Thursday, September 21, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [1]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.

இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!

[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]

அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்......................

[பின் - முன்!!]

"இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்அரசர் என்றும்
ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்
நெடுநீலன் எரியது என்றும் ருத்ரர் சிறந்தஅனுமன் என்றும்
ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தின் வந்து புனம் ஏவ"

இராவணாதி அசுரரின் கொடுமையால் வருந்தி
பிரமாதிதேவரும் அரவணைச் செல்வனாம்
அச்சுதன்பால் சென்று வணங்கிப் பணிந்து
ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!

இராவணாதி அசுரரின் துன்பமழித்து
எங்களைக் காத்தருள வேண்டுமென வேண்ட
அரங்கன்மாலும் அருள்கூர்ந்து அவர்பால் இரங்கி
நானுங்கள் துன்பம் தீர்ப்பேனென வரமளித்து

எவராலும் மரணம் நிகழலாகாதுவெனச் சொன்ன
இராவணன் அற்பமென நினைத்து மனிதரையும்
வானரத்தையும் கேட்க மறந்து போனான்
அதுவே நும்மைக் காக்கும் உபாயம் என்றறிவீர்!

நிருதரை நீறாக்குதற்கு சூரிய குலத்தில்
தயரதன் மகனாய் நாம் பிறப்போம்
எம் கையில் துலங்கிடும் சங்கும் திகிரியும்
யாம் படுத்துறங்கும் ஆதி சேஷனும்

எமக்கு இளையவராய்ப் பிறக்க அருள்கிறோம்
இவருடன் நால்வராய் யாம் பிறந்து
நும் துன்பம் நீக்கும் அருள் புரிந்தோம்
அஞ்சுதல் அகற்றி நும்பணி செய்திடுவீர்

எனவே மொழியவும், பிரமன் ஜாம்பவானையும்
இந்திரன் வாலியெனும் வலியதோர் வீரனையும்
பகலவன் அம்சமாய் சுக்ரீவனெனும் தம்பியையும்
அக்கினியும் தன் பங்கிற்கு அழகிய நீலனையும்

வாயுவும் சிவனைவேண்டி அவனது ஒரு துளியாம்
உருத்திரன் அம்சமும் கலந்து அனுமனையும்
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாயும்
தேவசிற்பி விசுவகர்மா நளனெனும் வானரமாயும்

இவர்களால் உந்தப்பட்டு தேவரும் கந்தருவரும்
மலைபோலும் உடலுடனும், அளவிடா ஆற்றலோடும்
ஆயிரமாயிரம் வானரராய்ப் பிறந்து
மலைசூழும் கிஷ்கிந்தாவினில் அவதரிக்கவும்,

"அரிய தன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே"

இவ்வண்ணம் அங்கிருந்த வானரக் கூட்டங்களை
தன்பணிக்கு உதவிடவே சேனையாக ஏற்று
இரவாணாதி அரக்கரை அழித்து வெற்றிகொண்ட
பாவம் நீக்கி, முக்தியைத் தந்தருளும்

இராமனாய் அவதரித்த இவ்வுலகைக் காப்போனும்
தான் அழித்த இராவணனுக்கு பத்துத் தலையே
ஆயின் என் மருகனோ, ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகனை அரைநொடியில் வேல்விடுத்து அழித்த தீரத்தினையும்

பாறைகளைப் புரட்டி, தான் கடலினை தாண்டிச் சென்றதுவும்
மருகனோ அக்கடலினையே வற்றச் செய்த மாண்பினையும்
தாம் அம்பெடுத்து அழித்த வீரர் கணக்கினையும்
தன் மருகன் வெறும் பார்வையிலும், சிரிப்பினாலும் மட்டுமே

எரித்தழித்த மேன்மையினை எண்ணி எண்ணி
என்றென்றும் அரிமுகுந்தன் அளப்பரிய
ஆனந்தம் அடைந்து தன் மருகனை
மெச்சுகின்ற பச்சைப் புயலின் மருகோனே!

[இன்னும் வரும்!]" [1]

Read more...

Sunday, September 17, 2006

"அலையும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]

"அலை"யும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]


கடலில் குளிக்க மறுத்து ஒருவன் கரையினில் கத்தி நின்றான்!
"அலையே! நீ நில்லு! உன் பேயலைகளின் சத்தம் என் காதைக் கிழிக்கிறது!


அவற்றின் சீற்றம் என்னைப் பயமுறுத்துகிறது!
நான் குளிக்கவேண்டும்!நீ நில்லாமல் நான் குளிக்க முடியாது!"


அலைகள் கேட்கவில்லை!
அவை பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருந்தன!

இவன் சத்தமும் நிற்கவில்லை!
கத்திக் கொண்டே இருந்தான்!

ஒரு சிற்றலை வந்து அவ்ன் காலைத் தொட்டது!
சிலீரென்று எழுந்து நின்றான்!

"இதோ பார்! அலைகளின் சீற்றம் இப்போதைக்கு அட்ங்காது!
அடங்கியதாகவும் வரலாறு இல்லை!"

"அப்போது ஏன் என்னிடம் வந்து அதைச் சொல்லுகிறாய்!
நான் தான் அவைகளின் சத்தம் நிற்காமல் குளிப்பதில்லை எனச் சபதம் செய்திருக்கிறேனே!"

"அவை நின்று, நீ குளிக்கவேண்டுமென ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?
நீ குளிக்க வேண்டுமா, இல்லையா, சொல்!"

"அதெப்படி? அவை நிற்க வேண்டும்!
இல்லாவிடில் நான் குளிக்க முடியாது!"

"ஏனப்படிச் சொல்லுகிறாய்?அவை நிற்பதற்கும்,
நீ குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"என் பாட்டன் அலை அடித்து மாண்டான்.
என் அப்பனைக் கடல் இழுத்துச் சென்றது!"

கலங்கி நின்றான் அந்த மானுடன்!
சிற்றலை அவனைப் பார்த்துக் கனிவுடன் சொன்னது

"கடலில் குளிக்க ஆசையிருந்தால் என்னிடம் வா!
மணல்களைக் குவித்து, மரபை உடைத்து, மேடு கட்டியிருக்கிறேன்.

அலைகளின் சீற்றம் அங்கே செல்லாது.
கவலையின்றிக் குளிக்கலாம் நீ!"

"ஏமாற்றுகிறாயே, நீயும் கடல்தானே!
உன்னை எப்படி நான் நம்புவது!?"

அவன் மீண்டும் கத்தினான்!
சிற்றலை பரிவுடன் அவனைப் பார்த்தது.

"என்னிடம் ஆழம் இல்லை, அலையும் மெல்லவே வீசும்.
உன்னை விழுங்க மாட்டேன்! உல்லாசமாய் என்னுடன் இருக்கலாம்!"

"அதெல்லாம் சரிதான்! ஆனால் நீ மாறி வருவாயா?
அலைகளைத் துறந்து என் போல ஆவாயா?"

அலை நான்; உன்னை அணைக்கத் தயக்கமில்லை!
என்னை ஏன் மறுத்து ஒதுங்குகிறாய்?"

மனிதன் திரும்பினான்; மணலை நோக்கினான்.
"மக்களே யாரும் கடலில் குளிக்கப் போக வேண்டாம்.

அலைகளின் சீற்றம் உங்களுக்குத் தெரியாது
சிற்றலை நாடகத்தை நம்பவேண்டாம்."

கடலலை எப்போதும்போல் ஆர்ப்பரித்து நின்றது
மகிழ்வுடன் சென்று மக்கள் குளித்தனர்

பேரலைபக்கம் பயமின்றி சிலர் சென்றனர்
சிற்றலை மேட்டில் குழந்தைகள் குதூகலித்தன!

சிற்றலை மீண்டும் அவனிடம் வந்தது
"நாடகம் எனச் சொல்லி எத்தனை நாள் மயங்குவாய்?

கடலில் குளிக்க ஆசையிருந்தும், வழியுமிருந்தும்,
மனது மயங்கி மகிழ்வை ஏன் துறக்கிறாய்?"

அவன் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான்
"மனிதர்களே அலை நில்லாமல் கடலில் குளிக்க வேண்டாம்"

மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
கடலில் குளிக்க மறுத்து அவன் மட்டும் கரையினில் கத்தி நின்றான்!

சிற்றலை அவனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

Read more...

Wednesday, September 13, 2006

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5


"இன்னா, டல்லா இருக்கே?" என்று வாஞ்சையுடன் தோளில் கை போட்டான் மன்னார்!

"ஒண்ணும் இல்லை; ஒரு காரியம் தொடங்கணும். அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று ஒரு சஞ்சலம். என்ன பண்றதுன்னு தெரியலை! ஒரே யோசனையா இருக்கு!கூடவே, எதிரிங்க தொந்தரவு வேற. சரி, உன்னைக் கேட்டா ஒரு தெளிவு வருமேன்னு இங்கே வந்தேன்" என்றேன்.

"இன்னா விசயம் ? நம்ம கையில சொல்லு! அல்லாத்தையும் முடிச்சுறலாம்! ஏன் கெடந்து பம்மற இதுக்கு? இன்னா, இன்னா?" எனக் கேட்டான் மயிலை மன்னார்.

"ஒரு புதுத் தொழில் தொடங்கலாம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன். திட்டமெல்லாம் தயாராக இருக்கிறது. நடுவில் சிலர் பிரச்சினை பண்ணுகிறார்கள். அதனால, செய்யலாமா விட்டுறலாமான்னு குழப்பமா இருக்கு. நீ என்ன சொல்றே?" என ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தேன்.

"இதுக்கா இம்மாந் தயக்கம். சரி, நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இது மாரி கொயம்பறது எனக்கு புடிக்காது. கொயம்பறவங்களையும் புடிக்காது. நீ ஒண்ணும் சொல்லத் தாவயில்ல. இதப்பத்தி ஐயன் இன்னா சொல்றார்னு சொல்றேன் கேட்டுக்கோ. பொறவால, ஒனக்கு இஸ்டமிருந்தா, " மன்னாரு, இது பலான பலான விசயம்னு சொல்லு. எதுனாச்சும் பண்ணுவம். சரியா" என்றான்.

68ல இன்னா சொல்றருன்னா, என நீட்டி முழக்கியவாறு அவன் ஆரம்பித்ததும், "அட, நாம கேக்காமலேயெ ஒரு பதிவுக்கு விஷயம் கிடைக்கிறதே" என்ற அற்ப சந்தோஷம் மனதைத் தழுவ, அவசர அவசரமாக பேப்பரையும், பேனாவையும் எடுத்தேன்!!

இனி வருவது, அவன் சொன்னதும், நான் எழுதியதும்!!

அதிகாரம் - 68 "வினை செயல்வகை"

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. [671]

ஒரு காரியம் பண்ணனும்னு நெனச்சு, அல்லா ப்ளானும் பண்ணி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னா, அதுக்கப்புறம் இப்ப பண்ணலாமா, அப்ப பண்ணலாமா, இவன் கை கொடுப்பானா, அவன் கால வாருவான, அந்த லைசென்ஸுக்கு எம்மாம் துட்டு செலவாகும், அப்டீன்னுல்லாம் யோசனை பண்ணிக்கிட்டு காலத்த கடத்தினேன்னு வயி, மவனே, அத்தப்போல மகா தப்பு ஒலகத்துலியே கெடையாது. இந்தா யோசனையெல்லாம் மொதல்லியே முடிச்சுறனும். முடிச்சுட்டா, பொறவு தயங்கக் கூடாது. ஆம்மாம்!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. [672]

நம்ம ஐயனுக்கு இது ஒரு வெள்ளாட்டு! ஒரு வார்த்த புடிச்சுப் போயிடுச்சுன்னா, சும்மா அத்தயே போட்டு பின்னி பின்னி எடுப்பாரு! இதுல கூட பாரு, இந்த 'தூங்கு' அப்ப்டீங்கற வார்த்தய இன்னா சொளட்டு சொளட்டறாரு! சரி, விசயத்துக்கு வருவோம்!

ஒரு திட்டம் போட்டுட்டே நீ. அது மெதுவா ஆற அமர பண்ன வேண்டிய காரியமா, அப்போ, மெதுவா பொறுமையா அல்லா ஆங்கிளையும் கவர் பண்ணிட்டு, அப்பறந்தான் அத்த செய்ய வரணும். அதுவே சட்டுன்னு ஒரு மூணு மாசம், ஆறு மாசம் ப்ராஜெடா,.... டப்பு டப்புன்னு முடிக்கணும். மெதுவா செய்யறத மெதுவா செய்யு. வெரசலா செய்யறத வெரசலா பண்ணி முடி! ஓகேவா!

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். [673]

ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கறே நீ. நீ இப்ப இன்னா பண்ண போறியோ எதுவோ, எனக்கு ஒண்ணும் தெரியாது. ஏதோ ஒரு காரியம் பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டு இங்க வந்துருக்க. அத ஆரம்பி தயங்காம.
நீ நெனச்ச மாரியே டக்கு டக்குன்னு ஒண்ணொண்ணும் நடக்குதா, போயிக்கினே இரு.
இல்ல ஒரு எடத்துல டொக்கு விளுதா.? தாண்டிப் போவாதே! நில்லு. ஷ்டாப்!நிதானி. இப்ப எதுக்காவ இங்க ஒரு தடங்கல் வந்துச்சுன்னு யோசி. அத்த ஸால்வ் பண்ணு. பொறவு அடுத்த படிக்கு போ! ஒன் காரியம் கெலிச்சுரும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். [674]

ஒரு காரியத்த ஆரம்பிச்ச பின்னால, பாதில வுட்டதும்,
ஒனக்கு இருக்கற ஒரு எதிராளிய அப்பறம் பாத்துக்கலாம்னு வுட்டுடறதும், ரெண்டும் சரி,
நீ ஒரு நெருப்ப கொளுத்திட்டு கவனிக்காம போயிட்டேன்னா, எப்படி அது தானே வளந்து பெருசாயி ஊரையே அளிச்சிடுமோ, அப்படி ஒன்னைக் கெடுத்துரும்!
ரெண்டையும் ஒண்ணு, வெட்டிறணும்; இல்ல முடிச்சிறணும்.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். [675]

ஒரு காரியம் செய்யறதுக்கு இன்னா வேணும்? ஒரு அஞ்சு விசயத்த மனசுல வெச்சுக்கணும்.

1.இத்த செய்யறதுக்கு ஒன்னிட்ட தேவையான பணம் இருக்கா,
2.இதுக்குத் தேவையான மெஷின்லாம் கெடைக்குமா,
3.இப்ப அதுக்கு சரியான நேரமா, போட்டா போணியாவுமா,
4.செய்யறதுக்கு ப்ளானு, ஆளுல்லாம் ரெடியா,
5.அதுக்கு எடம் தோதா இருக்கா

இதெல்லாத்தயும் கவனமா, சந்தேகமில்லாம முடிவு பண்ணிறனும். அப்பாலதான் அத்த செய்யறதுக்கே போவணும்.


முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். [676]

இந்த காரியத்த பண்றதுக்கு ஒனக்கு இன்னா செய்யணும், அதுக்கு எங்கேர்ந்தெல்லாம் போட்டி, ப்ளாக்கெல்லாம்[Block] வரும்,
சரி, இத்தனையும் தாண்டி முடிச்சா அதுல இம்மாம் லாபம் வரும்? அத்தினையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்தான் அதுல எறங்கப் போவணும்.

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். [677]

ஒண்ணு பண்ண ஆரம்பிச்சேன்னா,
இதுமாரி செஞ்சவனோட, செய்யறவனோட,.... இது மாரி ஒரு நூறு பேரு கெடைப்பான் ஒனக்கு,.....
அவனுங்களை கலந்துகிட்டு அப்பாலதான் செய்யவே ஆரம்பிக்கணும்.

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. [678]

இப்ப ஒரு காரியம் பண்ணும் போதே, அத வெச்சி, அதேமாரி அடுத்த ஒரு காரியத்த ரெடி பண்ணி வெச்சுக்கணும்.
இப்ப, ஒரு யானைய வெச்சுத்தானே இன்னோரு யானையக் கட்றாங்க, பளக்கறாங்க; அதுமாரின்னு வெச்சுக்கோயேன்!அப்பத்தன் ஒனக்குஒரு கன்டினிடி[Continuity] இருக்கும்!

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். [679]

இப்ப சொல்றதத்தான் நீ ரொம்ப கவனமா கேக்கணும்.
ஒனக்கு வேண்டியவங்களுக்கு நீ இன்னா செஞ்சாலும் சரி, செய்யாட்டாலும் சரி, ஒனக்கு இந்தத் தொளில்ல போட்டியா இருக்கறவனோட சேராம இருக்கான் பாரு, அவுனுகளையெல்லாம், டக்கு டக்குன்னு போயி ஃப்ரெண்ட்சிப் பண்ணிக்கணும். அப்பத்தான் அவன் ஒனக்கு துரோகம் பண்ண மாட்டான். அவனோட போய் சேர மாட்டான்!

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. [680]

இப்ப நீ ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கற.
ஒன்ன விட ஒர்த்தன்,.... பிஸ்தா,... வர்றான்,
இந்த தியேட்டரை 35 எம்மெம் எதுக்கு, நான் 70 எம்மெம்ல கட்டித்தர்றேன்னு. இப்ப நீ இன்னா பண்ணனும். ஒன்கிட்ட ஒரு 30 - 40 பேரு தொளில் தெரிஞ்சவன் இருக்கான்.
நீ. "அடடா, இன்னாது இப்படி இவன் வந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு" ஒக்காந்தேன்னு வையி, மவனே அவ்ளோதான்! நீ திரும்பிப் பாக்கரச்செ ஒரு பய ஒன்னோட இருக்க மாட்டான்.
இப்ப நீ இன்னா பண்ணனும்? கலங்கக்கூடாது. ஒன் பயலுவ எவனும் சுதாரிச்சுக்கரதுக்குள்ள நீ போயி அந்த பிஸ்தாவ பாத்து,
"ராசா! நீயே பண்ணு! ஆனக்க பாதி வேலைய எனக்குக் கொடுத்துரு. 70எம்மெம்மை நீயே போட்டுக்க! எனக்குகீளே இத்தினி ஆளுங்க இருக்காங்க. என்னால இதுல பேர்பாதி பண்ணிக் கொடுக்க முடியும்"னு ஒரு டீல் போட்டுக்க.
அவனுக்கும் லாபம்; ஒனக்கும் லாபம்; ஒன் ஆளுன்ஙளும் ஒன்னிய வுட்டுப் போவ மாட்டங்க!
புரியுதா? நா சொல்றது?
இது எப்படீ இருக்குன்னா, ஒரு பெரிய ராசா ஒன் நாட்டு மேல படை எடுத்து வர்றான்னா, அவனோட சண்டை போட்டு நீ சாவறது முக்கியமா, இல்ல சமாதானமாப் போயி நீயும் லாபம் சம்பாதிக்கறது முக்கியமா; அது போலத்தான் இதுவும்.

என்று சொல்லிய பின், "இப்போ ஒன்னோட ப்ராஜெக்ட் இன்னா, இன்னா கேக்கணும்னு நெனச்சே? எனக் கேட்டான் மன்னார்.

கலக்கம் நீங்கியவனாக, "நீ ஒண்ணும் சொல்ல வேணாம், எல்லாம் ஐயன் சொல்லி விட்டார்" எனச் சொல்லி நடையைக் கட்டினேன் நான்.

கடகடவெனச் சிரித்த மன்னாரின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

"நீ புத்திசாலிப் புள்ள. சொன்ன பக்குன்னு புடிச்சுப்பேன்னு தெரியும்!
அதான் 68 -ஐ சொன்னேன் " எனச் சொல்லிக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.
"நாயர்! ரெண்டு டீ என் கணக்குல!" என்று திமிராகச் சொல்லியபடியே மன்னாரின் தோளில் கை போட்டேன் நான்!!

Read more...

Monday, September 11, 2006

அ.அ. திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய'

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்

------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


**************************************************************************

Read more...

Friday, September 08, 2006

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”

“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”


பயந்த மாதிரியே நடந்தது!

கொஞ்சம் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு, ‘நாயர், நம்ம ஐயருக்கு ஒரு ஷ்ட்ராங் டீ யும் , ரெண்டு மசால் வடையும் ரெடி பண்ணு’ என்று அதோடு தனது வழக்கமான அன்பையும் விடாமல் சொல்லித் திரும்பினான் மயிலை மன்னார்!

‘என்ன இது? புதுசா ஐயர் என்றெல்லாம் சொல்கிறாயே?’ என்று கேட்டேன்!

‘உன்னை எல்லாம் இப்ப அப்படித்தானே கூப்புடறாங்களாம் நீ எளுதற வலையில! அத்தான் நானும் சொல்லிப் பாக்கலாமேன்னு ….’ என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான் மன்னார்.

ஏதோ கந்தசாமி புகளை எளுதினே, சரி,; ஐயன் குறளுக்கு விளக்கம் என்னைக் கேட்டு சொன்னே அதுவும் சரி; அப்பொறம் புச்சா ஏதோ கொளந்தங்களுக்கு பெத்தவங்க எத்தையெல்லாம் சொல்லணும்னு வேற ஆரம்பிச்சேன்னு கேள்விப்பட்டேன்!
ஸரி; நம்ம புள்ளையாண்டான் ஏதோ உருப்படியா செய்றானேன்னு இருக்கக்கொள்ளே, இப்போ புச்சா இன்னாமோ ஒர்த்தருக்கு பதில் கவுத எளுதி செமத்தியா வாங்கிக் கட்டிக்கினியாமே! அது இன்னாத்துக்கு ஒனக்குன்னு நெனச்சேன். இப்படி எதனாச்சும் வெவகாரத்துல மாட்டிக்கினு எங்கையில தான் வந்து நிப்பேன்னு நெனச்சேன்.
பொறவால, அத்தைப் படிச்சேன். நல்ல விசயத்த தான் சொல்லியிருக்கே நீ. ஆனா, அது எம்மாம்பேருக்கு புரியுண்ற நீ? ஆனாக்காண்டியும், சொல்லணும்னு நெனச்சத தெகிரியமா சொன்னே பாரு, அத்தான் நமக்கு ரொம்ப புடிச்சுது நண்பா!” என ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றி விட்டு,

“சரி, சரி! டீ ஆறிப்போவுது! சீக்கிரமாக் குடி! அப்பால ஒனக்கு இத்த பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதச் சொல்றேன்” எனச் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டினான் மன்னார்.

அவசர அவசரமாக டீயையும் மசால் வடையையும் முடித்துவிட்டு, ஆவலுடன் அவனைப் பார்த்தேன்.

சிரித்தவாறே, “இப்ப ஸொல்லணும்னு நெனச்சத தயங்காம சொன்னேல்ல! அதப்பத்தி நம்ம ஐயன் நிறைய இடத்துல ஸொல்லியிருக்காரு. அல்லாத்தையும் இப்ப ஸொல்ல முடியாது! அந்த 73 – வது அதிகாரத்தப் பொறட்டு! நா ஸொல்றத எளுதிக்கோ!” என்றான் கம்பீரமாக!

இனி வருவது, குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் எண் 73 “அவை அஞ்சாமை”

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். [721]

கரீட்டா வந்திருக்கும்மா மொதக் குறளே! இப்ப நீ பலான பலான விசயம்லாம் நடந்திச்சின்னு ஒன் பதிவுல சொல்றேன்னு வையி! அதத் தப்பில்லாம சொல்லணும் ஒரு சபையில போயி ஸொல்றப்ப!
எப்படி ஸொல்லணும்னு தெரிஞவன், எந்த ஆளுங்க நடுவுல பேசணும்னு தெரிஞ்சிகிட்டு, தப்பா ஸொல்ல மாட்டான்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். [722]

படிச்சவங்கள்லாம் இருக்கற ஒரு எடத்துல போயி, உனக்குத் தெரிஞ்சதை அவங்க ஏத்துக்கற மாதிரி சொல்லணும். அப்போதான் ஒன்னிய படிச்சவன்னு சொல்லுவாங்க.
அல்லாரும் ஏத்துப்பாங்கன்னு நம்பிறாத அதுக்காவ. ! அங்கியும் சிலபேரு வருவாங்க, இது தப்பு, அது நொள்ளையின்னு சொல்லிகிட்டு, மெஜாரிட்டியா ஏத்துக்கறாங்களா, அதப்பாரு!

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். [723]

சண்டை போட்டு சாவறதுக்கு ஆயிரம் பேர் வருவான். ஆனாக்க, ஒரு சபையில நின்னு தெம்பா பயமில்லாம ஸொல்றதுக்கு வர்றவன் கொஞ்சப் பேருதான் கிடைப்பான்.
பின்னாடி நின்னுகிட்டு வீரமா சவடால், பீலாவெல்லாம் வுடுவான். ஒரு மேடைல ஏத்து! ஸும்மா, கிடுகிடுன்னு தொடையெல்லாம் ஆடும்!

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்
கற்றமிக்காருள் மிக்க கொளல். [724]

அப்படி ஒருக்கா, ஒரு சபையில போயி ஒனக்குத் தெரிஞ்சத சொல்லிட்டு அப்டியே அம்பேல் ஆயிடக்கூடாது.
அங்கே இன்னும் ஒன்ன விட ஜாஸ்தியா படிச்சவங்ககிட்டேர்ந்து அல்லா விசயத்தையும் கறந்துக்கணும்!

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. [725]

ஒன் எடத்துல நீ சொல்றது சரி. ஒனக்கு எதுர் கருத்து இருக்கற எடத்துல போயி அங்க, நீ சொல்றத எதுத்து கேள்வி கேட்டாக்கூட, அதுக்கும் பதில் சொல்ற அளவுக்கு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு போவணும்.
இல்லேன்னா போயி வாயக் குடுக்காதே!

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. [726]

இப்ப, சண்டை போடப்போறேன்னா நீ கத்தியைப் பாத்து பயப்படக்கூடாது! பயந்தீன்னா வேல ஆவுமா? ஆவாது. இல்லியா?
அதேபோல, ஒரு சபைல ஏறி பேசறதுக்கு பயப்படறவனுக்கும், அவன் படிச்ச பொஸ்தவத்துக்கும் என்னா சம்பந்தம் இருக்குன்ற?
ஒண்ணும் இல்லை. பட்சதெல்லாம் வேஸ்டு!

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். [727]

இங்கியும் கிட்டத்தட்ட அத்தையேதான் சொல்றாரு.
சண்டைக்கி நிக்கறப்போ, ஒன் கைல இருக்கற கத்தி வெடவெடன்னு ஆடுச்சின்னா இன்னா பிரயோசனமோ, அத்தேதான், சபைல ஏறிப் பேச தொடை நடுங்கறவனுக்கும் அவன் படிச்ச பொஸ்தகத்துக்கும் இருக்குதாம்!

பல்லவை கற்றும் பயனிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தவர். [728]

நல்ல மனுஷங்கள்லாம்,…. கெவனி …. மனுஷாள்னு சொல்லலை, நல்ல மனுசங்கன்னு சொல்லிருக்காரு!…., இருக்கற மண்டபத்துல அவங்க அதை ஒத்துக்கற மாதிரி சொல்லத் தெர்லைன்னா, அவன் எத்தினி படிச்சும் பிரயோசனமே இல்லை.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார். [729]

"அதோ போறாரே! அவரு இம்மாம் படிப்பு, எத்தினி பொஸ்தகம்லாம் படிச்சிருக்காரு தெரியுமா? ஆன, கூப்ட்டு கேட்டுப்பாரு! ஒரு தபா நம்ம சங்கத்துல வந்து பேசு ஸார்'னு சொல்லிப்பாரு. அப்படியே ஜகா வாங்கிடுவார்"னு ஒருத்தனைப் பத்தி சொல்லும்படியா ஆச்சுன்னா,
அவனை வுட கேடு கெட்டவன் வேற எவனும் இல்லியாம்.
இவனுக்கு படிக்காதவனே மேலுன்றாரு நம்ம ஐயன்!

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்செல்லா தார். [730]

இங்கியும் அதேதான்! இதுமாதிரி, பொது எடத்துக்கு வந்து சொல்றதுக்கு பயப்படறவன் உசிரோட இருந்தாக் கூட சரி;
செத்தவனுக்கு சமானம்தான்!
*****************************************************

இப்ப ஒன்னக்கூட எனக்கு ஏன் புட்சிருக்கு தெரியுமா?
நீ சும்மா இப்படி அப்படின்னு பம்முறவன் இல்லை.
ஒன் பதிவுல தலப்புல ஏதோ போட்டுருக்கியே; ஆங்… இன்னா அது? …அதான் நல்லது ஸொல்றதுக்கு நடுங்க மாட்டேன், பொல்லாத்த எடுக்கறதுக்கு தயங்க மாட்டேன் அப்படீன்னு ஏதோ ஒண்ணு!
அத மாரிப் போட்டுட்டு சும்மா இருக்காம உனக்கு சரின்னு பட்டத நறுக்குன்னு சொன்னே பாரு!
அதான் எனக்கு பிடிச்சுது!
இன்னோரு டீ போட ஸொல்ட்டுமா”
என வாஞ்சையுடன் கேட்ட மன்னாரை மறுக்க மனமின்றி,
நாயர் டீயும் நல்லாஇருக்கும் என்ற ஆசையும் சேர “சரி” என்றேன்!

Read more...

Thursday, September 07, 2006

என்னுயிர்க் கண்ணம்மா!

""என்னுயிர்க் கண்ணம்மா!""


சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!

மாலை திரும்பி வருகையில்

வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியல்

என்னைப் பார்த்துச் சிரித்தது!

அலுத்துக் கொண்டே எழுந்து

அவசர அவசரமாய்க்

காப்பி போட்டுக் குடித்து

கிடைத்ததை எடுத்து

ஒரு பாக்ஸில் அடைத்து

அலுவலகம் போனதும்

மறக்காமல் தொலை பேசியது!

அழைத்தது என் மனையாள்!

வரும்போது அப்படியே

பொண்ணையும் கூட்டிகிட்டு வ்ந்துருங்க!

அன்பான அதிகாரக் குரலில்

ஆணையிட்டு மறைந்தாள்!

மாலையில் வந்து,

மகளைக் கூட்டி வந்து,

மறந்துபோன சாமான்களை

மறுபடி வாங்கி வந்து

மூச்சிறைக்க வந்தவனை,

மலர்ச்சியுடன் வரவேற்று,

இப்படி எல்லாம் நீங்க

செய்வதுதான் எனக்கு

உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என

ஆசையுடன் யாரும் பாராத வேளையில்

இச்சென்று முத்தமிட்டாள்

என்னுயிர்க் கண்ணம்மா!

இதோ நான் அடுத்த நாள்

வேதாளமாக ரெடி!

Read more...

Tuesday, September 05, 2006

"நாம் அனைவரும் இந்துவே!"

"நாம் அனைவரும் இந்துவே!"


நண்பர் திருவின் பதிவைப் படித்ததும் எனக்குள் தோன்றிய உணர்வுகளை,
"பாதிக்கப்பட்ட இருவருமே" பேசிக்கொள்வது போல ஒரு மாற்றுக் கவிதை வடித்திருக்கிறேன்!

வீண் கதை பேசி, விரோதத்தை வளர்ப்பதை விட, உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!

யாரும் தவறாகக் கொள்ள வேண்டாம்!


வேதம் மொழிந்தவன்
பார்ப்பனன் அல்லன்!
வேதம் கொடுத்தவனும்
பார்ப்பனன் அல்லன்!

வாழ்வுதான் வேதம் என்று
வேதம்தான் வாழ்வு என்று
நால்வகைத் தொழிலை
நயமுடன் செய்து
நலமுடன் வாழவே விதித்தது வேதம்!

எங்கள் நலனைக் காக்க வேண்டி
யாகம் செய்யும் தொழிலது கொடுத்தோம்!
யாகத்தின் முடிவில் நீங்கள் கொள்ள
வெகுமதியும் கொடுத்தோம்.
செய்த தொழிலுக்குக்
கூலி கொடுத்தல்
எங்கள் மரபன்றோ!

உங்களில் பிறந்து
உங்களோடு வளர்ந்து
உங்களால் கடவுளாக்கப் பட்டவனுக்கு
நீங்களே கோபுரம் எழுப்பி
எம்மையும் பணித்தீர்
பணி செய்யவென
அதற்குக் கூலியும் கொடுத்தீர்
வெளியில் நின்றே விமலனை வழிபட்டீர்!

அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!

கருமம் முடித்ததும்
கால்சட்டை களைந்து
அனைவரும் ஒன்றாக
வாழுவோமென்று
அன்றவன் விதித்ததை
நாமங்கு மறந்து
நம் தொழில் செய்வதில்
காலத்தைப் போக்கி
நம்மில் பிரிவுற்று
நாமே வாழ்ந்து
இன்றவனைப் பழித்து
குளிர் காய்கின்றோம்!

உன் வேலையை நீ செய்ய
உனக்கு நான் கொடுப்பேன் கூலி
அதில் நீ பிழைத்து
உலக நலன் வேண்டும்
கருமம் செய்வாய் எனச் சொல்லி
இன்றவன் என்னை மிதிக்கிறானே
எனஇரக்கப் புலம்பல்
எங்ஙனம் நியாயம்?

உண்டு கொழித்த காலம்
என்றோ போயிற்று!
இன்று நீயும் நானும்
உழைத்து வாழ்ந்தால்தான்
உய்வதற்கு வழியென
விதி இங்கே ஆன பின்னே
என்னை வாவென
நீயழைக்க வேண்டாம்!
நானே அங்குதான் இருக்கிறேன்
உன்னோடு சேர்ந்தின்று!

உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!

வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!

Read more...

Monday, September 04, 2006

உன்னால் முடியுமா?

"உன்னால் முடியுமா?"


திரு. ஸ்ரீதரன் அவர்கள் ஒரு விளையாட்டை, விளையாட்டாய் ஆரம்பிக்க, நானும் அதில் உள்ளே புகுந்து மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள் என எண்ணித் தொடர, யாரும் வராததால், வேறு வழியின்றி, முழு ஆட்டத்தையும் நான் ஒருவனே ஆடி முடிக்கும் பேறு பெற்றேன்!

அதற்காக ஸ்ரீதரனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்!

இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!

இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!

நினைவாற்றல் அதிகம் உள்ள அவர்கள் இதனைச் சீக்கிரமே மனனம் செய்து விடுவார்கள்!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும், உங்கள் குடும்பத்தில் தமிழ் வளர்ப்பதற்கும் நீங்கள் ஆற்றிய தொண்டாக இது இருக்கும்.

இதனைக் காணும், மனம் படைத்த சக வலைப் பதிவாளர்கள், சிரமம் கருதாது, தங்கள் வலைப் பூவில் இதையும் ஒரு பதிவாக ஏற்றி, அவர்களுக்கு வரும் நண்பர்கள் நடுவில் இதைப் பரப்ப உதவினால், மிகவும் மனமகிழ்வேன்!

கட்டாயமில்லை.

நன்றி!
***********************************************************

ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

இதோ முதல் பந்து!

சற்று அளவு குறைந்த பந்து!131. புலவி

இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!132. புலவி நுணுக்கம்.

ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!133. ஊடலுவகை.

சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!
மகிழ்ச்சியால் 'ஹௌஈஸ்ஸட்' எனக் கூவுகிறார் பந்து வீச்சாளர்!
ஆனால், .... அம்பையர் இருந்தால் தானே அவுட் கொடுப்பதற்கு!

மறுபடியும் பந்து வீசத் தயாராகும்போது....

ஆ! இதென்ன! ஆட்டம் முடிந்து விட்டதாக ஒரு அறிவிப்பு!

பந்தையும், வீழ்த்திய விக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு, தனி ஆளாக வீரநடை போட்டு பெவிலியன் நோக்கித் திரும்பி நடக்கிறார் பந்து வீச்சாளர்!

இவ்வாட்டத்தை இதுவரை திறம்பட நடத்திய ஸ்ரீதரனுக்கும், கடைசி பார்வையாளராக வந்த கொத்தனாருக்கும் நன்றி!

இந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஆட்டத்தை இதுவரை காணாத அனைவருக்கும் இதோ ஆட்டத்தின் ஒரு குறுகிய 'ரீ-ப்ளே!

'1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடலுவகை.

****இந்த ஆட்டத்தால் என்ன பயன் எனக் கேட்பவருக்கு ஒரு வார்த்தை!

உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!

உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!

இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!

நன்றி!****

Read more...

Sunday, September 03, 2006

"[புது] வேதம் படிப்போம்!"

"புது வேதம் படிப்போம்!"


ஜெயஸ்ரீஅவர்களுக்கு நன்றி!

வெற்றி அவர்களுக்கு நன்றி!

வெற்றி ஒரு பதிவு போட்டு, யார் எழுதியது இந்தக் கவிதை எனஒரு கவிதையைக் கேட்காவிட்டால்,

ஜெயஸ்ரீஅவர்கள் வந்து, 'பாரதியா' எனச் சொல்லா விட்டால்,

நான் பாரதியை இன்று முழுதும் புரட்டியிருக்க மாட்டேன்!

அப்படிப் புரட்டிய போது கண்ணில் பட்டது இந்தக் கவிதை!

இன்று "விடாது கருப்பு" முதல், "வஜ்ரா சங்கர்" வரை அலசப்படுகின்ற ஒரு தலைப்பின் கருத்தை அன்றே பாரதி எவ்வளவு தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கிறான் என்பதைப் படிக்கையில்,

நெஞ்சம் இறுமாப்புறுகிறது!
உவகையுறுகிறது!
வருந்துகிறது...
....இது இன்றுவரை அதிகம் கவனிக்கப்படாமல் போனதை நினைத்து!

இதைப் படித்த பின்னராவது, தமிழ்மணத்தில் ஒரு ஒருமித்த கருத்து வரவில்லையெனில், நான் பெரிதும் வருந்துவேன்!

குறைந்த பட்சம், பாரதியைப் பழிக்காதீர், இனிமேலும்!!

இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" சொல்ல முடியாது என்பதால், மேலும் முன்னுரையைத் தவிர்த்து, உங்களின் பார்வைக்கும், படிப்பிற்கும், எண்ணத்திற்கும் இதனைப் படைப்பதில் பேருவகை அடைகிறேன்!
.
இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!


வாழ்க நீ எம்மான்! வாழ்க நீ பாரதி!

*************************************************************

"உயிர் பெற்ற தமிழர் பாட்டு!"

"பல்லவி"

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.

"ஜாதி"

மனிதரில் ஆயிரம் ஜாதி -- என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று -- அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.
பூவில் உதிர்வதும் உண்டு -- பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு;
நாவிற்கினியதைத் தின்பார் -- அதில்
நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்.
ஒன்றுண்டு மானிட சாதி -- பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது -- உயிர்த்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்,
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் -- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

"இன்பத்திற்கு வழி"

ஐந்து புலனை அடக்கி -- அரசு
ஆண்டு மதியைப் பழக்கித் தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை -- மதி
நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.

"புராணங்கள்"

உண்மையின் பேர் தெய்வம் என்போம் --அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதம் என்போம் -- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும் -- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததத னாலே -- தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியி னுள்ளே முழு கிப்போய் -- அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த -- திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் -- ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் -- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

"ஸ்மிருதிகள்"

பின்னும் [ஸ்]மிருதிகள் செய்தார் -- அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின் வல்ல -- இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்
காலத்திற் கேற்ற வகைகள் -- அவ்வக
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் -- எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை,
சூத்திர னுக்கொரு நீதி -- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் -- அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

"மேல்குலத்தார் எவர்?"

வையகம் காப்பவ ரேனும் -- சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே -- பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

"தவமும் யோகமும்"

உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் -- நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,

"யோகம், யாகம், ஞானம்"

ஊருக் குழைத்திடல்யோகம்: -- நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் -- உளம்
பொங்கல் இலாத அமைதிமெய்ஞ் ஞானம்.

"பரம் பொருள்"

எல்லையில் லாத உலகில் -- இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும் -- இவை
யாவையு மாயிவற் றுள்ளுயிராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று -- தான்
இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் -- இதைத்
தூவெளியென்று தொழுபவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம் -- இந்த
நீல நிறங் கொண்ட வானமும் ஆங்கே.
ஓயுதல் இன்றிச் சுழலும் -- ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.

சக்திகள் யாவும் அதுவே -- பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே.
நித்திய மாவிவ் வுலகில் -- கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி.

இன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்,
துன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

"முக்தி"

தோன்றி அழிவது வாழ்க்கை -- இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும் -- களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.

இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.

********************************************************************

இதையே இனித் தமிழ் வேதம் எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்!

வாழ்க பாரதி!

Read more...

Friday, September 01, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"

உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!

இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

ஒன்று இப்படி..!

குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"

இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?

இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.

இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!

மாறாக இப்படி....!

"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!

இதன் மூலம், ..

'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,

நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்!

வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.

இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!

மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!

மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!

மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!

நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !

இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?

"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!"

"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"

"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"

"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"

"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"

"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"

"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"

போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!

"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!

குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!

"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!

இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!

"தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!
'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!

இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!
"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!

அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!

"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்","வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!

எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!

"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு?
இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!"
எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!

பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!

எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!

மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!

இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!

எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!

அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!

Read more...

Wednesday, August 30, 2006

அ.அ. திருப்புகழ் -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"
----------------------------------------------------------------

சென்ற பாடல் பார்த்து குமரன் கேட்டிருந்தார், 'நாயகன் - நாயகி பாவத்தை அருணையார் பாடிக் கேட்டதில்லை இதுவரையில்' என!

இதோ அதே கருத்தில் இன்னுமொரு எளிய பாடல்!

இதன் உள்ளின்று கவனித்தால், அருணையார் மற்றவர்களைப் போல, தன்னை நாயகி பாவத்தில் வைத்துப் பாடவில்லை என்பது புலனாகும்!

அவர்தான் அனுபூதி பெற்றவராயிற்றே!

அவர் நமக்காக, நம் மீது கருணை கொன்டு, நம் நலம் நாடி வேண்டுகிறார்!
என்னே அவர் கருணைத் திறம்!

நாடு பார்த்ததுண்டா?
இது போன்ற நல்லவரை!
------------------------------------------------------------

...........பாடல்............

[தந்தந் தன தந்தந் தனதன

தந்தந் தன தனதான]


வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை

வந்துந் தியதிரு மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
______________________________________________________________

.......பொருள் விளக்கம்.........

"தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்

சென்று ஒன்றிய பொழில் அதனூடே

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி

நின்றும் திகழ்வொடு மயில் ஆட

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்

என்றும் புகழ்பெற மலர் ஈனும்

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழுபுவி

என்றும் செயவல பெருமாளே."

நீண்டு வளர்ந்ததோர் சோலை !
அதன் நீடெங்கும் நிறைந்து நிற்கும்
தென்னை மரங்களும் வாழை மரங்களும்!
இருக்க இடமின்றி அடர்ந்திருக்கும் அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்,

அவ்விசை கேட்டு அதற்கேற்ப மயிலினங்கள்
தம்தோகை விரித்தங்கு அழகு நடம் ஆடிடவும்,

சோலை செழித்திடக் காரணமாய் பொங்கி நிறைந்து
வழிந்தோடுகின்ற நீர்ச்சுனைகள் முழுதினிலும்
குவளைமலர்க் கூட்டம் இவைகண்டு கண் மலரவும்,

இதுபோன்ற அழகுக் காட்சிகள் அத்தனையும்
நிறைந்திருக்கும் பெருமை பெற்ற தலமதுவாம்
திருத்தணிகை மலையதனின் மீதமர்ந்து
தன் செயல்கள் யாவையும் முடித்து விட்டு இனி
ஏழுலகும் படைத்தழித்துக் காக்கவென
வீற்றிருக்கும் பெருமை கொண்ட முருகோனே!

"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே"

ஒரு சேர அலை அடித்தால் ஒலியங்கு இனித்திருக்கும் !
பல வேறு கப்பல்கள் தொடர்ந்தங்கு செல்வதனால்
அலைகளின் ஓட்டமங்கு மாறி மாறி வேறுபட்டு
கரையதினில் சேர்கையிலே தடதடவெனவே
அதிர்ந்தங்கு ஒலிப்பதனால் உளத்தினிலே எழுகின்ற
வேட்கையதின் தாக்கம் இவளை வருத்துவதாலும்,

"வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற
அஞ்சு அம்பு அதும் விடும் அதனாலே பங்கம் படும்"

தான் நினைக்கும் நேரம் பார்த்து
ஆசையென்னும் தீ மூட்டி,
அவர் மீது மலர்க்கணை தொடுத்து,
அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம்
தளரச் செய்யும் மன்மதனால்
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற,

"எனது அங்கம் தனில் உதி
பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல்
பொன்றும் தனிமையை நினையாயோ"

என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!

பெண்ணென்றால் பேயும் இரங்கிடுமே!
முருகா! இவள் துயர் பார்த்து
நீவிர் திருவுளம் இரங்கிடக் கூடாதோ!
இவளது தனிமை கருதி இப்போதே
இனிமை செய்திடல் வேண்டும், பெருமானே!
_____________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

திரை
= அலை
அழல்= நெருப்பு
பங்கம்= அவமானம்
நெஞ்சொன்றிய அழல்= காமத்தீ
தெங்கம்= தென்னை
கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று
அளி= வண்டு
திகழ்வொடு= விளக்கமாக
-----------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

___________________________________________________________________

Read more...

Tuesday, August 29, 2006

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" [3]

"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]


கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக கல்வி புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!
என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!

'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!
"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா? மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்? அப்ப ஏங்க நாம கவலைப்படணும்? அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!

இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.
தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!
அதுக்கப்புறம் போகவே மாட்டான்!
எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!
இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!
நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.

குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!
அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.
சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!

பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!
அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!
[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]

சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?

அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!
பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!
பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!
பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!
சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.
தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!
படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!

ஆச்சரியமாக இருக்கிறதா?
இதுதான் உண்மை!
மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!

நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!
இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!

மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!

இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!

ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!

"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"

எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"
"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"
"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"
"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"
போன்ற பொறுப்பற்ற பதில்களே!

மாறாக என்ன சொல்லலாம்?
" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"
"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"
இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!
உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!
அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!

பதிவு நீள்கிறது!
இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!
அடுத்த பதிவில் தொடர்வோம், அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில் என்பது பற்றி!

*************************************************************************************

Read more...

Saturday, August 26, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன்.

ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை.

தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன் சந்ததி மேலும் வளர்கிறது எனும் அளவிலேயே தன் குழந்தையைப் பார்க்கிறார்கள்.

தான் கற்ற, கற்க மறந்த சில பாடங்களின் அளவுகோலையே கொண்டு தம் அளவிலேயே அக்குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்க்க முற்படுகின்றனர்.

தன்னை மீறியும் இவ்வுலகம் வளர்கிறது; அதில்தான் இப்பிள்ளை வளரந்து ஒரு பேர் சொல்லப் போகிறது என்பதனை அறிந்தோ, அறியாமலோ, தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!

இல்லையென மறுத்தாலும், இதுதான் நாம் காணும் உண்மை நிகழ்வு!

அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.

நிறைய வசதிகளைக் கொடுப்பதின் மூலம், ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிடலாம் எனவே பெருமளவில் தாய்-தந்தையர் கணக்கு போடுகின்றனர்.

"வழக்கத்தை மாற்றுவானேன்?"[Why change the tradition?] என்ற மனப்பான்மையே இங்கு அதிகம் காண்கிறோம்!

ஆங்கிலத்தில் மூன்று 'I'களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு.

தகவல், [Information], பரிமாறல், [Interaction], செயலாக்கம், [Implementation] என்று.


இவை மூன்றும் ஒன்று அல்ல!

தகவலைச் சொல்ல வேண்டும்.
பரிமாறும் போது விருப்பு வெறுப்பில்லாமல், இருதரப்புக் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
செயலாக்கும்போது யார் இதனைச் செய்ய வேண்டுமென நாம் நினைக்கிறோமோ, அவர்களைச் செய்ய விட வேண்டும்.

ஆனால், நடைமுறையில் வரும்போது இம்மூன்றையும் கலந்தடித்து குழப்பி விடுகிறோம்.

தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம்.

நாம் எது சரியென நினைக்கிறோமோ, அதைத் தாண்டி அவர்களை வளர விடுவது இல்லை என்பதே இங்கு நிஜமாகிப் போன நிதரிசனம்.

எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.

நாம் புனிதமாகக் கருதும் இதிகாசங்கள் இதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றன!

அவை நிஜமோ, இல்லை வெறும் கதையோ, அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.

இராமாயணம் என்ன சொல்லுகிறது?

எனக்குத் தெரிந்ததெல்லாம் இது மட்டுமே!
"கடவுளே உனக்கு மகனாகப் பிறந்தாலும், உனக்கு நிம்மதி வராது;அவனே உன் சாவுக்கும் காரணமாயிருக்கக் கூடும்!"

இராமன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான்.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.
அதற்கு முன்னர், சுகபோகத்தில் திளைத்தான்.
வனவாசத்திலும், 13 ஆண்டுகள் மனைவி, தம்பியுடன் வாழ்ந்தான்.
அடுத்த ஆறு மாதங்கள் அவளைத் தேடி அலைந்தான்.
கடைசி ஆறு மாத காலம்தான் உண்மையிலேயே இராமாயணம்.
அதை விடுத்துப் பார்த்தால், மற்ற நிகழ்வுகளெல்லாம், வெறும் இடத்தை நிரப்பும் காட்சிகளே!

சரி, கண்ணன் கதைக்கு வருவோம்!
அதில் முக்கால்வாசி அவனது பாலபருவத்தின் கதைகளே!
பிறந்தவுடனேயே இட்ம் மாறினான்.
ஒரு சேரியில் வளர்ந்தான்.
அவன் செய்த விஷமங்கள்!
அவன் நடத்திய லீலைகள்!
அவன் காட்டிய தீரச் செயல்கள்!
அதனைக் கண்டும் காணாமலும், பாராட்டியும், அனைத்திலும் கூடவே இருந்த யசோதையும், நந்த கோபனும்!
அதை விட்டால், நேரே, கீதை உபதேசம்தான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது!
குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!

இதனால் மட்டுமே நான் அவ்விரு கதைகளையும் போற்றுகிறேன்!

சொலவதைச் சொல்லி, நல்லவிதமாய்ப் பகிர்ந்து கொண்டு, அவர்களை அவர் போக்கில் விட, பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

நம் செல்வம் என்று எதனையும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென எனத் துடிப்பதை விட்டு, அவர்கள் நாளைய உலகின் நல்ல குடி மக்களாக வளர நாம் - பெற்றோராகிய நாம் - உறுதுணையாய் இருக்க வேண்டும்.

இதில் மற்ற எவரையும் விட, நான் முன்னர் சொல்லிய, ஆசிரியர், மற்றவர், நண்பர் இவர் எல்லாரையும் விட பெற்றவர்களே பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

இனி, பெற்றோராகிய நாம் அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும், என்ன வகையில் அவர்களின் இப் பாலியல் அறிவில் உதவி புரிய வேண்டும் எனப் பார்ப்போம்!

அடுத்து.... நிச்சயமாக [!!] 3 வயதுக் குழந்தையின் கேள்வி!!

***அடுத்த வாரத்திலிருந்து, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் இப்பதிவு வரும்!***

*************************************************************************************

Read more...

Thursday, August 24, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" --3

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" -- 3

"இன்னாபா! கமல் கவிதயெல்லாம் ரசிச்சாங்க போலருக்கே!" என்று அட்டகாசமாகச் சிரித்தபடி வரவேற்றான், மயிலை மன்னார், என்னைப் பார்த்ததும்!

"ஆமாம், ஆமாம்! எல்லாரும் ரொம்பவே பாராட்டினார்கள்!" என்று சொன்னவாறே அவன் அருகில் சென்றேன்!

"ஆமா! இது ஆரு? புச்சா கூட ஒரு ஆள இட்டாந்திருக்க? புது ஃப்ரெண்டா?" என்று கொஞ்சம் பொறாமை கலந்த சந்தேகத்துடன் கேட்டான் மன்னார்.

"எனக்கே புதியவர்தான்! இப்போது தான் பழக்கமானார்! நீ தமிழ் சொல்லும் 'அழகை' பார்க்கணுமாம்! அதுக்கென்றே துபாயில் இருந்து வந்திருக்கிறார்! பெயர் சுல்தான்! சுல்தான் சார்! இவந்தான் நீங்க கேட்ட மயிலை மன்னார்!" என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்.

"வா சார்! இப்ப்டி வந்து குந்து சார்! வெளிநாட்டுலேந்தெல்லாம் நம்மளைப் பாக்கறதுக்கு பெர்ய பெர்ய மன்ஷாள்லாம் வர்றது நமக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்! இன்னா சார் சாப்ட்றீங்க? மாஷ்டர்! இவுங்கல்லாம் நாம ஆளுங்க! சார் துபாய்லேந்து ஸ்பெசலா நம்மளப் பாக்கறதுக்கென்னே வந்துருக்காரு! நல்ல ஷ்ட்ராங்கா ரெண்டு டீ அப்புறம் ஒன்னோட ஸ்பெசல் மசால் வடன்னு ஏதோ சொல்வியெ அது ரெண்டு; சீக்கரம் கொண்டா" என்று தடபுடல் படுத்தினான்!

இருக்கட்டும், இருக்கட்டும்! நாம வரும் போதெல்லாம் வெறும் சிங்கில் டீயோட அனுப்பி விடுவான். இப்போ துபாய் ஆளுன்ன உடன் ஸ்பெஷல் டீ, ஸ்பெஷல் மசால்வடையா? உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்' என்று மனதில் கறுவிக்கொண்டே, "சார் அதுக்கெல்லாம் வரவில்லை! நீ சொல்லும் குறள் விளக்கத்தைக் கேட்கணுமாம். எனவே சீக்கிரம் ஆரம்பி!" எனக் கத்தினேன்!

"இரு, இரு! இப்ப இன்ன ஆயிரிச்சி ஒனக்கு? ஏன் இப்டி கூவறே? இரு, சாரைக் கேப்போம். சார், சுல்தான் சார்! நீ சொல்லு சார்! இன்னா அதிகாரத்துக்கு பொருள் சொல்லட்டும் நா!" என்று அன்புடன் அவரைக் கேட்டான் மன்னார்.

சுல்தான் கொஞ்சம் சங்கோசப் பேர்வழி போலும்! இந்த வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. முதல் முறையாக வாயைத் திறந்து. " நீங்க எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நான் கேட்கிறேன்." என்றார்!

ஐயய்யோ! இப்படிச் சொன்னால் வில்லங்கமாக ஏதாவது சொல்லிவிடுவானே என்றஞ்சி, நான், அவசர அவசரமாக, "வரும்போது பேசிக்கொன்டு வந்தோம். அப்போது "இல்வாழ்க்கை" என்னும் அதிகாரம் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் எனச் சொல்லி சமாளித்தேன்!

"ஏன்? சாருக்கு கண்ணாலம் ஆவப்போவுதா? நல்ல தலப்பத்தான் கொடுத்துருக்காரு! சரி, பாட்டப் படி நீ!" என்று சீரியசானான் மன்னார்.

நான் பாடல் சொல்ல அவன் மடமடவெனச் சொல்லுவதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் சுல்தான்!

"இல்வாழ்க்கை"

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை." [41]


ஒலகத்துல நல்ல விசயம்னு நாலு சொல்லிருக்காங்க! ஒண்ணு, படிக்கறது. இன்னான்னா படிக்கணுமோ அத்தயெல்லாம் வேற நெனப்பில்லாம பட்சிக்கினே இருக்கறது.
ரெண்டாவது, வூட்டு சிந்தனையே இல்லாம இருக்கறது. சதா காலமும் வேல, வேல வேலதான்! ஊட்டக் கவனிக்க மாட்டான், பொண்டாட்டி புள்ளயக் கவனிக்க மாட்டான்; எதோ இவந்தான் இந்த ஒலகத்தயே தாங்கிப் புடிக்கிறவன் மாரி ரொம்ப பிஸியா இருப்பான். இத்த 'மனைதொறவு'ன்னு சொல்லுவாங்க!
மேல சொன்ன ரெண்டும் கிட்டத்தட்ட சன்யாசம் மாரித்தான்னு வெச்சுக்கியேன்!
இப்ப மூணாவது இன்னான்னு கேளு, அட, கேளு சுல்தான் சார்! என்றவுடன் திடுக்கிட்டு, என்ன? என்று அப்பாவியாய்க் கேட்டார் சுல்தான்!
ஆங்! இந்த மூணாவது தான் நெசமாலுமே சன்யாசம் வாங்கிக்கினு போயிடறது! சாமிய நெனச்சுக்கிட்டோ, இல்ல வூட்ல வெறுத்துப் போயியோ, தொறவு வாங்கிக்கறது.
நாலாவது, ஒன்னிய, என்னிய மாரி, கண்ணாலம் கட்டிக்கினு குடும்பத்தப் பாத்துக்கினு, ஒறவுசனத்தஎல்லாம் கெவனிச்சிக்கிட்டு ஒயுங்கா வாளறது.
நம்ம ஐயன் இன்னா சொல்ல வர்றாருன்னா, மத்த மூணு பேரும் ஒயுங்கா இருக்கறதுக்கு இந்த இல்லறத்துல இருக்கானே அவந்தான் ரொம்ப முக்கியம்னு! வெளங்கிச்சா? ம்ம் அட்த்தது" என்றான் மன்னார்.

"துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." [42]


கண்ணாலம் கட்டிக்கினு, குடுமபத்துல இருக்கறவன், இந்த மேல சொன்ன மூணு விதமான துறவிங்களுக்கு மட்டுமில்ல; நம்மளப் போல ஏளை பாளைங்களுக்கும், ஆரும் தொண இல்லாம செத்துப் போறான் பாரு, அவனுவகளுக்கும் இவந்தான் ஒதவியா இருப்பான். துவ்வாதவன்னா ஒண்ணுமே இல்லாதவன்னு அர்த்தம்! மேல!" என்றான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." [43]


இதுதான் ரொம்ப முக்கியமான குறளு. ஆளாளுக்கு ஒருவிதமா சொல்லுவானுங்க! நான் சொல்றத கவனமாக் கேளு என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.

இப்ப குடும்ப வாள்க்கைல இருக்கேன்னா ஒன்னோட கடம இன்னான்னு தெரியுமா? ஒரு அஞ்சு பேரு இருக்காங்க! நீ ஆருக்கு இன்னா பண்றியோ, இல்லியோ, இந்த அஞ்சு பேர மட்டும் மறந்துறக் கூடவே கூடாது! ஆருன்னு கேக்கிறியா? இப்ப அல்லா ஊர்லியும் பாத்தேன்னா, தெக்கால ஒரு சனத்த ஒதுக்கி வெச்சுருப்பாங்க! ஊருக்குள்ள வராத, செருப்பு போடாதே, துண்ட இடுப்பில கட்டினியா, அப்டி இப்டின்னு ரவுசு பண்ணிருவாங்க இவங்கள! இவுங்களத்தான் ஐயன் மொதல்ல வெக்கறாரு! அப்பொறமா, நீ கும்புடற சாமி, அப்பால, ஒன்னியத் தேடிக்கினு வர்றவங்க, இப்ப நீ சுல்தான் சார இட்டாந்திருக்கியே அது மாரின்னு வெச்சுக்கியென், நாலாவதா ஒன் சாதிசனம், கட்சீல நீ, ஒன்னிய மறந்துறக் கூடாது! இந்த அஞ்சு பேரையும் எப்டி கவனிக்கணுமோ அப்டி கவனிக்கணும் நல்ல விதமா!
ஆனா, இன்னா ஆச்சு? ஐயன் சொன்னத ஆளாளுக்கு அவனவுனுக்கு புரியற மாரி பிரிஞ்சிக்கிட்டாங்க. ஐயனே சொல்லிட்டார்டான்னு சொல்லி, ஆளும், பாளும் பண்ணிட்டாங்க. இப்ப வர்ற சனங்களாவது இத்தையில்லாம் மொறையாப் புரிஞ்சு அல்லாரையும் நல்லவிதமா காப்பத்தணும்! இன்னா சார்! செய்வியா?" என்றவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் தலையாட்டினார் சுல்தான்!

"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். [44]


" ரெண்டே ரெண்டுதான்! பளிபாவத்துக்கு அஞ்சணும், நல்லமாரி சம்பாதிச்சு, அட்த்தவன மோசம் பண்ணாம துட்டு சேத்து, அத்த வேண்டப்பட்ட மன்ஷாளோட பங்கு போட்டு வாள்றது, இது ரெண்ட மட்டும் ஒர்த்தன் வுடாம செஞ்சுக்கிட்டு வந்தான்னு வையி, மவனே! அவன் மட்டும் இல்ல, அவன் வம்சமே ஒரு கொறயும் இல்லாம அமோகமா இருக்கும்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [45
]

"இத்த நீ ரொம்ப எடத்துல கேட்ருப்பே! நம்ம அர்சியல் தலிவன்லாம் எந்தக் கண்ணாலத்துக்கு தலம தாங்கப் போனாலும் வுடாம சொல்லிக் காட்டிருவானுங்க! அட, இன்னா சார், அப்டி சிரிக்கிற நீ? நா சொல்றது சர்த்தானே!
இன்னா சொல்றாரு? புர்சன் பொஞ்சாதிக்குள்ல ஒர்த்தொருக்கொர்த்தர் அன்பா இருக்கணும்; தானதர்மம் பண்றது ரெண்டு பேரும்... இத்த முக்க்யமா மன்சுலவெச்சுக்கணும்.. ரெண்டு பேரும் சேந்தே பண்ணணும். அப்பத்தான் நீ வாள்ற குடும்ப வாள்க்கைக்கு ஒரு அர்த்தம், பிரயோசனம் இருக்கும். சரி, நேரமாவுது அட்த்தது?"

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன். [46]


நல்ல மாரி நடந்துக்கினு ஒன்னோட குடும்பத்த நீ நடத்துனியின்னா, அப்பால நீ வேற எந்த வளியிலியும் போவத் தாவில்ல! இதுலியே ஒனக்கு அல்லாம் கெட்சுரும்ன்றாரு ஐயன். இந்த பாட்டுல ஒரு தமாசு பாத்தியா? ரெண்டாவது அடில பாரு, அசால்டாப் பாத்தேன்னா ஒய்ஃப் ந்ற மாரி இருக்கும்! வள்ளுவர்க்கு அப்பவே இங்லீச்லாம் தெரியுமான்னு கேக்காத இன்னா! என்று சிரித்தவனைப் பார்த்து எழுதுவதை நிறுத்தி நானும், சுல்தான் சாரும் கடகடவெனச் சிரித்து விட்டோம்!

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. [47]


மொத மொதலா சொன்னேனே ஒரு மூணு பேரு, அவங்கள்லாம் வேற ஏதோ ஒரு ஒலகத்தப்
புடிக்குறதுக்கு ஓடிக்கினே இருக்கறவங்க. ஆனா, ஒயுங்கா குடுத்தனம் பண்ணேன்னு வெச்சுக்கொ; அவுங்கள அல்லாம் வுட சீக்கரமா ஒனக்கு அது கெடச்சுருமாம்"

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. [48]


இப்ப காட்ல ஒக்காந்துக்கினு, இல்ல எதுனாச்சும் மடத்துல இருந்து தவம் பண்றாங்க பாரு சாமியாருங்க, அவுங்க அல்லாரயும் வுட, அவர் அப்டி செய்றதுக்கு ஒதவி பண்றான் பாரு, இந்தமாரி ஒயுங்கான வளியில குடுத்தனம் பண்றவன், அவனோட தவசுக்கு வீரியம் சாஸ்தி!

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. [49
]

இத்தயும் நீ ஒரு ஆயிரம் வாட்டி கேட்டுருப்பே, இல்லியா? ரொம்ப சிம்பில்! இப்ப அறம், தருமம்னுல்லாம்சொல்றாங்களே, அது இன்னான்னா, கட்ன பொண்டாட்டியோட ஒயுங்கா குடுத்தனம் பண்றதுதான். அத்தையும் இன்னோர்த்தன் திட்றமாரி வெச்சுகலன்னா இது இன்னும் ஸ்பெசல் ஆயிடும்!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [50]


இப்ப இதுவரைக்கும் சொன்னாமாரி நீ வாய்ந்தேன்னு வெச்சுக்க, மவனே! அப்பொறம் நீ இங்கே இல்ல; எங்கியோ போயிடுவே! எங்கேன்றியா? இப்ப நீ கும்புடுறியே சாமிங்க அதெல்லாம் ஒரு எடத்துல ஒசரத்துல இருக்கற மாரித்தானே நென்சுக்கினு இருக்கே! அங்க,.... டாப்புல கொண்டு போயி நிறுத்திறுமாம்! அதுக்காவ நீ செத்து கித்துப் பூடுவேன்னு நெனக்காத! "அதோ போறார் பாருடா! இன்னாமா குடும்பத்த தாங்கறார் தெரியுமா? மன்சன் இல்லடா அவரு!தெய்வம்டா!" அப்டீன்னு இங்கியே ஒன்னியக் கையெடுத்துக் கும்புடுவாங்க!

இன்னா சார் நல்லா கேட்டுக்கினியா? ஒன்னயும் அல்லாரும் சாமின்னு சொல்ற மாரி நடந்துக்கணும், செய்வியா சார்?" என்று சுல்தான் சாரின் தோளில் கை போட்டவாறு மயிலை மன்னார் கேட்டபோது, அல்லா மேல ஆணையா கண்டிப்பாக செய்வேன் மன்னார்!" என்று சொல்லிய சுல்தான் மன்னாரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். நிறைவாய் இருந்த அந்தக் காட்சியைப் பார்த்தவாறே, கையோடு கொண்டு சென்ற கணினியைத் தட்ட ஆரம்பித்தேன்!

மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம்!

"முருகனருள் முன்னிற்கும்!"

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP