Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்! இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல். மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை! இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!

****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்


இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்


மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]


அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]


'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்


பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்

உயிரும் உலகும் இறையின்றி இயங்கா


அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்

அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்


அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை

இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்

முத்தொழிலும் இறைவன் கையில்


அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்

அருளைத் தருபவன் எம்முடை இறைவன்


தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து

எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்


இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,


'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்

பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப

தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,


'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்

'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை

சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை'
எனும்
பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,


'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்

வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,


'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி

அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி

அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்

அழகிய முருகனுமாகி,


'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி

அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்


காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி

ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி

ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்


கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்

பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்

உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்

இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்



'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்



'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]


அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்

வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்

தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்

பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து

மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே


'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்

மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்

நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்


கையினில் கனிகளும் கொம்புத்தேனும்

கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு

பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்

மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி


செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்

வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்

மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்


'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்

வேலனின் மயிலின் போரதில் மாயும்

செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின்
மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது

பெருமையுடன் அமர்ந்திருக்கும்

மனமயில் முருகோனே!

***********


****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து

அதிபன் = பெருந்தலைவன்

அயன் = பிரமன்

அரி = திருமால்

அரன் = சிவன்

இகரம் = சமீபத்தில் இருப்பவர்

இருநிலம் = பெரிய நிலம்

மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்

வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்

திரு = செல்வம்

***********


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

*********************************

13 comments:

  1. இதோ வந் தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
    பருக அருணைத் தேன்!
    உருக முருகத் தேன்!
    முருக அணைத் தேன்
    பருகி அணைத்தேன்!
    என்னுள் இணைத்தேன்!
    இணைப்பில் இளைத்தேன்!
    இளைத்துத் திளைத்தேன்!
    களித்தான்! களித்தேன்!
    விளைத்தான்! விளைந்தேன்!

    :)
    மிக அருமையான, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச நாட்டியத் திருப்புகழ் இது SK ஐயா! பழம் உதிர் சோலை மலை மேல ஏறுவது போலவே பாட்டு இருக்கும்! அதாச்சும் ஏறுமுகம் மட்டுமே! ஆரோகணம் மட்டுமே! இறங்கு முகம் இருக்காது! அவரோகணம் இருக்காது!

    ஆகி, ஆகி,-ன்னு தொக்கித் தொக்கி ஏறுமுகமாகவே முடியும் ஆறுமுகப் பாடல் இது!
    திரு மலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே!

    ReplyDelete
  2. முதல் பத்தி = அகரமும் ஆகி
    இரண்டாம் பத்தி = இகரமும் ஆகி
    மூன்றாம் பத்தி = மகரமும் ஆகி

    அ, உ, ம என்னாது அ, இ, ம-ன்னு வருவதற்கு வாரியார் ஒரு விளக்கஞ் சொல்லுவார்! இந்நேரம் பாத்து ஞாபகம் வர மாட்டேங்குது! யாருக்கேனும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்களேன்!

    ReplyDelete
  3. இந்தப் பாடலில் இராமானுசரின் விசிட்டாத்வைதக் கொள்கையை அப்படியே முருகனுக்குப் பொருத்திப் பார்ப்பார் அருணகிரி!

    * அகரமும் ஆகி = மூலாதாரப் பொருள்! அருவம்

    * அதிபனும் ஆகி = தலைவன்! உருவம்!

    * அதிகமும் ஆகி = குணம்! நமக்கு அதிகமாய் அமைபவன் அவன் ஒருவனே என்னும் கல்யாண குணம்!

    * அகம் ஆகி = நம் அகமாகவே அந்தர்யாமி ஆகி விடும் தன்மை!

    பரம், வியூகம் என்னும் அகரமும் ஆகி
    விபவம் என்னும் அதிபனும் ஆகி
    அர்ச்சையில் அதிகமும் ஆகி
    அந்தர்யாமியாய் அகம் ஆகி!

    ReplyDelete
  4. //அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்//

    இங்கே "அவர் மேலாய்" என்பது மேன்மை/கீழ்மையைக் குறிக்க வந்த சொல் இல்லை என்பது அறிஞர் கருத்து! அடுத்த வரியான "இகரமும் ஆகி" என்பதைச் சேர்த்துப் படிக்கணும்!

    சட்டை "மேல்" என்ன இருக்கு-ன்னு கேட்கறதில்லையா?
    கை "மேல்" பலன் என்று சொல்வதில்லையா?
    அந்த "மேல்"-ஐச் சொல்கிறார் அருணகிரி!

    உடல் மேலாய், உயிர் மேலாய் என்பது போல், அயன் மேலும், அரி மேலும், அரன் மேலும் நிறைந்துள்ளான் முருகப் பெருமான்! அவர் மேலெல்லாம் நிறைந்து, இகரம் ஆகிறான்! இயக்குவிக்கிறான்!

    * இவைகளும் ஆகி = அசித்து!
    ஞானமில்லா/உயிரில்லாப் பொருட்கள்! பூமி! ஆன்மா அற்றவை!

    * இகரமும் ஆகி = சித்து! ஞானம்/உயிருள்ள பொருட்கள்! ஆன்மா! அதாச்சும் நாம்!

    * அகரமும் ஆகி = ஈஸ்வரன்! இறைவன்!

    இப்படிச் சத், அசித், ஈஸ்வரன் என்னும் முப்பரிணாமக் கொள்கையான விசிட்டாத்வைதத்தை இங்கு அருணகிரி முருகனுக்குப் பொருத்திப் பார்க்கிறார் என்று சொல்லுவர்!

    பெருமாளின் சோலைமலையான முருகனின் பழமுதிர் சோலை என்பதால் பாட்டே இப்படி அமைந்து விட்டது போல! :)

    ReplyDelete
  5. //இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்//

    அப்படியே அவனே ஓஓஓஓஓஓடி வராப் போலவே இருக்கு! :)

    //'செககண சேகு
    தகுதிமி தோதி
    திமியென ஆடு
    மயிலோனே'//

    இது அப்படியே மயில் ஆட்டம்!

    //'திரு மலி வான
    பழமுதிர் சோலை
    மலைமிசை மேவு பெருமாளே'//

    என் ஆசை முருகன், எனக்கு மட்டும் பிரைவேட்டா ஒரு டான்ஸ் ஆடிக் காட்டணும் எனக்கு ரொம்ப நாள் ஆசை! பொதுவா காதலி தான் நடனம் ஆடுவாள்! ஆனா அவள் பார்க்க காதலன் நடனம் ஆடினா எப்படி இருக்கும்? ஹிஹி! :))

    'செககண சேகு
    தகுதிமி தோதி
    திமியென ஆடு
    மயிலோனே'

    ReplyDelete
  6. //இதோ வந் தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
    பருக அருணைத் தேன்!
    உருக முருகத் தேன்!
    முருக அணைத் தேன்
    பருகி அணைத்தேன்!
    என்னுள் இணைத்தேன்!
    இணைப்பில் இளைத்தேன்!
    இளைத்துத் திளைத்தேன்!
    களித்தான்! களித்தேன்!
    விளைத்தான்! விளைந்தேன்!

    :)
    மிக அருமையான, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச நாட்டியத் திருப்புகழ் இது SK ஐயா! பழம் உதிர் சோலை மலை மேல ஏறுவது போலவே பாட்டு இருக்கும்! அதாச்சும் ஏறுமுகம் மட்டுமே! ஆரோகணம் மட்டுமே! இறங்கு முகம் இருக்காது! அவரோகணம் இருக்காது!

    ஆகி, ஆகி,-ன்னு தொக்கித் தொக்கி ஏறுமுகமாகவே முடியும் ஆறுமுகப் பாடல் இது!
    திரு மலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே!//

    அறிந்தவர் வந்து மேல்விளக்கம் சொல்கையில் இன்னமும் சிறக்கிறது இப்பாடல்! அருமையான தேன் கவிதை சொல்லி வந்தமைக்கு மிக்க நன்றி!
    எல்லாமாய் ஆனவன் மனமயில் வாகனன் எம் மனத்திலும் ஆடி வரணும்!

    ReplyDelete
  7. //முதல் பத்தி = அகரமும் ஆகி
    இரண்டாம் பத்தி = இகரமும் ஆகி
    மூன்றாம் பத்தி = மகரமும் ஆகி

    அ, உ, ம என்னாது அ, இ, ம-ன்னு வருவதற்கு வாரியார் ஒரு விளக்கஞ் சொல்லுவார்! இந்நேரம் பாத்து ஞாபகம் வர மாட்டேங்குது! யாருக்கேனும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்களேன்!//


    இந்தக் குறும்புதானே மிகவுமே பிடிக்கிறது ரவியிடம்!

    விடையை முதலில் சொல்லிவிட்டு பின்னல் கேள்வியா?:))

    ஓம் ஓம் ஓம்!!

    ReplyDelete
  8. //இந்தப் பாடலில் இராமானுசரின் விசிட்டாத்வைதக் கொள்கையை அப்படியே முருகனுக்குப் பொருத்திப் பார்ப்பார் அருணகிரி!

    * அகரமும் ஆகி = மூலாதாரப் பொருள்! அருவம்

    * அதிபனும் ஆகி = தலைவன்! உருவம்!

    * அதிகமும் ஆகி = குணம்! நமக்கு அதிகமாய் அமைபவன் அவன் ஒருவனே என்னும் கல்யாண குணம்!

    * அகம் ஆகி = நம் அகமாகவே அந்தர்யாமி ஆகி விடும் தன்மை!

    பரம், வியூகம் என்னும் அகரமும் ஆகி
    விபவம் என்னும் அதிபனும் ஆகி
    அர்ச்சையில் அதிகமும் ஆகி
    அந்தர்யாமியாய் அகம் ஆகி!//

    பூசனை, ஜபம், தியானம், ஞானம் அனைத்துப் படிகளிலும் நிற்பவன் அல்லவா அவன்! அனைத்திலும் பொருந்தி வருகிறான்!

    ReplyDelete
  9. ////அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்//

    இங்கே "அவர் மேலாய்" என்பது மேன்மை/கீழ்மையைக் குறிக்க வந்த சொல் இல்லை என்பது அறிஞர் கருத்து! அடுத்த வரியான "இகரமும் ஆகி" என்பதைச் சேர்த்துப் படிக்கணும்!

    சட்டை "மேல்" என்ன இருக்கு-ன்னு கேட்கறதில்லையா?
    கை "மேல்" பலன் என்று சொல்வதில்லையா?
    அந்த "மேல்"-ஐச் சொல்கிறார் அருணகிரி!

    உடல் மேலாய், உயிர் மேலாய் என்பது போல், அயன் மேலும், அரி மேலும், அரன் மேலும் நிறைந்துள்ளான் முருகப் பெருமான்! அவர் மேலெல்லாம் நிறைந்து, இகரம் ஆகிறான்! இயக்குவிக்கிறான்!

    * இவைகளும் ஆகி = அசித்து!
    ஞானமில்லா/உயிரில்லாப் பொருட்கள்! பூமி! ஆன்மா அற்றவை!

    * இகரமும் ஆகி = சித்து! ஞானம்/உயிருள்ள பொருட்கள்! ஆன்மா! அதாச்சும் நாம்!

    * அகரமும் ஆகி = ஈஸ்வரன்! இறைவன்!

    இப்படிச் சத், அசித், ஈஸ்வரன் என்னும் முப்பரிணாமக் கொள்கையான விசிட்டாத்வைதத்தை இங்கு அருணகிரி முருகனுக்குப் பொருத்திப் பார்க்கிறார் என்று சொல்லுவர்!

    பெருமாளின் சோலைமலையான முருகனின் பழமுதிர் சோலை என்பதால் பாட்டே இப்படி அமைந்து விட்டது போல! :)//

    பிரமனைத் தலையில் குட்டி அவனது தொழிலைச் சிலகாலம் செய்து பின் அவனிடமே ஒப்புவித்தவன்
    பச்சைப் புயலே மெச்சிய மருகன்
    அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்

    இப்படி அவர்களாகவும், அவர்களுக்கும் மேலாகவும் இருக்கிறான் முருகன் என்னும் பொருளில் சொல்ல வந்தேன்.

    வாரியார் சுவாமிகளும் இதே கருத்தில்தான் சொல்லியிருக்கிறார்!

    நீங்கள் சொல்வதும் நன்றாகவே பொருந்துகிறது ரவி!

    ReplyDelete
  10. ////இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்//

    அப்படியே அவனே ஓஓஓஓஓஓடி வராப் போலவே இருக்கு! :)

    //'செககண சேகு
    தகுதிமி தோதி
    திமியென ஆடு
    மயிலோனே'//

    இது அப்படியே மயில் ஆட்டம்!

    //'திரு மலி வான
    பழமுதிர் சோலை
    மலைமிசை மேவு பெருமாளே'//

    என் ஆசை முருகன், எனக்கு மட்டும் பிரைவேட்டா ஒரு டான்ஸ் ஆடிக் காட்டணும் எனக்கு ரொம்ப நாள் ஆசை! பொதுவா காதலி தான் நடனம் ஆடுவாள்! ஆனா அவள் பார்க்க காதலன் நடனம் ஆடினா எப்படி இருக்கும்? ஹிஹி! :))

    'செககண சேகு
    தகுதிமி தோதி
    திமியென ஆடு
    மயிலோனே'//

    நீங்கள் சொல்லியிருப்பது போல இது முழுக்க முழுக்க ஆரோகணமே நிறைந்திருக்கும் பாடல்!
    ஏறுமயில் ஏறிவிளையாடும் முருகனி ஆட்டம் என்றைக்குமே ஏறுமுகம் தான்.

    அதுவும் கச்சேரிகளில் நிறைவு செய்யும்போது இதைப்பாடி அதே ஏறுமுகத்துடன் நம் மனதில் ஆடி நிற்பான் மனமுருகன்!
    உங்களுக்குக் காட்டாமலா இருப்பான்!
    நிச்சயம் ஆடிக் காண்பிப்பான்!
    அதுவும் ஆசைக்காதலியே கேட்கும்போது மறுப்பானா?

    விளக்கமான விரிவான பின்னூட்டங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன் ரவி!

    'செககண சேகு
    தகுதிமி தோதி
    திமியென ஆடு
    மயிலோனே'

    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  11. //அ, உ, ம என்னாது அ, இ, ம-ன்னு வருவதற்கு வாரியார் ஒரு விளக்கஞ் சொல்லுவார்! இந்நேரம் பாத்து ஞாபகம் வர மாட்டேங்குது! யாருக்கேனும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்களேன்!//

    இதுவோ?

    ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் ஸௌம் சரவணபவாய நம:
    என ஒரு மந்த்ரம் இருக்கு.

    ஓம் என்பதைத் தொடர்ந்து ஐம் வரும்

    அ,உ,ம, அ,இ,ம

    ஓம் ஐம்

    இதுவே அனைத்தையும் அடக்கும்!

    ReplyDelete
  12. அடியேனுக்கும் பிடித்த திருப்புகழ் இது. விளக்கங்களும் மிக அருமை. தொடரைத் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. தங்களுக்குப் பிடித்த புகழ் எனக்கிட வாய்ப்பளித்த முருகனுக்கு வணக்கம் கூறி தங்களுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறேன் கைலாஷி ஐயா!

    ReplyDelete