Monday, December 14, 2009

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

சமீபத்தில், 'பிள்ளையார் கதை' என ஒரு இடுகையை ஆறு பதிவுகளாக இட்டிருந்தேன். கார்த்திகைக் கார்த்திகைத் தீபம் கழிந்த மறுநாள் தொடங்கி, இருபத்தோரு இழை கரத்தில் கட்டி, இருபது நாட்கள் இந்தக் கதையைப் படித்து, இருபத்தோராம் நாள் இந்த விநாயகர் சஷ்டி விரதத்தை முடிக்க வேண்டும் என்பது மரபு! இந்தக் கதை சுமார் 745 வரிகள் கொண்டது. அதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறேன். வருகிற 22-ம் தேதி, குறைந்த பட்சமாக, இதனையாவது படித்து அன்பர்கள் இன்புறுவார்களாக! நன்றி!

"கணபதி எல்லாம் தருவான்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"


ஐங்கரன் அருளைப் பாடுதல் இன்பம்

அவன் புகழ் தினமும் கேட்டலும் இன்பம்

பூமியில் மானுட ஜென்மமெடுத்த

உமையைத் திருமணம் சிவனார் புரிந்து



அழகுறு சிவனும் தளர்வுறா உமையும்

கரியுடல் கொண்டு கலந்தது இன்பம்

அதனில் பிறந்த கரிமுகன் தோற்றம்

கொம்பையுடைத்துக் கயமுகன் அழித்திட



அசுரனை மூடிக வாகனம் ஆக்கி

வல்லபை மணந்த கணபதி வணங்கி

ஆவணித் திங்கள் சதுர்த்தி நன்நாளில்

சதுர்த்தி விரதம் நோற்றல் இன்பம்



மகிழ்வுடன் ஆடிய குண்டுக் கணபதி

தோற்றம் கண்டு எள்ளிய மதியிலாத்

திங்களை வெகுண்டு சபித்தல் கண்டு

தேவரும் கார்த்திகை நோற்றதும் இன்பம்


கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்

இருபத்தோரிழை இன்புறக் கட்டி

ஒருவேளை உண்டி உண்டு ஒருமனத்துடனே

பிள்ளையார் கதையைப் படித்தலும் இன்பம்



தேவகி மைந்தன் உரைத்தது கேட்டு

பாண்டவர் நோற்று வென்றது இன்பம்

அறுமுகன் பிறப்பும் சூரன் முடிப்பும்

அழகு குஞ்சரியை திருமணம் கொண்டதும்



அமராவதியை நீங்கிடல் கேட்டு

அன்னை பார்வதி துயரமடைந்து

பொய்க்கரியுரைத்த மாலினைச் சபித்துப்

பைந்தள் பாம்பாய் கணபதி உறையும்



ஆலின் அடியில் உழன்றிடும் வேளை

கணபதி விரதம் நோற்றதால் மாலும்

தன்னுரு மீண்டதைப் படித்தலும் இன்பம்

சினந்த கவுரியைக் கபாடம் திறக்க



சிவனும் நோற்றுச் சிறந்ததும் இன்பம்

பார்வதி நோற்றுப் பாலனை மீண்டும்

தன்மடி சேர்த்து மகிழ்ந்தது இன்பம்

இலக்கண சுந்தரி இன்னல்படவே



அவளும் நோற்று மகிழ்ந்தது இன்பம்

இன்பம் இன்பம் இனியவன் திருக்கதை

தினமும் ஓதிடச் சேர்ந்திடும் இன்பம்

எல்லாம் தந்திடும் பிள்ளையார்கதை இன்பமே!

"கணபதி எல்லாம் தருவான்!"

Read more...

Tuesday, December 01, 2009

அ.அ. திருப்புகழ் - 35

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'


திருக்கழுக்குன்றம் மேவிய திருமுருகனைக் குறித்த பாடல் இது! கார்த்திகைக் கார்த்திகைத் திருநாளில் இதனை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!

**** பாடல் ****

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்


இறைவியெனு மாதி பரைமுலையினூறி

யெழுமமிர்த நாறு கனிவாயா


புழுகொழுகு காழி கவுணியரில் ஞான

புனிதனென ஏடு தமிழாலே


புனலிலெதி ரேற சமணர்கழு வேற

பொருதகவி வீர குருநாதா


மழுவுழைக பால டமரகத்ரி சூல

மணிகரவி நோத ரருள்பாலா


மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை

வளமைபெற வேசெய் முருகோனே


கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு

கதிருலவு வாசல் நிறைவானோர்


கடலொலிய தான மறைதமிழ்க ளோது

கதலிவன மேவு பெருமாளே.


*****************************


******* பொருள் *******

இந்த அரிய பாடல் திருமுருகனிடம் எதையும் வேண்டாமல் அவனைப் போற்றும் வண்ணம் அமைந்த ஒரு சிறப்புப் பாடல்!எனவே, முதலில் இருந்தே பார்க்கலாம்!

எழுகுநிறை நாபி அரி

பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்தியமெனும்
ஏழுலகைத் தன்நாபியெனும் வயிற்றிலொரு

பந்தாகச் சுருட்டிய திருமாலும்


பிரமர்

படைத்தல் தொழில் செய்யும் பிரமன்

சோதி

ஒளிமயம் பொருந்திய உருத்திரன்

இலகுமரன்

இம்மூவர்க்கும் மேலான சிவனின் மைந்தன் திருக்குமரன்

மூவர் முதலானோர் இறைவியெனு மாதி
[மூவர் முதலானோர் இறைவி எனும் ஆதி]


மேற்சொன்ன மூவர்க்கும் ஏனைய தேவர்க்கும்
தலைவியாகி சிவனுடன் விளங்கும் ஆதியன்னை


பரைமுலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனிவாயா

உமையவளின் திருமுலையில் எழுந்துவரும் அருள்ஞானப் பாலினை அளவின்றிப் பருகி அதனில் ஊறித் திளைத்து மணக்கும் கனிபோலும் வாயினையுடைய திருக்குமரா!

புழுகொழுகு காழி

வாசனை நிறை புனுகு எங்ஙனும் மலிந்திருக்கும் சீகாழியெனும் திருப்பதியில்

கவுணியரில் ஞான புனிதனென

சைவம் தழைத்தோங்கும் கவுணியர் குலத்தினிலே
திருமுருகன் சொரூபமாய்த் திருஞானசம்பந்தரெனும்

புனிதனாய் அவதரித்து


ஏடு தமிழாலே புனலில் எதிரேற

இணையாக வளராமல் எதிர்த்தொழித்து அழிக்கவெனச்
சைவைத்தை வேரறுக்கும் வஞ்சநெஞ்சம் கொண்டவராய்ச்

சமணரெனும் சமயத்தவர் வாதுசெய்ய அழைத்திருந்தார்

மதுரைக்கு வருகைதந்து சத்திரத்தில் தங்கிவந்த

சம்பந்தர் எதிர்வந்து அனல்வாதம் செய்துவென்று

புனல்வாதம் செய்திடவும் இறையருளால் துணிந்திருந்தார்

ஏடெழுதி வைகையிலே மிதக்கவிட்டுப் பார்த்திடவே

வீணரவர் கொக்கரிக்க, இறையருளை மனம்வேண்டி

'வாழ்க அந்தணர்' எனும் ஏடெழுதி நீரிலிட்டார்

கூடவந்த ஏடெல்லாம் நீரலையில் கொண்டுசெல்ல

இந்தவொரு ஏடுமட்டும் எதிரெழுந்து நின்றதுவே

புனல்வாதம் வென்றதுவே புனிதரிவர் திருவருளால்!


சமணர் கழுவேற பொருத கவிவீர

வீண்வாது செய்திருந்த சமணரெல்லாம் தோற்றுவிட
தோற்றவர்க்கு விதித்தபடி எண்ணாயிரம் சமணரெல்லாம்

கழுமரத்தில் மாளச்செய்து சைவம் தழைக்கச்செய்யக்

கவிப்புலமை வீரம் காட்டிக் காத்திட்ட கவிவீரனே!


குருநாதா

சம்பந்தர் வடிவில் வந்துதித்த குருநாதனே!

மழுவுழை கபால டமரக த்ரிசூல மணிகர விநோதர்

அண்டிவரும் அடியாரின் பாவமெலாம் எரிக்கின்ற
மழுவென்னும் ஆயுதத்தை வலக்கையிலும்

இங்குமங்குமாய்த் துள்ளியோடி அல்லாடும்

மனமென்னும் மானை இடக்கையிலும்

அதிர்ந்துவரும் நாதவொலியால்

படைப்பினை நிகழ்த்திடும் உடுக்கினையும்

இச்சா,கிரியா,ஞானமெனும் மூவகைச்
சக்திகளை
மும்முனையாய்க் கொண்ட
திரிசூலமென்னும் ஆயுதமும்
செருக்குற்றப் பிரமனின்
ஐந்தலையில்
ஓர்தலையைக்
கிள்ளியெறிந்த கோபத்தால்
பாவம்வந்து சேர்ந்ததனால்

கையொட்டிக் கிடக்கும் மண்டையோடும்

மணியும் கைகளில் தாங்கிடும்

அற்புத உருவாம் சிவனாரின்


அருள்பாலா

அருளினால் தோன்றிட்ட சிவபாலனே!

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே


தன்னை மதியாத் தருக்கினில் கடந்த
பிரமனை அழைத்து ஆரென வினவ

செருக்குடன் "படைப்பவன்" எனவுரைசொன்ன

அயனை யுதைத்துத் தலையினில் குட்டிச்

சிறையினில் தள்ளி அயனவன் வேலையைத்

தானே நிகழ்த்திடப் பிரமனைப் போன்றே

ஒருமுகம், நாற்கரம் மாலை கமண்டலம்

கரங்களில் தாங்கிய பெருமையைப் பெற்ற

முருகப் பெம்மானே!


கழுகுதொழு வேத கிரி

கழுகுவந்து சிவம் தொழுதல்
யுகம்யுகமாய் நடக்குமிடம்


சண்டன், பிரசண்டரெனும்

இருகழுகு கிருதயுகத்தில்


சம்பாதி, சடாயுவெனும்

இருகழுகு திரேதத்தில்


சம்புகுத்தன், மாகுத்தன்

இருகழுகார் துவாபரத்தில்


சம்பு, ஆதியெனும்

இருகழுகார் கலியுகத்தில்


நாடோறும் நாடிவந்து

நண்பகலில் நான்மறையோதி


நல்லுணவு பெற்றுச்செல்லும்

நிகழ்வின்னும் நடக்குமிடம்


கழுகுவந்து பூசித்தலின்

கழுக்குன்றம் எனுமிந்த வேதகிரி


சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது


மலைமுகட்டின் மணிமீது ஒளிபொங்கும் வாசல்முன்
நிறைந்ததொரு கூட்டமாய்
மறையோதும் வானவரும்
அழகுதமிழ்ப் பாடல்சொல்லும்
குரலொலிகள்
கடலலைபோல்
பெருத்தவொலி நிறப்பிவர
வணங்கிநிற்கும் செயல்புரியும்


கதலிவன மேவு

வாழைமரம் பெருகிநின்று தலைவளைத்துக்
குலைதள்ளும்
பெருவனமாய்ப் பொலிந்திருக்கும்
கழுக்குன்றம் தனிலுறையும்


பெருமாளே.

பெருமைமிகு முருகக் கடவுளே!
**********************
அருஞ்சொற் பொருள்:

எழுகு = ஏழு உலகு என்பதின் திரிபு
பரை = மேலான உமாதேவி

நாறு = வாசனை, மணம்

புழுகு = புனுகு என அழைக்கப்படும் வாசனைப் பொருள்

உழை = மான்

டமரகம் = உடுக்கு

விநோதர் = அற்புதமானவர்

அயன் = பிரமன்

கதலி = வாழை

******************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Monday, November 30, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6

'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!

போற்றித் திருவகவல்

அருள்புரிந்து அருளும் அரசே போற்றி
இருவினை துடைக்கும் இறைவா போற்றி

மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து
கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப

வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப
ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்

வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென
விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்

அரனை வலம்வந்து அக்கனி வாங்கிய
விரகுள விக்கின விநாயக போற்றி

முன்னடி தெரியா முதல்வனைப் போற்றிப்
பின்னடி தெரியாப் பெருங்கவிப் பெருமான்

மண்மிசை வைத்துஉனை வாவியில் செல்லக்
கண்ணிலான் இவனெனக் கரந்துஅவன் போகக்

கரைமிசை ஏறிக் காணாது இரங்கி
உரைதடு மாறி உள்ளம் கலங்கிக்

கூகூ கணபதி கூகூ வென்னக்
கூகூ வென்றருள் குன்றே போற்றி

அப்பணி சடையோன் முப்புரம் எரிக்க
இப்புவி அதனை இரதம் ஆக்கித்

தினகரன் மதிதேர்ச் சில் இலதாகப்
பொருவரு மறைகளே புரவி யாகச்

சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப்
பங்கயக் கண்ணன் பகழி யாக

மலைசிலை யாக வாசுகி நாணா
நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில்

விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச்
சிக்கென விறைவன் செப்பா தேறலின்

தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர்
அச்சறுத்து அருளும் அரசே போற்றி

வேதப் பொருளாம் விமலா போற்றி
பூதப்படை யுடைப் புனிதா போற்றி

கரம்ஐந்து உடைய களிறே போற்றி
பரமன் பயந்த பாலா போற்றி

அகிலம் ஈன்றுஅருளும் அம்மை தனக்குத்
திருமகன் ஆகிய செல்வா போற்றி

அற்றவர்க்கு அருள்புரி அரசே போற்றி
கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி

பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி
தேசார் மணிமுடித் தேவே போற்றி

எழுநரகு எழுபிறப்பு அறுப்பாய் போற்றி
எழுமையும் எமக்குஇங்கு இரங்குவாய் போற்றி

துளைசெறி வக்கிர துண்டா போற்றி
வளநிகர் ஒற்றை மருப்பா போற்றி

வரமிகும் அரிதிரு மருகா போற்றி
சுரர்தொழும் முருகன் துணைவா போற்றி

நல்லவர் புகழும் நம்பா போற்றி
வல்லபைக் குரிய மணாளா போற்றி

கயமுகத்து அவுணனைக் காய்ந்தாய் போற்றி
வயமிகு மூஷிக வாகனா போற்றி

ஓங்காரத் தனி யுருவே போற்றி
நீங்காக் கருணை நிமலா போற்றி

துறவர் தமக்கொரு துணைவா போற்றி
முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி

துண்ட மாமதிபோல் துலங்கிய கோட்டைக்
கண்டகம் ஆகக் கைதனில் பிடித்துப்

பண்டு பாரதப் பழங்கதை பசும்பொன்
விண்டுவில் வரைந்த விமலா போற்றி

போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி
போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.
*************
போற்றித் திரு அகவல் முற்றிற்று.
**********
வருக்கைக்கோவை [உயிர்,மெய் எழுத்துக்களால் ஆனது இதன் சிறப்பு!]

ன்புடைக் கடவுளர்க்கு அதிபதி செயசெய
பத்து அகற்றும் ஐங்கர செயசெய

ந்துச் சடைமுடி இறைவா செயசெய
சன் பெற்ற எம்மான் செயசெய

ன்னிய முடிக்கும் ஒருவா செயசெய
ர்மனை சந்தி உகந்தாய் செயசெய

ம்பெரு மானே ஏகனே செயசெய
ழுல குந்தொழ இருப்பாய் செயசெய

யா கணங்கட்கு ஆதீ செயசெய
ற்றை மருப்பை உடையாய் செயசெய

ங்கிய கரிமுகம் உற்றாய் செயசெய
ஒளவியம் இல்லா தவனே செயசெய

அ,கர வணிந்த ஆதீ செயசெய
ண்மூன் றுடைய களிறே செயசெய

ப்போல் மழுஒன்று ஏந்தீ செயசெய
ங்கரன் தேர் அச்சு அறுத்தாய் செயசெய

யமுடை வித்தக நம்பீ செயசெய
இ,முடை விக்கி னேசுரா செயசெய

இ,ங்கிய அன்பர்க்கு இனியாய் செயசெய
த்துவம் உறைதரு சாமீ செயசெய

ன்னெறி வித்தக நம்பீ செயசெய
கீரதிக்கு இனிய பாலா செயசெய

ன்றுள் ஆடி மகனே செயசெய
இ,க்கரைக் களையும் இறைவா செயசெய

அ,வக் கிண்கிணி அணிவாய் செயசெய
இ,கக் கொம்புஒன்று ஏந்தீ செயசெய

ஞ்சனைப் பழவினை மாற்றுவாய் செயசெய
,ழகிய வேலனுக்கு அண்ணா செயசெய

இ,மத யானை முகத்தாய் செயசெய
இ,க்கரி சாடும் இறைவா செயசெய

அ,ந்தல் ஆடும் அரசே செயசெய
ரம்ஐந்துடைய கணபதி செயசெய

காமன் பகைவன் காதல செயசெய
கிரியில் பாரதம் தீட்டினாய் செயசெய

கீழ்மை ஒழித்துக் கிளர்வாய் செயசெய
குண்டப் பண்டிக் குருவே செயசெய

கூறிய மும்மதக் கோவே செயசெய
கெண்டையங் கண்ணுமை மகனே செயசெய

கேதாரப் ப்ரியம் ஆனாய் செயசெய
கையில் சக்கரம் உடையாய் செயசெய

கொவ்வைக் கனிவாய் மதலாய் செயசெய
கோலக் குடநிகர் வயிற்றாய் செயசெய

கௌவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய
**************
வருக்கைக் கோவை முற்றிற்று
***********
தத்துவ ஞானத் திருவகவல் [விநாயகர் அகவல் என வழங்கப்படும் இதன் விளக்கம் முன்னரே ஆத்திகம் வலைபூவில் அளிக்கப்பட்டிருக்கிறது! தேடினால் கிடைக்கும்!]

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமு மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியு மிலங்கு பொன்முடியுந்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான
அற்புத னீன்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது தென்னை யாட்கொள்ள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து

குருவடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடயு தத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியிற்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம்
இன்புறு கருணையி னினிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடை பிங்கலையின் எழுத் தறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து

மூலாதா ரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக வினிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்பட வெனக்குத்
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள்தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே.
**********
தத்துவ ஞானத் திருவகல் முற்றிற்று.
********

நூற்பயன்

பொன்னுமிகுங் கல்விபுகும் புத்திரரோ டெப்பொருளும்
மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின்
றிருக்கதையைக் கேட்க சிறந்தது. (1)

பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு. (2)

வெள்ளை யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வர் நோலாதருகிருந்து
கேட்டோர்க்கும் வராது கேடு. (3)

சூலிலார் நோற்கிற் றுணைவர் தமைப்பெறுவார்
சாலமிகும் வெங்கலியார் தாநோற்கில் - மேலைப்
பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து. (4)

வரத பண்டிதர் இயற்றிய "பிள்ளையார் கதை "முற்றிற்று.
************************
[கணபதி எல்லாம் தருவான்.]

Read more...

பிள்ளையார் கதை-5

"பிள்ளையார் கதை"-5

[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது.


கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின்

சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610]
[துளவம்= துளசி]

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்,

வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்,

வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்,
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே

இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்

காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து [620]

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
[மழவு= யானை; விடை=எருது, காளை]

கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
[முறையாய் விரதம் நோற்காத இலக்கணசுந்தரி பட்ட பாடு]
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில்

விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்

மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி

மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் [630]
[அத்தம்= ஹஸ்தம், கை]

சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து

கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
[கொவ்வை= கொவ்வைக்கொடி நிறைந்த புதர்]

ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு

வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி

அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி [640]
[அவ்வியம்=ஔவியம், பொறாமை]

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக்
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி

அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
[அடைக்காய்= பாக்கு]

கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள

கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள

உக்கிர மான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் [650]

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங்
[கொண்டல்=மேகம்]

கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற்

கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
[துண்ணென= திடுக்கிட்டு]

கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்

ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு [660]

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர்

வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட

அணியிழை தன்னை அவனும் அகற்ற
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப

வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்

குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக [670]

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத்

தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய

மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு

ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய்
சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன

வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் [680]

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்

வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்

அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்

காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி

எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச் [690]

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகஎனச்

சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்

பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு

தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு

மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் [700]

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்

கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே அகமதிற் சென்று

புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி

கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து

தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக் [710]

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்

செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு

மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக்

கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்,
சக்கர வாள சைனி யத்தோடு

விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி [720]

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக

எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி

இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச்

செப்பிய அன்னை திருமொழிப் படியே
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும்

பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் [730]

அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந்

தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ

மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்

கணபதி நோன்பின் காரணங் காண்இது
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி

இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து [740]

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்

ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன்
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச்

சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.[745]

காப்பு

கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும்அரன்தான் ஈன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

நூற்பயன்

பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
**********************
இதனைத் தொடர்ந்து, விநாயகர் போற்றித் திருவகவல், வருக்கைக் கோவை, தத்துவ ஞானத் திருஅகவல் முதலியன ஓதி முடிப்பது மரபு என்பதால், அதனையும் அடுத்து இடுகிறேன்.

[அடுத்த பதிவில் நிறைவுறும்]

Read more...

பிள்ளையார் கதை - 4

"பிள்ளையார் கதை - 4"

[401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569 முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]

அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
[திருமுருகன் அவதாரம்]
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல்

ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த

வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி

ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்

புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் [410]

ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீஇரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி

இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்

சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்

புதல்வனைத் தருவோம் போமின் நீர் என
அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்

சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் [420]

ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்

சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்

காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
[பாவகன்= அக்னி தேவன்]

உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்

குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந் [430]

தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமைஆளுடைய உமையா ளுடனே

அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்

ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
[தேயு=தீ]

ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்

சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப [440]

நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்

தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்

பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்

கண்ஆறு இரண்டுங் கரம் ஈராறுந்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்

மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் [450]

மறுகிய உம்பர் மகிழ்ந்துஉடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்றுஅனுப்ப

ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்

விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து

முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத்

தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி [460]

அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்றுஉதவிப்

பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப

இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்

குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே

யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு [470]

அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க

அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்டு

அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே

அண்ட ரெல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி

மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென [480]

இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்

காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்

திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து

மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென

வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம் [490]

புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்

சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்

சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப

இன்பவாய் இதழ் உமை யான்வென்றேன் என
எம்பெரு மானும் யான்வென்றேன் என

ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப [500]

மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை யெரித்தோன் கண்கடை காட்ட

வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்

ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்குஉருத்து

நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்

மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே [510]

கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்

கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்

முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணைவிழி யிழந்தே
[முளரி=சந்திரன்; துளவு=துளசி]

ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
[பாந்தள்= பாம்பு]

வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் [520]
[மருப்பு= கொம்பு, தந்தம்]

திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே

எழில்பெறு வடமரத் தின்கீழ் இருந்தான்

[விநாயகசட்டி விரதம் 524 முதல் 569 முடிய இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.]

கம்ப மாமுகத்துக் கடவுள்தன் பெருமையை
[கம்பம்= தூண் போன்ற கால்களை உடையதால் இங்கு யானையைக் குறித்தது]

அம்புவி யோருக்கு அறிவிப் போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
[உம்பர்=தேவர்]

தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்

கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி [530]
[கலிங்கம்= பட்டாடை]

இருபத் தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்

வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்

மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே

உரைதரு பதினாறு உபசா ரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி

இருபது நாளும் இப்படி நோற்று
மற்றைநாள் ஐங்கர மாமுகன் பிறந்த [540]

அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி

வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்

குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்

கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்

பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக் [550]

செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி

கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி

தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை

காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்

பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் [560]
[முத்தளக் கூவிளம்= மூன்று தலைகளுடைய வில்வம், த்ரிதள வில்வம்]

தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள் ளுண்டை

முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்

பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்

பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த

பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என [570]

ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்

அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
[விண்டு= விஷ்ணு; பண்டு=பழைய, பழைமை]

உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு விமலன்
கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
[உஞ்ஞை= உஜ்ஜயினி என்னும் அவந்தி]

பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி

யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப [580]

இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
[மறிகடல்= அலை வந்து திரும்பிச் செல்லும் கடல்]

பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத்
தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்

சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்

சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
[சாங்கு= அம்பு, [அம்பு விட்டு கடலை வற்றச் செய்த இராமன் கதை]]

மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி [590]

நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
தானோ வந்தது நகையா னதுவெனத்
[நம்பன்=சிவன்]

தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்

உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென

அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்

வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் [600]

குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து

தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
[
தாது மைவண்டு உழும் தாமத் தாமன்= ஆதி சிவன்].
*************
[இன்னும் வரும்]

Read more...

பிள்ளையார் கதை - 3

"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்

ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்

வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஓகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
*********
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த

தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்

உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்

மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்

ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு
[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்
[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்
[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
[செரு=போர்]

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்
[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
[பாண்=கள்]

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]
**************
[இன்னும் வரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP