Sunday, July 06, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!"-1

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!" -1

"இது ஒரு கொலைக் கதை" என ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வழக்கமாக, ஒரு தொடர் பதியும்போது, மற்ற எதுவும் எழுதுவதில்லை நான்.

ஆனால், அந்த கோட்பாடை முறியடிக்கும் விதமாக, இந்த அமெரிக்க சுதந்திர தின வாரத்தில், 'கல் எண்ணை' [பெட்ரோல்] விலை அதிகமாக இருப்பதால், எங்கும் போகாமல் இருந்ததால், வேறு வழியின்றி, என் நண்பர் ஒருவர் அழைத்ததினால், என் மனைவியுடன் இரண்டு திரைப்படங்கள் பார்க்க நேரிட்டது.

ஆஹா! என்ன ஒரு அனுபவம்!

அதை உங்களுடன் பகிரவே, என் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தி, இந்தப் பதிவை இடுகிறேன்.

நேற்றும் இன்றுமாக இரண்டு படங்கள்.

இரண்டும் இருவித அனுபவங்கள்!

முதல் படம்...!

"தி விஸிட்டர்" [The Visitor]

கண்டிப்புக்குப் பெயர் போன ஒரு பேராசிரியர்.
சமீபத்தில் தன் மனைவியை இழந்தவர்.
அவள் ஒரு திறமையான பியானோ கலைஞர்.
அவளைப் போற்றும் விதமாக, இத்தனை நாளாய், தான் கற்றுக்கொள்ளாத அந்தப் பியானோவை கற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவருக்கோ அது வரவில்லை.
நாலு ஆசிரியர்களிடம் பாடம் கற்றும், அது பிடுபடவில்லை.
வகுப்பிலும் கண்டிப்பாக இருப்பவர் அவர்.
ஒரு மாணவன் காலம் தவறி சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையைக் கூட ஏற்க மனமில்லாது நிராகரிக்கும் அளவுக்குக் கண்டிப்பானவர்.
கன்னெக்டிக்கட்டில் பணி புரியும் அவர், ஒரு வேலை நிமித்தமாக நியூயார்க் நகரத்துக்கு வர நேரிடுகிறது.
அங்கு அவருக்கென ஒரு வீடு இருக்கிறது.
வருகிறார்.
வீட்டின் அமைப்பே மாறியிருக்கிறது.
யாரோ அங்கு இருக்கிறார்கள்!
'யாரடா நீ?' என ஒரு கரம் அவர் கழுத்தை நெருக்குகிறது!
'இது என் வீடு! நீ யார்?' என இவர் கேட்க உண்மை வெளிப்படுகிறது.
ஆம்!
இவர் இங்கு வருவதே இல்லை என அந்த வீட்டை ஒரு தம்பதிகளுக்கு அபார்ட்மெண்ட் உரிமையாளர் உபரி வாடகைக்கு இவர்களுக்கு விட்டிருக்கிறார்.
நிலைமை புரிந்த தம்பதிகள், மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்கள்.
'இந்த இரவு நேரத்தில் எங்கே போவீர்கள் எனச் சொல்லி அவர்களை அங்கேயே தங்கச் சொல்லுகிறார் அந்தப் பேராசிரியர்.
அந்தத் தம்பதிகள் குடியுரிமை இல்லாது இருக்கின்ற இருவர்!
ஆண் ஒரு சிரியா நாட்டுக் குடிமகன். பெண் செனெகல் நாட்டைச் சேர்ந்தவள்.
அந்தப் பையன் ஒரு திறமையான ட்ரம் வாசிக்கும் கலைஞன்.
கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு அவன் திறமையின் மீது ஒரு பிடிப்பு வந்து, இவரும் அவனிடம் ட்ரம் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார்.
நியூயார்க் நகரத் தெருக்களில், இவரும் அவனோடு ட்ரம் வாசிக்கும் அளவுக்கு ஈடுபாடு உண்டாகுகிறது!
இந்த நிலையில், அந்தப் பையன் குடியுரிமை அதிகாரிகளிடம் துரதிர்ஷ்டவசமாகச் சிக்கிக் கொள்கிறான்.
இந்தத் தம்பதிகளிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்தப் பேராசிரியர், இவனைக் காப்பாற்றப் பாடுபடுகிறார்.
மிச்சிகனில் இருக்கும் அந்தப் பையனின் தாய், தன் மகனிடமிருந்து ஒரு செய்தியும் சில நாட்களாக வரவில்லையே என்பதால், இந்த வீட்டுக்கு வருகிறார்.
பேராசிரியர் அவரிடம் நிலைமையைச் சொன்னதும், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்காமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை எனச் சொல்லி வெளியேறும் போது, அவருக்கும் குடியுரிமை இல்லை என்பதை அறிந்த பேராசிரியர் தன் வீட்டிலேயே அவரைத் தங்கச் சொல்லி வேண்ட, முதலில் மறுத்தாலும், மகன் மீதுள்ள பாசத்தால், அங்கேயே தங்குகிறார்.
இவர் செய்கின்ற உதவியைக் கண்டு, மனம் நெகிழ்கின்ற அந்தத் தாய், இவர் மேல் ஒர்விதப் பாசம் கொள்கிறார்.
அது காதலா?

தெரியவில்லை.
தன் மகன் காதலித்த அந்த செனெகல் பெண்னைச் சந்தித்து, தன் மகன் அவளுடன் இருந்த நாட்களை அந்தத் தாய் நினைவு கூருகிறார். அந்த இடங்களுக்கும் அவளுடன் செல்லுகிறார்.அவளையும் ஏற்றுக் கொள்ளுகிறார்.
இதற்குள், ஒரு தவறும் செய்யாத.... ஆனால், குடியுரிமை இல்லாத...அந்தப் பையன் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப் படுகிறான்.
தனது ஒரு தவற்றினால்தான்..... குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை மறைத்த செயலால்தான்.... இது நிகழ்ந்தது எனப் புலம்பும் அந்தத் தாய், தானும் சிரியாவுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார்....... இனித் திரும்பி வர முடியாதெனத் தெரிந்தும்!
செல்லும் முதல் நாள் இரவு, அவர் அந்தப் பேராசிரியரை அவரது படுக்கையறையில் சந்தித்து, அவரைக் கட்டியணைத்து, அவருடன் படுக்கிறார்.
எந்தவொரு தவறும் நிகழ்வதாகக் காட்டவில்லை.
மறுநாள் அவர் கிளம்பி சிரியா செல்லுகிறார்.
பேராசிரியர் வழியனுப்பி வைக்கிறார்.

'வந்துவிடு என்னுடன்' என அந்தத் தாயோ, 'வரட்டுமா' என பேராசிரியரோ கேட்கவில்லை!
மறுநாள், எந்த சப்வே ரயில் நிலையத்தில் அந்தப் பையன் கைது செய்யப்பட்டானோ, அங்கே அந்தப் பேராசிரியர் அவனது ட்ரம்மை எடுத்துக் கொண்டு போய், ஆவேசமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்.
படம் முடிகிறது.

எதைச் சொல்லுவதற்காக இயக்குநர் இதை எடுத்தாரோ, அதை விட்டு ஒரு இம்மியும் அகலாமல், ஒரு 100 நிமிடங்கள் நம்மையும் அவர்களோடு பயணிக்க வைத்த இயக்குநரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

சிரிக்கிறோம், மகிழ்கிறோம், நெகிழ்கிறோம், அழுகிறோம், ஆத்திரப் படுகிறோம், நிகழ்வின் நிலைமையையும் புரிந்து கொள்கிறோம்!

எவர் மீதும் குறை சொல்ல முடியாமல், ஒரு அநீதி நிகழ்ந்து விடுகிறது. சம்பந்தப்பட்டவர்க்கே அந்தச் சோகம் புரியும்... பாதிக்கும்.

அதை நம்மையும் உணரச் செய்வதில்தான் இயக்குநர் வென்றிருக்கிறார்.

துளிக்கூடத் தேவையில்லாத காட்சிகளோ, வசனங்களோ, நடிகர்கள் தேர்வோ எதிலும் சோடை போகாமல் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, 'உலகத்தரம்' என பீற்றிக் கொள்ளும் நம் படங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.

தவறாமல் பாருங்கள் இந்தப் படத்தை!

அடுத்த படம்...... நாளை!

[இ.ஒ.கொ.க. வும் இன்று வரும்!!]

Read more...

Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 10

"இது ஒரு கொலைக் கதை" - 10

முந்தையப் பதிவு

ஜப்பார் சொல்லத் தொடங்கினார்!

'சத்யன் ஒரு நேர்மையான சிப்பி வியாபாரி.


நியாயமான விலைக்கு சிப்பிங்களை வாங்கி, அதை அடுத்த வியாபாரிகிட்ட விக்கற இடைத் தரகர்.

கிடைக்கற லாபத்துல ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருந்த ஆளு.

அவரு கையில இந்த சிப்பிங்க கொத்தா கிடைச்சிருக்கு ஒருதரம்~
அது இந்தப் பசங்களுக்கும் தெரிஞ்சதுதான் அவரோட துரதிர்ஷ்டம்.


எப்படியாவது அதை அடிச்சறணும்னு திட்டம் போட்டாங்க!

வெள்ளிக்கிழமை ராத்திரி.
மூணு பேரும் நல்லா தண்ணி அடிச்சிட்டு, அவங்களோட ஓட்டை ஜீப்புல பெட்ரோல் போட்டுகிட்டு, சத்யன் வீட்டுக்குப் போறாங்க.


சத்யன் மட்டும் டி.வி பார்த்துகிட்டு இருக்காரு.

காசி, மாரி, ராசையன் மூணு பேரும் சத்தம் போடாம உள்ளே நுழைஞ்சு, சத்யனை மடக்கறாங்க.

சிப்பி எங்கேன்னு மிரட்டறாங்க!

தன்கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னு சத்யன் சொல்றாரு.

பொய் சொல்லாதே! எனச் சொல்லி சத்யனை அடிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

சத்யனின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த கலா கீழே இறங்கி வந்திருக்கிறார்.

என்னவெனத் தெரிந்ததும், தடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போதுதான், ஆத்திரத்தில் அறிவிழந்த மாரி இருவரையும் காசியின் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி இருக்கிறான்.


நிலைமை மோசமாகிப் போனதை உணர்ந்த மற்ற இருவரும் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி வீட்டை எரித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தடயங்கள் எல்லாம் அழிந்துவிடும் என நம்பினார்கள்.


ராஜேஷின் காரில் இருந்த சிப்பிகளைக் கைப்பற்றி அதை முத்தண்ணனிடமும் விற்றிருக்கிறார்கள்.


குற்றத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை, காசி கடலில் சென்றபோது வீசி எறிந்திருக்கலாம்.

இன்னும் சரியா, விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, அதுவும் தெரியவரும்!

மாரியோட காதலி மட்டும், அந்தத் துப்பாக்கி குண்டு பதிஞ்ச மரத்தைப் பத்தி சொல்லலைன்னா, இவங்களை இதுல சம்பந்தப் படுத்தி இருக்கவே முடியாது.

அதே மாரி, சொர்ணத்தம்மாவோட தோழியும் உண்மையைச் சொன்னது நல்லதாப் போச்சு.

இப்படித்தான்! எவ்வளவோ கவனமா இருக்கறதா நினைச்சு செஞ்சாலும், எங்கியாவது ஒரு சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டு மாட்டிப்பாங்க. மாரி மட்டும் தன் ஆளுகிட்ட பந்தா பண்றதுக்காக தோட்டா வீசிக் காமிக்கலைன்னா இந்த சாட்சியம் கிடைச்சிருக்காது நமக்கு!

சரி, இப்ப போயி அந்த மூணு பேரையும் பிடிச்சுகிட்டு வாங்க' எனச் சொல்லிச் சிரித்தார் ராஜேஷ்.


'அதுக்கு முன்னாடி, இதெல்லாம் எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா' என்றார் பொன்னுசாமி.

ரொம்ப ஈஸிங்க! அதான் முன்னாடியே சொன்னேனே! கார் டயர் அடையாளம், பெட்ரோல் பங்க்காரர் சொன்னது, முத்தண்ணன் வாக்குமூலம், ரோஸி, சொர்ணத்தம்மா சொன்னது, அந்த குண்டு அடையாளம் இதை வைச்சு நான் அனுமானிக்கறது இது! சரி போங்க! கொண்டு வாங்க அவங்களை' என்றார் ஜப்பார்
************

மாரி தப்பிச்சுட்டானுங்கய்யா! அவன் மேலத்தான் கொலைப்பழி விழும்னு ஆரோ சொல்லியிருக்காங்க போல. பட்சி பறந்திடுச்சு.' என வந்தார் பொன்னுசாமி.

'தேடுங்க! நல்லாத் தேடிப் பிடிங்க. மாரி இல்லாம இந்தக் கேஸு ஜெயிக்காது. அவந்தான் சுட்டான்றதை நிரூபிச்சாத்தான் மத்தவங்க இதுக்கு உடந்தையா இருந்தாங்கன்னு காட்ட முடியும். ' எனப் பரபரத்தார்.

பதினெட்டு மாதம் சென்று, திருவனந்தபுரத்தில், ஒரு லாட்ஜில் மாரி கைது செய்யப்பட்டான்.

மரியதாஸ் எனப் பெயர்மாற்றம் செய்துகொண்டு, ஒரு கார் மெக்கானிக்காக இருந்திருக்கிறான் இத்தனைக் காலம்!

வழக்கு நடந்து மூவரும் குற்றவாளிகள் என சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், குற்றமிழைத்த ஆயுதம் கிடைக்காததனால், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
********************

[இது ஒரு உண்மைக்கதை. கருவை எடுத்துக் கொண்டு நம் நடையில் எழுத முயற்சித்திருக்கிறேன். நன்றி ட்ரூ டி.வி. விரைவில் அடுத்த கதையுடன் சந்திக்கிறேன்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 9

"இது ஒரு கொலைக் கதை" - 9

[முந்தைய பதிவு இங்கே]

வெள்ளிக்கிழமை ராத்திரி அந்த மூணு அண்ணன் தம்பிங்களும் வந்து பெட்ரோல் போட்டாங்களா' என அந்தப் பெட்ரோல் பங்கின் உரிமையாளரை விசாரித்தார் பொன்னுசாமி.

'எந்த மூணு அண்ணன் தம்பிங்க? என்ன சொல்றீங்க?' எனப் பரிதாபமாக விழித்தார் அவர்.

'மன்னிச்சுக்கோங்க! நான் காசி, மாரி, ராசையன் பத்திக் கேட்டேன்' எனச் சமாளித்தார் பொன்னுசாமி.

'ஓ! அவங்களா! எப்பவும் இங்கதானே போடுவாங்க. அதுல என்ன விசேஷம்?' என அசுவாரசியமாகச் சொன்னார் உரிமையாளர்.

'எப்பவும் போடறதைப் பத்தியா இப்பக் கேட்டேன்? கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லணும். அன்னைக்கு.... அதாவது போன வெள்ளிக்கிழமை ராத்திரி, .... இவங்க வந்து பெட்ரோல் போட்டாங்களா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அத்தோட, அன்னிக்கு ராத்திரி இவங்க நடத்தையில எதுனாச்சும் வித்தியாசம் தெரிஞ்சுதா?' என அதட்டினார் பொன்னுசாமி [612]

'ஆமாங்க! நீங்க சொல்றது சரிதான். ஆனா, அன்னிக்கு அவங்க நடத்தையில ஒரு பரபரப்பு தெரிஞ்சுது. அது மட்டுமில்லாம அவங்க சொன்ன ஒரு வார்த்தை என்னால மறக்க முடியாதுங்க.; என அவர் சொன்னதும் சுறுசுறுப்பானார் கண்ணன்.

'என்ன சொன்னாங்க அப்படி?' என்றார்.

'இன்னிக்கு ஒரு வேட்டை இருக்கு'ன்னு சொல்லிட்டு, வண்டியில போட்டது போக, தனியா ரெண்டு 'கேன்'ல வேற பெட்ரோல் பிடிச்சாங்க' என்றார் உரிமையாளர்.

'ஓ அப்படியா? நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா' என்றதும், 'அதெல்லாம் எங்க வேலை இல்லீங்க' எனச் சொல்லிச் சிரித்தார் அவர்.

'ரொம்ப நன்றிங்க' என விடை பெற்றார் கண்ணன்.
********************

'நமக்குத் தேவையான எல்லாத் தடயங்களும் கிடைச்சாச்சு. குற்றவியல் அதிகாரிங்களும் மரத்துல இருந்த குண்டும், மண்டையோட்டுல இருந்த குண்டும் ஒரே துப்பாக்கியிலேருந்துதான் சுட்டிருக்குன்னு உறுதிப் படுத்திட்டாங்க. கைது பண்ணிறலாமா?' எனக் கேட்டார் ராஜேஷ்.

'இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கு. இந்தப் பசங்க வைச்சிருக்கற ஜீப்புதான் அந்த இடத்துல இருந்துச்சான்னு உறுதிப் படுத்தணும்' என்றார் ஜப்பார்.

'அதெல்லாம் அப்பவே பண்ணியாச்சே! அந்த இடத்துல இருந்த டயர் அடையாளமும் இந்தப் பசங்க ஜீப்போட டயரும் ஒத்துப் போகுதுங்க.'

'வெரி குட்! இவங்க முத்தண்ணன்கிட்ட வித்த சிப்பி பத்தி என்ன தகவல் கிடைச்சது?;'

'அதான் அப்பவே விசாரிச்சாச்சே! இந்தப் பசங்க வித்த சிப்பிங்கல்லாம், கொஞ்ச நாளானாலும் ஒரே தரத்துல இருந்திச்சுன்னு!' என்று சலிப்புடன் சொன்னார் ராஜேஷ்.

'அப்போ சரி! அண்ணன் தம்பி மூணு பேரையும் கைது பண்ண வாரண்ட் வாங்குங்க' என உத்தரவு பிறப்பித்தார் ஜப்பார்.

'ஐயா! ஒரு கேள்விங்க! எப்படி இவங்கதான் குத்தவாளின்னு முடிவு பண்ணினீங்கன்னு சொல்லுங்க ஐயா! அதுவும் ரொம்ப சுளுவா கண்டுபிடிச்சிட்டீங்களே ஐயா!' எனப் பணிவுடன் கேட்டார் கண்ணன்[404]

சொல்றேன் கேளுங்க! என ஆரம்பித்தார் ஜப்பார்.

**************

[அடுத்த பதிவில் முடியும்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 8

"இது ஒரு கொலைக் கதை" - 8

'எலே! காசி! உன்னோட துப்பாக்கியை எடுத்துகிட்டு ஐயா உடனே வந்து பாக்கச் சொன்னாரு!'

'எந்த ஐயா? எந்த துப்பாக்கி?' என்றான் காசி.

'தோ பாரு! சும்மா விளையாடாதே! இப்ப வந்திருக்கற அதிகாரி ஒண்ணும் சாதாரண ஆளுல்ல. ரொம்பவே குடையறாரு. ஒன் பேருல ஒரு துப்பாக்கி பதிஞ்சிருக்கு. அது எங்க இருக்குன்னு சொல்லு, போதும். இல்லேன்னா உன் கதை அவ்ளோதான்' என்றார் 612 என்கின்ற பொன்னுசாமி.

'துப்பாக்கியா? என்கிட்டயா? இருந்துது சாமி ஒரு காலத்துல. அது இப்ப என்கிட்ட இல்லை' என்றான் காசி.

'அப்படீன்னா, உன் கதை கந்தல்தான்! என்ன ஆச்சுன்னு விலாவாரியா சொல்லு' என்றார் பொன்னுசாமி.

'அது எங்ககிட்ட இருந்ததென்னவோ உண்மைதான். அது ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி கைதவறி கடல்ல விழுந்திடுச்சு. இப்ப அது என்கிட்ட இல்லை. இதான் உண்மை. நம்புங்க.' என்றான் காசி சிரித்தபடியே!

'அப்படீன்ற! சரி. அப்ப ஏன் அதை உடனே ஸ்டேஷன்ல வந்து ஒரு புகாராக் கொடுக்கலை? ' என மடக்கினார் பொன்னுசாமி.


'அப்படீங்களா? அப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியாதுங்களே! வைச்சிருந்தாத்தான் சொல்லணும். இல்லேன்னாலும் சொல்லணுமா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் காசி.

'என்னமோசொல்றே! இது ஒண்ணும் நல்லதாப் படலை. ஜாக்கிறதைப்பா! போலீஸ் விசாரிப்பெல்லாம் வேற மாதிரி இருக்கும். இப்ப நான் வந்து தன்மையாக் கேட்ட மாரி இருக்காது.சரி, நான் வர்றேன்' என எழுந்தார் பொன்னுசாமி.

'சரீங்க ஐயா! எப்ப வேணும்னாலும் வாங்க! என்னாலானதை செய்யறேன். இப்பல்லாம் நான் ரொம்ப திருந்திட்டேங்க' என வழியனுப்பி வைத்தான் காசி.

'போறதுக்கு முந்தி ஒரு கேள்வி. போன வெள்ளிக்கிழமை ராத்திரி எங்க இருந்தே நீ' என்றார் பொன்னுசாமி.

'அதான் பசங்க சொல்லிட்டாங்களே! எங்க அம்மா வூட்டுக்குத்தான் போயிருந்தோம்' எனச் சிரித்தான் காசி.

'நெனைச்சேன்! இதான் சொல்லுவேன்னு! சரி. நான் வரேன்' எனச் சிரித்தவாறு கிளம்பினார்.
************

'துப்பாக்கியும் இல்லை. இவங்க சொல்றதையும் ஒதுக்க முடியலை. இப்ப என்ன பண்றது?' என்றார் ராஜேஷ்.

'இந்தப் பசங்களைப் பத்தி இன்னும் எதாவது தீவிரமா விசாரிக்கணும்' என்றார் ஜப்பார்.

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலியே?' என வினவினார் ராஜேஷ்.

'இவங்களுக்குத் தெரிஞ்சவங்க இவங்களைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு விசாரிங்க ராஜேஷ்' என நகர்ந்தார் ஜப்பார்.
**************

'உன் பேரு என்னம்மா?' என்றார் ராஜேஷ்.

'ரோஸிங்க' என ஒருவிதப் பயத்துடன் சொன்னாள் அந்தப் பெண்.

கருப்பானாலும் நல்ல களையான முகம்!

இளம் பெண்! வாலிபம் தவழ்ந்தோடியது அவளிடம்!

வாயில் புடவையிலும் இளமையின் எழில் துள்ளிக் குதித்தது.

'மாரியை உனக்கு எவ்வளவு நாளாத் தெரியும்?' என அதட்டினார் ராஜேஷ்.

'இப்பத்தாங்க. ஒரு ரெண்டு வருஷமா' எனத் தயங்கியபடியே சொன்னாள் ரோஸி.


'ரொம்பவே பழகிட்டீங்களோ?' எனக் கேட்டதும் பதறினாள் ரோஸி.

'என்னங்கையா சொல்றீங்க. எதுக்கு இப்படியெல்லாம் கேக்கறீங்க' என ஒரு கண்டிப்புடன் கேட்டாள்.

'சரி. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்க மாரி எதுனாச்சும் துப்பாக்கி வைச்சுப் பார்த்திருக்கியா?' என்றார்.

'துப்பாக்கியா? ஆமாங்க! அப்பப்ப என்கூட இருக்கறப்ப, ஒரு துப்பாக்கியைக் காமிச்சிருக்காருங்க. சில சமயம் சுட்டுக்கூட காமிச்சிருக்காருங்க, என்னை... என்னை விட்டுருவீங்கதானே!' என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜேஷ்.

'எங்கே? எங்கே சுட்டுக் காமிச்சான்' என ஆவலுடன் கேட்டார்.

'தோப்புலதானுங்க. ஒரு மரத்துல கூட சுட்டுக் காமிச்ச தடயம் இருக்குங்க' என வெள்ளந்தியாகச் சொன்னாள் ரோஸி.

'எந்த மரம்? காட்டு அதை' என இன்னமும் தீவிரமானார் ராஜேஷ்.

'காட்டறேன் சாமி. அதுக்கப்புறம் என்னை விட்டுருவீங்கதானே? நான் ஒரு அறியாப் பொண்ணுங்க!' என்றவாறே அவரை அழைத்துச் சென்று ஒரு தென்னை மரத்தைக் காட்டினாள் ரோஸி.

என்ன ஆச்சரியம்!

ஒரு குண்டு அதில் பாய்ந்திருந்தது தெரிந்தது!

மிக மிகக் கவனமாக அந்தக் குண்டு தோண்டி எடுக்கப் பட்டது.

பரிசோதனைக்கு அதை அனுப்பி வைத்தார்.

ஜப்பாரிடம் சொன்னபோது மிகவும் பாராட்டினார்.


'இந்தக் கேஸ் முடிஞ்சதும் உங்களுக்கு ப்ரமோஷன் காத்திருக்கு'
*****************************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 7

"இது ஒரு கொலைக் கதை" - 7

[முன் பதிவு இங்கே]

'எனக்கென்னமோ அந்தக் கிழவி பொய்தான் சொல்றான்னு தோணுது' என்றார் ராஜேஷ். 'இப்ப என்ன பண்றது?' எனக் கையைப் பிசைந்தார்.

'அவ பொய் சொல்றான்னா, அவளுக்குத் தெரிஞ்சவங்களை விசாரிங்க. அது எப்படீன்னு நான் சொல்லியா தரணும்' எனச் சொல்லிச் சிரித்தார் ஜப்பார்.

'அட! இது சட்டுன்னு எனக்குத் தோணாம போயிருச்சே என ஒரு கணம் திகைத்த ராஜேஷ், 'என்ன இருந்தலும், புலனாய்வுத்துறைப் போலீஸ்னா தனி ட்ரெய்னிங்தான்' என மனதுக்குள் சிலாகித்தவாறே கிளம்பினார்.

வேற எதுனாச்சும் ரிப்போர்ட் வந்திருக்கா?' என 404-ஐ வினவினார் ஜப்பார்.

'வந்திருக்குங்க ஐயா! துப்பாக்கிக் குண்டு பத்தின ரிப்போர்ட்' என ஒரு தாளை நீட்டினார் 404.

வாங்கிப் படித்தார் ஜப்பார்.

'இந்தக் குண்டு ஒரு .35 மில்லிமீட்டர் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒருவித தனி அடையாளங்கள், கீறல்கள், இதற்கான துப்பாக்கி கிடைத்தால், அதனுடன் ஒப்பிட்டுச் சொல்லமுடியும்'

'சம்பவம் நடந்த இடத்துல, எதுனாச்சும் துப்பாக்கி கிடைச்சுதா?' எனக் கேட்டார் ஜப்பார்.

'இல்லீங்க ஐயா! அங்க எதுவும் அப்படி கிடைக்கலை' எனப் பதிலிறுத்தார் 404.

'அப்போ இன்னும் அது கிடைக்கலை. இந்தப் பசங்க மூணு பேருல யாராச்சும் துப்பாக்கி வைச்சிருந்தா, அது ஸ்டேஷன்ல பதிவு செஞ்சிருக்கணுமே. அப்படி ஏதாவது இருக்கான்னு பாருங்க' என ஆணையிட்டார்.

'சரீங்க ஐயா' எனச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிய 404, திடீரெனப் பிரகாசமானார்.

'இருக்குங்க! காசிப் பய ஒரு .35 துப்பாக்கியை பதிவு பண்ணி இருக்கான்' எனக் கூவினார்!

'சரி. காசியைக் கூப்பிட்டு விசாரிங்க. அது கிடைச்சா[!!] வாங்கி பரிசோதனைக்கு அனுப்புங்க' என உத்தரவிட்டார்.

'இதோ பண்றேன் ஐயா' என ஜரூரானார் 404.
*****************

'ஏம்மா! உங்களுக்கு சொர்ணத்தம்மாவை எவ்வளோ நாளாத் தெரியும்?' ராஜேஷ் அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டார்.

'ரொம்ப வருஷமாத் தெரியுமுங்க. எதுக்குக் கேக்கறீங்க?' என பவ்யமாக பதில் சொன்னார் அந்தப் பெண்மணி.

'அடிக்கடி பார்ப்பீங்களோ' எனத் தூண்டில் போட்டார்.

வாராவாரம் பார்ப்போமுங்க. இப்ப போன வெள்ளிக்கிழமை கூட பார்த்தேனே!' என்ற பெண்மணியை சற்று உற்சாகத்துடன் பார்த்தார் ராஜேஷ்.

'வழக்கம்போலக் காலையில்தானே!' என நோட்டம் விட்டார்.

'காலையிலியும் பார்த்தேனுங்க. ராத்திரி கூத்து கட்டறப்பவும் பார்த்தேனுங்க' என்றார் அந்தப் பெண்மணி.

'ஓ! ராத்திரி கூத்தும் நடந்துச்சா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் ராஜேஷ்.

'விடிய விடிய நடந்துச்சுங்க. சொர்ணத்தம்மாவும் நானும் முழுக்க முச்சூடும் பார்த்தோமுங்க'

'அப்போ அவங்க பசங்களும் இருந்தாங்கதானே' என மீண்டும் கொக்கி போட்டார்.

'அந்தத் தறுதலைப் பசங்க எங்கங்க இங்கெல்லாம் வர்றாங்க. எம் பசங்களைப் பார்த்து எம்புட்டு நாளாச்சுன்னு சொர்ணம் கூட ரொம்பவே பொலம்பிச்சுங்க. ஏங்க ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க' என்ற பெண்மணியின் கேள்வியைப் பொருட்படுத்தாது, அவரது பெயர், விலசத்தைக் குறித்துக் கொண்டு கிளம்பினார் ராஜேஷ்.

நேராக ஜப்பாரிடம் சென்று தகவலைச் சொன்னார்.

ஜப்பாரின் முகம் பிரகாசமாகியது.

'அப்போ சொர்ணத்தம்மா எதையோ மறைக்கறாங்க. இல்லைன்னா யாருக்காகவோ பொய் சொல்றாங்க. முத்தண்ணன்கிட்டப் போயி, அந்த சிப்பி வித்த விஷயத்தை மறுபடியும் கேக்கணும்; அப்படியே, காசியோட துப்பாக்கியையும் விசாரிங்க' என்றார் ஜப்பார்.

'சரிங்க ஐயா!' என்றபடி அடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார் ராஜேஷ்.
*************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 6

"இது ஒரு கொலைக் கதை!" - 6

[முந்தையப் பதிவு இங்கே]

'வாங்க வாங்க! எதுனாச்சும் துப்பு கிடைச்சுதா என வரவேற்றார் முத்தண்ணன்.

'நீங்கதான் கொடுக்கணும். அதுக்குத்தான் வந்திருக்கோம்.' என அமர்ந்தார் ராஜேஷ்.

'சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?'

'காசி வித்த சிப்பி பத்தித்தான்! என்ன தரம் அதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?' என்றார் ஜப்பார்.

நல்ல தரமான சிப்பிங்க! எல்லாம் ஒரே குளிச்சல்ல எடுத்த மாரி அசலா இருந்துது. ஆனா, கொஞ்ச நாளு காஞ்ச சிப்பிங்க. இருந்தாலும் பழுதில்லை' என்றார் முத்தண்ணன்.

'கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்' என ஆவலானார் ஜப்பார்.

'அது வந்துங்க, அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா திருடிச் சேகரிச்ச சிப்பிங்கன்னா, பலதும் கலந்த மாரி இருக்கும். ஒரே குளிச்சல்ல எடுத்ததுன்னா, ஒரே மாரி இருக்கும். காசி கொண்டு வந்தது ஒரே மாரி இருந்தாலும், கொஞ்ச நாளு கழிச்சு கொண்டு வந்த மாரி காஞ்சு போயிருந்தது. இருந்தாலும் தரமா இருந்ததால அப்படியே மறுபேச்சு சொல்லாம வாங்கிகிட்டேன். அவங்களுக்கும் எங்களை விட்ட யாரு இருக்காங்க சொல்லுங்க' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் முத்தண்ணன்.

'ரொம்ப நன்றிங்க உங்க உதவிக்கு' என எழுந்தார் ஜப்பார்.
*********

'என்னைய்யா, 612! காசி அம்மா வீடு எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சீங்களா?' எனச் சலிப்புடன் கேட்டார் ராஜேஷ்.

'தெரியுமைய்யா! அண்ணா தெருவுல 112-ம் நம்பர் வீடுங்க' என்றவுடன், நிமிர்ந்தார் ராஜேஷ்.

அடுத்த சில நிமிடங்களில், அவரது ஜீப் அங்கே நின்றது.

'இங்க சொர்ணம்மான்றது யாருங்க?'

'யாரது? போலீஸா? என்ன வேணும் உங்களுக்கு? என் பசங்க மறுபடியும் எதுனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டாங்களா?' எனக் கேட்டவாறே ஒரு வயதான மூதாட்டி வெளியே வந்தாள்.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! உங்ககிட்ட சில கேள்வி கேக்கணும். போனவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி உங்க பசங்க மூணு பேரும் இங்கே இருந்ததாச் சொல்றாங்க! அது உண்மையான்னு விசாரிக்கத்தான் வந்திருக்கோம்' எனச் சொன்னவுடன், சொர்ணத்தம்மாவின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.

'எங்க பசங்க அடிக்கடி இங்க வந்து போறதுதான். ஆத்தாவைப் பாக்க வருவாங்க; போவாங்க. இதிலென்னங்க விசாரணை?' என சற்று கேலியாகக் கேட்டவுடன் சற்று கோபமானார் ராஜேஷ்.

'ஏய் கிழவி! கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லணும். உங்க பசங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க வந்தாங்களா?' எனச் சற்று கடுமையுடன் கேட்டதும் நடுங்கிப் போனார் சொர்ணத்தம்மாள்.

'போன வெள்ளிக்கிழமையா?' என நெற்றியைச் சுருக்கி சற்று யோசித்தவர், ' ஆங்! வந்தாங்களே! வந்து, கோழிக்கொழம்பு வைக்கச் சொல்லி இருந்து சாப்பிட்டுட்டு கருக்காலைதான் கெளம்பிப் போனாங்க!' எனச் சற்று படபடப்புடன் சொன்னார்.

'நல்லா நினைவு படுத்திச் சொல்லுங்க. அது போன வெள்ளிக்கிழமை ராத்திரிதானா?' என சாந்தமாகக் கேட்டார் ஜப்பார்.

'ஆமாங்க. நான் ஏன் பொய் சொல்லப் போறேன். காசி, மாரி, ராசையன் மூணு பேரும் வந்து இருந்து, சாப்புட்டுட்டு, விடியறப்பத்தான் போனாங்க' எனத் தீர்மானமாகச் சொன்னார் சொர்ணத்தம்மா.


'அப்ப சரி. நாங்க கிளம்பறோம்' என எழுந்தார் ராஜேஷ்.
***********************
[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 5

"இது ஒரு கொலைக் கதை!" - 5

[முந்தையப் பதிவு இங்கே]

'காசின்னு ஒருத்தன்.... நமக்குப் பழக்கமான ஆளுதான்.... அவந்தான் வித்திருக்கான்'

'யாரு அவன்? கொஞ்சம் அவனைப் பத்திச் சொல்லுங்க' எனப் பதட்டமானார் ராஜேஷ்.

'அண்ணன் தம்பிங்க மூணு பேரு. காசி, மாரி, ராசையன்னு பேரு அவங்களுக்கு. அவங்கள்ல ஒருத்தன்..... ஆங்.... மாரி,..... மாரி ஒரு ரெண்டு நாளைக்கு முந்தி வந்து, தான் கொஞ்சம் சிப்பிங்க சேத்து வைச்சிருக்கறதாச் சொல்லி, வாங்கிக்க முடியுமான்னு கேட்டான். தரம் நல்லா இருக்கேன்னு நான் அதை வாங்கிகிட்டு, பணம் கொடுத்தேன்' என்றார் முத்தண்ணன்.

ஜப்பாரின் முகம் பிரகாசமானது! 'அவனைப் பத்தி வேற எதாவது தகவல் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார்.

'சொல்றதுக்குன்னு ஒண்ணும் பெருசா இல்லீங்க. இதான் அவங்க தொழிலே! முத்துக் குளிக்கப் போறதில ரொம்பவே துடியா இருப்பாங்க! தான் உண்டு தங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க! அதே சமயம் கொஞ்சம் முரடு கூட! சண்டை தகராறுல்லாம் ரொம்பவே அத்துப்படி. இவங்க முரட்டுத்தனம் எனக்குத் தெரிஞ்சதினாலியே, ரொம்ப வெவகாரம் வைச்சுக்காம, அந்த சிப்பிங்களைக் கூட நான் வங்கிகிட்டேன்' எனச் சொல்லிச் சிரித்தார்.

'அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியுமா? சரி, சரி, வேண்டாம். அதை நாங்க பார்த்துக்கிறோம். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி, முத்தண்ணன் ஐயா' என்று ராஜேஷும், ஜப்பாரும் கிளம்பினார்கள்.

'ஏதோ என்னாலான கடமையை நான் செஞ்சேனுங்க. உங்க தயவெல்லாம் எங்களுக்கு எப்பவும் வேணுமில்லியா!' என அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, ' உஸ்! அப்பாடா! என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன்' என முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
*******************

காசி சகோதரர்களைத் தேடுவது பெரிய சவாலாக இருக்கவில்லை ராஜேஷுக்கு.

ஏற்கெனவே ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களுக்காக கைது செய்யப்பட்டு இருந்ததால், இவர்களைப் பற்றிய விவரங்கள் நிலையத்தில் சுலபமாகக் கிடைத்தது.

" யோவ் 612! போய் அவங்களை ஸ்டேஷனுக்கு இட்டாய்யா' என அனுப்பினார்.

சற்று நேரத்தில், 612 இரண்டு பேருடன் திரும்பி வந்தார்.

'ஐயா! காசி கிட்டலை ஐயா! கடல்ல போயிருக்கானாம். மாரியும், ராசையனும் இருந்தாங்க. கூட்டிகிட்டு வந்திருக்கேன்' என்றார் 612 என்கிற பொன்னுசாமி.

" என்னப்பா மாரி! எப்படி இருக்கே?" என வழக்கமான விசாரணையை ஆரம்பித்தார் ராஜேஷ்.

'ஏதோ இருக்கேன்யா. நாங்க ஒரு தப்புத்தண்டாவும் செய்யலீங்களே ஐயா. எதுக்கு எங்களை இட்டாரச் சொன்னீங்க?' என மரியாதையுடன் கேட்டான்.

'சொல்றேன், சொல்றேன். சொல்லத்தானே போறேன். சிப்பி வியாபாரம்லாம் எப்படிப் போகுது?' என மெதுவாகத் துருவினார் ராஜேஷ்.

'இப்ப சீசன் சுமாராத்தான் இருக்குங்க. நெறையக் கிடைக்கறதில்ல. '

'ஏதோ சிப்பியெல்லாம் வித்தீங்கன்னு சொன்னாங்களே' என ஒரு கொக்கி போட்டார் ராஜேஷ்.

மாரியின் முகம் இருண்டது

'ஓ! அதுங்களா! கடலுக்குள்ள அப்பப்ப போறப்ப கொஞ்சம் சேர்த்து வைப்போம். அதைத்தான் இந்த கஷ்ட காலத்துல வித்தோம்' என்ற ராசையனை நன்றியுடன் பார்த்தான்.

'அப்ப... நீங்க ஒண்ணும் தப்புத்தண்டால்லாம் பண்ணலைதானே' என்றார் ராஜேஷ்.

'இப்பல்லாம் நாங்க ரொம்ப சுத்தமுங்க. நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோமுங்க' என்றான் மாரி.

'போன வாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கே இருந்தீங்க நீங்கள்லாம்' விசாரணையை வேறொரு கோணத்தில் துவக்கினார் ஜப்பார். ராஜேஷ் அவரது திறமையை வியந்தவாறே அவரைப் பார்த்தார்.

'எங்கடா இருந்தோம்?' என மாரி, ராசையைனைப் பார்த்தான்!

புருவத்தைச் சுருக்கியபடி ஒரு நொடி யோசித்த ராசையன், சட்டென, 'என்னண்ணே! மறந்திட்டியா! அம்மாவைப் பார்க்கப் போயிருந்தோமே!' என்றான்!

'அட! ஆம்மாமில்ல! மறந்தே போயிட்டேன். அம்மா வூட்டுக்குப் போயி அன்னிக்கு முளுக்க அங்கதாங்க இருந்தோம்' எனத் தெம்பாகச் சொன்னான் மாரி.

'அப்படியா? உங்க அம்மா வீடு எங்கே இருக்கு?' எனத் தன் ஏமாற்றத்தைக் காண்பிக்காமல் கேட்டார் ராஜேஷ்.

'இங்கேதாங்க பக்கத்துலதான்!' என அமர்த்தலாகச் சொன்னான் மாரி.

'சரி! நீங்க போகலாம்! வேணுமின்னா கூப்பிடறேன்!' என அவர்களை அனுப்பி வைத்தார் ராஜேஷ்.

இப்ப அடுத்தது என்ன?' எனக் கேட்டார் ஜப்பாரை.

'வேற என்ன? காசி அம்மாவைப் பார்ப்போம். அதுக்கு முன்னாடி, முத்தண்ணனை மறுபடியும் பார்க்கணும்' என்றார் ஜப்பார் சிரித்தபடி!
*************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 4


"இது ஒரு கொலைக் கதை!" - 4

[முந்தைய பகுதி இங்கே]

'நீங்க எத்தனை நாளா இந்த தொழில்ல இருக்கீங்க?'

தன் ஆட்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த மரைக்காயர் நிமிர்ந்தார்.

'ஓ! வாங்க இன்ஸ்பெக்டர் சார்! என்ன விசேஷம்? எங்களுக்கு இதுதாங்க பரம்பரைத் தொழிலு. காலங்காலமா இதைத்தான் பண்ணிகிட்டு வர்றோம். என்ன விஷயமாக் கேக்கறீங்க?' என அன்புடன் கேட்டார் மரைக்காயர்.

'எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும் மரைக்காயரே! நீங்க நேர்மையாத் தொழில் பண்றவர்னு நல்லாவே தெரியும். எனக்கு ஒரு விவரம் தேவைப்படுது! அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தேன். இது என்னோட பெரிய அதிகாரி ஜப்பார்' என அறிமுகப்படுத்தினார் ராஜேஷ்.

'வாங்கைய்யா! என்ன சாப்பிடிறீக? டேய் பையா! ரெண்டு கூல்ட்ரிங்ஸ் சொல்லு' என உத்திரவிட்டபடியே அவர்களை உபசரித்தார் மரைக்காயர்.

'பரம்பரை பரம்பரையாப் பண்ற தொழிலுங்க இது. முத்து குளிக்கப் போறவங்களைப் பார்த்து, அவங்ககிட்டேர்ந்து சிப்பிகளை வாங்கி, அதைத் தரம் பிரிச்சு மேல விக்கறதுதான் எங்க தொழில்! அல்லா நல்லாவே இதுவரைக்கும் படியளந்துகிட்டு இருக்காரு. நாங்களும் நேர்மையாத் தொழில் பண்றோம்' என்றவரை மறித்து,

'அப்படீன்னா, நேர்மையில்லாம தொழில் பண்றவங்களும் இருக்காங்கன்னு சொல்றீங்களா?' என மடக்கினார் ஜப்பார்.

'எதுல தான் இல்லை சொல்லுங்க! எல்லாத்துலியும் இருக்காங்க ஸார்!' எனச் சலித்துக் கொண்டார் மரைக்காயர்.

'என்ன மாதிரில்லாம் அப்படி பண்ணுவாங்க இந்தத் தொழில்ல?' என ஒரு எதிர்க் கேள்வி போட்டார் ஜப்பார்.

'வேற என்ன? திருட்டுத்தனமா சிப்பிகளை விக்கறது, அடுத்தவனோட சிப்பிகளை திருடி வந்து விக்கறதுன்னு பலானது பலானதெல்லாம் நடக்குமுங்க! ஆனா, நாங்க அதையெல்லாம் வாங்கறதில்லை'

'வேற யாரு வாங்குவாங்க?'

'ஒரு மூணு கடை தள்ளிப் போயி, முத்த்கண்ணன் கடையில விசாரிங்க! அவரு இதுல கை தேர்ந்த ஆளு! லாபம் ஒண்ணுதான் அவருக்கு முக்கியம்! தொழில், தர்மம்னுல்லாம் ஒண்ணும் பாக்க மாட்டாரு. அவரைக் கேட்டா எதுனாச்சும் துப்பு கிடைக்கும்' எனச் சொல்லிச் சிரித்தார் மரைக்காயர்! 'நாந்தேன் சொன்னேன்னு சொல்லிடாதீங்க! 'நமக்கு எதுக்குங்க பொல்லாப்பு!' என ஒரு வேண்டுகோளும் கூடவே விடுத்தார்!
***********

'இங்க முத்தண்ணன் கடை....'

'இதாங்க! உங்களுக்கு என்ன வேணும்? ஆரு நீங்க? என்ன விசயமா வந்திருக்கீக?' என்றான் ஒருவன்.

'நாங்க போலீஸ். ஒரு கேஸ் விசயமா ..... முத்தண்ணனைப் பார்க்கணும்' என்றார் சாதாரண உடையில் இருந்த ராஜேஷ்.

'ஒங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு வேலை நேரத்துல தொந்தரவு பண்றீங்க?' என்று மீசையை முறுக்கியபடி தடிமனான ஒரு ஆள் வெளியே வந்தார்.

'நீங்கதான் முத்தண்ணனா?'

'அட! நம்ம இன்ஸ்பெக்டர் ஐயாவா? வாங்க வாங்க! ஆங்... என்ன கேட்டீக?? ஆமாம்! நான் தான் முத்தண்ணன். என்ன விசயமா இவ்ளோ தூரம்?' என்றார் முத்தண்ணன்.

'இந்த சிப்பிகளை எல்லாம் மொத்த விலைக்கு வாங்கற ஆளு நீங்க தானா?'

'தப்பு! அது நான் மட்டும் இல்லை! என்னைப் போல பல பேரு இங்க இந்தத் தொழில் பண்றோம்.' எனச் சொல்லிச் சிரித்தார் முத்தண்ணன்.

'கடந்த ஒரு வாரத்துல உங்க கிட்ட சிப்பி வித்தவங்க லிஸ்ட்டு வைச்சிருக்கீங்களா?'

'எதுக்குக் கேக்கறீங்க? என்ன சமாச்சாரம்? எதுனாச்சும் வெவகாரமா?' என்று உஷாரானார் முத்தண்ணன்.

'கொஞ்சம் பொருள் திருட்டுப் போயிருக்கு. சிப்பிதான். உங்க கிட்ட அப்படி யாராவது வந்து பேசினாங்களானு சொன்னா போறும். வேற ஒண்ணும் இதுல சிக்கல் இல்லை. உங்க ஒத்துழைப்புதான் வேணும்' எனத் தன்மையாகப் பேசிச் சிரித்தார் ஜப்பார்.

முத்தண்ணன் கொஞ்சம் லேஸானார்.

'அதுக்கென்னய்யா? பார்த்துறலாமே' என்று ஒரு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டினார்.

நாங்கள்லாம் முறையா வாங்கறவங்கதான். அதே சமயம், நமக்குத் தெரிஞ்சவங்க கொண்டு வந்தா, மறுபேச்சில்லாம வாங்கிக்குவோம்! எல்லாம் ஒரு தொழில் தர்மந்தான்!' என்று சில்மிஷமாகச் சிரித்தார் முத்தண்ணன்.

'அதான்! அது மாரி யாராச்சும் இந்த வாரத்துல வந்து எதுனாச்சும் சிப்பி வித்தாங்களான்னுதான் தெரியணும்' என்றார் ஜப்பார்.

'கடலுக்குள்ள முங்கி சிப்பி எடுக்கற ஆளுங்க கிட்ட, வாங்க போட்டா போட்டி இருக்கும். ஆனாக்க, அதையும் தாண்டி. சில பேருங்ககிட்ட எக்ஸ்ட்ராவா சில சிப்பிங்க கிடைக்கும். அதை மறைச்சுக் கொண்டு வந்து விப்பாங்க! அது யாரோட சொத்தும் இல்லை. அதனால, அதை வாங்கி அவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்போம். இதுலியும் தப்பில்ல. சட்டத்துக்குப் புறம்பா எதுவும் நாங்க செய்யறதில்ல.' என்றார் முத்தண்ணன்.

'இப்ப நாங்க உங்களை விசாரிக்கவோ, இல்லை, நீங்க செய்யறது சட்டபூர்வமா இல்லியான்னு குற்றம் சாட்டவோ வரலை. அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். ஒரு கொலை நடந்திருக்கு. அவர் வைச்சிருந்த சில சிப்பிங்களும் களவாடப்பட்டிருக்கு. சமீபத்துல அப்படி யாராவது நிறைய சிப்பிங்களை யார்கிட்டயாவது வித்திருங்காங்களானுதான் நாங்க தெரிஞ்சுக்க ஆசைப்படறோம். அது மட்டும் சொன்னாப் போதும்.' என்றார் ஜப்பார்.

சற்றே சமாதானமான முத்தண்ணன், 'அதுக்கென்ன! பார்த்திட்டாப் போச்சு! டேய்! சரவணா, அந்தப் பேரேடை எடு!' என அமர்த்தலாகக் கத்தினார்.

சரவணன் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டு வந்தவர் முகம் சற்று மலர்ந்தது.

'ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு ரெண்டாயிரம் சிப்பியை யாரோ வித்திருக்காங்க. இருங்க யாருன்னு பார்க்கிறேன்' என மும்முரமானார் முத்தண்ணன்.

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 3

"இது ஒரு கொலைக் கதை!" - 3

3.
பத்திரிகை செய்திகள் நிறையவே தீனி கொடுத்தன!

"சத்யன் ஒரு இளைஞன்.
28 வயது அவனுக்கு. முத்தெடுக்க மூழ்க அனுப்பும் ஆட்களிடமிருந்து சிப்பிகளை மொத்த விலைக்கு வாங்கி, அவற்றைத் தரம் பிரித்து, இதை வாங்குகின்ற மொத்த வியாபாரிகளுக்கு விற்கும் ஒரு இடைத் தரகன்.
செய்கின்ற வேலையைஒழுங்காகச் செய்பவன்.


சில ஆண்டுகளாகத்தான் இந்தத் தொழிலில் இருக்கிறான்.
நாணயமானவன், அதிகமாக ஆசைப்படாதவன் என்பதால், இவனை நம்பி வாங்கும் வியாபாரிகள் அதிகம்.


கொஞ்சம் வசதியாக வாழ்பவன்.

சமீபத்தில்தான், தான் காதலித்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறான்.

இளம் மனைவி கலா!

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்கள்.

இது ஒரு இரட்டைக் கொலை!

துப்பாக்கிக் குண்டிருப்பதால், இது கொலைதான்!

கண்டு பிடிக்கப்பட்ட மண்டையோடு ஒரு ஆணுடையது.

எனவே, சத்யனைக் கொலை செய்துவிட்டு, அவர் மனைவி தன்னையும் கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்!

அல்லது இருவரையும் வேறு எவரோ கொலை செய்துவிட்டு வீட்டைத் தீக்கு இரையாக்கி இருக்க வேண்டும்!

தொழில் முறையில் ஏதேனும் தகராறா சத்யனுக்கு?

கலாவுக்கு ஏதேனும் கள்ளக்காதலா?

கள்ளக் காதலன் யார்?

போலீஸார் தீவிர விசாரணை!"
***************************************

மாநில புலனாய்வுத்துறை அதிகாரி ஜப்பார் முட்டம் வந்தார்.


"என்னை இந்த கேஸை விசாரிக்க மேலிட உத்திரவு. அதற்காக நான் உங்க உரிமை எதையும் பறிக்கப் போறதில்லை. உங்க உதவி எனக்கு மிகவுமே தேவை. நாம ஒரு குழுவா இதை விசாரிக்கலாம்னு இருக்கேன்."
ஜப்பாரின் நட்பான சொற்கள் ராஜேஷுக்கு உற்சாகம் அளித்தது.


"என்னாலான எல்லா உதவியையும் உங்களுக்கு தரச் சொல்லி எனக்கு ஆர்டர் வந்திருக்கு சார்! இது நிச்சயமா ஒரு ரெட்டைக்கொலைதான்! யார் செஞ்சிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கணும் சார்!" எனப் பதட்டத்துடன் சொன்னார் ராஜேஷ்.

"அதுதானே நம்ம வேலை. இதைப் பத்தின எல்லாத் தகவலையும் சொல்லுங்க" என சகஜமாகக் கேட்டார் ஜப்பார்.


"கொலையுண்ட சத்யன் [வயது 28] எந்தத் தப்புத்தண்டாவுக்கும் போகாத ஆளு. திருமணமானவர். இவரையும், இவர் மனைவி கலா [வயது 24]வையும் யாரோ துப்பாக்கியால சுட்டு கொலை பண்ணிட்டு, கொலையை மறைக்க வீட்டையே தீ வைச்சு கொளுத்தியிருக்காங்க. சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள்தான் சத்யன் ஒரு பெரிய வியாபாரத்தை முடிச்சு. சுமார் ஒரு 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளை விலைக்கு வாங்கி இருக்காரு. வீடு எரிஞ்சு போச்சே தவிர அவர் வண்டி அங்கே இருந்ததா எந்தவொரு அடையாளமும் இல்லை.
அவரோட காரு ஒரு ஒதுக்குப்புறமான இடத்துல இருந்திச்சு.
இப்ப, அதுல ஒண்ணும் இல்லை!


ஆனா, அவர் வாங்கின சிப்பிங்கள்லாமும் கூடவே எரிஞ்சு போச்சான்னும் தெரியலை...இல்லை யாராவது திருடினாங்களான்னும் தெரியலை.

'ரெட்டைக் கொலைன்னு எப்படி சொல்றீங்க?'

கிடைச்சது என்னமோ ஒரு பாதி எரிஞ்சுபோன மண்டையோடுதான்னாலும், மத்த எலும்புங்களை வைச்சு, இதில் ரெண்டு பேரு இறந்திருக்காங்கன்னு தெரியுது.

'இதை எப்படி ஒரு ரெட்டைக்கொலைன்னு சொல்றீங்க? ஒருவரைக் கொலை செய்துவிட்டு, ஏன் இன்னொருவர் தன்னை தற்கொலை செய்திருக்கக் கூடாது?' என தொடர்ந்து மடக்கினார் ஜப்பார்!

ஒருகணம் திகைத்த ராஜேஷ் உடனே சமாளித்துக் கொண்டு, ' அதான் சொன்னேனே சார்! அந்த 2 லட்சம் மதிப்புள்ள சிப்பிகளைக் காணும்னு! அதை வைச்சுத்தான் இதை ஒரு இரட்டைக் கொலைன்னு நினைக்கிறோம்' என்றார்!

'அது காணும்னு எப்படித் தெரியும் உங்களுக்கு?' என்று மேலும் ஒரு கொக்கி போட்டார் ஜப்பார்.

'சத்யனோட வண்டி ஒரு தனி இடத்துல இருந்திச்சு! அதுல அந்தச் சிப்பிங்க இல்லை. அதுல இருந்ததைப் பரிசோதிச்ச போது, சில தடயங்கள் கிடைச்சதை வைச்சு இதைச் சொல்றேன்' என்றார் ராஜேஷ்.

'அப்படி என்ன கிடைச்சுது? அதைச் சொல்லுங்க!' என்று ஆவலானார் ஜப்பார்.

'அதுல சில கைரேகைங்க கிடைச்சிருக்கு. அதுவுமில்லாம, இன்னொரு ட்ரக்கு அங்க இருந்ததுக்கான அடையாளமும் இருக்கு.' என்றார் ராஜேஷ்.

'அப்படீன்னா, இது யாரோ, இதைப் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோ செஞ்சதுதான்னு சொல்றீங்க இல்லை?' எனக் கொக்கி போட்டார் ஜப்பார்.

'இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்!' என சாமர்த்தியமாகப் பதில் சொன்னார் ராஜேஷ்.

'சரி! நாம இப்ப நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை பத்தி முடிவு பண்ணலாம்!' என்றபடி எழுந்தார் ஜப்பார்!

'அது என்ன?' என ஆவலுடன் கேட்டார் ராஜேஷ்.

'வழக்கம் போலத்தான்! அக்கம் பக்கம் விசாரிப்போம்! ஆங்! அந்த மண்டையோட்டுல இருந்த குண்டை பரிசோதனைக்கு அனுப்பியாச்சு இல்லை?'

'அனுப்பியாச்சு சார்! ரிப்போர்ட் சீக்கிரமே வந்திரும்' என்றார் ராஜேஷ்.

'நல்லது. நான் போய் ஓய்வு எடுக்கறேன்' என்றபடி நடந்தார் ஜப்பார்.
***************************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 2

"இது ஒரு கொலைக் கதை!" - 2


2.

உறைகள் மாட்டிய கைகளில் தீயில் கருகிய ஒரு பாதி மண்டை ஓட்டோடு தீயணைப்பு அதிகாரி!!

சாதாரண தீவிபத்து இல்லை; ஒரு மரணமும் இதில் இருக்கிறது எனப் புரிந்த ராஜேஷ், இன்றைய தூக்கம் அவ்வளவுதான் என்ற புரிதலோடு அதிகாரியை நோக்கி நடந்தார்!

"யோவ், 612, அந்த மண்டையோட்டை பத்திரமா ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல வாங்குய்யா! உடனே அதை பரிசோதனைக்கு அனுப்பு. வீட்டுல ரெண்டு பேர் இருந்ததாச் சொல்றாங்க. வேற ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க சார்! ஏம்ப்பா, சத்யன், கலா இவங்கள்ல யாரையாவது நீங்க நேத்து பாத்தீங்களா?" எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டவாறே சுறுசுறுப்பானார் ராஜேஷ்.

"நேத்து சாயந்தரம்கூட அவங்க ரெண்டு பேரையும் கடைத்தெருவுல பார்த்தேனுங்க. சிப்பி கூட வாங்கினாங்களே!" என்ற ஒருவனை அருகில் அழைத்தார்.

"உனக்கு அவங்களைத் தெரியுமா?"

"அப்படில்லாம் ஒண்ணும் ரொம்பப் பழக்கம்லாம் இல்லீங்க! ஏதோ வருவாங்க, போவாங்க. வழியில பாத்தா சிரிப்பாங்க. அவ்ளோதாங்க நம்ம பழக்கம்லாம்" என ஜகா வாங்கியவனை,

"என்னமோ சிப்பி வாங்கினாங்கன்னு சொன்னியே. அதைப்பத்தி சொல்லு" எனத் துருவினார் ராஜேஷ்.

"ஓ! அதுங்களா! இந்தப் பக்கம்தான் சிப்பி அள்ளுவாங்கன்னு ஒங்களுக்கும் தெரியுமே! அவரு அதை மொத்த விலைக்கு வாங்கி, தரம் பிரிச்சு, அடுத்தவங்களுக்கு விக்கற ஆளுங்க. அந்த வகையில பார்த்திருக்கேன்" என்றான் அவன்.

"சரி நீ போகலாம்" என அவனை அனுப்பிவிட்டு,
"என்னங்க, எதுனாச்சும் கிடைச்சுதா?' என அதிகாரி பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

"சில எலும்புங்கல்லாம் கிடைச்சிருக்கு. தேடிகிட்டு இருக்கோம்." என்றார் அதிகாரி.

"எல்லாத்தியும் பத்திரமா சேகரிச்சு ஆய்வுக்கு அனுப்பணும்" என உத்தரவிட்டுவிட்டு, "வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா எங்கிட்ட வந்து சொல்லுங்க" என கூட்டத்துக்கும் சொல்லிவிட்டு காவல்நிலையம் செல்ல ஆயத்தமானார்.

முழு அறிக்கை எழுதி முடிக்காம இன்னிக்கு வீடு போக முடியாது என்ற எண்ணம் கொஞ்சம் வாட்டினாலும், கடமை உணர்வு அவரை நேராகக் காவல்நிலையத்துக்கு இட்டுச் சென்றது.
************************************************************


மறுநாள் காலை.............

பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வந்தது இதுதான்!

"முட்டத்தில் பயங்கர இரட்டைக் கொலை!"
"துப்பாக்கியால் சுடப்பட்டு தடயத்தை மறைக்க இருவரையும் சேர்த்தே எரித்த கோரம்!!"
"தடயங்கள் ஏதுமில்லாமல் காவல்துறை திணறல்!!!"

ராஜேஷ் தினசரியை விட்டெறிந்தார்!

"இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. காவல்துறையை திட்றதுக்கு எதுடா சாக்குன்னு காத்துகிட்டு இருக்காங்க! ரெண்டு பேரு செத்துப் போயிருக்காங்க! இல்லை, இல்லை, கொலை செய்யப்பட்டிருக்காங்க! அவங்களைப் பத்திக் கவலையே இல்லை இவங்களுக்கு!" எனப் பொருமினார்!
"இளவயசு! அதான் இப்படி அடிச்சுக்கறாரு!" எனக் கண்ணடித்தார் 612!

2 நாட்களுக்குப் பிறகு....

"404! ரிப்போர்ட் ஏதாவது வந்திருக்கா?" எனக் கேட்டார் ராஜேஷ்!

"உங்க மேஜை மேல வைச்சிருக்கேன் ஐயா!" என்றார் 404.

எடுத்துப் படித்தார் ராஜேஷ்!

'கிடைத்த தடயங்கள்:
பாதி எரிந்த ஒரு மண்டையோடு
இரண்டு கை எலும்புகள்- எரிந்த நிலையில்
மேலும் சில எலும்புத் துண்டுகள்
மண்டையோட்டைத் தவிர, மற்ற தடயங்களில் இருந்து எதுவும் அறிய முடியவில்லை.
மண்டையோடு முழுக்கவும் எரிந்த நிலையில் இருந்தாலும், அதில் ஒரு சிதிலமடைந்த குண்டு இருக்கிறது.
அதிலிருந்து என்ன மேல் விவரங்கள் தெரிய முடியும் எனக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு[Criminal investigation] அனுப்பி வைத்திருக்கிறோம்."

படித்தவுடன் ஒரு ஏமாற்றம் பிறந்தது ராஜேஷுக்கு.

"இனி நமக்கு இதில் வேலையில்லை. புலனாய்வுத்துறை இதை எடுத்துக் கொள்ளும். நம்மளை ஒரு ஊறுகாயாத்தான் எடுத்துக்கும்! நமக்கு வழக்கம் போல அடிபுடி கேஸ்தான்!" வெறுப்புடன் உமிழ்ந்தார் ராஜேஷ்.

"அப்பிடி இல்லீங்க! நாமளும் இதில் உதவ முடியும்!" அனுபவம் மிகுந்த 612 ஆதரவாய்ச் சொன்னார்.


"நமக்குத்தான் இந்த ஊரைப் பத்தி அவங்களை விட நல்லாவே தெரியும்! அதுனால நாம இதை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கமுடியும்" எனச் சொன்ன 612-ஐ கனிவுடன் பார்த்தார் ராஜேஷ்.

[தொடரும்]
**********************

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 1

"இது ஒரு கொலைக் கதை!"

[என்னருமைத் தமிழ்மனங்களே! இதோ, உங்கள் வீயெஸ்கே மீண்டும் ஒரு கொலைக் கதையோடு உங்களை வதைக்க வந்திருக்கிறேன் ! அனுபவிங்க! அப்படியே ஒரு கருத்தும் சொல்லிட்டுப் போங்க!]


1.
"முட்டம் காவல் நிலையம்! இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசறேன்" சிணுங்கின தொலைபேசியை எடுத்து மிடுக்காகச் சொன்னார் ராஜேஷ்.

சொன்னாரே தவிர, "என்னடா, இன்னும் பொழுது கூட விடியலை. நைட் ட்யூட்டி முடிஞ்சு கிளம்பற நேரத்துல இதென்ன தலைவலி?" என ஒரு அலுப்பும் தெரிந்தது அவர் குரலில்.

"ஐயா! இங்க ஊர்க்கோடியில இருக்கற ஒரு வீடு தீப்பிடிச்சு எரியுதுங்க" எனப் பதட்டத்துடன் ஒரு குரல் கேட்டதும் சற்றே விறைப்பானார் ராஜேஷ்.

"உடனே தீயணைப்பு நிலையத்துக்கும் சொல்லிட்டீங்களா இல்லையா? நீங்க யாரு பேசறது? எவ்ளோ நேரமா எரியுது" எனக் கேள்விகளை அடுக்கினார்.

"என் பேரு முருகேசனுங்க. எங்க வீட்டிலிருந்து ஒரு அரை மைல் தள்ளி ஒதுக்காப்புல இருக்குதுங்க அந்த வீடு. தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் சொல்லிட்டேங்கோ. நீங்க உடனே வாங்க! மேட்டுத் தெரு பக்கத்துல இருக்குங்கோ இந்த வீடு. நான் வைச்சிறட்டுங்களா" எனத் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

"யோவ் 404! ஜீப்பை ரெடி பண்ணச் சொல்லுப்பா. அப்பிடியே ஃபயர் ஸ்டேஷனுக்கும் ஒரு தகவல் கொடுத்து,.....ஏற்கெனவே தகவல் சொல்லிட்டாங்களாம். இருந்தாலும் நாமளும் சொல்லிறணும்ல.... அவங்களை மேட்டுத்தெரு பக்கம் வரச் சொல்லு உடனே! ம்ம்.. சீக்கிரம்! " எனச் சொல்லியபடியே, தொப்பியை எடுத்து தலையில் சரி செய்துகொண்டே ஜீப்பை நோக்கி விரைந்தார் ராஜேஷ்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்தார்.

தீயணைப்பு வண்டி அதற்குள் வந்திருந்து, காவலர்கள் தங்கள் வேலையைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

ஆனால், பார்த்த உடனேயே ராஜேஷுக்கு புரிந்து போயிற்று, இவர்களுக்கு இன்று அதிக வேலை இருக்காதென.

அந்த ஒற்றையடுக்கு வீடு முழுதுமாக எரிந்து தரைமட்டமாயிருந்தது. தீயின் நாக்குகள் இன்னமும் அங்குமிங்குமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவ்வளவு கருக்கலிலும், ஒரு சிறு கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

"இங்க யாருப்பா முருகேசன்?" விசாரணையைத் தொடங்க சுறுசுறுப்பானார் ராஜேஷ்.

"நாந்தாங்க ஐயா" என ஒரு பெரியவர் முன் வந்தார்.

"எப்போ, என்ன பாத்தீங்க. கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?" என்றார் ராஜேஷ்.

"அப்படி ஒண்ணும் அதிகமா எதுவும் பாக்கலீங்க. காலையில வளக்கம் போல வெள்ளன எளுந்து வெளியே வந்தப்ப, இந்த வீடு பத்தி எரியறதைப் பார்த்தேனுங்க. உடனே ஒரு சத்தம் போட்டு எளுப்பறதுக்கு அவ்ளோ வீடுங்களும் இங்க கிடையாதுங்க. அதான் உடனேயே உங்களுக்கு ஒரு ஃபோன் போட்டேன்" என ஒருவகை ஜாக்கிரதையுடன் பதில் சொன்னார் முருகேசன்.

"சரியாத்தான் செஞ்சிருக்கீங்க. இங்க குடியிருக்கறது யாருன்னாவது தெரியுமா?"

"சத்யன்னு ஒருபுள்ளாண்டைங்க. கல்யாணம் கூட இப்பத்தான் சமீபத்துல ஆச்சுங்க. கலான்னு பேருங்க அவங்களுக்கு. ரொம்பத் தங்கமானவங்க. எப்பப் பார்த்தாலும் மரியாதையாப் பேசும் அந்தத் தம்பி. ஜாஸ்தி பார்த்ததில்லீங்க. ஏங்க அவங்களுக்கு ஒண்ணும் ஆயிருக்காதில்ல?" எனப் பதட்டத்துடன் கேட்டார்.

எரிச்சலாக வந்தது ராஜேஷுக்கு.

"நானும் இப்பத்தானே வந்திருக்கேன். அவங்க வீட்டுலதான் இருந்தாங்களா இல்லியான்னு கூட தெரியாது. ம்ம்... பார்க்கலாம். எதுக்கும் நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க ... இப்ப நீங்க சொன்னதுக்கு. 404 !, இவர்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கப்பா" எனச் சொல்லிவிட்டு, தீயணைப்பு அதிகாரிகளை நோக்கி நகர்ந்தார்.

"என்னங்க? எதுனாச்சும் தேறுமா?" என ஒரு அதிகாரியைப் பர்த்துக் கேட்டார்.

"ம்ஹூம்..சுத்தமா எரிஞ்சு போச்சு. இந்தக் கட்டையையெல்லாம் அப்புறப்படுத்திட்டுத்தான் பார்க்கணும்" என்றபடி தன் வேலையை அவர் தொடர்ந்தார்.

"612! இங்க பந்தோபஸ்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவங்க வேலையை முடிக்கறவரை ஒருத்தரும் கிட்ட அண்டவிடாதீங்க. எதாவது தகவல் கிடைச்சா எனக்கு சொல்லியனுப்புங்க. நான் வீட்டுலதான் இருப்பேன்" என்றபடி கிளம்பினார்.

"சார்! ஒரு நிமிஷம்! இதைப் பாருங்க" என்ற தீயணைப்பு அதிகாரியின் குரல் அவரைத் திரும்ப வைத்தது!

அங்கே!.......

[தொடரும்]

Read more...

Saturday, June 28, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.

எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.

இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.

நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.

15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய விட்டுவிட்டேன்!

'உங்க வீட்டுல 15 பேருக்குத்தான் சாப்பாடு சமைச்சிருக்கீங்க! ஆனா, ஒரு 20 பேரு சாப்பிட வந்திட்டாங்க! சாப்பாடு இல்லை! போடான்னு அவங்களைத் திருப்பி அனுப்பிடுவீங்களா?' என்றாராம் காமராசர்!

கல்லூரி முதல்வர் திகைத்தார்!

'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' எனச் சொல்லி, கல்வியமைச்சரைக் கலந்து ஆலோசித்து, அதன் பின்னே மாலை நேரக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் செய்தி.

இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வை நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான தமிழ்மணப் பதிவர், தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னார்கள்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வின் மகன் மருத்துவ சீட் கிடைக்க விண்ணப்பிக்கிறான்.

கூடவே, தேசபக்தரும் தமிழக முதல்வரின் நண்பருமான, தன் தாத்தாவைப் போய் கேட்கிறான் பேரன்.

தாத்தாவும் பாசத்தின் காரணமாய்ப் பேரனைக் கூட்டிக் கொண்டு காமராசரைப் பார்க்கப் போகிறார்.

ஒரு அரை மணி நேரம் பேசிய பின், ரெட்டியார் கிளம்புகிறார்.

காமராசர் சிரித்தபடியே, 'என்ன ரெட்டியார், வந்த விஷயத்தைப் பேசாமலியே கிளம்பறீங்க போல!' என்கிறார்.

'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.

அப்படி இருந்ததாம் அந்தக் காலத்தில்.!!!

Read more...

Tuesday, June 24, 2008

"தமிழன்னை தந்த செல்வம்"

"தமிழன்னை தந்த செல்வம்"



செட்டிநாட்டிலே பிறந்தான் செந்தமிழும் இவன் கற்றான்
நெக்குருகும் பாட்டமைத்து நாட்டிலே உலவவிட்டான்
எப்படியிவன் வாய்மொழியில் இத்தனையும் வருகுதென்று
கேட்டவரை ரசித்தவரை எல்லாரையும் வியக்க வைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

சொன்னபடி கேட்கும் தேன்மொழிகள் பிறந்துவிடும்
சின்னக் குழந்தைக்கும் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணன் வரம் தந்து இங்கு வந்த கண்ணதாசன்
அன்னைத்தமிழுக்கு மாறாத அழகு சேர்த்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

கையசைவில் கருத்து வரும் கண்ணசைவில் பாக்கள் வரும்
இம்மென்னும் முன்னாலே எத்தனையோ சந்தம் வரும்
பாடாத பொருளில்லை இவன் பேசாத கருவில்லை
ஒவ்வொன்றும் மனம் களிக்கும் சந்தமிகு தமிழ்ப்பாட்டு
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

சோகத்தைப் பிழிந்தெடுப்பான் சுகராகமும் பாடிடுவான்
ஏக்கத்தைத் தவிர்க்கின்ற வீரமிகு பாடல் தந்தான்
காதலர்கள் மகிழ்ந்திடவே களங்கள் பல அமைத்திருந்தான்
வாழ்வதற்குத் தேவையான தத்துவங்கள் சொல்லிவைத்தான்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

இருந்தவரை அரசனானான் இறந்தபின்னும் பேசப்பட்டான்
வீற்றிருந்த அரியாசனம் நிரப்புதற்கோர் ஆளில்லை
மன்னுபுகழ் உள்ளளவும் மகராசன் பேரிருக்கும்
சின்னஞ்சிறு பிள்ளைகளும் இவன்பெயரைச் சொல்லி நிற்கும்
இங்கிவனை எமக்கெனவே தமிழன்னை தந்து விட்டாள் -கண்ணதாசன்

[இன்று ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள். என் பங்குக்கு ஒரு எளிய அஞ்சலி!]

Read more...

Sunday, June 22, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு!"

"இதுதாண்டா தமிழ்நாடு!"



இன்று நான் கேட்ட ஒரு செய்தி!

நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்

கிடைக்கவில்லை!

தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!

அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!

தனக்கா சீட் இல்லை?

குமுறுகிறான்.

தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.

தந்தை முதல்வரிடம் சென்று செய்தியைச் சொல்கிறார்.

விவரத்தைக் கேட்ட முதல்வர், கல்லூரி முதல்வருக்கு தொலை பேசுகிறார்.

முதல்வரிடமிருந்தே அழைப்பு வந்ததைக் கேட்ட முதல்வர் பதறுகிறார்.

'இல்லை ஐயா! 15 இடங்கள்தான் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாணவன் பதினாறம் இடத்தில்... அதான்...' எனப் பணிவாகத் தெரிவிக்கிறர்.

கல்வி அமைச்சருக்கு அடுத்த தொலைபேசி.

அவரும் 15 இடங்கள்தான் என உறுதிப் படுத்துகிறார்.

இதனால் நல்ல திறமையான மாணவர்கள் வீணாக்கப்படுகிறார்களே, என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.

மாலை நேரக் கல்வித் திட்டம் பிறக்கிறது.

இவர்களையும் அரவணைத்துக் கொள்ள, இடங்களின் ஒதுக்கீடு இப்போது முப்பதாக உயர்கிறது.

எம்.எல்.ஏ. ஐ அழைக்கிறார்.

'சீட்டு இப்போ முப்பதா அதிகப் படுத்தியாச்சு. ஒன் பையன் பதினாறுன்னு நினைச்சு சீட்டு உறுதின்னு நெனைச்சுக்காத. விண்ணப்பிக்கச் சொல்லு. முப்பதுக்குள்ள வந்தா கிடைக்கும். சரியா!' என்கிறார்.

தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு!

Read more...

Sunday, June 15, 2008

தந்தையென்னும் ஓர் தெய்வம்!

"தந்தையென்னும் ஓர் தெய்வம்"!

தந்தையென்னும் ஓர் தெய்வம்
தரணியிலே எனக்கெனவே
இங்குவந்து என்னையாண்ட
கதையினையே சொல்லிடுவேன்

என்னுயிரைக் கருவாக
என்னன்னை சுமந்திடவே
வித்தாகத் தந்தானிவன்
இவன்பெருமை என்சொல்வேன்

கனிவொன்றே காட்டியென்னைத்
தாயவளும் வளர்த்தாலும்
கொடுமையான உலகிதினிலே
வாழும்வழி சொன்னவனிவன்

கைப்பிடித்து கூட்டியெனைக்
கடைத்தெருவில் பஞ்சுமிட்டாய்
வாங்கித்தந்த அந்தநாளை
நினைவுகூர்ந்து இன்புறுவேன்

அரிச்சுவடி சொல்லித்தந்து
அகரமெலாம் படித்திடவே
அறிவான கல்விதந்து
அரவணைத்த ஆசானிவன்

தன்தொழிலைத் தொடர்ந்திடவே
தன்மக்களில் ஒருவராயினும்
வருவாரோ வெனநினைத்தும்
அவரவரை ஆதரித்தான்

மருத்துவத்தில் இவர்போல
யான்வரவே வேண்டுமெனக்
கால்கடுக்க இவன் நடந்த
காட்சியினை மறப்பேனோ

மருத்துவனாய் யான்தேர்ந்து
பட்டம்பெறும் வேளையிலே
இவனிருக்கவில்லை அந்தோ
எனக்கந்தப் பேறில்லை

இறுதிநிலைப் படிப்புநிலை
இங்கிவனோ மாரடைப்பில்
என்மடியில் சாய்ந்தபடி
உயிர்விட்டான் என்னவனும்

வாழ்ந்திட்ட நாட்களையே
மகிழ்வுடனே நினைவுறுவேன்
அன்பொன்றே காட்டிநின்ற
மன்னவனை எண்ணுகிறேன்

தன்மகனை அன்றொருநாள்
வேறெவரோ குறைசொன்ன
சேதிகேட்டுப் பொங்கியெழுந்து
சண்டையிட்ட நிகழ்வினிது

வேற்றூரில் பணிசெய்யப்
போனாலும் மறக்காமல்
எனையணைத்து முத்தமிட்டு
சென்றிட்ட நாளினிது

எதிர்வருவோர் யாரென்றே
தெரியாது ஓர்நாளில்
வேகமாக ஓடிவந்து
தந்தைமேலே மோதிவிட்டேன்

அடிப்பாயோ எனும்பயத்தில்
நீர்வழிய அழுதுவிட்டேன்
'பார்த்துப்போடா' எனச்சொல்லி
சிரித்தபடி நீ நகர்ந்தாய்

நீமறைந்து நாளாச்சு
நினைவின்னும் அகலவில்லை
நினையெண்ணா நாளொன்றும்
இதுவரையில் எனக்கில்லை

போதனைகள் புகட்டியதில்லை
புத்திமதிகள் சொன்னதில்லை
அன்பொன்றே காட்டிநின்றாய்
அதையின்னும் மறக்கவில்லை

ஒற்றையாகப் பிறந்தாலும்
பலரையுமே நீயணைத்தாய்
பாசமென்பது என்னவென்றே
நீ காட்டித்தான் யானறிந்தேன்

நின்புகழை யான்போற்ற
செய்வதென்று ஒன்றுண்டு
அன்பென்னும் ஓர்பொருளை
அனுதினமும் காட்டுவதே

தந்தையர் தினத்தன்று
தந்தையே நினக்காக
யானிங்கு செய்வதுவும்
அன்புடனே வாழ்வதுவே!

அன்பே சிவம்!
அன்பே என் தந்தை!


அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!

Read more...

Friday, June 13, 2008

தசாவதாரம் - விமரிசனம்

தசாவதாரம் - விமரிசனம்



அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரிச்சு, அரங்கத்துக்கு.
இரவு எட்டேகாலுக்குப் படம்னு சொன்னாங்க. எட்டேமுக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாங்க.
சுமார் 300 பேர் அமரக்கூடிய அரங்கத்தில், ஒரு 30 - 40 சீட்தான் காலியாயிருந்திருக்கும்.
டிக்கட் விலை வழக்கமான 15 டாலர்தான்!

ஏத்திவிட்டு, ஏத்திவிட்டு, வரிசையா ஊத்திகிட்ட கமல் படங்களைப் பார்த்து ஏமாந்து போனதால, இந்தப் படத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன்.
சொல்லப்போனா, இது வெற்றியடையணும்னு கூட நினைச்சேன் .

படம் தொடங்கி, கமல் பேரு வந்ததும் வழக்கம்போல விசில் சத்தம்!

மொத சீனே, ஒரு ஏரியல் ஷாட்! அப்படியே சென்னையை, ஒரு விமானம் தரையிறங்கறப்போ எப்படி இருக்கும்னு காட்டறாங்க! ரொம்ப நல்லா இருந்திச்சு
தொடர்ந்து நேரு அரங்கத்துல, கலைஞர், பிரதமர், அமெரிக்க அதிபர் இவங்களுக்கு மத்தியில, உலகநாயகன், இந்த உலகத்தையே ஒரு பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தினதுக்காக விருது வாங்கறாரு.

அப்படியே ஒரு ஃப்ளாஷ் பேக்!

சோழர் காலத்துக்கு.....
வேறு மதங்கள் இல்லாததுனால, எப்படியும் சண்டை போட்டே ஆவணும்னு இருக்கற மனுசன், சிவனா, பெருமாளான்னு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்களாம். சிதம்பரத்துல இருந்த ரங்கநாதர் சிலையை, சோழ மன்னன் தூக்கிக் கடல்ல போட ஆளனுப்பறான்.
ராமானுஜதாசன்ற ஒரு வைஷ்ணவர் [க- 1]இதைத் தடுக்க முயற்சி பண்ணி, தோத்துப் போயி, அவரும் பெருமாளோட கடலுக்குள்ள போயிடறாரு. அவ்ளோதான். இதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுருது.

ஆனா, காட்சியோட பிரம்மாண்டம் அப்படியே ஆளை உலுக்கிடுது. சரி, ஒரு நல்ல வேட்டை இருக்குன்னு நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

அப்படியே நேரா 2004 அமெரிக்காவுக்கு வர்றோம்.
கமல் இப்ப ஒரு உயிரியல் நுட்பொருள் விஞ்ஞானி. கோவிந்தராஜன்னு பேரு [க- 2] உலகத்தையே அழிக்கக்கூடிய ஒரு வைரஸ் கிருமியை ஒரு இத்துனூண்டு டப்பால போட்டு அடைச்சு வைச்சிருக்காரு. இவருக்கு ஒரு பாஸ்... திருட்டாளு அவரு. இதை வேற எவனுக்கோ வித்துறணும்னு திட்டம் போடறாரு.

அப்போத்தான், நம்ம புஷ்ஷு.. அதாங்க அமெரிக்க அதிபரு.. [க- 3] அவரு டிவியில வந்து, அமெரிக்காவைக் காப்பாத்த நாமளும் இதுபோல ஆயுதம் வைச்சுக்கணும்னு சொல்றாரு. திருட்டு பாஸ் ஒரு ப்ளான் போட, நம்ம கோவிந்தராசு அதை முறியடிச்சு, வைரஸை லவுட்டிகிட்டு, தன்னோட நண்பன் வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிறாரு.......

இப்ப கதையை எதுக்கு சொல்றே? படத்தைப் பத்திச் சொல்லுன்னு தானே அடிக்க வர்றீங்க! இதோ பிடிங்க.

முதல் 15 நிமிஷம் ஒரு மாபெரும் சரித்திரப்படத்தைப் பார்க்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் ஹே ராம் வாசனை அடிச்சாலும் கூட.

கமலோட 10 அவதாரத்துல,[ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், புஷ், அமெரிக்க ஆர்னால்ட், ஜப்பானிய அண்ணன், அவ்தார் சிங்,பாட்டி, பல்ராம் நாயுடு, பூவராகன், காலிஃபுல்லா] மனசுல நிக்கறது ரெண்டே ரெண்டு பேர்தான்.
பல்ராம் நாயுடு, பூவராகன்.

இத்தனை ரோலையும் இவரே செஞ்சிருக்கணுமான்னு மனசுல பட்டுகிட்டே இருந்திச்சு.

இதைப் பிரகாஷ்ராஜ் நல்லாப் பண்ணியிருப்பாரே, இதை நாஸர் பிச்சு ஒதறியிருப்பாரே, ஒரு லக்ஷ்மியோ, சுகுமாரியோ இதைப் பண்ணியிருக்கலாமேன்னு தோணிச்சு.

இவ்வளவு கஷ்டப்பட்டு, என்ன பிரமாதமாகச் செய்துவிட்டார்னு பார்த்தா, மனசுல ஒரு வெறுமைதான் மிஞ்சியது.

செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.

முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்து ஒரு அரை மணிக்கு வரும் காட்சிகள் தெளிவாகப் புரியவைக்க இயக்குநர் தவறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து வருகின்ற துரத்தல் காட்சிகள், ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதை ஒத்துக் கொண்டாலும், இதை அவர்களே இன்னமும் நல்லாச் செய்வாங்களே என்ற எண்ணமே மிஞ்சுகிறது.

ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல. நம்மவர் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது என்பதைக் கமலும் கூட உணர்ந்துகொள்ளாதது நம் துரதிர்ஷ்டமே!

ஒரு 'சேஸ்' கதையில் இத்தனை பாத்திரங்கள் வருகிறார்கள். இவை அத்தனையையும் ஒருவரே செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்கு கமல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் எனவே நான் கருதுகிறேன்.

நவராத்திரியில் நடிகர் திலகம் நடித்ததற்கும், தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

அசினின் பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவர் 'பெருமாளே' எனச் சொல்லும்போதெல்லாம் ஓங்கி அறையலாமா என எரிச்சலே வருகிறது.

பலராம் நாயுடு பாத்திரத்தில் கமல் கலக்கியிருக்கிறார். அதுகூட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாலையாவை நினைவூட்டுகிறது. இருந்தாலும் சுகமாக ரசிக்கலாம்.

பூவராகன் பாத்திரம், நன்றாகவே செய்திருந்தாலும், கதைக்குத் தேவையே இல்லாத ஒன்றாக ஒட்டாமல், தனிக்கதையாகப் போய்விடுவது பெரிய சோகம். கபிலனின் கவிதை வரிகள் இதம்!

இசை மிகப் பெரிய ஏமாற்றம். மல்லிகா ஷெராவத் பாடும் பாடலின் ஒரு குறிப்பிட்ட வரிகளைக் கேட்கும் போதெல்லாம்,
"எந்தத் தொழில் செய்தாலென்ன, செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே" என்னும் 'தேவுடா தேவுடா' பாடல் நினைவில் வந்து தொலைக்கிறது.

பின்னணி இசை தேவி பிரசாத். காட்சிகளுக்குத் தக்கவாறு ஒலியெழுப்பி விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். அசத்தி இருக்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கமல் மிகவும் உழைத்திருக்கிறார்; கஷ்டப்பட்டிருக்கிறார்; கடைசியில் வரும், 'உலக்க நாயகனே' பாடலின் போது இதை வேறு காட்டி நம்மையும் கஷ்டப்படுத்துகிறார் ரவிக்குமார்! இவ்வளவு தடிமனான தோலை முகத்தில் மறைத்தபின் என்ன முகபாவம் அதிலிருந்து கமலால் காட்டமுடியும்? ஏதோ வெளுத்த பிரேதத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.[கமல் ரசிகர்கள் மன்னிக்க!]

காமிரா பிரமாதம். ஒவ்வொரு கோணமும் மனுஷன் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். சுனாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் "கமல்" எனப் போட்டிருக்கிறது. பல இடங்களில் கிரேஸி மோஹனின் கைவண்ணம் தெரிகிறது.

அந்தக் கடைசி வசனம், 'நான் எப்ப கடவுள் இல்லைன்னு சொன்னேன்' எனச் சொல்லி நிறுத்திவிட்டு, '.... இருந்தா நல்லா இருக்கும்னு தானே சொல்றேன்' என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்வது தூள்!

பெருமாள் சிலையைப் பந்தாடியிருப்பது ஒருசிலருக்கு உவப்பாயிருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம். ஆனால், அது அவரது கொள்கை வெளிப்பாடு என்பதால் கண்டுக்காம விட்டுறலாம். புஷ் பாத்திரத்தைக் கோமாளியாகச் சித்தரிப்பதும் அவ்வகைப் பட்டதே!

தனக்காகப் படம் எடுக்கட்டும் கமல்! அது அவரது உரிமை! அதற்காக நம்மையெல்லாம் இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன்.
அவர் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தினால், கைப்பணத்தை இப்படிக் கரியாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அவரிடம் இருக்கும் திறமைக்கு, அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
நல்ல கதையம்சம் உள்ளஒரு எளிமையான படம்!
சொன்னாலும் சொல்லலைன்னாலும் இதுதான் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடமிருந்து விரும்புவது.

இடைவேளைக்குப் பின் தியேட்டரில் இருந்த நிசப்தம் இதைத்தான் சொல்லியது.

வெளியே வரும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!

Read more...

Monday, June 09, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

//மறப்பினும் ஒத்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்
இந்த குறளின் பொருள் என்ன? இதில் சொல்லப்படும் 'பிறப்பொழுக்கம்' என்பது என்ன?ஜாதி கட்டுமானமா? ஆம் என்றால் வள்ளுவர் வருணாசிரமத்தை ஆதரித்து குறள் எழுதினாரா?//


செல்வன் கேட்ட இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு, மயிலை மன்னாரிடம் போனேன்.

இதையும் காட்டினேன்.

படித்தான். நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பீடியை வலித்தான். சற்று நேரம் பொறுத்து 'கடகட'வெனச் சிரித்தான்..... கண்களில் நீர் வழியச் சிரித்தான்!!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விநோதமாக அவனைப் பார்த்தேன்.

அவன் இப்படி நடந்துகொண்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை.

"மன்னார்! உனக்கு ஒண்ணும் ஆகலியே! நல்லாத்தானே இருக்கே?" என ஒருவிதப் பயத்துடன் கேட்டேன்.

சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை ஒருவித சோகத்துடன் பார்த்தான்.

"ஐயன் கொறளு எளுதி ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிருச்சு. ஆனா, இதுவரைக்கு அல்லாரும் சும்மா மேம்புல்லை மேயற மாரி, தனக்கு வோணும்ன்றத மாட்டுந்தான் பாக்கறாங்காளே ஒளிய, அவரு சொல்ல வந்த கருத்து இன்னான்னு, சிந்திச்சுப் பாக்கவே இல்ல. அத்த வுடு! ஒரு கருத்துக்கு பத்து கொறளுன்னு எளுதியிருக்காரு. எதுனாச்சும் ஒரு அதிகாரத்த மட்டும் எடுத்துகிட்டு. அதுல இன்னா சொல்ல வராருன்னு பாக்கறாங்களான்னா, அதுவும் இல்ல. அது மட்டுமா? அவரு சொன்னத தனக்கு ஏத்தமாரி அர்த்தம் சொல்றதுன்னு ஆரம்பிச்சு, இப்ப தனக்கு ஏத்தாப்பல, கொறள மாத்தக் கூட தயங்காம செய்யறாங்க. இப்பிடியே போனா இது எங்கே போயி முடியுமின்னு ஆராலியும் சொல்ல முடியாது.

ஒன்னோட தோஸ்த்துன்னு சொல்லுவியே, அதான் ஒங்க செல்வன், அவரு தெரிஞ்சு செஞ்சாரோ, தெரியாமச் செஞ்சாரோ, எனக்குத் தெரியல. ஆனா, ரொம்ப நாளா நான் மனசுல நெனைச்சுகிட்டு இருந்த ஒரு விசயத்தச் சொல்றதுக்கு நல்லாவே ஒதவி பண்ணியிருக்காரு. அதுக்குன்னே அவரு இப்ப எனக்கும் தோஸ்த்தாயிட்டாரு!" என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஏற்கெனவே சென்னை வெயிலின் கொடுமை தாங்காமல் தவித்த எனக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது.

"என்ன சொல்றே மன்னார்? நான் இந்தக் குறளை எடுத்துக் கொண்டு உன்னிடம் வந்திருக்கவே கூடாது என நினைக்கிறேன். சரி, நான் வர்றேன். அப்புறமாப் பார்க்கலாம்" என எழுந்தேன்.

ஒரு வலுவான கை என்னை அழுத்தி உட்கார வைத்தது. பதட்டத்துடன் திரும்பினேன். நிஜமாகவே மன்னாரின் முகத்தில் கோபக்கனல் வீசியது. அதிர்ந்து போய் உட்கார்ந்தேன்.

"இப்ப நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே! ஒன் தோஸ்த்து செல்வன் சொன்ன இந்தக் கொறளு ஒண்ணு போதும்! நான் சொல்ல வேண்டியதுக்கு. இதுல சில பலான பலான விசயம்லாம் வரும். ஆனா, அது,.... அது இல்ல! நான் சொல்லச் சொல்ல ஒனக்குப் புரியும்.

ஒரு சாதாரணமான சொல்லு. அதுக்கான அர்த்தமே வேற. ஆனா, நாளாவட்டத்துல, அதுக்கு வேறொற அர்த்தம் ரொம்பவே பாப்புலராயிடுது. இப்ப அந்த சொல்லை சொல்றதே தப்புன்னு ஒரு அபிப்பிராயம் வந்திருது! நீ ஒரு பெரிய தமிள்........ ஆங்...... அது இன்னா?.... ஆங்... அதான்... அறிஞன்.... பெரிய தமிள் அறிவாளி!... நீ இத்தப் படிக்கறே! இதுக்கு அப்பிடியே பொருள் சொல்ல முடியாம பம்முறே! ஏன்னா இப்ப அது ஒரு 'கெட்ட வார்த்தை'! "நான் ஆரு? எனிக்கு இன்னா பேரு? இப்பப் போயி இதுக்கு நான் அர்த்தம் சொன்னா ஊரு ஒலகம் என்னைப் பத்தி இன்னா சொல்லும். போயும் போயும் ஒரு வள்ளுவனுக்காவ, நான் என்னோட இமேஜைக் கெடுத்துக்கறதா"ன்னு நெனைக்கறான். கொஞ்சம் ரோசனை பண்றான்.

இப்பத்தான் அவனுக்கு அவனோட ஆத்தா நெனைப்பு வருது! அதாம்ப்பா! நீங்கள்லாம் அடிக்கடி சொல்லிகிட்டுத் திரியுறீங்களே.. அந்தத் தமிளன்னை... அவள தொணைக்கு இளுத்துக்கறான்! அவ கொடுத்த பாலுல வளந்த பய.. இப்ப அவளையே சந்திக்கு இளுத்து, கொறள்ல ஒரு சொல்லை இப்பிடியும் அப்பிடியுமா மாத்தறான். ஆமாம்ப்பா.. ஐயன் எளுதின கொறளையே மாத்தறான். இதுக்கு மத்த ஆளுங்களையும் கூடச் சேத்துக்கறான்..... பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கூப்பிடறான். அவங்களும் வந்து, 'ஐயா சொல்றதுதான் சரி; ஐயன் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்'னு ஜால்ரா போடறாங்க. இப்ப ஐயன் எளுதினது மறைஞ்சுபோய், ஒரு புதுக் கொறளு,....... அதுக்குப் புதுப் புது அர்த்தம்ல்லாம் வந்து... இதான் ஐயன் கொறளுன்னு ஆகிப்போயிடுது! இதான் நடக்குது இப்ப!" என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

"மன்னார்! உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு நீ இப்பிடியெல்லாம் பேசறே?" என அதட்டினேன் நான்.

மன்னார் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது.

நான் பதறிப் போனேன்!

"சொல்லு மன்னார். நீ என்ன சொல்லணுமோ சொல்லு. நான் கேட்டுக்கறேன். அதுக்காக நீ இப்படியெல்லாம் பேசாதே" என அவனை வேண்டினேன்.

"ஓத்து" என்றான் மன்னார்.

ஒரே அதிர்ச்சி எனக்கு! மன்னாரா,...... என் மயிலை மன்னாரா.... இப்படியெல்லாம் பேசுவது என நடுங்கினேன்.

"என்ன சொல்றே மன்னார்?' என்றேன்.

"ஒத்து" என்றான் மன்னார்.

'ஓ! 'ஒத்து'ன்றியா? இப்ப நான் எதை ஒத்துக்கணும்? இல்லை.... எங்கே ஒத்திப் போகணும்?' எனச் சிரித்தேன்.

மீண்டும் "ஓத்து" என்றான் மன்னார்.

'இது கெட்ட வார்த்தை மன்னார்!! ரவுடின்னாலும், நீ இப்படியெல்லாம் என்கிட்ட பேசமாட்டியே! இப்ப என் இப்படியெல்லாம் பேசறே' என நான் வினவினேன்.

'இப்பத்தான் இது கெட்ட வார்த்தை. ஆனா, எங்க ஐயன் காலத்துல இது கெட்ட வார்த்தை இல்லை. இதுக்கு இன்னா அர்த்தம் தெரியுமா? 'ஓத்து'ன்னா 'வேதம்லாம் படிக்கற பாடசாலை' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்.

ஏதோ சொல்ல வருகிறான் என உஷாரான நான், 'ம்ம். அப்புறம்?' என அவனைத் தூண்டினேன்.

'ஒரு பொஸ்தகத்தைப் படிக்கறே. படிச்சு முடிச்சிட்டு தூக்கிப் போட்டுடறே! அதுக்குப் பேரு படிப்பு. இப்ப ரொம்பப் பேரு. படிக்கறது ஒண்ணு; ....... பி.ஏ., எம்.ஏ.ன்னு என்னமோ படிக்கறாங்க,..... ஆனா. பண்றது இன்னாமோ பெஞ்சு தொடைக்கற வேலை. ஆனாக்காண்டி, ஒரு சமாச்சாரத்தை நல்லாப் படிக்கணும்னா இன்னா பண்ணனும்? திரும்பத் திரும்பப் படிக்கணும். அதுக்கு 'ஓதறது'ன்னு பேரு.

அந்தக் காலத்துல... அதாம்ப்பா... ஒரு ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்தி, .....இந்த வேதம்னு சொல்லுவாங்களே, அதைப் படிக்கறவங்க அல்லாரும், சொல்றவன் வாயைப் பார்த்துகிட்டே,..... அவன் ஒதடு அசைஞ்சு அதுலேர்ந்து வர்ற வார்த்தையைக் கேட்டுகிட்டே .....திருப்பித் திருப்பிச் சொல்லியே கத்துக்குவாங்க. அதாவது, திரும்பத் திரும்ப ஓதியே கத்துக்குவாங்க. அவங்களுக்கு பார்ப்பான்னு பேரு.

இதுவரைக்கும் புரிஞ்சுதா?

இப்ப இவங்க சொல்றதுக்கு 'ஓதுதல்'னு பேரு. இப்பிடி 'ஓத்து'கிட்டு... அதாம்ப்பா ... ஓதியே கத்துகிட்டவங்க..... மறந்தாக் கூட மறுபடியும் இன்னொருத்தன் வாயைப் "பார்த்து", அவன் சொல்றதைக் கேட்டு, கத்துக்கிட முடியும். அவந்தான் "பார்ப்பான்"

ஆனாக்காண்டிக்கும், நீ எந்தப் பிறப்புல பிறந்திருந்தாக்கூட, ஒளுக்கம் தவறி நடந்தியானா, ...நீ பொறந்த பொறப்பு எம்மாம் பெரிய பொறப்புன்னு ஊரு ஒலகம் சொன்னாலுங்கூட,..... இனிமே ஒனக்கு மருவாதி கிடையாது!

இதான் ஐயன் சொன்னது.

இன்னா முளிக்கறே? செல்வன் சொன்னது இது இல்லியேன்னா? அதான் நான் இம்மா நேரம் கூவினேனே!

செல்வன் சொன்னது ஐயன் கொறள் இல்லே!
இப்ப அவரு இன்னா சொன்னாரு?

"மறப்பினும் த்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்"

இது இல்லே ஐயன் எளுதினது.


"மறப்பினும் த்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்[புஒ]ழுக்கம் குன்றக் கெடும்"

இதான் ஐயன் சொன்னது!


ஐயன் சொன்னப்ப 'ஓத்து'ன்றதுக்கு இருந்த அர்த்தம் வேற.
இப்ப அதுக்கு இருக்கற அர்த்தம் வேற!

இப்ப அது ஒரு கெட்ட வார்த்தை! நீ கூட பதறினியே! மன்னாரா இதெல்லாம் சொல்றான்னு..... அதுமாரியான கெட்ட வார்த்தை!

ஒங்க தமிள் அறிவாளிங்கல்லாம் அதை ஐயன் வாயிலேர்ந்து வந்துதுன்னு சொல்ல வுட்டுடுவாங்களா? இப்ப, இவங்க தானே தமிளைக் காப்பாத்த அவதாரம் எடுத்து வந்திருக்காங்க! ஐயன் மேல ஒரு பளி விள வுட்டுருவாங்களா? "ஓத்து"ன்றத 'ஒத்து'ன்னு மாத்தி, இதான் ஐயன் சொன்னதுன்னு, ஒரு புதுக் கொறளை வுட்டுட்டாங்க. இதை மதுரை திட்டமும் ஏத்துகிட்டதுதான் பெரிய சோகம்!" எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மன்னார்-

அவனது சோகம் என்னை இப்போது முழுமையாகத் தாக்கியது.

"நீ சொல்லுவது என்னவெனப் புரிகிறது மன்னார்!' என அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தேன்.

"இது மட்டுமில்ல சங்கரு! 'பிறப்பு, ........ஒழுக்கம் குன்றக் கெடும்'னு ஐயன் சொன்னத, 'பிறப்பொழுக்கம்'னு பதம் பிரிச்சு, ஒன்னோட தோஸ்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாரு, அதான் என்னிய இம்மாந் தூரம் பேச வைச்சது. அதப்பத்தி இன்னோரு நாளு சொல்றேன். ஐயனைக் கொறை சொல்றத வுட்டு, அவர் சொன்னதைப் புரிஞ்சுக்கப் பாருங்கப்பா'' எனச் சொல்லிச் சமாதானமானான் மயிலை மன்னார்.

நான் நாயரைப் பார்த்துக் கண்ணடித்தேன்.

உடனே, இரு தட்டுகளில் மசால் வடையை வைத்து எங்கள் பக்கம் நீட்டினார் நாயர்.

'இன்னிக்கு டீ வேணாம். ரெண்டு நன்னாரி ஷர்பத்' என அதட்டலாகச் சொன்னேன் நான்.

"இம்மாந்நேரம் கேட்டுட்டு இப்பிடி சொல்றியே! இருக்கறத மாத்தாதே. நாயர்! டீயே போடுப்பா" என்றான் மயிலை மன்னார்!

வெட்கித் தலை குனிந்தேன் நான்!

Read more...

Sunday, June 01, 2008

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

"விட்டு விடுதலையாகி நிற்பாய்!"

விண்ணைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்!

விடைபெற்றுச் சென்ற என் குட்டிராணி திரும்பவும் வருகிறாளா என அண்ணாந்து பார்த்திருந்தேன்.

வழக்கமான ஆற்றங்கரையோரம்தான்!

மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில், அந்தச் சிற்றாறு 'சலசல'வென ஓடிக்கொண்டிருந்தது.

என் கால்களும் அதில் நனைந்து கொண்டுதானிருந்தன!

இலைகளும் சருகுகளும், மலர்களும் சென்றுகொண்டுதான் இருந்தன!

மரங்கள் என் பார்வையை சற்று மறைத்தன.

அதையும் மீறி, வானம் வசப்பட்டது!

மரக்கிளை ஒன்றில் ஒரு குரங்கு!

தன் கையால் ஒரு கிளையைப் பிடித்தபடி குரங்கு இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே...... சட்டென....... தன் பிடியை விட்டது!

இப்போது அது அந்தரத்தில்!

அடடா! என்ன ஆகப் போகிறது இந்தக் குரங்குக்கு!

எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், இலக்கும் இல்லாமல், தான் பற்றியிருந்த பிடியையும் விட்டுவிட்டதே!

என்ன ஆகும் இதற்கு!

இப்படி ஒரு துயர நிகழ்ச்சியைக் காணவா நான் இங்கே இருந்தது!

இதைப் படிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் கூட ஆகவில்லை!

அந்தரத்தில் தவழ்ந்த அந்தக் குரங்கு, கீழே.... கீழே... கீழே விழுந்த வேகத்தில் ஒரு கிளையை வெகு லாவகமாகப் பற்றியது!

ஒற்றைக்கையில் பற்றிய வேகத்தில் ஒரு ஆட்டம் போட்டு, சட்டென ஒரு குட்டிக்கரணம் போட்டு, அதன் மீது ஏறி ஓடியது!

இப்போது அது ஒரு பத்திரமான இடத்தில்!

எனக்கும் மூச்சு வந்தது!

மகிழ்ச்சியுடன் சிரித்து, கைகளைத் தட்டினேன்!

"குரங்கு... குரங்கின் திடீர்த் தாவல்.....!"

இந்தக் காட்சியின் பொருள் என்ன? இது சொல்ல வந்த கருத்து என்ன? என என் 'குரங்கு' மனம் எண்ணத் தொடங்கியது!

திடீரென மனதில் ஒரு மின்னல்!

ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

குரங்கு..... நாம் எல்லாரும்!

அதன் தாவல்...... 'போதுமடா சாமி!' என விட்டு விடுதலையாக எண்ணுகின்ற நிலை!

ஆனால்,
'எனக்கும் மேல் ஒருவன் இருக்கிறான்; அவன் எம்மைக் காப்பான்!' என்ற நம்பிக்கையுடன், இலக்கு ஒன்றைக் குறிவைத்து, மனதுக்கும் தெரியாமல் தன்னைப் பிணைத்திருக்கும் பிடிப்பை விட்டுத் தாவுகிறது இந்த ஆத்மா!

இந்த நினைவைக் கொடுத்தது யார்?
எவரால் இது நிகழ்கிறது?

'என்னை நம்பி உன் பிடிப்புகளை நீ விடு! யான் உன்னைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பேன்!' என இறைவன் எத்தனையோ இறைதூதர்கள் மூலம் சொல்லிய சொல் என் நினைவைத் தாக்கியது!

விடுவோமா நாம்?
விடுகிறோமா நாம்?

அநேகமாக இதைச் செய்வதில்லை!

ஏன்?
அந்தக் குரங்கு விட்டதே!
அடுத்து எதைப் பிடிப்போம் என்ற நினைப்பைக் கவனத்தில் கொள்ளாமல் தன்னை விடுத்தது அந்தக் குரங்கு என நினைப்பது நம் மனம்!

ஆனால், இதுவரை தான் பிடித்திருந்ததை முற்றிலுமாக விடுத்து, 'நீயே கதி' என ஒரு இலக்கை நோக்கியே அது தாவியது என்பதை உணர இந்த மனத்துக்குத் தெரியவில்லை!

'தவறு செய்து விட்டாயே' என அந்தக் குரங்கைப் பற்றி அவசரப்பட்டு நினைத்தது போலவே, எந்த ஒரு செயலையும் நாம் செய்யும் முன்னும், பின்னும், நம்மைப் பழித்து அது வருத்தும்!

மனம் என்னும் ஒன்றின் பிடிப்பில் மிகவுமே ஆழ்ந்திருப்பதால்தான், இந்த 'விடுதலை' நிகழ மறுக்கிறது!

விட்டு விடுதலை ஆனாலும், இந்த ஆத்மா இறை நம்பிக்கையோடு விட்டு விடுதலை ஆனாலும், ........இந்த மனம் உன்னை இன்னமும் இறுகத்தான் பிடித்திருக்கும்!
எதனை விட்டாலும், உன்னால் இந்த மனத்தின் பிடிப்பை மட்டும் விடவே முடியாது!
கூடவே வரும்!

அது மட்டுமல்ல! உன்னை வருத்தியும் அலைக்கழிக்கும்!

பிறவியும் தொடரும்!
இறையின் வேலை....... இன்னமும் தொடரும்!
......இந்த மனத்தை நாம் விடும் நாள் வரை!
எப்படி இதை விடுவது?

யோசித்துக் கொண்டே எழுந்து நடந்தேன்!

குரங்கு ஒன்று ஒரு கிளையை விட்டுப் பாய்ந்து இன்னொரு கிளையைப் பிடித்தது!!

Read more...

Wednesday, May 28, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"



****** பாடல் ******

ராகம்: பைரவி
தாளம்: திஸ்ர ஏகம் [3]

தனன தனன தனன தனன
தனன தனன....... தனதான

திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின்

அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவே நீள்

சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.



****** பொருள் விளக்கம் ******

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]
[சிறிய பாடலுக்கு நீட்டி முழக்க வேண்டியிருக்காது என நினைத்தேன்! முழக்கித்தானிருக்கிறேன்!:))]


"சமர முக வெல் அசுரர் தமது
தலைகள் உருள
மிகவே நீள் சலதி அலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே"

நிலையான தவம் செய்து
அழியாத வரம் பெற்று
எவராலும் வெல்லாத
திறன் கொண்ட இராக்கதரின்
தலைகளெல்லாம் உருண்டிடவும்,

வற்றாத நீருடைய
பரந்திருக்கும் நீளமுடை
கடலினிடை சூரன் ஒளிய
முற்றாக அது வற்றி
அற்றாது அது கதறிடவும்

மாயங்கள் புரிகின்ற
கிரௌஞ்சமெனும் மலையாக
தாரகனும் உருமாற
நெடிதுயர்ந்த அம்மலையை
பொடியாக்கிப் பிளந்திடவும்


அன்னைதந்த வேல் விடுத்து
அரக்கர்குலம் அழித்தவனே!

"வெம் அரவு அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே"


கொடிய விஷம் கக்குவதால்
வெப்பப் பெருமூச்சினை நா வழியே
வீசுகின்ற ஆதிசேஷன் எனும்
பாம்பணையில் பள்ளி கொண்டு
பங்கயம் போலும் கண்மலர் கொண்ட
நாராயணனின் மருகோனே!


"மிடறு கரியர் குமர"

அமுதம் எடுக்க அசுரரும் தேவரும்
பாற்கடலைக் கடைந்த வேளை
வெப்பம் தாளாது வருந்திட்ட
வாசுகி எனும் பாம்பின் வாயினின்று
புறப்பட்ட கொடும் விஷமாம்
ஆலகாலத்தைத் தான் வாங்கி
தன் கண்டத்தில் வைத்ததினால்
"கரியர்" எனப் பெயர்பெற்ற
சிவனாரின் திருக்குமாரனே!


"பழநி விரவும் அமரர் பெருமாளே"

தேவர் குறை தீர்த்துநின்ற
பெருமைமிகு பழனியிலே
எழுந்தருள் செய்கின்ற பெருமை மிக்கவரே!


"திமிர உததி அனைய நரக செனனம்"

பிறவியும் கடலும் ஒன்றெனச் சொல்வார்
அறிந்தவர் அதனை ஆமென உணர்வார்


கருநீலம் கொண்ட கடல் இருளுற்று இருக்கும்
அறியாமை என்னும் இருள் பிறவியிலே உண்டு

அலைகள் கடலில் அடுக்கடுக்காய் வந்து ஓய்வதே இல்லை
ஆசை பாசம் என்னும் அலைகள் பிறவியில் என்றும் ஓய்வதும் இல்லை

மீனும், மலையும், திமிங்கிலமும் கடலில் வாழும் உயிர்வகைகள்
எண்ணம், பாவம், மதங்கள் என்னும் பல்வகை உணர்வுகள் பிறவியிலே

கரையின்றி நீண்டிருக்கும் கடல்நடுவே நின்றிருந்தால்
கரைகாணா நிலையென்றே பிறவியினைச் சொல்லிடுவார்

கடல் போலும் பிறவியினை தொல்லையெனச் சொல்லிடுவார்
நரகமென நலிந்திருக்கும் தொல்லைகளே இதிலுண்டு!


"அதனில் விடுவாயேல்"

இத்தனை தொல்லைகள் நிறைந்திட்ட
நரகவாழ்வு எனும் பிறவிப் பெருந்துயரில்
எனை ஆழ்த்திட நீ திருவருள் புரிகுவாயேல்

"செவிடு"

'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்'
என்கின்ற தமிழ்மறையின் வாக்கொப்ப,

கண் இல்லாவிடினும் உணர்ந்து தெரிந்திடலாம்
சுவையுணர்வு இல்லாவிடினும் விழுங்கி உயிர் வாழ்ந்திடலாம்
மணம் உணராவிடினினும் சுவையிருப்பின் பயனுண்டு
தொடுவுணர்வு இல்லையெனினும் செவி வழியே உணர்ந்திடலாம்

பிறந்தவுடன் பெயர் ஓதுவதும் செவியிலேயே
முதலாண்டு அணிகலனும் செவித் தோடே
'தோடுடைய செவியன்' என சிவனாரைப் புகழ்வதுவும் செவிவழியே
எழுத்தறிவு உணர்ந்திடும்முன் கேட்பதுவும் செவிவழியே
'ஓம்' என்னும் வரிவடிவில் அமைவதுவும் செவியேதான்
மரிக்கையிலே வழியனுப்ப மந்திரம் சொல்லுவதும் செவியிலேதான்
இத்தகைய செவியுணர்வு நன்கருளி செவிடில்லாமலும்,

"குருடு"

அருள்மேனி காண்பதற்கு அருளுவதுவும் கண் வழியே
திருவாளர் துணை காணத் தேவையிங்கு கண்கள் இங்கே
'கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க' எனக் கோதை
சொன்னதுவும் கண் குறித்தே என்பதினால் குருடில்லாமலும்,

"வடிவு குறைவு"

இறைவனாரை,
வாழ்த்துதற்கு வாய் வேண்டும்
வணங்குதற்குத் தலை வேண்டும்
அருச்சிக்கக் கைகள் வேண்டும்
வலம் வந்திடக் கால்கள் வேண்டும்
எனவே,
என் வடிவினில் எக்குறையும் இல்லாமல்
சுத்தமாகப் படைத்திடவும்,

"சிறிது மிடியும் அணுகாதே"

'கொடிது கொடிது வறுமை கொடிது' என்கின்ற
தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது போல்
வறுமை,
வனப்பை அழித்து உலர்த்தி வாட்டும்
உறவினிடை கலகத்தை உண்டாக்கும்
சோம்பல் மிக வளர்க்கும்
கஞ்சகுணம் மிகவாகும்
பொய், பேராசை, அவமானம் என்கின்ற
தீயவையை நம்முள் வளர்க்கும்
எனவே,
சிறிதளவும் வறுமையென ஒன்று என்னை
அணுக வேண்டியதே கூடாதென வேண்டுகின்றேன்


"அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் வரவே"


மருவற்ற தேகமுடைய
தேவர்போலும் வடிவும்
நன்நெறியில் திகழ்கின்ற
மேன்மைக் குணங்கள்
நிறைந்திருக்கும் குலத்தினிலே
யான் பிறந்து நல்லறிவும்
நிறைவான குணங்களும்
எனக்கு வந்திடவே


"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்"


நினது திருவருளை எனக்கு மிகவருளி
என்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்
நீ அடிமை செய்து, நினது வசமாக்கி
தடுத்தாட்க்கொண்டிட வந்தருள வேண்டும்!
*************************************************


அருஞ்சொற் பொருள்

திமிரம் - இருள்
உததி - பெருங்கடல்
மிடி - தரித்திரம்
சமர முகம் - போர்க்களம்
சலதி - கடல்
பதலை - மலை
தகர - உடைய
அயில் - வேலாயுதம்
வெம் - வெப்பம்
அரவு - பாம்பு
அணை - மஞ்சம்
மிடறு - கண்டம், தொண்டை
மிடறு கரியர் - விடம் உண்டதால் கரிய தொண்டை உடைய சிவன்
விரவும் - எழுந்தருளியிருக்கும்
******************************************


வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*******************************

Read more...

Sunday, May 25, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 8

"பாரதி" --சில காட்சிகள் -- 8


முந்தைய பதிவு இங்கே

'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'
என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?
[அடுத்த பதிவில்]


'விடுதலை' பெற, ' செய்க தவம்! செய்க தவம், நெஞ்சே! ' என மனதுக்குச் சொல்லித் தருகிறான்.

'தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்' எனவும் உற்சாகப் படுத்துகிறான்.

'அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.' என முடிக்கிறான்.

இந்த அன்பென்னும் ஒன்றே மனிதரின்..... அவர்கள் மனங்களின் 'இயல்பு'; இதைத் தவிர வருகின்ற மற்றதெல்லாமே, எம்முடைய இயற்கை குணம் இல்லையெனவும் வலியுறுத்துகிறான். அப்படி வருகின்ற மற்ற குணங்களை எல்லாம் எப்படி வெல்வதாம்? சொல்கிறான் பாரதி!

'இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்.'

எம்முடைய செய்கைகள் எல்லாமே இந்த மனத்தின் ஆசையினால் விளைகின்ற ஒன்று. இதுதான் இந்த மனத்தின் இன்னொரு இயல்பு.

'செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்'

எனவே உனது ஒரே இயல்பான அன்பு கொள்வதை, அன்பு செலுத்துவதை, அன்பைக் காட்டுவதை, ஏன் செய்ய மறுக்கிறாய் எனவும் சாடுகிறான்.

'சீர்மிகவே பயிலு நல்லன்பை இயல்பு எனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்'

ஆம்! இவனுக்குத்தான்,,.... இவனது மனமே முப்பது கோடி ஆயிற்றே! அவர்களுக்கும் சேர்த்தேதான் சொல்லுகிறான்!

'முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!'

ஆத்மாவே விநாயகன் தான் எனச் சொல்லியவன், அந்த விநாயகனை அனுதினமும் நினைத்து, விடுதலை பெறவேண்டுமாயின் அன்பெனும் தவத்தை அயராமல் செய்து, அன்பு ஒன்றே உன் இயல்பு என்பதை உணர்ந்து செயல்படுவாய் enkiRaan

[moympu (p. 828) [ moympu ] , s. strength, valimai; 2. the shoulder, tol.]

இயல்பு என்பதே ஒரு வலிமை, உன்னோடு உடன் வரும் ஒரு துணை என்பதை மிகவுமே அழுத்தமாகச் சொல்லுகிறான் பாரதி!

இந்தத் துணையின் உதவியோடு நிகழ்கின்ற கலியை நீக்கி, வரப்போகும் கிருத யுகத்தினை எம்மால் கொண்டுவர முடியும் என்பதைச் சொல்ல வந்து, அதற்கு என்ன செய்யவேண்டும்? எனச் சொல்லப் புகுகிறான் பாரதி.

வரிசையாகச் சொல்லுகிறான் நோய் தீர்க்கும் ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு போல!

'மொய்க்கும் கவலை போக்கி;


முன்னோன் அருளைத் துணை ஆக்கி;

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி;

உடலை இரும்புக்கு இணை ஆக்கி;

பொய்க்கும் கலியை நான் கொன்று;

பூலோகத்தார் கண் முன்னே;

மெய்க்கும் கிருத யுகத்தினையே;

கொணர்வேன்; தெய்வ விதி இஃதே'

இதைச் செய்தால் எவரால்தான் வெல்ல முடியாமல் போகும்?

நிறையச் சொல்லிவிட்டான் பாரதி!
நிறையவே கேட்டு விட்டான் விநாயகனிடம் பாரதி!
அவனுக்கே பாவமாய் இருக்கிறது விநாயகனை நினைத்து!
முடிக்கும் முன் கொஞ்சம் வாழ்த்தி இவனைப் பாடலாமே என எண்ணுகிறான்!
சொற்களுக்கா பஞ்சம் இவனிடம்?
பொழிகிறான்!

'விதியே வாழி!
விநாயகா வாழி!
பதியே வாழி!
பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி!

இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி!
வீரம் வாழி!
பக்தி வாழி!
பலபல காலமும் உண்மை வாழி!
ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங்களாம் கண்டீர்!
பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்!
வெற்றி தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே!'


ஏன் கிருத யுகம்?
கலி யுகத்திற்கு என்ன கேடு!

பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு வேறு சான்றே தேவையில்லை!
இந்த விநாயகர் நான்மணிமாலை ஒன்றே போதும்!

1920 - 1930
வெள்ளையர் ஆட்சியை அடியோடு ஏற்று மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்ற அவலம்.
இன்னமும் காந்தி என்கின்ற மகானின் அருமையை முழுதுமாக மக்கள் அறியாத நேரம்!

இது கலியின் நிகழ்வு என நினைக்கிறான் பாரதி!
சிந்திக்கிறான்!
கலி முடிந்தால் அடுத்து வரவிருப்பது கிருத யுகம்!
கலி ஏன் முடியவேண்டும்? நாமே அதை முடித்தால் என்ன என அலறுகிறான்!
ஏ மனம் மயங்கிய மக்களே! அன்பைக் கொள்ளுங்கள்! அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்! கலியுகம் முடிந்து கிருத யுகம் தானே மலரும் எனக் கதறுகிறான்.
உங்களது ஆன்மாவான விநாயகனின் அடி பணிந்தால் அன்பு தானே மலரும் என அடித்துச் சொல்லி முடிக்கிறான் பாரதி!

நான்மணிமாலை என்றால் என்ன?
வெண்பாவில் தொடங்கி, கலித்துறையில் பா ஒன்றை அடுத்து வைத்து, மூன்றாவதாக ஒரு விருத்தம் பாடி, கடைசியாக ஒரு அகவல் பாடி நான்கு விதமாக ஒரு கவியை அளிக்கிறான் இங்கு!

இப்படி நான்கு நான்காக பத்து பாடல்கள்!

ஆக மொத்தம் 40 பாடல்கள்.

விநாயகனுக்கு இந்த வகையில், ஒரு நான்மணி மாலையால் அணி செய்கிறான் பாரதி!

இத்துடன் இந்தக் காட்சி நிறைவடைகிறது.

நான்மணிமாலை முழுதும் இன்னும் ஓரிரு நாட்களில் இடுகிறேன்.

அடுத்த சில காட்சிகள் வேண்டுமா என இதுவரை படித்தவர்கள் சொன்னால், தொடரலாம்.

இல்லையேல், இத்துடன் நிறை செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP