Sunday, February 06, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

"கந்தர் அனுபூதி" -- 5

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூ ருரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!

'அல்லாத்தியும் தொலைச்ச நலத்தைக் குடுப்பா'ன்னு கேட்டவரு, அது இன்னான்னு அடுத்த பாட்டுல சொன்னாரு. 'சண்முகா! ஆறுமுகா!' நீதான் அது'ன்னு ஒரு குன்ஸா' சொல்லிட்டாரு' எனத் தொடங்கினான் மயிலை மன்னார்!.

இப்ப இந்தப் பாட்டுல, இப்பிடி அல்லாத்தியுமே தொலைச்சிட்டாலும், ஆரு அதுன்னு தெரிஞ்சுகிட்டாலும், அத்தச் சேரவுடாம தடுக்கற ரெண்டு கைவெலங்கைப் பத்திச் சொல்றாரு!

'எங்கிட்ட இருக்கறது அல்லாத்தியுமே ஒண்ணொண்ணா களட்டி வுட்டுட்டேனே... ஆனாக்க, ... இந்த ரெண்டு வெலங்கை மட்டும் என்னால களட்டவே முடியிலியேப்பா! இப்பிடி என்னியப் பண்ணிட்டியே! இது அடுக்குமா? சரியா? மொறையா?'ன்னு பொலம்பறாரு... இந்தப்
பாட்டுல!

அப்பிடி இன்னாது அந்த ரெண்டு வெலங்கும்? அதைத்தான் 'தளை'ன்னு சொல்றாரு!

மொதத் தளை, தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி! பொதுவா 'மாது'ன்னு சொல்லாம, 'வளைபட்ட கை மாது'ன்னு சொல்றாரு,..... கெவனி!

வளைன்னா கையுல போட்டுக்கற வளைன்னு பொதுவாப் புரியும்! ஆனாக்காண்டிக்கு, இப்ப நேத்திக்கு ஒன்னோட 'பெருசு'..அதாம்ப்பா... அடிக்கடி கொளந்தை, கொளந்தைன்னு நீ கொஞ்சுவியே அந்தப் பெருசைத்தான் சொல்றேன்!!.... அவுரு சொன்னாருன்னு ஒண்ணைப் படிச்சுக் காமிச்சியே! .......பெரியவங்க சொல்ற சொல்லுக்கு நாமளா புரிஞ்சுக்கறதுன்னு ஒரு அர்த்தம் இருக்கும்! அவங்களா சொன்னது இன்னான்னு ஒரு பொருளு இருக்கும்னு! அதே கதைதான் இங்கியும்!!

வளைன்னு இங்க சொல்றது தன்னோட அன்பால ஒன்னிய வளைச்சுப் போட்டுருக்கே... அந்தப் வூட்டுக்காரியை! அவங்கதான் 'வளை பட்ட கை மாது'! வெளங்கிச்சா? ஒன்னிய நம்பி, நீயே சதமின்னு வந்தவங்களை எப்பிடி வுடறது? நீ பாட்டுக்கு 'சர்த்தான் போம்மா'ன்னு 'டொப்'புன்னு கெளம்பிற முடியுமா? முடியாதுதானே?

சரி, இப்ப அடுத்த தளை இன்னான்னு பாப்பம்!

இவங்களைக்கூட.... வூட்டுக்காரியக் கூட, ஏதோ ஒரு ஆத்தர அவசரத்துல வுட்டுட்டுப் போறவங்க இருக்காங்க! ஆனாக்காண்டிக்கு, பெத்த மக்களை எப்பிடி வுடறது? 'அப்பா'ன்னு அது வந்து காலைக் கட்டிக்கக்கொள்ள, அப்பிடியே பாசம் பொத்துக்கினு வருதுல்ல?


அதுங்களுக்கு ஒண்ணுன்னா, ஒம் மனசு எப்பிடி பதறித் துடிச்சுத் தவிக்குது? அதுங்க ஒன்னிய மதிக்குதா, பாசமா க்கீதான்றதப் பத்தி, துளிக்கூடக் கவலயே படாம, 'ஐயோ! என்னோட பசங்க'ன்னு உள்ளுக்குள்ள கெடந்து அடிச்சுக்குது இல்ல? அந்த 'மக்கள்'தான் இவுரு சொல்ற ரெண்டாவது தளை!

இந்த ரெண்டு வெலங்குமேவோ, இல்லாங்காட்டிக்கு இதுல ஏதோ ஒண்ணோ, ஒரு ஆளைப் பாடாப் படுத்தி அலையவைக்குது! இன்னா நான் சொல்றது? இன்னா அப்பிடிப் பாக்கறே?' என்றான் மன்னார்!

அதில்லை மன்னார்! மனைவி, மக்களை 'அம்போ'ன்னு தவிக்கவிட்டுட்டுப் போற சில 'நல்லவங்களும்' இருக்காங்கதானே? அப்போ எப்படி இது சரியாகும்?'.... என்று இழுத்தேன்!

'ஊரு ஒலகத்துல பொதுவா க்கீற கதையைத்தான் அருணகிரியாரு சொல்றாரு! நீ சொல்றமாரி, அல்லாத்துக்குமே அங்கங்க ஒரு விதிவெலக்கு இருக்கலாம்! ஆனா, அத்த வுட்டுட்டு, பொதுவாப் பார்த்தியானா, இதான் அல்லா எடத்துலியும் நடக்கறது!

இந்த தளைங்கல்லேர்ந்து எப்பிடி வெளியே வர்றதுன்னு யோசிக்கறாரு! இம்மாம் பெரிய மாயையுல மாட்டிக்கினோமே! எப்பிடிரா தப்பிக்கறதுன்னு மயங்கிப் போயி ஒக்காந்துடறாரு!

ஒடனே உள்ளுக்குள்ள ஒரு 'பல்பு' எரியுது அவருக்கு!

ரெண்டு சமாச்சாரம் நெனைப்புக்கு வருது!
கேக்கறது ஆரை? நம்ம முருகனை!
அவுரு இன்னா பண்ணினாரு?
சூரனையும், ஒரு மலையையும் அளிச்சாருன்னு புரியுது! எப்பிடி இத்தப் பண்ணினாருன்னு ஒக்காந்து யோசிக்கறாரு!

தாரகாசுரன்னு ஒர்த்தன்! சூரனோட தம்பி!
வீரவாகுத்தேவரு தாம் போயி அளிச்சுர்றேன்னு வீராப்பாச் சொல்லிட்டு, ஒரு பெரிய படையோட அங்க போறாரு! கந்தன் சிரிச்சுக்கினே "போய்ட்டு வாப்பா! அவனைப் பார்த்து மயங்கிராதே!'ன்னு அனுப்பி வைக்கறாரு!
அங்க போனா, அந்த ராட்சசன் ஒரு பெரிய மலையா...கிரவுஞ்ச மலையா.... உருவம் எடுத்துக்கினு நிக்கறான்! அல்லாரையும் மாயமா வளைச்சுப் போட்டுர்றான்!


உள்ளார போன ஆளுங்கல்லாம், நாம எங்க க்கீறோம்னே தெரியாம மயங்கறாங்க! சுத்திச் சுத்தி வராங்க! வெளியே வர வளியே தெரியலை!
ஆரோ ஒர்த்தர், ரெண்டு பேரு மட்டும் இதுல சிக்காம தப்பிச்சு வந்து முருகன் கையுல விசயத்தச் சொல்றாங்க!
இது ஒரு கதை!

அடுத்தாப்புல, இந்த ஆணவம் புடிச்ச சூரன் !
தங்கூட இருந்த மொத்தப் பேரும் காலியானதுக்கு அப்புறமுங்கூட, தன்னோட ஆணவத்த வுடாம, தனக்குத்தான் அல்லாமுந் தெரியும்னு கிறுக்குப் புடிச்சு, மாயாரூபமா, ஒரு பெரிய மாமரமா நிக்கறான்! தன்னை ஆரும் கண்டுபுடிக்கவே முடியாதுன்னு அவன் மனசுல ஒரு நெனைப்பு!
பெரிய்ய்ய்ய்ய சூரன்ல இவன்! அதான்! பூனை கண்ண மூடிக்கினு பூலோகமே இருட்டாயிருச்சுன்னு நெனைச்சமாரி!
நம்மாளு கண்ணுலேர்ந்து எதுனாச்சும் தப்பிச்சுப் போவ முடியுமா?
இது ரெண்டாவது கதை!

இந்த ரெண்டுலியுமே இன்னா ஆச்சுன்னு யோசனை பண்றாரு அருணகிரியாரு!
ரெண்டு கேஸுலியுமே, முருகன் ஒண்ணுமே பண்ணலை!
சும்மா கையுல க்கீற வேலைத் தொட்டாரு!
அவ்ளோதான்!
மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!
அன்னிக்கு 'சிவக்குறளுக்கு' சொல்றப்ப சிவன் வில்லை எடுக்காமலியே, அம்பு வுடாமலியே, அம்மாவைப் பார்த்து லேசா சிரிக்கக்கொள்ளியே, அந்த மூணு லோகமும் எரிஞ்சு போச்சுன்னு பார்த்தோமே, அதும்மாரி, இவுரு வேலைத் தொட்டதுமே, இப்பிடில்லாம் நடந்திருச்சு!

அப்பிடியாப்பட்ட சக்தி முருகன் கைவேலுக்கு க்கீதுன்னு புரிஞ்சுபோச்சு இவுருக்கு!
அத்தயெல்லாம் பண்ணினவருக்கு, அம்மாம் பெரிய மாயாசக்தியையே ஒண்ணுமில்லாமப் பண்ணினவருக்கு, இந்தக் துக்கினியூண்டு மாயையை தொலைக்கறதா பெரிய காரியம்னு ஒரு தெம்பு வருது!

ஒடனே, அடுத்த ரெண்டு வரியுல, 'கிளைபட்டெளு[ழு] சூரரும் கிரியும் தொ[து]ளை பட்டுருவத்..... தொடு.... வேலவனே!'ன்னு கெஞ்சறாரு!

தொடு வேலவனேன்றதுல இத்தினியையும் சொல்லிட்றாரு! இதுல இன்னொரு விசேசம் இன்னான்னா, மாயை மட்டுந்தான் தொலைஞ்சுது ரெண்டு எடத்துலியும்! மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும் ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்! அதேமாரி, ஒன்னிய இந்த மாயைலேர்ந்து வெளியே கொணார்றப்போ, மத்தவங்களுக்கும் [மனைவி, மக்கள்] ஒரு கெடுதியும் வராதுன்னு சூசகமா சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு!

'இப்பப் புரியுதா? எதுனால இந்த மூணு பாட்டையும் சேர்த்தே படிக்கணும்னு சொன்னேன்னு? மொதப் பாட்டுல எனக்கு சொல்லித் தாப்பான்னு, கொஞ்சலாக் கேக்கறாரு!
ரெண்டாவது பாட்டுல இன்னாது அதுன்னு தெரிஞ்சுக்கின ஒரு சந்தோசம்!
இப்ப, இந்த மூணாவது பாட்டுல ஒரு கெஞ்சலு!

எப்பிடி முருகன்கிட்ட சரணாகதி பண்றதுன்ற அனுபூதிய இந்த மூணு பாட்டுலியும் வைச்சு சொல்லிக்கீறாரு அந்த மகாப் பெரியவரு! இத்தப் படிச்சு, அவுரு காலுல நாம வுளுந்தாலே போறாதா?' என்றான் மயிலை மன்னார்!

'அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்! வேலாயுதப் பெருமானே சரணம்! கொஞ்சிடும் மழலையின் மலர்த்தாள் சரணம்!' என்று உரத்த குரலில் சொல்லிக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!
நாங்கள் மூவரும் அதை அப்படியே திருப்பிச் சொன்னோம்!

கபாலி கோவில் மணியும் 'ஓம்! ஓம்' என்பதுபோல் ஒலித்தது!
**********
[தொடரும்]

Read more...

Wednesday, February 02, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

"கந்தர் அனுபூதி" -- 4

வானோ புனல்பார் கனன்மா ருதமோ
ஞானோ தயமோ நவினான் மறையோ
யானோ மனமோ வெனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ?
பொருள் ஆவது சண்முகனே!?!?!?

போன பாட்டுல நெறையச் சொல்லிட்டதால, நொந்துபோயி ஆருமே வரலைன்னு சொன்னே!
அத்தப் பத்திக் கவலைப்படாதே!
இது ஆருக்குப் போவணுமோ, அவங்களைப் போயிச் சேரும்!
அதுக்காவ, நான் சொல்ல வந்ததச் சொல்லாம் வுடவும் மாட்டேன்!

நீ மட்டும் இதுல கவனம் வைச்சு இத்த மட்டுமே கவுனி! சரியா?' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'வரலைன்றதை மட்டுந்தான் சொன்னேனே தவிர, அதனால எனக்கு வருத்தம்னு சொல்லவே இல்லியே, மன்னார்! நீ மேலே சொல்லு ! நான் கேட்கிறேன்!' என்றேன் நான்!
'ஞானும் உண்டு' என்றான் நாயர்!
'நீ சொல்லுடா! நான் கேழ்க்கறேன்!' என்றார் சாஸ்திரிகள்!

அன்புடன் எங்க எல்லாரையும் பார்த்தவாறே மன்னார் தொடர்ந்தான்!

'இந்தப் பாட்டை முந்தின பாட்டோடையும், அடுத்த பாட்டோடையும் சேர்த்துப் படிச்சுப் பொருள் வெளங்கிக்கணும்!

சரி, இதுல இன்னா சொல்லிருக்காருன்னு பாப்பம்!

'எல்லாம் மற என்னை இழந்த நலம் சொல்லுப்பா'ன்னு போன பாட்டுல கிளிமாரி கொஞ்சிக் கேட்டாரு அருணகிரிநாதரு!
இப்ப, இந்தப் பாட்டுல, அந்த நலம் இன்னான்னு சொல்ல வராரு!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
அது ஆகாசமா? ... இல்லை!
தண்ணியா?.... அதுவுமில்ல!
அப்ப, ... இந்த பூமியா... ம்ஹூம்.. சான்ஸே இல்லை
இதுல்லாம் இல்லேன்னா,?... ஒருவேளை நெருப்பா இருக்குமோ?.... இல்லவே இல்லை!
அப்ப... நிச்சயமா அது காத்தாத்தான் இருக்கணும்! என்ன? அதுவுமில்லியா?

இப்பிடி ஒண்ணொண்ணா பஞ்ச பூதம் அஞ்சையும் இதில்ல, இதில்லன்னு தள்ளிகிட்டே பார்த்தா, ..........ஒண்ணு புரியுது எனக்கு! இந்தப் பஞ்ச பூதத்தையும் கைக்குள்ள வைச்சிருக்கறதே நீதானே! அப்போ, எப்பிடி, நீ இதுல ஒண்னுதான்னு சொல்லி ஒன்னியக் கொறைச்சுப் பேசறதுன்னு!

அப்ப, பஞ்ச பூதத்துக்கும் மேலான நீ இதுல ஒண்ணா இருக்கறதுக்குச் சான்ஸே இல்லை!

ஞானோ தயமோ நவினான் மறையோ

அப்பிடீன்னா, .... இன்னாமோ இதையெல்லாம் தாண்டின ஞானம்னு சொல்றாங்களே அதுவான்னா, ... அதுவும் இல்லை! ஏன்னா, அத்தயெல்லாந்தான் நாலு வேதமும் சொல்லுதுன்னு சொல்றாங்களே!

அப்ப,....இந்த ஞானத்தையெல்லாம் சொல்ற வேதமான்னா, அதும் இல்லியாம்! வேதத்துக்கே பொருளைச் சொன்னவன் நீன்னு தான் ஒனக்கு 'தகப்பன் சாமி'ன்னே ஒரு கதையும், பேரும் இருக்கு! அதுனால நீ அந்த வேதமும் இல்லை!

ஆஹா! இதென்னடா,' மதுரைக்கு வந்த சோதனை'ன்றமாரி கலங்கறாரு அருணையாரு!

'ஏன் இதெல்லாம் வருது? இந்த நான்ற நெனைப்பு இருக்கறதாலத்தானே? அந்த நானுன்றதுதான் இதுவோ'ன்னு ஒரு சந்தேகம் வருது! பொட்டுல அடிச்சாமாரி, அதுவும் இல்லைடான்னு ஒரு கொரலு உள்ளேர்ந்து வருது!

ஆரது கொரல் குடுக்கறதுன்னு பார்க்கறாரு!

இதுவரைக்கும் சொன்ன இத்தெல்லாம் இல்லைன்னா, ஒருவேளை இத்தயெல்லாம் நெனைக்கற இந்த மனசான்னு ஒரு கேள்வி கேக்கறாரு! அதுவும் இல்லைன்னு புரியுது! அதான் போன பாட்டுலியே சொல்ட்டாரே! இந்த மனசையெல்லாம் இள[ழ]ந்த நலத்தை எனக்குச் சொல்லுப்பான்னு கேட்டாரே... அப்ப எப்பிடி இந்த மனசான்னு நெனக்கமுடியும்னு செவுட்டுல அறைஞ்சமாரி, புரியுது!

அப்போ....... இந்த மனசும் இல்லை!

அப்ப......... எதான் இது?

இந்த 'எனை ஆண்ட இடம்'?

கோபுரத்துலேர்ந்து குதிச்சப்பக் காப்பாத்தினாரே..... ரெண்டு கையுலியும் வாங்கிக்கினு?

அதுவா? அந்த நிமிசமா?

பொம்பளை சொகமே பிரதானமின்னு திரிஞ்சவரை, 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு சொன்னாரே!... அந்த நேரமா?

இந்த எடம்ன்றதுலதன் சூட்சுமம் இருக்கு!

அதைத்தான் 'பொருளாவது'ன்னு சொல்லிக் குதிக்கறாரு இங்க!

என்னை இழந்த நலம்னு போன பாட்டுல சொன்னதோட பொருளு இதான்!

எந்த நேரத்துல, எந்த நொடியில, எந்த எடத்துல இந்த பொருளு அவருக்கு வெளங்கிச்சோ, அதான் அந்த எடம்! .... அந்த நலம்!!

இது வரைக்குமா இருந்த ஒரு சாதாரணமான ஆளு,....... 'என்னியே எடுத்துக்கோடா'ன்னு தன்னோட அக்காவே மாராப்பை விரிச்சுப்போட்டுக் சொல்ற அளவுக்குப் பொம்பளைப் பித்து புடிச்சு அலைஞ்சோமேன்னு மனசு வெறுத்துப்போயி, 'இனிமே உசுரோட இருந்து இன்னா பிரயோசனம்'னு நெனைச்சு கோவுரத்து உச்சிலேர்ந்து வுளுந்தவனை...... ரெண்டு கையால தாங்கிப் புடிச்சுக் காப்பாத்தி, 'முத்தைத்தரு'ன்னு ஒரு சொல்லையும் சொல்லி, 'இனிமே என்னியப் பத்தி மட்டும் பாடு!'ன்னு சொன்ன ஒரு அன்பான சாமியை நல்லாப் புரிஞ்சுகிட்ட அந்த நொடிதான்..'அவரை ஆண்ட எடம்'!!!!! அல்லாத்தியும் எளந்த நலம்!

அதுக்குத்தான் இந்த ரெண்டுபாட்டையுமே சேர்த்துப் படிக்கணும்னு சொன்னேன்!

அது மட்டுமில்ல!

அந்தக் கடைசி வார்த்தையுல கூட ஒரு குசும்பு பண்ணி வைச்சிருக்காரு!


சண்முகனேன்னு சொல்லி முடிக்குறாரு!

இந்த வார்த்தைய......., நேரம், நொடி, காலம் பொருளுல்லாம் எதுவுமே இல்ல! அல்லாமே நீதான் சண்முகா.....ன்னும் புரிஞ்சுக்கலாம்!

இல்லாங்காட்டிக்கு,... வானோ, புனலோ, பாரோ, கனலோ, மாருதமோ, ஞானோதயமோ, சொல்ற நாலு வேதமோ, நானோ, மனசோ..... இல்லைன்னா.... இத்தெல்லாம் இல்லாம என்னிய நீ கண்டுகிட்ட எடமோ, இதான் பொருளா ஆச்சா ஆறுமுகா?ன்னு முருகனையே கேக்கறாருன்னும் புரிஞ்சுக்கலாம்!

அடுத்த பாட்டையும் சேர்த்துப் பார்த்தியானா, எதுக்கு இப்பிடிச் சொன்னாரு.... இல்லைன்னா.... கேட்டாருன்னு புரியவரும்!' என ஒரு சஸ்பென்ஸோடு முடித்தான் மயிலை மன்னார்!

'சும்மா இதைப் படிச்சிருக்கேண்டா! ஆனா, நீ சொல்லச் சொல்ல, இதுக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கான்னு மலைச்சுப் போய் நிக்கறேன் மன்னார்!' எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

எதுவுமே சொல்லத் தெரியாமல் நானும் நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!
**********
[தொடரும்!

Read more...

Sunday, January 30, 2011

"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

[தயவுசெய்து, முதல் பகுதியைப் படித்துவிட்டு, இதனைப் படிக்கவும்!]

"மேல சொல்றதுக்கு முந்தி இதுல சொல்லாம சொல்லி க்கீற ஒரு சூட்சுமத்தப் புரிஞ்சுக்கோ!

இந்த அல்லாத்தியும் தொலைக்கறது; என்னைத் தொலைக்கறதுன்றதுல்லாம் சாமானியமா ஒர்த்தரால தானா செய்யுற சமாச்சாரம் இல்லன்னு பூடகமா சொல்லி வைக்கறாரு அருணையாரு! அதுக்குல்லாம் ஒரு நல்ல குரு வரணும்! அவுரு வந்துதான் இத்த எப்பிடித் தொலைக்கறதுன்னு சொல்லித் தருவாரு!
இவுருக்கு அப்பிடிக் கெடைச்ச குருதான் முருகன்! அதான் இப்ப அடுத்த ரெண்டு வரியுல சொல்லிக்காட்றாரு' என்றான் மன்னார்.

'அப்போ அந்த முதல் இரண்டு வரிகளும் சும்மா முருகன் புகழைப் பாடறதுதானே' என்றேன் நான்!
இரக்கத்துடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

'அதெல்லாம் நீ பண்றது! சும்மானாச்சும் வார்த்தையப் போட்டு ரொப்பறதுல்லாம் நீதான் செய்வே!
ஆனா, அருணையாரு அப்பிடியாப்பட்ட ஆளு இல்ல! நீ கொளந்தை கொளந்தைன்னு கொஞ்சுவியே ஒர்த்தரை... அவுரு அடிக்கடி சொல்லுவாருன்னு நீதானே சொல்லிருக்கே முந்தி! பெரியவங்க சொல்ற
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும்! பொளுது போவாம ஒன்னியமாரி எளுதறவங்க இல்ல அவங்கல்லாம்! அதுக்காவ ஒன்னியக் குத்தம் சொல்றேன்னு மூஞ்சியத் தூக்கிக்காத!
பக்தியோட நீ எளுதறதுலியும் தப்பே இல்ல! ஆனா, இங்க, அருணையாரு சும்மா மணி மணியா வார்த்தைங்களைப் பொறுக்கிப் போட்டுருக்காரு!
ஒண்ணொண்ணாப் பாக்கலாம்!'

உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!
'உல்லாச'ன்னா எப்பவுமே மாறாம ஒரே நெலையா நிக்கறவன்னு அர்த்தம்! எதுன்னாலும் கலங்காம ஒரே 'ஷ்டெடி'யா நிக்கறவன்!
இங்க நடக்கற எத்த வோணும்னாலும் அவனால மாத்த முடியும்! ஆனா, அவன் மட்டும் மாறாம அல்லாத்தியும் பார்த்து ஒரு கொளந்தை மாரி சிரிச்சுக்கினே இருப்பான்! அவந்தான் உல்லாசன்!

'நிராகுலன்'னா ஒரு கஸ்டமும் இல்லாதவன்னு பொருளு! தும்பமே இல்லாதவனுக்கு நிராகுலன்னு பேரு!
ஆருக்கு து[ன்]ம்பமே வராது? ஞானம் இருக்கறவனுக்கு! அறிவு இருந்தாலும் அத்த 'யூஸ்' பண்ணாம, இல்லாக்காட்டிக்கு அறிவே இல்லாம காரியத்த செய்யறவனுக்கு, எப்பவுமே கஸ்டந்தான் வந்து சேரும்!
அறிவே வடிவமா க்கீறவனுக்கு கஸ்டம் வரும்...
ஆனாக்க, அதுக்காவ அவன் அள மாட்டான்! அவந்தான் நிராகுலன்!
'யோக'ன்னா, யோக வடிவா க்கீறவன்னு சொல்லலாம். ஞானம் வந்தப்பறம், யோகமும் கூடவே வந்திருச்சுன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்! அப்பிடியாப்பட்டவன் நம்மாளு!

இந்த மூணையும் இன்னோரு வகையாக்கூடச் சொல்லலாமாம்! உல்லாசம்னா 'சத்து'.
நிராகுலன்னா அறிவு... 'சித்து',

யோகம்னா 'ஆனந்தம்'.
ஆகக்கூடி, இந்த மூணையும் சேர்த்தா சத்துசித்து ஆனந்தம்.. சச்சிதானந்தம்! அப்பிடிச் செல்லமாக் கூப்புடறாரு அருணகிரியாரு!

இப்ப, அடுத்த மூணையும் பாப்பமா?
'இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ'னு கொஞ்சுறாரு!
'இதம்'னா நெனைப்பு.... நெனைக்கறது.
'சல்லாபம்'னா பேசறது
'விநோதம்'னா செய்யறது.
சச்சிதானந்தமா க்கீற கந்தன் இப்ப இவரை, நெனைக்க, பேச, செய்ய வைக்கணும்னு முடிவு பண்ணனுமாம்!
இவுரையும் சச்சிதானந்தமா மாத்தணுமாம்!

அதுக்குத்தான் ஒரு கொளந்தையக் கொஞ்சறமாரி, 'நீ இப்பிடியாப்பட்ட செல்லக் கொளந்தைதானே!
எனக்குச் சொல்லுவியாம்'னு முருகன்கிட்ட ஒரு கிளிமாரி கொஞ்சறாரு அருணகிரிநாதரு.
அதான் அந்த 'நீ அலையோ!'
'அலையோ'ன்னா இல்லையோன்னு அர்த்தம்!
இப்ப, இந்த ஆறுக்கும் இன்னொரு விதமாச் சொல்றேன் கேளு' என மன்னார் சொன்னதும், கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்!

எப்பவும் மாறாத உல்லாசந்தான் திருப்பரங்குன்றம்!
தும்பமே இல்லாம ஞானமயமா கீறதுதான் திருச்செந்தூரு!
யோகமா எப்பவும் ஆனந்தமா க்கீறது பள[ழ]னிமலை!
இதமா நெனைப்பைக் குடுக்கறது சாமிமலை!
இங்கியும் அங்கியுமா குதிச்சு குதிச்சுப் பேசற இதந்தான் திருத்தணி.. குன்றுதோறாடல்னும் இத்தச் சொல்லுவாங்க!
விநோதமாத் தெரியறது பள[ழ]முதிர்சோலை!
இந்த ஆறையும் இதுக்குள்ள காட்றாரு அருணைகிரி!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

மூடிய கண்களைத் திறக்காமலேயே, சாஸ்திரிகள் பேசத் தொடங்கினார்... திடீரென!
'அற்புதமா இதுவரைக்கும் சொன்னே மன்னார்! நீ சொன்னதுந்தான் இந்த ஆறுக்கும் இன்னொரு வியாக்யானம் இருக்குன்னு எனக்குப் பட்டுது!

திருப்பரங்குன்றம்தான் மூலாதாரம். ஸ்திரமா நிக்கறது!.. உல்லாஸம்!
திருச்செந்தூர்தான் ஸ்வாதிஷ்டானம்!.. ஞானமயமானது!.... நிராகுலம்!
பழநிமலை யோகத்தால எப்பவும் ஆனந்தமா இருக்கறதால.. அது மணிபூரகம்!
இதம்னு சொன்ன ஸ்வாமிமலைதான் அநாகதம்!
ஸல்லாபம்னு சொன்னியே அதான் விசுத்தி! திருத்தணி
விநோதம்..ஆக்ஞா சக்ரம்! அது பழமுதிர்சோலை!

இப்பிடி யோக ஸாஸ்த்ரத்துல சொல்லியிருக்கற ஆறு சக்ரத்தையுந்தான் இந்த ஆறும் காட்றதுன்னு நெனைக்கறேன்!' என்றபடியே கண்களைத் திறந்தார்!

'ஐயரு சொல்றதும் சர்யாத்தான் க்கீது' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

இப்ப வெளங்குதா?... நான் ஏன் இந்தப் பாட்டு அவ்ளோ முக்கியம்னு சொன்னேன்னு? இப்ப அடுத்தாப்புல வர்ற ரெண்டு பாட்டும் இத்த ஒட்டியே வரும்! இந்த 3.4.5 மூணும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்க'
எனச் சொல்லிவிட்டு, கொஞ்சம் எழுந்து சோம்பல் முறித்தான் மன்னார்!

தனது செல்ஃபோன் மூலம் டீ, வடைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் நாயர்!
**************
[தொடரும்]

Read more...

Monday, January 24, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்! அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!
'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்! நானும் நாயரும் கூடவே நடந்தோம்.

'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்!

'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம்! அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!
இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ! மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!

கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!
சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!
இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!
இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!

எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்

வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.

சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!

'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்! சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.
பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!
மன்னார் தொடங்கினான்!

'சுர பூபதி'ன்னு சொல்றாரு!
சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய வரும் இந்த வார்த்தை! 'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்! 'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு? தேவருங்களோட ஒலகத்துக்கே ராசாவேன்றாரு!

இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!
தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!
அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க! அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!

இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!
ஒரு மந்திரி இருக்காரு.

அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!
அதும்மாரித்தான் இதுவும்!
இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!
அதுனால... இவுரு சுரபூபதி!

ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்! 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்! 'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்! எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!

இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!
ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!

இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?

எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு!
இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!

'எல்லாம்'னா இன்னா?
சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது! மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!

இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும்! அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு!

அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே தெரியாது! காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்! ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்! அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது! அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

****************
[தொடரும்]

Read more...

Friday, January 21, 2011

"கந்தர் அநுபூதி" -- 2

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

'ம்ம். புள்ளையாரைக் கும்புட்டுக்கிட்டாச்சு! மேல அடுத்த பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

"நூல்"

1.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானைசகோ தரனே.

[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.]

இந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ! ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம்! அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன்! சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு
ஒண்ணா வெளக்கம் சொல்லுவேன்! சரியா! நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு!' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்!

மொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு! ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை! நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு! அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு!

ஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு!

ஆடும் பரி, வேல், அணி சேவல்னு!

ஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு!
முருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே!

அதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா?
குதிரைன்னா இன்னா?
சவாரி பண்ற ஒரு வாகனம்!
ஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்!
ஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.
அதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்!

ஆனா, முருகனுக்கு எது வாகனம்?.... மயிலு!
சும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு!
மெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது!
ஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு? .... முருகன்!
அவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்!

அது மட்டுமில்ல!
'இங்கே போயி அவனை அடிக்கணுமா? அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா? அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம்! அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு! அது இன்னா தெரியுமா?

ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்! அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு "இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்"னு காலடியுல காத்துக்கினு க்கீது!
அது ஒரு பக்கத்துல!

அப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு!
அளகான சேவலாம்!
ஆரு அது?
ஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்!
இப்ப இன்னா பண்றான்?
அடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்!

இன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது! அதுவும் இன்னா சொல்லிக்கினு?
'வாங்கப்பா! வாங்க! அல்லாரும் வாங்க! வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது!
அது இந்தாப் பக்கமா!

நடுவுல 'வேலு'!
அதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு! இதுக்கு அணிசேவல்னு சொன்னாரு!
ஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை!
ஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு!

வேல்னா இன்னா?
ஞானம்!
ஆரு குடுக்கறது அத்த?
அவந்தான் !... அந்த கந்தந்தான்!

உண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது?
உண்மை உணமைதான்!... மெய்யி மெய்யிதான்! ... ஞானம் ஞானந்தான்!
அந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது!
அதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு!
ஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு!

இந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு!

அப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு!
இன்னான்னு சொல்லி?

நீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...
அதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....
அவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி!...
கெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்! அந்தக் கதைதான்!

ஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா? தனி ஆனை! அதாவுது ஸ்பெசல் ஆனை!
இவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது!
தனின்னா இன்னா?

இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!
இவுரு ரொம்பவே விசேசமானவரு! அதுனாலியும் இவுரு தனி!
அல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....
அப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி!
அதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை!

அவரோட தம்பிதான் நம்ம கந்தன்!
இவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு!.... தேடி வந்து ஒதவுறதுக்காவ!
மறுபக்கம் சேவலு!..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி!
நடுவுல ஞானம்!......
இவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது?!
அதான் இந்த மொதப் பாட்டு!

ரொம்ப இளுத்துட்டேன்ல!?
மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்! இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா?' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'நீ சொல்லு மன்னார்!' என உற்சாகப் படுத்தினேன் நான்!
****************
[தொடரும்]

Read more...

Sunday, January 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!- 1

சென்ற ஆண்டில் ஐந்தே ஐந்து பதிவுகள் மட்டுமே! எழுதவில்லையா என நண்பர்களிடமிருந்து கேள்விகள்! எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வேலைப் பளுவின் காரணமாக அதையெல்லாம் இங்கே பதிய நேரமில்லை!
அதனால்.......!!!
இந்த ஆண்டில் அநேகமாக தினம் ஒரு பதிவு வரக்கூடும்!
முதன் முதலாக, எனது அருமை நண்பன் 'மயிலை மன்னார்' எனக்குச் சொல்லிய 'கந்தர் அநுபூதி' விளக்கத்துடன் இந்த ஆண்டைத் துவக்குகிறேன்!அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!
**************

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்! என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி - 1

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************

Read more...

Friday, October 01, 2010

"எந்திரன்" திரை விமரிசனம்

"எந்திரன்" திரை விமரிசனம்

இப்பத்தான் படம் பார்த்திட்டு வர்றோம்!

ஆக்கபூர்வமான செயல்களுக்காக உருவாக்கப்பட்ட 'எந்திரனுக்கு' மனித உணர்வுகள் இல்லையென்ற காரணத்தால், இது தவறாக திசை திரும்பும் அபாயம் இருக்கிறது எனச் சொல்லி மனிதர்கள் நிராகரிக்க, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 'சயின்டிஸ்ட்' ரஜினி மெல்ல மெல்ல தன் ஆராய்ச்சித் திறனால் அதற்கு நவரச உணர்வுகளையும் அதற்கு ஊட்ட, அது இப்போது தன் எஜமானனின் காதலியான ஐஸ் மீதே காதல்வயப்பட்டு, உருவாக்கியவனை எதிர்க்கிறது.
அதற்குப் புரியவைக்க காதலர் இருவரும் எவ்வளவோ முயன்றும், அது கேட்காததால், ஆத்திரத்தில் அதனை உருக்குலைத்து, குப்பையில் வீசிவிடுகிறார் விஞ்ஞானி ரஜினி.
அதைப் பொறுக்கியெடுத்துவந்து, அதற்கு மீண்டும் செயல்திறனூட்டி, கூடவே அழிவு சக்தியையும் ஊட்டிவிடுகிறார் இன்னொரு விஞ்ஞானி.
வெளிநாட்டிலிருக்கும் தீய சக்திகளுக்கு அதை விற்கும் நேரத்தில், எந்திரன் ரஜினி, அவரையே கொன்றுவிட்டு, தன்னைபோலவே பல நூறு எந்திரன்களைப் படைத்து, வில்லனாகிறது .
ஐஸையும் கடத்திக் கொண்டுவந்து, நகரில் அட்டூழியங்கள் செய்து, நாட்டையே கதி கலங்கடிக்கிறது.
விஞ்ஞானி ரஜினி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை!

வழக்கமான ரஜினி படமல்ல இது!

ஆனால், மிகத்திறமையாகத் தன் பாத்திரப் படைப்பைப் புரிந்துகொண்டு அட்டகாசமான நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஜினி! அவரது மிடுக்கு கொஞ்சம் கூடக் குறையவில்லை!

கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுமே ரஜினி ஸ்டைலைப் பின்பற்றி, 'எண்ட்ரி சாங்' என்ற பெயரில் அடிக்கும் கூத்தைப் பார்த்தோ என்னவோ, இந்தப் படத்தில் அப்படி ஒரு அபத்தம் இல்லை என்பதே மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

சொன்னதைக் கேட்கும் எந்திரனாகவும், பின்னர், வில்லனாக மாறும் போதும், மிக அருமையாக நடித்து, தியேட்டரில் விசில் கிளப்ப வைக்கிறார் ரஜினி!

விஞ்ஞானியாக வரும் ரஜினி, புத்திசாலி மட்டுமே தவிர, வீரதீரன் இல்லையென்பதால், அடக்கியே அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார்!

ஐஸ் வரும் அனைத்துக் காட்சிகளிலூம் நெஞ்சை அள்ளுகிறார். அவரது காஸ்ட்யூமும், நளினமும் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்யும்!

சந்தானம், கருணாஸ் காமெடி ஏதோ பெயருக்குத்தான்.
க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாமே கிராஃபிக்ஸ்தான் என்றாலும் ரொம்பவும் உழைத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். தமிழ்ப் படவுலகுக்கு, ஏன் இந்தியப் படவுலகுக்கே இது ஒரு புதுமை எனச் சொல்லலாம். ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தாலும், நமது ஆள் ஒருவர் இப்படி கவனமாகவும், கேலிக் கூத்தாகவும் இல்லாமல் செய்திருப்பது நமக்குப் பெருமையளிக்கும் ஒரு விஷயம் எனச் சொல்வேன்.
அந்தக் கொசுக் காட்சி தேவையற்ற ஒன்று. வெட்டி எறியலாம் அதை!

ஏ.ஆர் ரஹமானின் பாடலிசையும், பின்னணி இசையும் மேறகத்திய பாணியில் சவால் விடுவதுபோல அமைந்திருக்கிறது. பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் கண்டிப்பாக இந்தக்கால இளைஞர்களை!

பாடல் காட்சிகளுக்கான நடன அமைப்பும், உடைகளும், காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் அத்தனையும் அருமை!
நடனக் காட்சிகளில் தனது ஸ்டைலைக் காட்டும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாமல் செய்திருக்கிறார் ரஜினி!

முழுக்க முழுக்க ரஜினியே படம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், கொஞ்சம் கூடப் போரடிக்கவில்லை[ அந்தக் கொசுக் காட்சி ஒன்றைத் தவிர!].
இரண்டரை மணிக்கும் அதிகமாக ஓடினாலும், விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் ஷங்கர்!

கடைசிக் காட்சியில், தான் செயலிழக்கும்போது, எந்திரன் பேசுகின்ற வசனம் நம் எல்லாரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்!... வைக்கணும்!
"மனுஷன் படைச்ச இரண்டு அதிசயங்கள்.... ஒன்று நான், இன்னொன்று நீ !" என எந்திரன் ரஜினி ஐஸைப் பார்த்துச் சொல்லும்போது விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது!

குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். நல்ல தியேட்டரில் பாருங்க! நிச்சயம் ரசிப்பீங்க!

மொத்தத்தில்,.....
எந்திரன்..... தமிழனைப் பெருமைப்படவைக்கும் ஒரு முழுச் சந்திரன்! பிரம்மாண்டம்!

Read more...

Tuesday, June 08, 2010

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Tuesday, May 11, 2010

"அ. அ. திருப்புகழ்" - 'வாசித்துக்....' - 38

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

எல்லாம் வல்ல வயலூர்க் குமரனை, அருகிலிருக்கும் திருசிராப்பள்ளியில் உறை தாயுமான சுவாமிக்கும் தலைப் பொருளாக வைத்து இந்த அழகிய திருப்புகழ் பின்னப்பட்டிருக்கிறது. பல உயர்ந்த விஷயங்கள் இந்தப் புகழிலே தெரிவிக்கிறார் அருணையார்! பலமுறை படித்துணர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய திருப்புகழ் இது! தேடித் தேடொணாப் பெரும்பொருள் எவருக்காகத் தானே இறங்கி வந்து ஆட்கொள்வான் என்பது இதனுள் இருக்கும் மறைபொருள்! ஓதுதற்கும் இனிமையான சந்த அமைப்பில் நம் மனம் கவரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்!

முருகனருள் முன்னிற்கும்!

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பொருள் .........

[வழக்கம்போலவே, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

"ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே"

[ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே ]


உளமார மனமாரத் தனைநினைந்து நெக்குருகி
உடல்வாட உளம்வாட மலைக்காட்டுத் தினைப்புனத்தில்

கவணாடக் கல்லெறிந்து புள்ளினங்கள் பறந்தோடக்
வண்டாடும் முகம்வாட வெய்யிலிலே தினம் வாடும்

வனநாட்டு வேட்டுவச்சி மலைக்குறத்தி வள்ளிக்கென
உடனாடும் துணைவிட்டுத் தனியாகக் கால்நடையாய்க்

கானகத்தே காதலியைத் தேடிவந்து அருள்செய்து
தனைநாடிக் கால்நொந்த தமிழ்மகளின் பொற்பாதம்

தனைக்காணப் பலவேடம் புனைந்திருந்து தொழுதாடி
வேடனாக வந்திருந்து வேங்கைமரம் தானாகி

விருத்தனாகிப் பசிதீரத் தினைமாவும் தேனுமுண்டு
நாவறண்டு மயிலாடும் கானகத்தே புனலாடத்

துணைநாடித் தமையனையும் கரியாக வரவேண்டி
வளையாடும் கைகளுக்கு வளையடுக்கும் செட்டியாகி

வஞ்சியவள் கைப்பிடித்து தம்வேடம் தனைக்காட்டிப்
கொஞ்சுமுகக் குறவள்ளியைக் கவர்ந்தங்கு செல்கையிலே

போரிட்டப் பெற்றவனைப் பொருதிநின்று முடிசாய்த்து
மீண்டுமவர் உயிர்ப்பிக்கக் குறவள்ளிக் கருள்செய்து

பொன்மயிலாள் பொற்பாதம் மையலுடன் தான்பணிந்து
தனைவேண்டிய அடியவளை ஆட்கொண்டக் கந்தவேளே!


"ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா"

[ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா]

மேடுயர்ந்த வயலினிலே மிகவாக வளங்கொழிக்க
ஓடுகின்ற நீரினிலே ஆரவாரம் மிகவெழுப்பி

ஆடுகின்ற மீன்கள்நிறை வயல்சூழும் வயலூரில்
சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம்

மாலையாகத் தானணியும் மயில்மீது தீரமுடன்
பரிதிமீது அமர்ந்திருக்கும் வீரனெனக் காட்சிதரும்

பெருமையுள்ள வயலூர்க் குமர வேளே!


"நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா"

[நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காண ஒணாது என நின்ற நாதா]


வலக்கால் பெருவிரலில் மூண்டெழும் இடைக்கலை

இடக்கால் பெருவிரலிம் தானெழும்பும் பிங்கலையும்

மேனோக்கிப் புறப்பட்டுக் கொப்பூழில் தாம் பிணைந்து

இடப்பக்கம் இடைகலையும் வலப்பக்கம் பிங்கலையுமாய்

முதுகு,பிடர்,தலைவழியே மூக்கினிலே முடிந்திருக்கும்


வலநாசித் துவாரத்தால் பிங்கலையும் வெளியேறும்

இடநாசித் துவாரத்தால் இடைகலையும் தான்செல்லும்

உள்ளிழுக்கும் சுவாசமோ பூரகம் எனப்படுமே

வெளியேறும் சுவாசமும் ரேசகம் எனப்படுமே

உள்நிறுத்தும் காற்றினையே கும்பகம் எனச்சொல்வர்


உட்கொள்ளும் சுவாசத்தை உச்சிக்குக் கொண்டுசென்று

ஸகஸ்ராரம் சேர்கையிலே அமுதமது உருவாகும்

இதுபுரியும் ஊட்டத்தால் உள்ளுணர்வு உனில்பிறக்கும்

ஆறுவகை ஆதாரமும் ஒருவருக்கு வசப்படுமே


முறையான குருமூலம் சரியாகக் கற்றவரே

இதன்சூக்குமம் அறிந்திடுவார் முறையான பலன்பெறுவார்!

ஆதார வாயுவினை இவ்வண்ணம் பயிலாத

யோகியரும் ஞானியரும் எத்துணைதான் விரும்பினாலும்

காணுதற்கு அரிதாகி அப்பாலுக் கப்பாலாகிக்

காணவொட்டாப் பரம்பொருளே! தனிப்பெரும் தலைவனே!


"நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே."

[நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே.]


ஓங்கி உயர்ந்திருக்கும் பெருமலையின் கிளைச்சிகரம்
நீண்டிருந்து மேலெழும்பி வானிருக்கும் மேகத்தைச்

சேர்ந்தடையும் வண்ணம்போல் சிறந்திருக்கும் சிராப்பள்ளி
மலையினிலே குடியிருந்து அடியவர்க்கு அருளிடவே

பெருவெள்ளம் தாண்டிவந்து தான்பெற்ற மகள்துடிக்கும்
நிலையினையே காணவொண்ணாத் தாயவளின் துயர்கேட்டுத்

தானேதாயாக அக்கரைசென்று மகப்பேறுத் தாதியாகச்
சென்றருளிய தாயுமான சுவாமிக்கு உயரியபொருளே!


"வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது"

[வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது]

எத்தனைநூல் கற்றாலென்ன எவையெவையோ படித்துமென்ன
அத்தனையும் பயன்தாரா அனுபவமே கைகொடுக்கும்

எத்தனைமலர் கொண்டிங்கே நானுன்னை அர்ச்சித்தும்
அத்தனையும் உன்தாளிணை சேர்ந்திடுமோ அறியேனே

எத்தனையோ பெருமைகளைச் சொல்லியுனைப் பாடினாலும்
அத்தனையும் நின்பெருமை சொல்லுதலும் கூடிடுமோ

"நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது"

[நெஞ்சினாலே மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது]


வெளிப்பார்வை வேடமிட்டு மனத்தினிலே மாசுவைத்து
ஒளித்திங்கு வாழ்வோர்க்கு பாலுள்ளேநெய்போல மறைந்திருக்கும்

தனைநினைந்து தினமுருகித் தணியாதக் காதலுடன்
மனமிருந்து நீங்காது என்றென்றும் வீற்றிருக்கும்

ஓயாது நிதமுழற்றி ஓராயிரம் உருக்காட்டும்
மாயையினால் வளைத்திடவே எந்நாளும் முடியாதது


"விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது"

[விந்துநாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக்கு ஈறு தான் அது
லோகத்துக்கு ஆதி ஆனது]

தத்துவங்கள் முப்பத்தாறில் முடிவான விந்துநாதம்
அத்தனையும் கடந்தங்கே தொலைவினிலே பொலிந்திருக்கும்

பூதவெளி கடந்திருக்கும் முடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
விண்வெளிக்கும் அப்பாலாய்த் தானிருந்து திகழ்ந்திருக்கும்

அண்டத்தில் நிலவுகின்ற எண்ணிறைந்த உலகங்கள்
அத்தனைக்கும் முதலாக விளங்குகின்ற மெய்ப்பொருளை


"கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ"

[கண்டு நாயேன் யோகத்தைச் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதி யாய்
இனி ஊனத்தைப் போடு இடாது மயங்கலாமோ]

நாயினேன் யானும் உள்ளுக்குள் கண்டுணர்ந்து
சிவயோகம் என்கின்ற பேருணர்வை அடையுமாறு

மெய்ஞ்ஞானப் பொருளதுவை உபதேசம் அருளிடுவீர்
பொய்யான மேனியிதை வெறுக்காமல் மயங்குவதோ?
[வாணாளை வீணாகக் கழிப்பதுவும் தகைமையோ?
மெய்யான தெய்வமே! இதுவுமுனக்கு முறைமையோ?]
***************

........ அருஞ்சொற்பொருள்..........

மாகம் = விண் முடிவு
ஊனம் = பொய்யான உடம்பு
போடு = வெறுத்து ஒதுக்குதல்
ஏனல் = தினைப்புனம்
மயல் = மையல் என்பதன் திரிபு
ஆலித்து = ஆரவாரம் செய்து
சேல் = மீன்
காளம் = விடம்
அடர் = நிறைந்த
ஆரம் = மாலை
ரேசித்து = வெளிவிடுத்து மீண்டும் பூரகம் செய்து சஹஸ்ராரப் பெருவெளியை எட்டுதல்
நாகம் = ஆகாயம்
சாகை = சிகரம், கிளை
சுரர் = தேவர்
*****************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***************

Read more...

Wednesday, February 24, 2010

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

திருப்புகழின் ஞான விளக்கங்களையெல்லாம் படிக்கிறபோது, மேலெழுந்தவாரியாக நான் எழுதிப் போகும் விளக்கம் எனக்குள் ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது! ஒவ்வொரு புகழுக்குள்ளும் ஓராயிரம் மறை பொருள் ஒளிந்திருக்கையில், நுனிப்புல் மேய்வது சரியோ என! 'உனக்குத் தெரிஞ்சதைத்தானே நீ செய்ய முடியும்!' என உள்ளேயிருந்து ஒரு குரல் வர, ராமர் பாலத்து அணில் போல என் பணியைத் தொடர்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!

அடுத்து என்ன எழுதலாம் எனப் புரட்டியபோது, முதலில் கணணில் பட்டது இந்த வள்ளிமலைத் திருப்புகழ்! சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது. இதற்கு இடையில் ஒரு அருமையான உபதேசமும் இதில் ஒளிந்திருக்கிறது! எப்படி பக்தி செய்தால் முருக தரிசனம் கிட்டும் என அருணையார் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்! முதலில், பாடலைப் பார்ப்போம்!

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

************************

-------- பொருள் --------
[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்திமாற்கும்
வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே

"தெள் அத்தி சேர்ப்ப"

செயலாக்கம் செய்வதற்கோர்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
கிரியா சக்தியின் வடிவமான
தெளிந்த நல்லறிவு மிக்க
தெய்வயானையின் தலைவரே!

"வெள் அத்திமாற்கும் மருகோனே"

வெள்ளையானையெனும் ஐராவதத்தைப்
பட்டத்துயானையாய்க் கொண்டிருக்கும்
தேவலோக அரசனான தேவேந்திரனின்
மகளை மணந்ததனால் மருமகனாகியும்,

"வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே"

வெண்ணிறம் பொங்கிப் பெருகும்
பாற்கடலிற் பள்ளிகொண்டதிருமாலின்
தங்கை மகனாய்ப் பிறந்ததனால்
அவருக்கு மருகனுமான முருகனே!


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள்
அத்த மார்க்கம் வருவோனே

மனவிருப்பு மிகக்கொண்டு
தினைகாத்த குறமகளை
வண்டினங்கள் சூழ்ந்திருக்கும்
வனத்தினிலே நிறைந்திருக்கும்
புள்ளினத்தைக் கொல்கின்ற
வேடுவர்கள் வாழ்ந்திருக்கும்
நெடுங்காட்டில் நடந்துசென்று
தேடியலைந்து திரிந்திட்ட பெருமானே!

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் இளையோனே

"வள்ளிச் சன்மார்க்கம்"

மனங்கவர்ந்த மன்னவனை
வனவேடன் வடிவினனை
கிழவேடம் தாங்கிவந்து
தினையள்ளித் தின்றவனைத்
தீரா விக்கலினால் தொண்டைதிணறச்
சுனையள்ளிக் குடித்தவனை
ஆனையண்ணன் உதவிகேட்டு
அரவணைத்துக் கொண்டவனை
வானோர்க்கும் வல்லபிரானை
மனதினிலே எண்ணியெண்ணித்
தன்னை மறந்துத் தலைவன் தாளே
தலைப்பட்டு நின்றிருந்தக் குறமகளைத்
தானே தேடிவந்து ஆட்கொண்ட அருளாளன்
தன்னை இழந்து "அவனை" நினைந்தவரை
முன்னின்று ஆட்கொள்ளும் மார்க்கமே
வள்ளிச் சன்மார்க்கமெனும் மறைநெறியாம்!

"விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே"

குறவள்ளி கடைபிடித்த
சன்மார்க்க நெறிதன்னைச்
சிவனாரும் வேண்டிடவேத்
தந்தைக்கும் அந்நெறியைக்
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவர் செவிக்குள் உபதேசம்
செய்திட்ட இளையவனே!

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வள்ளிக் குழாத்து வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

வள்ளிக்கொடி படர்ந்திருந்து
பக்கமெலாம் நிறைந்திருக்கும்
வள்ளிமலையெனும் மலைக்காட்டில்
தினைப்புனத்தைக் காக்கவந்து
தின்னவரும் புள்ளினத்தைக்
கவண்கல்லை வீசியெறிந்து
'சோசோ'வென ஆலோலம் பாடிய
வள்ளிக்குறத்திக்குக் கணவனாய்
வாய்த்திட்ட பெருமையுடையோனே!


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

"கள்ளக் குவால் பை"

பொய்,சூது, வஞ்சனையெனும்
கள்ளத்தனங்களால் நிறைந்த பை

"தொள்ளைப் புலால் பை"

ஒன்பது ஓட்டைகளை வைத்த
மாமிசத்தால் ஆன பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை

"துள் இக்கனார் கயவு கோபம் கள் வைத்த தோல் பை"

இங்குமங்கும் அலைந்து திரிந்து
துள்ளுகின்ற கரும்புவில்லைக் கொண்ட
மன்மதனால் உண்டாகும் அயர்வு,
கோபமெனும் தீய கள்ளைத் தன்னுள்ளே
வைத்திருக்கும் தோலாலான பை

பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ......

"பொள் உற்ற கால் பை"

இங்குமங்குமாய் வெகுவேகமாய்
உள்ளுக்குள் அலைகின்ற
பத்து விதக் காற்றடைத்த பை

"கொள்ளை துரால் பை"

வீசுகின்ற காற்றினிலே
செத்தையென அலைகின்ற
சருகான இலைபோலக்
கூற்றுவன் கயிறுவீசிக்
கொள்ளை கொண்டுபோம் பை

பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சா

"பசு பாச அள்ளல் பை"

பசுவென்னும் ஆன்மாவும்
பாசமென்னும் ஆணவமும்
சேர்ந்தடைத்த சேற்றுப் பை

"மால் பை"

ஆசை, காமமென்னும்
மயக்கங்கள் நிறைந்த பை

"ஞெள்ளல் பை"

பாவங்களும் குற்றங்களும்
நிறைந்திருக்கும் பை

"சீ பை"

சீழ் நிறைந்த பை

"வெள் இட்ட அசா"

தளர்ச்சி மிகுந்த பை

பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

"பிசிதம் ஈரல் அள்ள சுவாக்கள் சள் இட்டு இழா
பல் கொள்ளப்படு ஆக்கை தவிர்வேனோ"

உயிரிழந்து போனபின்னே
சடலத்தில் மிகுந்திருக்கும்
இறைச்சி, ஈரல் எனும் உறுப்புகளை
அள்ளியுண்ணவரும் நாய்கள்
'சள்'ளென்று குலைத்தும், இழுத்தும்
பற்களால் கடித்துக் குதறும்
இவ்வுடம்பை ஒழிக்கமாட்டேனோ?
********************

அருஞ்சொற்பொருள்

குவால்= கூட்டம்
தொள்ளை= ஓட்டை
புலால்= மாமிசம்
இக்கன் = கரும்பு வில்லை உடைய மன்மதன்
கள்= மயக்கம் தரும் பானம்; கோபமும் மயக்கத்தைத் தரும்
பொள்= வேகத்தைக் குறிக்கும் சொல்
கால்= காற்று
துரால்= செத்தை, சருகு
மால்= மயக்கம்
ஞெள்ளல்= குற்றம்; சோர்வு; பள்ளம்
அசா= தளர்ச்சி
பிசிதம்= இறைச்சி
சுவா= நாய்
ஆக்கை= உடம்பு
தெள்= தெளிந்த அறிவு
அத்தி= யானை; தெய்வானை
உத்தி= உந்தி= கடல்
சிள்= சிள் வண்டு
கிரார்= கிராதகர்; வேடர்
புள்= பறவை
அத்தம்= காடு
மார்க்கம்= வழி
விள்= விளக்கிச் சொல்
ஐ= தந்தை
வல்லை= விரைவு, வேகம்
நோக்கம்= கண்ணிமைக்கும் நேரம்
************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

Monday, January 18, 2010

"வடம் பிடிக்க வாரீர்!"

"வடம் பிடிக்க வாரீர்!"

அந்தப் பெரியவர் கால்களை நீட்டியபடி சயனித்திருக்கிறார்.
மெத்தப் படித்த அவரது பக்தர் ஒருவர், கால்மாட்டில் அமர்ந்தபடி, அவரது கால்களைப் பிடித்து, பாதசேவை செய்து கொண்டிருக்கிறார்.
பக்தரின் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

பெரியவர்: என்னப்பா? என்ன சொல்லிகிட்டிருக்கே?

பக்தர்: அது ஒண்ணுமில்லை சாமி! ஒரு சம்ஸ்க்ருத ச்லோகம்.

பெ: அதான் என்ன ச்லோகம்னு கேக்கறேன்.

பக்: கீதையில இருக்கற ஒரு ச்லோகம் சாமி அது!

பெ: எங்கே? சத்தமாச் சொல்லு! நானும் கேக்கறேன்.

பக்: "தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தர்ஷின:
- Hide quoted text -

பெ: இதோட அர்த்தம் என்னன்னு எனக்குக் கொஞ்சம் சொல்றியா?

பக்: ஸம்ஸ்க்ருதம் தெரிஞ்சா இதெல்லாம் ரொம்ப சுளுவாப் புரியும் சாமி!

பெ: அதானே உன்னைக் கேக்கறேன். இந்தப் பாட்டோட அர்த்தம் என்னப்பா?

பக்: அதாவது, [தொண்டையைக் கனைத்துக் கொண்டே] சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிகிட்டும், இது என்ன, அது என்னன்னு கேள்வி கேட்டுகிட்டும், கை காலைப் பிடிச்சுவிட்டுப் பணிவிடை பண்ணிகிட்டும், குருகிட்டேருந்து இந்த ஞானத்தைக் கத்துக்கோ. அப்படிப் பண்ணினேன்னா, அந்த ஞானிகள் ப்ரம்மத்தைப் பத்தின தெளிவை உனக்கு உபதேசம் செய்வாங்கன்னு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதுல சொல்றாரு!

பெ: இப்ப உன்னை இதோட மொத்த அர்த்தத்தையா நான் கேட்டேன்? வார்த்தை,, வார்த்தையாப் பிரிச்சு அர்த்தம் சொல்லுப்பா!

பக்: ப்ரணிபாதேனன்னா, பணிந்து வணக்கம் செய்வது; பரிப்ரச்னேனன்னா, கேள்விகள் கேக்கறது; ஸேவயான்னா பணிவிடை செய்யறதுன்னு அர்த்தம்
தத் வித்தி= கேட்டுத் தெரிஞ்சுக்கணும்
தத்வ தர்ஷின: ஞானின; ன்னா இந்த ஞானத்தைத் தெரிஞ்ச ஞானிகள்;
ஞானம்= அந்த ஞானத்தை; தே= உனக்கு; உபதேக்ஷ்யந்தி= சொல்லிக் கொடுப்பாங்க.

பெ: ரொம்ப நல்லா சொல்றியே! சரி, நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: 'ப்ரணிபாத'ன்னா அதான் அர்த்தம். எனக்கு அதுக்கு மேல சொல்லத் தெரியலை!

பெ: சரி, விட்டுரு! 'பரிப்ரச்ன'ன்னா....?

பக்: அதான் சொன்னேனே! கேள்விகள் கேட்கறதுன்னு அர்த்தம்.

பெ: அப்ப 'ப்ரச்ன'ன்னா என அர்த்தம்?

பக்: அதுவும் கேள்வி கேக்கறதுதான்!

பெ: அப்போ, 'ப்ரச்ன'ன்னே சொல்லியிருக்கலாமே ? எதுக்கு இந்த வியாஸர் 'பரி'ன்னு இன்னொரு வார்த்தையைச் சேர்த்தாரு? அவருக்கு எதுனாச்சும் மூளை கெட்டுப் போயிருக்குமோ?

பக்: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு!

பெ: 'ஸேவா'ன்னா, எந்த மாதிரி ஸேவை?

பக்: இதோ நாங்கள்லாம் உங்களுக்குப் பண்றோமே அது போலத்தான். இப்படி கை காலைப் பிடிச்சு விடறது, கூடமாட இருந்து உங்களைக் கவனிச்சுக்கறது இதெல்லாம்தான்!

பெ: [சிரிக்கிறார்!] ஓஹோ! அப்படிப் பண்ணினா மட்டும் போறுமா?

பக்: [சலிப்புடன்] இப்படி மடக்கி, மடக்கிக் கேட்டா எப்படி சாமி? எனக்கு வேற அர்த்தம் எதுவும் தெரியலை!

பெ: [புன்னகையுடன்] அடுத்த வரியில 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்'! இந்த ஞானம்ன்றதுக்குப் பதிலா வேற ஏதும் வார்த்தை போடலாமா? உனக்குத்தான் இந்த பாஷை நல்லாத் தெரியுமே!

பக்: [சற்றுத் தெம்புடன்] ஓ! போடலாமே!

பெ: என்ன போடலாம்?

பக்: அஞ்ஞானம்னு சொல்லலாம்.

பெ: அப்படிப் போட்டா இன்னும் தெளிவாப் பொருள் கிடைக்கும்னு நினைக்கிறியோ?

பக்: [சற்று திகைப்புடன்] இல்லை, இல்லை! நான் அப்படிச் சொல்லலை! சங்கர பாஷ்யமும் அப்படிச் சொல்லலை!

பெ: அதனாலென்ன? ஒரு நல்ல அர்த்தம் வரும்னா அப்படிச் சேர்த்தா என்ன தப்பு?
அது கிடக்கட்டும்! எதுக்கு ஒரு 'தத்வ தர்ஷி'கிட்ட போய் நமஸ்காரம் பண்ணி, கேக்கச் சொல்றாரு? கிருஷ்ணரே ஒரு பெரிய ஞானிதானே?

பக்: அட! ஆமாம்! ஏன் அப்படிக் கேக்கச் சொல்றார்?

பெ: அப்போ, உனக்கு இது புரியலைன்றியா?

பக்:[ பதைபதைப்புடன், பெரியவரின் கால்களைப் பிடித்துக் கதறியபடி] எனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியும்னு நினைச்சு ஆணவமா நான் சொன்னது மகா தப்புன்னு இப்பப் புரியுது சாமி! என்னை மன்னிச்சிருங்கோ! என்னோட திமிரை எவ்வளவு சுளுவா சுட்டிக் காண்பிச்சுட்டீங்க! தயவு செஞ்சு, இந்த ச்லோகத்தோட அர்த்தத்தை எனக்கு சொல்லி அருளணும் சாமி!

பெ: வெறுமனே காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணினா மட்டும் போறாது! உன்னோட உடல், பொருள், ஆவி இத்தனையும் அவர் காலுல போடறதா உணர்ந்து பணிவோட வணங்கணும்.

மடக்கணும், தப்பு கண்டு பிடிக்கணும்னு நினைச்சுகிட்டு குருகிட்ட கேள்வி கேட்கக் கூடாது. தனக்கு ஒரு தெளிவு வரணும்னும், ஆன்மீகத்துல இன்னும் முன்னேறணும்ன்ற ஆர்வத்தோட மட்டுமே கேள்வி கேட்கணும். கேட்டதை, நல்லாப் புரிஞ்சுக்கற வரைக்கும் தாராளமாக் கேட்கலாம். அரைகுறையாப் புரிஞ்சுக்கக் கூடாது.

ஸேவைன்னா சும்மாக் காலைப் பிடிச்சு விடறதுல்லாம் இல்லை. நம்மளோட இந்த உடல் தன்னுதுன்னு நினைக்காம, குருவுக்குப் பணிவிடை செய்யறதுக்குத்தான் இந்தப் பிறவி எடுத்தோம்னு நினைச்சுகிட்டு, பணிவிடை செய்யணும்!.

இப்படில்லாம் முறையாச் செஞ்சா, குருவானவர், உனக்கு ஞானத்தைப் போதிப்பார்!

அஞ்ஞானத்தை ஒழிச்சாத்தானே ஞானம் பிறக்கும்! ப்ரணிபாதன்னா சரணாகதி. ஏன் தவதர்ஷிகிட்ட போகச் சொல்றார் கிருஷ்ணன்? தன்னை அறிஞ்சவங்க எல்லாருமே கிருஷ்ணர்கள்தான்! முறையான பக்தனுக்கு, குரு ஒரு கிருஷ்ணனாத்தான் தெரிவார். அப்படிப்பட்ட குரு தனது சிஷ்யர்களை வாசுதேவனாப் பார்க்கறார்! கிருஷ்ணனோ இந்த ரெண்டு பேரையும் பிராணனாவும், ஆத்மாவாவும் பார்க்கறார்! இப்படிப்பட்ட தேடல்ல இருக்கற பக்தர்களும், தன்னை அறிஞ்ச குருவும் இருக்கறது கிருஷ்ணனுக்குத் தெரியாம போகுமா என்ன? அதனாலத்தான், எல்லாரையும் தங்கிட்ட வந்து கேளுங்கன்னு சொல்லாம, இப்படி ஒரு ஈஸியான வழியைக் காமிக்கறார்!

பக்: [கண்களில் நீர்மல்க] இதுமாதிரியே தினம் ஒரு ச்லோகத்துக்கு நீங்க அர்த்தம் சொல்லணும் சாமி! நான் அதைக் கேட்டுப் பயனடையணும்னு பணிவாக் கேட்டுக்கறேன் சாமி!

பெரியவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே, இன்னும் வசதியாகக் கால்களை நீட்டிப் புரண்டு படுக்கிறார்!

"பணிவதால் வினவலால் பணிவிடை புரிவதால்
அணியலார் மேனிய, அறியிதை; ஞானியர்
துணியமெய் உணர்ந்தவர் துலக்குவர் உனக்கதே!" [ப.கீ. அத்:4; 34]


[அந்தப் பெரியவர் ஷீர்டி ஸாயிபாபா! பக்தர் நானாஸாஹேப் சந்தோர்க்கர்.]
ஆதாரம்: ஷீர்டி ஸாயி ஸத்சரிதம், 39-ம் அத்தியாயம்]

Read more...

Monday, December 21, 2009

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"


இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்பதால், வழக்கம் போல மன்னாரைத்தான் தொந்தரவு செய்ய வேண்டியிருந்தது! காலையில்தான், ஒரு குறளைப் பற்றிக் கேட்கப்போய், கோபமாகத் திட்டி அனுப்பியிருந்தான் என்றாலும், வேறென்ன செய்வது என அவனைத் தேடிப் போனேன்!

மாலை நேரம்! நாயர் கடை வாசலில் ஒரு ஸ்டூலின் மீது அமர்ந்துகொண்டு, ஒரு பீடியை வலித்தபடி, மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தவன் முன்னே சென்று நின்றேன்!

'அடடே! வாப்பா சங்கரு! இன்னா காலையில பேசினதுக்கு கோவமா எம்மேல?' என அவன் கேட்டதும், எதையுமே மனதில் கொள்ளாத அவனது பாங்கை நினைத்து வியந்தபடியே, 'கோபம்னா இப்பத் தேடிகிட்டு வருவேனா?' எனச் சிணுங்கினேன்.

'ம்க்கும்! இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சலில்லை! சும்மா வரமாட்டியே! இன்னா சமாச்சாரம்? இப்ப ஆரு இன்னா கேட்டாக்க?' எனச் சொல்லிச் சிரித்தான்.

மௌனமாகக் கையிலிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

'அத்தெல்லாம் வேணாம்! நீயே படி அதுல இன்னா எளுதிருக்குன்னு' எனச் சொல்ல, நானும் படித்தேன்.


1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி.

'இதுக்கெல்லாம் அர்த்தம் வேணுமாம் என்னோட நண்பர் ஒருவருக்கு' என்றேன்.

'கொதம்பைச் சித்தர் பாட்டுல்ல இது!' என்றவன், சற்று நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, கண்ணைத் திறந்து, என்னைப் பார்த்து,

'இதுல அந்த ரெண்டாம் பாட்டுத்தான் கொஞ்சம் கஸ்டம்! மத்ததெல்லாம், அப்பிடியே படிச்சாலே கொஞ்சம் புரிஞ்சிரும். அதுனால, மொதல்ல அதுக்குச் சொல்றேன், கேட்டுக்கோ' எனச் சொல்லத் தொடங்கினான்.

'சித்தருங்க பாசையில, ரெண்டு சமாச்சாரத்தை அமிர்தம்னு சொல்லுவாங்க! ஒண்ணு வெளியில கிடைக்கற அமிர்தம்; இன்னொண்ணு உள்ளாலியே சுரக்குமாம்!
இந்த வெளியில கிடைக்கறதுக்குப் பேரு தேங்காப்பாலு! தேங்காயில இருக்கற
கொளுப்பை எடுத்துட்டுக் கடயற பாலுக்கு இந்தப் பேரு. நம்ம வள்ளாலாரு சாமி இத்த 'புறப்புற அமிர்தம்'னு சொல்லுவாரு. இத்த மட்டுமே சாப்பிட்டுகிட்டு உசிரு வாளுவாங்க சித்தருங்கல்லாம்.

தேங்காப்பாலு கதை இதாச்சா! இப்ப மாங்காப்பாலுக்கு வருவோம்!

வாசி யோகம்னு ஒரு பயிற்சி இருக்குன்னு சித்தருங்க சொல்லி வைச்சிருக்காங்க!
மூச்சு வுடறதக் கட்டுப்படுத்தி, சுளுமுனைன்னு சொல்ற இடத்துல அதை நிறுத்தி பயிற்சி பண்றதை அப்பிடி வாசின்னு சொல்லுவாங்க! இதப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, ஒரு சரியான குருகிட்ட போய் கத்துக்கணும் நீ! அதான் ஒனக்கு ஒருத்தர் இருக்காரே! அவருக்குத் தெரியும் ஒனக்கு சொல்லணுமா, வேண்டாமா, அப்பிடி சொல்லணும்னா, அத்த எப்ப சொல்லணும்னு
அல்லாமே தெரியும் அவருக்கு! இப்ப அதில்ல இங்க பிரச்சினை!

விசயத்துக்கு வருவோம்!
இப்பிடி வாசியைக் கட்டி, தியானம் பண்ணிப் பண்ணி, அசைவே இல்லாம நிக்கற நிலை ஒருத்தனுக்கு வந்திச்சுன்னா, அப்போ, புருவத்துக்கு மத்தியில, ஒரு ஜோதி தெரிய ஆரம்பிக்குமாம். அப்ப, அவனோட உள்ளுக்குள்ள, ஒரு அமுதம் சுரக்குமாம்! அதான் இந்த மாங்காப்பாலு.!

இத்தச் சாப்பிட்டவனுக்கு சாவைப் பத்தின பயம் போயிரும்! 'மரணமில்லாப்
பெருவாழ்வு'ன்னு வள்ளலாரு சொல்றதும் இதைத்தான்! அதுக்கப்புறம், சாப்பாடு கூடத் தேவைப்படாது அவனுக்கு! அந்தத் தேங்கப்பாலு கூட அவனுக்கு இனிமே வேணாம்!
அத்தத்தான் அந்த ரெண்டாவது பாட்டுல, மாங்காப்பாலு சாப்ட்டவனுக்கு, தேங்காப்பாலு ஏதுக்கடீன்னு கொதம்பையைப் பார்த்து பாடறாரு சித்தர்! வெளங்கிச்சா?
வெளங்கலைன்னா, இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது! ஓடு, ஒன்னோட குருவாண்டை!' எனச் சொல்லி நிறுத்தினான்.

இப்ப ஓடிட்டா, மீதிப் பாட்டுக்கு விளக்கம் கிடைக்காதேன்னு, 'ம்ம்' எனப்
புரிந்ததுபோலத் தலையாட்டினேன்!
************

என் மனநிலையைப் புரிந்தவன்போல், மன்னார் ஒரு நமுட்டுச் சிரிப்பை
உதிர்த்துவிட்டு மேலே தொடர்ந்தான்!

'இன்னொண்ணு சொல்லணும். வாசின்னா குதிரைன்னு அர்த்தம்! மூச்சுக்காத்து மூலமா இந்தக் குதிரையைக் கட்றதுக்குப் பேருதான் வாசி யோகம். இனிமே மத்ததெல்லாம் பாக்கலாம்.

தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?

மொதப்பாட்டுல, தாவாரம் இல்லேன்னா ஒனக்கு ஒரு வீடு இல்லைன்றாரு! அந்தக் காலத்துல வீடு கட்றப்ப, தாவாரம் இல்லாம ஒரு வீடும் இருக்காது! வெளியிலேர்ந்து வர்றவங்கல்லாம், அக்கடான்னு ஒரு துண்டை விரிச்சு அதுல படுத்துக்குவாங்க. மேலேருந்து வெட்டவெளிக் காத்து சும்மா ஜிவ்வுன்னு பிச்சிக்கும்! சாப்பாடு ஒரு நூறு பேருக்கு ஒக்கார வைச்சுப் போடலாம்! சுருக்கமா சொல்லப்போனா, பிறத்தியாருக்கு ஒதவுற ஒரு எடம் வீட்டுலியே அதான்னு சொல்லலாம்.

இப்பல்லாம், ஆரும் தாவாரம் வைச்சு வூடு கட்றதில்லை! ஒதவி பண்ணனுன்ற
நெனைப்பே கொறைஞ்சு போச்சே! எப்பிடி அவன் தாவாரம் வைச்சு வூடு கட்டுவான்!
ஆனாக்க, அதில்ல இதுல சொன்னது!

"தா"ன்னா துன்பம், கஸ்டம்னு அர்த்தம். 'வாரம்'னா பங்கு போடறது! அடுத்தவங்களோட கஸ்டத்துல நாமளும் பங்கு எடுத்துக்கறதுதான் தாவாரம்! அத்தப் பண்ணாம, சும்மனாச்சுக்கும் தேவாரத்தை, அதாவது, சாமிப்பாட்டுங்களை மட்டுமே பாடிகிட்டு இருந்தியானா, ஒனக்கு மோட்சம் கிடக்காதுன்னு தீர்மானமா சொல்றாரு சித்தரு! 'பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்' னு கண்ணதாசன் பாடுவாரே, அதான் இது!


இன்னும் சுளுவாச் சொல்லணும்னா, எளுத வேண்டிய பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம, பிள்ளையாருக்கு நூறு தேங்கா ஒடைக்கறேன்னு வேண்டிக்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் ஒரு பதிலாக் கூட, இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்!


அடுத்தது மூணாவது!
செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?

இந்தக் கட்சி மீட்டிங்லல்லாம் பார்த்திருப்பியே! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருப்பாங்க! திடீர்னு ஒர்த்தன் வந்து, மைக்கைப் பிடிச்சுகிட்டு,' இதோ நம்ம தானைத் தலைவர் வராரு'ன்னு ஒரு சவுண்டு வுடுவான். அவ்ளோதான்! கூட்டமே எளுந்து நின்னு, கையைத் தட்டிகிட்டு, 'தலீவா. தலீவா'ன்னு கோஷம் போடும்! அவரு பேசறப்ப, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டி குஜால் ஆவாங்க!

ஆனாக்க, அல்லாத்தியும் ஒணந்தவனுக்கு, இதுல்லாம் லச்சியமே இல்லை! விடுதலை ஆனவன்னா இன்னா? அல்லாம் செத்துப் போனவன்னு அர்த்தம்! செத்துப் போறதுன்னா உசிரை வுடறது இல்லை! அல்லா நெனைப்பையும், ஆசையையும் தொறந்தவன்னு பொருளு! அப்பிடியாப்பட்ட ஆளை இந்த வாள்க, ஒளிக கோஷம்லாம், கைத்தட்டல்லாம் ஒண்ணுமே பண்ணாதுன்றதை இதுல சொல்றாரு.

இப்பக் கடோசி பாட்டு!
பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி?

ஆரும் பார்த்திடக் கூடாதேன்னு, பதுங்கிப் பதுங்கிப் போறவந்தான் முட்டாக்குப்
போட்டுகிட்டு, இருட்டுலியும் மூஞ்சியை மறைச்சுகிட்டுப் போவான்! அல்லாத்தியும் தொறந்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சத்துலியே இருக்கறவனுக்கு அதெல்லாம் எதுக்குன்றாரு. ரெண்டாவது பாட்டுல சொன்னதுபோல, வாசிக் குதிரையைக் கட்டி, உள்ளுக்குள்ளாலியே ஒரு ஜோதியைப் பார்த்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சந்தான்! எப்பவுமே பகல்தான்! ஐயா சுத்தறதும் பெரிய பட்டணம்! சாமியே இருக்கற பெரிய பட்டணம்! அப்பால இன்னாத்துக்கு அவரு முக்காடுல்லாம் போட்டுக்கினு, தான் ஒரு சாமியாருன்னு காட்டிகிட்டுத் திரியணும்? ஆரும் வந்து கை தட்றதுக்கா? இல்லேன்னா,
தேவாரம், பிரபந்தம் படிக்கறதுக்கா? அவருதான் விடுதலையாகி, ஜோதியில நிக்கறாரே! முக்காடெல்லாம் தேவையில்லைன்றாரு. அதெல்லாம் ஒன்னிய, என்னியப் போல ஆளுங்க போடறது! அவருக்குத் தோதுப்படாது!'

எனச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தவன், 'இதுக்கெல்லாம் இன்னுமே ஆளமாப் பொருள் இருக்கும்! சொல்றவங்க வந்து சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்வாங்க! ஒனக்கு இது போறும்' எனச் சொல்லி, நாயரிடம் இரண்டு 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தான் மயிலை மன்னார்!

தெரியாத நாலு விசயத்தைக் கற்றுக் கொண்டோமே, அதையெல்லாம்விட, மயிலை மன்னாருடன் நல்லபடியாக இன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்ததே என்னும் திருப்தியோடு மானசீகமாக 'இறுகப் பற்றியவனை' வணங்கிக் கொண்டேன்!
எதிரே இருந்த கபாலீச்வரர் கோயிலில் மணி ஓங்கி ஒலித்தது!
********************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP