதந்த காசியாள்

விசாலாக்ஷியை அறிகுவாய்

பாலாவின் தோற்றத்தில் மயிலையின் கற்பகம்

பலவரம் தான் அருளுவாள்



இல்லையென்று பாலா திரிபுரசுந்தரி

யாருக்கும் சொன்னதில்லை

இன்பத்தினை நாடும் அன்பர்க்கு கருணையை

ஈயாமல் விட்டதில்லை

தொல்லையென்றவள் எல்லையில் வந்தோர்க்கு

துயரேதும் வந்ததில்லை

தூயவள் அவளுக்கு அருளதைப் பொழிவதில்

ஜாதிகள் மதமுமில்லை



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அன்புக்கு எல்லையில்லை

அன்னைக்கு செல்வர் ஏழையர் என்கின்ற

பேதங்கள் ஏதுமில்லை

தன்னையே வேண்டிடும் அன்பர்க்கு அருளதை

தாராமல் போனதில்லை

தாயவள் பாசமே பொழிவதில் ஆகாய

மாரியும் இணையுமில்லை



காயத்ரியாகவே கண்களைக் காப்பாள்

சிவசக்தி சிரமே காப்பாள்

காளியாய் வந்து கரங்களைக் காப்பாள்

கௌமாரி கால்களைக் காப்பாள்

மாயையை நீக்கி மஹேஷ்வரி காப்பாள்

மாதாவாய் மனதைக் காப்பாள்

மூகாம்பிகை என்றும் முகத்தையே காப்பாள்

மோகினி மூளை காப்பாள்



தாய் தில்லைக் காளியாள் தலையினைக் காப்பாள்

தர்மாம்பா தோளைக் காப்பாள்

தில்லைச் சிவகாமியாள் தொடையினைக் காப்பாள்

துர்கையாள் தொண்டை காப்பாள்

கைநிலவு அபிராமி கழுத்தினைக் காப்பாள்

வைஷ்ணவி வயிறு காப்பாள்

கருமாரியாய் வந்து குரல்வளம் காப்பாள்

காந்திமதி காது காப்பாள்



அருள்மிகு தேவி அன்னை பாலாதிரிபுர

சுந்தரி பெயர் மந்திரம்

அமைதியைத் தந்திட நெமிலியில் வந்தனள்

அவள் திருவடி எந்திரம்

இருள்தனை நீக்கிடும் தாயவள் விழிகளே

இன் துணை என வந்திடும்

இன்முக தேவியை உன்னகம் வைத்திடு

எல்லாமே தான் தந்திடும்



மருள்தனை நீக்கிடும் மாதாவின் கவசமே

மனமொன்றி நீ கூறுவாய்

மகிழ்ச்சியைத் தந்திடும் மாதாவின் கவசமே

மலரடி நீ சேருவாய்

பொருள்தனைக் கொடுத்திடும் பாலாவின் கவசமே

புவியினைக் காக்கும் நிஜமே

புகழ் நிறை நெமிலியில் பொலிகிறாள் சத்தியம்

புகலிடம் அவள் நித்தியம்



அமைதியைப் பெற்றிட அன்பர்கள் அனைவரும்

அவளையே நாட வேண்டும்

சுமைகளைக் குறைத்திடும் சுந்தரி இல்லத்தில்

சந்ததம் பாட வேண்டும்

இமையது கண்களைக் காப்பது போல் கவசம்

எந்நாளும் காக்க வேண்டும்

நெமிலியில் எழில்மணி பணிவுடன் எழுதிய

கவசமே பூக்க வேண்டும்



பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

பவவினை தான் போகுமே

பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

தவவினை நமைச் சேருமே .



ஓம் ஓம் ஓம் !

Read more...

Saturday, August 04, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"


வஸந்தபவனில் என்னென்ன ஆர்டர் பண்ணினோம் என்பதெல்லாம் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்காது எனத் தெரியுமாதலால், மிச்சமிருக்கும் ஐந்து குறள்களுக்கு மயிலை மன்னார் என்ன சொன்னான் எனத் தெரிந்து கொள்வதில்தான் உங்கள் ஆர்வம் இருக்குமென்பதால்,
நேராக அதற்கே வருகிறேன்!

[முதல் ஐந்து குறள் விளக்கம் சென்ற பதிவில் பார்த்தோம்.]

நடு நடுவே மன்னாரின் உபசரிப்பையும் காணலாம்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்" [1106-1110]

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்." [1106]

"நம்ம நாயர் கடை டீ, மசால்வடைக்கு, இங்கே சாப்படற மசால்தோசையும், பூரி மசாலாவும் எவ்வளவோ மேலுன்னு நெனக்கற நீ! பொறு, பொறு!

இப்பத்தானே ஆர்டர் பண்ணிருக்கோம்! இன்னும் வரல!

நீசொல்வியே அந்த தேவலோகம்... அங்கே ஆரும் சாவறதே இல்லியாம்!

அல்லாரும் அமிர்தம் குடிச்சிட்டாங்களாம்!

அப்டீன்னு சொல்றாங்க!

ஆனா, ஐயன் அதையே எப்டி உல்ட்டா பண்னி சொல்றார்னா, ..

இவன் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!

அதுவும் இவன டீப்பா லவ் பண்ணுதாம்.

எப்பலாம் இவன் அந்தப் பொண்ணோட தோளைத் தொடறானாம்.
அவ்ளோதான்!

இவனுக்கு புதுசா இன்னொரு ஜென்மம் எடுத்தாப்பல, அவன் உசிரு தளைக்குதாம்!


அதுனால, இவனுக்கு இவளோட தோளே அமிர்தம் மாரித் தோணுதாம்!

தொடறப்பவெல்லாம் புது உசுரு வர்றதுனால!


"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு." [1107]


சரி, சரி! தோசை வந்திருச்சு! சாப்டு!

இப்படி இந்த ஓட்டல்ல ஒக்காந்து ஒனக்கு வாங்கிக் கொடுத்து, நானும் சாப்டறதுக்கே எனக்கு இம்மாம் சந்தோசம் வருதே.... சரி, சரி!... நீதான் பில்லுக்கு பணம் கொடுக்கப் போறேன்னாலும்!....

சரி, குறளுக்கு வருவோம்!

ஒன் பர்ஸுலேர்ந்து பணத்தை எடுத்து இப்ப எனக்கும் சேர்த்துக் கொடுக்கறே இல்ல?


அது மாரி, தன்கிட்ட இருக்கற ஒரு பொருளை இன்னோர்த்தனுக்கும் கொடுத்து தானும் சந்தோசப்படற இந்தப் பொண்ணோட சேர்றது அவனுக்கு இன்பமா இருக்காம்!

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு." [1108]


இப்ப சொல்லப் போறது கொஞ்சம் சூட்சுமமான மேட்டரு!

சாப்டறத நிப்பாட்டிட்டு கவனமாக் கேளு!

ரெண்டு பேரு ஒர்த்தர ஒர்த்தர் விரும்பறாங்க!

பாக்கறாங்க! பேசறாங்க, தொடக் கூடத் தொடறாங்க!

அதெல்லாம் ரொம்பவே இன்பமாத்தான் இருக்கும்.

ஆனா, ஒர்த்தர ஒர்த்தர் கட்டிப் பிடிச்சு, இறுக்கமாக் கட்டிக்கும் போது....

அதாவது, காத்துக் கூட நடுவுல பூராத மாரி இறுக்கக் கட்டிக்கறாங்களாம்!...

அப்படிக் கட்டிப் பிடிச்சு இருக்கக் கொள்ள, அவங்களுக்கு வர்ற சந்தோஷம் இருக்கு பாரு!

அதுக்கு ஈடு இணையே கிடையாதாம்!!!

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்." [1109]

இந்தக் காதல் பண்றவங்களுக்கு, வெறுமன காதல் பண்றது மட்டுந்தான் வேலைன்னு நெனைக்காதே!

சும்மா காதல் மட்டுமே பண்னினா அதுல ஒரு த்ரில்லு இல்லியாம்!

சின்ன சின்னதா சண்டை போடணுமாம்!

அது பெருசாவறதுக்கு முன்னாடியே சமாதானம் ஆயிறணுமாம்!

அப்பத்தான், மனசுல ஒண்ணும் வெச்சுக்க மாட்டாங்க!

பெரிய சண்டை ஆயிருச்சுன்னு வையி!

அது கொஞ்சம் பேஜாராயிடும்.

அதனால... இன்னா பண்ணனும்னா.... சின்னச் சின்னதா சண்டை போடணும்....அப்பப்ப!

அத்த ஆரு போட்டாலும், ஆராவது ஒர்த்தர், விட்டுக் கொடுத்து ராசியாயிடணும் வெரசலா!

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் சேரணும்!

அது ரொம்பவே ஜாலியா இருக்குமாம்.

இதெல்லாம் காதலால வர்ற நல்ல விசயமாம்!

சரி, சரி, பூரி கிளங்கு வந்தாச்சு, எடுத்துக்கோ!

அப்டியே ரெண்டு டீ சொல்லிடு!


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு." [1110]


இப்போ ஒரு புக்கு படிக்கறே! நல்ல நல்ல விசயம்லாம் அதுல இருக்கு!

படிக்கக் கொள்ள ஒனக்கே புரியுது.... இதெல்லாம் இத்தினி நாளு தெரிஞ்சுக்காம இருந்திட்டோமேன்னு!

ஒன்னோட அறிவு இன்னும் ஜாஸ்தியாவுது!

அதே மாரித்தான் இந்த காமம்ன்றதும்!

ஒவ்வொரு தபாவும் புதுசு புதுசா ஒண்ணொண்னு தெரியுமாம்!

சரி, பில்லைக் கொடுத்திட்டு வா!

நான் வாசலாண்ட நிக்கறேன்"

எனச் சிரித்தவாறே கிளம்பினான், மயிலை மன்னார்!


அவ்ளோதாங்க!

பிறகு சந்திக்கலாம்!

Read more...

Thursday, August 02, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 [வயது வந்தோர்க்கு மட்டும்!]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 "புணர்ச்சி மகிழ்தல்"

வாரா வாரம் எனக்குக் குறளின்பம் தந்து கொண்டிருந்த நண்பனை இப்போதெல்லாம் மாதா மாதம் சந்திக்கும்படியான நிலை
வந்துவிட்டதே என மிக வருத்தம் எனக்கு!

சரி, இதையாவது விடக்கூடாது என்ற ஒரு வெறியோடு, ஆடி வெள்ளி மயிலை கற்பகாம்பாளைத் தரிசித்த பின்னர்,
மயிலைக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன், அவனைப் பார்க்கும் ஆவலோடு!

கிடைக்கவில்லை!

மனம் தளர்ந்து, கடைசி முறையாக நாயர் கடைக்கு வந்து, 'அண்ணனை எங்கனெயும் நோக்கியோ, சேட்டா?' என
எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வினவினேன்.

'இல்லியே ஸாரே! கிட்டில்லா ஆ ஆளு!' என நாயர் சொன்னதும் என் நம்பிக்கை தகர்ந்தது.

சரி, இன்னிக்கு நமக்கு கொடுப்பினை இல்லை என நொந்தவாறே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கலானேன்.

திடீரென ஒரு குரல்!

பரிச்சயமான குரல்!

"நா சொன்னா சொன்னதுதான்! அவனவன் அனுபவிச்சாத்தான் புரியும்! அத்த வுட்டுட்டு, இது எப்டி இருக்கும்னு
கேட்டேன்னு வெச்சுக்கோ, நீதான் ஒலகத்துலியே மஹா முட்டாள்" என யாருடனோ பேசிக்கொண்டு மயிலை மன்னார்
நாயர் கடை வாசலில் ஆஜரானான்!

என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை!

மன்னாரைப் பார்த்தது மட்டுமல்ல; என் நண்பரொருவரைக் குறித்து, என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அதே விஷயத்தைப் பேசிக் கொண்டும் மன்னார் வந்தது எனக்கு பேராச்சரியம்!

என்னைப் பார்த்தவுடன் இன்னும் அதிகமாகவே குஷியானான் மன்னார்.

'இன்னாப்பா! வா, வா, வா! நீயும் இந்த ஜோதில ஐக்கியமாயிக்கோ! காதல்ண்றதே ரொம்ப குஜாலான மேட்டரு. இதுல காதல் கைகூடி,
அது கனிஞ்சு ரெண்டு பேரு சேர்றதுல இருக்கு பாரு ஒரு குஜாலு!... அட! அட! அட! அத்தச் சொல்ல வார்த்தையேகிடையாது!
ஐயன் இன்னா சொல்றார்ன்னா...."என ஆரம்பித்தவுடன், பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு அவன் சொல்வதை எழுதலானேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்"

"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள." [1101]

நல்லாக் கேட்டுக்கோ!

இப்போ நமக்கு அஞ்சு விதமான உணர்வுங்க இருக்கு.

பாக்கறது, கேக்கறது, புவா துண்றது, மோந்து பாத்து வாசனை இன்னான்னு தெரிஞ்சுக்கறது,
தொடறது அப்டீன்னு அஞ்சு!

ஆனாக்காண்டி, இந்த அஞ்சும் சேந்த மாரி ஒரு விஷயம் ஒலகத்துல கிடையாது!

நீ இன்னா ஒரு பொருளை வோணும்னாலும் எடுத்துக்கோ!

ஒதாரணத்துக்கு, ஒரு பூவை எடுத்துக்கோ!

பாக்கலாம், தொடலாம், மோந்து பாக்கலாம், சிலதை பிச்சி கூடத் துண்லாம்.

ஆனா , கேக்க முடியுமோ? முடியாது!

சரி, அது வோணாம்!

டீவி இருக்கு!

பாக்கலாம், கேக்கலாம், தொடலாம் ...அவ்ளோதான்.

இப்டி, இன்னா ஒரு விசயத்த எட்த்துக்கினாலும், அல்லாமும் கூடி வராது.

ஆனா, ஒரு ஆம்பளையும், பொம்பளையும் விருப்பப்பட்டு சேரும் போது....?

ஒர்த்தரை ஒர்த்தர் பாக்கலாம், பேசறதைக் கேக்கலாம், கிஸ் அடிக்கக்கொள்ள துண்ணக்கூட துண்ணலாம், மோந்து பாக்கலாம், தொடவும் செய்யலாம்!

அத்தத்தான் நம்ம ஐயன் சும்மா கணக்கா சொல்லி இருக்காரு இதுல!

ஒரு ஆம்பளை சொல்றான்.... இந்தாமாரி, இந்த அஞ்சு விதமான உணர்ச்சியையும், நல்லா வளையில்லாம் போட்டுகினு இருக்கற
இவகிட்ட எனக்கு கிடைக்குதுன்னு!


"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. [1102]


ஒனக்கு ஒரு அடி படுது.

கல்லு தடிக்கின்னு வெச்சுக்கோயேன்.
ரெத்தம் கொட்டுது.
இன்னொரு கல்லை எடுத்து,... இல்ல,.... அதே கல்லை எடுத்து அது மேலியே இன்னோரு போடு போட்டா அது சரியாயிடுமா?

சரி, அது வோணாம்.
ஜொரம் வருது! மளைல நனைஞ்சு!
திருப்பியும் ஒன்னியக் கொட்டற மளைல நிக்க வெச்சா ஜொரம் சரியாப் பூடுமா?

டாக்டரைப் பாக்கணும்!
காயத்துக்கு மருந்து போடணும்.
இல்லேன்னா, ஜொரத்துக்கு ஊசி மாத்திரை எடுத்துக்கணும்.
அப்போத்தான் சரியாவும்.
சர்த்தானே நான் சொல்றது?

ஆனாக்க, இந்தப் பொம்பள இருக்கே, அதாம்ப்பா... அளகா வளைல்லாம் போட்டுகிட்டு, நகை நட்டெலாம் போட்டுகிட்டு ஒன்னிய மயக்கி வெச்சாளே,..... அவதான்...!


அவளால ஒனக்கு இப்ப ஒரு நோவு வந்திருக்கு!

அதாம்ப்பா, காதல் ஜொரம்!

அதுக்கு இன்னா மருந்துண்ற?

எந்த டாக்டர் இதுக்கு மருந்து வெச்சிருக்கான்?

ஆனா, ஐயன் சொல்றாரு, இதுக்கு மருந்தும் அந்தப் பொண்ணேதானாம்.
அவளாலதான் இத்த தீக்க முடியுமாம்!

இதுமாரி, நோவும் கொடுத்து, அத்த தீக்கற மருந்தையும் வெச்சிருக்கறது, ஒரு விருப்பப்பட்ட பொண்ணாலதான் முடியுமாம்!


"நாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு." [1103]


நம்ம சங்கர் அடிக்கடி சொல்லுமே, அந்த சொர்க்கம்.... அதாம்ப்பா... பெருமாள் இருக்கற எடம்... வைகுண்டம்.. ... அங்கே
இன்னான்னாமோ கிடைக்குமாம்!


மெத்து மெத்துன்னு படுக்கை விரிச்சு, அப்சரஸுங்கல்லாம் விசிறி வீசுவாங்களாம்!


அத்த ஆரு பாத்திருக்கா?
இன்னாமோ சொல்றாங்க!

ஸரி! அத்த உண்மைன்னே வெச்சுப்போம்!

ஒன்னோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட,.... அதுவும் ஒன்னை விரும்புது.... அத்தோட மெல்லிசான தோள்ல சாஞ்சுகிட்டு
ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடற பாரு... அதுக்கு ஈடவுமா, இந்த சொர்க்கலோகம்லாம்னு ஐயன் கேக்கறாரு!


"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெண்ணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்." [1104]


சடாரென ஒரு தீக்குச்சியைக் கிழித்தான் மன்னார்!

அந்த நெருப்பை என் கிட்ட கொண்டு வந்து என் முகத்தருகில் நீட்டினான்!

பட்டென விலகினேன் நான்!

"இப்ப ஏன் தள்ளிக்கினே?

நெருப்பு சுட்டுருமேன்னுதானே!

அதான் நெருப்போட கொணம்.

கிட்ட வந்தா சுடும். தள்ளி நின்னா ஒண்ணும் பண்ணாது!

ஆனா, ஒனக்குப் பிடிச்ச பொண்ணு, ஒம்மேல பிரியமா இருக்கு!

அது ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போச்சுன்னு வையி!

மவனே! தக தகன்னு ஒன் ஒடம்பு கொதிக்க ஆரம்பிச்சிடும்!

அதே அவ கிட்டக்க வந்தான்னா... அவ்ளோதான், சும்மா ஐஸுல தூக்கிப் போட்ட மாரி, பல்லு கிட்டிப் போயி,
குளுர்ல நடுங்கி தந்தியடிக்க தொவங்கிடும்!

அப்பிடியாப்பட்ட வினோதமான நெருப்பு இவகிட்ட மட்டும் எப்டி வந்திச்சுன்னு ஐயன் ஒரு கொஸ்சின் கேக்கறாரு!
"

"வேட்டபொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்." [1105]

நாயர் கடையாண்ட நிக்கறே நீ!

இன்னா கிடைக்கும் இங்க?

மிஞ்சி மிஞ்சிப் போனா, டீ, மசால்வடை!

அதிகமாக் கேட்டியானா, பன், ரஸ்க்கு, கடலை மிட்டாய்!

அவ்ளோதான்!

இப்ப நீ இன்னா நெனைக்கற...

மணி 9 ஆச்சு! இன்னும் சோறு துண்ணல.

இப்பமட்டும், ஒரு மசால் தோசையும், கெட்டி சட்னியும், நாலு பூரியும், கூடவே மசால் கிளங்கும் கெடச்சுதுன்னா இம்மாம் ஜாலியா இருக்கும்னு!

பார்றா! இன்னா ஆச்சரியம்!

டக்குன்னு ஒன் முன்னால வந்து நிக்குது அதெல்லாம்!

அதே மாரி, நீ இன்னான்னா நெனக்கறொயோ, அத்தினியும் ஒனக்குக் கிடைச்சுதுன்னா, எம்மாம் சந்தோசமா இருக்கும்?

அப்டி இருக்குமாம, நீயும் நல்லா அடர்த்தியான தலைமுடியில பூவெல்லாம் வெச்சுகிட்டு இருக்கற பொண்னும் ஒர்த்தரை ஒர்த்தர்
விரும்பி, நீ அவ தோள்ல சாஞ்சுகிட்டியானா!

நான் சொல்லலைப்பா... ஐயன் சொல்றதுதான் இது!


என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

திறந்த வாயை மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான், ' என்னப்பா! இவ்வளவுதானா? மொத்தம் பத்து குறளாச்சே ஒரு அதிகாரத்துல" என
அடக்க முடியாமல் கேட்டேன்!

ஆசையைப் பார்றா!

இருக்கு இருக்கு!
இன்னும் அஞ்சு குறளுஇருக்கு!

ஆனா, இப்ப பசிக்குது!
மசால் தோசை, பூரி கிளங்குன்னதும் வவுறு கபகபான்னு கிள்ளுது!
வா, வஸந்த பவனுக்குப் போயி
சாப்ட்டுகிட்டே மிச்சத்தையும் சொல்றேன்"


என எனை இழுத்துக் கொண்டு சென்றான் மயிலை மன்னார்!

அவன் பேச்சுக்கு மறுப்பேது?

சாப்பிட்டு வந்து மீதி அவன் சொல்லிய மீதி ஐந்து குறள் விளக்கத்தைத் தருகிறேன்!

இப்போதைக்கு இதை "அனுபவியுங்கள்"!


:))
***************************************************


ஒண்டொடி கண்= வளையணிந்த பெண்
பிறமன்= பிற பொருட்கள்
வேட்ட= விருப்பப்பட்ட
தோட்டார் கதுப்பினாள்= பூக்கள் நிறைந்த கூந்தலை உடைய பெண்

Read more...

Wednesday, August 01, 2007

"கந்தகுரு கவசம்"


முருகனருளில் தொடராக வந்த "ஸ்ரீ கந்தகுரு கவசம்" அனைவரும் பிரதி எடுத்துப் படிக்க வசதியாக இங்கு பதியப்படுகிறது!

முருகனருள் முன்னிற்கும்!




ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
அருளிய
"கந்த குரு கவசம்"


... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170

[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.
மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.


இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP