Sunday, July 02, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2

இறைவன் என்றும் கைவிட மாட்டான்!
நாகை சிவா

*************************************************************************************

நாகை சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவையார் ஒரு வசனம் பேசுவார்;
"முருகா! இதன் மூலம் நீ ஒரு விளையாட்டை நடத்த விரும்பினால், அதற்கு யார் என்ன சொல்ல முடியும்!" என.

அதே போல, அறுபது நிமிடங்களுக்குள்ளேயே, இதனைச் சரி செய்த முருகனுக்கும், உறுதுணையாய்ச் செயல்பட்ட நண்பர் நாகை சிவாவிற்கும், ஆறுதல் சொல்லிய, நம்பிக்கை ஊட்டிய அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்லி, இப்பதிவினை, மறுபதிப்பு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கம்பர் செய்தது போல, நாகை சிவாவின் பெயரை கூடவே இட்டு நன்றி கூறுகிறேன்!
*************************************************************************************



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2



'பக்கரை விசித்ர மணி'

ராகம் :: நாட்டை/மோஹனம்
தாளம் :: ஆதி

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ---- தனதான

.......பாடல்.......

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழ மிடிப்பல்வகை தனிமூலம்

மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச மர்த்தனெனு மருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"பொருட்கவிதை"


"பக்கரை விசித்ரமணி, பொன் க[ல்]லணை இட்டநடை
பட்சியெனும் உக்ரதுரகமும்"


"அங்கவடியென்னும் அழகான ஆபரணம் தன்னில்
பங்கமில்லா இரத்தினங்களைப் பாங்காகப் பதித்திட்ட
பொன்னாலான சேணத்தை பொலிவோடு அணிந்துகொண்டு
விண்ணையும் சாடுகின்ற வேகநடை கொண்டங்கு
புரவி போல் பறந்திடும் மயிலென்னும் வாகனத்தையும்,

"நீபப் பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்"


கடம்ப மரத்தினிலே பக்குவமாய்ப் பூத்திட்ட
மலர்களால் கோத்திட்ட மணமிகு மாலையையும்,
கிரவுஞ்சமெனும் மாயமலை அழிந்து ஒழியவென
விரைந்தங்கு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய
திருக்கையில் ஏற்றிருக்கும் கூரான வேலையும்,

"திக்கு அது மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
சிற்று அடியும், முற்றிய ப[ன்]னிருதோளும்"


அட்டதிக்கும் நடுநடுங்க சிறகசைத்துக் காட்டி
மற்றவரும் மதித்துவர கொடியினிலே வீற்றிருக்கும்
குக்குடம் என்கின்ற வீரமிகு சேவலையும்,
அனைத்துலகும் காத்துவரும் அழகான சிற்றடிகளையும்,
தினந்து நிற்கும் பன்னிரு தோள்களையும்,

"செய்ப்பதியும், வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கு அருள்கை மறவேனே"


இப்பதிக்கு வாவென்று அப்போது அருணையினில்
செப்பமுடன் உரைத்திட்ட செய்ப்பதியாம் வயலூரையும்,
இப்போது நீயிந்த பெருமைமிகு திருப்புகழில்
விருப்பமுடன் பாடிடுக எனச்சொல்லி அருளிட்ட
நின் கருணைத் திறத்தினையே எந்நாளும் மறவேனே !

"இக்கு,அவரை, நற்கனிகள்,சர்க்கரை, பருப்புடன், நெய்
எள்,பொரி, அவல்,துவரை, இளநீர்"


தித்திக்கும் கரும்புடனே,அவரையும் ,நற்பழ வகைகளும்
சருக்கரையும், பருப்பும், நெய்யும் சேர்த்துவைத்து
எள், பொரி, அவல், துவரை, இவற்றையும் கலந்தெடுத்து
தானுண்ட நீரைத் தலையாலே தருகின்ற தென்னையின்
ருசியான இளநீரும் விருப்புடனே சுவைத்திடவும்,

"வண்டெச்சில், பயறு,அப்பவகை, பச்சரிசி, பிட்டு,வெள
ரிப்பழம், இடிப்-பல்வகை"


கன்னித்தன்மையுடன் மலர்ந்து, ரீங்காரம் செய்கின்ற
வண்டின் எச்சில் பட்டதாலே, மகரந்தம் என்கின்ற
தீஞ்சுவைத்தேனும் ,பயறு, கொழுக்கட்டை என்னும் அப்பவகைகளும்,
பச்சரிசி, பிட்டு, பாங்காகப் பிளந்திடும் வெள்ளரிப்பழமும்,
உடைத்திடித்து செய்திட்ட பலவகைச் சிற்றுண்டிகளும்,

"தனிமூலம், மிக்க அடிசில்,கடலை, பட்சணமெனக்கொள் ஒரு
விக்கின சமர்த்தனெனும் அருள் ஆழி"


சத்தான சுவையான, ஒப்பற்ற கிழங்கு வகைகளும்,
மொத்தமாக வடித்திட்ட பச்சரிசி அன்னமும்,
கடலை முதலான சத்துவ ஆகாரங்களை
விருப்பமுட்ன் உண்கின்ற, வினைகளை நீக்குகின்ற
விக்கினசமர்த்தன் எனும் அருட்பெருங்கடலே!

"வெற்ப,குடிலச் சடில, விற்பரமர், அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே."


கயிலையெனும் மலை வாழும், வளைகின்ற சடைகளையும்,
பினாகம் என்கின்ற மேருகிரியாம் வில்லினைக் கொண்டவரும்,
காண்பரிய பெரும்பொருளாம், உலகினிற்கு அப்பனுமாய்
விளங்குகின்ற சிவனார் ஈந்த வளர்ஞானச்சுடரே!
கொம்பொடித்து பாரதம் எழுதிய பெருமையுள்ள ஒற்றைக்கொம்பனாரே!

*************************************************************************
[பக்கரை=அங்கவடி; பொற்கலணை-- தங்கத்தால் ஆன சேணம்; துரகம்--குதிரை; மலர்த்தொடை-- மலர்மாலை; குவடு--மலை; குக்குடம்= சேவல்கோழி; செய்+பதி= வயல்+ஊர், வயலூர்; இக்கு=கரும்பு; வண்டெச்சில்= தேன்; தனி மூலம்= ஒப்பற்ற கிழங்குகள்; ஆழி=கடல்; வெற்ப= மலையில் வசிப்பவர்; குடிலம்=வளைந்த; சடிலம்= சடைமுடி; மருப்பு=தந்தம்.]
********************************************************************************

பாடலின் பெருமை:
அருணகிரியாருக்கு, அருணையில் முருகன் உபதேசம் செய்கிறான்.
ஓர் அடியும் எடுத்துத் தந்து மறைகிறான்.
அருணகிரியாரும், அந்த அடியில் ஒரு பாட்டெடுத்து, திருப்புகழ் பாடி யோகத்தில் ஆழ்கிறார்.
முருகன் அசரீரியாக 'நம் வயலூருக்கு வா' என்று அருள் புரிய, அருணகிரியார் வயலூர்ப் போய் இறைவனைத் தொழுது, திருப்புகழ் பாடும் முறைமையைக் கேட்கிறார்.
இன்னின்னவைகளை வைத்துப் பாடு எனக் குமரனும் பணிக்க,
வயலூரில் எழுந்தருளியிருக்கும் பொய்யாக் கணபதி சந்நிதியில் நின்று, "கைத்தல நிறைகனி" பாடிய பின் அண்ணனிடம், அவரது தம்பியான குமரக்கடவுள் தமக்கு அருளிய திறத்தை வியந்து பாடிய பாடல் இது!
அருணையில் முருகன் அடியெடுத்துத் தந்த பாடல்..... அடுத்த வாரம்!
____________________________________________________________________________________
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"நல்லோர் நினைவில்......"

"நல்லோர் நினைவில்......"

அன்பு நண்பர்களே!!

வலைப்பூவைப் பற்றியோ, கணினியைப் பற்றியோ, அதிகம் அறிந்திராமல்,
ஏதோ எழுதத் தோன்றுவதை எழுதிப் பதிவு செய்து வரும்
சாதாரண வலைப்பதிவாளனாகிய நான்,
இன்று சற்று எதிர்பாராத ஒரு நேரத்தில்,
எனது, அண்மைப் பதிவான
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 2"
[பக்கரை விசித்ர மணி]
என்னும் படைப்பை நீக்கி [delete] இருக்கிறேன்.......
திருத்துவதாக [edit] நினைத்துக் கொண்டு!

உங்களில் யாரேனும் இந்தப் பதிவினை பதிவிறக்கம் [download] செய்து வைத்திருந்தால்,
அதனை எனக்கு அனுப்பினால்,
மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!

நன்றி!!

Read more...

Saturday, July 01, 2006

"அ.அ.திருப்புகழ்". -- 3 "முத்தைத்தரு"

""அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3""


"முத்தைத்தரு"

ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

........பாடல்.......

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.


"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "


முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு
ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே
தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட
தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"

அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட
சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற
சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!
முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!
தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி
தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற
குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"


என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு
முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான
சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து
அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த
பிரமன் திருமால் இருவரும் கூட
முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து
நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"

திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட
தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ
அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"

ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை
மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"

அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே
மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே
அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,
"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்
என்மகனின் மறைவுக்குக் காரணமான
ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,
அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என
சூளுரைத்த பத்தனைக் காக்கவென
'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து
தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து
சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே
வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை
விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"

இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்
அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்
தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"


மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"

மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ
பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்
உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]

"தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"


தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக
முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த
நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து
பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்
எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"

பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்
பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"


எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்
அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்
ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"

கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற
பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்று எழ"


பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட
கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து
குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என
கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று
இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"

தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்
இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை
வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."

அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட
கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு
பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று
அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!

*************************************************************************************
[அருஞ்சொற்பொருள்: அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்; பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்; முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை; பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர்]
*************************************************************************************

அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.
அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்.
"என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்.
"முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.
அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!

*************************************************************************************
'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.
இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.
பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************

Read more...

Saturday, June 24, 2006

" முருகனருள் முன்னிற்கும் -- 1"

" முருகனருள் முன்னிற்கும் -- 1"


வலைப்பூ நண்பர்களே!

இந்தத் தலைப்பில் எவ்வாறு என் அன்பு முருகன் என்னோடு எப்போதும் என் வாழ்க்கையில் "கூடி இருந்து குளிர்வித்தான்" என்பதனைச் சொல்லலாம் என இருக்கிறேன்.

சிறியது, பெரியது என்னும் வேறுபாடெல்லாம் அவனுக்குக் கிடையாது, அதெல்லாம் நமக்குத்தான் என்பதனை உறுதி செய்யும் நிகழ்வுகள் இவை.

இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றே, இதற்கு வித்திட்டது.

இந்தப் பதிவுகளில், உரைநடை, கவிதை இருவகையிலும் கலந்து சொல்லலாம் எனவும் எண்ணியிருக்கிறேன்.

படிப்பதோடு, இதுபோன்ற உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால், மிகவும் மகிழ்வேன்.

இனி, மேற்கொண்டு பீடிகை எதுவும் போடாமல் நிகழ்வுகளுக்குச் செல்வோமா?
_____________________________________________________________________________________


நேற்று வேலைக்கு வழக்கம் போலச் சென்றேன்.

போனவுடன் ஒரு மருத்துவக்குழு கூட்டம் இருந்ததால், அன்றைய 'நாட்பணிகளை' [appointments] கவனிக்க மறந்து போனேன்.

10 மணி அளவில், எனது அறைக்கு வந்தவுடன், செயலர் நினைவு படுத்தினார், இன்று என்னுடன் பணி புரிவோருடன் 11 மணிக்கு வெளியில் மதிய உணவு அருந்த செல்லவேண்டியிருக்கிறது என்று!

அவசர அவசரமாக பாக்கெட்டைத் தடவினால், 'வாலெட்டை' மறந்து வைத்து விட்டு வந்தது தெரிந்தது.

சக மருத்துவர் ஒருவரிடம் ஒரு 20 டாலர் கடன் வாங்கிகொன்டு எப்படியோ மானத்தைக் காப்பாற்றிக் கொண்டேன்!

மறுநாள் திருப்பித் தருகிறேன் என்று வேறு வாகளித்திருந்தேன் அந்த நண்பரிடம்!

திரும்பி வந்து, தற்செயலாக, கணினியில் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது ஒரு உன்மை முகத்தில் அடித்தாற்போல் தெரியவந்தது, கணக்கில் 35 டாலர்களே இருக்கிறது என்பது!

இவ்வளவு குறைவான நிலையில் என் கணக்கு இருந்ததில்லையே எனக் குழம்பினேன்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது, எனது இரு மகளகளும் அவசரத்தேவையெனக் கேட்டுக் கொண்டதால், இரு பெருந்தொகைகளை சில தினங்களுக்கு முன் மாற்றியிருக்கிறேன் என்பது!

சரி, எப்படியாவது, அதிலிருந்து ஒரு 20 டாலரை மட்டும் எடுத்து நண்பருக்குக் கொடுத்துவிடலாம் எனத் தேறுதல் செய்து கொண்டேன்.

இன்று காலை, கிளம்பும் போது, என் மகன் 'அப்பா, ஒரு 20 டாலர் 'gas money'[இதற்கு தமிழ்ச் சொல் என்ன?! குமரன், ஜி.ரா., பொன்ஸ் ப்ளீஸ்]] வேண்டும் என்று கேட்டு வைத்தான்.

இருக்கிற 20 டாலரை அவனுக்குக் கொடுப்பதா, இல்லை வாக்களித்தபடி நண்பருக்குக் கொடுப்பதா என ஒரு போராடம்!

சரி, இரு வருகிறேன், நான் ஏ.டி.எம் மெஷினுக்குச் சென்று வந்து தருகிறேன்' எனச் சொல்லிவிட்டு, வழக்கம் போல, 'முருகா! காப்பாத்து!' என ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தானியங்கிப் பொறி [ATM machine]-க்கு என் வண்டியை எடுத்துச் சென்றேன்.

அந்த சந்தில் திரும்பும் போது, ஒரு வயதான [சுமார் 80 இருக்கும்] ஒரு மூதாட்டி ஒரு வாக்கரைத் [Walker] தள்ளியபடி குறுக்கே கடந்தார்.

அவருக்காக நான் ஒரு முழுமையான நிறுத்தம் செய்த போது, திரும்பி என்னைப் பார்த்து கனிவுடன் சிரித்து, 'மே காட் ப்லெஸ் யூ' எனச் சொல்லிச் சென்றார்.

மனதுக்கு இதமாக இருந்தது.

வங்கி அட்டையை உள்ளே தள்ளி ஒரு 20 டாலரை வெளியில் எடுத்தேன்.

கூடவே அதற்கான ரசீதையும் கக்கியது மெஷின்.

சரி, மீதி 15 டாலர்தானே இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கையுடன் பார்த்த எனக்கு மயக்கம் போடாத குறை!

மீதி இருப்பு நாலாயிரத்துச் சொச்சம் எனக் காட்டிச் சிரித்தது அந்த ரசீது!

எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும், என் சம்பளம் 30-ம் தேதி தானே பதியும், என் மனைவியின் சம்பளமும் 25-ம் தேதிதானே என மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது!

இன்று தேதி 23, வெள்ளிக்கிழமை.

நாளையும், அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள் என்பதால், என் மனைவின் சம்பளம் நேற்று இரவே, 22-ம் தேதி அன்றே பதிந்திருக்கிறது!

பிறகென்ன!

மறுபடியும் அட்டையை நுழைத்து, தெம்பாக ஒரு 200 டாலரை வெளியிலெடுத்து, வீட்டிற்கு வந்து, மகிழ்வுடன் மகனுக்கும் பணத்தைக் கொடுத்து, நண்பரின் கடனையும் திருப்பிக் கொடுத்து,.....

எல்லாம் இனிதே முடிந்தது!

அந்த மூதாட்டி.....!?

அவரது கனிவான ஆசிச் சொற்கள்!?

வேறு யார்?!

என் அப்பன் முருகன் தான் !

"ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாளகணம் புகழ் வேலவனே !"
[கந்தர் அநுபூதி; பாடல் 38]

'கூதாள மலரை அணிந்தோனே!
வேடர்குல வள்ளியின் தலைவனே!
பேய்களும் துதிக்கின்ற வேலவனே!
வீண் பேச்சுக்ளைப் பேசுபவனும்,
நன்மைஒன்றும் அறியாதவனும்,
தீயவனும் ஆகிய அடியேனையும்
ஒரு பொருட்டாக எண்ணி நீ என்னை
ஆட்கொண்ட விதத்தை எப்படி உரைப்பேன்!'

*************************************************************************************

Read more...

Tuesday, June 20, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"



அன்பு வலைப்பூ நண்பர்களே!
வணக்கம்.
ஆத்திகம் எனத் தலைப்பு வைத்தும், இன்னும் ஒரு பதிவும் அது பற்றிப் போடவில்லையே என ஒரு குறை மனத்தில் இருந்து கொண்டே வந்தது!
நண்பர்கள் குமரனும், இராகவனும், செல்வனும் வேறு திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்!
திருப்புகழுக்குப் பொருள் சொல்லேன் எனவும் சொன்னார்கள்!
திருப்புகழுக்கு பொருள் சொல்லுவது என்பதை விடுத்து, அப்பொருள் வருமாறு எளிய நடையில், கவிதையாகச் சொல்லலாம் என ஒரு கருத்து பதிந்தது, மனத்தில்!
ஆகவே, 'அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி' முழு முதற்கடவுளாம் விநாயகனின் திருப்புகழோடு இதனைத் தொடங்குகிறேன்.
குற்றம், குறை எதுவானாலும், நடை கடினமாக இருந்தாலும், உடனே சொல்லி என்னைத் திருத்துமாறும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

1. கைத்தல நிறைகனி... [விநாயகர் துதி]


ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன......தனதான

.......பாடல்......

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்

கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை

மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.

.....விளக்கம்.....

//கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்//


இருகைகளில் நானேந்தி மனமுவந்துஅளிக்கின்ற
பழம், அப்பம், பொரி அவல் இவையனைத்தையும்,
துதிக்கையால் வாரி விருப்பமுடன் உண்ணுகின்ற
வேழமுகத்தானின் திருவடியை மிக விரும்பி,

//கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்//


இறைநூலைக் கற்கின்ற அடியவரின் சித்தத்தில்
நிறைவாக நீங்காது வாழ்கின்ற தெய்வமே!
குறைவின்றித் தருகின்ற கற்பகத் தருவே!- என
நிறைவாக உனை வாழ்த்த, வினையெல்லாம் விரைந்தோடும்.

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//


ஊமத்தை மலருடனே, பிறைநிலவும் சடை தரித்த
அழிக்கின்ற தொழில் செய்யும் சிவன் மகனும்,
போருக்குச் செல்கின்ற வலுவான தோளுடையவனும்,
மதயானை போல்கின்ற பலத்தினை உடையவனும்,

//மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே//


மத்தளம் போலொரு பெரு வயிறு படைத்தவனும்,
உத்தமியாம் பார்வதியாள் செல்வனாம் கணபதியை
தேன் துளிர்த்துப் பூத்திருக்கும் புதுமலர் கொண்டு
நானிங்கு வணங்கிப் பதமலர் பணிவேனே!

//முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே!

//முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா//


நின்னை வணங்காமல், திரிபுரத்தை அழிக்க எண்ணி
போர்புரிய விரைந்துசென்ற சிவனாரின் திருத்தேரின்
முன்னச்சு முறிந்து, பொடிப்பொடியாய் போகச் செய்த
தன்நிகரில்லா வீரனே! தீரனே! சூரனே!

//அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி//


தினைப்புனத்தில் குறத்தியினைத் தேடிச்சென்று
அவள்மீது மையல்கொண்டு மனம் வருந்தி
நடைநடையாய் நடந்து சென்ற தம்பியாம்
சுப்பிரமணியன் துயர் தீர ஆனையாய் முன் தோன்றி.

//அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.//


குறமகளைப் பயமுறுத்தி சிறியவனிடம் செல்லவைத்து
எதிர்த்து வந்த அனைவரையும் திறத்தாலே வெருளவைத்து
அப்போதே அங்கேயே அவளை இளையவனுக்கு மணம் முடிக்க
அருள் செய்த பெருமகனே! பெரியவனே! பெருமாளே!

Read more...

Saturday, June 17, 2006

"ஆறு மனமே ஆறு!"

ஆறு மனமே ஆறு!


ஆறு மனமே ஆறு!--அந்த
சுகாவின் கட்டளை பாரு!
ஆறுமுகன் சோதரனாம்
ஆனைமுகன் அருளாலே
ஆருக்கும் தெரியாத
ஆறு நிகழ்வுகள் கேளு!

"ஆறு"தல் அளித்த ஆறு!

1. நினைவறியாக் காலத்தே
நினைவாகத் தான் வந்து
நித்தமெனைத் தாலாட்டி
நித்திரையில் ஆழ்த்திவைத்து
நிலாச்சோறு காட்டி எனை
நேசமுடன் வளர்த்த தாய்!

2. நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!

3. சாயாமல், சரியாமல்
பாய்கின்ற மனத்தினையே
பேயாகிப் போகாமல்
தாயாக தந்தையாக
நேயனாகத் துணை வந்த
சாயிபாபாவுக்கு வந்தனம்!

4. காலத்தின் கோலத்தால்
பாழாகவிருந்தவெனை
மாளாத் துயரினின்று
மீளச்செய்து வழிகாட்டி
காலமெல்லாம் களிப்புடனே
வாழச்செய்த என் மனையாள்!

5. நன்மக்கட்பேறே நலமென்று
மண்மகனாம் வள்ளுவனும்
அன்றே சொல்லியதுபோல்
இன்பத்தை நான் சுவைக்க
இன்றெனெக்கு வாய்த்திட்ட
நன்மக்கள் நான்கு பேர்!

6. தாயகம் தாண்டி
தனிவழியே வந்தவெனை
தயங்காமல் தாங்கிக்கொண்ட
அயல்நாட்டு மண்ணின்
பெயரறியாப் பல மனிதரை
வியந்து ஒரு பெருவணக்கம்!

"ஆறு" பெருமைகள்

1. என் போல இங்கொருவன்
என் தொழிலை எடுத்தாண்டு
என் பேரைச் சொல்லியெனை
இன்பமுறச் செய்யானோ
என எண்ணிய தந்தையின்
மனமகிழ நான் முடித்த
மருத்துவப் படிப்பு!

2. கண்டவர்கள் பலரெனினும்
காமுற்றது சிலரெனினும்
காதலித்ததுஒரு பெண்ணை!
கரம் பிடித்ததும் அவளையே!
களிப்போடு பலகாலம்
கழித்ததுவும் நிறைவன்றோ!

3. பெற்றவர் ஈன்றதோ ஒன்பது பேர்!
மற்றவருக்கிடையே நான் "ஆறாவது"!
நற்றவ வானினும் நனிசிறந்தவரும்
உற்றவரைப் பிரிந்து சென்றதினால்
பெற்றவன் அன்று போனது இந்த
சிற்றவன் மடியினில்! என் சொல்வேன்!

4. செய்யும் தொழிலைச் சிறப்புறச் செய்து
ஐயம் இன்றி அரும்பணி ஆற்றி
வையம் போற்ற வளமுடன் வாழ்ந்து
கையில் வந்ததை பையினில் வைக்காமல்
உய்யும் வழியாய் மற்றவர்க்கீன்று
தெய்வம் நினைந்து வாழ்ந்திடும் வாழ்க்கை!

5. பிறந்த நாட்டிலும்
புகுந்த நாட்டிலும்
பண்ணும் தொழிலைப்
பண்புறச் செய்து
பயனுற வாழும்
பரிமள வாழ்க்கை!

6. ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது

"ஆறு"தல் சொன்ன ஆறு நூலகள்!
1. உலகப் பொதுமறையாம் திருக்குறள்
2. உண்மைக்காட்சியான் கம்பனின் காவியம்
3. உறுதுணையாய்வந்திடும் சித்தார்த்தா
4. உள்ளத்தை அள்ளும் சிலப்பதிகாரம்
5. உசுப்பிவிடும் ஸ்டெயின்பெக்கின் 'தி விண்டெர் ஆஃப் அவர் டிஸ்கண்டென்ட்
6. உன்மத்தமாக்கிடும் ரூமியின் காவியம்

"ஆரது" போறது!

1. பச்சோந்தி
2. முகமூடி
3 மாயவரத்தான்
4. முத்து தமிழினி
5. சிவபாலன்
6. துளசி கோபால்

இவர்கள் அனைவருமே நான் மிக ரசிக்கும், மதிக்கும், விரும்பும் பதிவாளர்கள்!
இன்னும் பலருண்டு!
அவர்களை ஏற்கெனவெ அடுத்தவ்ர்கள் அழைத்துவிட்டார்!
இவர்களின் ஆர்வமும், திறமையும் யாருக்கும் குறைந்ததல்ல1
வருவார்கள் என நம்புகிறேன்.
தனி மடல் அனுப்பி அழைக்க வேண்டுமா எனத் தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்!

பொறுமையுடன் இதுவரை படித்து வந்தீர்களெனில்,......
நன்றி! கோடானு கோடி நன்றி!!

Read more...

Tuesday, June 13, 2006

"விடைகொடு விடலைப் பருவமே"

நாமும்தான் முயன்று பார்ப்போமே என
தேன்கூட்டுப் போட்டியினின் தலைப்பதனை
ஒட்டியே ஒரு கவிதை புனைந்திங்கு
நானும்தான் வரைந்துள்ளேன்!
உள்ளன்பு கொண்டோரே!
ஒருவார்த்தை செப்பிடுவீர்!



"விடைகொடு விடலைப் பருவமே"


"விடைகொடு விடலைப் பருவமே"
அல்லது,
"விட்டுப் போகிறேன் விடலைப் பருவமே"
எனச் சொன்ன நாளை எண்ணி
காலச்சுவட்டில் தேடிப் பார்க்கிறேன்!

அரும்பாமல் அரும்பி நின்ற
மிருதுவான பூனை மீசையை
திரும்பத் திரும்ப சவரம் செய்து
முறுக்காக முளைத்த நாளா?

பாடம் படிக்கும் சாக்கில்
மாடிப்படியடியில் அவளறியாமல்
பதுங்கிச் சென்று ஒளிந்து நின்று
பார்ப்பதை மறந்த நாளா?

வீட்டிற்கு வந்தவுடன்
வயிற்றுக்கு என்னவென்று
விரட்டலாக தாயை வெருட்டி
வருத்தியதை நிறுத்திய நாளா?

மாலைஎனும் நேரமே மனமகிழத்தான் என்று
நாளையெலாம் வீணாகக் கழித்து நின்ற பொல்லாத
வேளையினைத் தள்ளிவிட்டு நேரத்தில் வீடுவந்து
காலலம்பி நீறணிந்து திகைக்க வைத்த நாளா?

காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?

எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!

Read more...

Friday, June 09, 2006

//நீ எனக்குச் சொல்//

//நீ எனக்குச் சொல்//



உன்னுடன் இருந்த நேரங்களை
நினைத்திங்கே பார்க்கையிலே
ஒன்றெனக்குப் புரிந்தது!
நீ ஒரு யானை!!

ஆம்!
உருவத்தைக் காட்டிப்
பழிக்கிறேனெனச் சொல்லாதே!
உனக்கே தெரியும்
நீ பிடியல்ல, கொடியென்று!

இருப்பினும் உன்னை
யானையெனச் சொன்னதுவும்
ஏனென்று கேட்கிறாயா?
சொல்லுவேன் கேள்!

உன்னுடன் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

உனைப் பிரிந்து
உன்நினைவைச் சுவைக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

இப்போது சொல்!
நீயும்,யானையும்
ஒன்றன்றோ!!

இருந்தாலும்
ஆயிரம் பொன்!
மறைந்தாலும்
ஆயிரம் பொன்!

நீ உணர்வதும்
அதுதானே!!
நீ எனக்குச் சொல்!

Read more...

Thursday, June 08, 2006

"அனுபவி ராசா அனுபவி!"

"அனுபவி ராசா அனுபவி!"

ஒரு தத்துவவாதியின் உளறல்கள்!!

கே: இந்த இருதய சம்பந்தமான பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்க உதவும் என்கிறார்களே? உண்மையா?

ப: இப்ப, ஒவ்வொருத்தரோட இதயத்துக்கும், இவ்வளவு துடிப்புதான்னு ஒரு கணக்கு பண்ணி இருக்குது! அவ்ளோதான்! சும்மனாச்சிக்கும், பயிற்சி, அது. இதுன்னு டைமை வேஸ்டு பண்ணாதே! அல்லாம் ஒரு நாளைக்குத் தேஞ்சுதான் பூடும்!
வெரசபடுத்தறேன்னு எக்ஸைஸ் பண்றது ஒண்ணும் வேலைக்கு ஆவாது!
இது எப்ப்டி இருக்குன்னா, என்னோட காரோட லைஃபை, வேகமா ஓட்றதால, ஜாஸ்தி பண்றேங்கற மாதிரித்தான்!

நெறைய நாளு உசுரோட இருக்கணுமா.... போய் நல்லாத் தூங்கு!

கே: இந்தக் கவிச்சிய வுட்டுட்டு, நெறய பழம், காய்கறில்லாம் சாப்பிடலாமா?

ப: நீ கொஞ்சம் நெதானமா யோசிக்கக் கத்துக்கணும்! இப்ப, ஒரு மாடு இன்னா சாப்டுது? புல்லும், தவிடும் , வைக்கோலும்! இதெல்லாம் இன்னா? காய்கறி! அப்ப்டீன்னா, மாட்டுக்கறின்றது, இந்தக் காய்கறிங்களை ஒரு ஸ்பெஷலான மொறையில, ஒன் ஒடம்புக்குள்ளே அனுப்பற ஒரு வித்தை. அவ்ளோதான்!

காய்கறி வேணாம்; தானியம்தான் வேணுமா? கோழிக்கறி சாப்பிடு!

கே: இந்தத் 'தண்ணீ' எல்லாம் கொறைக்கணும்னு சொல்றாங்களே.....?

ப: கூடவே கூடாது! ஒயினு பளத்துலேர்ந்து தயாராவுது! ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! பியர் கூட என்ன? பார்லிலேந்து பண்றது!

குடி மகனே... குடி!

கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!

கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே?

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா!

வந்துட்டான்... பெருசா!

நல்லா நெனப்புல வெச்சுக்கொ!
இந்த ஒடம்பு ஒரு நா கல்லறைக்குப் போகப்போவுது! அப்டி போறச்சே, நல்லா கட்டுமஸ்தா கொண்டுபோயி இன்னா லாபம்? நல்லா அனுபவி, இந்த பாடியை நல்லா யூஸ் பண்ணு! போகும்போது, 'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!

நா வர்ட்டா!

அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!

Read more...

Wednesday, June 07, 2006

வேறொன்றும் நானறியேன் பராபரமே!

வேறொன்றும் நானறியேன் பராபரமே!


பதிவொன்று போட்டிங்கு பல நாளும் ஆயாச்சு!
எதுவென்று தெரியாமல் எந்நாளும் நெனைச்சாச்சு!
இதுவா அதுவெனவே பலகாலம் யோசிச்சு
பொதுவாக ஒரு பதிவு போடவென முடிவாச்சு!

அரசியலைப் பேசயிங்கு அதிகம்பேர் இருக்கின்றார்!
சமையலைப் பற்றியோ தினமிங்கு பதிவுண்டு!
உள்குத்து வெளிக்குத்து ஓராயிரம் பதிவுண்டு!
தெள்ளுதமிழ் விளக்கம் சொல்ல குமரனும் இங்குண்டு!

கூடவே அவர் துணையாய் ஜிராவும் தினமுண்டு!
தன்வழியே போகின்ற வெட்டியானின் ஞானமுண்டு!
சுகமாகக் கவிதை சொல்ல சுகாவுடன் பலருண்டு!
பல்சுவையில் பரிமாற சுரேஷின் பதிவுமுண்டு!

யார் எங்கு போனால் எமெக்கென்னவென்றே
ஊர் ஊராய்ச் சென்றிங்கு அனவரையும் கலாய்க்கவென்றே
அனுமனின் பேர்சொல்லும் அழகான நாமக்கல்லின்
சிபியாரின் துணையின்றி தமிழிங்கே மணப்பதேது!

ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்
நானிங்கு நிற்கின்றேன் எனச் சொல்லி சதிரடிக்கும்
பொன்னான தமிழ்மகளாம் பொன்ஸாரின் தமிழ்மணக்க
நம்மையெல்லாம் நகைச்சுவையில் நிரப்பிடும் பதிவுமுண்டு!

இன்னுமிங்கு பலருண்டு, எடுத்தியம்ப நேரமில்லை!
பண்ணுகின்ற பணியதனை பாட ஒரு வாயுமில்லை!
என்னயிங்கு எழுதுவது என்றெண்ணிப் பார்க்கையிலே
ஒண்ணுமிங்கு தோணவில்லையென குசும்பாரும் சொல்லிவிட்டார்!

ஆகையினால் நண்பர்களே! நானிங்கு முடிவு செய்தேன்!
வாகாக ஒரு கருத்து என்மனதில் தோணும்வரை
சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
வேறொன்றும் நானறியேன் பராபரமே!

Read more...

Monday, May 29, 2006

தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!

தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!




தி.மு.க.== திருத்தவே முடியாத கழகம்
அ.தி.மு.க.== அறவே திருத்த முடியாத கழகம்

ஐம்பத்தைந்து ஆண்டு கால அரசியல் அநுபவம்
இருப்பினும் மாறாது இருக்கும் அரைவேக்காட்டுத்தனம்

தன் பெருமையைச் சொல்ல முடியாமல் தவித்து
அடுத்தவனை இழித்தே தான் வளர்ந்திடும் குணம்

அன்றும் மாறவில்லை; இன்றும் போகவில்லை!
என்றுமே "திருத்த முடியாத ழகம்"![தி.மு.க.]

தெரிந்தே பெயர் வைத்தார் திராவிடத் தலைவரும்
புரிந்தே செயல்படுவார் அவரின் தானைத்தலைவரும்!

அன்றும் இலவசம்! பொய்யான வாக்குறுதிகள்!
இன்றும் அதே கதைதான்! ஏமாற்றுதல் தொடர்கிறது!

அதை விடுத்த அடுத்தவரைப் பர்த்தாலோ
எதைச் சொல்லி அழுதிடுவேன் என்றெனெக்குத் தெரியவில்லை!

முறையாகத்தான் பேரும் வைத்திருக்கிறார்!
<strong>அறவே திருத்த முடியாத ழகமென்று![அ.தி.மு.க]

அவராவது பரவாயில்லை எனக்கொஞ்சம் நம்பிடலாம்!
தவறென்றால் ஒருசிறிது திருத்திட்வே முயற்சிப்பார்!

தன் தவறைத் தான் உணர மாட்டாமல்
பின் எவரும் கிடைப்பாரோ எனத் தேடி

கண் இரண்டும் போனாலும் பழுதில்லை என்று
உன் பழியை வாங்கிடவே உயிர் வளர்ப்பார் இவரிங்கு!

அவரைத் திருத்தவே முடியாதெனில்
இவரை அறவே திருத்த முடியாது!


இவ்விரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றினையே
தவறாமல் தேர்ந்தெடுக்க வைத்திடலே

தரணியினில் தமக்கிட்ட கட்டளை என
தமிழருமே திருந்தாமல் இருக்கின்றார்!

துயரமிதுத் தீராதா?
மதுரமினி வாராதா?

தமிழர் கதி இதுவெனவே
தலைவிதியும் ஆனதென்ன?

சற்றேனும் சிந்திப்பாய்!
பிறந்ததற்குப் பொருள் கொள்வாய்!

ஓ தமிழா!
ஓ தமிழா!

Read more...

Sunday, May 28, 2006

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"



தேர்தலிலே தெரிவு செய்த மக்களைப் பாராட்டி
மன்றத்தில் பேசியதால் மனமகிழும் தொண்டர்களே!

அக்கறையாய்ச் சபைக்கு வந்து
வக்கணையாய்க் கேள்விகள் கேட்டு
முக்கால் மணி நேரம் பேசியதால்
முறுவலிக்கும் கண்மணிகளே!

முதல் நாளே முறையின்றிச் சண்டையிட்டு
முழுவதுமாய் வெளியேற்றப்பட்டு இன்று
முன்னாள் முதல்வரை மன்றத்தில் வரச் செய்து
முனைப்பாகப் பேசியதால் முகம் மலர்ந்தீர் நீவிர் இன்று!

தவறான திட்டங்களை
தவறான நேரங்களில்
தவறாக அறிவித்து- இன்று
தவறான "முடிவைத்" தந்தவர்
தங்கமான உங்கள் தலைவி!

தோல்வியினைச் சரியாக நேர்கொள்ள மனமின்றி
துவண்டிருக்கும் தொண்டரையும் நினைவில் கொள்ளாமல்
துவக்க நாள் முதலே வரமாட்டேன் என்றே
துச்சமாய் அறிவித்த நும் தலைவி
தம்மக்கள் இன்று, தவறான நடத்தையினால்
தம் தொகுதி சார்பதனை மன்றத்தில் காட்டாமல்
தள்ளி வைக்கப்பட்ட நிலையினைக் கண்டவுடன்
"தளராத மனத்துடனே வேதாளம் வருதற்போலே"
தன்னிகரில்லாத் தலைவியும் சபைக்கு வர மனமிசைந்தார்!

வந்தவரைக் கண்ணியமாய்ப் பேசவிட்டு
"சொந்தமெல்லாம் இல்லாமல் தனியாக நின்றவரை"
நிந்தனைகள் செய்யாமல் ஆளுகின்ற முதல்வருமே
பாந்தமாகவே பதிலிறுத்தார்! அவருக்கு நன்றி!

பேசுகின்ற நேரத்தில்
ஏசுகின்ற குணம் விட்டு
காசு பணம் பார்க்காத
மாசற்ற நம் மக்கள்
குறை கேட்கும் குணமின்றி
நேசமாகப் பேசிடாமல்
கண்ணியமற்று நடந்திட்டார்
முன்னாள் முதல்வருமே!

முதல்வர் வருகின்ற போதினிலும்
முதல்வர் பதிலிறுக்கும் போதினிலும்
மற்றவர்கள் அமர்ந்திருக்க வேண்டுமென்பது
மற்றவருக்கு வேண்டுமெனில் மற்ந்திருக்கக் கூடும்
முன்னாள் முதல்வருக்கும் கூடுமோ?

தன் பேச்சு முடிந்தவுடன்
தன் வழியே போகாமல்
'மார்ஷல்' வந்து வெருட்டும் வரை
முறையற்ற இடத்தினிலே
தன் கருத்தை முன் வைத்து
தனிப்பேட்டி கொடுத்ததுவும்
முறை சொன்ன 'மார்ஷலையும்'
முறையின்றிப் பேசியதுவும்
முன்னாள் முதல்வர்க்கு அழகாமோ?

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்,

[நான் கருணாநிதியையும்,
பன்னீர்செல்வத்தையும்
சொல்லவில்லை!!

காமராஜரையும்,
ராஜாஜியையும்,
ஓமந்தூராரையும்
பக்தவத்சலத்தையும்,
அண்ணாத்துரையையும்
சொல்லுகின்றேன்!]

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்
முகம் சுளிக்க செய்தீரே!

மீண்டும் நீவிர் சட்டசபைக்கு
வருவதாகப் பேசுகிறார்!
அதுபோல நடந்திடவே
நானும் விரும்புகிறேன்!
கண்ணியம் காத்து
கடமையை ஆற்றிட
கவலையோடு என் வேண்டுதல்கள்!

"ஆடாதீர் தப்பாட்டம்!"

நன்றி!
வணக்கம்!

Read more...

Saturday, May 27, 2006

கருணாநிதியின் சொல்லாட்டம்!

கருணாநிதியின் சொல்லாட்டம்!


" நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல!"-- அமைச்சர் அன்பழ்கன்!!

அப்டிப் போடு.......அருவாளை!!

அடுத்தது என்ன?
எல்லோருக்கும் இலவச கலர் டிவி என்றால், அத்தனை எல்லோருக்கும் அல்ல!
ரேஷன் அரிசி 10 கிலோ இலவசம் என்றால், எல்லோருக்கும் அல்ல!

உன் நிலத்தை உன்னிடமிருந்து பிடுங்கி, அதை மேம்படுத்தல் என்ற பெயரில் கொள்ளை அடித்துப் பின் உனக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்!

நல்ல தமாசு!

Read more...

Friday, May 26, 2006

To Madhumitha

சங்கர்குமார்
ஆத்திகம்
http://aaththigam.blogspot.com
கேரி, thOLaChEri
யு.எஸ்.ஏ/India
அருண் வைத்தியநாதன்
03/08/06
சும்மாத்தான்!
நிறையவே! நல்லனவும், அல்லனவும், இன்னும் பல!
குறிபிடத்தக்க அளவில், டோண்டு, பொன் ஸ், செல்வன், குமரன், மாயவரத்தான், முகமூடி, கோவிகண்ணன், பச்சோந்தி, முத்து தமிழினி, சிவபாலன், வவ்வால் இன்னும் பலர்!!
அடங்க மறு!
சொல்லும் படியாய் ஒன்றுமில்லை!
ஆன்மீகம், இந்துமதம் பற்றி சில பதிவுகள்!

Here is the sutti

http://aaththigam.blogspot.com/2006/05/to-madhumitha.html

Read more...

Wednesday, May 24, 2006

எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!

எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!!



இலவசங்களை எதிர்பார்த்து
என்றுமே வாழ்ந்திருக்கும் ஒருகூட்டம்
எளியோரைக் காட்டி ஏமாற்றிட எண்ணுகிறது!
எத்திப் பிழைத்திடத் துடிக்கிறது.

மலம் சுமந்த நல்லோரை
மலம் தின்ன வைத்ததுவும்
கடை நிலையில் உள்ளவரைக்
கரை சேர்க்க எண்ணாமல்,

அவர் நிழலில் வாழ எண்ணி
அடுத்தவரைத் தூற்றி வந்து
எல்லா நலனும் பெற்றிட்ட எத்துக்காரர்
இடஒதுக்கீட்டை வாழ்த்துகிறார்

இவர் எண்ணம் எமக்கிங்கு புரியாதா
எதற்கிங்கு இவர் பல்லை இளிக்கின்றாரென்று
தனக்கதிலே என்ன லாபம் என்பதனை மட்டிலுமே
மன்க்கவலை படுமிவரை மன்னித்தல் தகுமோ?

சரியாகச் சொல்லுகின்றேன் கேட்டிடுவீர்!
"இட ஒதுக்கீடு வேண்டும்!!"
ஏழைகட்கும் எளியவர்க்கும்
இன வேறுபாடு இல்லாமல்!!!

எல்லாரும், எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
அல்லாரும், எளியாரும் அதிக பலன் அடைந்திடல் வேண்டும்!
இல்லாமை இல்லையெனும் நிலையிங்கே வர வேண்டும்!
பொல்லாமை செய்வரைப் புதைத்திடல் வேண்டும்!!

Read more...

Monday, May 15, 2006

நாயும் நானும்!

நண்பர் பச்சோந்தி ஒரு அழகான கவிதையைப் பதிவிட்டிருந்தார்!
அதனைப் படித்துக்கொண்டு வரும் போதே எனக்குள் எழுந்த மாற்றுக் கவிதையை அவருக்கு அனுப்பினேன்!
இப்போது உங்கள் பார்வைக்கும்!

முதலில் அவரது மூலக் கவிதை!
பின்னால் வருவது என் எண்ணம்!



நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்!!


அறியாமையின் பயத்தால் விளைந்த
அடிமை எண்ணத்தில்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்

கவனம் கலைந்த நான் வியப்புடன்
பயத்தின் பொருள் யாது என்றேன்
பயத்தின் பொருள் அடுத்தவரை
அச்சுறுத்துவதில் உண்டு என்றது அந்நாய்.

அச்சுறுத்தும் செயலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
பயம் என்பதன் பொருளும்
அச்சுறுத்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் திகைப்புடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
அடிமைப்படுவதில் உண்டு என்றது நாய்

அடிமைத்தனத்தின் சுகம்
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
அடிமைத்தனத்தின் சுகமும்
சுதந்திரத்தின் வலியும்

இது கொடுமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இது நல்லொழுக்கம்
என ஊளையிட்டது நாய்

சோர்ந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
பரிதாபம்..!
இந்தக் கொடுமையைச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அவமதிப்பும், புறக்கணிப்பும்
நிறைவென உணர வைத்தது யார்?

சிரிப்புடன் நாய் சொன்னது
நீ பேசுவது உனக்குச் சொல்லிக் கொடுத்தது.
நான் பேசுவது என் ஆன்மா அறிந்தது.
ஆனால் நீயும் நானும் வேறல்ல.
posted by Chameleon - பச்சோந்தி @ 10:57 PM

At 12:12 AM, SK said…

நாயும் நானும்!


மரியாதையின் காரணம் விளைந்த
அன்பு எண்ணத்தால்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்.

கவனம் கலைந்த வியப்புடன்
மரியாதையின் பொருள் யாது என்றேன்.
மரியாதையின் பொருள் அடுத்தவரை
அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.

அன்பு செய்தலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
மரியாதை என்பதன் பொருளும்
அன்பு செய்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.

நன்றியறிதலின் சுகம்
ஒருமுறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
நன்றியறிதலின் சுகமும்
சுதந்திரத்தின் சுவையும்.

இது அருமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இதுவே என் பெருமை
எனக் குரைத்தது என் நாய்.

வியந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
அற்புதம்!
இந்த உண்மையை இதற்குச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அன்பும், நன்றியும்
சிறந்த பண்பென
மனிதன் உணராமல் போனது ஏன்?

பரிவுடன் நாய் சொன்னது
உன் இயல்பை மறந்து
உள்தேடுதலை விட்டு
ஊதாரியாய் சுற்றுவதால்
உணர முடியாமல் போயிற்று
உனக்கு.

"அன்பு செய்!

நன்றியுடன் இரு!

உனக்கும் புரியும்!"

Read more...

Saturday, May 13, 2006

"நலம் வாழ நான் பாடுவேன்!"

"நலம் வாழ நான் பாடுவேன்!"


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொலவார்கள்!

அப்படித்தான் அரங்கேறியிருக்கிறது, தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றக் காட்சிகள்!

முதல் அர்ச்சனையே, மக்கள் தேர்ந்தெடுத்த மன்றப் பிரதிநிதிகளை 'விஷப்பாம்புகள்' என வர்ணித்த அவலம்!

அடுத்து நடந்தது, பதவியேற்பு நிகழ்ச்சிகளின் போது காவலரை அடித்து ஓட்டிய திமுக தொண்டர்களின் கண்ணியமற்ற செயல்!

திருவொற்றியூரில், பயந்தவாறே, எம் எல் ஏ/அமைச்சரின் தம்பியின் வெறிச்செயல்கள்!
[ஊர்மக்களில் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடி விட்டார்களாமே!]

மரபை மீறி, பதவியேற்பு நிகழ்ச்சியின் போதே அரசு ஆணைகளில் கையெழுத்திட்ட 'மலிவு விளம்பரம்'!

முன்னாள் முதலமைச்சர் ஒரு காரணமுமின்றி சட்டசபைக்கு வர மாட்டேன் என சொல்லியிருக்கும் கேவலம்!

மரபை மறுபடியும் மீறி, அதிமுக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத கோழை/பேடித்தனம்!

அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், சின்னஞ்சிறு பாண்டியில் தனி ஆட்சி செய்ய வேண்டி, பெரிய தமிழகத்தை விட்டுக் கொடுத்த காங்கிரஸின் பொறுப்பற்ற
குருட்டுதனம்!

இளங்கோவனின் வாக்கு பொய்க்க வேண்டுமென மட்டுமே தமிழகத்தைத் தாரை வார்த்த வாசனின் சுயநலம்!

மத்தியில் மட்டும் 12 மந்திரிகள் வேண்டும்; ஆனால் மாநிலத்தில் அதே நிலையில், "தான் மட்டுமே அரசு அமைக்க வேண்டும்" என்ற அரிப்பில் உள்ள 82 வயது தலைவரின் அராஜகத்திற்கு அடிபோகும் கழக அடிவருடிகள், கூட்டணிக் கேவலங்கள்[தலைவர்கள் எனச் சொல்ல மனம் வர மாட்டேன் என்கிறது!] இவர்களை நினைக்க மனம் குமுறுகிறது!


"மத்தியில் கூட்டாட்சி: மாநிலத்தில் நிபந்தனை அற்ற மற்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி" என்பதற்குத் துணை போன அனைவரையும் பார்த்துக் கேட்கிறேன்!...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் போல,..........!

இதெல்லாம் நடக்குமெனச் சொல்லி மாற்றம் கொடுங்கள் எனக் கேட்ட தமிழனுக்கு வாய்ப்பளிக்காத தமிழகமே!

மாற்றம் வேன்டுமென மனதார நினைத்தாலும்
மாறி மாறி இலவச அறிவுப்புகளை நம்பியே
முன்னேற்றக் கழகங்களுக்கு வாக்களித்து
ஏமாந்த தமிழகமே!

மீண்டும் ஒருமுறை
உன்னை நீ எண்ணிப்பார்!
இனியாவது வாழ,.......
சுயமரியாதையுடன் வாழ.....
நினை!

உனக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன்!
நலம் வாழ நான் பாடுவேன்!

Read more...

Thursday, May 11, 2006

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா!"

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா"!>



மத்திய அரசுப் பதவி
ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு,
மாநிலங்களில், மாறி, மாறி,
மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து
சுயமரியாதை இன்றி சுகித்து வாழும்
காங்கிரஸை துணைக்கொண்டு,
ஐந்தாம் முறையாக அரசு காணப் போகும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு
திறந்த ஒரு வாழ்த்துமடல் இதோ!!

'அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?"
எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர் அன்று!

'கூலி உயர்வு கேட்டார் அத்தான்!
குண்டடி பட்டுக் கொன்றார் அவரை'
எனக் கூவி மக்களின் அனுதாபத்தைப் பெற்று
ஆட்சியில் அமர்ந்தீர் அன்று!

"ரூபாய்க்கு மூன்று படி அரிசி" எனக்
கூசாமல் பொய் சொல்லி
குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஆட்சிக்கு வந்தீர் அன்று!

கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாய்
'நண்பர் இருவர்' உங்களுக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலமாய்
மாறி, மாறி தன்சுகம் மட்டுமே கண்டீர்கள்!

பருவம் அடைந்த பதினெட்டு வயதுப்
பாவைஅவளைப் பல பேர் சேர்ந்து
பாவியவள் கற்பை சூறையாடிய
கதைதான் நினைவுக்கு வருகிறது

'நம்மையெல்லாம் இழிவு செய்தான்
நாமதற்கு துணை நில்லோம்
நல்லதேசெய்வோம்' எனச் சொன்ன உமை
நம்பி நல்வாக்கு தந்திட்ட நலிந்தோரை - அட!
நாளெல்லாம் நினைக்க வேண்டாம்!- அவருக்கு
நலம் செய்ய மறந்திடலாமோ?!
நாடு போற்ற வேண்டாமா நல்லவரே!

நாலிருபது ஆண்டுகள்
நாநிலத்தில் இருந்து விட்டீர்!
ஈரிருபது ஆண்டுகள்
இம்மண்ணை ஆண்டு விட்டீர்!
ஓரிருபது ஆண்டுகள்
மத்தியிலும் பார்த்துவிட்டீர்!

இன்றைக்கு மீண்டும் உமை
பதினோராம் முறையாகத்
பரிவுடன் தேர்ந்தெடுத்து,
ஐந்தாம் முறையாக
ஆட்சிக் கட்டிலிலேற்றி
அழகு பார்த்து மகிழ்கிறார்
எம் இனிய தமிழ்மக்கள்
நீர் சொன்ன இலவசங்களை நம்பியே!

இத்தனைக் காலம் செய்ய மறந்ததை
இனிவரும் நாளிலேனும்
இனிதே செய்து,
இனிய தமிழகத்தை '
இன்பமுற வாழ வைக்க
இன்னுமொரு சந்தர்ப்பம்
இனிமேலும் வாய்க்காது
என்பதனை உணர்ந்து நீரும்,

நன்முறையில் ஆட்சி செய்து
நல்ல பெயரும் வாங்கி
நலமுடன் வாழ்ந்திடவே
நான் வாழ்த்துகிறேன்
நன்னாளாம் இன்று!

Read more...

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!

இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!

கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!

யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!

தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!

இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.

தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.

1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?

3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?

4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?

5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?

6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?

7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?

8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?

9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!

உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!

மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!

நன்றி.

வணக்கம்.

Read more...

Tuesday, May 09, 2006

நாளை நமதே!

சற்றே பொரும் பிள்ளாய்!

70 விழுக்காடு [சதவிகிதம்] மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் சொன்னவுடனே,
இங்கு பல பேரின் தூக்கம் போயே போச்சு!

அதிகம் பேர் வாக்களித்தால்,
ஆளும் கட்சிக்கு ஆதரவு!

'எக்ஸிட் போல்' கணக்குப்படி
எதிர்கட்சிக்கு ஆதரவு!

அதே 'எக்ஸிட் போல்' கணக்குப்படி
ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டென்றால்,
அது திமுகவிற்கும் போகும்!
எங்கள் விஜய்காந்துக்கும் போகும்!

கடலூர், திண்டிவனம் மாவட்டங்களில்,
பா.ம.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என
ஆரூடங்கள் சொல்கின்றன!

கருணாநிதியோ
மூன்று பட்டியலை வைத்துக் கொண்டு
முக்கிக் கொண்டிருக்கிராம்!

ஒன்று, திமுக மட்டுமே பெரும்பான்மை கொண்டால்!
இரண்டு, காங்கிரசும் கூட்டூக்கு வந்தால்!
மூன்று, பாமக மனம் மாறி, பங்கு கேட்டால்!

ஆனால்,
இன்னும் ஓட்டே எண்ணப்படவில்லை!
அதற்குள்,
இந்த தகவல்கள்!

வெட்கிப்போ தமிழகமே!
வெட்கி மடி தமிழனே!

உனக்கு இதுவும் வேண்டும்
இஒன்மும் வேண்டும்!

நான் முன்பே சொன்னது போல,
11-ம் தேதி வரை
நான் காத்திருப்பேன்!
உன்னைப் பார்த்திருப்பேன்!

தேமுதிக 70 சீட்டுகளுடன்!!!

மீதியை......
12-ம் தேதி பேசலாமே!




நாளை நமதே!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP