Saturday, January 06, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]

"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )


இறைவன் பெருமையைப் பாடியும், அவனைக் காண நீராடியும் முடித்த பெண்டிர், முனிவர், சிவனடியார்கள் அனைவரும் இப்போது திருப்பெருந்துறையில் அருள் புரியும் சிவனைத் துயிலெழச் செய்ய விரைகின்றனர்! அதே போற்றியும், திருவடிகளும் இங்கும் தொடர்கிறது!

நாமும் அங்கு செல்வோம்!



திருச்சிற்றம்பலம்


போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !

ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 1.

என் வாழ்விற்கு முழுமுதல் பொருளாக ஆனவனே!
உன்னைப் போற்றுகின்றேன்!

பொழுது விடிந்து விட்டது! மலர் போன்ற உன்
திருவடிகளுக்கு இணையான மலர் கொண்டுவந்து
அத்திருவடிகளில் தூவினோம்!

அதனால் மனமகிழ்ந்து உன் பூமுகத்தில் மலர்ந்த
அழகிய புன்னகையைக் கண்டதும்
அதனை மனதில் நிறுத்தி மீண்டும்
உன் திருவடிகளையே வணங்குகிறோம்!

சேற்றில் மலர்ந்து தேன்இதழ் விரிக்கும் தாமரைகள்
நிறைந்த குளுமையான வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவனாரே!
உயர்த்திய காளைக் கொடி உடையவரே!

எங்களையும் அடிமையாகக் கொண்டவரே!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


அருஞ்சொற்பொருள்:
சேறு - கள்/ தேன்; தண் - குளிர்; ஏறு - இடபம்.

Read more...

Friday, January 05, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி

பதின்மூன்றாம் பாடல் மனதைக் கவர்ந்தது போலவே, இப்பாடலும் உருக்கியது!

இப்பாடலில் எட்டு அடிகள்!
அதில் முதல் ஏழு அடிகளில் போற்றப்படுவது ஈசன் திருவடிகள்!


அதைப் பற்றிய விளக்கம் ஒன்றை ஓர் உரையில் படித்தேன்.

சைவ சித்தாந்தத் தத்துவத்தை அப்படியே இந்த ஒரு பாடலில் பிழிந்து தந்திருக்கிறார், வாதவூரார்!
நான் அறிந்ததை இங்கு உங்களுடன் பங்கிட விழைகிறேன்!


திருவெம்பாவையின் முதல் பாடலில் "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி" என இறைவனைப் புகழ்ந்த மாணிக்கவாசக சுவாமிகள், இந்த இருபதாம் இறுதிப் பாடலில் ஆதிக்கு ஒரு வணக்கம், அந்தத்திற்கு ஒரு வணக்கம் என முதல் இரு அடிகளில் போற்றுகிறார்.

அடுத்த ஐந்து அடிகளில், ஒரு ஐந்து நிகழ்வுகளைச் சொல்லி, அதற்கும் இத் திருவடிகளையே போற்றுகிறார்!

இவை என்னென்ன எனப் பார்க்கலாம்!

ஐந்தொழில் புரிய திருவுளம் கொண்டு இந்த சிவம் என்னும் சோதி எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான "ஆதி" [முதல்]ஆயிற்று.

இந்த ஐந்து தொழில்களும் முடிந்த நேரத்திலோ, அனைத்தும் ஒடுங்கும் 'அந்தம்" [இறுதி] ஆயிற்று!

முதலும், முடிவும் இல்லாத முழுமுதற்பொருள், நமக்குக் கருணை செய்யும் பொருட்டு, ஐந்தொழில் புரிந்து ஆதியும், அந்தமும் ஆயிற்று!

அப்படிப்பட்ட, ஆதியும், அந்தமும் நம் சிவனாரின் சேவடிகளே!
அவை நம்மைக் காத்து அருளட்டும்!

இப்போது இந்த ஐந்தொழில்களைப் பார்ப்போம்!

முதலில் வருவது "படைப்பு"... தோற்றம்!


தோன்றிய ஒன்று நல்ல முறையில் காக்கப்பட வேண்டுமேயானால், இன்பம்.....போகம் துய்க்க வேண்டும்! இதுவே "காத்தல்"!


பிறந்தவை யாவும் ஒரு நாள் அழியத்தான் வேண்டும்! இந்த "அழித்தல்" ...ஈறு எனப்படும்!

இம்மூன்றும் தவிர, வேறு இரு தொழில்களும் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டு!

ஒன்று "மறைத்தல்"...காணாமை! தன் திருவடிகளை மறைத்து சோதிப்பிழம்பாய், மாலறியா, நான்முகனும் 'காணா' மலையாக நின்றது குறிப்பால் காட்டப் பட்டது.

அடுத்த, ஐந்தாவது தொழில், "அருளல்"....உய்ய ஆட்கொண்டு அருளுவது! நாம் கடைத்தேற வகை செய்வது!

இந்த "படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்" என்னும் ஐவகைத் தொழில்களையும் திருவடிகளே செய்யும்!

இப்படி ஏழடியிலும், இறைவன் திருவடிகளே போற்றப்பட்டது.


எட்டாம் அடியில் இம்மாதத்திற்கு உகந்த "மார்கழி நீராடல்" போற்றப்பட்டது!

இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் பார்ப்போம்!


போற்றி அருளுக நின் "ஆதியாம்" பாதமலர்
போற்றி அருளுக நின் "அந்தமாம்" செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் "தோற்றமாம்" பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் "போகமாம்" பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் "ஈறாம்" இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் "காணாத" புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு "அருளும்" பொன்மலர்கள்
போற்றியாம் "மார்கழி நீர் ஆடேலோர்" எம்பாவாய். 20


அருவம், அருவுருவம், உருவம் மூன்றும் கடந்த இறைவனாரின் ஞானசொரூபத்தில்,
பெண்ணாகி, ஆணாகி, அலியாகி நின்ற நிலையில்,

விண்ணாகி, மண்ணாகி, இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்ற தோற்றத்தில்,
திருவடிகளும் ஒரு ஞான பாவனையாகவே அமையும்.

உண்மையில் உருவமில்லாதவன் அவன்!

இதனை உணர்ந்த ஞானமே அம்பலம்.... திருக்கோயில்.... அண்ணாமலை !

அதில் விளையும் ஆனந்தமே இறைவனாரின் திருக்கூத்து!

இப்பேரானந்தத்தை நாளை முதல், நம்முள் "திருப்பள்ளி எழுச்சி" பாடுவோம், இன்னும் பத்து நாட்களுக்கு!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம்.

Read more...

Wednesday, January 03, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


[கரையேறிய பெண்கள் காலைக்கருக்கலில் நிமிர்ந்து பார்க்கிறார்கள்!
நெடிதுயர்ந்த கோபுரம் மங்கலாகத் தெரிகிறது!
வழக்கம் போலவே, உயர்ந்த உருவத்தோடு அந்தச் சிவனாரே தெரிகின்றனர்!
ஆனால், இதென்ன! ஒன்றும் சரியாகத் தெரியவில்லையே!
மேலே குறுகிய உடலோடும் கீழே அகன்று விரிந்த பாதங்கள் தெரிகின்றன!
அன்பு மேலிட்டு அத்திருப் பாதங்களைப் போற்றிப் பாடத் துவங்குகின்றனர்!
எல்லாம் போற்றி முடித்த பின்னர் திரும்பிப் பார்த்தால்......
இன்னும் ஒரு பெண் மட்டும் கரையேறாமல் குளித்துக் கொண்டிருக்கிறாள்!
அவளையும் அழைக்கின்றனர்!]


[மேலே சொன்னது என் மனதில் தோன்றிய கருத்துகள்! கற்பனை!]

அனைத்திற்கும் தொடக்கமான உன் மலர்ப் பாதங்கள் எமக்கு அருளட்டும், போற்றி!

அனைத்தும் முடிவாக வந்தடையும் சிவந்த தளிர் போன்ற பாதங்கள் அருளட்டும், போற்றி!

அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் இடமான அந்த பொற்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களும் இன்பம் துய்க்க அருளும் மலர்ப்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களுக்கும் இறுதியாய் விளங்கும் இணையான இரு பாதங்களே, போற்றி!

அரங்கனும், அரனும் தேடியும் காணமுடியாத திருவடித் தாமரைகளே, போற்றி!
அனைவரும் முத்தியடைய ஆட்கொண்டருளும் பொன்மலர்ப் பாதங்களே, போற்றி!

அனைவரும் எழுந்தபின்னரும் இன்னுமா மார்கழி நீராடுவாய்? பாடுவோம் நாம், போற்றி!

அருஞ்சொற்பொருள்:
ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை

[இதற்கு இன்னொரு ஆழ்விளக்கமும் உண்டு!
அது நாளை!]


திருச்சிற்றம்பலம்!

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

[குளியாட்டம் நிகழ்ந்தவரை ஒரே கும்மாளமாயிருந்த பெண்கள், சிவனாகவே தாங்கள் கண்ட இப்பூம்புனலை விட்டுக் "கரை" ஏறுகிறார்கள்!
நிகழ்வுலக மயக்கம் இவர்களைப் பீடிக்கிறது!
அதினின்று விடுபடவும் சிவனாரையே வேண்டுகின்றனர்!
நாகரிகம் மாறி வருகின்ற இக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலை அன்றே இப்பெண்கள் பாடியிருக்கிறார்கள்!]



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்


எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19




எல்லாம் வல்ல எங்கள் பெருமானே!
எங்களுக்கெல்லாம் இப்போது ஓர் புது அச்சம் வந்திருக்கிறது!


"உன் கைப் பிள்ளை உனக்கே உரியது! நும் பொறுப்பே அவையெல்லாம்"
என்று,எப்போதும் வழங்கும் பழமொழி யாம் கேட்டிருக்கிறோம்!


[கரையேறும் இந்நேரத்தில்] அதனை மீண்டும் ஓர்முறை
உம்மிடம் நினைவூட்ட வேண்டுமோவென எமக்குத் தோன்றுகிறது!

எனவே உன்னிடம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றோம்!
நாங்கள் சொல்வதைக் கருணையுடன் கேட்டருள்வாயாக!

உன் அடியவர் என்பரைத் தவிர்த்து வேறொருவர் தோள்களையும்
எம்மார்பில் நாங்கள் தழுவுதல் இல்லாமல் போகட்டும்!

உம் பணியே அல்லாது வேறெந்தத் தோழிலும்
எம் கைகள் செய்யாதிருக்கட்டும்!

வேறெதுவும், இதைத்தவிர, இரவும், பகலும்
எம் கண்கள் கண்டு மயங்காதிருக்கட்டும்!

யாம் வேண்டிடும் இந்தப் பரிசுகளை மட்டும்
எம் தலைவனாம் நீவிர் அருள் புரிவீரேல்,

கதிரவன் இனி எத்திசையினில் உதித்தால்தான்
எமக்கென்ன குறை? எனச் சொல்லி

ஆடி எழுந்திரடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:
கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

Read more...

Monday, January 01, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

[மழை வந்ததும் இன்னொரு ஆசை பிறக்கிறது இப்பெண்டிருக்கு! பூம்புனலில் பாய்ந்து நீரில் துழாவி,அடிப்பக்கம் வரை செல்ல! மேலே வெளிச்சம்; கீழே இருள்! இடையினில் இரண்டும் கலந்த ஒரு தோற்றம்! கற்பனைச் சிறகு விரிந்து பறக்கிறது! இறைவனை இம்மூன்றாகவும் பாடி மகிழ்கின்றனர்!
எங்கும் இறைவன்! எதிலும் இறைவன்! என்னே இவர் மாண்பு!]

இத் திருவாதிரைத் திருநாளில் நாமும் அவன் கழலடி பணிவோம்!!

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்


கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்


பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18


திருவண்ணாமலையினிலே நம் இறைவன்
பேரொளிப் பிழம்பாய் நிற்கின்றான்!

அவன் திருவடித் தாமரை பணிந்து
வணங்கிடும் விண்ணவரின் மகுடங்களில்
விளங்கிடும் அணிமணி வைரங்கள்
எம்பிரானின் திருவடிப் பேரொளிமுன்
ஒளியிழந்து, தம் பெருமை இழந்து
மங்கித் திரிதல் போல,

காரிருள் நீங்கிடும் வண்ணம்
கதிரவன் எழுந்ததும் இங்கே
விண்மீன்கள் எனும் தாரகைகள்
தம் ஒளியிழந்து மறைந்தன!
பொழுதும் விடிந்து விட்டது!

பெண்ணென்றால் பெண் எனவும்,
ஆண் என்றால் ஆண் எனவும்,
இரண்டுமற்ற அலி எனவும்
அவன் இங்கே விளங்கிடுவான்!
[எப்படி இது சாத்தியமெனின்],

இடையறாது ஒளிவீசும் ஆதவனும்
வெண்மதியும், ஒளிர்தாரகையும்
விளங்கிடும் வானம் போலவும்,
அவற்றால் பயன்பெறும் நிலம் போலவும்,
இவை இரண்டிற்கும் வேறான அனைத்துமாகவும்
விளங்கி நின்று, நம் கண் முன்னே
காட்சி தரும் நிறையமுதமாகவும்
நிற்கின்ற, எம் தலைவனின் கழல் பூண்ட
திருவடிகளினைப் பாடிப் பாடி
மலர் நிறைந்து விளங்குகின்ற
இந்த நீரினில் நீயும் மேலும் கீழும்
பாய்ந்து ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.

Read more...

Sunday, December 31, 2006

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

[இறையை நினைந்ததும், இறைவன் நினைவுக்கு வருகிறான்! மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது! குளியாட்டமும்தான்!]


செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்


கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17


தாமரை போலும் சிவந்த கண்களையுடைய திருமாலிடத்திலும்,
திசைக்கு ஒன்றென தலைகளையுடைய நான்முகனிடமும்,
இவரைப் பணிந்து நிற்கும் தேவர்களிடமும்
வேறெங்கினுமெ இலாத இன்பப்பெருவெள்ளம்

நமக்கே ஆகுமாறு நலமுடன் நல்கி
ஏ! தேன் உண்ணும் கூந்தலுடைய பெண்ணே!
நாம் செய்திடும் குற்றங்களெல்லாம் போக்கி
நாம் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி

செந்தாமரை போலும் சிவந்த பொற்பாதங்களை
நமக்கெல்லாம் தந்தருள் செய்யும் பெருங்கருணை
உடையவனை, அழகிய கண்கள் உடைய நம் அரசனை
அடிமையாம் நமக்கெல்லாம் இனிய அமுதமானவனை

நம்முடைய இறைவனாம் சிவனைப் பாட
நல்வளம் பெருகி விளங்கிட எண்ணி
தாமரை மலர் நிறைந்த இத்தடாகத்தில்
பாய்ந்து நீந்தி ஆடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

செங்கணவன் - செங்கண் அவன், திருமால்; திசைமுகன் - பிரமன்; கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; அங்கண் - அழகிய கண்கள்; பங்கயம் - தாமரை.

********************************************************

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

தேன்கூடு போட்டி வெற்றிக்கென வாழ்த்தியவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி!

*******************************************************



Read more...

Saturday, December 30, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்


மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

[குளத்து நீரின் குளுமை போதவில்லை இந்தப் பெண்களுக்கு! கூடவே மழையும் வேண்டுமாம்! அந்த மழையை அழைக்க மாயவளை உவமை சொல்லி அழைக்கின்றனர்! இன்னொரு தமிழ்ச்சுவைப் பாடல்! வாங்க அனுபவிக்கலாம்! இறுதியில் எழுதி இருப்பதையும் படியுங்கள்!]

நீலக்கடலினை நெருங்கி அதனை முகர்ந்து
கடலினைக் குறைத்து கார்மேகமாய் எழும்பி
மலைமகளாம் உமையவளை ஒத்த மேகம் போல் திகழ்க!

எங்களை ஆட்கொண்டு அருள் பாலிக்கும்
பார்வதியின் சிற்றிடையைப் போல
மெலிதாய் மின்னும் மின்னலாய்ப் பொலிக!

திருப்பிராட்டியின் திருவடியில் பொலிவாய்
திகழ்ந்திருந்து, திருநடனத்தின் போது பேரொலிபோல்
முழங்கிடும் சிலம்பு போன்ற இடிபோல் ஒலிக்க!

பிறைநுதல் போல வளைந்து நிற்கும்
வில்லென விளங்கிடும் எம் தாயின் புருவம் போல
பொலியும் வானவில்லாய் வளைந்திடு!

எம்மை விட்டு என்றும் விட்டகலா எந்தாயோடு
என்றும் இணைந்திருப்பதால் அவரன்பும் கூட்டி
நம்போன்ற அன்பர்க்கெல்லாம் விரைந்து வந்து

நாம் கேளாமலே, கேட்கும் முன்னே நம்மீது
அருள் புரியும் அன்னையவள் அருள் போல எம்மீது
பொழிக மழையே! எனச் சொல்லி ஆடடி என் பெண்ணே!

[மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லைப் பார்க்கையிலும், அன்னையையே காணும் இவர் நிலை நமக்கெல்லாம் வர இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!]

அருஞ்சொற்பொருள்:
இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர


நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15


{"இதோ இப்படி இழுத்துப் பிடித்து, எழுப்பி அழைத்து வந்திருக்கிறோமே, இந்தப்பெண்! இவள் எத்தன்மையாயவள் தெரியுமா" எனச் சொல்லி மற்றவர்க்கு உரைக்கும் பாடல்!}

எம்பெருமான், எம்பெருமான் எனச் சொல்லி எப்போதும்
நம்பெருமானின் பெருமையினை வாய் ஒயாமல்
உள்ளமெல்லாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருப்பவள்!

அவனையே நினைத்திருந்து விடாது வழிந்திடும்
தாரை தாரையென கண்ணீரில் தோய்ந்து
இவ்வுலக நினைப்பினையே மறந்தவள் இவள்!

வேறோர் தேவரையும் பணிவதில்லை இவள்!
பேரரசனாம் நம் சிவனாரின் மேல் இவ்வாறு
பித்துப் பிடிக்கின்ற தன்மையினையும் செய்ய வல்ல

அவ்வாறு செய்ய வைக்கும் சிவனாரின் திற்ம் மிக்க
சிவந்த திருப்பாதங்களையும் நம் வாயாரப் பாடி
அவர்தம் திறனை வியந்திங்கே போற்றிப் போற்றி

கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்களே!
நேர்த்தியான மலர்கள் நிறைந்த இப் பைங்குளத்தில்
ஆட்டிடுவோம் நீயும் ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

ஓவாள் - ஓயமாட்டாள்; தாரை - கண்ணீர்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்; வார் உருவப் பூண் முலையீர் - கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்.

Read more...

Friday, December 29, 2006

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

[தமிழ்மணம் சென்ற பதிவில் இன்னும் தொடரட்டும்!
திருவெம்பாவையை நாம் தொடரலாம்!]


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்


சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி


சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்


பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

{ஆட்டமும், பாட்டமும் இன்னும் தொடர்கிறது!!}

காதில் பூட்டியிருக்கும் குழைகள் ஆட,
மார்பில் தவழும் பொன் அணிகலன்கள் ஆட,
பூமாலை அணிந்த கூந்தல் ஆட,
பூவில் தேனைக் குடிக்க வரும் வண்டினம் ஆட,


நாமெல்லாரும் இக்குளிர்நீரில் களித்தாடி,
இறைவனின் சிற்றம்பலத்தைப் பாடி,
வேதங்களின் மூலப்பொருளாம் சிவனாரைப் பாடி,
எவ்வண்ணம் அவன் வேதங்களின் பொருளாவான் எனப் பாடி,


சோதிவடிவானவனின் பெருமையைப் பாடி,
அவன் தலையில் அணியும் கொன்றை மலர்க் கொத்தினைப் பாடி,
அனைத்திற்கும் முதலாகும் அவன் வல்லமையைப் பாடி,
அவனே அனைத்திற்கும் இறுதியும் ஆவதை வியந்து பாடி,


மும்மலம் அழித்து,பின் நம்மை வளர்த்தெடுத்த,
இறைவனின் சக்தியின் பாதத் திறத்தினையும்
போற்றிப்பாடியே நீயும் நீராடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

13-ம் பாடலில் சொன்ன பத்து "பொங்குமடு"க்களுக்கும் விளக்கத்தை சென்ற பதிவில் காணலாம்!

Read more...

Thursday, December 28, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]" இரண்டாம் பகுதி

அடுத்த திருவெம்பாவைப் பாடல் எழுதி முடித்தாலும், இந்த 13-ம் பாடலை விட்டு மனம் இன்னும் அகல மறுக்கிறது!

என்னவொரு கவி நயம், இலக்கியநயம், தமிழ்மணம்!

உங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளாமல் அடுத்த பாடலுக்கு செல்லப் போவதில்லை!

தமிழறிந்த நல்லோர் இங்கிருக்கும் வேளையில், இதையும் கொஞ்சம் கேட்டு, எனக்கும் விடையளித்து...... ஆம்... இதற்கு நீங்கள்தான் முதலில் சொல்ல வேண்டும்!... பிறகு 14-ம் பாடலுக்கு நாளை செல்லுவோம்! சரியா!

பாடலை முதலில் மீண்டும் ஒரு முறை பார்ப்போம்!

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எங்கோனும், போன்று இசைந்த

பொங்குமடு"
வில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


முதல் 5 வரிகளில்தான் இந்த விளையாட்டை மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்!

அவற்றைக் கீழே தருகிறேன்.

ஒவ்வொருவரும் வந்து கருத்து சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

1. பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

2. செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு.

3. அங்கு அம் குருகு இனத்தால் பொங்குமடு.

4. அங்கம் குருகினத்தால் எங்கள் பிரட்டி போன்று இசைந்த பொங்குமடு.

5. அங்கு அங்கு உருகு இனத்தால், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

6. அங்கு அம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

7. பின்னும் அரவத்தால், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.


8. அங்கு அம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் பொங்குமடு.

9. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

10. தம் கண்மலம் கழுவுவார், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

[இவற்றை விளக்குவதுதான் உங்கள் வேலை! எத்தனை கற்பனைகள் விரிகின்றன எனப் பார்த்து மகிழலாம்!]

இவை அனைத்தாலும் பொங்குகின்ற பொங்கு மடுவில், இப்பெண்களும் பாய்வதால், இவர்களின், சங்குகளாலும், சிலம்புகளாலும், கொங்கைகளாலும் மேலும் இந்தப் பொங்குமடு பொங்க, அதனால் இப்புனல் பொங்க, இப்பங்கயப் பூம்புனலில் பாய்ந்தாடும் காட்சியினை சற்று கண்களை மூடிய வண்ணம் எண்ணிப்பாருங்கள்!

ஆகா! தமிழே! நீ வாழி!

Read more...

Wednesday, December 27, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்


தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த


பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்


கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13




[[காலைக் கருக்கலில், இன்னும் பொழுது விடியா நேரத்தில், இப்பெண்கள் குளத்தைக் காண்கின்றனர். அது சிவனாரும், உமையவளும் வீற்றிருக்கும் இடமாகத் தெரிகிறது இவர்களுக்கு! மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். இப்போது ஆட்டமும், ஆரவாரமும் சற்று அதிகமாகிறது!! இப்பெண்களின் கற்பனையும் விரிகிறது!!]

கருத்த குவளை மலர்க் கூட்டம் ஒரு பக்கம்
சிவந்த தாமரை மலர்க் கூட்டம் இன்னொரு பக்கம்


இவற்றினை நாடி வந்து தேன் அருந்த வரும்
சிறிய உடலை உடைய வண்டுகள் எழுப்பிடும் ஒலிகள் நிறைய,


தங்கள் குறைகளை, குற்றங்களை நீக்க வேண்டி
ஆலயம் சென்று தொழும் அடியாரும் ஒரு பக்கம்


இப்போது இவ்விடமே எம் தலைவியாம் உமையவளும்
எம்பிரானாம் சிவனாரும் வீற்றிருக்கும் ஆலயமோ இத்திருக்குளம்!

அத்தகைய நீர் நிறை மடுவில், உட்புகுந்து,
பின்னர் வெளிவந்து, பரவி, அளைந்து இதன் வேகத்தால்,


நாம் அணிந்திருக்கும் சங்குகளும் சலசலக்க,
அவற்றுடன் இணைந்து கால்களில் இருக்கும்


சிலம்புகளும் கலகலக்க, நீரின் ஓட்டத்தால்
நம் மார்பகங்கள் விம்மித் தணிய, அதனைத் தாளாது


இக்குளத்து நீரும் மேலும் விம்மி மேற்பொங்க,
இவ்வண்ணம் களிப்புடனே தாமரை மலர்கள்


நிறைந்திருக்கும் இத்திருக்குளத்தில்
விரைந்து, பாய்ந்து நீராடடி என் பெண்ணே!



அருஞ்சொற்பொருள்:

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதே பாடலுக்கு இன்னுமொரு அருமையான விளக்கம் படித்தேன். முடிந்தால் அதனை இன்றிரவு இடுகிறேன்!

Read more...

Tuesday, December 26, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 2. [12]

"ஆடேலோர் எம்பாவாய்" - 2. [12]

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்


கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

ஊழிக்காற்றினைப் போல நம்மை இப்படியும் அப்படியுமாய்
அலைக்கழிக்கும் இந்தப்பிறவித்துன்பம் கெட்டழிந்து போவதற்கு
நாம் விரும்பி வழிபடும் நீர்த்தன்மையன்!

இவ்வுலகினைக் காப்பதற்கென தில்லைச் சிற்றம்பலத்தில்
கையில் தீச்சட்டி ஏந்தி ஆட்டம் நிகழ்த்தும் ஆனந்தக்கூத்தன்!

மேலிருக்கும் வானுலகையும், நாம் வாழும் நிலமான இப்பூமியையும்
ஒரு விளையாட்டுப் போலவே காத்தும், படைத்தும், பின்னர்
கவர்ந்தும் இயக்கம் நிகழ்த்தி வருபவன்!

அவனது இத்தகைய புகழினை சொற்களால் பாடிப் போற்றியும்,
கைத்தாளம் போடுவதாலும், நீரில் துழாவுவதாலும்


கைவளைகள் ஒலிக்கவும், இடுப்பினில் கட்டிய மணிகளால் ஆன
மேகலைகள் கலகலவென ஒலிக்கவும், நீரின் மேல் தெரியும்


கூந்தலின் மேல் வண்டுகள் வந்து ரீங்காரமிடவும்,
மலர்களால் நிறைந்த இக்குளத்தில் கைகளாலும்,


கால்களாலும் குடைந்து, குடைந்து, நம் ஈசனின்
பொற்பாதங்களைப் பணிந்து, புகழ்ந்து, வியந்து,


வாழ்த்தியபடியே நீராடடி என் பெண்ணே!

[காற்று, நீர், நெருப்பு, வான், நிலம் என ஐம்பூதங்களும் இப்பாடலில் இடம் பெற்றிருப்பது இப்பாடலின் சிறப்பு!
மேலும், இப்பாடலின் மூலம், பலவித நிகழ்வுகளால் ஏற்படும் இனிய ஆரவாரத்தையும் உணர்ந்து அனுபவியுங்கள்! ]

அருஞ்சொற்பொருள்:

ஆர்த்தல் - ஆரவாரம் செய்தல்; குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; வார்கலைகள் - இடுப்பில் அணியும் மேகலைகள்; குழல் - கூந்தல்.

Read more...

Monday, December 25, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

திருப்பாவை 30 பாடல்கள்; ஒரு மாதம் சரியாக வரும். ஆனால், திருவெம்பாவை 20 தானே! எப்படி மார்கழி முழுதும் வரப்போகிறது எனக் கேட்டார்கள்.
தோழியரை எழுப்ப முதல் 15ம், பின்னர் அரங்கனையும், அவன் சுற்றத்தையும் எழுப்பியும், போற்றியும், அடுத்த 15ம் ஆண்டாள் பாடியருளியிருக்கிறார்.

மாணிக்க வாசகரோ, ஒரு படி மேலே போய்,
தோழியரை எழுப்ப முதல் 10, அவன் பெருமை பாடி குளத்தில் நீராடி அடுத்த 10,[இரண்டும் சேர்த்து திருவெம்பாவை] பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று, சிவனாரையே எழுப்பிப் போற்றும் அடுத்த 10 [திருப்பள்ளி எழுச்சி] என 30 பாடல்கள் பாடித் தந்திருக்கிறார்!!

அந்த வகையில், "பூம்புனல் பாய்ந்து ஆடும்" அடுத்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்!!

இவை "ஆடேலோர் எம்பாவாய்" எனும் தலைப்பில் வரும்!


"ஆடேலோர் எம்பாவாய்" [1]

11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி


ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

11.
மலர் நிறைந்ததால் வண்டுகள் மொய்க்கின்ற தடாகத்தில் இறங்கி
முகம் மேலே தெரியக் கைகளால் துழாவித் துழாவி நீராடுகையில்
உன் திருவடிதடங்களைத் தேடுவதாய் எண்ணி, அக்கழல்களின்
பெருமையினைப் பாடி வழிவழியாய் வணங்கிட்ட உன் அடியவராம்
நாங்கள், பெறற்கரிய வாழ்வினைப் பெற்றோம் என் ஐயனே!

சுடர்விட்டு எரிகின்ற செந்தழல் போல் சிவந்தநிறமுடையானே!
திருநுதலில் வெண்ணீறு பூசி நிற்கும் செல்வனே
சிற்றிடையும், மை பூசிய அகன்ற விழிகளையும் உடைய
உமையவளின் அழகிய மணவாளனே! எங்கள் ஐயனே!

எங்களையும் ஒரு பொருட்டாக எண்ணி திருவிளையாடல் புரிந்து
நீவிர் ஆட்கொண்ட திறத்தால், உமது அடியவர்கள்
அடைகின்ற சிவாநுபவத்தை யாமும் அடைந்து போனோம்!
இதன் விளைவால் நாங்கள் தளர்ச்சியுறா வண்ணம்
எங்களைக் காத்தருள்வாய்! எனப் பாடடி என் பெண்ணே!

[குளிக்கையில், கைகளை அசைத்து அசைத்து நீந்துகையில், அவன் கழல்களைத் தேடுவதாக உணர்கின்றனர் இவர்கள்! அதில் மெய்மறந்தோ, அல்லது, உலகியல் வழியாகவே, நீந்துவதால் ஏற்படும் களைப்பு தெரியாமல் இருக்கவும், அதற்கும் சிவனையே வணங்கும் இவர்கள் அநுபவம்தான் எத்தகையது!]

அருஞ்சொற்பொருள்:
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

Read more...

Sunday, December 24, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [10]

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10



10.
[மேலும் சிவனாரின் பெருமையை வியந்து, அனைவரும் பாடுவது, திருக்கோயில் பணி செய்யும் பெண்டிரிடம் வினாவுவது:]

பாதாளம் எனப்படும், பூமிக்குக் கீழிருக்கும் ஏழு உலகங்களையும் தாண்டி
சிவனாரின் திருப்பாத கமலங்கள், சொல்லுதற்கும் எட்டா தூரத்தில் உள்ளன;

கொன்றை மலர்களால் நிறைந்துள்ள கட்டிய சடைமுடியும் எல்லாப்
பொருள்களின் எல்லையையும் தாண்டி விரிந்து பரந்திருக்கின்றன;

மலைமகளாம் உமையினை தன் ஒருபாகம் வைத்தவன் அவன்;
அவனது திருவுருவங்களோ ஒன்றிரண்டு எனச் சொல்லவொண்ணாது;

நான்மறைகளும், விண்ணவரும், மண்ணிலுள்ளோரும் வணங்கித் துதித்தாலும்
இத்தன்மையானவன் எனச் சொல்ல முடியாத பேரருளாளன்;

என்றும் நம் துணைவன்; நண்பன்; அவன் இருக்கும் இடமோ அவனது
திருத்தொண்டர்களின் உள்ளமெனும் கோயிலிலே!

சொல்லொணா குணமுடைய சிவனது திருக்கோயிலில் அருட்தொண்டாற்றி வரும்
குற்றமொன்றும் இல்லாத குலப்பெண்களான பணிப்பெண்களே!

அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?
எவர் அவனது உறவினர்கள்? யாரெல்லாம் உறவினர் ஆகமாட்டார்?

அவனை முறைப்படி வாழ்த்தி வணங்கிப் பாடும்
வழிமுறைதான் என்னே? சொல்லுங்களேன் பெண்டிரே!

அருஞ்சொற்பொருள்:
சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.

Read more...

Saturday, December 23, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

[ஒருவழியாக, அனைவரையும் எழுப்பிச் சேர்த்த பின்னர், அவன் பெருமையைப் பாடியவண்ணம்.....] அனைவரும்:

பழமையென இவ்வுலகில் சொல்லும் அனைத்துப் பொருள்களுக்கும்
பழமையாக முந்தி நிற்கும் பெரும் பொருளாம் சிவபரனே

பின்னர், புதுமையென ஒவ்வொன்றாய்த் தோன்றி வருகின்ற
அனைத்திற்கும் இன்னும் புதுமையினை அளிப்பவனே!

உன்னை எங்கள் தலைவனாகப் பெறும் பேறு பெற்ற
உன்னடியவரான நாங்கள் என்றும் உன் அடியார்களை
வணங்கிடுவோம்! அவர்களை எம் உற்றவராகக் கொள்வோம்!
அத்தகைய அடியாரையே நாடி மணம் புரிவோம்!
அவர்கள் சொல் கெட்டு அவர்களுக்கு அடியவராகி
அவர் இடும் பணியினையும் செய்திடுவோம்!

இவ்வாறே எங்கட்கு எம்பிரானாகிய நீவிர் அருள் செய்தால்
ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை

Read more...

Thursday, December 21, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [8]

"பரிசேலோர் எம்பாவாய்" [8]


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்


கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ


வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ


ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

8.
தோழியர்: கோழிகள் கூவிட, பறவைகள் கீச்சிட எங்கும் ஒலிமயம் !
ஏழுசுரங்களாலான இசைக்கருவிகளும் ஒரே சுருதியிலான
வெண்சங்கும் சேர்ந்து ஒலித்திட, எங்கும் இசைமயம்!

தனக்குவமை இல்லாத அருட்பெரும் சோதிவடிவானவனையும்
அப்பெருமானின் தனிப்பெருங்கருணையினையும் , ஒப்பில்லாமணியின்
மேன்மைப் பொருட்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினோமே

அது உன் செவிகளுக்குக் கேட்கவில்லையா? அதென்ன உன் கூடவே வாழும்
உறக்கமோ, அதை உன் வாய் திறந்து சொல்வாயடி!
ஆழ்கடலில் அரவம் குடைபிடிக்க ஆழ்துயிலில் அயர்ந்தது போல்
நடிக்கும், ஆயினும் அனவரதமும் அரனைத் துதிக்கும்
சக்கரதாரியாம் அரங்கனது அன்பு போன்றதோ உன் பக்தியும்!

ஊழிக்காலங்கள் அனைத்திற்கும் முன் தோன்றி,
இன்னும் அழிவின்றி நிற்கின்ற,
சக்தியாம் மாதொரு பாகம் உடையானைப்
பாடடி என் பெண்ணே!!

அருஞ்சொற்பொருள்:

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

Read more...

Tuesday, December 19, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்


சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அடி பெண்ணே! அலுப்பாய் இருக்குதடி உன்னோடு! இதுவும் நீ கொண்ட
குணங்களில் ஒன்றோ? எத்தனையோ பல தேவர்களால் நினைப்பதற்கும் கூட
அரிதானவனாம், பண்பாளனாம் சிவபெருமானின் சங்கொலிகள் முதலான
சிவச் சின்னங்களைக் கேட்ட மாத்திரமே 'சிவ சிவ" எனச் சொல்லிடுவாய்!

"தென்னாடுடைய சிவனே" எனும் சொல் சொல்லி முடிக்கும் முன்னரே
தீயிலிட்ட மெழுகு போல உருகிடுவாய்!


எங்கள் பெருமானை, "என் அரசே! அமுதம் போலும் இனியவனே!"
என்றெல்லாம் ப்ல்வேறு விதமாய்ப் போற்றிச் சொல்லுகிறோம்!

இன்னமும் எழுந்திராமல் தூங்குகிறாயே! வீம்பாக கண்ணை மூடிக்கொண்டு
தூங்குவது போல் நடிக்கும் கடுநெஞ்சம் கொண்டவர் போன்று
ஓரசைவும் இன்றிக் கிடக்கின்றாயே! அப்படியாகிய உன் தூக்கத்தின்
தன்மைதான் என்னவோ? சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

Read more...

"பரிசேலோர் எம்பாவாய்" [6]

"பரிசேலோர் எம்பாவாய்" [6]


மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6


6.
தோழியர்: மான் போலும் அழகிய பெண்ணே! நேற்றையதினம் நீ, "நாளைக்கு
நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்" எனச் சொல்லிவிட்டு,
சிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்?
உனக்கு பொழுது இன்னமுமா விடியவில்லை?

வானகமும், மண்ணகமும், பிறவுலகும் அறியவும்
அரிதான நம் பெருமான் நமக்கென இரங்கி, தானே வந்திங்கு
கருணையுடன் நோக்குகிறான்! விண்ணுக்கும், மண்ணுக்குமாய் விரிந்து கிடக்கும்
அவனது சீர்ப்பாதங்களைப் பாடி வந்த எங்களுக்கு பதில் சொல்லவாவது
உன் பவளவாயைத் திறப்பாய்! உடலும் உருகாமல் நிற்கின்றாய்!
இந்நிலை உனக்குப் பொருத்தமே! எமக்கும், மற்ற அனைவர்க்கும் தலைவனாம்
பேரரசனாம் சிவனாரைப் பாடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

Read more...

Monday, December 18, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: திருமாலும், பிரமனும் காணாமல் தவித்த மாமலையினை
நாமெல்லாம் நன்கறிவோம் எனப் பொய்யாகப் பிதற்றும்,
பாலும், தேனும் குழைத்தது போலும் இனிய சொல் பேசிடும்
ஏமாற்றுக்காரியே! கதவைத் திறந்திடுவாய்!


இவ்வுலகும், விண்ணுலகும்,பிறவேறு உலகங்களும், அறிவதற்கும்
அரிதான சிவனாரின் திருக்கோலத்தையும், நம்மையெல்லாம்
ஆட்கொண்டு குற்றங்களை அழித்திடும் பெருமையினையும், பாடி
"சிவனே சிவனே" என்று இங்கு நாங்கள் ஓலமிட்டுக் கதறுவதைக்
கேட்ட போதிலும், உணர்வொன்றும் நெகிழாமல், உணர்ச்சியற்று
இருப்பது எப்படியோ? மணம் நிறை கூந்தலுடையாளே !
இதுவோ உன் தன்மை? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

Read more...

Sunday, December 17, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ


எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற ஒளிவீசும் புன்னகை உடைய பெண்ணே!
உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?

படுத்திருப்பவள்: கிள்ளை மொழி பேசும் நம் தோழியர் அனைவரும்
வந்து சேர்ந்தனரோ? கொஞ்சம் எண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்!

தோழியர்: உள்ளவரை உள்ளபடி எண்ணித்தான் சொல்கின்றோம்
ஏதேதோ கள்ளம் சொல்லி வீணாகக் காலத்தைப்
போக்காமல் எழுந்திடுவாய் அவ்வளவினிலே!
விண்ணவரும் தம் துயருக்கு மருந்தெனவே போற்றிடும்
அனைத்து வேதங்களுக்கும் மேன்மையாய் விளங்கிடும்
முழு முதற் பொருளாகி, காட்சிக்கு இனியவனாம் சிவனாரை
முறையாகப் பாடி, கண்ணீர் மல்கி, எங்கள் உள்ளம் உருகிடப்
பாட வந்திருக்கும் நாங்களோ இது போலும் கள்ளமெலாம் செய்வோம்!
எங்கள்மேல் நம்பிக்கை இல்லையெனில், எழுந்து வந்து நீயே
எண்ணிப் பார்த்துக் கொள்! அப்படி எண்ணிக்கை குறைந்திருப்பின்
மீண்டும் உன் மலர்ப்படுக்கை சென்று வேண்டுமானால்
திரும்பவும் தூங்கச் செல்லடி! என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்); அவமே - வீணாக

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP