Tuesday, June 08, 2010

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

9 comments:

  1. அழகான திருப்புகழ் விளக்கத்திற்கு நன்றி எஸ்.கே. ஐயா.

    ReplyDelete
  2. திருக்குறள்ல ஒரு சந்தேகம். உதவுவீரா...?
    எனது இடுகையை பார்க்கவும்.
    http://vaarththai.wordpress.com/

    ReplyDelete
  3. ஐயனின் வாக்கில் எனக்கேற்பட்ட குழப்பத்தை தீர்க்க,
    (“உன்னப்பாத்து ஒருத்தனும் கெட்டுப்போயிடக்கூடாது”, என்ற பொதுநலம் நடமாட),
    சிரமம் பாராது, மறுபடியும்
    மிக விரைவாக பின்னூட்டத்தில் விளக்கமளித்த
    திரு. ‌VSK & மயிலை மன்னார் அய்யா அவர்களுக்கும்
    அன்புகலந்த நன்றிகள், பல.

    //எனக்கு தமிள்வாத்தியார் அளவுக்கு பொறுமை கெடையாதுப்பா?//
    [(வள்ளுவர் அய்யா வார்த்தைக்குத்தான் எனக்கு பொருள் குழப்பமெல்லாம் வரும், மயிலை மன்னாராய்யா வார்த்தையோட பொருளையெல்லாம், கப்புன்னு புரிஞ்சிப்போமில்ல...‍:-).]

    ReplyDelete
  4. கொஞ்சம் மருத்துவ வேலை இருந்துச்சி! :) அதான் உடனே வர முடியலை SK ஐயா!

    காலம் தாழ்த்தி வந்தாலும்,
    வேலன் தாளில் தன்னைத் தாழ்த்தி,
    இதோ வந்தேன்!
    இகல் வேலனுக்கு என்னைத் தந்தேன்!

    //தப்பா-மல் பாடிச் சே-விப்பார்
    தத்தாம் வினையைக் களைவோனே//

    வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...
    போய பிழையும், புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசாகும்-ன்னு கோதை சொல்வது போலவே இருக்கு!

    //தத்தாம் வினையை//

    அவரவர் (தம், தாம்) வினை-ன்னும் சொல்லலாம்!
    தத்து = குதித்து வருதல்...
    மெள்ள வாராம, வினைகள் குதித்துக் குதித்து வருமாம்! அதான் தத்தாம் வினை!

    //அப்பாகைப் பாலைப்போல் சொல்
    காவல் பாவை தனத்து அணைவோனே//

    பாகைப் பாலா? சூப்பரு!
    வெல்லப் பாகா? சர்க்கரைப் பாகா? தேன் பாகா?

    பாகு ஊத்தி எல்லாம் பால் குடிச்சதே இல்ல! அடுத்த முறை இராகவனைப் பாகைப் பால் வேணும்-ன்னு கேட்கிறேன்! :) திருப்புகழ்-ல்ல வருது-ன்னும் சொல்லிடறேன்! முருகா, நீயே எனக்குப் பாகைப்பால் கொடுக்க அருள வேணும்!

    பாகு கனி மொழி
    மாது குற மகள்-ன்னு அங்கிட்டு சொல்வாரு!
    பாகைப் பால் பாவை-ன்னு இங்கிட்டு பாடிட்டாரு!

    ReplyDelete
  5. //தணிகைத் தனிவேலா//

    அது என்ன "தனி" வேல்?
    ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே!
    என்றும் நீங்காது கூடியே இருக்கும் வேலை, "தனி" வேல்-ன்னு ஏன் சொல்லணும்? விளக்கம் தேவை SK!

    //அத்தா நித்தா முத்தா சித்தா
    அப்பா குமரப் ...... பெருமாளே//

    ஐ லைக் இட்! ரொம்ப நல்லா இருக்கு!
    அத்தா நித்தா முத்தா சித்தா
    அப்பா குமரப் ...... பெருமாளே!!

    இன்னும் பத்து பனிரெண்டு திருப்புகழ் இதே போல முடியும்-ல்ல SK?
    திருச்செங்கோட்டு முருகனைப் பாடும் திருப்புகழ் - "மெய்ச் சார்வு அற்றே, பொய்ச் சார்வு உற்றே"-ன்னு தொடங்கும் பாட்டு! அது கூட, இப்படித் தான் முடியும்-ன்னு நினைக்கிறேன்!
    முத்தா முத்தீ யத்தா சுத்தா
    முத்தா முத்திப் பெருமாளே-ன்னு முடியும்!!

    ReplyDelete
  6. //எத்தார் வித்தாரத்தே கிட்டா
    எட்டா அருளைத் ...... தரவேணும்//

    எத்தார் வித்தாரம் = சாமார்த்தியக் கல்வி...ஆனால் அது அகமுருகும் கல்வி அல்ல! அந்தக் கல்வி எனக்கு வேண்டாம்!

    "தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடப்பா"!
    எத்தார் வித்தாரத்தே கிட்டாத எட்டா அருளைத் தரவேணும்!
    முருகா, நீ எனக்கு உன் கையால் தர வேணும்!
    எனது முன் ஓடி வரவேணும்!

    ReplyDelete
  7. தனி - ஒப்பின்மை; ஒப்பற்ற தன்மை

    தனிவேல் - ஒப்பற்ற வேல்; ஒப்பில்லாத வேல்.

    `தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யால்நடந்த
    வினைத்துணை யேனை விடுதிகண் டாய்...'

    - திருவாசகம், நீத்தல் விண்ணப்பம் (39)

    தனித்துணை - ஒப்பற்ற துணைவன்; சிவபெருமான்

    ReplyDelete
  8. //அழகான திருப்புகழ் விளக்கத்திற்கு நன்றி எஸ்.கே. ஐயா//

    அன்பான பாராட்டுக்கு வணங்குகிறென் குமரன்!

    ReplyDelete
  9. //கொஞ்சம் மருத்துவ வேலை இருந்துச்சி! :) அதான் உடனே வர முடியலை SK ஐயா! //

    நீங்க வராம கொஞ்சம் கலங்கித்தான் போனேன் ரவி!:))

    ReplyDelete